படியேறியபோது
நின்று கொண்டிருந்த கடவுள்களுக்கு
ஒரே மாதிரியான புன்னகை
மற்றும்
கேலியோடு ஒரு பார்வை.
ஒவ்வொரு கடவுளும்
ஒவ்வொரு விலை
கறை படிந்த மஞ்சம்
நீலம் ஓடும் தொலைக்காட்சி
அலங்காரச் சாதனங்கள்
வாசனைத் திரவியங்கள்
கடவுள் சந்நிதானத்தில் கணிசமாய் இருந்தன.
அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு
அபிஷேகம் ஆராதனை முடித்து
வெளிவரும் போது
கடவுள்
'பாகி செப்புலோ ரிங்கிட்லா பாங்'
என்றார்
நான் நடுவிரல் காட்டினேன்.
கழிவறை குழியிலிருந்து
தோன்றினார் கடவுள்
உடலில் மலம் மின்னி
மணம் பரவியது
பூணூலை இடுப்பில் சுற்றி
தொள தொள காற்சட்டைக்கு
பிடிப்பு கொடுத்திருந்தார்
வெற்றிலை கறை தெரிய
சிரித்தவர்
'என்ன வேணும்' என்றார்
இப்போதைக்குப் பேழ வேண்டும்
நகரு என்றேன்.
|