|
புனைவுமொழியில்
பேச்சுமொழியின் நிலை குறித்த விமர்சனத்தில் என்னுடைய நிலை குறித்து
நான் எழுத வேண்டுமென சென்ற வல்லினம் இதழில் நண்பர்
திரு.சீ.முத்துசாமி கேட்டிருந்தார்.
நீல பத்மநாபனும் கி.ராஜநாராயணனும் வட்டார வழக்கை தங்களுடைய
எழுத்துக்களில் பதிவு செய்தார்கள். கி.ரா முன்வைத்த கரிசல் காட்டு
மொழியையும் அவர் காட்டிய அந்த அப்பாவி மனிதர்களையும் என்னால்
ரசிக்க முடிந்திருந்தது. ஆனால் நீல பத்மநாபனின் மலையாளத் தொனியில்
திருவனந்த புரத்து தமிழ் நடை என் வாசிப்பை சற்று சிரமப்படுத்தியது.
(அதுவும் பின்னாளில் பழகி விட்டதுதான்) வாசகனான என்னை படைப்பினுள்
நுழைய கதை சொல்லியின் மொழி எனக்கான வாசலை திறந்துவிட வேண்டும்
என்பது என் எதிர்பார்ப்பு. கதாசிரியன் சொல்ல வந்ததும், அவனது
சொல்லில் வந்ததற்கும் இடையிலான இடைவெளியில் என் வாசக மனத்தை அல்லாட
வைப்பது படைப்புக்குச் செய்யும் நியாயமாகாது. வாசிப்பு என்பது ஒரு
சுகமான அனுபவம். புரிதலுக்கான பாதைகள் விரிந்து கொண்டே செல்ல
மொழிதானே நம்மை கொண்டு செல்கிறது. இப்படி நான் சொல்வதை 'ஒரு
வாசகனின் பார்வையில்' என்றுதான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரச்சனையில் எதிர் முனையில் கதைசொல்லியின் பார்வையில் அவனது
நியாயங்களை பார்ப்போம். சொல்லும் கதையின் கரு, அதன் உரு
பற்றியெல்லாம் நிர்ணயம் செய்ய அவனுக்கு என்ன உரிமையும்
சுதந்திரமும் உள்ளதோ அதே உரிமையும் சுதந்திரமும் அவன் கதை சொல்லும்
மொழியிலும், பாணியிலும், அதனை தேர்வு செய்வதிலும்
அவனுக்குள்ளதுதானே.
"எனக்கு புரியும் விதமாக, எனக்கு பழக்கமான, நான் விரும்பும் விதமாக
எழுதுங்களேன்" என்பது வாசகனின் கெஞ்சல். "தெரிந்தேதான்,
திட்டமிட்டுதான் நான் என் புனைவு மொழியை தேர்வு செய்கிறேன்.
புரிந்து கொள்ள நீதான் மேலெழுந்து வர வேண்டும்" அது எழுத்தாளனின்
ஞானச்செருக்கு.
நண்பர்
சீ.முத்துசாமியின் வழக்கமான மொழியில், எழுத்தில் எனக்கு
என்றைக்குமே ஒரு மயக்கம் உண்டு. சில நேரங்களில் வருணனை சற்று
தூக்கலாகிவிட்டது என்ற குறையும் அவ்வப்போது ஏற்படுவதும் உண்டு. கதை
சொல்லியான அவர், அவர் படைத்திருக்கும் பாத்திரங்களையும் கதை
சொல்லும் புனைவு மொழியையும் அந்த பாத்திரங்கள் பேசிய அந்தக்
காலத்து மொழியாகவே எழுதியதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது.
ஆனால் அதை படிப்பதில் எனக்கு சற்று சிரமமாக இருந்ததற்குக் காரணம்
தோட்டப்புற வாழ்வு எனக்கு என் பால்ய காலத்தில் பரிச்சயம் இல்லாது
போனதுதான் என எண்ணுகிறேன். இது என் அனுபவ போதாமையன்றி படைப்பின்
குறை அல்ல. பலருக்கு அந்த மொழி மகிழ்ச்சியை அளித்திருக்கலாம். பழைய
நினைவுகளை மீட்டெடுத்து கொண்டுவந்து கொடுத்திருக்கலாம்.
"அடடே இந்த வாசிப்பு எனக்கு சற்று வித்தியாசமான அனுபவம்" என்று
நான் வியந்து, மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளலாம்" அல்லது "இது கொச்சையான
மொழி" என்று விதர்ந்து வெறுத்தொதுக்கலாம். எல்லாமே வாசகனான என் மன
அமைப்பைப் பொறுத்தது. பல்வேறு காலக்கட்டங்களில் இவை இரண்டுமே
என்னுள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் சீ.மூவின் எழுத்துக்களுக்கு
ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்பதுதான் எனக்கு புரியவில்லை. அவர்
கொஞ்சம் அதிகப்படியான விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டாரோ என மனம்
வருந்துகிறது.
எனக்கு என்னுடைய அபிப்பிராயம் எவ்வளவு முக்கியமானதோ
அதைக்காட்டிலும் எனக்கு முக்கியம் அவரது புனைவுமொழியை தேர்வு
செய்து கொள்ள அவருக்கிருக்கும் சுதந்திரம். அதனை மறுக்க நான் யார்
என்று என்னை நானே கேடடுக் கொள்கிறேன். வட்டார வழக்கு, அடிதட்டு
மக்களின் பேச்சு மொழி, இவையெல்லாம் இலக்கியத்தில் பதிவு செய்வது
என்பதும், எந்த திட்டவட்டமான வரையறைக்குள்ளும் வராத,
காலமாற்றத்துக்கு உட்படும் இலக்கிய செயல்பாடுகளில் ஒன்றுதான்.
தீர்க்கமான முடிவுகளும் சரி, தவறு என்று கோடு கிழித்தாற்போல்
சொல்லவும் இலக்கியம் என்பது கணிதம் அல்ல. மானுடத்தின் 'மனம்'.
|
|