வெற்றுச் சதுரம்
எண்ணக்கோடுகளினை வண்ணக்கலவை ஊடுற
மொடமொடத்த துணிகள் தூரிகைகளெடுத்து
ஆணியறைந்த சட்டகத்துக்குள்
உலகின் அதிசிறந்த ஓவியம் பதிய நினைத்தேன்
பெயரற்ற ஒன்றின் பிறப்பை(த்)
துள்ளித்துள்ளி
கை கால் உடல் தூவி
உருவாக்கலில் துடித்தேன்.
வெறிக் கொண்டவளாக
விரிந்த கைகளில் அள்ளி
வரைந்து முடிக்கிறேன்.
விரல்களிலும் நகங்களிலும்
விலகாத வர்ணங்களை உரசிக் கழுவி
ஆற்றாமையுடன்
களைத்த முகத்தைக் கண்ணாடியிற் பார்த்தேன்.
அத்தனை வர்ணங்களும்
என் முகத்தில் அப்பியிருந்தன.
முகம் உருவிய வண்ணங்களால்
உலர்ந்திருந்தது
ஆணியறைந்த சட்டகச் சதுரம்
கனவுகளுடன் கடப்பவள் அல்லது அலைபவள்
தொங்கு பாலமொன்று
தூரத்தில் தெரிகிறது- அதிலே
நடந்து கொண்டே
நான் கண்ட கனவுகளிவை
தாகத்திற் தவித்த வரிக்குதிரை நீரருந்தப் போக
காத்திருந்த முதலையொன்று
கழுத்தைக் கவ்விப்பிடித்தது.
பசும்புல் மேய்ச்சல் தேடியலைந்த புள்ளிமானை(ப்)
பாய்ந்து வந்த சிறுத்தை பசியாறியது
பனிபெய்யும் இரவைப் பார்த்திருந்த புல்லிதழ்களை
எருதின் குழும்புகள் கிளறிக் குதறின
படபடத்த இறகைப் பிய்த்தெறிந்து கூடடைக்க
சிறகடிததுத் தவிக்கும் சிறு குருவி
வண்ணங்களால் அலங்கரித்த வானமாக(ச்)
சில நொடிகள் கண்சிமிட்டி(ச்)
சிதறிப் பெருமுகிலிற் கரைந்திட்ட எண்ணங்களானேன்.
நடந்து கொண்டே கண்ட கனவுகளுடன்
பாலத்தின் கீழுள்ள ஆழத்தைக் கடந்து போனேன்.
நிர்வாணங்கள்
வெரும் வீதியில்
காவலரண் தாண்டுதல்.
தயங்கி நடுங்கிச் சாதல் கொடுமை - அது
நள்ளிரவுச் சுடுகாடு இனிமையென்று உணரும்.
இடுப்பிலொரு கத்தி கொண்டலைந்து
எதிர்ப்பாராச் செருகலாய்
அவர்கள் கண்கள் வெறித்தபடி நித்தம் தொடர்ந்து
வெற்றுத்தெருவில் ஒரு நாள்
அந்த இராணுவத்தான்
பல நாட்குறிக்கு கத்தி வீசினான்.
'முக்கிய விசாரணை'
சாக்கு மறைப்புத் தூக்கித் தள்ளினான் என்னை.
இடுப்பிலென்ன?
இழுத்தெறிந்து கிழித்தெறிந்து
ஒழித்து வைத்த ஆயுதம் உண்டோவென்றான்.
செத்துப் போன கன்றைச்
சுற்றி நின்று ஓநாய்கள் பிய்ப்பதாய்
சிப்பாய்கள் ஓலமிட்டுச் சிரிந்தன.
அவர்களின் நிர்வாணம்
ஆணவங்கொண்ட வீரமாம்
எனது நிர்வாணம்
பெரும் அவமானமாம்
புல்லுக்கழரச் சிரிப்பு
நாகங்களாகப் படப்பிடிப்பு
ஏய்...வெட்கங் கெட்டவர்களே
சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்து வயிறுகள்
நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து
வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்.
|