நேற்று (29/7/09) நடந்த சை. பீரின் ‘பயோஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால்
இப்பதிவு அவருடைய சிறுகதைத் தொகுப்பு விமர்சனமாகத்தான் வெளி வந்திருக்கும்.
1999 இறுதியோ அல்லது 2000 வருடத்தின் ஆரம்பமாக இருக்கலாம். STPM தேர்வில்
தோல்விக் கண்டு மீண்டும் எழுத ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். கொஞ்சம்
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
சுங்கைப்பட்டாணி காந்தி மண்டபத்தில் நிகழும் இலக்கிய நிகழ்ச்சியில் கடைசி
நாற்காலியைத் தேடி அமர்ந்துக் கொள்வேன். நிகழ்ச்சி முடிந்ததும் முதல் ஆளாக
வெளியேறி விடுவேன். தாழ்வு மனப்பான்மை என்னை மெதுமெதுவாய் தின்று
கொண்டிருந்த நேரம். இப்படியான நிகழ்ச்சியொன்றில் அப்துல் ரகுமான், சிற்பி
மற்றும் தமிழன்பன் ஆகியோர் வந்திருந்தனர். கூட்டத்தில் என்னையும் சேர்த்து
சுமார் 30 பேர் இருந்திருப்பார்கள். சிற்பி பொதுவாக புதுக்கவிதைப் பற்றி
பேசினார். தமிழன்பன் பாரதிதாசனைப் பற்றி உரையாற்றினார். அப்துல் ரகுமான்
கவிதையைப் பற்றி அருமையாகப் பேசினார். நிகழ்வு முடிந்ததும் விற்கப்பட்ட
அப்துல் ரகுமானின் நூல்களை வாங்கினேன். கவிஞர் மீரா தொகுத்திருந்த அப்துல்
ரகுமானின் வெள்ளி விழா மலர் அதனுள் ஒன்று. வானம்பாடி கவிஞர்கள் அனைவரையும்
அறிந்து கொள்ள உதவிய நிகழ்வு அது. அன்று அவர்களை அழைத்து வந்தவர் சை.பீர்.
சில மாதங்களுக்குப் பிறகு, சை.பீர் தொகுத்த ‘வேரும் வாழ்வும்’ என்ற ஐம்பது
ஆண்டுகளாக மலேசிய சிறுகதைகளில் முக்கிய தடத்தைப் பதித்தவர்களின் நூல்
தொகுப்பு அதே காந்தி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இம்முறையும் மண்டபம்
நிறைந்து வழியவில்லையென்றாலும் நிறைந்திருந்தது. ’வேரும் வாழ்வும்’
தொகுப்பை வெளியிட ஜெயகாந்தன் வந்திருந்தார். அவருக்கு மலர் கீரிடம் ,ஆளுயர
மாலையெல்லாம் அணிவித்து அமர்க்களபடுத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலும்
அரசியல்வாதிகள் பெரும் மரியாதையெல்லாம் எழுத்தாளன் பெறுவதைக் கண்டது
புதுமையாக இருந்தது. ஜெயகாந்தன் பெரிய எழுத்தாளர் என்று நினைத்துக்
கொண்டேன். கோ.புண்ணியவான் கெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவராக இருந்தார்.
எம்.ஏ.இளஞ்செல்வன் கூட்டத்தில் இருந்தார். சீ. முத்துசாமி வந்திருந்ததாக
ஞாபகமில்லை. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் வளைந்த மீசையோடு நீண்ட
முடியோடும் கம்பீரமாக இருந்தார் ஜெயகாந்தன். அவ்ர் மீசையைப் பற்றியே
பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இதை விட பெரிய
அழகான மீசை வைத்திருந்த ‘மீசைக்காரர்’ என அழைக்கப்பட்ட என்
கொள்ளுத்தாத்தாவைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.
ஜெயகாந்தன் ‘முகம் தெரியாவிட்டாலும் அழைத்தவன் எழுத்தாளன் என்பதால் கடல்
தாண்டி தைரியமாக இந்த எழுத்தாளன் வந்திருக்கிறேன்’ என்று உரையைத்
தொடங்கியதாக நினைவு. ஜெயகாந்தன் அப்போது மலேசியா வருவதற்கு முக்கிய
காரணிகளில் ஒருவர் சை.பீர்.
வானம்பாடி கவிஞர்கள் மற்றும் ஜெயகாந்தன் மீது நிறைய மாற்று கருத்துக்கள்
இப்போது எனக்குண்டு. ஆனால் தட்டு தடுமாறி நடக்கத் தொடங்கிய எளிய வாசகனாக
எனக்கு இவை காட்டிய திசை மறக்க முடியாதது.’வேரும் வாழ்வும்’ மூலமாகத்தான்
மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிய முடிந்தது.
சீ.முத்துசாமி, மா.சண்முகசிவா, கோ.முனியாண்டி, அரு.சு.ஜீவானந்தம்,
சா.ஆ.அன்பானந்தன், ரெ.கார்த்திகேசு, எம்.ஏ.இளஞ்செல்வன், சை.பீர் முகம்மது,
மு.அன்புசெல்வன், சாமிமூர்த்தி, பாக்கியம் முத்து, பாவை போன்றவர்களை
முக்கியமானவர்களாக மனதில் இருத்திக் கொண்டேன்.
2001 மலாயாப் பல்கலைக்கழகம் நுழைந்து, விபரீதமான எண்ணங்களின் வடிவாய் இரு
சிறுகதைகள் எழுத போக, அதைப் படித்த நண்பர் சிவா பெரியண்ணன்,
சண்முகசிவாவிடம் காட்டலாம் என்ற மேலும் ஒரு விபரீதமான யோசனைச் சொன்னார்.
சண்முகசிவா மேலும் வாசிக்க வேண்டிய முக்கியமான எழுத்தாளர்களின் பெயர்களைச்
சொல்லிக் கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாது மலேசியாவின் மற்ற முக்கியமான
எழுத்தாளர்களைச் சந்திக்க சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
எங்களின் கூச்சத்தை உணர்ந்து அவரே நாங்கள் வருவதை முன்னே சொல்லி விடுவார்.
எங்களின் சொந்த ஊர் எழுத்தாளர்களான சீ. முத்துசாமியையும், கோ.
புண்ணியவானையும் கூட இப்படிச் சிபாரிசின் பேரில் சந்தித்ததை இப்போது
நினைக்க வெட்கமாகத்தான் இருக்கிறது. பினாங்கில் ரெ.கார்த்திகேசுவைச்
சந்தித்தோம். சந்திப்பின் தொடர்ச்சியாக சை.பீர் அவர்களை கோலாலம்பூர் ஈப்போ
சாலையில் சந்தித்தோம். மற்ற எழுத்தாளர்கள் சந்திப்பு போலவே முதலில்
சாப்பாடு. அப்போது வந்திருந்த என் சிறுகதைகளின் நிறை குறைகளை நிதானமாக
சொன்னார். ’தம்பி நிறைய வாசியுங்கள்; இந்த பயணம் மிக நெடியது; வாசிப்புதான்
நான் உடன் கொண்டு செல்லும் உணவு’ என்று சொன்னதாக ஞாபகம்.
இப்படி இன்னும் உங்கள் மூலமாக எனக்கு சந்திக்க கிடைத்த தமிழக மற்றும் ஈழ
படைப்பாளிகளின் அனுபவ சாரங்களோடு இக்கட்டுரையை நிறைவு செய்யும் பாக்கியத்தை
நீங்கள் வழங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். உங்களின் நூல்
வரவேற்புரையை நான் கேட்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அது
சாத்தியமாகியிருக்கலாம். நீங்கள் சொல்லும் செயலும் ஒக்கவே வாழும்
உயர்மனிதர் என்று நம்பும் அளவுக்கு நான் பாமரன் இல்லைதான். உங்களுடனான
பழக்கத்தில் உங்களின் பலவீனங்களை அறிந்தவன்தான். யாருக்குதான் பலவீனங்கள்
இல்லை. ஆனால், அதிகாரங்களோடு கைக் குலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால்
குளரும் வாயோடு, பேச்சு எப்படி நாலந்தரமாகும் என்பதற்கு உதாரணமாக உங்கள்
பேச்சு இருந்தது. (உங்கள் பேச்சைக் கேட்டு பயந்து போய் எப்போதும் அந்தத்
தரத்தில் பேசும் திமுக இலக்கிய அணி செயலாளர் முன்றாந்தரத்திற்குத் தன்
பேச்சை உயர்த்திக் கொண்டார் போலும்). தன் பேச்சினூடே சை.பீர் பொழிந்த
நன்முத்துக்கள் சில பின்வருமாறு:
அ) சாமிவேலு ஒரு நெருப்பு
ஆ) சாமிவேலு ஒரு வற்றாத நதி
இ) சாமிவேலு வந்த பிறகுதான் எழுத்தாளர்கள் பெருமையோடு வாழ்கிறார்கள்
ஈ) சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
மஇகா மாநாட்டில் கடைநிலை பேராளர் இப்படிப் பேசலாம். (அடுத்த மாநாட்டில்
தலைமையின் நெஞ்சை நக்க ‘உயிர்ப்பான’ உரைக்குப் பேராளர்கள் தைரியமாக சை.பீரை
அணுகலாம்). நவீன எழுத்தாளன் என தன்னைப் பறைசாற்றிக் கொள்பவர் இப்படி
பேசலாமா? ‘மீண்டும் என்னை எழுப்பும் போது என் தோழர்களோடு எழுப்பு’ என்ற
நபிகள் நாயகத்தின் தோழமையின் உயர்வைச் சொல்லும் வாசகத்தை சை.பீர் எதற்கு
முடிச்சு போட்டார் தெரியுமா? அடுத்தப் பிறவியில் சாமிவேலுவின் தோழமைக்
கூட்டத்தில் பிறக்க வேண்டுமாம். சை.பீர் அவர்களே, உங்களுக்குப் பதவி ஆசை
இருந்தால் நேராக கேட்க வேண்டியதுதானே. இப்படி இலக்கிய வேடமிட்டு ஏன்
பிச்சையெடுக்க வேண்டும். உங்கள் பேச்சின்போது நீங்கள் சாமிவேலுவிடம் நூல்
வழங்க சென்றதாகவும் அவரே நூல் வெளியிட ஒப்புக் கொண்டதாகவும் பெருமை மிளிர
சொன்னீர். அதற்கு உங்களின் அடுத்த பிறவியின் தோழமைக் கூட்ட தலைவர்,
நீங்கள்தான் நூல் வெளியிட வேண்டிக்கொண்டதாக குட்டைப் போட்டு உடைத்தார்.
இந்தக் கேவலமான கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சிக்கு வந்த
நாங்களெல்லாம் மாங்காய் மடையர்களா?
எப்போதுமே அபத்த நாடகங்களுக்கு ஓர் உச்சக்கட்டம் இருக்காது போலும். உங்கள்
நூலை வாங்கியதும் உங்களின் முன்னுரை இழவை வேறு படித்துத் தொலைத்துவிட்டேன்.
படிக்கப் படிக்க இதுவரை உங்கள் மீது இருந்த வருத்தமும் கசப்பும், ஆத்திரமாக
மாறத் தொடங்கியது. பெரியார் தொடங்கி சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, சாக்ரடீஸ்
என தாடி வைத்த புரட்சிக்காரர்கள் அனைவரையும் பதின்ம வயது தொடங்கி உங்கள்
ஆதர்சமாக இருப்பதாக நெக்குருகி எழுதியிருந்தீர்கள். அதிலும் பெரியார்
எப்போதும் முதலிடத்தில் இருப்பதாக சொல்கிறீர். பெரியார் என்றால் எனக்கு
முதலில் நினைவுக்கு வருவது சுயமரியாதை, அதிகாரத்திற்கு வணங்காமை. நேற்று
நீங்கள் நடந்து கொண்டதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா திரு.
சை.பீர் அவர்களே! உங்களைப் போலவே பதின்ம வயதில் பெரியார் தொண்டராகி,
சுயமரியாதை செம்மலாகி, இப்போது திராவிடர் கழகத்தின் அதிபராகி,
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஊதுகுழலாகி, பெரியார்
சிந்தனையாளர்களுக்கே களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவர்
தமிழகத்தில் இருக்கிறார். பெயர் கி.வீரமணி. ஏன் ஐயா, பதின்ம வயதில்
பெரியார் தொண்டர் ஆவோரெல்லாம் இப்படி வயதான காலத்தில் அவரின் பெயரை விற்று
பிழைப்பவராகத்தான் மாறுவார்களோ! நல்ல வேளை, பெரியாரை நான் வாசிக்கத்
தொடங்கியபோது எனக்கு வயது 21.
இரண்டு வருடங்களுக்கு முன், நண்பர் பா.அ.சிவம் தன் முதல் கவிதை நூலை
வெளியிட்டார். தான் மிகவும் மதிக்கும் மூன்று மூத்த இலக்கியவாதிகளைக்
கொண்டு தன் நூலை வெளியிட செய்தார். சீ. முத்துசாமி, மா.சண்முக சிவா,
கோ.முனியாண்டி என்ற மூன்று பேருக்கும் புத்தகம் வெளியிடுவதற்கான தகுதிகள்:
அவர்கள் மலேசிய தமிழ் படைப்பாளிகள், தங்கள் நூலை வெளியிடுவதற்காக
அதிகாரத்தின் முன் முதுகு வளைக்காதவர்கள். சிவத்தின் அன்றைய முடிவுகள் இளைய
நவீன எழுத்தாளர்களுக்கே நல்ல தொடக்கமாக அமைந்தது. இத்தனைக்கும் சிவம்
உங்களைப் போல் வசதியானவர் கூட இல்லை. சில ஆயிரங்கள் நிச்சயம்
இழந்திருப்பார். அதைப் பற்றி இன்றுவரை அவர் வருத்தப்பட்டதாக செய்தியில்லை.
ஏனெனில் அவரைப் பொறுத்தவரை, ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தில்
படைப்பாளன் வெறும் கலைஞன் மட்டுமல்ல, அவன் சமூகத்தின் மனசாட்சி, அவனுக்கு
விலை இல்லை.
இந்து இறுதி சடங்குகளில் நிச்சயம் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர். எல்லா
சடங்குகளும் முடிந்த பிறகு கடைசியாக பெட்டியை மூடுவதற்கு முன் சடங்கு
நடத்துபவர் கோடித் துணிகள் கொடுப்பவர் கொடுக்கலாம் என அறிவிப்பார்.
புடவையோ, வேட்டியோ தருபவர்களின் பெயர்களைச் சொல்லி பிணத்தின் மீது
சாத்துவார். துணிக் கொண்டு வராதவர்கள் பணமாகத் தருவர். ராமசாமி மாமா 50
வெள்ளி, அக்கா சாமந்தி 50 வெள்ளி என்ற உரத்த அறிவிப்புடன் பணத்தைக்
கொடுக்கக் கொடுக்க சடலத்தின் மீது வைத்துக் கொண்டேயிருப்பார் சடங்கு
நடத்துனர். பெட்டியை மூடுவதற்கு முன் பணத்தை எடுத்து வீட்டில்
சம்பந்தபட்டவர்களிடம் கொடுப்பார். உங்கள் நூல் வெளியீடு தொடங்கியதும்,
எப்போதுமே உங்கள் படைப்பை வாசிக்கவே மாட்டாத, மண்டபத்தை விட்டு
வெளியேறியதும் உங்கள் படைப்பை ஏதாவது ஓரத்தில் எறிய போகிற, தங்கள்
பணத்திமிரையும் தலைமையிடத்தில் நல்ல பேர் வாங்குவதற்காக அலையும் ஜிகினா
கூட்டம் உங்கள் நூலை அதிக விலைக் கொடுத்து வாங்கும் போது, மேற்கண்ட இறுதி
சடங்குதான் ஞாபகத்திற்கு வந்தது சை.பீர் அவர்களே.. உங்கள் படைப்புகள் சவமான
அவமானகரமான தருணம்.
எல்லாம் முடிந்ததும் உங்கள் அடுத்த பிறவித் தோழர் மாண்புமிகு ச. சாமிவேலு
அவர்கள் மைக் முன் பெருமை பொங்க நின்று திரண்ட பணத்தொகையை அறிவித்தார். ரி.
ம. 61 ஆயிரம் சொச்சம். Are you so cheap ???