|
கொள்கை முழக்கங்களிலேயே அதி வசீகரமானது 'வறுமை ஒழிப்பு'
என்பதுதான். இந்த அழகிய வார்த்தைகளை உச்சரிக்காத அரசியல்
தலைவர்களின் உதடுகள் இல்லை, எழுத்தில் பிரகடனப்படுத்தாத தேர்தல்
அறிக்கைகளோ, பொருளாதார கொள்கை முழக்கங்களோ இல்லை. மூன்றாம் உலக
நாடுகளில் அரசியல் அரிச்சுவடியே இதுதான். வறுமை என்பது அரசின்
தோல்வி. அரசு நிர்வாகத் திறனின் தோல்வி. தலைவர்களின் தோல்வி.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமூகத்தில் ஏன் இவர் மட்டும்
வளமையில் சிறக்கவும் பிறதோர் வறுமையில் உழலவும் வேண்டும்? ஆதிக்க
வெறியற்ற, சூதும் சூழ்ச்சியுமற்ற, சுரண்டலற்ற நாடல்லவா சுதந்திர
நாடு. வாக்குப் பெட்டிக்குள் அடையாள குறியிட்ட தாள்களை திணிப்பதை
மட்டுமே ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அடிப்படை
வசதியற்ற புறம்போக்கு குடியிருப்புகளில், வாழ்விடம் பறிக்கப்பட்டு
வீதியில் வந்து நிற்கும் தோட்டப்புற மக்களை, பொருளாதார மைய
நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இனக்குழுக்களை பார்த்து
தெரிந்துக் கொள்ளலாம். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனக்குழு தன்
நலன் காத்துக் கொள்ள, தன் வசதிக்காக வகுத்துக் கொண்ட அரசியல் முறை
இது. இது ஜனநாயகத்தின் தவறல்ல. அரசியல்வாதிகள் அதன் பலவீனங்களை
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடைமுறைப்படுத்தும்
சுயநலமிக்க அணுகுமுறைதான் தவறு. அதனால் தானே ஒரு நாட்டின்
சிறுபான்மை இனம் சுற்றிச் சூழ்ந்திருக்கும் வளமைக்கும்
செழுமைக்கும் நடுவில் ஏழ்மையிலும் இயலாமையிலும் அல்லலுருகின்றது.
காண்டாவாளியை தூக்கிக் கொண்டு பால்மரக்காட்டில் வேலைக்குச்
செல்லும் பெண்ணின் பின்னால் அவளுக்குத் துணையாக செல்லும்
பாலகனுக்கும், வாகன உபரிபாகமும் முதலாளி குடிப்பதற்கான காப்பிக்
குவளையுமாக தன் எண்ணை பிசுக்கு கைகளில் ஏந்திச் செல்லும் 'ஒர்க்
ஷோப்' சிறுவனுக்கும் கல்வி மறுக்கப்படுவது இந்த அமைப்பு
முறையில்தானே. (மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.5
விழுக்காடு). காவல் துறையினர் கண்காணிப்பில் இருக்கும் இந்திய
இளைஞர்கள் 65.5 விழுக்காடு (2004) மொத்த பங்குரிமையில்
இந்தியர்களின் பங்கு 1.2 விழுக்காடு (2006) குழந்தைகளோடு
புகைவண்டியின் வழிதடத்தில் தன்னையும் தன் வாழ்வையும் தண்டவாளத்தில்
சிதைக்கொண்ட அந்த இந்தியப் பெண்ணின் ஆவியிடம்தான் கேட்க வேண்டும்
வறுமை ஒழிப்புக்கான உயர்மட்ட அமைச்சரவை குழுக்களின் வெற்றிகளைப்
பற்றி.
ஜனநாயகம், சமதர்மம் என்பதெல்லாம் ஏற்றதாழ்வற்ற மானுட சகவாழ்வுக்காக
ஏற்படுத்திக் கொண்ட சொற்கள். சொல்லின் பொருள் அது செயல்படும்
போதுதான் அர்த்தமாகிறது. குளிர் அறையில் அமர்ந்து, புதிய பொருளாதார
கொள்கைகளை வார்த்தைகளில் வகுத்து காகிதங்களில் பதித்து
களிப்படைகிறார்கள் பொருளியல் வல்லுனர்கள். சட்டங்களும்
திட்டங்களும் செயல்முறைப்படுத்தும்போது அதனை சிலருக்கு மட்டுமே
சாதகமாக்கும் அதிகார மையங்களிலிருந்து நீளும் அரசின் கரங்களுக்கு
சிறுபான்மை இனத்தின் வறுமை தெரிவதில்லை. தீட்டப்படும் திட்டங்கள்,
வகுக்கப்படும் வியூகங்கள், ஒதுக்கப்படும் நிதிகள் எல்லாமே வறுமையை
ஒழிக்கத்தான். ஆனால் யாருடைய வறுமையை என்பதுதான் கேள்வி. வரி
விதிப்பதிலும் எந்த சமரசமும் இன்றி அதனை வசூலிப்பதிலும் எந்த
வேறுபாடுகளும் கிடையாது. நாட்டின் கஜானாவை நிரப்புவதில் நாளும்
பொழுதும் உழைக்கும் அடிதட்டு மக்கள் அனைவரின் வியர்வையிலும்
கரிக்கும் உப்பின் அளவு ஒன்றுதான். திட்டங்களின் பலன்கள்
படியிறங்கி வருகையில் பாதி வழியில் பாதை மாறிவிடுகின்றன. வறுமை
என்பது பொருள் சார்ந்தது அல்ல, இனம் சார்ந்தது என்றாகிவிடுகிறது.
இந்தியர்களின் ஏழ்மை தீர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, வறுமை
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக நாட்டின் புள்ளி விபரக்
கணக்கில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றாகிவிட்டது.
மூவினங்களில் ஆளும் வர்க்கத்தின் அதிகார குவிமையம் ஓர்
இனத்திடமும், பொருளாதார மூல சூத்திரம் மற்றொரு இனத்திடமும்
இரண்டுமற்ற ஏழ்மைச் சமூகமாக இவ்விரண்டிற்கும் இடையில் அல்லாடும்
இனமாக இது இருக்கின்றது.
இச்சமூகம் தனக்கு வெளியே விழி உருட்டி மிரட்டி நிற்கும் இந்த
அரசியல், சமூக, பொருளாதார முரண்களை எதிர்கொள்ளும் அதே நேரம், தன்
'உள்முரண்களை'யும் சமாளிக்க இயலாமலும் சிதிலமடைகிறது.
ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சாதீய வேறுபாட்டை விதைக்கும் அமைப்புகள்,
வர்க்க வேறுபாடுகள், சுரண்டும் அரசியல், தொழிற்சங்கத் தலைவர்கள்,
செயலிழந்த சமூக அமைப்புகள், மனசாட்சி அற்ற சமூக மேல்தட்டு மக்கள்,
குறைந்தபட்ச பச்சாதாபம் கூட இல்லாத பட்டதாரிகள், படித்தவர்கள்,
மருத்துவர்கள், வழக்குறைஞர்கள், நாள்தோறும் எண்ணிக்கையில் ஏறிவரும்
குண்டர் கும்பல்கள், மூளையை மழுங்கடிக்கும் ஊடகங்கள், சினிமாவால்
சிந்தனை மயங்கி சுயமிழக்கும் இளைஞர்கள், முழுநேர சம்பளம் வாங்கி
பகுதி நேரம் வேலை செய்யும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகளுக்கு சேவகம்
செய்யும் உயர்மட்ட கல்விமான்கள் என சமூகத்தின் சகல மட்டத்திலும்
அதன் 'உள்முரண்களால்' காயப்பட்டுப் போன இந்த சமூகத்திற்கு 'விடிவு'
வெளியிலிருந்து வராது.
புண் உள்ளிருந்து ஆறி விடவேண்டும். குருதிப்புனல் உறுதிப் புனலாக
மாறவேண்டும். உள்ளிருந்தே கொல்லும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல்
உள்ளிருந்துதான் புறப்பட வேண்டும். 'சுயநலம்' முதன்மை
படுத்தப்படும்போது அறிவு தோற்றுப்போகும். பொது நலனை மட்டுமே
கவனத்தில் கொள்ளும் தலைமை அமைந்த இயக்கங்கள் உருவாக வேண்டும்,
மனிதர்களை உருவாக்க வேண்டும். மூட நம்பிக்கைகளும் அடிமைச்
சிந்தனைகளும் புரையோடிக்கிடக்கும் இந்த சமூகத்திற்கு நீங்களும்
நானும் என்ன செய்யப் போகிறோம்?
எழுச்சி தலித் முரசில் ரவிக்குமார் எழுதியிருந்தது நமக்கும்
பொருந்தும்.
'இந்த மண்ணுக்கு உரிமையுள்ள மக்கள் கூட்டம் நாம்; அறிவால்,
ஆற்றலால் இந்த தேசத்தை வளப்படுத்தும் பெருங்கூட்டம் நாதியற்று
நடுத்தெருவில் நிற்கிறது. கானலில் கண் கூசுகிறது.... காற்றுடன்
சாம்பல் கலந்து சுழல்கிறது.... நாம் இதை படித்து முடித்துவிட்டு
அழுக்குப் படாத, மடிப்புக் கலையாத சட்டையோடு எழுந்து நடந்து போகப்
போகிறோம்..........'
அவ்வளவுதான். அவ்வளவே தான்.
வேறு என்ன செய்திருக்கின்றோம் இதுவரையில்.
|
|