வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 8
 ஜுன் - ஆகஸ்ட் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

சிறுகதை

 

மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்

 கோ.முனியாண்டி

 

       
 

நாகூராண்டவர் மரத்துக்குக் குஞ்சிராமன் தண்டல் விளக்கு வைத்து விட்டுப் போனவுடன், அதற்காகவே காத்திருந்தது போல்.அங்கே அது வரைக்கும் கூடி கதையடித்துக் கொண்டிருந்த வாலிபப் பசங்களில் ஐந்தாறு பேர்கள் அங்கிருந்து ஒவ்வொருத்தராக நழுவிக் கொண்டிருந்தனர்.வாலிபப் பசங்களுக்கு அந்த நாகூராண்டவர் கோயில் மரத்தடிதான், 'ரவ்வானா' கதைங்களக் கலாய்க்கிற இடம்.

தோட்டத்துல இருக்குற ஒம்போது லயத்துக்கும் போறவர்ற பாதை, நாகூராண்டவர் மரம் இருக்கிற முச்சந்தியிலர்ந்துதான் ஆரமிக்கும். மரத்துக்கு எதுத்தாப்புல கூத்துக் கொட்டாயி, அது பக்கத்துலயே குஞ்சிராமன் தண்டல் கடை. மேக்கே போனா பதினெட்டாவது பிரிவு. நாகூராண்டவர் மரத்துக்குக் கெழக்கே போனா பதினாலாவது பிரிவும் பதினஞ்சாவது பிரிவும் முக்கிய ரோட்டுக்குப் பக்கத்துலயே இருந்துச்சு.

அடுத்துக் கெழக்கே பதிமூனாவது பிரிவும் அங்க போறதுக்கு முன்னாடியே ஆபிஸ் கெராணி பங்களாவும் எதுப்புல பால் கொட்டாயும் ஜ'ன்ஜ'ன் கொட்டாயும் இருக்குது. பதிமூனாவது பிரிவு லயத்தையும் தாண்டித்தான் தோட்டத்து மேக்கட பள்ளிக்கோடமும் மேட்டுக் கடைக்குப் போற வெசாலமான மண் பாதையும் இருக்குது.

மேட்டுக் கடை படகுத் தொறைக்கும் இந்தப் பாதை வழியாதான் மாட்டு வண்டிங்க, ரப்பர் பால் பண்டோலுங்கள ஏத்திக்கிட்டுப் போறதெல்லாம் நடக்கும். இதைப் பண்ணென்டாம் நெம்பர் தீம்பாருன்னு எல்லாரும் சொல்லுவாங்க. மேட்டுக் கட பக்கமிருக்கிற தோட்டத்து ஆஸ்பத்திரிக்குக் கூட இந்த வழியாதான் ஜனங்களோட போக்கு வரத்தெல்லாம் நடக்கும். இந்தப் பாதையில ஏழு மணியாகி கொஞ்சமா இருட்டு மேயத் தொடங்குனதும் ஒரு ஈ காக்கா நடமாட்டம் இருக்காது. நாகூராண்டவர் கோயிலாண்ட இருந்து வௌக்கு வெச்சிதக்குப் பின் அங்க இருந்து ஒவ்வொருத்தரா நழுவுனதுக்கு அப்பறம், இங்க இந்தப் பன்னென்டாம் நெம்பர் தீம்பாரு பக்கந்தான். ஒழந்தூரான் வூட்டு எஸ்.ராகவன் நெர.எஸ்.ராகவன் காண்டா வாளியெல்லாம் வெக்கிர எடமும் அங்கதான் இருக்குது.அங்கதான் அந்த அஞ்சாறு வாலிபப்பசங்களும் வந்து கூடுனாங்க.எஸ்.ராகவன் மத்தியானமே வாளி,காண்டா கம்பு வெக்கிற இடத்துல ஒரு குப்பை, கித்தா எல இல்லாம கூட்டி சுத்தம் பண்ணி வச்சிட்டுப் போய் இருந்தது ரொம்பவே வசதியாப் போயிடுச்சு.

சொக்கரா பெருமாளுதான் பாக்கெட்டுல போட்டுக் கொண்ணாந்த ரெண்டு மூணு மெழுகுத் திரிங்கல எடுத்துக் கொளுத்தி வச்சாரு. வெளிச்சம் வந்த ஒடனே, அவங்கவங்க வசதியாப் போட்டு வெச்ச கோணி சாக்குங்க மேல ஒக்காந்துக்கிட்டாங்க.ஒக்காந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தொலவுல விசில் சத்தம் கேட்குது.இங்க வாலிபப் பசங்க ஒக்காந்திருக்கிற எடத்துலர்ந்து தவுக்க முனுசாமி பதில் விசிலடிச்ச கொஞ்ச நேரத்துல ஊமைத்தண்டல் மவன், தொப்புளான் வாத்தியார் வந்து கும்பலோட சேர்த்துக் கிட்டாரு.கையோட கொண்டு வந்து போட்ட, 'விடுதலை'ப் பத்திரிகைங்கள ஆளாளுக்கு எடுத்து அவசர அவசரமாப் பொரட்டிப் பொரட்டிப் பாக்கிறாங்க.

'விடுதலையை'க் கொண்டாந்து போட்ட தொப்புளான் வாத்தியாருதான் கூடியிருந்தவங்க கிட்ட சொன்னாரு, "பசங்களா நாவலரு ஆள்விட்டு அனுப்பி ஒரு சேதிய நம்ம கிட்ட சொல்லச் சொல்லிட்டாரு. சுங்கை வாங்கித் தோட்டத்துல சங்கம் அமைக்கிற விஷயமா பேசறதுக்குக் கூப்பிட்டிருங்காங்கலாம். கூட்டத்த முடிச்சிக்கிட்டு எந்நேரமானாலும் வந்து சேர்ந்திருவேன்னு சொல்லச் சொல்லிவுட்டுருக்கிறாருன்னு" தொப்புளான் வாத்தியார் சொன்னதும், 'பம்பாய் மெயில்'தான் கேட்டான், "என்னா வாத்தியாரே! இந்த நேரத்துல நாயுடு வாத்தியாரு ஒண்டியாவா வரப்போறாரு?"

"சொம்மா இருபா பெருமாளு (பம்பாய் மெயிலோட இயற்பெயர்) நாயுடு வாத்தியாருன்னா என்னன்னு நெனக்கிற, வௌயாட்டுத் தெரிஞ்சவருன்றது ஒனக்கு மறந்து போயிடிச்சா?பத்துப் பேரா இருந்தாலும் வூடு கட்டி அடிச்சிர மாட்டாரு."ஓரமா ஒக்காந்திருந்த பெரும்பாக்கத்தான் கே.முனுசாமி அதட்டல் போட்டுப் பம்பாய் மெயில் பெருமாள அடக்குனாரு.

"வாத்தியாரே! இன்னிக்கு நான் ரொம்ப ஆர்வமா வந்ததே ஈப்போவுக்கு வந்த நாயக்கரு என்ன சொல்லிட்டுப் போனாருன்றதக் கேக்குறதுக்குதான்ன்னு" பூண்டி சகாதேவன் கேட்டதுக்கு, தொப்பளான் வாத்தியாரு தான் அவுங்க ஒரொத்தருக்கும் பதில் சொல்லிச் சொல்லிச் சமாளிச்சிக் கிட்டிருந்தாரு.

இதுக்கெடயே இன்னொரு விசில் சத்தம்.தொப்புளான் வாத்தியாருதான். பதில் விசில் சத்தம் குடுக்கெறாரு.

"ஆச்சி. நாசனக்காரு வூட்டு, சண்முகம் வந்துட்டான்"னு அவர்தான் சொன்னாரு. சருகுங்கள மிதிச்சிக்கிட்டு செருப்பு சத்தம் 'சரக் புரக்'குன்னு சத்தமிட அவரும் வந்து உக்காந்துக்கிட்டாரு.அப்ப, ஹர்மோனியப் பொட்டி வேலாயுதம் தான் மத்தியானம் தோட்டத்துல பால் கொட்டாயில நடந்த சம்பவம் பத்திச் சொல்ல ஆரமிச்சாரு.

"வாத்தியாரே! இன்னிக்கி, மத்தியானம் ஸ்டோர்ல கீலா தொரய வெளுக்கிறதுக்கு நம்ம மொரட்டுக் கோபாலு காண்டா கம்பத் தூக்கிட்டான்.தோட்டத்து ஆளுங்க புடிக்கலைனா, இன்னக்கு நம்ப மொரட்டுக் கோபாலு, கீலா தொரய உண்டு இல்லன்னு பண்ணிப்புட்டு இருப்பான்"னு சொன்னாரு ஹர்மோனியம் வேலாயுதம்.தொப்புளான் வாத்தியாருதான் கேட்டாரு மொரட்டுக் கோபாலுக்கிட்ட

"ஏண்டா பையா! அப்படியா பண்ணிப்புட்ட!"

"இல்லீங்க வாத்தியாரே! மரத்துல காயம் பட்டிருச்சின்னு கங்காணிங்க வந்து கோள் வச்சிட்டாங்க. அதனால, எனக்கு ஒரு மாசம் வெளிக்காட்டுல வேல குடுக்கிறேன்னு சொன்னது மட்டும் இல்லாம வெளிக்காட்டுல வேல பாக்குற பொம்பள ஆளுங்களுக்குத் தண்ணி கொடுக்கிற வேல செய்யச் சொல்லி தொர ஒத்தரவு போடுதுன்னு ஸ்டோர்ல பால் ஊத்தற எடத்துல நூறு எரநூறு ஆம்பள பொம்பளைங்க கூடியிருக்கிற எடத்துல சொன்ன ஒடனே, எனக்கு ரொம்ப மானக்கேடா போயிடிச்சி அதான் வாத்தியாரே. கோவம் வந்து பக்கத்துல இருந்த காண்டா கம்பத் தூக்கிட்டேன்"னு மொரட்டுக் கோபால் அதுக்கு வௌக்கம் சொன்னான்.

"இதுக்கெல்லாம் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு ஒரு அதிகாரிய அடிச்சிட்டா, அதுக்கப்புறம் நடக்கிறதப் பத்தி யோசிச்சுப் பாத்திருப்பியா கோபாலு. குடும்பத்தோட மூட்டயக் கட்டிக் கிட்டு வேற தோட்டத்துல போயி வேலக் கேட்டுக்கிட்டு நிக்கப் போற நம்ப நெலமயக் கொஞ்சம் நெனச்சிப் பாரு. நம்ப, எப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட நடக்கணும்னுங்கிறதுக்காவதான் நாவலரு வாத்தியாரு நம்மயெல்லாம் கூட்டி வச்சிப் பாடம் கத்துக் குடுக்கிறாங்க. நம்ம மேல எவ்ளோ நம்பிக்கய வளத்துகிட்டு அவங்க இதயெல்லாம் செய்துக்கிட்டு வர்றாங்க."மொரட்டுக் கோபாலுக்குப் பக்குவமா எடுத்துச் சொல்லிக் கிட்டு இருந்தாரு நாசனக்காரர் வூட்டுச் சண்முகம் வாத்தியாரு.

"ரொம்ப சீக்கிரம் ஒரு விசயத்த நம்ப மறந்துட்டோம் பாத்தீங்களா!தோட்டத்துல இருக்கிற தண்டலுங்களும், கெராணி மாருங்களும் காடியிலயும் வண்டியிலயும் எதிர்ல வந்தா தோட்டத்துக் கூலிக்காரன் ஒடனே சைக்கிள விட்டு எறங்கிடணும், நடந்து போய்கிட்டு இருக்கிறவன் தலயில கட்டிக்கிட்டிருக்கிற தலைப்பாவக் கயட்டி, இடுப்புல கட்டிக்கிடணும்னு இருந்த நெலய இந்தத் தோட்டத்துல மாத்தி வச்சவன், இந்தக் கீலா தொரைதான்." தொழிலாளிங்க யாரும் இப்பல்லெம் எங்களப் பாத்தா கொஞ்சம் கூட மரியாதக் குடுக்கிறது இல்லன்னு கெராணி மாருங்களும், கங்காணிங்களும் குடுத்த புகார் ஒன்னைக் கூட கீலா தொர காதுலயே வாங்கலன்னு, லண்டன்ல இருக்குற பெரிய ஏஜெண்டுக்கு இவங்கள்ள யாரோ ஒருத்தன் ரெண்டு பேரு சேந்து பெட்டிஷன் போட்டுட்டானுங்க. அதனால ரொம்பக் கோவப்பட்ட கம்பெனிக்காரன் இன்னும் ஆறு மாசம் ஒரு வருஷத்துல கீலா தொரய மாத்திப் புடுவானுங்க.

"டிண்டிங்ஸ் மாவட்டத்துல இருக்குற நாப்பது தோட்டத்துல நம்ம ஒரு தோட்டத்துல மட்டுந்தான், நம்பளா குடுக்கிற மரியாதய ஏத்துக்கிற வெள்ளக்காரன் இருக்கிறான்.சுற்று வட்டாரத்துல மித்த எல்லாத் தோட்டத்துலயும் அதட்டி உருட்டி, மெரட்டி மரியாதய வாங்கிறவன் தான் மேனேஜராவும் மொதலாளியாவும் இருக்கிறாணுங்க.வாரம் தவறாம வந்து பள்ளிக்கூடம் எப்படி நடக்குது, ஆயக்கொட்டாய் எப்படி நடக்குதுன்னு வந்து பாக்கிற தொர இவன் மட்டும்தான். அதனால, நான் இன்னா சொல்றேனா கீலா தொரைக்கிட்ட நேரா போயி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுப் புடு." நாசனக்கார வூட்டுச் சண்முகம் வாத்தியாருதான் பக்குவமா இந்த ஆலோசனையை மொரட்டுக் கோபாலுக்கு எடுத்துச் சொன்னாரு. கூட இருந்த எல்லாருமே மொரட்டுக் கோபாலுக்கு இதான்டா சரியான யோசனை நீ மட்டும் நேரா தொர பங்களாவுக்கே தனியாப் போய் நின்னு மன்னிப்புக் கேட்டுகிடுனு சமாதானம் சொன்னதை மொரட்டுக் கோபாலு ஏத்துக்கிட்டான்.

அப்ப கட்டை பொன்னுசாமி திடீருன்னு தொப்புளான் வாத்தியாரோடையப் பேரைச் சொல்லி "முந்தா நாளு நம்ப தோட்டத்துக் கூத்துக் கொட்டாயுல ஒரு அமர்க்களம் நடந்து போச்சியா"னு பீடிகை போட்டுப் பேசத் தொடங்கினார். கூடியிருந்த சிலர் ஒரு நமுட்டுச் சிரிப்போட அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டனர். மேட்டுக் கடைப் பக்கம் இருந்து தோட்டத்து வர மண்சாலையில விட்டு விட்டுச் சைக்கிள் மணி சத்தம் கேட்குது. 'கிரீங்... கிரீங்... கிரீங்....' மணிச்சத்தம் நெருங்கி வந்து கேக்குது. கூட்டத்துல யாரோ சொல்றாங்க. 'நாயுடு வந்துட்டாரு!' ரோட்டுப் பக்கம் போய் நின்னு மொரட்டுக் கோபாலு நாயுடுவைக் கூட்டிக்கிட்டு வந்தான். மெழுகுத்திரிங்க வெளிச்சத்துல கூட்டத்துக்கு யார் யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு ஒரு தடவ உன்னிப்பா நோட்டம் விட்டாரு நாயுடு. கூட்டத்துல யாரும் கருங்காலிங்க இருந்திடப் போறங்கன்னு முன்னெச்சரிக்க நடவடிக்கையாதான் நாயுடு அப்படிப் பாத்து உறுதிப் படுத்திக்கிட்டார்.

நாயுடு முயற்சியில் சுற்று வட்டாரத்தில இருக்கிற பத்து பன்னெண்டு தோட்டத்துல சுயமரியாதையாகக் குழுக்களை உருவாக்கி வெச்சதில ரெண்டு மூணு தோட்டத்துல அமைஞ்ச குழுக்களை இருந்தவனுங்க சுயமரியாதை கூட்டத்துல என்னப் பேசுகிறோம் ஏது பேசுகிறோம்னு அப்படியே போய் தோட்டத்து மேனேஜர்கங்கிட்ட பத்த வச்சதிலே சில பேருக்கு வேல போயி தோட்டத்த விட்டு பொண்டாட்டிப் புள்ளைங்கள கூட்டிக்கிட்டு வேலைக்கு அலைஞ்ச அலச்சலப் பாத்து ரொம்பவும் வேதனைப் பட வேண்டியதாப் போயிடுச்சு நாயுடுவுக்கு.

தான்படுகிற கஷ்டத்தோட வேலை போனவங்களுக்கும் கொடுத்து ஒதவி செஞ்சவரு இந்த நாயுடுதான். நாயுடு ஒன்னும் சாமானியப்பட்ட ஆளுன்னு நெனச்சிறக்கூடாது. பெரிய புலவரு. சொந்தமா பாட்டெல்லாம் எடுத்துக் கட்டுகிறவரு. நாவலரு வேணுகோபாலுன்னா மலாயா முழுக்கத் தெரியும். ஆயர் தாவார்ல சுருட்டுக் கடை வச்சி நடத்தித் தன்னோட பெரிய குடும்பத்தக் காப்பாத்திக்கிட்டு இருக்கிறதோட நாயக்கரு மேல பற்று ஏற்பட்டு இந்த வட்டாரத்துல இருக்கிற தோட்டப்புறங்களச் சுயமரியாதை கூட்டத்த அங்க இருக்கிற வாலிபப் பசங்களக் கூட்டி வச்சிக்கிட்டு நடத்திக்கிட்டு இருக்காரு.

கையில கொண்டாந்திருந்த 'திராவிட நாடு' பத்திரிகைங்கள ஒரு நாலஞ்ச, கூட்டத்துக்கு நடுவுல போட்டாரு நாயுடு. "என்னப்பா ஏதோ கூத்துக் கொட்டாயுல அமர்க்களம் நடந்து போச்சுன்னு கட்ட பொன்னுசாமி சொல்லிக்கிட்டிருந்தது காதுல விழுந்துச்சு, அது என்னப்பா அமர்க்களம் ?" தோட்டத்து மேனேஜர் இல்ல கெராணி மார்ங்க, தண்டலு கங்காணிமாருங்க ஏதும் யாரையும் கேவலமாப் பேசிப் புட்டானுங்களா, இல்ல தகராறு பண்ணிப் புட்டானுங்களா, பொன்னுசாமி நீயெ சொல்லுப்பா, மத்தக் கதையையெல்லாம் பெறவு பேசிக்கலாம்". "வேற ஒன்னும் இல்லங்க நாயுடு. முந்தா நாள் ராத்திரி சினிமா படம் பாக்க வந்த ஆசுப்பத்திரியான் பொன்னன் பண்ணி வச்ச காரியத்தச் சொல்லிச் சொல்லி இந்த ரெண்டு நாளா தோட்டமே கலகலத்துக் கெடக்குது. அததான் நம்ப கூட்டாளிங்கக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். தொப்புளான் வாத்தியாரு இன்னிக்குத் தான் வந்தாரு. அதனால, அவரும் அந்தக் கதயைக் கேட்டுக் கொஞ்சம் ரசிக்கட்டுமேனுதான் சொல்ல நெனைச்சு வாயெடுத்தேன். அதுக்குல்லார நாயுடு வந்துப் புட்டீங்க". "சரி சரி. கதையைக் கொஞ்சம் சொல்லப்பா, நானும் கேட்டுக் கொஞ்சம் சிரிச்சு வைக்கிறேன்"னு நாயுடுக் கட்ட பொன்னுசாமிகிட்ட கேட்டுக்கிட்டாரு. "மம்மு கெராணி வீட்டுல சினிமா படம் பாக்கப் போன ஆசுப்பத்திரியான் பொன்னன் கிட்ட டார்ச் லைட்டத் தட்டிக் கொடுத்திருக்காங்க. ஒரு பக்கமா ஒக்காந்து கூத்து நடக்கிறத பாத்துக்கிட்டு இருந்த ஆசுப்பத்திரியான் பொன்னனுக்கு டார்ச் விளக்கை அணைச்சி வைக்கத் தெரியாம தோள்ள போட்டிருந்த துண்ட போட்டு இறுக்கமா மூடிவச்சிக்கிட்டே படம் பாத்துக்கிட்டு இருந்துருக்கான். அப்பப்ப துண்டை ஒதறி முகத்தைத் தொடச்சிக்கும் போதெல்லாம் கூட்டத்துல டார்ச் லைட் வெளிச்சம் பரவ ஆரம்பிச்சிருச்சு. அங்க இருந்த ஜனங்க ஆளாளுக்குச் சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. ஜனங்க சத்தம் போட்டவுடனே, துண்டை எடுத்து டார்ச் வௌக்கை இறுக்கமாப் பொத்தி வைச்சிக்கிட்டே இருந்திருக்கான் ஆசுப்பத்திரியான் பொன்னன். இப்படியே வைகுண்ட ஏகாதசிக்குப் போட்ட ரெண்டு சினிமா படமும் முடிஞ்சி பளபளன்னு விடிஞ்சிருச்சு. ஆசுப்பத்திரியான் தவியா தவிச்சுப் போயிட்டான். கூடியிருந்த ஜனங்க ஆசுப்பத்திரியான் தவிச்ச தவிப்பைப் பாத்துப்புட்டு வாயைப் பொத்திக்கிட்டுக் கொஞ்சப் பேரும், கை கொட்டிச் சிரிச்சவங்க ரொம்பப் பேரும் இதையே சொல்லிக்கிட்டே வீடுகளுக்குப் போனாங்க" என கதைய முழுசாச் சொல்லி முடிச்சாரு கட்ட பொன்னுசாமி.

"ஆசுப்பத்திரியான் பொன்னன் ஒரு அப்பாவி மனுஷன்பா". நாயுடு சொல்லி ஆந்துப் போனாரு. போன வாரம் ஈப்போவுக்கு வந்திருந்த நாயக்கரு கூட்டத்துக்கு சுமார் 10,000 பேராவது இருக்கும்னு ஆரம்பிச்ச நாயுடு அவர் வலியுறுத்திச் சொன்ன சில விஷயங்களக் குறிப்பிட்டாரு. மலாயாவில வேலைப் பாக்க வந்தவனும், பிஜ' நாட்டுக்குப் பொழைக்கப் போனவனும் தென்னாப்பிரிக்காவில உழைக்க வந்தவனும் பொறந்த நாட்ட மறந்துட்டானுங்க. ஆனா ஜாதிய மட்டும் மறக்காம பாதுகாத்து வச்சிருக்கிறான்னு ரொம்ப கடுமையா சாடினாரு நாயக்கரு. "ஆண்டான் அடிமை உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு இங்கயும் வந்து பேதம் பிரிச்சிப் பாத்து வைக்க ஆரம்பிச்சிட்டானுங்க. இத வளர விட்டராதிங்க. மொளையில கிள்ளிடணும்"னு சொன்னவரு மக்கள் சுத்தமா இருக்க பழகிடணும், பெண்களுக்குக் கல்வி அறிவு புகட்டணும்கிறத கட்டாயம் ஆக்கிடணும் என வலியுறுத்திச் சொன்னாருங்கிறதையும் நாயுடு ரகசியக் கூட்டத்துல வந்து கலந்துகிட்டவங்கக்கிட்ட சொன்னாரு. அதுமட்டுமல்ல தமிழனை இழிவுபடுத்தும் புராணங்களையும் இதிகாசங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எதையும் அறிவைக் கொண்டு வாழப்பாருங்கள் என்றும் அங்க தமிழன் ஆரிய மாயையினால கெட்டுக் குட்டிச்சோரா போயிட்டான். மலாயாவுல தமிழன்லயே சில பேரு ஆரியனுக்கும் ஒரு படி மேலாகவே தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடப் பாக்கிறான். விட்டுறாதீங்க. இவனையும் கொழுப்பெடுத்து ஆட விட்டாறாதீங்கன்னு வந்து குழுமியிருந்த கூட்டாத்தார்கிட்ட நாயக்கரு வலியுறுத்திச் சொன்னாரு. சடங்கு சம்பிரதாயங்களத் தமிழன் இன்னைக்கே விட்டுர்றானு சொல்லுங்க, இன்னும் நூறு வருஷத்துக்குள்ளாகவே தமிழன் இந்த உலகத்துல ஒன்னாம் நம்பர் புத்திசாலியா மாறிடுவான்னு சாட்டை அடி கொடுத்தாரு நம்ப நாயக்கரு.

அப்பதான் நாசனக்கார வூட்டுச் சண்முகம் வாத்தியாரோட அத்த மகன் சிவலிங்கம் நாயுடுவைப் பாத்துக் கேட்டாரு. "ஏம் புலவரே, நம்ப தோட்டத்து ஆளுங்கிட்டச் சொல்லிச் சொல்லி மொதல்ல சுத்தமா இருக்கக் கத்துக்கிட்டாங்க. புள்ளங்கள ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வச்சிர்றாங்க". அதுக்குப் பதில் சொன்ன நாயுடு "இங்க இந்தத் தோட்டத்துலதாம்பா தம்பி சிவலிங்கம் கொஞ்சம் முன்னேறியிருக்காங்க. இந்த மாற்றம் எத்தனை தோட்டத்துல நடந்திருக்குன்னு நெனக்கிறீங்க. அடுத்த வாரம் சீமதொர தோட்டத்துல கள்ளுக் கட மறியல நம்ப ஆளுங்க நடத்தப் போறாங்க. அங்க போயி அவங்களுக்குக் கொஞ்சம் வௌக்கமெல்லாம் குடுத்துட்டு வர்றதுக்குத் தான் இன்னேரம் ஆகிடிச்சி.கள்ளுக்கட மறியலுக்கு உங்கள்ள யார் யாரெல்லாம் வரப் போறீங்க? அங்க ஏழுமல , ஏகாம்பரம், முருகேசு, முனுசாமின்னு நாளஞ்சு பேரு சேந்துதான் அந்த மறியல பண்ணப்போறாங்க.உங்க தோட்டத்துல இருக்குற கள்ளுக்கடைய மூடுறதுக்கு எப்ப நடவடிக்கை எடுக்கப்போறிங்க?"

அதுக்கு, தொப்புளான் வாத்தியாருதான் பதில் சொன்னாரு.

"சுத்து வட்டாரத்துல இருக்கிற பல தோட்டங்கள்ள நம்ம தோட்டத்துத் தொர மாருங்க, கிராணி மாருங்க ஜனங்ககிட்ட ரொம்ப மரியாதயா நடந்துக்கிறாங்க. இங்க, ஜாதிவாரியா லயங்களப் பிரிச்சி வெக்கல. வருஷா வருஷம் நடக்குற அம்மன் கோயில் திருவிழாவுல எந்தப் பேதமும் இது வரைக்கும் வந்ததில்லே. கள்ளுக்கட நடத்தறதுல வர்ற மொத்த ஆதாயத்தையும் திருவிழா நடத்துறதுக்கும் பள்ளிக் கோடத்துல போட்டி வௌயாட்டு நடத்துறதுக்கும் செலவு பண்றாங்க.மாசத்துக்கு ரெண்டு சினிமா படம் போடறதுக்கும் கள்ளுக்கட காசதான் பயன்படுத்துகிறாங்க... இன்னும் வேற என்ன குடுக்கணும்னு நம்ப எதிர் பாக்கிறது நாயுடு"ன்னு கேட்டாரு.

"ஆமாமா! இன்னும் என்ன வேண்டிக் கிடக்குதுன்னு தொப்புளான் வாத்தியாரு கேக்குகிறாரு.இப்ப நீங்க சொன்ன வசதிங்கள்ளயும் வாய்ப்புங்கள்ளயும் அறிவு வளர்க்கிறதுக்கு ஏதாவது இருக்குன்னு சொல்லுங்க பாக்கலாம். வாத்தியாரே.இதெல்லாம் காலா காலமா நம்பப் பாத்துப் பாத்துப் படிச்சி தெரிஞ்சிக்கிட்ட வெள்ளக் காரனோட ராஜ தந்திரம். சரி நீங்க சொல்ற மாதிரியே வச்சிக்கிடுவோம் நம்ம தோட்டத்து மொதலாளிக்குச் சொந்தமான் வேற ரெண்டு தோட்டம் இருக்குது.நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.இங்க நம்ம ஆளுங்களுக்குக் கெடைக்கிற அந்தச்சலுக, அந்தத் தோட்டத்துல உள்ள தொழிலாளிங்களுக்குக் கெடக்காமே இருக்குதே... அதுக்கு என்ன காரணம்? அவங்களுக்கும் இது மாதிரி சலுக எல்லாம் கிடைக்குறதுக்கு ஒதவ வேண்டியது நம்முடைய கடமை இல்லியா?"

"உண்மை தாங்க புலவரே!அந்தத் தோட்டத்துல ஏறக்குறைய 50 அறுவது இளைஞருங்க இருக்கிறாங்க.

எத்தனையோ தடவ முயற்சி பண்ணியும் நம்ப கொடுத்த ஆலோசனைங்கள ஏத்துக்கிடவே இல்லையே.காலையில எழுந்திரிச்சி மாட்டிக்கிற வேலக் காட்டுத் துணிய ராத்திரி ஏழு எட்டு மணி வரைக்கும் போட்டுகிட்டுத் திரியறானுங்களே.அவனுங்களத் திருத்தறது எப்படி? வழிக்குக் கொண்டு வர்றதின்னே தெரியாம தானே நாமளும் தடுமாறிக் கிட்டு இருக்கிறோம்."

"உண்மை தாம்மா சிவலிங்கம்.நீங்க சொல்றது உண்மைதான். எனக்கும் புரியுது. பத்துப் புள்ளயப் பெத்த தாய், அதுல ஒரு புள்ள நோஞ்சானா போயிட்டா ஒதுக்கியா வச்சிடறா? இல்லையே! ஆரோக்கியமா இருக்கிற ஒம்போது பிள்ளைங்களவிட நோஞ்சான் புள்ள மேல அன்ப ஒரு படி கூடுதலா தானேப்பா வெச்சிடறா.அதுமாதிரி தாம்பா, அந்த இளைஞனுங்களும் இருக்கிறானுங்க.பால்காட்டு வேல முடிஞ்சி வந்ததும் ஆடு மாடுங்கள ஓட்டிக்கிட்டு மேச்ச காட்டுக்குப் போயிடறானுங்க, அதோட வூடு வந்து சேருகிறவனுங்க, இருக்கிற தண்ணீ தலப்பக் குடிச்சிப் புட்டுப் பொழுதவே ஓட்டிப் புடுரானுங்க, இப்படித் தாம்பா அவனுங்க பொழப்பு இப்ப ஓடிக்கிட்டு இருக்குது.அவனுவல கொஞ்சம் பேரயாச்சும் புட்பால் வௌயாட்டுல சேர்த்து விட்டுட்டோம்னா கொஞ்சம் கொஞ்சமா முழிப்பு வந்துடும்னு நான் ரொம்பவும் நம்பிக்கையோட இருக்கேன், தம்பி சிவலிங்கம்."

ஆச்சி. மணி பத்துக்கு மேல ஆயிடுச்சி!

எப்பவும் போல, அவுங்கவுங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலய செய்துகிட்டு வருவோம்.தமிழ் நாட்டுல, ஐயாவும் அண்ணாவும் புதிய நம்பிக்கைய ஏற்படுத்திக்கிட்டு இருக்கிறாங்க.தோட்டப்புறத்துல வந்து தஞ்சமடைந்திருக்கிற நம்மத் தமிழ் சனங்க 'ஆரியமாயைக்கு' அடிமையாயிடக் கூடாது இது தான் நமது லட்சியம்"னு நாவலரு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே லயத்துக் காட்டுப் பக்கம் இருந்து ஆரவாரச் சத்தம் கேட்குது.

அதோட! தோட்டத்து ரப்பர் பாக்டரியிலர்ந்து பாதிராத்திரியில சங்கு ஊதுகிற சத்தமும் கேக்குது.

என்ன ஏதுன்னு விவரம் ஒன்னும் தெரியில. கூட்டத்த அத்தோடயே முடிச்சிக்கிட்டு, எல்லாருக்கிட்டயும் நாயுடு சொல்லிக்கிட்டு வந்த வழியிலயே சைக்கிள எடுத்துக்கிட்டுப் பொறப்பட்டாரு.கூட்டத்துக்கு வந்தவங்களும் ஓரொருத்தரா நேர் வழியிலயும் குறுக்கு வழிகள்ளயும் லயத்துக் காட்டுக்குப் போய்க் கிட்டு இருக்கிறாங்க.நாகூராண்டவர் மரத்துக்கிட்ட ஒம்போது லயத்து ஆளுங்களும் பெருங் கூட்டமாத் தெரண்டு நிக்கிறாங்க.ஜனங்ககிட்ட கீலா தொரைதான் சொல்லிக்கிட்டு இருக்கிறாரு. ஜப்பான்காரன் மலாயாவுக்குள்ள நொழஞ்சிட்டானாம். அதனால பிரிட்டிஷ்காரனுக்கும் ஜப்பான் காரனுக்கும் சண்ட ஆரமிச்சிடுச்சாம். ஆரமிச்சிருக்கிற சண்ட எப்ப முடியும்னு தொரக்கு தெரியாது. தொர கூட இன்னிக்கு ராத்திரியே சிங்கப்பூருக்குப் போயிடனும்னு உத்தரவு வந்திருச்சி.

"எல்லாருக்கும் என்னோட வணக்கம்." கீலாதொர போனதுக்கு அப்புறமும் அங்கிருந்து ஜனங்க விடியற வரைக்கும் கலயவே இல்ல!

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768