|
எனது
நோக்கமில்லா தேடலில்லா திரிதலில் 'சவ் கிட்' என்ற சிவப்பு விளக்கு
பிரதேசம் மறந்துவிட முடியாதபடிக்கு சில அனுபவங்களைத்
தந்திருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் 'சவ் கிட்'டின்
இருப்பையும் மாற்றத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஆனால் அதனை
யாவும் ஆண்டு வாரியாக விளக்கமளிக்க நான் பேனா-காகிதத்தோடு அலைந்து
திரிந்ததில்லை. அப்போதெல்லாம் முதுகில் எந்தவொரு பாரத்தையும்
சுமக்காமல் கைக்கடிகாரமோ குளிர்கண்ணாடியோ அணியாமல் பையில்
பணமில்லாமல் தேய்ந்து போன காலணியோடு வியர்வை நாற்ற உடையோடு அலைந்து
திரிந்திருக்கிறேன். 'ஏன் இப்படி இருந்தாய்?' என குறுஞ்செய்தி
வழியாக, தொலைப்பேசி வாயிலாக, நேரில் பார்த்து கேட்பதற்கு முன்பாக
சொல்லிவிடுகிறேன்; இனியாரும் இந்த கேள்வியை கேட்கக் கூடாது
என்பதற்காக. தொடர்ந்து வாசியுங்கள். பதில் ஏதோ ஒரு மூலையில்
அகப்படலாம்.
ராஜா லாவூட்டில் நுழைந்ததும் ஹோட்டல் மலாயாவை பார்ப்பீர்கள்.
அதற்கு அடுத்தது தான் 'சவ் கிட்டின்' இருதயப் பகுதி. முடிவடைவது
முன்னாள் கேத்தே - ஃபெடரல் தியேட்டர் வரை. அதன் இடது பக்க
வட்டாரத்தையும் வலது பக்க வட்டாரத்தையும் சேர்த்தே 'சவ் கிட்'
என்று அழைப்பார்கள்.
முதலாம் திரிதல்:
(கேத்தே தியேட்டரில் இந்திப்படங்கள் வெற்றிகரமாக ஓடிய காலம்)
ராஜா
லாவூட்டின் நெடுஞ்சாலை இடது-வலது பக்கங்களிலுள்ள எல்லா குறுக்குத்
தெருக்களிலும் சிறு சிறு கூட்டமாக ஜாதி-மத-இன-பால் வேறுபாடின்றி
போதைப் பித்தர்கள் குழுமியிருப்பார்கள். கடைகளின் பின்பக்க வாசலில்
உட்கார்ந்து கைகளிலும் கால்களிலும் உடையை கழற்றி கால் கங்குகளிலும்
ஊசி போட்டுக்கொள்ளும் காட்சிகள் அதிகமாகவே இருந்தன. போதை ஏறி மயக்க
நிலை வந்ததும் அங்கேயே படுத்துக் கொள்வோரும் உண்டு. பக்கத்தில்
சாக்கடை நாற்றமடிப்பதாக இருந்தாலும் குப்பைகள் கொட்டி
சிதறடிக்கப்பட்ட நிலையில் எலிகளும் பூனைகளும் பெரிய உடல்கொண்ட
ஈக்களும் கிளரிக்கொண்டும் மேய்ந்துக் கொண்டு இருப்பினும்
அவர்களுக்கு ஒரு கவலையும் இருந்ததில்லை. உணவு-குளியலில்
அக்கறையில்லை. எப்போதும் தன்னை மறந்த நிலையில் போதையோடு இருப்பதே
அவர்களின் நோக்கமாய் இருந்தது. நமது தண்ணீவாலா கைகளும்
சீனக்கடைகளில் தை சோங், தாலி மேரா, தங்கச்சி வகையறாக்களை வாங்கி
திறந்து மடக் மடக் கென்று குடித்து முடித்து ஆவேசமாக வீரம்
வந்ததுபோல கத்தி, தனக்கு கீழ்தான் மற்ற எல்லோரும் என்ற ரீதியில்
பெரிய தைக்கோ போல பேசி மிரட்டி கொஞ்ச தூரம் நடந்து திடீரென பொத்தென
விழுந்து அப்படியே உறங்கிவிடுவார்கள். அது, பஸ் நிறுத்துமிடமாக
இருக்கலாம்; கடைவீதி ஐந்தடியாக இருக்கலாம்; நாற்றமடிக்கும்
கால்வாயாக இருக்கலாம்.
ஒரு வாரத்திற்கு ஒரு முறை கிறிஸ்தவ சேவையாளர்கள் சிலர்
இம்மாதிரியான இடங்களுக்கு வலம் வருவார்கள். காயமுள்ள கால்களுக்கும்
சீழ் வழியும் கால்களுக்கும் மருந்திட்டு கட்டுப்போட்டு உணவுப்
பொட்டலங்களை வழங்கிச் செல்வர். போகும்போது கொஞ்சம்
தெளிவுள்ளவர்களிடம் இரக்கத்தோடும் கருணையோடும் பேசி அருகில் உள்ள
தங்கள் மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வர். அவர்களோடு
என்னையும் அழைத்துச் சென்றனர். ராஜா லாவூட்டிலுள்ள மோட்டார்
சைக்கிள் பழுதுப் பார்க்கும் கடைக்குப் பக்கத்தில் மஞ்சள் வர்ணம்
பூசப்பட்ட கட்டிட படிக்கட்டுகளில் ஏற வேண்டும். அங்கு முழுக்க சீன
சமூகத்து சேவையாளர்களே இருந்தனர். சமையல், சீனப் பெண். சீனக்
கடைகளில் கொடுக்கப்படும் மீ சூப் மங்கு போன்ற ஒன்றில்தான்
சோற்றையும் சூப்பையும் வேகவைத்த கீரைகளையும் மீன் பொறியலையும்
சேர்த்து வைத்து கொடுக்கிறார்கள். காலையில் பத்து மணி போல திறந்து,
வரக்கோப்பி அல்லது தே ஓ மற்றும் மேரி பிஸ்கட்களை கொடுத்து
உபசரிக்கிறார்கள். உடைகள் கொடுத்து உதவுகிறார்கள். போதை பித்தர்கள்
எல்லோரும் சிறிய இடையளவு கொண்டிருப்பதால் அநேகமாக எலலா அளவுகளும்
ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தோனேசிய மலாய் கிறிஸ்தவர் ஒருவர்
உணவுக்கு முன் ஒரு மணி நேரம் வேதத்தை உபதேசித்துக் கொண்டிருப்பார்.
உணவுக்கு பின் சுத்தம் செய்யப்பட்ட பின் மாலை தேநீர்
கொடுக்கப்படும்வரை அங்கு படுத்து உறங்கலாம். அங்கு தொடர்ந்து
போய்க்கொண்டிருந்தால் தங்களின் இரண்டு வருட மறுவாழ்வு மைய
பயிற்சிக்குள் அங்கம் வகிக்க மூளைச் சலவைச் செய்வார்கள். அந்த
வழியில் போய் திருந்தி வாழ்பவர்களும் உண்டு. மறுபடியும் போதைக்கு
அடிமையானவர்களும் உண்டு.
இப்படி,
கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் இவர்களுக்கு சேவை செய்வதைப் பார்த்து அரசு
தன் பங்கிற்கு ஒரு மையத்தையும் துன் மகாதீரின் மகள் மரினா மகாதீர்
தன் பங்கிற்கு ஒன்றும் ஸ்தாபித்துள்ளனர். இரண்டும் அந்த இருதய
பகுதிக்குள்தான் காண முடியும். ஒன்று நெடுஞ்சாலையோரம். மற்றொன்று
டோட்டோ கடை பக்கத்தில். இந்த இரண்டும் மலாய்க்காரர்களுக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கின்றன. கீழ் மட்டத்தில் இருக்கும்
சேவையாளர்களின் மனப்போக்காகக்கூட இருக்கலாம். இங்கு
போதைப்பித்தர்களைத் தவிர மனப்பிறழ்வு சார்ந்தவர்களும்
அரவாணியர்களும் வருவதுண்டு. போதைப் பொருளை வாங்குவதற்கு பணமே
இல்லாதவர்கள்தான், இங்கு இருக்கும்போது நட்பாகிப் போன நபரோடு
வெளியில் சென்று பெண்களிடமிருந்து பணப் பையை, கழுத்து நகையை
அபகரித்து ஓடுவதெல்லாம் நடக்கும். இதனை அனுமானத்தில் சொல்வதாக
நினைக்க வேண்டாம். சுற்றிக் கொண்டிருக்கும்போது கண்ட காட்சிகள்தான்
அவை. ஓடும்போது பொதுமக்களிடம் பிடிபட்டு தர்ம அடியில் கால் உடைந்து
போனவர்களையும் கண்டிருக்கிறேன். இந்த சம்பவங்களினால் போதைப்
பித்தர்களில் ஊசி போடுபவர்கள் மட்டுமே உள் அனுமதிக்கப்படுவர் என்று
எழுதிவைக்கப்பட்டாலும் மலாய்க்காரர்களை மட்டும் ஒரு கண்ணை சிமிட்டி
அனுமதித்து மற்றவரை நோக்கி 'ஸோரி பாங்! மிந்தா மஹாஃப் ய' என்று
சொல்லி வெளியேற்றுவர். கிறிஸ்தவ மையத்தில் சீனர்களுக்கு மட்டுமே
முக்கியத்துவம். இங்கேயும் அடிபட்டுப்போவது பாவம், தமிழர்கள்தான்!
இரண்டாம் திரிதல்:
(கேத்தே தியேட்டரில் 'குணா' படம் ஓடிய காலம்)
சீனர்களின் விபச்சார விடுதிகள் அதிகமாய் இருந்த காலகட்டம் இது.
சீன, தாய்லாந்து, சபா- சரவாக், இந்தோனேசியர் மற்றும் இந்தியர்
விலைமாதுகளே சீன முதலாளிமார்களுக்கு நிரந்தர விபச்சார
தொழிலாளிகளாகவும் அவர்களின் நம்பிக்கை பெற்ற பின் போதை மருந்துகளை-
பொருட்களை 'டீப்' அளவு பத்தோ பன்னிரெண்டோ வைத்திருக்கும்
நபர்களாகவும் அறைகளிலேயே இருப்பார்கள். உணவு வேளையின்போது சக
தொழிலாளியிடம் கொடுத்து விட்டு போக வேண்டும். 'டீப்'புகளுக்கான தனி
சம்பளம் அவர்கள் வீடு திரும்பும் போது தரப்படும். விலைமாதர்களில்
போதைப் பித்தர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. சீனர்களின்
பாதுகாப்பின் கீழ் உள்ளவர்களைத் தவிர ஒருவராக, தனியாக,
பாதையோரத்தில் நிற்கும் விலைமாதர்கள்தான் போதைப் பித்தர்கள்.
விடுதி அறைகளில் வேலை முடிவது விடியற்காலையில். அவர்களை
ஆட்டுவிக்கும் ஆண்நபர்கள் இருப்பதால் பலர், குறிப்பிட்ட
நேரத்திற்கெல்லாம் ஓடிப்போவதைக் காணலாம். இயற்கையாகவே சீன
முதலாளிமார்களிடம் விசுவாசமாக, நம்பிக்கைக்குரியவர்களாக, கூப்பிட்ட
நேரத்தில் ஒத்துழைப்பவர்களாக, எதிர்த்துப் பேசாதவர்களாக
இந்தோனேசியப் பெண்கள் இருந்ததால் அவர்கள் மட்டுமே கடைசிவரை
(விபச்சார விடுதிகள் மூடப்படும்வரை) சீனர்களால் நன்றாக
கவனிக்கப்பட்டார்கள். இதே சூழல்தான் காய்கறி, இறைச்சி மார்க்கெட்
வரை வியாபித்திருந்தது. இப்போதும் நீங்கள் அந்த மார்க்கெட்டுக்குப்
போனால் பெரும்பாலும் இந்தோனேசியர்களே இருப்பதற்கு அதுதான் காரணம்.
லோரோங் ஹஜி தாய்ப்பில் உள்ள மாலைச் சந்தைகளில் ஒவ்வொன்றாக பார்த்து
வருவீர்களென்றால் சீனர்கள் குறைவாகவும் இந்தோனேசியர்கள் மற்றும்
மலாய்காரர்கள் அதிகமாகிக் கொண்டு வருவதையும் காணலாம். சீனர்களின்
வியாபார ஆதிக்கம் கைநழுவி போனது அரசாங்கத்தின் இடைவிடாத
இடையூறுகளும் காரணம் எனலாம். மேலும், இந்தோனேசியாவிலிருந்து வரும்
கள்ளக்கடத்தல்களை ஒட்டுமொத்தமாக இங்கு கொண்டு வந்து குவிக்கும்
அளவுக்கு வாங்குபவர்களாகவும் விற்பவர்களாகவும் இந்தோனேசியர்கள்
முன்னேறியிருந்தனர். இது திடுதெப்பென்று நடந்த காரியமல்ல.
மலேசியாவிற்குள் நுழைந்த இந்தோனேசியர்கள் கட்டுமானப் பணிகளில்
அதிகமாக ஈடுபட்டனர். அதற்குரிய வேலைவாய்ப்புகள் அதிக காலியாக
இருந்ததும் ஒரு காரணம். மலேசியர்கள் அப்பணிகளில் சகல சலுகைகளையும்
எதிர்பார்த்தது, மோட்டார் கார் (லேண்டிரோ) வசதிகள் வேண்டுமென
கேட்டது, சீன முதிலாளிமார்கள் வேலையை முடிக்க பெருந்தொகையை
சுருட்டிக் கொள்வதை கேள்வி கேட்டது மற்றும் சீனர்களிடமேயுள்ள
இனவெறி, இன ஒற்றுமை, தன் இனத்தை மட்டும் விஷேசமாய் கவனித்துக்
கொள்வது ஆகியவை மலேசிய மலாய்காரர்களும் இந்தியர்களும் இந்தத்
துறையை விட்டு அகலும்படி ஆயிற்று. குறிப்பாக மலேசிய இந்தியர்கள்
இதில் ஒதுக்கப்பட்டார்கள் எனலாம். மலாய்காரர்கள் அரசாங்கத்
துறைகளில் நிரப்பப்பட்ட காலகட்டம் அது. கல்வியறிவு அற்ற
மலாய்காரர்கள் ஏதோ ஒரு சிலர் மட்டுமே கட்டுமானப் பணிகளில்
ஈடுபட்டனர்.
ஆக, கட்டுமானப்பணிகளில் ஆண்டுக்கணக்கில் இருந்து சம்பாதித்து
தங்கள் இனத்தாரை ஒவ்வொரு வாரமும் பார்க்கும் மையப் பகுதியாக சவ்
கிட்டை தேர்ந்தெடுத்தனர். (இப்போது கோத்தாராயாவின் இரு வரிசை
கடைகளும் மாடிகளும் ஒரு பட்ஜெட் ஹோட்டலும் ஒரு ரெஸ்டோரண்ட்டும்
நேப்பாளிகள் வசம் போனது போல)
ஒவ்வொரு வாரமும் போய் இங்கேயே கடைகளைப் பிடித்து கட்டிடங்களைப்
பிடித்து இருக்கிறார்கள். இவர்கள் இயல்பாகவே மதவுணர்வு
மேலிட்டவர்கள் என்பதால் பாஸ் கட்சி இவர்களை அரவணைத்துக் கொண்டது.
இவர்களின் ஆதரவையும் வேண்டி நின்றதால் பாரிசானும் போட்டிப்
போட்டுக் கொண்டு இவர்களுக்கு 'நிரந்தர குடிவாசி' எனும் அடையாள
அட்டையை தயார் செய்து கொடுத்தது. இதற்கு மொழியும் மதமும் பெரும்
பங்காற்றியது எனலாம்.
காலப்போக்கில் சீனர்களின் விபச்சார விடுதிகள் பெரும்பாலும்
மூடப்பட்டன. மலாய்க்கார- இந்தோனேசிய விபச்சார பெண்களின் தொடர்புள்ள
விடுதிகள் மட்டும் தப்பித்தன. இதை மேலோட்டமாக நீங்கள் நடந்துபோய்
பார்த்தால் தெரியாது.
மூன்றாம் திரிதல்:
(கேத்தே தியேட்டர் மூடப்பட்ட காலம்)
ஆப்பிரிக்க
நைஜிரியர்கள் ஆணும் பெண்ணுமாக 'கல்லூரி விசா' என்ற போர்வையில் சவ்
கிட்-டில் பட்ஜெட் ஹோட்டல்களில் நிரம்பிய பிறகு அடுக்குமாடிகளுக்கு
மாறிப் போனார்கள். சாதாராண ஃபிலேட்டிலும் அபாட்மண்டிலும் குடி
புகுந்தனர். இவர்களின் தலையாய தொழிலே கள்ள அமெரிக்க டாலரை
விநியோகிப்பது. சவ் கிட் இவர்களுக்கு குடியிருப்பாகவும்
பினாங்கு-ஜொகூர் வியாபார இடமாகவும் இருந்தன. போதை மருந்து
கடத்தல்களிலும் கைவைத்து கால் பதித்தவர்கள். இவர்களின் ஒட்டுறவு
சீனர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு ஆங்கில மொழியே காரணம்.
பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு சில சீனர்களோடு நைஜிரியர்களும்
கலந்து செயல்பட்டனர். இவர்களே மலேசிய நோட்டை கள்ள நோட்டாக
புரள்வதற்கு காரணமாக இருந்தவர்கள். அச்சடிக்கும் அல்லது
தயாரிக்கும் இடத்தை மட்டும் மிக மர்மமாக வைத்திருந்தவர்கள். உணவுக்
கடைகளில், இரவு கேளிக்கை மையங்களில், குடியிருப்பு நீச்சல்
குளங்களில் இவர்கள் இருவராக இருந்து பேசினாலே பயங்கர சத்தமாக
இருக்கும். சண்டைக்கு அஞ்சாத உடல்வாகு இருப்பதால் இயல்பாகவே
இவர்களுக்கு தனி மனித பாதுகாப்பு வேலைகள் சுலபமாக கிடைத்ததுண்டு.
சம்பளப் பணம் கொண்டுப் போகும் சீன முதலாளிமார்களுக்கு விசேஷ
பாதுகாவலர்களாக செயல்பட்டதுண்டு. ஒரு சீன முதலாளியின் தங்கைக்கு
பாதுகாப்பு கொடுக்கும் சமயத்தில் (படிகள் ஏறும்போது) அவரை கொலை
செய்து பணத்தோடு ஓடிய சம்பவம் சீனர்கள் மத்தியில் கடும் பீதியை
உண்டாக்கி விட்டது. அந்த சம்பவத்திலிருந்து நைஜிரியர்கள் மீது
ஊடகங்களின் வழி கடும் தாக்குதலை மேற்கொண்டனர் சீன சமூகத்தினர். பல
நைஜிரியர்கள் சவ் கிட்டை காலி செய்ய நேர்ந்தது. நம்பிக்கைக்கு
பாத்திரமாய் இருந்தவர்கள் மட்டும் அரசின் சோதனைகளிலிருந்து
காப்பாற்றப்பட்டனர். ஒரு சிலர் தற்காலிகமாய் வேறொரு இடத்தில்
மறைந்திருந்தனர். பின்னாளில் இவர்களோடு சுலபமாக உறவாடவும் வியாபார
ரீதியில் செயல்படவும் சிறு தமிழ் முதலாளிகளால் முடிந்தது. இந்த
தமிழ் பிஸ்தாக்களைப் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். இவர்கள்
இரண்டு விதமாக இருப்பார்கள். ஒன்று, போதைப்பொருளை தானும்
உபயோகிப்பவனாக இருப்பான். இவனுடைய பத்து விரல்களிலும் குண்டு
குண்டான மோதிரங்கள் இருக்கும். உங்கள் மூக்கைப் பார்த்து ஓங்கி ஒரு
குத்துவிட்டால் போதும், நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிடுவீர்கள்.
இன்னொரு விதத்தினர், பார்ப்பதற்கு அசல் போலீஸ் அதிகாரியாக, விஷேச
உளவு அதிகாரியாக அல்லது வாட்டசாட்டமான இராணுவ வீரனைப் போல
காணப்படுவார்கள். நடை, உடை, பாவனைகளில் அசத்துவார்கள். ஆங்கிலம்
நாக்கில் விளையாடும். சந்தேகத்திற்கு இடமின்றி நடந்து கொள்வார்கள்.
கொஞ்சம் சந்தேகம் வந்தாலே அவர்களின் கீழ் வேலை செய்வபவர்களை பணம்
கொடுத்து அனுப்பிவிடுவார்கள். இவர்களுக்கு கேங் தொடர்பும் உண்டு.
நைஜிரியர்களை அதில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். தன்னை
மிஞ்சிவிட்டால் என்ற பயம்தான்.
சவ் கிட்டில் நைஜிரியர்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. அவர்களின்
சந்திப்பு மையம் இப்போது வேறிடம். சவ் கிட் பொறுத்த வரை
அவர்களுக்கு ராசியில்லாத இடமாகிவிட்டது.
நான்காம் திரிதல்:
(கேத்தே தியேட்டர் கிடங்கான காலம்)
லோரோங் ஹஜி தாய்ப்பில் வரிசையாக இரு பக்கமுமாக துணிகள், நகவெட்டி-
சிறு சிறு கத்தி வகையறாக்கள், ஒரு கால்சட்டை மற்றும் சட்டையின்
விலை ஐந்து வெள்ளியிலிருந்து 10 வெள்ளி மட்டிலும் விற்கப்படும்.
அந்த லோரோங்கின் வலது பக்கமாக நடந்து சென்றால் சீனர்கள்
விற்பனையாளர்களாக இருப்பார்கள். இரண்டாம் குறுக்குத் தெரு பக்கமாக
இரண்டு பேர் நின்று 'சரக்கு இருக்கு பாங், புதுசு. இப்பத்தான்
சரவாக்கிலிருந்து இறங்கியிருக்கு. எடுக்காட்டினாக்கூட பரவாயில்லே
பாங். சும்மா பாருங்க, வாங்க'... என்று சொல்லிக்கொண்டே தோளில்
கைப்போட்டு இடது பக்கம் ஒருவரும் வலது பக்கம் ஒருவருமாக அலாக்காக
தூக்கிக்கொண்டு விறுவிறுவென்று அந்த சந்துப் பாதையில் நடந்து, ஒரு
விபச்சார விடுதியின் பின்பக்க வாசல் வழியாய் நுழைந்து, கதவை
இழுத்து மூடிக்கொள்வார்கள். இரண்டு பெண்களில் ஒருவரை
தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். ஐம்பது வெள்ளியை அவர்களாகவே
எடுத்துக் கொள்வார்கள். மீறிப் பேசினால் அறையும் உதையும்
கிடைக்கும். அப்படிப்பட்டவர்களிடம் கழுத்துச் சங்கிலி,
கைக்கடிகாரம், கைப்பேசி, ரொக்கப்பணம் யாவும் அபகரித்துவிட்டு
கத்தியைக் காட்டி பயமுறுத்தி விரட்டி விடுவார்கள். பயந்தவன்
என்றால் அவர்கள் பார்க்க பார்க்க அங்கிருக்கும் அவர்கள் காட்டும்
விலைமாதை உடலுறவு கொள்ளச் சொல்வார்கள். அவர்களுக்கு அதுவொரு இலவச
நீலப்படம். இப்படி அந்நிய நாட்டு தொழிலாளர்களும், வேறு
மாநிலத்துக்காரர்களும், தனியனாய் டிப்டோப்பாக வருபவர்களும்,
மிரட்சி விழிகளுடன் தென்படுபவர்களும் மானத்தோடு தங்கள் கற்பையும்
இழந்து நின்ற ஆண்கள் அநேகர்.
பக்கத்திலேயே
போலீஸ் சாவடி உண்டு. அவர்கள் இவர்களுக்கு ஆறுதல் கூறி
ஏற்றுக்கொள்ளும் விதமான பதில்களை அளித்து அனுப்பி வைப்பார்கள்.
குறுக்குத் தெருவில் இருக்கும் அந்தப் பையன்களுக்கு போதுமான வசூல்
வந்தவுடன் கொடுக்க வேண்டியர்களுக்கு கொடுத்து விட்டு இரண்டு அல்லது
மூன்று மாதங்களுக்கு இங்கு தலைவைத்து படுக்க மாட்டார்கள்.
அப்படித்தான் அவர்களுக்கு உத்தரவு. அவர்களின் இடத்திற்கு வேறு
இருவர் வருவர். அந்த டயலாக்கையே மலாயில் பேசி தூக்கிக் கொண்டு
போவர். இதில் கெட்டிக்காரர்கள், தலைமுடிக்கு டை அடித்து, மீசை
வழித்து, பட்டையான வெள்ளை சங்கிலி ஒன்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு
உடனே வேலைக்கு சேர்ந்து 'ஆஜர்' ஆகி தன் திருவிளையாடலை தொடங்குவர்.
இப்படித்தான் ஒருவனைப் பிடித்து அவனிடமிருந்து பணத்தைப் பிடுங்கி
அவனின் விந்தினை வேசியின் மடியில் விழச் செய்தனர். அவனின் அண்ணன்
இராணுவத்தில் இருக்கின்ற உயர் அதிகாரி. அன்றிரவே சாதாரண உடையில்
அப்படை இறங்கியது. பையன்களை அடித்த அடி, உங்கள் வீட்டு அடியா?
எங்கள் வீட்டு அடியா? பிண்ணியெடுத்துவிட்டார்கள். போலீஸ் சாவடி
அல்லோலக்கல்லோலப்பட்டது. ஒரு வருடம் கழித்து இன்னொரு பையனுக்கு
இப்படிப்பட்ட பிடுங்கல் அனுபவம். அவனின் அப்பா போலீஸ் துறையில்
உயர் பதவி வகிப்பவர். என்ன நடந்தது தெரியுமா? கொஞ்ச காலம்
கழித்துப் பார்த்தால் போலீஸ் சாவடியையே இழுத்து மூடிவிட்டார்கள்.
பிறகு, போலீஸ் சாவடி இருந்த அடையாளமே அங்கில்லாமல் போனது.
(பிற்காலத்தில் போலீஸுக்கே அங்கு பாதுகாப்பில்லை என்று ஊடகங்களில்
சொல்லி, பிறகு மறுதலித்து, பிறகு மழுப்பி....)
ஐந்தாம் திரிதல்:
(கேத்தே கிடங்கின் பக்கத்தில் பிதாமகன் பார்த்த காலம்)
ராஜா
லாவூட்டின் ஓரத்தில் பாஸ் கட்சியின் கட்டிடத்தைக் காணலாம்.
வாரத்தில் ஒரு நாள் அங்கே நீண்டதொரு வரிசையைக் கண்டால் நினைத்துக்
கொள்ளுங்கள், இலவச உணவுப் பொட்டலங்கள் தருகிறார்களென்று.
அந்நிகழ்ச்சி மாலை வேளையில் நடந்தேறும். இந்தோனேசியர் மார்க்கெட்
இருக்கும் பகுதியின் முன்னால் ஒரு பாக்கிஸ்தான் மஸ்ஜிட் இருக்கும்.
அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுகளிலும் உணவுப் பொட்டலம்
தரப்படும். சீக்கியர்களின் பெரிய ஆலயமும் அந்தப் பகுதியில் தான்
உண்டு. போதைப் பித்தர்களை உள்ளே அனுமதித்ததினால் வருகையாளர்களின்
விலையுயர்ந்த காலணிகள், கைப்பேசிகள், பணப்பைகள், குழந்தைகளின்
கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகள் யாவும் திருடப்பட்டுப்போனதால்
ஆலயத்தின் வெளியே ஒரு விளம்பரப் பலகைப்போல ஒன்று
நட்டப்பட்டிருந்தது. அதில் 'இங்கே போதைப் பித்தர்களுக்கும்
குடிகாரர்களுக்கும் அனுமதியில்லை' என்ற வாசகத்தைக் காணலாம்.
அப்படியே சாதாரணமாக போனாலும் உள் அனுமதிக்காமல் பின் வாசலில்
தீண்டத்தகாதவர்களுக்கு தருவது போல தனி பொட்டலத்தோடு காகித
குவளையில் சுக்கா போட்ட தேநீரை தருகிறார்கள். வருகிறவர்களின்
கையில் காப்பு இருக்கிறதா, ஹ'ந்தி பேசுகிறார்களா என உன்னிப்பாக
பார்த்து, பேசி சோதிக்கிறார்கள்.
அடகுக் கடைகளின் பக்கத்திலிருக்கும் 'தங்கம் அதிக விலைக்கு
வாங்கப்படும்' என்ற விளம்பரத்தோடு இருக்கும் கடைகள் பெரும்பாலானவை
மூடப்பட்டு விட்டன. அவை இரகசியத்தோடு மக்களை நாடி இரண்டாம்
மாடிகளுக்கோ மூன்றாம் மாடிகளுக்கோ அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
பெரும்பான்மையான போதைப் பித்தர்களும் வேலையில்லாதவர்களும்
குறுக்குச் சந்துகளில் போவோர் வருவோரிடம் வழிப்பறி நடத்தி
அப்பொருட்கள் யாவும் இந்த வகையான கடைகளில் விற்கப் படுவது
கண்டறியப்பட்டதினால் வந்த வினை. ஒரு சில சீன-மலாய் உணவுக் கடைகளில்
அம்மாதிரியானவை விற்கப்படுவதுண்டு. அதற்கென்றே ஒரு மேசை, ஒரு
நாற்காலியில் அனுதினமும் ஓர் உருவம் உட்கார்ந்திருக்கும். இந்த
வியாபாரத்திற்கு பொது விடுமுறை, விஷேச விடுமுறை என்று ஒன்றுமில்லை.
பாதிக்கப்படுவர்கள் அரசாங்க தொடர்பு உள்ளவர்கள் என்றால் கேட்ட ஒரு
மணி நேரத்திற்குள்ளாக பறிக்கப்பட்ட சங்கிலிகள் மேசை மீது
வைக்கப்படும். அத்தொடர்பு இல்லாதவர்களுக்கு பெரியதொரு நாமம் தான்!.
முதல் திரிதலுக்கு முன்பு:
(மறக்க நினைக்கும் தரிசனம்)
ஒரு நண்பரோடு கடிதப் பட்டுவாடாவை கூட்டுத் தொழிலாக செய்துக்
கொண்டிருந்த காலமது. இந்த மையப் பகுதியில் ஓர் ஒட்டுக்கடை
இருந்தது. (இப்போதும் இருக்கிறது) அழகான பெண்ணொருத்தியின்
கூந்தலில் பூச்சூடப்பட்டிருந்தது. கைகளில் அதிகமான கண்ணாடி
வளையல்கள். சேலையணிந்திருந்தாள். எனது மோட்டார் வண்டி அந்த
ஒட்டுக்கடையை அடைந்ததும் நின்றுவிட்டது. சும்மாவாவது தேநீரை கேட்டு
உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பு கவனித்ததைப்
போல.
ஒரு பெரிய அரவாணியர் குழுவே அங்கு குழுமியிருந்தது. அவர்களின்
நடவடிக்கைகளை நோட்டமிடும் நேரத்தில்தான் இப்படியொரு இடத்தில்
இப்படிப்பட்ட பெண்ணொருத்தி வேலை செய்கிறாளா என்ற பிரமிப்போடு ஓரக்
கண்ணால் அவளையும் கவனிக்க தொடங்கினேன். அவளின் நிழல் பட்டதே தவிர
வேறென்றும் கிடைக்காததால் தினமும் 'ஆஜர்' ஆக ஆரம்பித்தேன். ஒவ்வொரு
நாளும் ஒரு சேலையில் இருந்தாள். புதிதாய் வாங்கிய மலர்கள். சந்தன
வாசம். அவளின் புருவங்கள்- அவளின் கண்கள்- ஒல்லியான உடல் வாகு-
சராசரி உயரம். பித்தனாக்கியது என்னை. கடை திறப்பதற்கு முன்பும்
மூடிய பின்பும் என் இருப்பை அவள் கண்டும் காணாதவளாக இருந்தாள்.
இரண்டு வாரம் கழித்து என்னிடம் பேசும் வாய்ப்பு அவளுக்கு
வாய்த்தது. 'அம்மா' என்று அழைக்கக்கூடியவர் அன்று இல்லை என
உணர்ந்தேன்.
தமிழ் அரவாணியர்கள் மாலை மங்கும் நேரத்தில் அவ்விடம் வருகிறார்கள்.
நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கி
தொழிலை ஆரம்பிக்கிறார்கள். சில மலாய்-சீன அரவாணியர்களும் அங்கு
சாப்பிட வரும்போது 'அம்மா' இருந்தால் காலைத் தொட்டு வணங்கியப்
பிறகே உணவு உட்கொள்கிறார்கள்.
'அம்மா' ஒரு நாள் என் மேசையில் உட்கார்ந்து ஆங்கில கடிதத்தை நீட்டி
அர்த்தம் கேட்டார். அவருக்கு விளக்கி மேலும் அதன் சம்பந்தமான
விஷயத்தில் உதவியதால் மறுநாளிலிருந்து உணவு இலவசம் ஆனது. 'அம்மா'
நட்பாகியதால் மகள் நெருங்கி வந்தாள். பரஸ்பரம் அன்னியோன்னியமானப்
பிறகுதான் விளங்கியது. அவள் பெண் அல்லவென்று. அறுவை சிகிச்சையின்
மூலம் திருநங்கையானதை விளக்கிச் சொன்னாள். மிருதுவான சருமம். பெண்
குரல். அசல் மென்மை. மனம் திக்கென்றது. ஏற்றுக் கொள்ள மறுத்தது.
போவதை நிறுத்திக் கொண்டேன்.
|
|