வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 8
 ஜுன் - ஆகஸ்ட் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

தடைகளைத் தாண்டும் ஈழத் தமிழ் இலக்கியமும் அதன் வெளியீட்டுத்துறையும்

 என். செல்வராஜா

நூலகவியலாளர், லண்டன்

 

       
 

உலகத் தமிழர்களின் இலக்கிய வெளிப்பாடுகளின் ஊற்றுக்கண்ணாக தாய்த் தமிழகம் இருந்த போதிலும், அயலில் ஈழத்திலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தமிழ் இலக்கியம் அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களினால் பல்வேறு தடைகளைத் தாண்டி கால ஓட்டத்தில் உத்வேகத்துடன் வளர்க்கப்பட்டமை வரலாறு. தமிழகத்தின் ஆறரைக்கோடி தமிழ் மக்களின் அறிவியல் இலக்கிய தாகத்திற்கான வழங்கல் அவர்களது மாநில தமிழ்நாட்டு அரசின் ஆதரவுடன் வளர்க்கப்பட்டு செழுமையுடன் தளைத்தோங்கி வந்தது. இன்றும் உலகத்தமிழ் இலக்கியவாதிகளுக்கு பாரிய நிழல்தரு மரமாகத் தமிழ் இலக்கியம் அங்கு செழித்தோங்குவது கண்கூடு.

தமிழ்ப்புலவர்களில் சரிதங்களைத் தொகுத்துக் கூற எழுந்த முதனூலும் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப்புலவர் சரித்திர நூலும் ஈழத்தவரால் இயற்றப்பெற்று ஈழத்திலேயே வெளியிடப்பெற்றவையாகும். தமிழகத்தில் தமிழக அறிஞர்களால் அவை தொகுக்கப்படவில்லை. இவற்றிலே முன்னையது கற்பிட்டி சைமன் காசிச்செட்டி (1807-1860) ஆங்கிலத்தில் எழுதி 1859இல் வெளிவந்த 'தமிழ் புளுராக்' ஆகும். பின்னையது அ.சதாசிவம்பிள்ளை (1820-1895) எழுதி 1886இல் புதுடில்லியில் அச்சிட்டு வெளியிட்ட பாவலர் சரித்திர தீபகமாகும். பாவலர் சரித்திர தீபகத்திலே 410 அறிஞர்களுடைய வரலாற்றுச் செய்திகள் இடம்பெறுகின்றன. இவர்களில் 82 பேர் ஈழத்தமிழர்களாவர் என்து குறிப்பிடத்தக்கது.

தாய்த் தமிழகத்தின் வழியொற்றி, அண்டை நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தமிழ்க் கலை இலக்கியமும் அந்நாட்டுப் படைப்பாளிகளின் சுயமுயற்சியாலும், எழுத்தாளர் அமைப்புகளினதும், சிறு வெளியீட்டகங்களினதும் வியர்வையாலும், குருதியினாலும் அந்நாட்டு அரசுகளின் வரையறுக்கப்பட்ட ஆதரவுடனும், சில சமயம் முற்றாக ஆதரவின்றியும் தனித்துவமான மண்ணின் மணம்கமழப் படைக்கப்பட்டு ருசிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

எவ்வித அரச நிதி ஆதரவுமின்றி முற்றிலும் எழுத்தாளர்களின் சொந்தப் பணவலிமையின் மூலமே பெரும்பாலான உள்ளூர்ப் படைப்புகள் வெளிவரவேண்டிய நிலை அவர்களுடையது. முறையான விநியோக வசதிகளின்றி, தரமான நவீனத்துவமான அச்சக வசதிகள் அற்றநிலையில் இந்த இலக்கிய யாகத்தை அவர்கள் நடத்தவேண்டிய நிலையில் இருந்தார்கள்.

அக்காலக்கட்டத்திலும், அதன் பின்னரும் செழுமையுடன் இலக்கியம்படைத்த தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் ஈழத்தின் அன்றிருந்த நலிந்த படைப்பாளிகளுக்குத் தார்மீக ஆதரவினைக்கூட வழங்கத் தயாராக இருக்கவில்லை. முடிந்தால் ஏறி வந்து எமது நிலையை எட்டு கைநீட்டி உன்னைத் தூக்கிவிட முடியாது என்ற கைகட்டிக் காத்திருக்கும் நிலைப்பாடாகவே அவர்களது மனநிலை காணப்பட்டது. அவர்களது விமர்சனங்களும் அவ்வப்போது தமக்கேயுரிய அளவுகோல்களின் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன. அயல்நாட்டு மண்ணின் மக்கள் எத்தகைய கடும் உழைப்புக்கிடையில் இலக்கிய யாகத்தைப் புரிகின்றார்கள் என்பதை உணரும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.

கலைமகள், ஆனந்த விகடன் போன்ற தமிழகச் சஞ்சிகைகளில் 60களில் எழுதிய சீ.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் போன்ற ஆரம்பப் படைப்பாளிகள் தமிழக வாசகர்களை முன்நிறுத்தி தமிழ்நாட்டுப் பேச்சுமொழியிலேயே ஈழத்துப் படைப்புகளைப் படைத்தமையும் இதற்கு ஒரு காரணமாகலாம். ஒவ்வொரு நாட்டுத் தமிழர்களது இலக்கியமும் அந்நாட்டு மண்ணின் மணத்தை கொண்டிருப்பதே சிறப்பு என்ற யதார்த்தம் தமிழக இலக்கியவாதிகளிடம் அன்று புரியப்பட்டிருக்கவில்லை.

ஈழத்தவரின் அக்காலகட்டப் படைப்புகள் தாய்த் தமிழக இலக்கிய உலகத்தின் அங்கீகாரத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்கிய படைப்புகளாகவே ஆரம்பகாலங்களில் இருந்து வந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகப் படைப்புகளுக்கு நிகரான படைப்பாக்கங்களை வழங்கும் திறமைமிக்க படைப்பாளிகள் ஈழத்திலும், மலேசிய மண்ணிலும் அவ்வேளையில் உருவாகியிருந்த போதிலும், தமிழகத்தில் அவர்களது படைப்புகள் அறியப்பட்டிருந்தனவா? அல்லது அத்தகைய அறிதலையிட்டு தாய்த்தமிழகம் அக்கறைப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கான பதிலை நாம் முதலில் தேடவேண்டும்.

19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்து வளர்ந்து தமிழகம் வரை பெயர் பெற்றவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். ஆறுமுக நாவலர் பற்றிய ஏராளமான நூல்கள் தாயகத்திலும், தமிழகத்திலும் இன்றளவில் வெளிவந்துள்ள போதிலும், இன்னமும் முழுமையான ஆய்வுக்கு அவரது வாழ்வும் பணியும் உட்படுத்தப்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாகும்.

1858ஆம் ஆண்டு முதல் 1869ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுக்காலம் நாவலர் தமிழ்நாட்டில் சிதம்பரத்தைத் தலைமைப்பீடமாகக்கொண்டு தமிழ்ப்பணியும் சைவத்தொண்டும் நூல் வெளியீட்டுப் பணியும் புரிந்து வந்திருக்கிறார். இக்காலப்பகுதியில் நாவலரின் தமிழகப் பணிகள் பற்றி பூரணமாக ஈழத்தவர்கள் அறிந்திருக்கவில்லை. இக்காலகட்டத்தில் நாவலரின் பணிகளை தமிழகத்தில் விமர்சித்தவர்களின் போக்கில் சாதிய அபிமானமும், வர்க்க உணர்வும், மேலோங்கியிருந்ததையும் சில ஆய்வுகள் அண்மைக்காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. ப.சரவணன் அவர்கள் 2001இல் எழுதிய அருட்பாவும் மருட்பாவும் என்ற நூலில் நாவலர் பற்றிய எதிர்மறையான பார்வைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன நிலைமையையும் இங்கே குறிப்பிடலாம்.

இலங்கையின் ஆறுமுக நாவலர் காலத்திலும் அதற்கு முன்னரும், ஈழத்தமிழ் படைப்பாளிகள், கவிஞர்களாகவும் தமிழறிஞர்களாகவும் உருவாகித் தமிழகத்திலும் கொடிகட்டிப் பறந்துள்ளார்கள்.

இரசிகமணி கனக.செந்திநாதன், சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், இந்துசாதனம் திருஞானசம்பந்தர், தேசாபிமானி மாசிலாமணி, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், அழகசுந்தர தேசிகர் எனும் வண.பிரான்சிஸ் கிங்ஸ்பெரி, வரகவி மகாலிங்கம், புலவர்மணி நவநீதகிருஷ்ண பாரதியார், முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி, சங்கம் வளர்த்த சதாசிவ ஐயர், ஆசுகவி வேலுப்பிள்ளை ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்க சிலர். அத்தகைய புறச்செல்வாக்கற்ற மேலும் பல நாவலர்களும் பாரதியார்களும் ஈழத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்துக்கு உயிரூட்டி மறைந்திருக்கிறார்கள். இவர்களிடம் தமிழகத் தொடர்பு இருந்திராத காரணத்தினாலும், அத்தொடர்பினை விரும்பியிராத சுதேசிய உணர்வாலும் காலகெதியில் அவர்களது வாழ்வின் சுவடுகளே மறைந்துவிடலாயின. இத்தகைய வரலாற்று இருட்டடிப்பிற்கு அக்காலத்தில் வரலாற்றை பதிவுசெய்வதில் அக்கறையற்றிருந்த தமிழ் அபிமானிகளே காரணமாவார்கள்.

இத்தகைய வரலாற்றுப் போக்கின் பயனாக பின்னாளில் வந்த சில இலங்கைப் படைப்பாளிகள், தமது படைப்புகளின் வழியாகத் தமக்கும் தமிழ்நாட்டறிஞர்களின் ஆசீர்வாதம் கிட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமது படைப்பிலக்கிய உலகைத் தமிழகத்தை நோக்கித் திசை திருப்பத் துணிந்தனர். தமது நூல்களை தமிழகத்தில் வெளியிட்டு விநியோகிப்பது அதில் ஒரு வழிமுறையாகியது. தமிழக இலக்கியங்களை வகைதொகையின்றி இறக்குமதிசெய்து வழங்கி பொருள்வளம் சேர்த்த வர்த்தகர்களும், அவற்றை ஈழத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழகத்தின் படைப்பாளிகளின் முகவர்களும் அவற்றை வாசித்து மகிழும் போக்கினைக் கொண்ட ஜனரஞ்சக ஈழத்து வாசகர்களும் எம்மவரிடையே அதிகம் காணப்பட்டதால் ஈழத்துப் படைப்பிலக்கியத்தின் ஊள்ளூர் வெளியீடுகளின் உருவாக்கமும் விநியோகமும் நலிவடையக் காரணமாயிற்று.

இந்நலிவுக்கு மேலும் வலிகோலும் வகையில் உலகத்தமிழரின் இலக்கியக் காவலர்கள் என்று தம்மை வரித்தக்கொண்ட சிலரின் வாய்வழிவந்த பாதகமான வார்த்தைகள், எம்மவர்களின் ஈழத்து இலக்கியம் பற்றிய அவர்களது சிறுமையான கருத்து கள் முக்கியமானவை. மண்ணின் வளத்துடனும், சமூக வாழ்வுடனும் இணைந்து வளர்ந்த ஈழத்து தமிழிலக்கியத்தை எழுதப்படாத வரிகளைக் கூர்ந்து கவனித்தால் நாம் உணரமுடிகின்றது.

ஈழத்துப் படைப்பிலக்கியவாதியும் விமர்சகருமான செங்கை ஆழியான் (கலாநிதி க.குணராசா) ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற தனது ஆய்வு நூலில் எழுதியுள்ள முக்கியமான சில வரலாற்றுக் குறிப்புகளையே அவசியம் கருதி இங்கு மீள்பதிவுசெய்கிறேன்.

"1967 களில் தமிழகப் பத்திரிகையான கங்கையின் ஆசிரியர் பகீரதன் இலங்கைக்கு வந்தார். வரதரின் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம், நாவற்குழியூர் நடராஜனின் கவிதைத் தொகுதியான சிலம்பொலி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பகீரதன் இங்கு வந்த வேளை சரஸ்வதி வ.விஜயபாஸ்கரனும், தீபம் ஆசிரியர் நா.பார்த்தசாரதியும் இலங்கைக்கு வந்திருந்தார்கள். பகீரதன் வெளியீட்டு விழாவில் "இலங்கை எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களை விடப் பத்து வருடம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் வளர்ந்துவரும் மேல்நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும். சிறுகதை எழுதும் உத்திமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று எடுத்து உபதேசித்தார். இந்த வார்த்தைகள் ஈழத்து எழுத்தாளர்களை ஆவேசப்பட வைத்தன. இக்கருத்துக்கு எதிரான கருத்துக்களை தினகரன் பத்திரிகையில் காரசாரமாக எழுதினார்கள். (பார்க்க: இலக்கிய உலகில் பரபரப்பான சம்பவங்கள் புதினம் 10.09.1961, பக்கம் 7). 1962 களில் யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், ஈழத்துச் சிறுகதைகளுக்கு அடிக்குறிப்புகள் தேவை. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைப் பகிர்ந்து கொண்டு சிறுகதையைப் புரிந்து கொள்ள அடிக்குறப்புகளிடப்பட வேண்டும்" என்று கூறிச் சென்றார். இதற்கு ஆதாரமாக நமது சிறுகதை முன்னோடி சோ.சிவபாதசுந்தரம் "பேச்சு வழக்குத் தமிழிலில்லாது எல்லார்க்கும் பொதுவான தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதப்படல் வேண்டும்" என்றார். "ஈழத்திலக்கியங்களுக்கு அகராதி வேண்டும். இலங்கை இலக்கியத்தை இங்கு எல்லோரும் பரவலாகப் புரிந்துகொள்ள இலங்கைப் பேச்சுவழக்கிலுள்ள சில சொற்கள் இடையூறாக இருக்கின்றன. சிறு அகராதி தயாரித்து வெளியிடலாம்" எனத் தமிழக எழுத்தாளர் வி.ராஜநாராயணன் கருத்து வெளியிட்டார். இக்கருத்து களின் உச்சமாக, "அது தமிழ் இலக்கியமேயில்லை. மொழி தமிழ் என்பதற்காக இத்தோடு கலக்கத் தேவையில்லை. வெறும் ஈழ இலக்கியம் என்றே கூறி விடலாம். ஈழ இலக்கியம் அங்கீகாரம் பெற ஒரு இருபது வருடம் போக வேண்டும்" என விக்கிரமாதித்தன் என்ற தமிழ்நாட்டுக் கவிஞர் திருவாய் மலர்ந்தார். நிறைவாக,'தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு ஈழத்தில் இலக்கியமில்லை. ஈழத்து இலக்கியம் கடந்த இருபது வருடங்களாக அரசியல்தன்மை பெற்றுத் திரிந்துவிட்டது. இலக்கியம் இலக்கியமாக இருக்கவேண்டும். இலக்கியத்தில் அரசியலைத் தேடுவதும் அரசியலில் இலக்கியத்தைத் தேடுவதும் அபத்தமானது. இலக்கியம் என்ற போர்வையில் அரசியல் கோஷங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் கதை மாதிரியும் கவிதை மாதிரியும் எழுதிப் பண்ணி ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று வண்ணநிலவன் என்ற தமிழகத்தவர் எடுத்துரைத்தார்".

மேற்கண்ட செங்கை ஆழியானின் உரைப்பகுதியிலிருந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்போக்கின் பின்புலத்தில் ஈழத்தமிழர்களின் படைப்புகளில் எத்தனை விகிதத்தை இந்தப் படைப்பாளிகளால் இதயசுத்தியுடன் வாசிக்க முடிந்தது. அதற்கான வாய்ப்பு எவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்டது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

இந்தியாவில் ஒரு சட்டம் நீண்ட காலமாக வழக்கிலுள்ளது. அதை தமது சுயநல பொருளாதார நோக்கிற்காக தமிழக எழுத்தாளர்களும் நூல் வெளியீட்டாளர்களும் பதிப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை. இந்திய மாநில மொழிச்சட்டத்தின் பிரகாரம், இந்திய மாநிலங்களில் வழக்கிலுள்ள மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு வரையறுக்கப்பட்ட இறக்குமதித் தடைகளை அந்நாட்டு அரசு விதித்திருக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்மொழி மூலம் நூல்களை வெளியிடும் அயல்நாட்டுத் தமிழர்களே. தமிழ்மொழி மாநில மொழிகளுள் ஒன்றாதலால் அம்மொழியில் இந்தியாவுக்கு அப்பால் இலங்கையிலோ, மலேசியாவிலோ அச்சிடப்பட்ட நூலை இந்தியாவுக்குள் விற்பனை நோக்கத்திற்காக சுதந்திரமாக இறக்குமதி செய்ய முடியாது. அதறகு சுங்கப்பகுதியின் முன் அனுமதி பெறவேண்டும். அது பல நடைமுறைச்சாத்தியமற்ற வழிமுறைகளைக் கொண்டிருப்பதால் தமிழ்ப்படைப்பாளிகளின் ஈழத்து நூல்கள் அங்கு செல்வதே இல்லை. மாற்று வழியாக தொடர்பும் வசதியுமுள்ள ஈழத்துத் தமிழ்ப்படைப்பாளிகள் தமிழ்நாட்டில் தமது நூலை அச்சிட்டு விநியோகித்துக் கொள்கின்றார்கள். இதற்குத் துணைபோகும் மணிமேகலைப் பிரசுரம், உயிர்மை பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் போன்ற ஏராளமான நூல்வெளியீட்டார்கள் வர்த்தகரீதியில் பயனடைகின்றார்கள். இத்தகைய நூல்வெளியீட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் ஈழத்துப் படைப்பாளிகள் ஒவ்வொருவரிடமும் சோக அனுபவங்கள் நிறையவே உள்ளன.

இத்தகைய ஒருவழியில் மட்டும் நன்மைபயக்கும் இந்தியச்சட்டம், அந்நாட்டுத் தமிழ் வெளியீடுகளை தமிழர் வாழும் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் திறந்தமனதுடன் செயற்படுகின்றார்கள். இதன்காரணமாக இலங்கையிலும், மலேசியாவிலும் தமிழகத்தின் ஜனரஞ்சக வெளியீடுகளெல்லாம் புத்தகசாலைகளில் உள்ளூர் வெளியீடுகளையே மறைத்துவிடும் அளவிற்குக் குவிந்துகிடக்கின்றன. பெருவாரியான உற்பத்தி காரணமாக உற்பத்திச் செலவு குறைவடைவதால், மலிவு விலையிலும் இவை இந்நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் பலத்த போட்டி காரணமாக அதனை உள்ளூரில் உருவாக்கும் தகுதியும் வளமும் கொண்ட ஈழத்துப் படைப்பாளிகளால் இத்தகைய மலிவு விலையில் அவற்றை அச்சிட்டு விநியோகிப்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது. சுயநல நோக்கம் கொண்ட உள்ளூர் புத்தக விற்பனையாளர்களும் தமது இறக்குமதிக் குப்பைகளை விரைவில் காசாக்கும் நோக்குடன் அவற்றுக்கு பலத்த முன்னுரிமை வழங்கியும் கண்காணாத தமிழகப் படைப்பாளிகளுக்கு தமது பணச்செலவில் பெரிய விளம்பரம் வழங்கியும், உள்ளூர் படைப்பாளிகள் பின்னடைய வழியமைத்து விடுகின்றனர்.

இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்கு எதிராக இன்றளவில் தமிழகப் படைப்பாளிகளோ, வெளியீட்டாளர்களோ, நூல் இறக்குமதியாளர்களோ தமது குரலை பதிவு செய்யவே இல்லை. அண்டை நாட்டுத் தமிழ்ப் படைப்புகளை இறக்குமதி செய்து, தாம் ஏகபோகமாக தமிழ்நாட்டிலும், அண்டைய தமிழ்கூறும் நல்லுலகிலும் தாம் அனுபவித்துவரும் செழிப்பான பொருளாதார அறுவடையை குறைத்துக்கொள்ள அவர்கள் என்ன முட்டாள்களா? அயல்நாடுகளில் தமிழ் வளரவும், அந்நாட்டு மண்வளம்பேசும் இலக்கியப்படைப்புகளை தாம் தருவித்து நுகர்ந்து, அதற்கு வளம்சேர்க்கவும் தமிழகத்துப் படைப்பாளிகளில் எத்தனைபேர் முன்வந்திருக்கிறார்கள்? அண்டைத்தமிழ் படைப்பாளிகளின் இலக்கியத்தை மதித்து அவை வளர வாய்ப்பளிக்கும் உள்ளார்ந்த உணர்வுள்ள ஒரு தமிழகத்துப் படைப்பாளியாவது அரசிடம் இத்தகைய இறக்குமதிக்கொள்கையை தளர்த்திக்கொள்ள இதுவரை வேண்டுகோள் விடுத்தார்கள் என்று வரலாறு உண்டா? இனிமேல்தானும் அதற்கு வழிகால் இடுவார்களா?

இலங்கையில் 1970-1977 காலகட்டம் ஈழத்தமிழர்களின் நூலியல் முயற்சிகளின் வசந்த காலம் என்று குறிப்பிடலாம். அக்காலக்கட்டத்தில்தான் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயர் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டணி அரசியலை அமைத்து ஆட்சி செய்தார். உள்ளூர் உற்பத்தியை வளர்க்கும் நோக்குடன் அந்நிய இறக்குமதியைத் தடைசெய்து, நாட்டில் உற்பத்தியைப் பெருக்கி வளம்சேர்க்க முன்வந்தார். இதன்காரணமாக பல உள்ளூர் உற்பத்திசாலைகள் உருவாகி, சோம்பேறிகளாக அந்நிய நாட்டு இறக்குமதிகளையே நம்பியிருந்த மக்கள் உழைப்பாளிகளாக மாறத் தூண்டப்பட்டனர். உடனடிப் பின்விளைவாக நாட்டில் பாரிய பஞ்சம் ஏற்பட்டு சிறிமாவின் செல்வாக்கு சரிந்து ஆட்சியை பின்னாளில் இழக்கவைத்தாலும்கூட, இந்த உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பினால் தேசிய பொருளாதார சுபீட்சத்தை நுகரும் வாய்ப்பு அடுத்ததாக அரசியல்கட்டில் ஏறிய ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைத்தது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிய புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்ற ஔவையாரின் வாக்குக்கமைய, இதனால் ஈழத்துத் தமிழ்வெளியீட்டுலகமும், தமிழ்ச்சஞ்சிகை முயற்சிகளும் ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறையும் முன்னேறின. அவை அந்நிய சந்தைவாய்ப்பு அச்சுறுத்தல் இன்றிச் செழித்து வளர்ந்தன. பல புதிய தமிழ்நூல் பதிப்பகங்கள் துணிந்து உருவாகின. ஒட்டுமொத்தமான தமிழகப் படைப்புகளினதும் இறக்குமதி தடைசெய்யப்பட்டதால் 1970-77ஆம் ஆண்டுகால கட்டத்தில் ஈழத்துப் படைப்புலகம் பாரிய பாய்ச்சல் ஒன்றை உணர்ந்தது. இதன் வலியையும் தமிழகப் புத்தக வெளியீட்டாளர்கள் ஓரளவு உணர்ந்தார்கள். இதனை வரலாறு தெளிவாகவே பின்னாளில் பதிவு செய்தது.

சிறிமா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தேசிய தினசரியான வீரகேசரி நிறுவனம் வீரகேசரி பிரசுரம் என்ற மலிவு விலை நூல் வெளியீட்டை எழுபது களின் ஆரம்பத்தில் கொழும்பில் தொடங்கி 1980 களின் ஆரம்பம் வரையில் 75க்கும் அதிகமான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ஜனமித்திரன் வெளியீடு என்ற தொடரில் 10க்கும் அதிகமான நூல்களையும் வெளியிட்டது. ஈழத்து வாசகர்களை ஈழத்தமிழ் நூல்களின் அபிமான வாசகர்களாக மாற்றி உணர்வூட்டியதில் வீரகேசரியின் பங்கு முக்கியமானது. 1983 இனக்கலவரம் கொழும்பில் நடந்திராவிட்டால் வீரகேசரி வெளியீடு தடையின்றித் தொடர்ந்திருக்கும். வீரகேசரியின் பத்திரிகை விநியோக வலையமைப்பு அவர்களது நூல் வெளியீட்டுக்கும் வாய்ப்பாயிருந்தது.

யாழ்ப்பாணத்திலும் மீரா வெளியீடு, கமலம் பதிப்பகம், சிரித்திரன் வெளியீடு யாழ் இலக்கிய வட்டம் போன்ற பல சிறு வெளியீட்டு மையங்கள் உருவாக வெற்றிநடை போட்டன. 1965ஆம் ஆண்டு உருவான இலக்கிய இயக்கமான யாழ் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகளால் இளம்படைப்பாளிகளும் ஆர்வத்துடன் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டார்கள். தெணியான், காவலூர் ஜெகநாதன், சாந்தன், கே.ஆர்.டேவிட், லெ.முருகபூபதி, மு.சட்டநாதன், கோகிலா மகேந்திரன், திக்குவல்லை கமால், சுதாராஜ், ராஜஸ்ரீகாந்தன், மண்டூர் அசோகா, அ.யேசுராசா, குப்பிளான் ஐ.சண்முகம், உடுவை எஸ்.தில்லை நடராஜா, க.தணிகாசலம் என்று இப்பட்டியல் விரியும்.

1964இல் டொமினிக் ஜீவாவினால் தொடங்கப்பட்ட மல்லிகை, பின்னாளில் 1965இல் சிவஞானசுந்தரத்தினால் தொடங்கப்பட்ட சரித்திரன், சுதந்திரன் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்ட சுடர் என்ற சஞ்சிகை போன்ற ஏராளமான ஈழத்துத் தமிழ்ச் சிறுசஞ்சிகைகள் அக்காலகட்டத்தில் தழைத்தோங்கியவையே. பின்னைய காலகட்டத்தில் மீண்டும் தமிழகப் படைப்புகளின் வல்லாதிக்கத்தினால் பல ஈழத்துச் சஞ்சிகைகள் கருகி மாண்டதும் கண்ணீர்க்கதைகள்.

ஈழத்தில் இனப்பிரச்சினை மையம்கொண்ட நிலையில் இலங்கையின் இனக்கலவரங்களும், அரசியல் ஒடுக்குமுறைகளும், இராணுவ முன்னெடுப்புகளும் படிப்படியாக பொருளாதாரத் தளம்பல் நிலையையும் போர்க்கால வாழ்வியல் முறையினையும் ஈழத்தமிழர்களிடையே தோற்றுவிக்க அது ஈழத்து இலக்கிய வளர்ச்சியையும், நூல்வெளியீட்டு முயற்சிகளையும் பெருமளவில் பாதித்தன. இந்தக் குழப்பநிலை, ஈழத்துப் படைப்பாளிகளை தமது படைப்புகளை அச்சிட்டு விநியோகிக்கும் தேவை கருதித் தமிழகத்தை நாடிச்செல்லத் தூண்டியது. இதை தமிழகத்தின் ஈழத்தமிழ் இலக்கியப்பாற்பட்ட ஆதரவு நிலை என்று எவ்வகையிலும் கருதமுடியாது. முற்றிலும் பொருளாதார இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி, அவர்களிடம் இலக்கிய கர்த்தாக்களின்பால் வாஞ்சை எதுவும் காணப்படவில்லை என்பதே உண்மை. பணவசதியற்று நலிவுற்றுத் தம் கையெழுத்துப் பிரதிகளை காலம்காலமாகக் கறையான்களுக்கும் இராணுவ எறிகணைகளுக்கும் காவுகொடுத்துவிட்டு வாழ்வா சாவா என்று காத்திருக்கும் ஒரு ஈழத்துத் தமிழ் படைப்பாளியின் நூலை இலவசமாக இலக்கிய உணர்வுடன் பதிப்புத்துத் தர எந்தவொரு தமிழகத்தின் பதிப்பகமும் முன்வராதுள்ளதன் காரணம் அந்த வர்த்தக நோக்கமேயாகும்.

இன ஒடுக்குமுறையின் மற்றொரு விளைவாக 1980 களின் பின்னர் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பூமிப்பந்தில் பரந்து வியாபித்து வாழத்தலைப்பட்டனர். இது ஈழத்து இலக்கிய உலகில் மற்றுமொரு வசந்தத்தை உருவாக்கியது. கருத்துச் சுதந்திரம் மிக்க சூழல், ஏராளமான அனுபவங்களைப் பெற்றுப் பயனடையும் வாய்ப்பு, உலக இலக்கியங்களை அந்தந்த மண்ணின் வாசனையை அனுபவித்தபடியே நுகரும் உயிர்ப்பான வாய்ப்பு, முடிந்தால் அந்த உலகப் படைப்பாளியின் வாழ்வனுபத்தை தமிழில் வடிக்கும் உத்வேகம் என்பன புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கும் வித்தியாசமானதொரு புகலிட இலக்கிய வளர்ச்சிக்கும் வித்தூன்றியது. காலாதி காலமாகத் தமிழகப் படைப்புலகின் அழுத்தத்துக்குள் வாழ்ந்த எம்மவர்களை சுதந்திர புருஷர்களாக, பொருளாதார வளத்துடன் ஈழத்துப் படைப்பாளிகளின் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பையும் வழங்கியது. பெருமளவிலான ஈழத்துப் படைப்புகளுக்கு நிதி உதவி வழங்கும் வலிமையுடன் பழைய நூல்களை வர்த்தக நோக்கின்றி மீள்பதிப்புச் செய்யும் வாய்ப்பும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குக் கிட்டியதில் வியப்பேதுமில்லை.

வரலாற்றில் வாழ்தல் என்ற நூல் ஈழத்தமிழ் படைப்பாளி எஸ்.பொன்னுதுரை எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல். இரண்டு பாகங்களில் 1924 பக்கங்களில் இந்நூல் அவரது சொந்தப் பதிப்பகமான மித்ர வெளியீட்டகத்தினால் 2003இல் வெளியிட்பட்டுள்ளது. எஸ்.பொவின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இதுவாகும். தனது சுயசரிதையின் ஊடாக இலங்கை இந்தியத் தமிழர்களின் இலக்கியம், பண்பாடு, அரசியல் ஆகியவை குறித்த வெளிப்படையான ஒரு நூற்றாண்டுக் காலப்பதிவை இந்நூலில் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறே வியக்கவைக்கும் பாரிய தொகுப்புகளாக ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் பல எவ்வித பொருளாதாரத் தடைகளுமின்றி வெளிவந்துகொண்டிருக்கின்றன. மு.தளையசிங்கம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம், 2006) என்பன அவற்றில் ஒரு சில. இவை தவிர, ஈழத்தின் பல்வேறு வெளியீடுகளின் நிதி உதவியை புலம்பெயர் தமிழ் அமைப்புகள், ஆலயங்கள் என்பன பொறுப்பேற்று அச்சிட்டு வழங்கிவருகின்றன.

இந்நிலையில், இப்படைப்புகளில் பெரும்பான்மையானவை தமிழகப் பதிப்பகக்களினூடாக பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் நிலைமையும் காணப்படுகின்றது. ஈழத்தின் அரசியல் கொந்தளிப்பு நிலைமை காரணமாக இந்நிலை துர்அதிர்ஷ்டவசமாகத் தொடரவே செய்யும். இந்நிலை நிரந்தரமானதல்ல. 70 களில் ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்பினை தமிழகச் சஞ்சிகைகளில் அத்திப்பூப் போலவும், குறிஞ்சிப்பூப் போலவுமே காணமுடிந்துள்ளது. இன்று புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்புகளை ஜனரஞ்சக தமிழக பருவ இதழ்கள் பிரசுரிப்பதுடன் அவர்களது ஆக்கங்களுக்குச் சிறப்பிடம் ஒதுக்கித்தருவதையும் காணமுடிகின்றது. இது ஈழத்தவரின் இலக்கியம் தமிழகத்தரத்திற்கு உயர்ந்துவிட்டதையோ, அகராதி இன்றித் தமிழீழத் தமிழை வாசிப்பதற்கு தமிழக இலக்கியவாதிகள் தயாராகி விட்டாரகள் என்பதையோ காட்டவில்லை. இவற்றின் பின்னணியில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் பாரிய சந்தை வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ள விழையும் ஒரு வர்த்தக ரீதியிலான பொருளாதார நோக்கமே காரணமாகும்.

இப்போர்க்கால சூழலிலும் கொழும்பில் குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, பூபாலசிங்கம் பதிப்பகம் போன்ற ஈழத்து நிறுவனங்கள் சர்வதேசத் தரத்தில் நூல்களை அச்சிட்டு வழங்கிவருகின்றன. இலங்கை நிலைமை சீரடையும்போது மேலும் பல ஆரோக்கியமான வளர்ச்சிகளை தொழில்நுட்பரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பரந்த விநியோக வசதிகளுடன் இந்நிறுவனங்கள் முன்னெடுக்கும் என்பதுடன் மேலும் பல பதிப்பகங்கள் அங்கு உருவாகி வளர வாய்ப்பும் ஏற்படும் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களிடம் உண்டு.

இந்நிலையில் மலேசியப் படைப்பாளிகளுக்கு ஈழத்தமிழரின் இலக்கியப் போராட்டம் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். மலேசியத் தமிழ்ப்படைப்பாளிகளின் மண்சார்ந்த இலக்கியங்களை அந்த மண்வாசனையுடன் படித்து ரசிப்பதற்கு ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் தாயகத்திலும், புகலிடத்திலும் தயாராகவே உள்ளனர். காடியையும், அஞ்சடியையும், உள்ளது உள்ளவாறாகவே அவர்கள் மலேசிய இலக்கியத்தை ஏற்றுக்கொள்வார்கள். அகராதிகளும் அடிக்குறிப்புகளும் தேவையில்லை. அவர்களை நோக்கி மலேசியப் படைப்புகள் செல்ல வாய்ப்பினை ஏற்படுத்துவதில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களும் அவர்களை நம்பி வாழும் எழுத்தாளர் சங்கங்களும்தான் முன்வரவேண்டும். அதை விடுத்து, ஈழத்தமிழர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பயணித்த தமிழகத்தை நோக்கிய நடைபாதையில் அங்கீகாரம் தேடி அலைவதுதான் சிறந்தது என்று நினைத்தால், மலேசிய இலக்கியம் தமிழக இலக்கியத்துக்குள் ஐக்கியமாகி தனித்துவமான மண்வாசனையை படிப்படியாக இழந்துவிடும் ஆபத்துள்ளது. அந்த வரலாற்றுத் தவறுக்கு மலேசிய எழுத்தாளர்களே பொறுப்பேற்கவேண்டியவர்களாவர்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768