|
நூல் : அவன்-அது-அவள்
ஆசிரியர் : யெஸ்.பாலபாரதி
நயம் : சமூக நாவல்
வெளியீடு : தோழமை பதிப்பகம்
பக்கம் : 184
தாய்லாந்தில்
நடந்த ஒரு சம்பவம். ஒரு ஆண் பாலியல் மாற்றம் செய்துக்கொண்டான்.
காலம் கடந்தது. பெண்ணாக வாழ்ந்தது வெறுத்துப் போனது அவளுக்கு. 20
வருடம் கழித்து மருத்துவரை அணுகி கேட்டாளாம். மீண்டும் தனக்கு ஆண்
குறி வேண்டும் என்று.
பால் மாற்றம் தற்காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் விடயமாக
இருக்கிறது. பிறப்பில் ஆணாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெண்ணாக
மாற்றிக்கொள்ள விரும்பம் கொள்கிறார். இயற்கையாகவே பெண்மையின்
குணங்கள் அவரிடம் இருக்கிறது. உள்ளத்தால் பெண்ணான அவர் உடலால்
பெண்ணாக மாற்றம் கொள்ள விரும்புகிறார். இவர்களை திருநங்கையர்கள் என
நாம் குறிப்பிடுகிறோம்.
உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட
கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து
நமது விருப்பப்படி வாழ்வதா? நமது வாழ்க்கை நமது விருப்பப்படி
இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை
மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.
ஓர் ஆண் பருவம் எய்துகிறான். தனக்கு ஊற்றெடுக்கும் உணர்வுகளை
அறிகிறான். தன்னை ஓர் ஆணாக கருத மறுக்கிறான். இந்நாவலின் நாயகி
கோமதி. கோமதியின் ஆரம்ப கால வாழ்க்கை மாறுபட்டது.
கோபி பிறப்பால் ஓர் ஆண். ஆணாக வளர்க்கப்படுகிறான். அவனுக்குள்
உண்டாகும் உணர்வு மாற்றங்களால் தன்னைப் பெண்ணாக கருதுகிறான்.
கோபியின் உணர்வு சித்தரிப்புகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார்
ஆசிரியர் என்றே கூற வேண்டும்.
குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம் தமது தமக்கையின் உடைகளை
அணிந்து கொண்டு 'பூ பூக்கும் ஓசை' பாடலுக்கு ஆடும் போதும்,
அண்ணனிடம் அடி வாங்கும் போதும், பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய்
கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள்
இலகுவாக மனதில் பதிகிறது.
'பார்த்திங்களா என்கிட்டயே மல்லுக்கு நிக்குது இது கொஞ்சம் திமிர்
பிடித்த பேய் தான். இதன் போக்கில போய் சமாளிக்க வேண்டும்' எனச்
சொல்லும் போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே
இருக்கிறது.
தான் விரும்பும் வாழ்க்கையை வாழ நினைக்கிறான் கோபி. எதிர்பாரா
விதமாக அதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. குடும்பம், சுற்றம் என
அனைத்தையும் தூக்கியெறிகிறான். தனது புதிய வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கிறான். அவன் கோமதி எனும் பெயரில் மாற்றம்
காண்கிறாள்.
திருநங்கைகளின் வாழ்வு முறை. அவர்கள் பேச்சு வழக்கு.
அவர்களுக்குள்ளான பிரச்சனைகள் போன்ற விவரிப்புகள் கதைக்கு வலு
சேர்க்கின்றது.
திருநங்கைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கருதப்படுவது தாயம்மா
எனும் குறி அகற்றும் சடங்கு. சில இடங்களின் அறுவடை சடங்கு என இதை
நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆசிரியர் இதை சொல்லும் விதம்
மெய்கூசச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாகவே நமது சமூகத்தில் ஆண் பெண் என இருபாலரும் ஏற்றுக் கொள்ளாத
அல்லது வெறுக்கும் சமூகமாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள்.
அப்படியாக திசையற்று தன் வாழ்வை தேடும் திருநங்கைகளுக்கு இன்னொரு
திருநங்கையே துணை என்பதை இக்கதையில் காண்கிறோம்.
இக்கதையில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் நாயகனா அல்லது வில்லனா
என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். சமுதாய சூழல் அறிந்து
வாழும் கதாபாத்திரமாக சித்திரிக்கப்படும் இவர் பிற்பகுதியில் ஒரு
கொடுமைக்காரனாக சொல்லப்படும் விதம் நெருடுகிறது.
ஆண் சமூகத்தை அவமானப்படுத்துபவர்கள் திருநங்கையர் எனும் எண்ணம்
பெரும்பாலான ஆண்களுக்கு உண்டு. அதே போல் தம்மை கேவலப்படுத்தும்
ஆண்கள் வர்க்கத்தை வெறுக்கும் திருநங்கையரும் உண்டு. இதற்கு
அப்பாற்பட்டு அவர்களை மனமுவந்து ஏற்று வாழ்க்கை நடத்துபவர்களும்
உண்டு.
இக்கதையில் போலிஸ், ரவுடிகள், திருநங்கையரை ஏமாற்றி திருமணம்
செய்யும் ஆண்கள் என பல வகையில் ஆண்களே திருநங்கையருக்கு கொடுமைகள்
நிகழ்த்துபவர்களாக சொல்லி இருப்பது திருநங்கையர்களுக்கு ஆண்கள்
மட்டுமே எதிரிகள் என்பது போல் உள்ளது.
நன்கு படித்த திருநங்கைகள் தங்களுக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதை
நாம் அறிந்திருக்கிறோம். அது இந்திய நாட்டுச் சூழலில் மாறுபடுகிறதா
என்பது தெரியவில்லை. படிப்பறிவுள்ள கோமதியும் கடை (பிச்சை) கேட்டு
பிழைக்கும் சித்தரிப்புகள் எதிர்ப்பார்க்காத ஒன்று. திருநங்கைகள்
வாழ்க்கையில் தங்களை எப்படி உயர்த்திக் கொள்ள முடியும். தம்
பிள்ளைகள் திருநங்கையராக மாறுவார்களாயின் அதை எப்படி குடும்பத்தார்
ஏற்றுக் கொள்ள முடியும் போன்ற முக்கிய கூறுகளை கொஞ்சம் விளங்கக்
கூறியிருந்தால் மேலும் நன்மையாய் அமைந்திருக்கும்.
நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர்
சுதந்திரத்துக்குட்பட்டது. சமூக அமைப்பில் திருநங்கையர்களும்
கவனிக்கப்பட வேண்டியவர்களே. கீழான பார்வைக்கும் செயல்களுக்கும்
அவர்களை முற்படுத்துவதில் நமது சமூகமும் காரணமாகிறது என்பதுதான்
உண்மை.
இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய
அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும்
ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி
திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய
தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.
|
|