வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 8
 ஜுன் - ஆகஸ்ட் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

விமர்சனம்

ஆட்டுக்காரனும் குச்சிக்காட்டு சனமும்

 

பா.அ.சிவம்

       
 

ஒரு வாழ்க்கையை வாழ முடியும். வாழ்ந்த வாழ்க்கையை மிகையில்லாமல் அல்லது எந்தப் பிசிறும் இல்லாமல் எழுத முடியுமா என்றால் இதோ இருக்கிறது எனத் தனது இருப்பை உறுதி செய்கிறது மண்புழுக்கள் நாவல். இந்த நாவல் எனது கைவசத்தில் பல மாதங்களாக இருந்த போதிலும், சொல்லவியலா ஏதோ ஒரு தருணம்தான் அதனை முழுமையாக, தேக்கம் இல்லாது வாசிக்க வழிவகுத்தது. இந்த நாவல் எனது கைக்குக் கிடைத்தவுடன் அதனை வாசிக்கத் துணிந்தேன். ஆனால் அது இடம் அளிக்கவில்லை. சில முறை வாசிக்க முயன்று, ஆனால், நாவலில் உட்புக முடியாததால் அதனை அதன் போக்கிலேயே விட்டு வைத்தேன். பின்னர் ஒரு முறை திட்டமிடாத ஒரு நாளில், எந்த மனத்தடையும் ஏற்படாத வகையில் நாவலில் உட்புகுவதற்கான சாவியை அது தானாக முன்வந்து வழங்கியது. இதுபோன்ற உணர்வை ஏற்கெனவே சிலமுறை நான் மற்ற நூட்களை வாசிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். சட்டென நினைவுக்கு வருவது பேராசிரியர் தா.பழமலய்யின் சனங்களின் கதை (கவிதை).

இந்த நாவல் எனது தோட்ட வாழ்வை அதன் வண்ண ஜாலங்கள் மாறாமல் கண்முன்னே கொண்டு வந்து நிமிர்த்துகிறது. கிட்டத்தட்ட நாட்டிலுள்ள அனைத்துத் தோட்டங்களின் காட்சிகளும் கனவுகளும் ஒன்றேதான் என்பதற்கு இதைவிட வேறொரு சான்று தேவையில்லை. மண்புழுக்கள் கதை முழுக்க முழுக்க குச்சிக்காட்டு சனத்தை சுற்றி நகர்கிறது. ஒரு தோட்டம் குச்சிக்காடாகப் புனையப்பட்டு, அங்கு வாழ்ந்த மனித தெய்வங்களின் தரிசனம் ஒரு நாவலில் வாழ்ந்துவிட்டுச் செல்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆட்டுக்காரன் (சின்னக்கருப்பன்) எனும் கதாபாத்திரத்தின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் மண்புழுக்கள். ஆனால் சாலபலத்தார், புட்டுக்கிழவன், ஆட்டுக்காரன் மகள் சின்னப்புள்ள எனும் மேலும் சில கதாபாத்திரங்கள் வழி ஒட்டுமொத்த தோட்ட வாழ்வை ரப்பர் பாலாய் மனதில் ஒட்ட வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். கதாபாத்திரங்கள் கதையில் அறிமுகமாகும்போது அவர்களில் பெரும்பாலானோருக்குப் பெயர்களுக்கு முன்னே அடைப்பெயர் வருகிறது. ஆட்டுக்காரச் சின்னக்கருப்பன், வெத்தலக்காட்டுச் சாலபலத்தாரு, அம்மா வூட்டுக் குஞ்சான், மேட்டுக் குச்சி மாரிமுத்து, கசியடி முனியப்பன், கச்சாங்கார மாரியப்பன் என மேலும் பல கதாபாத்திரங்கள். தோட்ட மக்களின் பெரும்பாலோருக்குப் பட்டப் பெயர்கள் உள்ளன. அவை அவர்களின் உபதொழில் அல்லது அவர்களின் தன்மைகளால் அமைந்துவிடுகின்றன. உயரமாக இருப்பவரை பாஞ்சாங் ரவி என்பார்கள், குட்டையாக இருப்பவரைக் கட்ட ரவி என்பார்கள். பலருக்குச் சம்பந்தமே இல்லாமல் வினோதமான பெயர்கள் அமைந்துவிடுவதுண்டு. பட்டப் பெயர் கொண்டவர்களை அப்படி அழைத்தால்தான் ஊருக்கே தெரியும். இல்லையேல், எந்த முனியப்பன் எனக் கேட்பார்கள். தோட்டங்களில்தான் இரண்டு முனியப்பன், இரண்டு மாரியப்பன், இரண்டு காளியப்பன் இருப்பார்களே... தோட்ட மனிதர்களின் விவரணை, மறந்து போனவர்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

தோட்ட வாழ்க்கை என்பது பல வேளைகளில் திட்டமிடப்பட்ட/சில வேளைகளில் திட்டமிடாத சம்பவங்களால் ஆனது. திருவிழாக்காலம், இலையுதிர்காலம், இலை துளிர்காலம், பள்ளி விடுமுறைக்காலம், பள்ளித் தொடக்க காலம், மழைக்காலம், மழை திட்டிக்காலம், வெயில் காலம், எழவு விழும் காலம் எனப் பல காலங்களாக வகைப்படுத்தலாம் அவற்றை. ஓராண்டு பதிவுகளின் எச்சத்தை மறு ஆண்டிலும், தொடர்ச்சியான ஆண்டுகளிலும் காண முடியும். மண்புழுக்களில் பல்வேறு காலங்களின் நிறங்கள் பதிந்துள்ளன. தோட்ட வாழ்வின் மிக ஆதாரமான பல சம்பவங்களை இந்நாவலில் கொண்டு வந்திருப்பது, நாவலாசிரியர் அவரது வாழ்வை மட்டும் சொல்லியதாகாது. தோட்டத்தில் ஆணிவேரைக் கொண்டுள்ள அனைவரின் கதையாகவும்-கிளைக்கதைகளாகவும் அது விரிகிறது. நான் இந்நாவலை வாசிக்கும் தருணம், தற்போது அதன் சுயத்தை இழந்து விட்டிருக்கும் எனது தோட்ட வாழ்வை, இந்நாவலால் மீண்டும் நினைவுபடுத்த முடிகிறது. சம்பவச் சித்தரிப்பாலும் - சம்பவக் கோர்ப்பாலும் அது சாத்தியமாகிறது. நான் இங்குச் சம்பவ சித்தரிப்பு என்றும் சம்பவக் கோர்ப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளது நாவலின் முதல் பக்கம் தொடங்கி இறுதிப் பக்கம் வரையிலான வாசிப்பையே. தொய்வில்லாமல் வாசிப்பதற்கான மனவோட்டத்தை நாவல் ஏற்படுத்தித் தருகிறது. நாவலின் பதினாறு அத்தியாயங்களும், வரிசை பிடித்து நட்டு வைத்தாற்போல் வளர்ந்து நிற்கும் பால்மரங்களைப் போன்று அதன் போக்கில் செல்கின்றன. ஒரு வரிசை மரங்களை அல்லது பத்தியைச் சீவிய பின்னர் நாமாக மறு பத்திக்குத் திரும்புவது போல், அத்தியாயங்களும் அமைந்துள்ளன; அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் மொழிதான் கதையைத் தூக்கிப் பிடிக்கிறது. பொதுவான வாசிப்புக்கு இம்மொழி ஒரு தடையாக இருக்கும். ஆனால், தோட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஊத்துக்குழியில் குளிப்பது போல் இருக்கும்.

தோட்ட வாழ்வின் அழகே, அதன் மண்ணும்-மாந்தர்களும்தான். பல்வேறு சம்பவங்களில், காட்சிப் புனைவுகளில் மண்ணின் வாசமும்-மாந்தர்களின் அசலும்-போலியும், இதற்கிடையில் சிக்கிக் கொண்டுள்ள தன்மைகளும் வெளிப்படுகின்றன. அந்த வெளிப்பாட்டைப் பேசவல்ல மண்புழுக்கள், நூற்றாண்டுகால தோட்ட வாழ்வின் பலவகை மனிதர்களையும், நொடிகளையும், பதிவு செய்துள்ளது. மனிதர்களின் விவரிப்பும் அவர்களின் கதைகளையும் விட, காட்சிகள்/சம்பவங்கள்தான் இந்நாவலில் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. தோட்ட வாழ்வின் படிமங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தும். இழந்தும் வரும் இத்தருணத்தில், அவற்றைத் தூசுத்தட்டி, தீ மூட்டி விட்டிருக்கிறது மண்புழுக்கள். ஏறக்குறைய இந்நாவலில் வரும் அழகான, அழுக்கான காட்சிகள் அனைத்தையும், நான் எனது தோட்டத்தில் கண்டு திளைத்திருக்கிறேன். அவற்றை நான் உய்த்த வாழ்வை, ஒரு வாசிப்பில் கண்டெடுக்கும்போது அதில் கிடைக்கும் கொண்டாட்டத்தை/ களிப்பை/ உற்சவத்தை செய்கைகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். அதற்கான சிறந்த சொல் கிடைக்காமல் போகிறது.

இந்நாவலில் வரும் தோட்டம் ஒரு பால்மரத்தோட்டம். எனது தோட்டத்தில் மாடுகள்தான். இங்கு ஆட்டுக்காரன். கித்தா காடுகளைத் தீம்பார்களை/ நரைகளை, வெவ்வேறு காலக்கட்ட வர்ணிப்போடு நாவலாசிரியர் கண்முன் கொண்டு வருகிறார். அவற்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். தீம்பார்களில் தீப்பற்றிக் கொள்வதும் தீ ஏற்படாமல் அல்லது மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு அந்தி வேலை செய்வதும் நாமெல்லாம் கொஞ்சம் கூட நினைவில் வைத்துக் கொள்ளாத, மறந்து போன அரிய சம்பவம்தானே. தோட்டங்களில் நடைபெறும் திருமணங்கள், உண்மையிலேயே உலகின் சிறந்த திருமணங்கள் என்றுதான் கூற வேண்டும். இன்றெல்லாம் எங்கே கிடைக்கிறது அவ்வாறான பாக்கியம். ஊர் மக்களே, ஒன்று சேர்ந்து நடத்தி வைக்கிற கொண்டாடுகிற திருவிழாக்களாக மாறிவிடுகின்றன தோட்டத்துத் திருமணங்கள். முத்துவேல் மகள் கல்யாணமும், ஆட்டுக்காரனின் ஒத்தாசைகளும், பாகவதர் பாடல்களும், மனதில் பசையைத் தடவி ஜ'கினா தூவி வருக வருக என மின்னுகின்றன.

தீம்பார் காடுகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளும் இந்நாவலில் நன்கு வெளிப்பட்டுள்ளன. வெள்ளைக்காரத் துரை, மேனேஜர் மேனன், பெரிய கிராணி சுப்பையா, பெரிய கங்காணி பொன்னுசாமி... இந்தப் பெயர் அடுக்குகளிலும் ஒரு வகை அரசியல் கையாளப்பட்டுள்ளது. மேனேஜருக்கு மேனன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது ஏதேச்சையாக நிகழ்தாலும் அப்பாத்திரத்திற்கான பெயரைச் சூட்டுவதில் நாவலாசிரியர் திட்டமிட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. அல்லது அந்தப் பாத்திரம் உண்மையான நபராகவும் அவர் எதிர்கொண்ட மனிதராகவும் இருந்திருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. கிராணிகள் என்றால் மேனன்களாகவும் தொழிலாளர்கள் என்றால் ஆட்டுக்காரச் சின்னக்கருப்பனாகவோ வெத்துச் சின்னகருப்பனாகவோதான் இருக்க முடியும். அதுதான் தோட்டத்தின் எழுதி வைக்காத வரலாறு. வேண்டியவர் வேண்டாதவர் எனப் பாகுபாட்டில் அவர்களுக்கு ஏற்றவாறு நரையை ஒதுக்குவது வேண்டாதவர் என ஆகும்போது ஏணிக் கோடு வெட்ட அல்லது ஏத்துளி சீவ அனுப்பி வைத்து விடுவது, மரத்தில் காயம் பார்க்கிற சாக்கில் பெண்களைப் பின்னால் தட்டுவது, கிராணியிடம் போட்டுக் கொடுத்தே பொழப்பு நடத்துவது எனத் தோட்டத் தொழிலாளர்களின் அடிமைத் தனத்தையும், இங்கிலீஸ் பேசி நாய்களை விரட்டி விட்டு, பூட்ஸ் காலால் எத்தும் ஏகாதிபத்தியத்தின் உச்சத்தையும் வாசிக்கும்போது, இன்று நவீனம் என்ற நிழலில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து மனசாட்சியை ஏமாற்ற நேரும் நிலையையும் உலகின் போக்கையும் நினைத்து வெட்கப்படவும் அவமானப்படவும் நேருகிறது.

தோட்ட வாழ்வோடு பின்னிப் பிசைந்தாடும் பிராணிகளும் இதில் மறக்கப்படவில்லை. தொழிலாளர்களை அடக்கி, ஒடுக்கி கரும்புச் சாறாய் அவர்களைப் பிழிந்தெடுத்து வேலை வாங்கி, முதலாளித்துவம் வளர்த்த வெள்ளைக்காரத் துரைதான் பாம்பு கடித்துத் தனது நாய் செத்தபோது தனது பிள்ளை செத்த கனமாய் அழுது தொலைக்கிறான். மற்றொன்று ஜ'ன்னு பன்றி அடித்து, மருதாயி புருஷன் சாவிலிருந்து மீண்டு வருவது.

நான் கோட்பாடுகளை அல்லது தியோரிகளை வைத்துக் கொண்டு மண்புழுக்களை அணுகுவதில்லை. அப்படி அணுகுவதற்கான அறிவும் திறனும் என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். எனது தோட்ட முகத்தை நான் மீண்டும் காணக் கிடைத்த போது எழுந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இந்நூலை அணுகினேன்.

இந்நாவலில் வரும் கதைமாந்தர்களும் சரி... பிராணிகளும் சரி... நாவலாசிரியர் சந்தித்த மனிதர்களாகவும் எதிர்கொண்ட கதாபாத்திரங்களாகவும்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம். அனுமானம் என்பதில் நம்பிக்கை இல்லைதான். எனினும், நாவலில் வந்து போகும் மனிதர்கள் யாவரும் தோட்டத்தில் முன்பு ஒரு முறை வாழ்ந்து மடிந்த அல்லது எங்கோ இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் சுட்டுவதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். நாவலில் குடிகொண்டுள்ள உண்மைதான் அது.

முதலில் ஆட்டுக்காரனை மட்டும் எடுத்துக் கொண்டால், வெந்துக் தகிக்கும் வெயில் காட்டில் அவன் அறிமுகமாவது தொடக்கி தனது மகள் சின்னப்புள்ளையையும், புடம் வைத்த தனது காலையும் இழந்து தவிக்கிற வரையில் அவன் அவனாக நாவலில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு திரிவது வெறும் புனைவுகளால் மட்டும் சாத்தியமில்லை. அதற்கான வாழ்வு அமைய வேண்டும். உண்மையில் ஆட்டுக்காரன் என்பவன் யார்? அவன் வெளிப்பட்ட காரணம் என்ன? அவன் வாழ்வு யாரோ வாழ்ந்துவிட்டு போன வாழ்வாக இருக்கிறது. யாருடைய வாழ்வு அது என அறிந்து கொள்ளும் ஆர்வம் நாவல் வாசிப்பு முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் ஏற்பட்டது. அது வரையில் நாவல் வேறு எது பற்றியும் யோசிக்க வைக்காத ஆழமான அழுத்தமான ஓரூணர்வை ஏற்படுத்தியிருந்தது பேருண்மை.

ஆட்டுக்காரனை விட பரிதாபத்திற்குரியவராக வருகிறாள் ஆட்டுக்காரனின் மகள் சின்னப்புள்ள. அவளைக் காணவில்லை என்றபோது ஆட்டுக்காரனும் ஊரும் சேர்ந்து தேடும் போது அவள் எங்குப் போய் தொலைந்திருப்பாள் என்கிற பதற்றம் ஏற்பட்டது. அவள் கதி என்னாகியிருக்கும் என்பதை முன்னாள் யூகிக்க முடிந்தாலும் அந்த யூகம் இறுதியில் தவறாகி விடுகிறது. ஒரு பாம்பு கடித்தோ பன்றி அடித்தோ அவள் இறந்திருக்கலாம் எனும் சாத்தியம் போகப் போக விலகித் தேக்கி வைத்த வஞ்சத்தால் காம இச்சைக்குப் பலியாகி அவள் உயிர் விடுவதுதான் இந்நாவலின் உச்சம். சின்னப்புள்ள காணாமல் போன செய்தியால் நானும் பதறி அடித்துக் கொண்டு அவளைத் தேடுவதற்கு வாசிப்பைத் துரிதப்படுத்தியபோது புட்டுக்காரரின் மலாயா கம்யூனிஸ்ட் கதையும் அதற்கு அடுத்து வரும் ஜப்பான்கார கதையும் சினத்தையே மூட்டின. எனக்குச் சின்னப்புள்ள என்ன ஆனாள் என்பதுதான் அப்போதைய ஒரே கேள்வி. நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததும்கூட அவளுக்காகத்தான். அவளுக்கு ஏற்பட்ட நிலையைத் தெரிந்து கொள்ள கம்யூனிஸ்ட் கிளைக் கதைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

இந்நாவல் மிகச்சிறந்த நாவல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றென்றும் குறிப்பிடத்தக்க மேற்கோள் காட்டுகிற சிறந்த படைப்பாக மண்புழுக்கள் அமைவதற்கு நாவலில் கையாளப்பட்டுள்ள மொழிதான் ஆதாரம். ஆனால், நாவலின் மொழியைத்தான் சிலரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பது நாவலின் மீதான அண்மைய எதிர்வினைகளிலிருந்து அறிய முடிகிறது. நாவலில் தோட்ட வாழ்வுக்கே உரிய சில பட்டவர்த்தனமான சொற்கள் வசனங்கள் வருகின்றன. அதைச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மனிதர்கள் எல்லாரும் ஒழுக்கவாதிகளாக நல்லவர்களாக யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே பெரும்பாலானோர் கொண்டுள்ளனர். அப்படி ஊரைச் சுட்டுகிறவர்களையும் மிகச் சுலபமாகக் கேள்வி எழுப்பலாம். அவர்களது கற்பிதங்களையும் உடைக்கலாம். ஆனால் அது தேவையில்லை. இங்கு எல்லாருக்கும் எல்லா எதிர்வினைக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை. ஆனால், இது எல்லா வேளைகளுக்கும் பொருந்தாது.

இந்நாவலின் மொழி மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு கொடையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இம்மொழி இதர இலக்கிய வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன என்றாலும் நாவலில் அதனைக் காணும்போது அது முக்கியப் பதிவாக அமைந்துவிடுகிறது. 16 அத்தியாயங்களில் தோட்ட மொழியுடன் பயணிக்கும்போது நீங்கள் தோட்டத்தின் காதலராக இருந்தால் நிச்சயம் வாழ்வில் கிடைத்திராத சுக அனுபவத்தை உணர்வீர்கள் அதில் லயப்பீர்கள். தோட்ட மொழி இன்று மறக்கப்பட்டு, கைவிடப்பட்டு வரும் நிலையில் அம்மொழியின் சொற்களை ஒருசேர இந்நூலில் வாசிக்கக் கிடைத்தது எவ்வளவு பெரிய பங்களிப்பு என்பதை இக்காலக்கட்ட மனிதர்கள் சொல்லமாட்டார்கள். காலம்தான் சொல்லும். இந்நாவல் இம்மொழியில் எழுதப்பட்டதால்தான் அதனை ஒரு நாவலாக மட்டும் கருதாமல் அதனையும் மீறி தோட்ட வாழ்வின் பொக்கிஷமாக நான் குறிப்பிடுகிறேன்.

மண்புழுக்கள் தோட்ட வாழ்வின் அடையாளமாகக் காட்சியளிக்கிறது. நாட்டில் அனைத்துத் தோட்டங்களும் என்றாவது ஒரு நாள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். அனைத்து ரப்பர் மரங்களும் என்றாவது ஒருநாள் வெட்டிச்சாய்க்கப்பட்டுவிடும். என்றோ நேரவிருக்கும் அந்தக் கொடிய நாளில் ரப்பர் காடுகளின், தோட்ட தொழிலாளர்களின் சரித்திரத்தை நினைவுகூர்வதற்கான வல்லமை கொண்ட ஒரு நூல் இன்றே உண்டெனத் துணிச்சலாக சொல்வேன். இந்நாவலைப் பொறுத்தவரை என்னை உறுத்திய விஷயம் ஒன்றே ஒன்று அதன் தலைப்பு. நாவலில் கையாளப்பட்டுள்ள மொழிக்கும் தலைப்பின் மொழிக்கும் உள்ள வேறுபாடு. நாவலின் மொழியை ஒத்த தலைப்பை வைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், அது ஒரு குறையல்ல. பார்வைதான்.

குறிப்பு:நாவல் குறித்த முழுமையான விமர்சனமாகாது இது. சிறு பகுதிதான்.....

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768