|
கேப்டன்
விஜயகாந்த் திரைப்படம்.சிறுவயதில் விஜயகாந்தை தொலைத்துவிடுகிறார்
அவர் தந்தை.விஜயகாந்த் ஒரு ரௌடிகள் கூட்டத்தில் சேர்கிறார்.ஒரே
'ஜம்பில்' பறந்து பத்து பேரை உதைக்கவும்;ஒரே குத்தில் எதிரியை காடு
மலையெல்லாம் கடந்து போய் அடுத்த நாட்டில் பாஸ்போர்ட் விசா இன்றி
விழ வைக்கும் அளவுக்கு ஒரு 'சூப்பர் மேனாக' இருக்கிறார். ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர் தான் பிறந்த ஊருக்கு வர நேர்கிறது.அங்கே அந்த
ஊர் மக்கள் அத்தனை பேரையும் அடிமை படுத்தி வைத்திருக்கும்
வில்லனைப் பார்த்து பொங்கி எழுகிறார்.அவர் கண் சிவக்கிறது.
'ஏய்...'என ஆரம்பித்து நீண்ட வசனமெல்லாம் பேசுகிறார்.எலும்பும்
தோலுமாக இருக்கும் இருநூறு முன்னூறு அப்பாவி ஜனங்கள் விஜயகாந்த்
வசனத்துக்கு கைத்தட்டுகின்றனர்.வெரும் முப்பது பேர் கொண்ட
வில்லன்கள் கூட்டம் முன்னூறு பேரைக் கட்டுப்பாட்டுக்குள்
வத்திருந்தது குறித்து அவர்கள் யாரும் உணர்ந்தவர்களாக
இல்லை.பெற்றோரை சந்தித்தவுடன் ஒரு செண்டிமெண்டு பாடல்; சின்ன
வயதிலிருந்து தன் மாமனுக்காக ஏதோ நம்பிக்கையில் காத்திருக்கும்
கதாநாயகியுடன் கனவில் ஒரு டூயட்; விஜயகாந்த் பொங்கி எழும்போது
பின்னனியில் ஒரு புரட்சி(?) பாடல்;இறுதியில் விஜயகாந்த் ஒரு
பொட்டல் நிலத்தில் வில்லன்களுடன் மோதி அவர்களைக் கொல்லும்
காட்சி.சில வருடங்களுக்குப் பின்...சிறையிலிருந்து விடுதலையாகி அதே
அத்தை மகளுடன் கலர் கலராக சட்டைப்போட்டுக்கொண்டு ஆடுவார்
விஜயகாந்த்.ஏறக்குறைய இதே பாணியிலான திரைக்கதையில் நாம்
தமிழ்திரைப்பட கதாநாயகர்களான
ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு, விஜய், அஜித் என அனைவரையும்
பொருத்திப்பார்த்தால் ஏதோ ஒரு தமிழ் திரை 'காவியத்தில்' அவர்கள்
இதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது நினைவிற்கு
தட்டும்.இந்தப் பழைய பிளேட்டில் கொஞ்சம் 'கலை' ஊறுகாயையும்
'பிரம்பாண்ட' அப்பளத்தையும் வைத்து மறைத்தால் பல சினிமா
விமர்சகர்கள் உலக திரைப்படத்திற்கு நிகரானது என சப்புகொட்டும்
'நான் கடவுள்' திரைப்படம் கிடைக்கும்.
இந்தத் திரைப்படம் குறித்து நான் ஏற்கனவே 'அஞ்சடி' அகப்பக்கத்தில்
(http://anjady.blogspot.com) எழுதி பலரிடம் வாங்கி
கட்டிக்கொண்டாலும் ஏன் இந்தத் திரைப்படம் குறித்து மட்டும்
சாதகமாகவும் பாதகமாகவும் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள்
எழுந்த வண்ணம் உள்ளன என்பது முக்கியமான கேள்வி.
பாலா எனும் ஓர் ஆளுமையின் மீதுள்ள கவர்ச்சி, இந்தப்படத்தை ஒரு
ரசிகன் அணுகும் விதத்தை மாற்றியிருக்கலாம்; ஜெயமோகனின் ஆளுமையின்
மீதுள்ள நம்பிக்கை இப்படத்தின் அத்தனை பலவீனங்களுக்கும் வேறொரு
சார்பான தெளிவினை ஏற்படுத்தியிருக்கலாம், தனக்கு நடிக்க வாய்ப்பு
கிடைத்தால் பேரரசுவின் திரைப்படத்தையும் உலகத்தரமானது என சொல்லத்
தயங்காத சாருநிவேதிதாவின் 'வாக்கு' மீது நம்பிக்கை இருக்கலாம்,
புரியவில்லை என்றால் முட்டாள் என சொல்லிவிடுவார்களோ என சிலர்
கோணங்கியின் கதைகளைச் சுமந்து திரிவது போல இந்தப்படத்தையும்
அணுகியிருக்கலாம். இதுபோன்ற உபரி காரணங்கள் அல்லாமல் கதையில்
ஆன்மாவாக இருக்கும் உடல் குறையுள்ளவர்களின் வாழ்வும் அவர்களின்
கொண்டாட்டங்களும் இந்தப் பழைய பிளேடை மறைத்திருக்கலாம்.
எழுத்தின் மூலம் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலில் வரும்
உருப்படிகளின் வாழ்வு தந்த அதிர்வலைகள் பாலாவின் காட்சி
படிமங்களில் கிடைக்காதபோதும் நீண்ட அவர் உழைப்பிற்கு நாம் மரியாதை
செலுத்தவே வேண்டும். ஆயினும் மீண்டும் மீண்டும் ஹீரோ
இசத்தைக்காட்டும் அவர் திரைப்படங்கள் எப்படி 'உலகத் தரமானது'என
விமர்சகர்களால் சொல்லப்படுகின்றது என்பது என்னைப்போன்ற சாதாரண
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.இது போன்ற
ஆச்சரியங்கள் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு.அதில் மிக முக்கியமாக
இந்நாட்டின் நல்ல ஜனரஞ்சகப் படைப்புகளான ரெ.கார்த்திகேசுவின்
நாவல்கள் (வானத்து வேலிகள், தேடியிருந்த தருணங்கள், காதலினால்
அல்ல,சூதாட்டம் ஆடும் காலம்) ஒரு தீவிர அல்லது
நவீனத்தன்மைக்கொண்டதாக நம்ம ஊர் விமர்சகர்களால் புகழப்படும்போது
ஏற்பட்டுவிடுகிறது. மற்றது 'கானாவின்' திரைப்படங்கள் இந்நாட்டில்
நல்ல நகைச்சுவை நிறைந்ததாக நம்பப்படும்போது.
ஓர் எழுத்தாளனின் வாசிப்பில் இருக்கும் தீவிரம் அவனது படைப்பில்
ஒத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுந்தரராமசாமி
'பிச்சமூர்த்தி படைப்புலகம்' எனும் விமர்சன நூலில் கவிதை குறித்து
முன்வைக்கும் கருத்து கள் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானது
என கருதுகிறேன். ஒரு கவிதையை அணுக வேண்டிய விதம் அந்த நூலைப்படித்த
போதுதான் எனக்கு ஓரளவு கிடைத்தது. வாசிப்பைத் தீவிரமாக்கி
சுந்தரராமசமியின் கவிதைகளை (பசுவையா கவிதைகள்) வாசிக்கும் போது
அவரே கவிதை குறித்தான தன் கருத்து களுக்கு கொஞ்சமும் சம்பந்தம்
இல்லாமல் பல கவிதைகளைப் புனைந்துள்ளது பிறகு புரிந்தது.
பொருட்படுத்தும் படியாக (என் வாசிப்புக்கு)சில கவிதைகளே இருந்தன.
ஆயினும் தொடர்ந்த தனது உரைகளாலும் தீவிர விமர்சனங்களாலும் சுந்தர
ராமசாமி நவீன கவிதைகளில் மிக முக்கியமானவர் போன்ற தோற்றம்
ஏற்பட்டிருக்கிறது.இது போன்ற அசம்பாவிதங்கள் பல
எழுத்தாளர்களுக்கும் ஏற்படுவது உண்டு. தொடர்ந்து பல ஆண்டுகளாக பல
இலக்கிய நூல்களுக்கு நீதிபதியாகவும் விமர்சகராகவும் கருத்துரை
ஆற்றுபவராகவும் இருக்கும் முனைவர்.ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள்
நிச்சயம் சகல போற்றுதலுக்கு உரியதாக இருக்கும் என வாசகன் எண்ணுவது
இயல்பு. இந்த மாய நம்பிக்கைகளை விலக்கிவிட்டு நேர்மையாக வாசிக்கும்
போது மட்டுமே அப்பிரதி கொண்டுள்ள உண்மையான பலம் பலவீனத்தை கண்டடைய
முடிகிறது.
நிற்க,இங்கு கானாவின் படத்தைப்பற்றி கொஞ்சம் பேச வேண்டியுள்ளது.
மிக மட்டமான நகைச்சுவைகளை வழங்கி வரும் 'கானாவின்' சி.டிகளை
தைப்பூசத்தில் குடும்ப பெண்கள் கூட்டம் கூட்டமாக வாங்கி
குடும்பத்தோடு பார்த்து சிரிக்கப்போறோம் எனும்போது ஆச்சரியம்
ஏற்பட்டு விடுகிறது.
'நான் கடவுள்' திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம் பிழைப்பு
நடத்த பலவீனமானவர்களை பலியிடுவதுபோல்தான் நிஜத்தில் செய்கிறார்
கானா.அவர் நகைச்சுவை திரைப்படத்தில்(?) கண்டிப்பாக ஒரு உடல்
பெருத்த பெண்மணி இருப்பார்(அவருக்கு மலேசிய சிம்ரன் என்ற பெயர்
வேறு சூட்டி கிண்டல்).அவரை கானா 'கிரேன்' கொண்டு தூக்குவார்,
அந்தப்பெண் கானாவை திருமணம் செய்ய விரும்பினால் பேயைக்கண்டது போல
பயந்து ஓடுவார், இரட்டை வசனங்களில் அந்தப்பெண்ணின் உடல் பருமனை
கிண்டல் செய்வார்.(நாம் நகைச்சுவை என சிரிப்போம்).மற்றொரு
கதாப்பாத்திரமாக கானாவுடன் எப்போதும் வளம் வருவார் நண்டு
ரமேஷ்.அவர் குள்ளமான உருவத்தினர்.போகிற போக்கில் அவரது உடல்
குறையையும் கிண்டல் செய்வார் கானா.(நாம் நகைச்சுவை என
சிரிப்போம்).மிக முக்கியமாக, ஒன்று அல்லது இரண்டு திருநங்கைகள்
இருப்பார்கள்.அவர்கள் மேல் எப்போதும் கானா காரி உமிழ்ந்து கொண்டே
இருப்பார்.அந்த திருநங்கையர்கள் கானாவிடம் நெருங்கி
வருவார்கள்.கானா அருவருப்போடு ஓடி ஒளிவார்.திருநங்கையர்கள் உடல்
சுகத்துக்கு அலைபவர்கள் போல தனது படம் முழுக்கவும்
காட்டியிருப்பார்.இரட்டை அர்த்த வசனங்களை அள்ளி தெளித்திருப்பார்
(நாம் நகைச்சுவை என சிரிப்போம்.)ஆக மொத்தத்தில் உடல்
குறையுள்ளவர்கள் அல்லது மனித உடல் கூறிலிருந்து சற்று
வித்தியாசப்பட்டவர்கள் எல்லாம் இந்த பூமிப்பந்தில் நகைப்புக்கும்
கேலிக்கும் உரியவர்கள் என்பதுதான் கானாவின் அரசியல்.அதையெல்லாம்
நாம் பொருட்படுத்தக்கூடாது.கண்டிப்பாக அந்த சி.டியை வாங்கி ஆதரவு
தர வேண்டும்.இல்லாவிட்டால் நாம் உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு
தரவில்லை என பொருள்.(கெட்ட வார்த்தை பேசினால் 'வல்லினம்'புத்தக
பதிப்புரிமை மீட்டுக்கொள்ளப்படும் என்பதால் யோசிக்க
வேண்டியுள்ளது.)
இப்போது மீண்டும் 'நான் கடவுளுக்கு' வருவோம். ஒரு கம்பத்தில்
அரைக்கால் சட்டையுடன் திரிந்து வாய்ப்புகிடைத்தால் தட்டான்
சூத்தில் நூல்கட்டி பட்டம் விட்ட எனக்கு 'கலை மற்றும் கடவுள்'
பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. இவை இரண்டும் மனிதனின்
தேவைக்கேற்ப இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதால் இந்த இரண்டு
வார்த்தைகளை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் தப்பிவிடலாம்.
கானா வைத்துள்ள பிளேட்டையும் பாலாவின் பிளேட்டையும் ஒப்பிட்டால்
இரண்டும் ஏதோ ஒரு வகையில் பொருந்தி வருவதை உணரமுடிகிறது. கானா
ரசிகனைக் கவர எப்படி உடல் குறையுள்ள மனிதர்களைத் தேர்வு செய்து
பணம் பண்ணுகிறாரோ அதே போலவே பாலாவும் தனக்கே உரிய
கெட்டிக்காரத்தனத்துடன் கதாப்பாத்திரங்களைத் தேர்வு
செய்கிறார்.இவர் படத்தில் மனப்பிறழ்வு உள்ள சீயானும்,
சுடுகாட்டிலேயே பிறந்து மனிதனை அறியாமல் சிரிக்கத்தெரியாமல்
இருக்கின்ற வெட்டியானும், நரமாமிசம் உண்ணும் மனிதர்களுடன் வாழ்ந்து
தன்னைக் கடவுளாக எண்ணும் சித்தனும்தான் கதாநாயகர்கள்.இதுபோன்ற
பாத்திர வார்ப்பினால் எளிய ரசிகனைக் கவர்தல் சுலபம் காரணம் நாம்
பக்கத்தில் பேருந்து சீட்டில் அமர்ந்திருப்பவரையும் ,
மருத்துவமனையில் நமக்கு முன் வரிசையில் எண்களுக்காகக்
காத்திருப்பவரையும், ஏதாவது நன்கொடை கேட்டு வீட்டின் முன்
நிற்பவரையும் , புத்தகப்பையை சுமந்து செல்லும் மாணவனையும் என்றுமே
ஒரு திரைப்படத்தின் முக்கிய பாத்திரமாக நாம் எண்ணிக்கூட
பார்ப்பதில்லை.நமக்குத் தேவை விசித்திர மனிதர்கள்.அதாவது
உள்ளுசிலுவாரை வெளியில் போட்டுக்கொண்டு பறக்கும் ஒரு 'சூப்பர்
மேன்.'
இந்தப் படத்தில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது
சிறைச்சாலைக்காட்சி.தனது அகப்பக்கத்தில் ஜெயமோகன் அந்தக் காட்சி
அமைப்பில் தமது பங்களிப்பு அதிகம் இருப்பது போல கூறுகிறார்.இதில்
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.எம்.ஜி.ஆரையும் சிவாஜிகணேசனையும்
சிறையில் ஆடவிடுவது ஜெயமோகனுக்கு விருப்பமான
ஒன்றுதான்.'எம்.ஜி.ஆர்' மற்றும் 'சிவாஜி'தொடர்பாக அவர் செய்த
கிண்டலுக்கு பலர் கண்டனம் சொல்லிவிட்டதால் இப்போது அது
வேண்டாம்.ஆயினும் இந்தக்காட்சியைப் பார்க்கும் போது உபரியாய் வந்து
சேர்ந்துவிடும் அந்தக்கிண்டலின் தொணி எரிச்சலை
மூட்டுகிறது.எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு உட்பட
வேண்டியவர்தான்.ஆனால் சூடுபட்டு தன் குரலை இழந்த ஒரு மனிதரின்
உச்சரிப்பை சில வசனங்களின் மூலம் கேலி செய்த மலினமான நகைசுவை
மறைவதற்குள் மீண்டும் ஒரு கிண்டலை முன்வைக்கிறார் ஜெயமோகன்.
இந்தப்படத்திலும்(சிறைச்சாலை காட்சியில்) ஓர் அரவாணி
வருகிறார்.கானா செய்தது போல இரட்டை வசனங்கள் எல்லாம் பேசி அவரை
அசிங்கப்படுத்தவில்லை பாலா .பாலா கெட்டிக்காரர்.பிதாமகனில்
சம்பந்தமே இல்லாமல் சிம்ரனை ஆடவிட்டு அழகு பார்த்த பாலா இம்முறை
ஏறக்குறைய அதே போன்று பழைய பாடல்களுக்கு அவரை சிறையில் ஆட
விடுகிறார்.உதைப்பட விடுகிறார்.இறுதியில் சிறையில் சிறுநீர்
கழித்து அதை தனது உடையால் துடைக்கவும் வைக்கிறார்.
இந்தக் காட்சி குறித்து என் இலக்கிய நண்பர் ஒருவரிடம்
பேசிக்கொண்டிருக்கும் போது அவர் அதை 'யதார்த்தம்' என்றார்.எனக்கு
ப்ரெக்ட் கூறியது நினைவிற்கு வந்தது.'மரத்திலிருந்து விழும் பழம்
இயல்பானது, எதார்த்தமானது எனும் பரிச்சய உணர்வோடு அணுகினால்
ஈர்ப்பு விதியை நாம் உணர முடியாது.ஈர்ப்பு விதியை உணராத வரையில்
நாம் அதன் பிடியிலிருந்து தப்ப இயலாது'.நாம் கொண்டிருக்கிற பரிச்சய
உணர்வானது எந்த வித கேள்வியும் இன்றி நம்மை ஒன்றை ஏற்றுக்கொள்ள
வைக்கிறது.அதிகம் சிந்திக்கத் தேவையில்லாத உடைத்துப்பார்க்க
அவசியம் இல்லாத ஒரு வகை பாது காப்பு உணர்வை ஊட்டுவதன் மூலம்
எதார்த்தத்தை அதன் வன்முறையோடு ஏற்றுக்கொள்ள நாம் பழகியுள்ளோம்.
'ஏழாம் உலகத்தில்' ஜெயமோகன் காட்டும் மனிதர்களின் வாழ்வை மையமாக
எடுத்து அதில் தனது எல்லாப் படத்திலும் வரக்கூடிய பலம்
மிகுந்த...உறுதியான தோள்களைக்கொண்ட...வீரம் உள்ள ஓர் ஆண்மகனை
மையப்படுத்தி; அவனை பிடிவாதமான ஆண்மையோடு பாலா மறுபடியும் வலம் வர
வைத்திருக்கிறார். அதன் மூலம் அவர் மீண்டும் நமக்குக்காட்டுவது
பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன அதே ஹீரோ இசத்தைதான்.
|
|