நின்ற இடந்தோறும்
கடவுளையே முன்மொழிந்தோம்
மண்ணைத் தந்து
பொன்னைப் போர்த்தி
ஆயுதம் தந்து
அமானுஷ்ய பீடத்தில்
அமர்த்தி அழகு பார்த்தோம்
அனைத்தையும் தாரை வார்த்தோம்
ஒரு மயிரையும் தரவில்லை
கடவுள்!
மெல்ல கேட்கிறது....
மண்ணில் மக்கிப்போன
சக்கைகளுக்கு மேலே
பேருருவாய் உலவும்
உடலங்களும் குரல்களும்
காலுக்கடியில் மிதிபட்டு
மூச்சுத் திணறும்
அவற்றின் மொழிகளுக்குள்
தமிழும்!
தண்டவாளத்தை வகிர்ந்து பார்க்கையில்
பெயர் தெரியாப் பாம்புகளால்
எங்கள் கைகள்
தீண்டப்படுகின்றன
முடமாக்கப்படுகையில்
முளைக்காத விரல்களுக்கிடையில்
வெடித்துக் கிளம்புகிறது
மங்கலாய்த் தெரிகிறது
தெளிவற்றும் தெரிகிறது
புனையப்படவிருக்கும்
சரித்திரம்
தேசிய கீதம்
தேசிய மலர்
தேசிய கோட்பாடு
தேசிய மொழி
இவற்றோடு
இவர்களுக்கான மௌனம்
எந்தத் தேசியத்தில்
சேர்க்க?
மனிதனைப் பேச
கடவுள்தான் வரவில்லை
மனிதனுமா?
யோனி கிழிந்து
குருதிப் பிரளயம் சிதற
அழுகிறாள்... செத்துச் செத்துப்
பிறவி எடுத்துப்
புது ஜனனத்தில்
அழுகையினூடே புன்னகைத்து
இன்னொரு ஒடுக்கப்பட்டவனின்/பட்டவளின்
வீள் குரல் கேட்டுப்
பின் யோனிக்கு மேலே
அடிவயிற்றின் நெருப்பைச் சுமந்து கொண்டு
அழத் தொடங்குகின்றனர்
இருவரும்...
அந்த 'ம'ரணப் பிரசவம்
ஒடுக்கப்பட்டவர்களுக்கான
மயானந்தான்!
பரலோகத்தில்
சொர்க்கத்தில்
அஹ'ராட்டில்
ஒடுக்கப்பட்டவர்கள்
இருத்தப்படுவார்கள்....
அதுவரை
மொட்டையடிக்கப்பட்டு
மூளை பிடுங்கப்படுகையில்
எந்த மயிரை
இனிப் பிடுங்க?
சொந்த நகம் நறுக்கப்படுகையில்
முளைக்கத்தான் செய்யும்
சில ஆயுதங்கள்!
எவன் செத்தாலும்
ஒரே பிணம்
இதில் என்ன?
சாதிப் பிணம்
சாணிப் பிணம்
நிறப் பிணம்
மொழிப் பிணம்
குண்டடிப்பட்டுச்
சரிகையில்
வேடிக்கை பார்க்கும்
உலகப் பிணம்
மதப் பிணம்
கடவுளும் ஒரு பிணம்!
உரிமைகளும் இருத்தலும்
காவு கொடுக்கப்படுகையில்
இறுதியாக
மொழியும் நெறிக்கப்படுகையில்
மனிதன் கற்கத் தொடங்குகிறான்
வன்முறையும்
சில கெட்ட வார்த்தைகளும்!
|