வல்லினத்தில் தேடுதல்
எழுத்துரு உதவி / Tamil Font Help |
இதழ் 8
ஜுன் - ஆகஸ்ட் 2009 |
முகப்பு |
உள்ளடக்கம் |
|
தொடர்
எனது நங்கூரங்கள் (1)
இளைய அப்துல்லாஹ்- லண்டன்
|
|
|
|
|
|
எனக்கு மிக
விருப்பமான இலங்கை கவிஞர் டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன். பழகுவதற்கு
மிகவும் இனிமையானவர். மலர்ந்த முகத்துடன் பேசும் எழுத்தாளர்களுள்
டொக்டரும் ஒருவர். உண்மையில் மற்ற மனிதர்களை கடுகடுப்பு இல்லாமல்
நேசிப்பது என்பது ஒரு கலைதான். அதுவும் ஒன்றிரண்டு நூல்கள்
போட்டுவிட்டால் தானாகவே ஒரு அதிர்வு வந்து விடுகிறதே ஏன்?
கவிஞரோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஹமது நபிகளாரைப் பற்றி
அவரது முழு வாழ்க்கை வரலாறு பற்றி காப்பியம் பாட அல்லது வரலாறு
எழுத தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதும் பயப்படுகிறார்கள்
என்றார்.
என்ன பயம் என்றேன்.
எல்லாம் மௌத்தாகி (மரணமாகி) விடுவோமோ என்கின்ற பயம்தான். என்றார்.
முழுமையாக நபிகளாரின் வாழ்க்கை வரலாறு திருநபி காவியம் எழுதிவிட்டு
இந்தா உயிரோடு தானே இருக்கிறீர்கள் என்றேன்.
ஒரு பெருங்கதையை சொன்னார் டொக்டர். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள்
தமிழர்கள் எழுத்தாளர்களில் பெரும்பாலும் நபி வரலாறு எழுதினால்
மௌத்தாய்ப் போய்விடுவார்கள் என்பதற்கு உமறுப்புலவரில் இருந்து
ஆதாரங்களை கொண்டு வருகிறார்களாம்.
சீறாப்புராணத்தை உமறுப்புலவர் எழுதினார். ஆனால் முடிக்கவில்லை.
சீறாப்புராணம் ஒரு பெரும் இஸ்லாமியப் பதிவாகவே காணப்படுகிறது.
இடையில் உமறுப்புலவர் விட்டு விட்டதற்கு என்ன காரணமோ தெரியாது.
உமறுப்புலவர் மௌத்தாகி விட்டார். சீறாப்புராணம் முடிவடையவில்லை.
குஞ்சு மூசுப்புலவர் சின்ன சீறா எழுதித்தான் சீறாப்புராணம் பின்னர்
பூரணப்படுத்தப்பட்டது.
பிரபல எழுத்தாளர் அப்துல் ரஹீம் ரசூலுல்லாவின் காவியம் எழுதி
முடித்ததன் பின்பு வேறெதுவும் அவர் எழுதவில்லை. மிக
விறுவிறுப்பாகவும் ஆர்வமாகவும் பேசப்பட்டவர் அப்துர் ரஹீம். அவரது
பல நூல்கள் இன்னும் தமிழ் மக்களாலும் மிகவும் விரும்பப்படுவன.
'மகனே கேள்!' என்பது அவரின் பிரபலமான நூலாகும்.
நபி வரலாறு எழுதியதன் பின்பு அவரது ஒரு கை விளங்காமல் போய்விட்டது.
கவிஞர் மேத்தா புதுக்கவிதையில் நாயக காவியம் எழுதி அரைவாசியில்
இருக்கிறது பல ஆண்டுகளாக மரண பயத்தின் காரணமாக.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் எழுதுவதாக சொன்னார் இறைதுதியோடு காவியம்
அப்படியே இருக்கிறது கை வைக்காமல் பயம். நாயகம் எங்கள் தாயகம்
என்று வலம்புரி ஜோன் எழுதப்போனார் மௌத்தாகி விட்டார்.
இப்படி நபிகள் காவியமும் மரண அச்சமுமாக எழுத்தாளர்கள்
இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
கவிஞர் ஜின்னாஹ்வின் வீட்டுக்கு வந்த அறிஞர் சேமுஹமது அலி
சொன்னாராம் திரு நபி காவியம் இப்பொழுது எழுத வேண்டாம்
எழுதியவரெல்லாம் மரணமாகிவிட்டனர் என்று.
தமிழ் நாட்டில் திருநபி காவியம் வெளியிட இருந்த நேரத்தில் கவிஞரின்
தாயார் இங்கே இலங்கையில் மௌத்தாகிவிட்டாராம்.
அங்கு மேடையில் பேசியவர்கள் சொன்னார்களாம் நபி காவியம் பாடி
முடித்த ஜின்னாஹ்வுக்கு பதிலாக அவரின் உம்மா காலமாகிவிட்டார்
என்று.
7.9.2006 அன்று ஒரு சஞ்சிகைக்காக கவிஞர் ஜின்னாஹ் எழுதிய கவிதை
இது.
பொன்னை பொருளைப் பிறிதெனாதத்
தாமும் பெற நினையாள்
தன்னிடம் உள்ளவை தந்திடு
வாள் உயிர் தானெனினும்
அன்னை அளிப்பாள் அணையிடாள்
பொங்கிடும் அன்மினுக்கும்
என்னே மகர்கொள் இறையருள்
தாயென்னுருவினிலே
8ம் திகதி தாயாரின் மரணம். ஆனால் கவிஞர் ஜின்னாஹ் இலட்சியக்
காவியத்தை வெளியிட்டுவிட்டார். மரணம் என்பது வாழ்வுக்கும்
சாவுக்குமிடையிலான ஒரு நூலேணிதானே. ஆனால் நபிகளாரின் காவியம் எழுதி
முடித்தால் மரணம் வரும் என்று நம்புவது ஹராமாகும்.
***
இறந்ததன் பின்பு அவரோடு பழகாமல் விட்டு விட்டோமே எனும் கவலை தொக்கி
நிற்குமே.
இந்தக் கவலை ஏ.ஜே.எனும் ஆளுமை தொடர்பாக எனக்கு இருக்கிறது.
ஏ.ஜேவுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் மு.நித்தியானந்தன். அவரைப்
பெரிதும் இன்னும் மனதிருத்தி வாழ்பவர்.
நான் லண்டனில் இருக்கும் போதெல்லாம் கொழும்பு போய் கட்டாயம்
ஏ.ஜெ.கனகரட்னாவை ஒரு பேட்டி காணும்படி நித்தி சொல்லிக்
கொண்டிருந்தார்.
கொழும்பு வந்தவுடன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருந்த வேலைகளுக்கு
மத்தியில் ஏ.ஜெ.கனகரட்னாவுடன் ஒரு பேட்டிக்கு நாள் குறித்து
விட்டேன். நித்திக்கு சொன்ன போது அவர் மகிழ்ந்துதான் போனார்.
எழுத்தாளர் கே.கணேஷ் காலமாவதற்கு முன்பு எமது தொலைக்காட்சிக்காக
டொக்டர் தி.ஞானசேகரன் ஒரு செவ்வியை கண்டிருந்தார்.
அடிக்கடி அதனை எடுத்துப்பார்ப்பேன். அதுதான் கே.கணேஷ் அவர்கள்
இறுதியாக அதிகம் பேசியது என்று நினைக்கிறேன்.
ஏ.ஜெ.கனகரட்னாவுடனான பேட்டி முற்றுச் செய்யப்பட்ட திகதியில் அவரை
தொலைபேசியில் அழைத்து கேமரா சாமான்களுடன் வரப் போகிறேன் என்று
சொல்வதற்காக தொலைபேசியை எடுத்தேன்.
ஆனால் மறுமுனையில் இருந்து அவர் கடும் சுகவீனம் காரணமாக
வைத்தியசாலையில் இருக்கிறார் என்ற பதில்தான் வந்தது. மிகவும்
கவலையாக இருந்தது. நான் மிகவும் தாமதமாகி விட்டேன் என்பதை
உணர்ந்தேன்.
உடனடியாக நான் சார்ந்தத் தொலைக்காட்சிக்கு செய்தியை அனுப்பி
ஒளிப்பரப்ப செய்து விட்டு ஏ.ஜேயின் பூதவுடலைத்தான் இறுதியாக
தரிசிக்கவும் படம் பிடிக்கவும் முடிந்தது என்னால்.
நித்தி சொன்னார் தனது ஆத்ம நண்பனின் பூதவுடலை எமது
தொலைக்காட்சியில் பார்த்து விட்டு எழும்பி நின்று விட்டேன் என்று.
ஏ.ஜே ஒரு நிறைவானவர். அவரோடு பழகிய எல்லோரும் சொல்வார்கள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே. உடன் கடமையாற்றிய
மு.நித்தியானந்தன் இவரைப் பற்றி சொல்லும் பொழுது சொல்வார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அகடமிக் கரியறிஸ்ட்களாக இருந்த
அவலச் சூழலில் ஏ.ஜே. ஒரு மிஸ்பிட் ஆக இருந்தார். ஆனால் அவரே
பல்கலைக்கழகத்தின் வறண்ட வெம்மையில் எங்களுக்கு குளிர் தரும்
நிழலாக இருந்திருக்கிறார்.
இன்னுமொன்றையும் நித்தி என்னிடம் சொன்னார். ஏ.ஜே லத்தீன் மொழியில்
மிகச் சிறந்த பாண்டித்தியம் பெற்ற ஒரே ஒருவராக இலங்கையில்
இருந்தாராம்.
லத்தீன் மொழி பல்கலைக்கழக புகுமுக பரீட்சையில் அவர் நூற்றுக்கு
நூறு மார்க் எடுத்தாராம். மாய்ந்து மாய்ந்து கேள்வி செய்த ஆசிரியரே
மலைத்துவிட்டாராம். எப்படி என்று.
ஏ.ஜே.அவரிடம் சொன்னாராம் 'உதெல்லாம் நான் ஏலவே படித்துவிட்டேன்'.
உண்மையில் ஏ.ஜே. மலைப்புக்குரியவர் தான்.
ஏ.ஜே. இறந்து ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் நினைவில் அவரது
எழுத்துக்களோடு நிற்கிறார். அண்மையில் ஏஜேயின் கட்டுரை தொகுப்பு
ஒன்றை லண்டனில் வெளியிட்டார்கள் அவரது நண்பர்கள்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
முகப்பு |
உள்ளடக்கம் |
|
|
|
|
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2009. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768
|