|
கடந்த சில ஆண்டுகளாக மலேசிய வானொலி , தொலைக்காட்சி , நாளிதழ் எனப்
பல்வேறு ஊடகங்கள் திருநங்கையர்களின் வாழ்வினைப் பதிவு செய்யும்
முயற்சியில் ஈடுபட்டு வந்தன. அவர்களின் பெரும்பாலான கேள்விகளும்
அணுகுமுறைகளும் அவர்களின் வாழ்வினைக் காட்டாமல் அவர்களை ஓர்
ஆச்சரியமான ஜந்துக்களாகவே காட்ட முனைந்தன. எல்லாவற்றுக்கும் மேல்
'அலாரம்' எனும் ஓர் 'அறிவாளிகளின்' நிகழ்வில் இவர்களிடம்
கேட்கப்பட்ட கேள்விகளும் செய்யப்பட்ட விவாதங்களும் அவர்களின்
வாழ்வையும் அதை ஒட்டிய தேவைகளையும் கேலி செய்வது போலவே அமைந்தன.
'வல்லினம்' இதழுக்காகத் திருநங்கையர்களை நேர்காணல் செய்யும்
நோக்கோடு பத்துகேவ்ஸ் பகுதியில் வசிக்கும் சில திருநங்கையர்களை
அணுகினோம். நாங்கள் சென்ற நேரம் சுமார் நான்கு பேர்
இருந்தனர்.அவர்களில் ஒருவர் அப்போதுதான் அறுவை சிகிச்சை
மேற்கொண்டிருந்தார். எங்கள் முதல் கேள்வியை அவரை நோக்கித்
தொடுத்தோம்.
கேள்வி:
எதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறீர்கள்?
பதில்: எங்களுக்கும் வாழ்க்கை வேண்டும். நாங்களும் பெண்கள் மாதிரி
பெண்மை குணம் அடைகிறோம். கல்யாணம் பண்ணி குடும்பத்தோடு வாழ
ஆசைப்படுகிறோம். வேறு எதுவுமே இல்லை.
கேள்வி: அறுவை சிகிச்சை என்பது உயிர் போகும் அளவிற்கு ஆபத்தானது.
எதற்கு அப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்க வேண்டும்? அறுவை சிகிச்சை
செய்து கொள்ளாமலும் இருக்கலாம்தானே...
பதில்: யார் எங்களை மதிக்கிறார்கள்? நான் ஒரு நல்ல வேலையில்
இருக்கிறேன். குடும்பம் இருக்கிறது. நாங்கள் பெரும்பாலும்
டான்சர்கள்தான். தவறான பாதையில் செல்லும் அரவாணிகளைப்போல
எங்களையும் தவறாகவே எண்ணிக் கொள்கிறார்கள்.
கேள்வி: அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமென்ன?
பதில்: இப்போது, நான் குடும்பத்தோடு இருக்கிறேன். ஏற்றுக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால்,சில குடும்ப உறுப்பினர்கள் எங்களைப்
போன்றோரை அடித்து விரட்டி விட்டார்கள் என்றால் நான் யாரைத்
தேடிப்போவேன்? சொல்லுங்கள். யார் எங்களை ஆதரிக்கிறார்களோ
அவர்களுக்குக் கீழ் பணி செய்வது நியாயம்தானே? அரசாங்கத்திடம்
எங்களைப் போன்றோருக்கு வேலை கொடுக்கச் சொல்லுங்கள். கண்டிப்பாக
நாங்கள் வேலை செய்வோம். விண்ணப்பம் பண்ணியும் எங்களை ஏற்றுக்
கொள்ளாமல் இருக்கிறார்களே. விண்ணப்பப் பாரத்தைப் பூர்த்திச்
செய்யும்போதே இந்த வேண்டா வெறுப்புக் போக்கைக் காண முடிகிறது.
எங்களின் நடை, உடை, பாவனை அதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
கேள்வி: பொதுவாக, ஒரு திருநங்கை எந்த விதத்தில் தான் ஓர் ஆணாக
இல்லை,மாறாக மனதளவில் ஒரு பெண் என்று உணர்கிறார்.
(இந்தக் கேள்விக்கு அனுஷா பதில் சொல்ல முந்திக்கொண்டார்.)
பதில்: 12,13 வயதில் பெண்மை என்ற உணர்வு மனதில் தோன்ற ஆரம்பித்தது.
4,5 வயதிலேயே என் நடை உடை பாவனை யாவும் பெண்மையாக இருந்ததை
அம்மாவும் உணர்ந்தார். படிக்கின்ற காலத்தில் பெண்களோடேயே
இருப்பேன். ஆண்களோடு சேருவதில்லை. வளர வளர எனக்குப் புரிந்து
போயிற்று. அறுவை சிகிச்சை செய்வதே சரியான நடவடிக்கை என முடிவு
செய்தேன்.
கேள்வி: பெண்ணிற்குரிய மனது எப்படி வந்தது?
பதில் : சிறு வயதில் ஆண்கள் பந்து விளையாடப் போவார்கள். எனக்கு
அந்த ஆசை வராது. பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வம்
எழுந்தது. பெண் பிள்ளைகள் என்னையும் அவர்களோடு ஒருவராகச்
சேர்த்துக் கொண்டதால் பெரிதாகப் பிரச்சனை எழும்பவில்லை. பள்ளியில்
ஆசிரியர்களோடு கூட சகஜமாக நான் பேசியதில்லை.
கேள்வி: குடும்பம் ஒரு காரணமாக இருக்குமா? நிறைய அக்காள் தங்கைகள்
இருப்பதனால் அந்தப் பெண் தன்மை வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?
பதில்: அப்படியொன்றும் நிறைய அல்ல. அக்கா-தங்கைகள் இருந்தார்கள்.
முதலில் நான் பெண் உடைகளை உடுத்தும்போது அம்மா ஏசினார்தான். ஆனால்,
நான் பிடிவாதமாக உடுத்திவரும்போது விட்டுவிட்டார். அவருக்குப்
புரிந்து போயிற்று.
(இடையில் குறுக்கிட்ட ஜெனி)
ஜெனி:
சிறு வயதிலேயே வீட்டு வேலைகளை செய்வேன். என் ஜாதகப்படி நான்
இப்படித்தான் என்று இருக்கிறது. எனக்கொரு 5 வயது பிள்ளை
இருக்கிறாள். தத்தெடுத்தது. அம்மா பார்த்துக் கொள்கிறார்.
கேள்வி: பெண் தன்மைகள் மனதில் இருக்கும்போது மீண்டும் ஓர் ஆணாக
நாம் மாறுவோம் என்று முயற்சிகள் ஏதாவது எடுத்தது உண்டா?
பதில்: அது எங்கள் மனதில் உதிக்காத ஒன்று. கண்டிப்பாக
முடியாததும்கூட. 28-12-2002ல் பெண் உடைகளை நான் உடுத்தினேன். ஒரே
நாளில் உதித்த மாற்றம்தான். அன்றிலிருந்து இன்றுவரை இப்படியே
தொடர்கிறேன். வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் என் வாழ்க்கை இது.
நண்பர்கள் கேலி உண்டுதான். அதனைப் பொருட்படுத்துவதில்லை. நான்
இன்னும் கல்யாணம் பண்ணவில்லை. மூன்றாம் மாதம் பண்ண வேண்டியது.
பாட்டியின் இறப்பால் தள்ளிப்போடப்பட்டுவிட்டது.
கேள்வி: சடங்கு - சாங்கியத்தை யாரை வைத்துத் செய்வீர்கள்?
பதில் : எங்களுக்கென்று ஞானிகள் இருக்கிறார்கள். பெரியோர்
இருக்கிறார்கள். அனுபவப்பட்டவர்கள் அதனை முன்னெடுத்துச் செய்வோம்.
கேள்வி: சடங்குகளை யார் உருவாக்கினார்கள்?
பதில் : ஞானிமார்கள், அதாவது எங்கள் மூதாதையர்கள் இந்தியாவிலேயே
இதனை உருவாக்கிவிட்டார்கள். இதனை நாங்களே சொந்தமாக உருவாக்கவில்லை.
கேள்வி: உங்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு கடவுள் இருக்கிறதா?
பதில்: சேவல் மீது உட்கார்ந்திருக்கும் துர்க்கை. துர்க்கை
அவதாரம்தான் எங்களுக்குரியது. அவர் அவதரிப்பில்தான் எங்கள் கதையும்
வருகிறது.
கேள்வி: ஆணின் மீது உருவாகும் காதலைப்பற்றி கூறுங்கள்.
பதில்: பள்ளிப் பருவத்திலே அது வந்திருந்தது. பதின்மூன்று
வயதிருக்கும். கூச்சம் நாணம் எங்களுக்குள் உருவானபோதே காதல்
பூத்தாயிற்று என்று அர்த்தம்.
கேள்வி: அப்படி நீங்கள் காதல் செய்கிற ஆண்கள் நேர்மையாக
இருக்கிறார்களா?
பதில் : நேர்மையாக இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
கேள்வி : பணத்திற்காகவும் பழகுகிறார்கள்தானே?
பதில் : இருக்கிறார்கள். ஓர் ஆணோடு நான் ஏழு ஆண்டுகளாக
வாழ்ந்தேன்.எல்லோருக்கும் தெரியும். அவர்கள் வீட்டிற்கு நானொரு
பெண் என்றுதான் தெரியும். இடைக்காலத்தில் ஒரு நண்பர் அவர்களின்
வீட்டில் சொல்லி பிரச்சனையாகிப் பிரிந்துவிட்டோம். இதுபோன்ற
சமயமெல்லாம் 'பெற்றவள் தன் மகனை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால்
நாங்கள் விட்டுவிடுவோம்.
கேள்வி:
ஏன்?
பதில் : நாங்கள் இப்போது வந்தவர்கள். பெற்றவள் சின்ன வயதிலிருந்து
வளர்த்தவள். பேரன் -பேத்திகளைப் பார்க்க வேண்டுமென விரும்புபவள்.
எங்களைப் போன்றோரை அம்மாக்கள் ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை.
இல்லையென்றால் விட்டுவிடத்தான் வேண்டும். பெண்ணுக்குக் கர்ப்பப்பை
இருக்கிறது. எங்களுக்கு இல்லை... எப்படிப் பார்த்தாலும் பெண்ணுக்கு
ஒரு படி கீழேதான் நாங்கள் இருக்கிறோம். உடுத்துதலில் அவர்களைக்
காட்டிலும் மேலாக இருந்தாலும் கர்பப்பை விஷயத்தில் நாங்கள்
கீழேதான் இருக்கிறோம். ஆண் தானாக எங்களை நாடிவரும்போது நாங்கள்
ஏற்றுக் கொள்கிறோம். நாங்களாக ஆசைப்படுவது இல்லை. அது
வீண்கஷ்டங்களை, துயரங்களை கொண்டுவரும் என்பதை நாங்கள் அறிவோம்.
இவற்றை உணர்ந்திருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான்
இருக்கிறோம்.சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் போகலாம்.
கேள்வி: மன்னிக்க வேண்டும். இன்னும் சில கேள்விகள் உண்டு.
அரவாணிகள் அதிகமாகப் படிக்காததற்கு என்ன காரணம்?
பதில்: பள்ளியிலேயே எங்களின் கஷ்டங்கள் ஆரம்பமாகின்றன. கழிவறை
முக்கியமான ஒன்று. எதில் நுழைவது எனக் குழம்பிப்போவோம்.
வெட்கப்படுவோம்.
கேள்வி: மனதளவில் நீங்கள் பெண்ணாக இருக்கும்போது வெட்கப்படுவதும்
குழம்பிப்போவதும் ஏன்?
பதில்: பள்ளியினுடைய சட்டதிட்டங்கள் எங்களைத் தடுக்கிறதே.
ஆனாலும்கூட கல்வியில் நன்றாகப் படித்து முன்னேறியவர்களும்
இருக்கிறார்கள். நான் படிப்பை விட்டாலும் செலூனுக்கு (saloon)
படித்தேன்.
கேள்வி: குடும்ப உறவு எப்படி?
பதில் : என் தந்தை ஒதுக்கியிருந்தாலும், என் தாயோடு நான் வெளியே
போவதும் வருவதும் உண்டு.
கேள்வி : யாரும் கேலி செய்வதுண்டா?
பதில் : எங்களை இல்லை. ஆனால், நடக்கும்போது ஓவராக வெட்டிக்
கொண்டும் தளுக்கிக்கொண்டும் நடந்தால் கேலிப் பண்ணத்தான்
செய்வார்கள்.
கேள்வி: அதுபற்றி கேட்க வேண்டும் . ஏன் அப்படி ஒரு நடை?
அதிகபட்சமாகப் பெண் தன்மையைக் காட்டுவதற்கா?
பதில்: ஒரு கட்டுப்பாட்டை நிர்ணயித்தவர்கள் நாங்கள். கட்டுப்பாடே
இல்லாதவர்கள், பணத்திற்காக ஆண்களைக் கவர வேண்டும் என்று
நினைப்பவர்கள்தான் அப்படி அதிகபட்சமாகக் காட்டுகிறார்கள்.
கேள்வி: அந்த நடை இயல்பாக வருகிறதா இல்லை...
பதில்: இயல்பா வருவது என்பது சும்மா பேச்சு. சிலர் தங்களை அரவாணி
என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்தில் கூட இருக்கலாம்.
கேள்வி: சமூகம் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ பார்க்காமல் ஒரு
திருநங்கையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள்
இருக்கிறார்களா?
பதில்: கண்டிப்பாக இருக்கிறார்கள். நாங்களும் அப்படி
நினைக்கிறவர்கள்தானே?
கேள்வி: தொழில் ரீதியாக நீங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் என்ன?
பதில்: ஆளைப் பார்க்கிறார்கள். அடையாள அட்டையைப் பார்க்கிறார்கள்.
வேறுமாதிரியாக இருப்பதைப் பார்த்து ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.
அரசாங்கம் மூலமாகப் பெண்ணுக்குரிய A/P அடையாள அட்டை கிடைத்தால்
பரவாயில்லை. அதுவே இப்போது எதிர்க்கப்படுகிறது. இதுதான்
எங்களுக்குப் பெரிய பிரச்சனை.
கேள்வி: இம்மாதிரியான பிரச்சனைகளை அரசாங்கப் பார்வைக்குக் கொண்டு
செல்ல நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: இன்னும் நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் எங்களை
நாங்களே ஒன்றுபடுத்த வழியில்லை.
கேள்வி: உங்களுக்கென்று ஒரு சங்கத்தை அமைத்துப் பிரச்சனைகளைக்
கொண்டு போக முயற்சிகள் ஏதேனும்...
பதில்: இருந்ததில்லை. கிள்ளானில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் எங்களுக்கு
உதவி செய்ய முன் வந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
அவர்களும் நிறுத்திக் கொண்டார்கள். அடையாள அட்டையை மாற்றுவது, வேலை
வாங்கிக் கொடுப்பது என உதவிகள் புரிய வந்தவர்களை யாரோ தடுத்து
விட்டார்கள். எங்களுக்கும் காரணத்தைச் சொல்ல விரும்பாமல்
இருக்கிறார்கள்.
கேள்வி: திருமணமானபின் மாமனார் மாமியார் வீட்டில் எப்படி
வாழ்கிறீர்கள்?
(இந்தக் கேள்விக்குக் கௌசல்யா பதில் அளித்தார்)
பதில்: எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கும் திருமண ஆசை
உண்டுதான். ஆனால், அதற்காக மாமியார் வீட்டில் பொய் சொல்ல எனக்கு
இஷ்டமில்லை. நானும் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால்
வீணாக ஒரு மன உளைச்சலை அந்தக் குடும்பத்திற்கு தர விருப்பமில்லை.
எங்களின் குறை எங்களுக்குத் தெரிகிறது.
கேள்வி: பெண்களோடு உங்கள் தொடர்பு எப்படி?
பதில்: சகஜமாகப் போகிறது. எங்களில் மூன்று வகையினர்
இருக்கிறார்கள். ஆண் உடையணிந்து மனம் மட்டும் பெண்ணாக இருப்பது.
பெண் உடை தரித்து அறுவை சிகிச்சை செய்யாமல் இருப்பவர்கள்.
உடல்-உடை-மனம் யாவும் பெண்ணாக திருநங்கையர்போல இருப்பது.
கேள்வி: சௌகிட்டில் அரவாணிகள் போதைப் பொருளுக்கு அடிமையாகவும் அதனை
விற்பவர்களாகவும் உலாவுகிறார்கள். நீங்கள் எப்படி இந்த விஷயத்தை
எதிர்கொள்கிறீர்கள்?
பதில் : வெளியில் இருந்து பார்த்தால் அது கெட்டதாகத் தெரியும்.
அவர்களின் பக்கமாக இருந்து பார்த்தால் அதனைக் குறை சொல்லத்
தோன்றாது. வேலை செய்யும் இடத்தில் கேலி பண்ணப்படுவது,
பந்தாடப்படுவது, போன்ற காரணங்களினால் இது போன்ற காரியங்களில்
ஈடுபடுகிறார்கள். பயம் வரக்கூடாது என்பதற்காகவே அதனை பயன்படுத்த
கற்றுத் தரப்படுகிறார்கள். அதுவே அவர்களைப் போதைப்பித்தர்களாகி
மாற்றுகிறது. வேறு வழியில்லாமல்தான் இந்த வழியைத்
தேர்ந்தெடுக்கிறார்கள்.
கேள்வி: திருநங்கைகளுக்கு இந்தியாவில் மிக முக்கியமான தொழில்
பிச்சை எடுப்பது. மலேசியாவில் அப்படி ஏதும் உண்டா?
பதில்: இந்தியாவில் சாபமிட்டுவிடுவார்களோ என்று பிச்சைப்
போடுகிறார்கள். இங்கே அப்படி இல்லை. நீங்கள் தப்புச் செய்தால்தான்
சாபமிடுவோம். நீங்கள் நன்றாகப் பழகினால் நாங்களும் நன்றாகப்
பழகுவோம்.
கேள்வி: சாபம் உண்மையிலேயே பலிக்குதா?
பதில்: கண்டிப்பாகப் பலிக்கும். என் அம்மாவைக் கூட யாரோ
சபித்ததால்தான் இப்படி எல்லாம் என்று கூட சொன்னதுண்டு. இங்குப்
பிச்சையெடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமில்லை. வேலைகள் இருக்கு.
வயதான காலத்தில் எங்களைப் போன்ற இளைய சமூகம் அவர்களைப் பராமரிக்க
வழிவகைகளை உருவாக்குவோம். எங்களுக்கென்று உறவுமுறைகளைத்
தத்தெடுப்பு மூலமாக உருவாக்கிக் கொண்டுள்ளோம். எங்களுக்குள்ளே
அத்தை,சின்னம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, ஞானி என்று இருக்கிறோம்.
கேள்வி: திடீரென்று ஒருவர் உங்களோடு சேர்ந்து கொள்ள வருவார்
என்றால் உடனே ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: முதலில் அந்த அரவாணியின் நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
எங்களைப் பார்த்து வெட்கப்பட்டுச் சேராமல் இருப்பவர்களும் உண்டு.
கேள்வி: உங்களில் யாராவது இறந்தால் அந்தச் சடங்கை எப்படிச்
செய்வீர்கள்?
பதில்: எங்களைச் சார்ந்து இருந்தால் எங்களின் ஞானி
(கொள்ளுப்பாட்டி) எடுத்துச் செய்வார்கள்.
கேள்வி: அரசியலில் உங்களுக்கான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?
பதில்: அரசியலில் எந்தவொரு கட்சியிலும் சேரவில்லை. ஆனால் ஓட்டுப்
போட்டிருக்கிறோம். எங்கள் உரிமைகளைப் பற்றி நாங்கள்
கேட்டிருக்கிறோம். என் பெயர் கௌசல்யா. இந்தப் பெயர் A/P
என்றில்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை. நேரடியாகத் தகப்பன் பெயர்
வரும்படி வழக்கறிஞர்களை வைத்துப் பேசினோம். ஆனால், அவர்கள் அந்த
விஷயத்திற்கு முக்கியத்துவம் தராமல் அப்படியே கிடப்பில் போட்டு
விட்டார்கள்.
கேள்வி: மலேசியாவில் நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஏதாவது ஒரு
சங்கமோ இயக்கமோ உருவாக்கும் சாத்தியம் உண்டா?
பதில்: அப்படி ஒன்றும் இல்லையென்றாலும் நாங்கள் யாவரும்
ஒன்றுகூடும் நிகழ்வு பண்டமாரான், போர்ட் கிள்ளானில் உள்ள ஜெகன்மாதா
திருவிழாவில்தான் நடக்கும். ஆடி மாதத்தில் உலகத்திலுள்ள இந்தியத்
திருநங்கைகள் இத்திருவிழாவிற்கு வருவார்கள்.
கேள்வி: உங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வு பற்றி
கேள்விப்பட்டுள்ளோம், உங்களுக்குள் சண்டை வருமா?
பதில் : வரும். யாருக்குத்தான் சண்டை வராது. தவறாகப் புரிந்து
கொள்ளும் பட்சத்தில் சண்டை வரத்தான் செய்யும். ஆனால், அது
கொடூரமானதாக மாறாது. மீண்டும் நாங்கள் பேசிச் சமரசமாகிவிடுவோம்.
எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்து போவோர் இல்லையென்றே சொல்ல
வேண்டும். வீட்டிலிருந்து சண்டைப் போட்டு புறப்பட்டு வந்திருப்போரே
எங்களிடையே அதிகம். எங்களோடு வாழ்ந்துவரும் கணவர்மார்கள் கூட
சண்டைபோட்டுப் போவோர் உண்டு. நாங்கள் தடை செய்வதில்லை. ஒரு பெண்ணை
வைத்துக் கொண்டு எங்களோடு அவ்வப்போது வாழ்வோரும் உண்டு. மனைவி
பிள்ளைகளோடு இருந்தும் எங்களை வைத்திருப்போரும் உண்டு. எங்களோடு
நடந்து செல்லும்போது எங்கள் கரங்களைப் பிடித்தபடி செல்வோரும்
உண்டு. விலகியபடி நடப்போரும் உண்டு. எங்களை முன்னே விட்டுப் பின்னே
வருவோரும் உண்டு. எங்களை பின்னே விட்டு முன்னே செல்வோரும் உண்டு.
சிலர் குடும்பத்தில்/ வீட்டில் தெரிவிக்காமல் எங்களோடு வாழ்வோரும்
உண்டு.
கேள்வி : திருநங்கையாகும் சடங்கு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்.
பதில் :பெண்கள் வயதிற்கு வந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றும் சடங்கு
எங்களுக்கும் நடக்கிறது. அதற்கு மேற்பட்டு நாங்கள் ஆண்களைப்
பார்க்கலாம்.உடல் முழுவதும் மஞ்சள் பூசிக் கொள்வோம். மஞ்சள் நம்
உடலின் கிருமிகளை அழிக்க வல்லது. ஏனெனில், அறுவை சிகிச்சை செய்த
பின்பு காயத்துடன் உள்ள உடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கே
ஆகும். குளிக்க முடியாது.
(குறுக்கிட்ட ஜெனி)
சட்டப்பூர்வமாக எங்கள் திருமணங்கள் நடைபெறுவதில்லை. ஏனெனில், ஆண்
அடையாளக்கார்டையும் இன்னோர் ஆண் அடையாளக்கார்டையும் வைத்தால்
திருமணத்தை யார்தான் நடத்திவைப்பார்? வெளிநாட்டில் அறுவை சிகிச்சை
செய்துக் கொண்டாலே அடையாளக் கார்டை மாற்றிக் கொடுக்கிறார்கள்.
சிங்கப்பூரில் இருக்கிறது. இங்குதான் இல்லை. ஆனால், அறுவை சிகிச்சை
நடக்கும் மருத்துவமனைகளில் எங்களுக்கு இப்படி நடந்தது என்று
பத்திரம் எழுதிக் கொடுப்பார்கள். அந்தப் பத்திரம் அடையாள அட்டையை
மாற்றுவதற்காகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், மலேசிய அரசாங்கம்
அப்பத்திரத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அதற்கான
காரணத்தைக் கேட்கும்போது 'இந்நாடு இஸ்லாமிய நாடு', என்று
சொல்லிவிட்டார்கள்.
கேள்வி: அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் நண்பர்கள்,
சுற்றத்தார் போன்றோரின் தொடர்பு எப்படி இருக்கும்?
பதில்:சிகிச்சைக்குப் பிறகு எங்களுக்குப் பெண் தன்மைகள் இயல்பாகவே
வந்துவிடுகின்றன. உதாரணத்திற்குச் சிகிச்சைக்கு முன் தூக்கிய
பாரமான பொருளைச் சிகிச்சைக்குப் பின் தூக்கச் சிரமப்படுகிறோம். ஆண்
பலம் எங்களுக்குள் குறைந்திருப்பதை அதன் மூலம் உணர்கிறோம். இது
மனப்பிரமை அல்ல. எனவே, சுற்றத்தாரும் எங்கள் பெண்மையை அறிந்தே
வைத்துள்ளனர்.ஒரே நிபுணத்துவ மருத்துவர்தான் அறுவை சிகிச்சை
செய்வார். அப்படி இரு மருத்துவர்கள் தாய்லாந்தில் இருக்கிறார்கள்.
முதல் நாளில் எக்ஸ்ரே எடுத்து, இரத்தம் பரிசோதித்து எல்லா அடிப்படை
சோதனைகளும் நடந்து மிக நேர்த்தியாக இருக்கும். மூன்று மணி நேரம்
அறுவைசிகிச்சை நடக்கும். மூன்றாம் நாளில் அனுப்பிவிடுவார்கள்.
இரத்தக் குழாயை (tiup) வெளியேறுவதற்கு முதல் நாள்
கழற்றுவிடுவார்கள். தண்ணீர் (குளுகோஸ்) குழாயை முதல் நாளே
கழற்றிவிடுவார்கள். சிறுநீர் பையை மட்டும் கையோடு எடுத்துவர
வேண்டும். சுமார் பத்து நாட்களுக்கு அதனை வைத்திருக்க வேண்டும்.
அதனைக் கழற்றிய பிறகே சிறுநீரை இயல்பாகக் கழிக்க முடியும்.
சிகிச்சைக்கு முன்பாக எங்கள் தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு பூஜை
செய்து, வாக்குக் கொடுத்து விட்டுத்தான் போகிறோம்.
(பானு இடையில் குறுக்கிட்டார்)
எங்கள் மத்தியில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் வேலையை
முடித்துவிட்டு நாங்கள் போவோம். போலீஸ் காவல் நிலையம் என்றாலும்
நாங்கள் போவோம். நாங்கள் போய் பார்த்துப் பிரச்சனை என்ன ஏது என்று
விசாரித்து எங்களுக்குள் பணம் திரட்டி உதவி புரிவோம்.நாங்கள்
இப்போது ஆறாவது தலைமுறை, இந்த நாட்டில். ஆகவே, ஒரு பெரிய கூட்டமே
இருக்கிறது.அறுவை சிகிச்சை என்பது இப்போது கொண்டு வந்தது.
அப்போதெல்லாம் கடவுள் விதிப்படிதான். நான் உண்மையாக ஓர் அரவாணியாக
மாற வேண்டும். உதவி செய் அல்லது இப்போதே கொன்று போடு என்று
கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். 48 நாள் பூரண விரதமாக இருக்க
வேண்டும். அந்நாட்களில் ஆண்களைப் பார்க்காமல் கடவுளுடைய பாதத்தில்
இருப்பார்கள். 48வது நாள் உடல் முழுவதும் மஞ்சள் பூசி, குழி
தோண்டி, இரு கரங்களையும் கட்டி, முழங்கால்படியிடச் செய்து உட்கார
வைத்துவிடுவார்கள். ஓர் அரிவாளைக் கொண்டு அவர்களின் முடியைக்
கொண்டு கட்டி 'மாதாஜிகி ஜே!...மாதாஜிகி ஜே!' என்று ஒரு வயதான
அரவாணி மர்மப்பகுதியினைச் சுரண்டி எடுப்பார்கள். அதனை அங்கேயே
புதைத்து விடுவார்கள். சூடு காட்டப்பட்ட நெய்யை அப்பகுதியில்
ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.விடிய விடிய பஜனை ஆராதனை நடக்கும்.
நெய் ஊற்ற ஊற்ற அப்பகுதி மரத்து விடும். பந்துபோல உப்பிக்
காணப்படும். உயிர் போனால் அங்கேயே போய்விடும். உயிர் இருந்தால்
மறுநாள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார்கள். அப்பகுதி இரத்தமும்
சதையுமாக இருக்கும். அதை உடைத்துவிட்ட பிறகுதான் திருநங்கை என்று
அழைக்கப்படுவார்கள். ஆஷா, அப்படிப்பட்ட சூழலிலிருந்து
வந்தவர்கள்தான். அதனால், அவரைத் தெய்வத்திற்குச் சமமாக
மதிப்பார்கள். அவர்களின் வாக்குப் பலிக்கும். சாபமிட்டால் உடனே
பலிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
(பொதுவாகவே
ஆஷா என்பவர் மலேசியத் தமிழ்த் திருநங்கைகளுக்கு மத்தியில் ஒரு
தலைவியின் இடத்தை வகிப்பதால் அவரையும் இந்த நேர்காணலில்
இணைத்துக்கொண்டால் நிறைவாக இருக்கும் என எண்ணினோம். சில
திட்டமிடல்களுக்குப் பின் ஆஷாவைத் தேடி சௌகிட் சென்றோம். முதலில்
அவர் மகள் ஸ்தானத்தில் இருந்த லில்லியிடம் பேசினோம். பிறகு
லில்லியின் மூலம் ஆஷா எங்களுக்கு அறிமுகம் ஆனார். அறுபது வயதைக்
கடந்திருந்தார் ஆஷா. சிறு அறிமுகத்திற்குப்பின் ஆஷா அம்மா
(அப்படித்தான் அழைத்தோம்) பேச ஆரம்பித்தார். )
ஆஷா : எங்கூட பொறந்தவுங்க 8 பேரு. ஆனா, 8 பேரும் எங்கூட இல்ல.
எவ்ளோ மக்களை நான் சம்பாதிச்சிட்டேன். எங்க போனாலும் ஆண்ட்டி...
ஆண்ட்டி..பழகுறாங்க.
கேள்வி: உங்களுக்குள்ளயே சொந்தங்கள் தேடிக்கிட்டிங்க.
ஆஷா: ம். புருஷன் எனக்குச் சப்போட்டிங். அவரு இறந்து 12
வருஷமாச்சு. ஆனா, அந்த உறவு முறியல. முன்னே இருக்கிறதுபோலத்தான்
இருக்கு.
கேள்வி: உங்ககிட்ட வந்து சேர்பவர்கள் பற்றிக் கூறுங்கள்...
ஆஷா: நான் சொல்லி என்ன இருக்கு? சில தாய் தகப்பனுக்குத் தெரிய
மாட்டேங்குது. அவங்களுக்கு ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம்
பண்ணிவைக்கிறாங்க. கல்யாணம் பண்ணி வைச்சிட்டு அப்புறம் அதுங்க
உட்டுட்டு ஓடியாந்திடுதுங்க. இதெல்லாம் ஒரு பெரும் பாவம். ஒரு
பொண்ணோடே வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது. புருஞ்சிக்கணும். நம்ப
பிள்ளை இப்படியிருக்குன்னு புரிஞ்சிக்கணும். புரியாம, நீ
ஆம்பளைத்தான், நீ ஆம்பளத்தான்னு சொல்லி ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம்
வைச்சிறாங்க. அவுங்களுக்குன்னு ஒன்னுமில்லாம வூட்டவுட்டு
ஓடியாதிருதுங்க. ஓடியாந்து இன்னைக்கு அறுவட பண்ணி ஓப்ரஷன் பண்ணி
பொம்பளையா இருக்காங்க.
கேள்வி: குடும்பத்திலே ஓர் ஆண் பெண் தன்மையா இருக்கலாம்.
காலப்போக்கிலே, பயிற்சினாலே கவுன்சிலிங்னாலே இல்ல சுத்தி உள்ளவங்க
நாள மனோதத்துவத்தாலே மீண்டும் அவரு, தான் ஓர் ஆணுன்னு நினைச்சு
மாறுன சம்பவம் இருக்கா? அந்த மாதிரி மாற சாத்தியம் இருக்கா?
ஆஷா: இதுவரைக்கும் என் 50 வருஷ சர்வீஸ்ல நான் பார்த்ததில்லை. இந்த
மாறி உடுத்துனவங்க பெண்ணுடை போட்டவங்க மீண்டும் ஆணா மாறி ஒரு
பொண்ணைக் கல்யாணம் பண்ணி நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. இந்த
ஆல் மலேசியாவுலே தெரியும் என்னை. ஆல் சிங்கப்பூருக்கும் என்னைய
நல்லா தெரியும். தமிழவங்கள நான் மாறி பார்த்ததில்லை.ஆனா,
மலாய்க்காரங்க இருக்கிறாங்க. அவுங்க கல்யாண பண்ணிகிட்டு ஆம்பளையா
மாறிப் போனதுண்டு. தமிழர்கள்ல வயசானவங்க எல்லாம் கடைசி வரைக்கும்
இப்படித்தான் இருக்கிறாங்க. இந்தக் கேஸ்ஸூன்னு சொல்றாங்கள்ல.
அவுங்களா வந்து ஆம்பள மாதிரி வேஷம் போட்டுக்கிறாங்க. ஆனா அவுங்க
பொம்பள மாறி இருக்கிறாங்க. சம்பாதிக்கிறாங்க.
கேள்வி: இந்தச் சௌகிட்ல நீங்க எத்தன வருஷமா இருக்கீங்க?
ஆஷா: சௌகிட்ல நான் ஒரு 40 வருஷமா இருக்கேன்.ஆரம்பத்தில இங்க
எல்லாம் கம்பத்து வீடுங்க. இந்த ஃபிளாட்லாம் இல்ல.
கேள்வி: நீங்க இங்க வந்து சேரும்போது மற்றத் திருநங்கைகளும்
இருந்தார்களா?
ஆஷா: இருந்தாங்க. ஆனா பர்மனன்டா இருந்தது நான்தான். ஏன்னா... நான்
கடை வச்சி வியாபாரம் செய்தேன்.
கேள்வி : சாப்பாட்டுக் கடையா?
ஆஷா: ம். ஆயிரம் பேசும்யா. நானும் இதே இடத்துல இருந்துதான்
பொண்ணுங்களக் கட்டிக் கொடுத்தேன். நம்ப ஆளுங்கதான் ஒன்னுன்னா
நாலுன்னுவாங்க. எவ்ளோ நடக்குது மத்த இடத்தில. பார்த்திருக்கிங்களா?
இதெல்லாம் வந்து நம்ப ஆளுங்கதான் இந்த மாறி செய்யுறது. இந்தச்
சீன-மலாய்காரன்லாம் இந்த மாறி இல்ல. சீனவங்க நிறைய பேர்
குடும்பக்காரங்க இருக்கிறாங்க.நெர்ஸ் வேலை செய்றவங்க இருக்கிறாங்க.
வாத்தியாரு வேலை செய்றவங்க இருக்கிறாங்க. எல்லாந்தான்
இருக்கிறாங்க. அவுங்களுக்கு ஒன்னுமில்ல. நம்ப ஆளுங்கன்னா... 'ஐயோ
சௌகிட்டா....'ன்றாங்க. ஆனா சௌகிட் இந்த இடம் இல்ல. உண்மையான
சௌகிட்டு அந்தப் பக்கட்டு இருக்கு.
கேள்வி: எந்தப் பக்கம்?
ஆஷா: தியேட்டருக்குப் பின்னால, கெ.எப்.சி பக்கம். சௌகிட்னா
அதுதான். இது வந்து Lorong Haji Taip Satu.
கேள்வி: சௌகிட்டைப் பிளேக் ஏரியானு சொல்றாங்களே...
ஆஷா: பிளேக் ஏரியான்னு சொல்றாங்க. இதுவரைக்கும் நான்
பார்த்ததில்லே. நம்ப வூட்டுக்கு எல்லாக் குடும்பக்காரவுங்களும்
வருவாங்க. சில பேரு கடை வைச்சு வியாபாரம் செய்றாங்க. சில பேரு
டெய்லரிங் பண்றாங்க. சில பேரு கல்யாணப் பெண்ணுக்கு
உடுத்துறாங்க...பல தொழில் செய்றவங்க இருக்கிறாங்க...
கேள்வி: பெரும்பாலும் விபச்சாரத் தொழில்ல ஈடுபடுறாங்களே
ஆஷா: அது சில பேரு தாங்க. நம்ம எல்லாரையும் சொல்ல முடியாது.
கேள்வி: அதற்கான காரணம் என்னா?
ஆஷா: அதுங்க வேலை செய்யப் போய் வேலை கிடைக்க மாட்டேங்குது.
இருந்தும் இதுங்க செய்யுறது அநியாயந்தான். எல்லாம் அடக்க ஒடுக்கமா
உடுத்திக்கிட்டுப் போனாதானே. ஒரு இடத்துக்கு ஒழுங்கா போனா ஏன்
நம்பள கேள்வி கேட்கப் போறாங்க... எங்க காலத்தில் நாங்க குறைவா
இருந்தோம். இந்த ஆம்பளைங்கதான் எங்கள ஒம்போது...அப்படி...
இப்படின்னு... பாப்பாங்க.. அப்ப நாங்களும் எங்க வயித்தெரிச்சலை
வாரி கொட்டறது உண்டு. இன்னைக்குப் பார்க்கணும். தாமன்ல 10, 15
இருக்கு. இப்ப முடிய எண்ணலாம், திருநங்கையை எண்ண முடியாது.
கேள்வி: சினிமாவில திருநங்கையை நகைச்சுவைக்காகத் தப்பா
காட்டாறாங்களே....
ஆஷா: சினிமாவில காட்டறது உண்மையான திருநங்கை இல்ல. இதெல்லாம் வேஷம்
போடறது. உண்மையான திருநங்கையைக் காட்னாக்கா பெண்ணுக்கும்
திருநங்கைக்கும் வித்தியாசம் தெரியாது. உண்மையான நடிகைக்கும்
டப்பிங் குரல்லுதான் சினிமாவுல. இந்தியாவில் திருநங்கைகள்
ஒவ்வொன்னும் அவ்ளோ அழகா இருக்கும். இந்தியாவுல சும்மா இந்த
ஆம்பிளையை வேஷம் போட வச்சி படம் எடுக்குறாங்க. உண்மையான
திருநங்கயைப் போட்டா சிரிக்க முடியாதே...
கேள்வி: திருநங்கையா ஆவுறதுக்குச் சடங்குகள் இருக்குதுல்ல. அதைப்
பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.
ஆஷா: ஆப்ரேஷன் முன்னே பூஜை போட்டுத் தேங்கா ஒடைப்போம்.ஆப்ரேஷன்
பண்ணி மூனான் நாளு வருவாங்க. உள்ளுக்குள்ள இருக்கிற ஜாமான
எடுத்துட்டு மூத்திர டியூப்ப ஒரு பத்து நாளைக்குப் பிறகு
வெளியாக்கிடுவோ. அதற்குப் பிறகு 40 நாளு அவுங்களை வெந்நீருல்ல
உட்கார வைக்கிறது, புகை கொடுக்கிறது, ஓமம், பூண்டு பொருள்ள
போட்டுப் புகைப்போம். கரெக்டா 40 நாள்ல நல்லா ஆயிடுவாங்க.
அன்னைக்கு அந்த அம்மாவைக் கொண்டுபோய் நாங்க கங்கையில வுட்டுறுவோம்.
கேள்வி: ஞானிமார்கள் என்பவர்கள் யார்?
ஆஷா: ஞானின்னா பாட்டிமார்கள். பூட்டி.
கேள்வி: திருமணமானவங்க திருநங்கை கூட வாழ்றாங்க.
குடும்பத்துக்குள்ள பிரச்சனை வர்றதுக்குத் திருநங்கை ஒரு காரணமாகி
இருக்காங்கன்னு சொல்றாங்க. இத பத்தி என்ன நினைக்கிறீங்க?
ஆஷா: ரொம்ப பேரு, திருமணமான ஆம்பிளைங்க திருநங்கைகளைக் கல்யாணம்
பண்ணியிருக்காங்க. தோ அன்னிக்குக் கூட ஒருத்தர் வந்து பேத்தியக்
கேட்டாரு.நான் வீடு வாசல்லாம் கேட்டேன். வீடு வாசல்லாம்
இருக்குன்னாரு. நான் 'மாசா மாசம் அது பேர்ல கொஞ்ச பணம் போடுங்க.
நாங்க வயசு போன காலத்துல நீங்க வேணான்னுட்டா என்ன செய்ய முடியும்?
நடுதெருவுலதான் நிக்கணும்' என்றேன்.
கேள்வி: அந்த மாதிரி திருமணம் பண்ண கேட்டா பண்ணி வைப்பீங்களா?
ஆஷா: பண்ணி வைச்சிருவோம். நல்லா விசாரிப்போம். சும்மா ஒன்னும்
தள்ளிவிட்டுற மாட்டோம்.
கேள்வி: எல்லாமே பெரியவங்க சம்மதத்தக் கேட்பாங்களா, இல்ல சொந்தமாவே
காதலிச்சிட்டுப் போறவங்க இருப்பாங்களா?
ஆஷா: காதலிச்சுட்டுப் போறவுங்களும் உண்டு. அவுங்கவுங்க
தேடிக்கிறதுமுண்டு. பாட்டிக்கிட்ட பேசுறதும் உண்டு.
கேள்வி: காதலிச்சுட்டுப் போனா என்ன செய்வீங்க?
ஆஷா: அது அவுங்க விருப்பம். நாளைக்கு நல்லது கெட்டத அவுங்க
அனுபவிக்கப் போறாங்க. நம்ப அனுபவிக்கலை பாருங்க. ஏதோ அவுங்க நேரம்
நல்ல நேரமா இருந்தாக்கா நல்லபடியா இருப்பாங்க. அவுங்களுக்குக் கஷ்ட
காலம் வந்திருச்சின்னா பிரிஞ்சி போப்போறாங்க...
கேள்வி: உங்கள் திருமணம் வெறும் தாலி கட்டும் சடங்கோடு
முடிகிறதல்லவா?
ஆஷா: முன்ன ரெஜிஸ்தர்லாம் இருந்துச்சுயா.
கேள்வி: எப்போது?
ஆஷா: முன்னே நாங்க ரெஜிஸ்தர் பண்ணவங்கதான்
கேள்வி :அப்படியா!
ஆஷா: ம். இப்பத்தான் ரெஜிஸ்டரை நிப்பாட்டிட்டாங்க.பதினைந்து
வருஷத்துக்கு முன்னால அரவாணிகளுக்கும் பெயர் மாற்றம் பெற்ற ஐ.ஸ'
இருந்தது.(தந்து அடையாள அட்டையைக் காட்டினார்.அதனால் ரிஜிஸ்டர்
திருமணம் சாத்தியமாயிற்று.
கேள்வி: எல்லாச் சமூகத்திலேயும் திருநங்கைகள் இருக்காங்க. நீங்க
உங்க உரிமைகளைக் கேட்கிறதுக்கு முயற்சி எடுக்கலையா? இப்ப ஐ.ஸ'
விஷயமே எடுத்துக்குவோமே, உங்களுக்குன்னு என்னக்குமே ஓர்
இயக்கமிருந்து நீங்க எல்லாமே ஒரே குரலாகக் கேட்கும்போது அதில்
நிச்சயமா ஒரு சக்தி இருக்குமே.
ஆஷா: எங்க டைம்ல, எல்லாம் ஒரே ஒத்துமையா இருந்தாங்க.இப்போ
இருக்கிறது, ஒரு மாதிரியா இருக்காங்க. அதுங்க பண்ற சேட்டைங்கனாலே
கிடைக்க வேண்டிய உரிமையும் கிடைக்காமப் போகுது.
.கேள்வி: சில திருநங்கைகள் தங்களை முழுமையான பெண்களாக நம்புறாங்க.
சிலர் திருநங்கைகளாகவே காட்டிக்க ஆசைப்படுறாங்க. இதைப் பத்தி
உங்கள் கருத்து என்ன?
ஆஷா: நான் என்னை ஒரு பெண்ணாதான் இத்தன காலமா நினைச்சுக்கிட்டு
இருக்கேன். இதுக்குமேலே என்ன?
கேள்வி: உங்கள் வாரிசுகளை நீங்கள் எப்படி உருவாக்க விரும்புறீங்க?
ஆஷா: நாங்க எங்கள் கையில இருக்கிற வரைக்கும் அடக்கம் ஒடுக்கமாக
வளர்க்கத்தான் நினைக்கிறோம். அது அது அங்கங்க திரிஞ்சிகிட்டுத்
தொலைஞ்சிட்டாங்க. அங்கங்க சின்னச் சின்னப் 'போர்ட்டு'
தொறந்துட்டாங்க. நாங்க என்ன செய்றது சொல்லுங்க?
கேள்வி: இந்த மாதிரி படைக்கப்பட்டதால் உண்டான கோபம் திருநங்கைகளத்
தவறான வழிக்கு இட்டுச் செல்லுதா?
ஆஷா: கோபமெல்லாம் இல்லை. இறைவன் படைப்பிலே நாங்க எப்படிக் கோவப்
படறது. அவுங்க படைச்சாக இப்படி. ஓர் ஊனமாவோ நொண்டியாவோ குருடியாவோ
இல்லையே.
லில்லி:நான் ஒரு டிப்ளோமேட்டிக். தகுதிகள் இருக்குன்னா எங்க
வேண்ணாலும் வேலை செய்யலாம்.திருநங்கைகள் செக்ஸ் வோர்க்கர்ஸ்ஸா
தங்களைத் தாங்களே ஃபோர்ஸ் பண்ணிதான் வேலை செய்றாங்க. அவங்களா
விரும்பி வேலை செய்லே. நான் சின்ன வயசுல என் சிஸ்டர்ஸ் கூடவேதான்
எப்பவும் இருப்பேன். சோ, வயசு ஆக ஆக என்னோட புத்தி பொம்பளப்
புத்தியா ஆயிடுச்சி. இயற்கையிலே நான் சோவ்ட் டைப்.
இப்படியிருக்கும்போது என்னால என் குடும்பத்தோட சேர்ந்து வாழ
முடியாமப் போச்சி.
கேள்வி: ஏன் முடியலன்னு சொல்றீங்க?
லில்லி: ஏன்னா வீட்ல அசேப்ட் பண்ண மாட்றாங்க. அவுங்களால ஏத்துக்க
முடியல.என்னை ஆம்பளையா மாறச் சொல்லி எவ்வளவோ அடிச்சாங்க. எனக்கு
எப்படி ஆம்பளையா மாறனும்னு தெரியால. எங்கப்பா அடிப்பாங்க.
காயம்லாம் இருக்கு உடம்புல. சூடுலாம் வைப்பாங்க... ஆம்பிளையா மாறு
ஆம்பளையா மாறுன்னு சொல்வாங்க.எனக்குத் தெரியாது...இப்ப எனக்கு 30
வயசாச்சு. ஒரு முழுத் திருநங்கையா வாழ்றேன். வாழ்க்கையில இன்பம்
துன்பம் எல்லாம் இருக்கு. துன்பம்னா பேரன்ஸ் ஏத்துக்காதது இன்பம்னா
திருநங்கைகளின் சடங்குகளும் அவுங்ககூட வெளியே போறதும், அவுங்க கூட
இருக்கிறதும்தான். உண்மையிலேயே திருநங்கைகள திருமால் அவதாரம்தான்னு
சொல்ல முடியும். அவர் அந்த அவதாரம் எடுத்தவாசி இந்த அவதாரம்
வந்துச்சு.
கேள்வி: இதை ஓர் ஊனம்னு சொல்லலாமா?
லில்லி: இது ஓர் ஊனம் இல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவொரு
கர்மா.
கேள்வி: ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மாதிரி அரவாணியை ஒரு பிறவியா நாம
பார்க்கலாம்தானே.
லில்லி: ம்.
கேள்வி: நீங்க சொல்றதப் பார்க்கும்போது, அது ஏதோ ஒரு பாவத்தைத்
தீர்க்கிறமாதிரியில இருக்கு.
லில்லி: உண்மைதான். எவ்ளோ பேரு நம்பள 'ஐயே! இவெ ஒம்போது, இவே ஏன்
இப்படி இருக்கிறா. குடும்ப மானத்தை வாங்கிறா'ன்னுதானே சொல்றாங்க.
சோ, இந்தக் கெட்டக் கெட்டப் பேச்செல்லாம் நாம கேட்கணும்னு விதி
எழுதியிருக்கு. சமுதாயம் பேசணும்னு எழுதியிருக்கு. நம்ப
இதையெல்லாம் தாங்கியே ஆகணும். இல்லனா.... நம்மால அரவாணியா வாழ
முடியாது. தூக்குப் போட்டுத் தான் சாவணும்....
கேள்வி: உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சுங்களா?
லில்லி: திருமணம் ஆகல. ஆனா பாய்ஃரண்ட் இருக்கு.
கேள்வி: சில சமயங்களல்ல திருநங்கைகள் வன்முறையில கூட ஈடுபடுறதா
கேள்விப்பட்டிருக்கேன்.
லில்லி: புரியல.
கேள்வி: வன்முறைன்னா... சண்டை, தங்களைக் கேலி பண்றவங்கள்ல
அடிக்கிறது போன்ற காரியங்கள்.
லில்லி:
உங்கள ஒருத்தர் கேலி செஞ்சா சும்மா இருப்பீங்களா?அந்த மாதிரிதான்
எங்களுக்கும். கோபம் பொதுவானது. நான் கூடத்தான் சண்டை போடுவேன்.
ரொம்ப அளவுக்கு மீறி கேலி பண்ணி டென்ஷன் உண்டாக்கினா கோபம் வந்து
திருப்பி நான் கேள்வி கேட்பேன். உனக்கு வலிக்குதானு கேட்பேன். நான்
இப்படி இருக்கேன் அது என் விதி.அதற்கு ஏன் கேலி பண்ணனும்.
கேள்வி: இப்ப பொதுவா தமிழ் நாட்டிலே அறுவை சிகிச்சை பண்றதுக்கு
அவுங்க பணம் சேர்க்கிற முறையில ஒன்னு பிச்சை எடுக்கிறதுனு
படிச்சேன். இங்க பணம் சேக்கிறது எப்படி?
(இந்தக் கேள்வியால் கோபம் கொண்ட ஆஷா குறுக்கிட்டார்.)
ஆஷா: யார் சொன்னது, தமிழ்நாட்டில பிச்சை எடுத்துத்தான் ஓப்பரேஷன்
பண்றாங்கன்னு?
கேள்வி: புத்தகத்தில் படிச்சேன்.
ஆஷா: எந்தப் புக்ல அந்த மாதிரி எழுதியிருக்கான்... எழுதினவன
செருப்பால அடிக்கணும். பிச்சை எடுக்கணும்னு இல்ல. அது வந்து
அவங்களுக்கு நாடு கொடுத்த உரிமை. நீங்க பத்துப்பேருக்கிட்ட ஏந்தி
சாப்பிடணும். நாகூர் தர்கால்ல வந்து சாதுமார்கள்லாம் பிச்சை
எடுத்துத்தானே சாப்டுறாங்க. சாதுமார்கள்னா விளங்குதா உங்களுக்கு?
இந்த ஊர்ல இமாம்னு சொல்றாங்களே மலாய்க்காரங்க.
கேள்வி: பணம் சேக்கிறதுக்கு அவுங்க செய்ற முக்கியமான தொழில்
பிச்சையெடுக்கிறதுன்னு சொல்றாங்களே.
ஆஷா: அந்தக் குற்றப்பத்திரிகைகாரனக் கூட்டிட்டு வாங்க எங்கிட்ட.
'ஐஞ்சுகட்டை வௌக்கமாற ஒன்னா கட்டி
அதில ஒரு வௌக்கமாற அனல்ல காட்டி
மணல்ல சொருவி
ஒக்கால மண்ண வைச்சு
பெத்தவள பின்ன வைச்சு
நிக்க ஒன்றடி, நிமிர ரெண்றடி,
குனிய வைச்சு, மூன்றடி அடிப்பேன்'
ரெக்கோட் பண்ணிட்டிங்களா, போடுங்கோ உங்க புக்ல.பிச்சை எடுக்க
அரவாணிங்க போகல. அந்த ஊரோட சட்டம். இன்னைக்கு வட நாட்ல பூறா எங்கக்
கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறாங்க, பெரிய பெரிய
கோடீஸ்வரர்களும், பெரிய பெரிய லட்சாதிபதிகளும்...ஏன் நாங்க பண்ற
ஆசீர்வாதம் அவனுக்கு நிலைக்கும். அவ்ளோக் கீழ்தரமா நினைச்சிறாதீங்க
எங்களை. நாங்க ஒரு வார்த்தை சொன்னாலும் அது மண்ணா அள்ளி
கொடுத்தாலும் பொன்னாதான் விளையும். போயிருக்கிறிங்களா வட
நாட்டுக்கு?
கேள்வி: போனதில்லை.
ஆஷா: போய் பார்த்துட்டு வாங்க. ஏம்மாறி, என் அக்கா தங்கச்சி மாறி,
என் குருமாரு மாறி, எனக்கு மேலே இருக்கறவங்க எல்லாம் பெரிய பெரிய
கோடீஸ்வரங்களா இருக்காங்க.
கேள்வி: இங்கு அரசாங்கம் உங்களுக்கு உதவுகிறதா? (இதற்கு லில்லி
பதிலளித்தார்.)
லில்லி: கவர்மண்ட் எங்கள அப்படியே கைவிடல. தவறான பாதையில போற சில
திருநங்கைகள அழைச்சி இந்த மாறி போனா உங்களுக்கு என்னமாறி பின்
விளைவு வரும்னு சொல்றாங்க. இங்க வந்து மோட்டிவேட் பண்றாங்க.
சிலவங்க அரசாங்கத்தின் ஆலோசனையக் கேக்கிறாங்க. சிலவங்க
கேக்கமாற்றாங்க. போதை மருந்து எடுத்தா என்ன நடக்கும். நம்ப
உடம்புள்ள எவ்ளோ செல்ஸ் சாகும்ணு ஆலோசனை கொடுத்திருக்கிறாங்க.
என்.ஜி.ஓ வும் இதில உதவி செய்றாங்க.
(நேர்காணலுக்குப் பின் நாங்கள் விடைபெற்றோம். இன்னும் பேசவும்
கேட்கவும் நிறைய கேள்விகள் உள்ளன என்பது போல மனதில்
உறுத்திக்கொண்டே இருந்தது)
|
|