|
தோட்டப்புறத்
திருமணங்கள் என்பது ஒரு திருவிழாவின் உற்சாகம் நிரம்பியது. அதற்கான
ஆயத்தப்பாடுகள் தொடங்கி தாலிகட்டு வரை தோட்டத்தின் ஒட்டுமொத்த
கவனமும் அதில் குவிந்திருக்கும். கல்யாண வீடு என்பது தனிப்பட்ட ஒரு
குடும்பத்தின் விஷேசமாக இல்லாமல் ஒட்டுமொத்த வீடுகளின் விஷேசமாக
குதூகலத்துடன் கொண்டாடப்படும். ஒரு தீபாவளி பண்டிகையை ஒத்த
சந்தோஷம் பொங்கி வழியும்.
திருமணத்திற்கான ஆயத்த வேலைகள் பல இருந்தாலும், அதில்
சுவாரசியமிக்கது கல்யாண வீட்டு அலங்கரிப்புதான். வருடம் ஒருமுறை
சுண்ணாம்பு பூச்சு நடக்கும் தருணம் மட்டுமே அழகு காட்டி நிற்கும்
தோட்டத்து லயன்கள், கொஞ்ச நாட்களில் மழைக்கும் வெயிலுக்கும் தனது
உடலை ஒப்புக் கொடுத்து காரை பெயர்ந்து பொலிவிழந்து பரிதாப கோலம்
கொண்டிருக்கும். மீண்டும் புதுப் பொலிவு பூண ஓராண்டு காத்திருக்க
வேண்டும்.
இதில் விதிவிலக்காக, கல்யாணம் காது குத்து பெண்களுக்கான தெரட்டி
போன்ற விஷேசங்களை இடையே எதிர்கொள்ளும் வீடுகளுக்கு அலங்காரம்
கிட்டும்- வெள்ளையடிப்பை தோட்ட நிர்வாகமே பார்த்துக் கொள்ளும்.
அந்தச் சுண்ணாம்பு கரைசலின் புது வாசம் பல நாட்கள் அக்கம்பக்கத்து
வீடுகளுக்கும் குடி வந்திருக்கும். அடுத்து நடக்கப்போகும்
வெள்ளையடிப்பு நாளை மனதில் கணக்குப் போட்டு ஏங்க வைக்கும்.
வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக இதில் முக்கியத்துவம் பெறுவது, வீட்டு
முன் போடப்படும் அந்தப் பந்தக்கால், அதன் உருவாக்கத்தின் ஊடே
அந்தச் சூழல் அடையும் அழகு தனித்துவமானது. மனித உறவுகளில் அதன்
மேன்மைகளில் அந்த எளிய மனிதர்கள் அந்தச் சூழலில் படரவிட்ட மகோன்னத
அழகுக்கு நிகரான இன்னொரு கபடமற்ற அழகை இதுவரை வேறெங்குமே
சந்தித்ததில்லை. ஒரு சந்தோஷ நிகழ்வென்பது அந்தந்த வீட்டுச்
சுவர்களுக்குள்- அதில் உள்ளடங்கிய மனிதர்களுக்குள்ளான ஒரு நிகழ்வாக
குறுகி முடங்கிப்போய் கிடக்கும் இன்றைய நகர வாழ்வோடு ஒப்பிட
நிச்சயம் அது பூலோகத்தில், மனிதர்கள் சிருஷ்டித்துக் கொண்ட
சொர்க்கலோகம்தான் என்பது, இப்போது நினைத்துப் பார்க்க
உறுதிப்படுகிறது.
அன்றைய, ஒவ்வொரு சுப நிகழ்வும் தோட்டமே கூடி நின்று கொண்டாடிய
குடும்ப விழாக்கள். அதிலும் கல்யாண விஷேசம் என்பது தனித்து
நிற்கும். முதல் நாள் இரவு தொடங்கிவிடும் தயாரிப்பு
முஸ்தீபுகளின்போதே வீடு களை கட்டத் தொடங்கிவிடும்.
அடுப்படியிலிருந்து அரை மணிக்கொருமுறை கல்யாண வீட்டுப் பெண்களில்
யாரேனும் ஒருவர், ஆவி பறக்கும் தேதண்ணியை தட்டில் கொண்டு வந்து
மேசை மேல் வைத்துப் போவார். பக்கமே உட்கார்ந்திருக்கும்
அம்பாசாக்கி ரொட்டி டின். நாலைந்து ரொட்டியை ஒன்றாக சேர்த்து அதில்
முக்கி, சரியான பக்குவத்தில் லாவகமாய் எடுத்து வாய்க்குள்
திணித்து, அதன் சுவையை அசைபோட- அங்கே சுற்றிவர சிதறும் கேலிப்
பேச்சிலும், அதனைத் தொடரும் சிரிப்பிலும் மனம் நெகிழ்ந்து கண்களில்
நீர் வர, வயிற்றைப் பிடித்து குலுங்கி குலுங்கிச் சிரிக்க தலைக்கு
புரை ஏற, திணறி, மூச்சு வாங்க நின்ற அற்புதக் கணங்கள் அவை.
அந்தச் சூழலில் எனது மனதுக்குப் பிடித்தமானதாக இன்னமும் இருக்கும்
இன்னொரு விஷயம் உத்திரத்து சட்டங்களில் தொங்கிய, அந்த கேஸ் லைட்
விளக்குகள்- அவை சிந்திய கண்களுக்கு ரம்மியமான வெளிறிய மஞ்சள் ஒளி,
அந்த இரவுநேர கல்யாண வீட்டுச் சூழலை மேலும் அழகாக்கியது.
விஷேசங்கள் நடக்கும் வீடுகளை அலங்கரிக்க எனவே டவுனிலிருந்து
வாடகைக்கு கொண்டு வரப்படும் விளக்குகள். முதன் முதலில் அவை
விஷேசத்திற்கு வந்தபோது- பெரிய தண்டல் வீட்டு மூத்த மகன்
துரைசாமியின் கல்யாணம் என்று நினைவு- "டேய் கல்யாண வூட்டுக்கு
புதுசா ஒரு வௌக்கு வந்திருக்காம்.... புஷ்சுனு பாம்பாட்டம் சத்தம்
போட்டு பளிச்சுனு எரியுதாம்... என்று ஒரு கூட்டம் கூடி வந்து
நின்று வேடிக்கைப் பார்த்தது.
அவர்களோடு வாயைப் பிளந்து நின்று அதை வேடிக்கைப் பார்த்த அந்த இரவு
இன்னமும் தூரத்துக் காட்சியாக பிசிறுடன் உள் நிற்கிறது- இருளைக்
கிழித்து சூழ நின்ற ஒவ்வொன்றிலும் பளீரென அது விழ, இருளுக்குள்
முதன் முறை- பக்கம் நிற்பவரின் சிரித்த முகம், வாசலில் நின்று
பார்த்திருக்கும் கல்யாண பெண்ணின் முகத்தில், யாரோ எதையோ சொல்வதைக்
கேட்ட மாத்திரத்தில், குப்பென விரவிப் படரும் வெட்கத்தின்
துல்லிதம்- வெள்ளையடித்த சுவரில் தொங்கும் குடும்பப் போட்டோவில்
இருக்கும் ஒவ்வொருவரையும், வாசலுக்கு அப்பாலிருந்தே, வரிசைப்படி
சொல்லிவிடும் அளவான தெளிவு- முகட்டில் வாலைச் சுழட்டி பெண் பல்லியை
துரத்திப் பிடித்து அழுந்தக் கௌவி புணரும் பல்லியின் துல்லிய உடல்
அசைவுகளை, பளிச்சென்ற ஒளி வெள்ளத்தில் முதன்முறை இரவு நேரத்தில்
பார்க்க, கிடைத்த சந்தோஷம்.
"டேய், அந்த ஆம்பர எடுடா.... என்கிற குரலுக்கு, மண்ணெண்ணெய்
விளக்கோடு ஓடி அங்குமிங்கும் தேடி அலையாமல், "தோ அங்க இருக்குணே.."
"டேய் முனியப்பா அத எடுத்து
மாமாகிட்ட குடுத்தர்ரா.." என்று சட்டென வந்த குரல், வியப்பும்
சந்தோஷமும் அலையடித்த இரவாக அந்தக் கல்யாண இரவு மாறிக்கொண்டிருக்க
நீண்ட நேரம் அங்கேயே, உறுமலுடன் வழிந்தோடிய ஒளி வெள்ளத்தில் நீந்தி
திளைத்து நின்று கொண்டிருந்த நினைவுண்டு.
அன்றைய தோட்டப்புற வீடுகளின் பிரதான ஒளி வழங்கியே அரை அடி
உயரத்தில் வீட்டின் ஏதேனுமொரு மூலையில் நின்று கறும்புகையைக் கக்கி
மூச்சைத் திணறடித்த அந்த மண்ணெண்ணெய் விளக்குகள்தான். அதிலும்,
அதன்குட்டி தம்பிபோல், இன்னுமொரு சிறிய வகை விளக்கு பலகைச்
சுவற்றில் ஆணியில் தொங்கும்படியான வசதியுடன் கூடிய ஒரு துளையுடன்
இருந்தது. அது பெரும்பாலும் விடிவிளக்காகவே பயன்படுத்தப்பட்டது.
பின்னாளில், ஒருசில கொஞ்சம் வசதியான வீடுகளில் ஒரு மாற்றம்
வந்திருந்தது. அங்கே, மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு மாற்றாக,
கேஸ்லைட் விளக்குகள் தலைகாட்டின, புகை கக்காத பெருமூச்சுடன் சற்றே
பிரகாசமான மஞ்சள் ஒளியை படரவிட்டு கூடுதல் வெளிச்சத்தை தோட்டத்தின்
இரவு சூழலுக்குள் புகுத்திய பெருமை அதற்குண்டு.
எங்கள் வீட்டிலும் அது போன்ற ஒரு விளக்கு இருந்தது. அது போன்ற
விளக்குகள், இன்று பார்க்க கிடைக்காத ஒரு தொல்பொருளாக எங்கேனும்
ஏதோவொரு வீட்டின் பழைய சாமான்கள் கூட்டத்தில் அதுவும் ஒன்றாக
இருக்கலாம். அதன் வடிவை சற்றே விளக்கினால் அதனைக் கற்பனையில்
பார்க்க இயலும்- அடிப்பகுதியில் எண்ணெயும் காற்றும் நிரப்ப ஒரு
வட்ட குடுவை. அதன் மத்தியில் எண்ணெய் நிரப்ப உதவும் ஒரு
திறப்பானும், காற்றடிக்க ஏதுவாய் ஒரு ரப்பர் தக்கை பொருத்தப்பட்ட
உலோகத் துண்டும். அதற்கு மேல் சில மெல்லிய உலோகத் தூண்கள் மேல்
பகுதியை தாங்கி நிற்கும். மேல்பகுதியின் மத்தியில் தொங்கும் ஒளி
உமிழும் 'மேண்டல்'. உலோகத் தூண்களின் உள் பகுதியில் வட்ட கண்ணாடி
பொருத்தப்பட்டிருக்கும். ஏற்றிய விளக்கை உத்திரத்து கம்பியில்
தொங்கவிட ஏதுவாய் கம்பினால் ஆன பிடி மேலே இணைக்கப்பட்டிருக்கும்.
அதனை ஏற்றுவதென்பது சற்றே நுணுக்கங்கள் நிறைந்த திறனை வேண்டி
நின்றது. என்னால் இதுபோன்ற நுணுக்கங்கள் தேவைப்படும் கைவேலைகளை
எப்பொழுதுமே முழுமையாய் கைவரப்பெற முடிந்ததில்லை. ஏதேனும்
ஓரிடத்தில் பிசகிவிடும். அதிலும் இந்த இடது கை பழக்கம் பொதுவாகவே
பொருட்களை கையாள்வதற்கு ஒரு தடை. எனக்கு அடுத்திருந்த தம்பிக்கு
அது முடிந்தது. பெரும்பாலும் அவனே பொழுதுபோன பிறகு, "டேய் பொழுது
போச்சு... வௌக்க ஏத்துங்கடா..." என்கிற அம்மாவின் குரலுக்கு பதில்
சொல்லி, உத்திரத்து கம்பியில் தொங்கும் கேஸ்லைட் விளக்கை,
நாற்காலியில் ஏறி நின்று கீழே இறக்குவான்.
இறக்கி கவனத்துடன், அஞ்சடியிலிருக்கும் பிராஞ்சாவில் வைத்து,
அடியிலிருக்கும் தாங்கியில் மண்ணெண்ணெய் நிரப்பி காற்றடிக்கும்
முன்பு, மேல் பக்கம் திறந்து, கண்ணாடியைக் கழற்றி சுத்தம் செய்ய
வேண்டும். இந்த வேலை மட்டும் எனக்கானது. அம்மாவின் வெத்தலைப்
பையிலிருக்கும் சுண்ணாம்பைக் கொஞ்சமாக விரல் நுனியில் எடுத்து,
கண்ணாடியின் உள் பக்கம் தடவி, துணியால் துடைக்க பளிச்சென்று
ஆகிவிடும். பிறகு குடுவைக்குள், எண்ணெய் நிரப்பி, காற்றடித்து,
உள்பக்கம் மேலிருந்து தொங்கும் வெள்ளை நிற 'மேன்டிலுக்கு' தீ
குச்சியை உரசி வைக்க உஸ்ஸென்ற சீற்றத்துடன் மேன்டலிலிருந்த
வெளிச்சம் பரவும். அந்தச் சத்தம் தூங்கப் போகுமுன் விளக்கை
அணைக்கும் வரை தொடரும். இடையில், காற்றின் அழுத்தம் குறைய சத்தமும்
வெளிச்சமும் குறைந்துவிடும். அப்போது விளக்கை கீழிறக்கி சுவற்றோடு
அணைத்து வைத்து தம்கட்டி காற்றடித்து நிரப்ப வேண்டும். பெரும்பாலான
நாட்களில், அதனை அணைப்பதற்குள் இரண்டு முறையேனும்
காற்றடிக்கப்பட்டிருக்கும். அதன் சத்தத்தைக் கூர்ந்து கவனிப்பதில்
ஒரு திரில் இருந்தது, அது நடந்து முடிந்த நாள் தொடங்கி...
இப்போதும் அந்த உஸ்ஸ் சத்தத்தை எங்கே கேட்டாலும் எனது மனம்
தோட்டத்து ஆபீசுக்குப் பின்னாலிருந்த சின்ன ஆத்துக்கு தானாக தாவி
ஓடி நிற்கிறது. ஒருநாள் பிற்பகல் நேரம். வழக்கம்போல் ஆத்தில்
துணியை விரித்துப்போட்டு கெண்டைக்குஞ்சுகளை விரட்டிக்
கொண்டிருந்தோம். கரையில், தோட்டத்து கடைக்காரரின் மாமியார்
அப்போதுதான் துணி துவைக்க துணி மூட்டையோடு வந்து நின்று பேச்சுக்
கொடுத்தார். மீன் பிடிப்பதை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தபோது
சரிவில் காய்ந்த இலைகளின் சலசலப்பு. பேச்சு நின்றுபோனது. சலசலப்பு
வந்த திசையில் பார்க்க, ஏதும் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனால்,
உயிரை உறைய வைத்த சத்தம் மட்டும் அந்த கித்தாகாட்டு இலைகளின்
சலசலப்பு ஓசையை பின்னுக்குத் தள்ளி ஸ்பஷ்டமாக காதில் விழுந்தது.
உஸ்ஸ்ஸ்ஸ்..... நாக சர்பத்தின் கரகரத்த குரல்.
இப்போதும் அந்தக் காட்சி நினைவில் சிதையாமல் துல்லிதமாய் உள்ளது.
சரிவில் இறங்கி வந்த கடைக்காரரின் மாமியார் கால்கள் ஸ்தம்பிக்க
அப்படியே நின்று அசையாமல் பீதியில் உறைந்த முகத்தோடு எங்களைப்
பார்த்து ஏதோ கையசைக்கிறார். மெல்லிய தேகத்தை, அம்மா பாஷையில்
சொல்வதானால், 'வெடவெடன்னு ஒடம்பு'. அந்த மாதிரியான வெடவெடன்னு
உடம்பு அவருடையது. நல்ல சிவந்த நிறம். நன்கு வெளுத்த தலைமுடி.
ஒடுங்கிய கன்னக்குழிகள். வழக்கம்போல், கைலி ரவிக்கை. அதற்கு மேலே,
ஒரு வெள்ளைத் துண்டு.
அந்தப் பீதிக்கு காரணம் குறித்த பொதுவான பயம் என்றாலும், அவரது
முகத்தில் அன்று பார்த்தது அதற்கும் மேலானதொரு பயமாக இருந்திருக்க
வேண்டும் என்பதை இப்போது அந்த ஆற்றில் நின்று கூர்ந்து கவனிக்க
புலப்படுகிறது. அவர் கைகளில் அப்போதிருந்து வாளி நிறைய பீ துணிகள்.
பேரனுடையது. பெற்றுப்போட்டு ஜன்னி கண்டு ஆறு பிள்ளைகளை இவள்
தலையில் கட்டி போய்விட்டிருந்தாள் மகள். தானும் போய்விட்டால்
அவர்களின் கதி என்னாவது என்பது குறித்த மரண பயமாகவே அது
தோன்றுகிறது.
அப்போது, ஏதும் நடக்காமல் போனாலும், மரணம் குறித்த அவரது பயம்
பின்னொருநாள் நிஜமாகியது. ஆற்று சம்பவம் நடந்து கொஞ்ச நாளில்
வயிற்றில் புற்று. எலும்பும் தோலுமாக அவர் அந்த கயிற்றுக்
கட்டிலில் சுருண்டு கிடப்பதை பலநாள் பார்த்ததுண்டு. திட உணவு
ஏதுமின்றி நீர் மட்டுமே உணவாக, எப்போதும் ஒரு குவளை நீர் பக்கமே
இருந்தது. கடைக்காரர் மனம் உடைந்து வியாபாரத்தைக் கவனிக்காமல்
இருக்க, வேலையாள் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓட, கடை
நொடித்து மூடப்பட்டது. நல்லா வாழ்ந்தவர்கள் கெட்டு நொந்து நிற்பது
எத்துணை அவலம் என்பதை ஓரளவு உணர வைத்த நிகழ்வு அது.
அப்பா வகையில் ஓரளவு சொந்தம் என்கிற உரிமையில் கொஞ்சம் கூடுதல்
பாசத்தோடு அணுகிய ஒரு குடும்பம் என்பதால் அவர்களின் வீழ்ச்சி என்னை
கூடுதலாகவே பாதித்தது எனலாம். அதிலும், கடைக்காரரோடு இரண்டு
விதத்தில் எனக்கு கூடுதல் நெருக்கமிருந்தது. ஒன்று, எங்கள்
இருவருக்கும் ஒரே பெயர். அடுத்தது, அவரோடு போட்டி போட்டு பேசும்
அளவு திறன்மிக்க ஒரே ஆளாக அந்தக் குச்சிக்காட்டில் நான் மட்டுமே
இருந்தேன். அதாவது, நாங்கள் பேசத் தொடங்கினால், ஒவ்வொரு சொல்லையும்
யார் முதலில் சொல்லி முடிப்பது என்கிற போட்டி, சுற்றி இருப்பவர்கள்
சிரித்து மகிழ, நடக்கும். சுருங்கச் சொன்னால், இருவருமே மகா
திக்குவாயர்கள். ஒரே இனமாக எங்களை நாங்கள் அடையாளம் கண்டு
கொண்டதால் ரொம்பவும் நெருங்கி வந்திருந்தோம். எங்களுக்குள் ஒரு
உள்ளார்ந்த புரிந்துணர்வும் அதன் விளைவான ஒரு பிரியமும் இருந்தது.
திக்குவாய் என்பது உடல் ஊனங்களில் மகா கொடிய ஊனம் என்பதை
அனுபவித்து உணர்ந்தவன். ஓரளவு இன்றும் அனுபவித்து வருபவன் என்பதால்
அது குறித்த எனது எண்ண ஓட்டத்தை இங்கே பதிவு செய்வது பொருந்தும் என
நினைக்கிறேன். திக்குவாய் என்பதை இரு நிலைகளில் வைத்துப்
பார்க்கலாம். ஒன்று, சில வேளைகளில், சில குறிப்பிட்ட ஒலிகளை
உச்சரிக்கும்போது மட்டுமே ஏற்படும் சிக்கல். மற்றொன்று, ஒவ்வொரு
சொல்லின் உச்சரிப்பின்போதும், அதில், ஏதேனும் ஒரு ஒலிக்கூறு
சிக்கலாவது.
ஊமையாக இருப்பின் பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏதுமில்லை.
காலப்போக்கில் அதுவே இயல்பாகி சமூகத்தால் ஏற்கப்பட்டு ஒரு
அங்கீகாரத்தை பெற்றுவிடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் மன
உளைச்சலுக்கும் பதட்டத்துக்கும் உள்ளாவது தவிர்க்கப்படுகிறது.
ஆனால் திக்குவாய் என்பது இரண்டான் கெட்டான் நிலை, பேசியே ஆக
வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அதனை திருப்திகரமாக நிறைவேற்ற
இயலாத ஆற்றாமை சர்வசதா காலமும் கூட நின்று அலைகழிக்கும் கொடுமையை
எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அதிலும், கடைக்காரரும் நானும் எதிர்கொண்டது கடும் திக்குவாய்,
ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்து முடிப்பதற்குள் பிராணன் போய் வரும்.
அந்தப் போராட்டத்தின் நடுவே எதிர் நிற்பவரின் கேலி மினுங்கும்
பார்வை. சிரிப்பு. கூனிக் குறுக வேண்டும். தன்னைத் தானே ஒரு கேலிப்
பொருளாக்கி பலர் முன் நிற்பதன் வலி என்ன என்பதை, வாழ்க்கை மிகவும்
குரூரமாக, கற்பித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லையும்
முழுமையாக உச்சரிக்க உயிரைப் பிழிந்து மேற்கொள்ளப்பட்ட பகீரதப்
பிரயத்தன தருணங்களின்போதும் அது வாய்க்குள் சிக்காமல்
ஈவிரக்கமின்றி, அடித்து நொறுக்கி துவம்சம் செய்து தூக்கிக் கடாசி
கொக்கரித்து எதிரில் நிற்க, உள்வெளியில் ரத்தம் கசிய தள்ளாடி
எழுந்து தலைகுனிந்து நின்று, கண்களில் நீர் கட்ட, மௌன அழுகையில்
நனைந்திருந்தது எனது இளமைப் பிராய பொழுதுகளின் பெரும்பகுதி.
இதன் உச்சபட்ச வலியை உணர வைத்தது எனது பள்ளி வாழ்க்கை. அங்கே நான்
எதிர்கொண்ட இழிவும் அவமானமும் நிரந்தர ரணங்கள். அடைந்த வேதனை
அளப்பரியது. ஆசிரியரின் கேலி சக மாணவர்களின் ஏளனம் என அநேகம்.
ஒருவகை மன அழுத்தத்தினால் பாதிப்புற்ற நிலை என்பது பொருந்தும் எனது
மனோவியல் கட்டமைப்பில் இதன் பங்கு கணிசமானது என்பதை எப்போதும் உணர
முடிகிறது. எனது இயல்பாகிவிட்ட ஒதுக்கமான மனோநிலை அதன் ஒரு
பகுதிதான். பலருக்கும் பரிட்சயப்பட்டுவிட்ட எனது சற்றே கூடுதலான
சென்சிடிவிடியும் இதில் அடங்கும்.
சரி, இதன் மூலம் எதுவாக இருக்கும் என்கிற பூதக்கண்ணாடியோடு
பின்னாளில் அதை அணுகியபோது, அதற்குப் பதில் தரும் விதமாக அங்கேயும்
அப்பாதான் வந்து நின்று முறைத்து கண்களை உருட்டினார். எனது இடது கை
எழுத்துப் பழக்கத்தை மாற்ற, பக்கமே உட்கார்ந்து ஆள்காட்டி விரலைப்
பிடித்து மணலில் ரத்தம் கசிய அழுந்த தேய்த்தும் தலையில் குட்டியும்
அ-ஆ எழுத வைத்த காட்சி இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வகை
வலிந்து மேற்கொள்ளப்படும் எழுதுவதற்கான பிற வேலைகள் செய்வதற்கான கை
மாற்றம்- பேச்சுக்குரிய மூளைச் செயல்பாட்டில் சில குறைபாடுகளை
ஏற்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து அறிவியல் ஆய்வுகள்
நம்பத்தகுந்த சான்றுகளை இப்போது அளித்துள்ளன.
இதற்காக அப்பாவை குறை சொல்ல முடியுமா? அப்பாவிடமிருந்த நல்ல
அம்சங்களில் ஒன்று, அவர், கல்வி குறித்த விழிப்பு கம்மியாக இருந்த
அன்றைய நமது தோட்டப்புற சமூகச் சூழலில் அதன் முக்கியத்துவத்தை
நன்கு கணக்கிட்டு செயல்பட்டார் என்பது. அதன் நீட்சியே கல்வி
சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிடிவாதமான அவரது இந்தக் கண்மூடித்தனமான
கண்டிப்பு. அதன் விளைவுகளை நான் சுமந்து வருந்தி வாழ நேர்ந்தாலும்,
அவரது நோக்கத்திலிருந்த மேன்மை கருதி- எழுதுவதற்கு நொட்டாங்கை
நல்லதல்ல என்கிற தவறான நம்பிக்கையே அவரை அப்படி செயல்பட வைத்தது
என்பதை
புரிந்து கொண்டு, ஓரளவு கல்வி கொடுத்த அவரை எப்போதும் நன்றியோடு நினைப்பதுண்டு.
நாங்கள் இருவருமே- நான், கடைக்காரர்- ஒரே 'இனத்தை' சேர்ந்தவர்கள்.
கடைநிலை திக்குவாயர்கள் என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டதாலேயே,
எங்களுக்குள், நாங்கள் அறியாமலேயே ஒரு ஈர்ப்பு. அனுதாபம் கலந்த
அன்பு உருவாகியிருக்கலாம் என இப்போது அசைபோட தெளிவாகிறது.
அதனாலேயே, கடைக்காரர், சில வேளைகளில் குடும்ப சகிதம் ஏதேனும் வெளி
விஷேசங்களுக்குச் செல்லும்போது என்னையும் அழைத்துப் போயிருக்க
வேண்டும். அப்படி ஒரு பயணமாக அமைந்ததுதான், அந்த மலையடிவார பயணம்.
சில நூற்றாண்டுகளுக்கு முந்திய சோழ சாம்ராஜ்யத்தின் கடல் கடந்த
விஸ்தரிப்பின் அடையாளமாக இன்றும் கொண்டாடப்படுவது வட மலாயாவின்
கடார மண்ணில் குனோங் ஜெராய் அடிவாரத்தில் இருக்கும் அந்த புராதனக்
கோயில். அதன் கண்டுபிடிப்பு குறித்த தொடக்கத் தகவல் வானொலியிலும்
பத்திரிக்கைகளிலும் விஸ்தாரமாக அறிவிக்கப்பட்டு, தோட்டமே அது
குறித்து பெருமைபேசி கொண்டாடிக் கொண்டிருந்த சமயம் அது. தீம்பார்
வாளிக்கடை தொடங்கி மம்மட்டிக்காடு, பால்கொட்டாய், கிணற்றடி, கோயில்
கூத்து மேடை, கள்ளுக்கடை, திக்குவாயர் கடைக்கு வரும் பேப்பரை
படித்து முடித்த கையோடு, பெரிய குவளை தேதண்ணியை நாலு பேர் பங்கு
போட்டு குடித்தபடி பேசும் பேச்சில் என விரிந்த தளத்தில் அது
குறித்த பெருமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
"என்ன அண்ணே நம்ம ஊரு ராஜா ஒருத்தரு இங்க வந்து, நம்ம பீடோங்
பக்கம் இருக்கிற மலக்கி கீழே எத்தனையோ வருஷத்துக்கு முன்னால கட்டன
கோயில கண்டுபிடிச்சிருக்காங்கலாமே... நம்ம ராஜா கட்டின கோயில போயி
பாக்கனும்ணே... இந்த மண்ணுல நம்ம ராஜா காலு பட்ட மண்ண நாமளும் போயி
மிதிக்கலனா எப்படி?" என்று பெரியான் கூட அப்பாவிடம் சொல்லி
பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்.
டவுனிலிருந்து சின்ன காடி பேசி வரச்சொல்லி, கடைக்காரர்
குடும்பத்தோடு குனோங் ஜெராய்
மலையடிவாரம் நோக்கி பயணப்பட்ட ஒரு காலைப்பொழுதில் நானும் அவர்களோடு
சேர்ந்துகொண்டிருந்தேன். இப்போது இருப்பதுபோல் அப்போது பல வழிகள்
அதை அடைய
இருக்கவில்லை. ஒரே வழிதான். எங்கள் தோட்டத்திலிருந்து புறப்பட்டு
இடையில் வரும் பிரிவுகளான
சென்ட்ரோல், ரூசா, யு.பி (பின்னாளில் ஆறுமுகம் பிள்ளை
அவர்களுக்குச் சொந்தமான தோட்டமாக
ஆகி, ஒரு பிரபல வருமானவரி வழக்கில் தோற்றதைத் தொடர்ந்து கெடா
அரசாங்க சொத்தாக
வரிக்கப்பட்டு, இப்போது, தாமான்களாக உருமாறிக் கிடப்பது) கடந்த
நிலையில் வரும் தோட்டத்து
ஆஸ்பத்திரியும் அந்தப் புளிய மரமும் அதைக் கடந்த கையோடு, வலது
பக்கம் திரும்பி நேரான பயணம்.
இதுவரையிலும் இடது பக்கமே திரும்பி, சுங்கைப்பட்டாணி பட்டணப்
பிரவேசம் மட்டுமே
சாத்தியப்பட்டிருந்த எனக்கு, முதல்முறை இடப் பக்க பயணம் ஆவலைத்
தூண்டியது. இருமருங்கிலும்
கித்தாகாடு நிறைந்திருக்க நடுவாய் போன அந்தப் பயணவழி நெடுக
கடைக்காரரின் திக்கலான விவரிப்பு
தொடர்ந்து கொண்டிருந்தது. "தோ அங்க பாத்தாயா. அதான் சுங்கை லாலாங்.
சின்ன டவுனு. இது
தாண்டனா பீடோங். அதுல நொலஞ்சுதான் நாம மெர்போக் டவுனு போவனும். தோ
பீடோங் வந்துடுச்சு.
சோத்துகைபக்கம் பாக்கார் வேலிக்குள்ள கம்பம் தெரியுது பாரு. அதான்
இந்தியன் கேம்ப். நம்ப ஆளுங்க
நெரய இருக்காங்க. நம்ம குச்சிகாடு மாதிரி. வெள்ளக்கார தொர நம்ம
ஆளுங்கள அதுக்குள்ள
ராத்திரியானா 'கேப்யோ' போட்டு அடச்சி வச்சிருவான்... தோ.. சிமிலிங்
வந்திடுச்சு..."
சிமிலிங் வரை சாலையின் இருபக்கமும் மணல் திட்டுக்கள் நிறைந்த
நிலப்பரப்பாக இருந்தது.
'எத்தன அழுத்தமா சந்தோஷமா, நம்ம காலு வலுவா ஊனி நின்னிருக்கும்?'
* * * * * * * * * * *
பொழுது சாயும் முன்பே, திருமண சந்தோஷத்தின் ஒரு பகுதியாக, ஒரு
பத்து பேர் கூடி,
தோட்டத்து டிராக்டரில் அரிவாளுடன் காட்டுக்குப் போய் பந்தக்
காலுக்கான பச்சைக் கம்புகளையும்
பந்தலுக்கான அலங்கரிப்புக்காக குரங்குக்காய் மர இலைகளையும் வெட்டி
வந்து வாசலில்
இறக்கியிருக்கும். பச்சை தென்னை ஓலைகள் வந்து குவிந்திருக்கும்.
மட்டை பின்ன இளசுகள்
போட்டிபோடும். தெரிந்து கொள்ள விரும்பும் இளசுகள் பக்கம்
உட்கார்ந்து பாடம் கேட்கும்.
தென்னங்குருத்துகள் தோரணங்களுக்கு தயாராகும்.
அதற்குள் இன்னொரு கோஷ்டி அலுவாங்கைக் கொண்டு, பந்தலுக்கான
குழிகளைத் தோண்டத்
தொடங்கிவிடும். கல்யாண வீட்டு குசினிப் பக்கம் கல்யாண சமையலுக்கான
அடுப்பு தயாராகும்.
முக்கோண வடிவிலான அடுப்பு, பெரிய அடுப்புகள், குறைந்தது மூன்று
அடுப்புகளாவது வேண்டும்.
தோட்ட ஜனத்துக்கே தயாராக வேண்டிய விருந்து. வழக்கமாய் விறகை தோட்ட
நிர்வாகம் இலவசமாய்
கொடுத்துவிடும். கல்யாணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே
டிராக்டரில் கிளம்பிப் போன கோஷ்டி
விறகைக் கொண்டு வந்து இறக்கியிருக்கும். லாரியில், தண்ணீர் டாங்கி
வந்து இறங்கியிருக்கும்.
டவுன் மார்கெட்டுக்கு காலை ஏழு மணி பஸ்சிலேயே கல்யாண
வீட்டிலிருந்து ஆள்
போயிருக்கும். பன்னிரெண்டு மணி பஸ்சில் வந்து இறங்கும்போது செலவு
சாமான்களும் கூடவே வரும்.
தோட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு பெக்கான் லாமா ஜாலான்
கோலகெட்டில் ஜாலான்
சிகாராட்டிலுள்ள நான்கைந்து கடைகளில் 'பத்து' இருந்தது. த.ராமசாமி
அன்ட் சன்ஸ், பழனிசாமி
மளிகைக் கடை, சுப்பிரமணியர் ஆலய முகப்பை பார்த்தபடி இருந்த
வீரப்பிள்ளை அன்ட் சன்ஸ் கோயில்
வாசலுக்கு எதிர் திசையில் காந்தி நினைவு மண்டபத்தை நோக்கி ஓடிய
ஜாலான் சிகராட்டில்,
முச்சந்தியிலிருந்து, வலது பக்க கடை வீடுகளில் இருந்த 'அஃகு கடை'
என்று தோட்டத்து
ஜனங்களிடையே பிரபலமாக இருந்த முஸ்லீம் மளிகைக் கடை. அதனை
அடுத்திருந்த சீ தொங் மளிகைக்
கடை. கடை என்பது பிரமாண்ட கட்டிட அமைப்பல்ல. நீள வரிசையில்
அத்தாப்புக் கூரையுடன் கூடிய
பலகைத் தடுப்புகள். மிகவும் குறுகளாகவும் குள்ளமாகவும் இருக்கும்.
சராசரி உயரமுள்ளவர்கள் அஃகு கடை வாசலில் நின்று கையை உயர்த்தினால்
அதன்
நிலைப்படி தட்டுப்படும், வாசல் தொடங்கி பின்கட்டுவரை இருபக்கமும்
சாக்கு மூட்டைகள். மளிகைச்
சாமான்களின் மணம் கமகமக்கும். அது ஒரு விஷேச மணம். ஊதுவத்தியின்
மணத்துடன் கலந்து வரும்
தனித்த மணம். இப்போதெல்லாம், எந்த மளிகைச் சாமான் கடையிலும் அந்த
மணம் இல்லை.
மூட்டைகளின் இடைவெளி நடை பாதை. இரண்டு பேர் உராயாமல் கடக்க
முடியாது. கூடவே
பெருச்சாளிகளின் நடமாட்டம். மூட்டைகளின் இடுக்குகளிலிருந்து
வெளிப்பட்டு பாதங்களின் மேல் தாவி
ஓடும், கடிபட்டு ஆஸ்பத்திரிக்கு ஊசி போட ஓடுவதும் உண்டு. சம்பள
பிளாஞ்சா நாட்களில் நின்று மூச்சு
விட இடமிருக்காது.
சம்பளம் வாங்கிய அன்றே இரண்டு மணி பஸ்சுக்கு ஆள் நிறைந்துவிடும்.
பெக்கான் லாமா
கடைத்தெரு முழுக்கவும் தோட்டத்து ஜனங்களின் சந்தடி
மிகுந்திருக்கும். பஸ் ஏற நிற்குமிடத்தில் சாமான்
மூட்டைகள் குவிந்திருக்கும். அதனை ஒட்டி இருக்கும் சீனர்
சூப்புக்கடையில் வியாபாரம் தூள் பறக்கும்.
அப்போது பன்டி கொய்த்தியோ சூப் பிரபலம்.
சாமான்களை பஸ் ஸ்டான்டில் சேர்த்துவிட்டு அடுத்த வேலை ஒரு மங்கு
சூப்பை சுடச்சுட குடிப்பதுதான்.
கல்யாண வீட்டுக்காரர்கள் பெரும்பாலும் போய் நிற்பது அஃகு கடையாகவே
இருக்கும்.
அங்குதான் சகாயமான விலையில் பலசரக்கு கிடைக்கும். அடுத்தது
வீரப்பிள்ளை அல்லது பழனிச்சாமி
அன்ட் சன்ஸ். ராமசாமி கடை விலை எப்போதுமே ஏற்றமாகவே இருக்கும்
என்பதால், அங்கே அதிகமும்
போக மாட்டார்கள்.
கல்யாண வீட்டுக்காரர்கள் அவசியம் செல்கிற இன்னொரு முக்கிய இடமும்
ஜாலான்
செகராட்டில்தான் இருந்தது. கல்யாண நகை செய்ய தாலி செய்ய அந்த
வாசலில் போய் நிற்காமல்
ஆகாது. அந்தக் கடை வரிசையில், ஐந்தாறு பத்தர்கள் மணக்கட்டை போட்டு
உட்கார்ந்து ஊதி தட்டிக்
கொண்டிருந்தார்கள். இதில் மணியம் முடிவெட்டும் கடைக்கு
அடுத்திருந்த அண்ணன் தம்பிகள் மூன்று
பேர் பிரசித்தம்.
மூன்று பேர் என்றாலும் எப்பவுமே இரண்டு பேர்தான் கால்களை மடக்கிப்
போட்டு உட்கார்ந்து
வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால்- அவரு ஊருக்கு
போயிருக்காரு... வர மூனு
மாசமாவும். ஒரு சுழல் முறையில் அவர்கள் ஊருக்குப் போய் வருவது
பின்னால் தெரிந்தது. இதில்,
துரைசாமி பத்தர் ஆக இளையவர். மெலிந்த தேகம். பெரிய பிரேம் மூக்குக்
கண்ணாடி. எப்பவும்
வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் வேட்டியும், நெற்றியில் ஒற்றைக்
கோடாய் குறுக்காய் திருநீறு,
அதிகம் பேசாதவர், ஒன்றிரண்டு வார்த்தைகள் - ஒரு புன்சிரிப்பு.
அதோடு, அவர், யாரோ ஒரு யோகியின் பக்தர் என்பதும் பிறகொரு நாள்
தெரியவந்தது.
பின்புற சுவரில் ஒரு சிறு கறுப்பு வெள்ளைப் படம். எப்பொழுதும்
எரிந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய
அகல் விளக்கு. யோகி, விழிக்கோளங்கள் மேல் பார்க்க புலித்தோலில்
சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பதைப்
பார்க்க, தொடக்கத்தில் பயம் இருந்தது. கொஞ்ச நாளில் பயம் போய்
ஆர்வம் வந்தது. அவருக்கு நேர்
எதிர் இவரது அண்ணன். தொன தொன பேச்சுக்காரர். அவரது தனித்துவமாக
நினைவில் இருந்ததாக
இன்னும் நினைவில் இருப்பது, அந்த வார்த்தைப் பிரயோகம்- 'சரி
செய்துவிடுவோம்' என்பதை 'சரி
சொன்ன மாதிரியே செம்மு பண்ணிடுவோம்' என்பார். வெற்றிலைப் பிரியர்.
சிவந்த வாய் மாறி
பார்த்ததே இல்லை. அடுத்தவர் ஆக இளையவர். தாட்டியான உடலமைப்பு.
கரகரத்த குரலில் அவர்
நகைகள் குறித்து விளக்கம் சொல்லும்போது சொல்லும் விஷயம் விலகி
அவரது குரல் மட்டுமே
கவனத்தை ஈர்த்திருக்கும்.
இவர்களைத் தவிர அதே கடைவரிசையில் நான்கு வாசல்கள் தள்ளி இன்னொரு
பத்தர். பெயர்
நினைவில்லை. ஆள் நினைவிருக்கிறது. ஒடிசலான தேகம். சிரிக்க ஒரு
தங்கப் பல் தெரியும்.
பின்னாளில் எங்கள் தோட்டத்திலேயே வந்து தங்கிவிட்டார். ராமசாமி கடை
பின்புற வீட்டுத் திண்ணையில்
அப்பனும் மகனுமாக இரண்டு பத்தர்கள். அப்பனுக்கு புற்றுநோய் கண்டு
இறந்த பின், இடம் மாறினார்.
ஊருக்கு நிரந்தரமாக சென்று தங்கிவிட எண்ணியிருந்த சமயத்தில்
மாரடைப்பால் காலமானார்.
ஒருவகையில் இவருக்கும் எனக்கும் இந்த ஜாலான் செகராட்டிற்கும் உள்ள
ஓரளவான
நெருங்கிய தொடர்பை இத்தருணத்தில் சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
எனது இளமைக் காலத்தின்
ஒரு சில ஆண்டுகளை இந்த ஜாலான் செகராட் ஆட்கொண்டிருந்தது. அப்போது
எனக்கு பதினெட்டு
வயதிருக்கும். பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கு அலைந்த நேரம்.
அப்போதெல்லாம் இப்போது போல்
அல்ல. பேக்டரிகளே இல்லாத காலம். வேலை என்பதே அரசாங்க வேலைதான்.
அதுவும் கிடைப்பது
குதிரைக் கொம்பு. அப்பாதான் ஆலோசனைக் கூறினார். வேலைக்கு அலைவதை
விட்டு ஏதாவது
வியாபாரம் பார்க்கலாமென்று.
விசாரித்ததில், ஜாலான் செகராட்டில் ஒட்டுக் கடை ஒன்று தவணைக்கு விட
இருப்பது
தெரிந்தது. ரிடையர்ட் போஸ்ட்மேன் ஒருவர் பொழுதுபோக்க
தொடங்கியிருந்த கடை. கடையின்
விஷேசமே அதன் அமைப்புதான். முக்கோண வடிவில் அமைந்த சிறிய இடம்.
இரண்டு மாடி கட்டிடத்தில்
மேலே செல்லும் படியை ஒட்டி கீழ் தளத்தில் இருந்தது. அபபாவின் பண்டு
பணத்தில் ஒருபகுதி அதற்குப்
போனது. வியாபாரம் ஆஹா ஓஹோ என்று முன்பு இருந்தவர் சொன்னதெல்லாம்
எங்களுக்கு
விரிக்கப்பட்ட வலை என்பது கொஞ்ச நாளில் புரிந்து போனது.
இதில் என்னோடு துணைக்கு இன்னொரு தம்பியான ஹரியும் சேர்ந்துக்
கொண்டிருந்தார்.
கடைக்கான வாடகை, இருவருக்குமான சாப்பாடு எல்லாம் சேர்த்து வந்த
வருமானத்தில் ஏதும் மிச்சம்
பார்க்க முடிந்ததில்லை. நல்லவேளை தங்குவதற்கு மேல்மாடியில் இலவசமாக
இடம் ஒதுக்கி
கொடுத்திருந்தார்கள் கட்டிட சொந்தக்காரர்கள். ஒரு நாள் விடிந்து,
கடை திறக்க கீழே இறங்கி வந்து
நின்றபோது அதிர்ச்சி. கடை பூட்டு உடைக்கப்பட்டு, கதவு அகலத்
திறந்து, உள்ளே கண்ணாடி
அலமாரிகள் காலியாகியிருந்தன. அன்றோடு, கடையைப் பூட்டிவிட்டு
மீண்டும் தோட்டத்துக்கு மூட்டைக்
கட்டினேன். தம்பி ஹரி அதோடு சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்றவர்
அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
அங்கிருந்தபோதுதான், பொழுது போகாத நேரங்களில் தாளை வைத்துக்
கிறுக்கத்
தொடங்கியிருந்தேன். எழுத்தாளர் பி.யு.சுப்பனின் அறிமுகம்
அங்கிருந்தபோதுதான் கிட்டியது. போகிற
வருகிற வழியில் சில்லறையாக ஏதாவது வாங்கிப்போக வந்து நிற்பார்.
அந்த சமயத்தில்தான் பீடோங்
கவிஞர் பெருமாளும் கவிப்புயல் கரு.வேலுச்சாமியும் இணைந்து நடத்திய
ஒரு சிறுகதைப் போட்டியில்
பரிசு கிடைத்து நான் எழுதுவது தெரிந்திருந்தது. அதனைத் தொடர்ந்த
சுப்பன் அவர்களுடனான
உரையாடல்களும் ஊக்குவிப்பும் மேலும் எழுத ஆர்வமூட்டின.
அதே, திருடுபோன, ஒட்டுக் கடையில்தான், பிறகு அந்த பத்தர் கடை
வைத்தார். ஒருநாள்
அதற்குள்ளேயே மாரடைப்பில் இறந்துபோனார்.
இந்தக் கடை வரிசைக்குப் பின்னால் இன்னொரு கடை வரிசை இருக்கிறது.
அதில் முதல்
கடைவீட்டின் முதல் தளத்தில் இருந்தவர் திக்குவாய் பத்தர். எனது
இனந்தான். ஓரளவு இதற்குள் எனது
குறைபாடு நீங்கியிருந்தாலும் முற்றாக குணம் என்பது இல்லை. எனவே,
அவரோடு போட்டி போடும்
தருணங்கள் அநேகம் வாய்த்திருந்தன.
இவரது விஷேசம் ஒன்றுண்டு. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து
நடமாடுவது என்பதை
தனது அகராதியிலிருந்து முற்றாக நீக்கியிருந்தார். அதன் காரணம் அந்த
உடல்வாகு. கனத்த சரீரம்.
அதைத் தாங்கும் வலுவின்றி நோயுற்ற கால் முட்டிகள். அடிக்கடி
வீங்கிக் கொண்டு அவஸ்தைப்படுவார்.
சாப்பாடு உட்கார்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும். எடுப்புச்
சாப்பாடு. கருப்பையா சாப்பாட்டுக்
கடையிலிருந்து சரியாக பன்னிரெண்டு மணிக்கு மாடிப்படி ஏறிப்போகும்.
அவர் உட்கார்ந்து வேலை
பார்க்கும் மேசை முன் அவருக்காக காத்திருக்கும். மணி மூன்றோ நான்கோ
ஆகலாம் அவர் பார்வை
அதன் மேல் விழ.
நல்ல பேச்சாளி. அந்தக் குறைபாடு குறித்த தன்னுணர்வு சிறிதுமற்ற
குரலை உயர்த்திப் பேசி
சிரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பபட்டதுண்டு. தன்னைப் பார்க்க
வருவோரை இழுத்துப் பிடித்து உட்கார
வைத்து மணிக்கணக்கில் கதையளப்பார். இடையே, அவரையே கீழே
ரோட்டோரமிருந்த சீன காப்பிக்
கடைக்கு அனுப்பி தேதண்ணி வாங்கி வரச் சொல்வார். எத்தனை பேர்
வந்தாலும் அத்தனை பேருக்கும்
இதே உபசரிப்புதான். நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்ததாக
நினைவிருக்கிறது. நிறைய விஷயங்கள்
குறித்து விவாதிக்கும் திறன் இருந்தது. அவரும் ஒருநாள் இரவு,
யாருமற்ற வேளையில், மாரடைப்பால்
இறந்து கிடந்தார்.
சுப்பிராயர் பத்தரை, அவரோடு பழகிய எவரும் மறந்திருக்க இயலாது.
கொஞ்சகாலம் வாதாமர
நிழலிலிருந்த கடைவீட்டில் அவர் கடை வைத்திருந்தபோது பழக்கம். அவர்
அப்போதே கொஞ்சம் மாடர்ன்
ஆன பத்தர் என அடையாளப்படுத்திக் கொண்டார்.
தரையோடு ஒட்டிய இரண்டடி மேசை, உட்கார மணக்கட்டை என இருந்ததை
மாற்றி,
உயரமான மேசை, உயர நாற்காலி என காலை நிமிர்த்தி உட்கார்ந்து
சிரமப்படாமல் வேலை பார்த்த முதல்
பத்தர் அவர்தான்.
ஒரு சின்ன உலகம் அந்த பெக்கான் லாமா என்கிற சுங்கைப் பட்டாணி
பட்டணத்தின் ஒரு
பகுதி. ஜாலான் சிகராட் - ஜாலான் கோலகிட்டில் எனும் இரண்டு சாலைகளின்
சந்திப்புகள் நிகழும்
முச்சந்தியை ஒட்டிய சுப்பிரமணியர் கோயில் வளாகத்தை மையமிட்டு- சில
பலசரக்குக் கடைகள், சில
ஒட்டுக் கடைகள், ரயில் கேட்டை ஒட்டி நின்ற தூங்குமூஞ்சி
மரத்தினடியில் கிளி ஜோசியம், முத்தையா
ஒட்டுக்கடை பின்புற மேட்டிலிருந்த கள்ளுக்கடை, முடி திருத்தும்
மணியன் கடை என சுற்றி சுழன்ற
நம்மவர்களின் உலகத்தில்- தனித்த அடையாளத்தோடு, அதற்கான ஒரு
கலாச்சார வெளியோடு
உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பக்தர்கள் சமூகத்தின் இந்த
தனித்துவமான உலகம்.
ஊரை, நாட்டை, மனைவி மக்களை பிரிந்து, பிழைப்பு தேடி வந்து, ஒரு
சிறிய அறைக்குள்
தங்களை ஒடுக்கிக் கொண்டு, தலைக்கு மேல் மஞ்சள் ஒளியை உமிழ்ந்து
ஒளிரும் குண்டு பல்புகளின்
கீழே கண்களை இடுக்கி, தங்கத்தை சிற்பமாக்கும் செப்படி வித்தையில்,
உமிக்குள் யாகம் வளர்த்து-
தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கலைஞர்கள் அவர்கள்.
கால்களை மடிக்கிப் போட்டு
மணக்கட்டையில் உட்கார்ந்து பலமணி நேரம் வேலை பார்த்ததாலேயே,
உடலாரோக்கியம் சிதைந்து,
பலரும் இங்கே அனாதைப் பிணங்களானார்கள் என்பது ஒரு
வருத்தத்திற்குரிய உண்மை.
தனது பழமை அழகை இழந்து காங்கிரீட் காடாய் மெல்ல உருமாறத்
தொடங்கிவிட்ட-
இன்றைய ஜாலான் சிகராட்டின் தோற்றம் முற்றிலும் வேறு. அந்தக் குடிசை
கடைவீதி மறைந்து
முச்சந்தியை ஒட்டி ஒரு பத்து கடைவீடுகள், செவ்வேறிய தகரக் கூரையோடு
இன்னமும் தங்களைக்
காப்பாற்றி தக்கவைத்துக் கொண்டுள்ளன. இதில் எதிலுமே இப்போது
பக்தர்கள் சமூகத்தைச் சேர்ந்த
எவரும் இல்லை.
இந்தக் கடைவீதியை தங்களின் நேசமிக்க உபசாரத்தாலும் பிரியத்தாலும்
சுவைகூட்டிய
உரையாடல்களாலும் நிறைந்திருந்த அவர்கள் இன்றி- ஒரு காலத்தில்
இளைப்பாற சரணாலயம் தேடி
நம்பிக்கையோடு பல பறவைகள் உலவிய கடைவீதி இன்று சோபை இழந்து
துக்கத்தில் அமிழ்ந்திருக்கிறது.
இதன் வழியாய் இன்றும் பலமுறை பயணிப்பதுண்டு. அப்படி
பயணிக்குந்தோறும், அவர்களில்
யாரேனும் ஒருவர் விடாமல் பின் தொடர்ந்து வருவதை உணர முடிகிறது.
அந்தக் குறுகுறுப்பு நீங்கும்
முன்பே, ஏதேனும் ஒரு தருணத்தில், ஏதேச்சையாய் திரும்பிப் பார்க்க-
பிரதான சாலையிலிருந்து சற்றே
உள் ஒடுங்கி இருளில் மறைந்திருக்கும்- அந்த முதல் மாடியின் ஜன்னல்
வழி திக்குவாய் கந்தசாமி
பத்தரின் அதிர்வேட்டுச் சிரிப்பு கேட்பது போன்றதொரு பிரமை,
சிலிர்க்க வைத்துவிடுகிறது.
* * * * * * * * * * *
இரவிலேயே பக்கத்து தோட்டத்திலிருந்து சமையற்காரர் வந்துவிடுவார்.
காய்கறிகளை
நறுக்கும் வேலை விடிவதற்குள் முடிந்துவிடும். கல்யாண வீட்டுப்
பெண்களோடு அக்கம் பக்கத்து வீட்டுப்
பெண்களும் உதவிக்கு இருப்பார்கள்.
பந்தல் அலங்காரத்தில் இருப்பவர்களுக்கு குசினியிலிருந்து
தேதண்ணியும் அம்பாசகி ரொட்டியும்
வந்துகொண்டே இருக்கும். பொழுது இருட்ட கேஸ்லைட் விளக்கு வாசலில்
வெளிச்சம் போடும். பந்தல்
அலங்காரத்துடன் சேர்ந்து வீட்டு அலங்காரமும் நடக்கும். அதில்
கைதேர்ந்தவராக இருந்தவர் நரசப்பன்.
ஒவ்வொரு கல்யாண வீட்டு அலங்காரமும் அவரது கைவண்ணம். அதற்காக
டவுனுக்குப் போய் ராமசாமி
வங்சா கடையிலிருந்து கலர் காகிதங்களை வாங்கி வைத்திருப்பார்.
அதிலும் குறிப்பாக நான்கு வர்ணங்கள்
பிரதானமாக இருக்கும். சிகப்பு, மஞ்சள், பச்சை, நீளம், அதிலும்
சிகப்பு நிறக் காகிதம் அதிகம்.
எல்லாமே அழுத்தமான நிறங்கள். இலேசான கண்களுக்கு இதமான நிறமாக
எதையும் அவரது
ஜோடனையில் பார்த்ததில்லை. அதிலும், வெண்மை நிறத்தைக் கண்டதே இல்லை.
காரணம் நீண்டநாள்
புரிந்ததில்லை.
ஒருநாள், அவரே யதார்த்தமாய் அதனைச் சொன்னபோது அதிர்ச்சியாக
இருந்தது. "கல்யாண
காரியம் நல்ல காரியம்... வெள்ள கடுதாச வச்சு ஜோடிச்சா பொண்ணுக்கு
வெள்ள பொடவய கட்டன
மாதிரி தோணுது... அதான் அத சேக்கறதல்ல.." அளவெடுத்து ஒரே சைசில்
கத்திரிக்கோளால் நறுக்கிப்
பிரிக்க, இரண்டு இஞ்ச் அகலத்தில் நீண்டு வரும் கலர் கடுதாசுகள்.
விட்டத்தில் ஒரு சான் இடைவெளி
விட்டு வரிசையாக கட்டப்பட்டிருக்கும் கம்பிகள். அதன்மேல்தான்
படரவிடப்படும் கலர் காகிதங்கள்.
கிழங்கு மாவில் தயாரான பசையை முனைகளில் தடவி கம்பியின் முனைகளோடு
பிணைந்து நீள
முறுக்கிய நிலையில் விட்டத்திற்கு என்றுமில்லாத புதிய அழகு
சேர்ந்திருக்கும்.
மிக இள வயதில் எனது நினைவில் ஓரளவு தெளிவாக இருக்கும் திருமணம்
ஒன்றுதான்.
அதன் பிறகான வயதில் பல திருமணங்களில்- எனது அக்காவுக்கும்
தங்கைக்குமான திருமணங்கள்
நினைவில் இருப்பவை. அவை இரண்டுமே தோற்றுப்போன திருமணங்கள்
என்பதாலேயே அதனை
அசைபோடுவதும் நினைவுகளை ஆழப்படுத்தலும் தொடர்ந்து நிகழ்ந்த
வண்ணமுள்ளன.
அக்காவின் திருமணம் தோட்டத்து வீட்டிலேயே பந்தல் போட்டு நடந்தது.
காதல் திருமணம்.
அப்பாவுக்கு உடன்பாடில்லாத திருமணம். போராட்டத்தின் பின், அரை
மனதோடு ஒத்துக்கொண்டு நடந்த
திருமணம். அப்பாவுக்கு ஒவ்வாமை வந்ததன் காரணம் ஜாதி பகைமை.
இங்கே, இது தொடர்பான, அன்றைய தோட்டப்புறச் சூழல் சார்ந்து சமூக
தளத்தில் இயக்கம்
கொண்டிருந்த ஜாதி வகைமாதிரி குறித்த ஒரு முக்கியச் செய்தியை பதிவு
செய்வது அவசியம் எனக்
கருதுகிறேன். விருட்சமாக தழைத்தோங்கி நின்ற இந்த மரம் தனது வேர்களை
களங்கமற்ற
சின்னஞ்சிறுசுகளின் மனசுக்குள்ளும் வலிந்து படரவிட்ட கொடுமை அங்கே
அரங்கேறியது உண்மை.
குறிப்பிட்ட வசிப்பிடத்தை கொண்ட மக்களை 'தாழ்வாக' அடையாளப்படுத்தி
பாடம் புகட்டும் வேலை
சர்வசாதாரணமாக மேற்கொள்ளப்பட்டதை இப்போதும் நினைவுகூர முடிகிறது.
தோட்டப்புறச் சூழலின் சகல இழைகளிலும் அதன் ஆதிக்கம் மேலோங்கி
இருக்க, அதனைப்
புரிந்து நிராகரிக்கும் சக்தியற்ற நிராயுதபாணியாக, தானும் அதன்
பிடிக்குள் சிக்கி மெல்ல சிதைவுற்ற
ஒருதலைமுறை எங்களுடையது என்பதை இங்கே பதிவு செய்வதில் எனக்கு
தயக்கமேதுமில்லை.
இன்னமும் அதன் எச்ச சொச்சங்களை சுமந்து விடுதலை வேண்டி உள்மனப்
போராட்டங்களில் தன்னை
வருத்திக் கொண்டு, சந்திக்கும் பொழுதுகளில் ரகசிய குரலில் அது
குறித்த ஆதங்கத்தை பகிர்ந்துக்
கொள்ளும் பால்யகால சிநேகிதர்கள் எனக்குண்டு. ஒரு நான்கைந்து ஏக்கர்
பரப்பளவிற்குள் ஒரு
சமூகத்தின் சகல மேன்மைகளும் சகல கீழ்மைகளும் ஒருங்கே அரேங்கேற்றம்
கொண்டிருந்த ஒரு
உலகமாகவே அது இயக்கம் கொண்டிருந்தது.
அதில், ஒரே ஜாதி என்கிற அடையாளத்துக்குள்ளும் வெவ்வேறு பிரிவுகளை
அப்போது காண
முடிந்தது. அவர்களிடையே வன்மத்துடன் கூடிய எதிராளி மனப்பான்மை
மேலோங்கி இருந்தது.
பெரியவன் சின்னவன் போராட்டம். இப்போது திரும்பிப் பார்க்க, அத்தகைய
பகைமையே மாற்று
ஜாதியினரிடம் அவர்கள் கொண்டிருந்த பகைமையைக் காட்டிலும் கூடுதல்
வன்மத்துடன் அங்கே
வெளிப்பட்டதை உணர முடிகிறது.
அங்கு வந்து குடியேறிய ஆரம்ப காலந்தொட்டே அத்தகையதொரு பகைமை
இருந்துள்ளதை
அப்பா பெரியானிடம் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்த சில சம்பவங்கள்
படம் போட்டுக் காட்டின. ஒருமுறை
பகைமை முற்றி ஒரு சாரார் இன்னொரு சாராரை மம்மட்டி
வெட்டுக்கத்திகொண்டு தாக்க... இரவோடு
இரவாக அவர்கள் தோட்டத்தை விட்டு ஓட்டமெடுத்த கதை அவர் பலமுறை
சொல்லிக் கேட்டதுண்டு.
அந்தப் பகைமையில் ஊறிக் கிடந்த அப்பாவுக்கு, ஒருநாள் அதுவே உறவாக,
வாசலில் வந்து
கட்டியணைக்க விரித்து நின்றபோது அதிர்ச்சியாகிப்போனதில்
வியப்பில்லை. இன்னுமொரு காரணம்
மாப்பிள்ளையின் நம்பகத்தன்மை குறித்த ஐயப்பாடு. எவரையும் எளிதில்
ஈர்த்துவிடம் முக வெட்டு.
அதில் மெலிதாய்ப் படரும் புன்னகை. நடுத்தர நிறத்தில் அதே நடுத்தர
உயரம். கனிவான பேச்சு,
பேசும்போது ஒரு வினோத உடல்மொழி. ஒவ்வொரு வாக்கிய முடிவிலும்
தன்னிச்சையாய் குலுங்கும்
உடல். பேசியதில் சலித்தெடுக்கும் அளவிலான உண்மைகள். அதன் பொருட்டு
தோட்டத்து வழக்கப்படி
புனைபெயர்கள். ஒன்று பொய்யாமொழி. மற்றது ஒடம்பாட்டி.
சின்னகாடி வைத்து 'சேவா' ஓடியபோது புது சகவாசம். குடும்பத்தில்
குழப்பம். ஒருநாள்
ஆறு சின்னக் குழந்தைகளோடு, அக்கா வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு,
வயிற்று புற்று நோயில் அவரும் காலமானார். உயிர்விடும் தருணம் எனது
கைகளைப் பற்றி மரண
பயத்தில் உள்ளிருந்து கிரீச்சிட்டு வந்த அந்த ஆற்றாமை நிரம்பிய
அழுகை, இன்றும் காது மடல்களில்
துடிப்பதை உணர முடிகிறது.
தங்கையின் திருமணம் ஒரு மாதத்தில் முறிந்துபோன இன்னுமொரு அவலம்.
அப்பாவுக்கு
பிடித்த இடம். மாப்பிள்ளையின் முகத்தை மணமேடையிலேயே முதல்முறை
பார்க்க அது பிடிக்காமல்
போக, ஒரு மாதத்திலேயே திருமண முறிவு. நீண்ட காலம் தனியாக வாழ்ந்து,
அவளும்
இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு கோர சாலை விபத்தில் மாண்டு தனது
பயணத்தை முடித்துக்
கொண்டாள். துன்பியலோடு தொடர்புடைய எதுவும் மன ஆழத்துள்
தங்கிவிடுவது இயல்பு என்கிற
வகையில், இந்த இரண்டு திருமணங்களும் அவ்வப்போது வலிகளோடு எட்டிப்
பார்த்துப் போவதுண்டு.
அந்த இன்னொரு திருமணம்.... அப்போது எனக்கு பத்தைக் கடந்த
வயதிருக்கும். எங்கள்
வீட்டு பெரியானோடு குடியிருந்த முனியாண்டிக்கு காதல் பிறந்தது.
உயரம் என்று சொல்ல முடியாத ஒரு
நடுத்தர உயரம். அவரது உடம்பைப் பற்றி அப்பா வைக்கும் வர்ணனை..
அவனுக்கு உருளக் கட்ட
ஒடம்புடா. கட்டையான சுருள் தேகம். நன்கு கத்தரித்த அளவான மீசை.
அவரது உடுத்தும் விதம்தான்
இதில் விஷேசம். ஒரு முழுநீள சிலுவார். மார்பில் ஒரு துண்டு. அவரது
சீருடை அதுதான்.
அதனுடனேயே தோட்டம் முழுக்க வலம் வருவார். சம்பள பிளாஞ்சா நாட்களில்
டவுனுக்கு போகும்போது
மட்டும் மேலே ஒரு பனியன்.
காதல் வந்த பின்பு, இரவு வேளைகளில், அதுவரை ஏ.எம்.ராஜா பாட்டைக்
கேட்டு தாளம்
போட்டு கிறங்கி உட்கார்ந்திருந்த முனியாண்டி குசினிப் பக்கம்
தூணோடு சேர்ந்து நின்று, பின்பக்கமிருந்த
நேர் எதிர் வாசலை நோட்டமிட தொடங்கியிருந்தார். இரவு நேரத்தின்
பெரும்பகுதியை அவர்களோடு
கழித்து வந்த எனக்கு இது தொடக்கத்தில் ஏனென்று புரியவில்லை.
பெரியான் மட்டும் நமட்டுச் சிரிப்போடு
எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நாளில் அதன் விபரம்
தெரிந்தபோது ஆச்சரியமாக
இருந்தது. பெரியானும், அவனுக்கு பொம்பள கிறுக்கு
புடிச்சிருச்சுடா என்று கேலி பண்ணத்
தொடங்கியிருந்தார்.
உதட்டின் மேலே பூனைமுடியும் அக்குளிலும் மர்மப் பகுதியிலும்
முடிகள் அரும்பத் தொடங்கி
பெண் உடலை வேறு உணர்வோடு வெறிக்கத் தொடங்கிவிட்ட பருவம். வகுப்பு
பெண்பிள்ளைகளின் மேல்
ஏதோ ஒரு ஈர்ப்பு முளை விட, கனவுகளில் அவர்கள் வந்து நடமாட, இரவு
ஸ்கலிதம் போய்,
தொடைகளுக்கிடையே ஈரம் தட்டி, திடுக்கிட்டு விழித்து, வெட்கத்துடன்
குசினிப் பக்கம் ஒதுங்கி சுத்தம்
செய்து கொண்டு மீண்டும் படுக்கைக்குப் போன வயது. எனவே, பெரியான்,
முனியாண்டியை, சுட்டி
"அவனுக்கு பொம்பள கிறுக்கு புடிச்சிருச்சுடா" என்று சொல்லிச்
சிரித்தபோது, அதைப் புரிந்துகொள்ள
முடிந்தது.
நிறைய காதல்களை பார்த்திருந்த தோட்டம், முனியாண்டியின் காதலில்
மட்டும் சற்றே
அதிர்வுற்று நின்று வேடிக்கைப் பார்த்தது. எங்கள் தோட்டத்து மொத்த
ஜனத்தில் ஒரு சிறு பகுதி
மலாய்க்கார குடும்பங்கள். எங்கள் லயத்தை ஒட்டி இரண்டு
குடும்பங்களும் பின்லயத்தில் இரண்டு
குடும்பங்களும் இருந்தன. தோட்டத்து மக்களோடு பல வகையிலும் ஒன்றாக
கலந்துவிட்ட எளிய மக்கள்.
தமிழை சுத்தமாக பேசி எல்லோரோடும் உறவு போல் பழகி வாழ்ந்த
சகோதரர்கள். இனங்களுக்கிடையே
இனம் மதம் மொழி என்கிற சுவர்கள் எழுப்பப்படாத ஒரு பொற்காலம் அது.
பின்னாளில் 60களின்
கடைசி, 'அந்த' சுவர்கள் நன்கு அடித்தளமிட்டு எழுப்பப்பட்டு,
அவர்களிடையே இடைவெளி உருவான
பின்பு அங்கு நடந்த ஒரு கலவரம் நினைவுக்கு வருகிறது. பலரை
தோட்டத்தை காலிசெய்து இரவோடு
இரவாக காவல் நிலையம் நோக்கி ஓட வைத்த துக்க தினம் அது. அப்படி
ஓடியவர்களில் பலர்
கடைசிவரை தோட்டத்தின் பக்கம் தலைவைத்து படுக்கவே இல்லை. ஒரு நாள்
இரவு முழுக்க ஒரு
கும்பல் ஆயுதமேந்தி அராஜகம் நடத்தியது. அரசியல் பிழைத்தோரின்
சுயநலம், எத்துணை கொடியது
என்பதை பட்டவர்த்தனமாக உணர கிடைத்த சந்தர்ப்பமாக அது அமைந்து
போனது.
அதில் விதிவிலக்கான சில உறவுகள் இன்றுவரை தொடர்கிறது என்பது ஒரு
சந்தோஷச்
செய்திதான். அந்த பின்னால் லயத்திலிருந்த ஒரு மலாய்க்கார
குடும்பத்தைச் சேர்ந்த டின், மன்சூர்,
அமிட் ஆகியோரை எங்கேனும் தற்செயலாய் இன்றும் சந்திப்பதுண்டு.
அந்தச் சந்திப்புகள் எதிலுமே
மாறிவிட்ட இந்த நச்சு படிந்த சூழலின் நிழல்கூட விழாமல் இன்றும் அதே
பரிசுத்த அன்பு பொங்கி வழிய
நமது குச்சிக்காட்டு தமிழில் அவர்களோடு உரையாடி இளமைக்கால
நினைவுகளில் மூழ்கும் தருணங்களில்,
மாறிவிட்ட இன்றைய எதிர்மறை சூழல் குறித்த வருத்தமும் வருவதுண்டு.
அந்த, எங்கள் லயத்திற்கு பின்னால் லயத்தில், பெரியான் வீட்டு
குசினிப்புற கதவுக்கு நேர்
எதிரில் இருந்த மலாய்ச் சகோதரி ஒருத்தியின் மேல்தான்
முனியாண்டியின் கண் விழுந்திருந்தது. பெயர்
நினைவில்லை. கணவனிடமிருந்து விலக்குப் பெற்று தனியாக
வாழ்ந்திருந்தாள். குழந்தை ஏதுமில்லை.
அழகி என்று சொல்ல முடியாது. தூக்கலான முன் பல்வரிசை அவளது விஷேச
அடையாளம். காதல்
முற்றி அவர்கள் கோயில் வளாகத்துக்குள் சென்று லீலைகள் புரிந்தபோது
தோட்டம் முகம் சுழித்தது.
கோயில் தலைவர் இருவரையும் கூப்பிட்டு வைத்து புத்திமதி சொன்னார்.
அந்த இரவே இருவரும்
காணாமல் போனார்கள்.
இதில் அதிகம் உடைந்து போனவர் பெரியான்தான். அப்பாவிடம் வந்து
நின்று முறையிட்டுக்
கொண்டிருந்தார்... "என்னங்கண்ணே இந்த முனியாண்டி பய இப்படி
பண்ணிட்டான்? இவனுக்கு என்ன
நம்ம குச்சிகாட்ல வேற பொண்ணா கெடக்கல? அந்த முனியன் மவ இவன் மேல ஆச
வச்சு சுத்தி சுத்தி
வந்துகிட்டிருந்தா,.. கருப்பா இருந்தாலும் நல்லா மூக்கும்
முழியுமாதான இருக்கா... நானும்
ஜாடமாடயா எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். அவன் காதுலயே போட்டுக்கல.
இப்ப பாருங்க.
புருஷங்காரன் அத்துவிட்ட வயசான மலாய்காரிய இழுத்துகிட்டு ஓடி
தோட்டமே சிரிக்குது.."
நான்கு நாள் கடந்த நிலையில், ஒரு மாலை நேரம், மாடுகன்றுகள்
மேய்ச்சல் முடிந்து
லயத்துக்குள் ஆரவாரத்துடன் பிரவேசித்துக் கொண்டிருந்தன. நாங்கள்,
காத்து காலமானதால் திடலில்
பட்டம் விட்டுக் கொண்டிருந்தோம். சின்னக்காடி ஒன்று கோயில்
முச்சந்தி தாண்டி லயத்து ரோட்டில்
இறங்கி மேட்டுக்குச்சி நோக்கி நகர்ந்தது. அத்தி பூத்தது போல ஒரு
நிகழ்வு இது. "டேய் அங்க பார்ரா
டவனு காடி போவுது... யாரோ வர்ராங்க... வாங்கடா போய் பாக்கலாம்...".
பட்டங்களை தரைக்கு
இறக்கி வந்து காடியைப் பார்த்து ஓடினோம்.
காடி, திக்குவாயர் கடை முன் வந்து நிற்க, 'யாரது இந்த நேரத்துல
டவுனு காடியில
வந்திருக்கிறது..?' என்று கடை வாசலில் நின்ற கூட்டம் எட்டிப்
பார்த்தது. காடியின், பின் கதவைத்
திறந்து கொண்டு முதலில் இறங்கி வந்தது ஓடிப்போன முனியாண்டிதான்.
அவருக்குப் பின்னால் அவள்.
எனக்குத் தாளாத ஆச்சர்யம். வழக்கமாய் வெறும் முழுக்கால்
சிலுவாரும், மேலே ஒரு சின்ன
துண்டுமாய் பார்த்தே பழகிப்போயிருந்த முனியாண்டி அங்கே முற்றிலும்
வேறு கோலத்தில் நின்று
கொண்டிருந்தார். பளபளத்த புது வேஷ்டி, மேலே வெள்ளைநிற முழுக்கைச்
சட்டை, கால்களில் புது
ஜப்பான் சிலிப்பர், நெற்றியில் அகல விபூதி சந்தனம், பக்கம்
நின்றவளை, அழகான சிவப்பு நிற புடவை
முழுவதும் போர்த்தி இருந்தது. அவளது சிவந்த நிறத்திற்கு ஏற்ப
கூடுதல் கவர்ச்சி மிளிர்ந்தது. நெற்றியில்
விபூதியும் கூந்தலில் மல்லிகைச் சரமும், கழுத்தில் புதிதாக ஒரு
மஞ்சள் கயிறு.
சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம் வாயடைத்துப்போனது.
கொஞ்சநேரம் யாரும் எதுவுமே
பேசவில்லை. கடைக்காரர்தான் முதலில் பேசியதாக நினைவு. அப்புறம்
கூட்டத்தில் கொஞ்சம் குசுகுசுப்பு.
யாரோ போய் பெரியானை கூட்டி வந்தார்கள். கடைக்காரர் அவரோடு ஏதோ
பேசினார். பெரியான்
தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தார். முகம் மட்டும் உள்ளே
சரியில்லை என்பதைக் காட்டியது.
பிறகு ஏதோ சமாதானமானவர்போல் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு
கூட்டிப் போனார். பத்து நாளில்,
அவர்களும் வேறு வீடு பார்த்துக் கொண்டு தொங்கல் லயத்துக்கு
மாறிப்போயிருந்தார்கள். எங்கள்
தோட்டத்து வெறும் முனியாண்டி அலாவுதின் முனியாண்டியாகவும், ஒரு
மலாய் முஸ்லிம் பெண்,
முனியம்மா ஆகிய ஒரு காதல் கதையும் இதுதான்.
அன்று தொடங்கி, ஒரு இந்துப் பெண்ணுக்குரிய சகல பண்பாட்டுக்
கூறுகளையும் வரித்துக்
கொண்டு, வாரிசுகள் யாருமற்று வாழ்ந்து- தனது கணவரின் இறப்பைத்
தொடர்ந்து, இந்து சம்பிரதாயப்படி
பூவையும் பொட்டையும் துறந்து- சமீபத்தில், அதே மண்ணில், பூட்டிய
வீட்டுக்குள்ளிருந்து, இரண்டு
நாள் கழிந்த நிலையில், வாசலைத் தாண்டி வெளிப்பட்ட துர்நீறும்
நாற்றமும்- எங்கள் தோட்டத்து
அலாவுதீன் மனைவி முனியம்மா மரித்த செய்தியை தோட்டத்துக்கு
அறிவித்தது.
முற்றிலும் ஒரு இந்து நீத்தார்கடன் சடங்கு சம்பிரதாயங்களுடன்
தோட்டமே கூடி நின்று
அவரை இடுகாட்டுக்கு கூட்டிச் சென்றபோது, அவர்களில் ஒருவனாக
கலந்திருந்த எனக்குள்- நாம்
இழந்தது இந்த மண்ணின் வாழ்க்கையை மட்டுமல்ல, இதனோடு இரண்டறக்
கலந்துவிட்டிருந்த இன்னும்
பல இனி என்றுமே மீட்டெடுக்க முடியாத- மனித உன்னதங்களையும்தான்
என்கிற வலிமிகுந்த உணர்வு
தொடர்ந்து இடுகாடு வரை வந்தது.
அந்தச் சிறு பிராயத்திலும் அதன் பின்னும்கூட அந்த தோட்டப்புற
மண்ணில் அநேக
திருமணங்களின் குதூகலத்தில் முங்கித் தளைத்து கொண்டாடிய நினைவுகள்
சேகரத்தில் உண்டு.
அவற்றை அவ்வப்போது ஒவ்வொன்றாக உருவி எடுத்து அசைபோட்டுப்
பார்ப்பதும் உண்டு. ஆனாலும்,
பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில்
லயத்துக் காட்டில் மெதுவாக
ஊர்ந்து வந்து, கடைமுன் நின்ற அந்த சின்னக் காடியிலிருந்து,
மாலையும் கழுத்துமாக இறங்கி,
முகத்தில் பூரிப்பு நர்த்தனமாட...
எங்கள் தோட்டத்து, முனியாண்டி என்ற அலாவுதீன் முனியாண்டியும், ...
என்ற
முனியம்மாவும் நின்ற அந்த ஆடம்பரமற்ற எளிமை திருமணக்கோலம்
மட்டும், பிற எல்லாத் திருமண
நினைவுகளையும் ஓரங்கட்டி, இன்றுவரை முதலிடத்தில் நிற்கிறது.
- வருவேன்
|
|