|
முன்குறிப்பு:
வல்லினம்
அச்சு இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது. இணைய இதழாக அது தொடர்ந்து வெளிவரும்
என்றபோதிலும், அச்சு இதழ் நிறுத்தப்பட்டதன் நெருடல் தொடர்ந்த வண்ணமே
உள்ளது. வல்லினம் குறித்து ம. நவீன் "வல்லினம் வளர்ந்த கதை" என்ற தலைப்பில்
www.anjady.blogspot.com என்ற வலைப்பூவில் விபரமாக எழுதியுள்ளார். 'காதல்'
சிற்றிதழின் தொடக்கம், பின் பொருளாதார நெருக்கடியால் அது நிறுத்தப்பட்டது,
அதன்பின் தனியொருநபர் மூலதனமாக இன்றி பலரின் உதவியுடன் வல்லினம் இதழின்
பிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்து அந்த கட்டுரை விரிவாக விளக்கியுள்ளது.
தற்போது வல்லினம் அச்சு இதழ் நிறுத்தப்பட்டதற்கு, தொடர்ந்து சமரசம் செய்து
கொள்ள முடியாத மனப்போக்கே அன்றி பொருளாதாரப் பிரச்னை ஒரு முக்கியக் காரணம்
அல்ல.
சிற்றிதழ்கள் தொடங்கப்படுவதும் பின்பு நிறுத்தப்படுவதும் ஒரு சாதாரண
நிகழ்வுதான். தமிழகத்தில் இது காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது.
மலேசியாவில் சமீப காலத்தில் அந்தப் போக்கினை நாம் பார்க்க முடிகின்றது.
மொட்டு பூத்து உதிர்வது போல, தெருநாய் சாலையில் அடிப்பட்டு
சதைத்துண்டங்களாய் கரைவது போல. பூ உதிர்வது கண்டு அதிர்ந்து போகின்றவரா
அல்லது ஒரு தெருநாய் இறப்பைக் கண்டு விசனப்படுபவரா? அப்படி என்றால் நீங்கள்
மனிதராக இருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு அழகு என்று எதுவும் இல்லை, பல
வேளைகளில் ரோமங்கள் உதிர்ந்து சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும்,
அவ்வப்போது மனிதர்களை கடித்து வைக்கும் தன்மைகளையுடைய ஒரு தெருநாயின்
இருப்பில் யாருக்கு என்ன லாபம்?
விளம்பரப்பகுதி:
சமீபத்தில் தோழி ஒருவருடன், Harris புத்தகக் கடைக்கு போயிருந்தேன். (Harris
புத்தகக் கடை, Popular புத்தகக் கடையின் ஒரு பிரிவு). 'தோழி ஒருத்தியுடன்'
என்பதை நான் குறிப்பிடக் காரணம் உள்ளது. இதற்கு முன்பு எந்த தோழியுடனும்
புத்தகக் கடைகளுக்குப் போனதாக நினைவில்லை. தோழிகளுடன் போவதற்கு நிறைய
இடங்கள் உண்டு. புத்தகக் கடைகள் அதில் சேர்த்தி இல்லை. தோழி ஒரு ஆசிரியர்.
மேலும் ஆங்கில இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். தனக்கு சில புத்தகங்கள் வாங்க
வேண்டி இருப்பதாக கூறினார். நானும் சில ஆங்கில புத்தகங்கள் வாங்க வேண்டி
இருந்தது. Starbucks Cafe-வில் cappucino அருந்தி விட்டு (இது போன்ற
இடங்கள் தோழியருடன் செல்வதற்கு மிகவும் உகந்தவை) Harris கடைக்குள்
நுழைந்தோம். ஜொகூர் பாரு, Jusco Tebrau City பேரங்காடியின் கீழ்த்தளத்தில்
உள்ள பெரிய புத்தகக் கடை அது.
எம்.பி.எச் (MPH), போப்புலர் (Popular) புத்தகக்கடைகளுக்கு நீங்கள் ஏற்கனவே
சென்றவராகயிருந்தால், ஹரிஸ் புத்தகக்கடையின் அமைப்பையும் அவ்வாறே கற்பனை
செய்து கொள்ளுங்கள். நான் புத்தகக்கடையின் அமைப்பை இங்கே
விவரிக்கப்போவதில்லை. விசயம் அது இல்லை என்பதால்.
நான் தேடிச்சென்ற புத்தகங்களை குறிப்பிட்ட பகுதியில் காணாமல், கடை
உதவியாளருடன் அது குறித்து பேசிக்கொண்டிருந்தேன். நான் குறிப்பிட்ட
புத்தகப்பெயர்களைக் கணினியின் தகவல் தளத்தில் உள்ளிட்டுத் தேடிப்
பார்த்தார். பிறகு கைவிரித்தார். மலேசியா முழுவதுமுள்ள ஹரிஸ் மற்றும்
பாப்புலர் கடைகளில் அந்தப் புத்தகங்கள் கிடைக்காது என கூறினார். அவற்றை
பெறுவதற்கு வேறு வழிகள் உண்டா என்று விசாரித்தேன். அமசோன் (Amazon)
இணையத்தளம் மூலம் வாங்கலாம் அல்லது எம்.பி.எச் புத்தகக்கடைகளில்
தேடிப்பார்க்கலாம் என்றார்.
சிறுவர் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தேடி அப்பகுதிக்கு சென்றார் தோழி.
நான் பின்தொடர்ந்தேன். சிறுவர்கள் அமர்ந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக,
சதுர வடிவில் தாழ்வான ஒரு அமைப்பை உள்ளடக்கி, சுற்றிலும் புத்தக
அடுக்குகளைக் கொண்டு அமைந்திருந்தது அப்பகுதி. ஏறக்குறைய 20 சிறுவர்கள் (4
முதல் 8 வயதிற்குள் இருக்கலாம்), அப்பகுதியை நிறைத்திருந்தனர். சிலர்
பெற்றோர்களின் அருகில் அமர்ந்து கொண்டு தன் இஷ்டத்திற்கு புத்தகங்களை
புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர், புத்தகங்களை அடுக்குகளிலிருந்து
எடுப்பதும் பின்பு வைப்பதுமாக இருந்தனர். சிறிது நேரம் இந்தச் சூழலை
அவதானித்து கொண்டிருந்தேன். அச்சிறுவர்கள் அங்குள்ள புத்தகங்களைக்
கையாள்வதை பார்க்கையில் எனக்குச் சில சந்தேகங்கள் தோன்றி மறைந்தன.
தோழியிடம் கேட்டேன். சிரித்து கொண்டே அது அப்படித்தான் என்றார்.
அப்பகுதியிலுள்ள புத்தகங்களில், அச்சிறுவர்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு
என்றார் தோழி. புத்தகங்கள் கசங்குவதும், பக்கங்கள் கிழிவதும் ஒரு சிக்கலே
இல்லை என்பது கூடுதல் தகவல்.
விசயம் இதுதான். சிறுவர் பகுதியில் நான் பார்த்த அத்தனை பேரும் சீனர்கள்.
ஒரு இந்தியரோ அல்லது மலாய்காரரோ இல்லை. இப்போது மட்டும்தானா அல்லது
எப்போதும் அப்படித்தானா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தோழியிடம்
விசாரித்தேன். தான் பார்த்தவரை பெரும்பாலும் அப்படித்தான் என்றார்.
சமயங்களில் மட்டுமே, சீனரைத் தவிர்த்த வேற்று இனத்தவர்களை அங்கு
காணமுடியும் என்றார். இந்தியப் பெற்றோர்கள் கூட்டங்கூட்டமாக பிள்ளைகளை
அழைத்துக் கொண்டு வேறு புத்தகக்கடைகளைப் புரட்டி போட்டுக்
கொண்டிருக்கிறார்கள் போலும். எனக்குத் தெரியவில்லை.
அந்தச் சூழல், வீடு திரும்பும் வரையில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்திக்
கொண்டே இருந்தது. வாசிப்புப் பழக்கம், மொழிப் பற்று போன்றவற்றை
சிறுவயதிலேயே தங்கள் குழந்தைகளின் எண்ணத்தில் பதியவைப்பதில் சீனப்
பெற்றோர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை கண்கூடாக கண்டதில் ஏற்பட்ட அதிர்வலைகள்
அவை.
பின்குறிப்பு:
'பஹாசா ஜீவா பங்சா' (bahasa jiwa bangsa) என்றொரு பழமொழி மலாய் மொழியில்
உள்ளது. மொழியே ஓர் இனத்தின் ஜீவன் என்பது அதன் பொருள். மொழியை தொலைத்து
விட்டு அல்லது வழக்கொழிய செய்து விட்டு, தான் குறிப்பிட்ட இந்த இனத்தினன்
என்று சொல்லிக் கொள்வதும், சவம் என்று சொல்வதும் ஒன்றுதான். மொழியாகிய
ஜீவன் அழிந்து விட்டபின்பு இனமென்பதே சவத்திற்கு சமமானதுதானே.
நம் மலேசியத் திருநாட்டில் அனைத்து இனத்தினரும் மிகவும் நியாயமுடன்,
சரிசமமாக நடத்தப்படுகிறார்கள். மலாய் மொழி, மொழிச்சார்ந்த இலக்கியம்
மற்றும் மலாய் பண்பாடு ஆகியவற்றை தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கும்,
நிலைநாட்டுவதற்கும் இந்நாட்டு அரசாங்கம் எந்தளவு மெனக்கெடுகிறதோ அதே அளவு
மெனக்கெடல் தமிழ் மற்றும் சீன மொழி சார்ந்த விசயங்களுக்கும் உள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளதற்கொப்ப, அரசாங்கம் கடந்த
50 ஆண்டுகளில் தேசிய பள்ளிகளின் வளர்ச்சிக்கு எந்தளவு உழைத்ததோ அதே அளவு
உழைப்பையும் அக்கறையையும் தமிழ் மற்றும் சீன தேசிய மாதிரி ஆரம்பப்
பள்ளிகளும் பெற்றன.
இதனால் மிகவும் திருப்திப்பட்டுக்கொண்ட இந்தியர்கள், கடந்த 50 ஆண்டு
காலமாகவே அரசாங்கத்திடம் தங்களை முழுமையாக அர்பணித்து வந்துள்ளனர்.
முழுமையான அர்பணிப்புக்குப் பின்பு, அரசாங்கத்தை மீறி செயல்படுதல்
நியாயமாகாது, விசுவாசமாகாது.
ஆனால் இந்தச் சீனர்களைப் பாருங்கள். விசுவாசம் சிறிதும் இல்லாதவர்கள்.
அரசாங்கம் செய்வதையும் பெற்று கொண்டு, தன்னிச்சையாகவே வேறு பல வழிகளிலும்
தங்களை முன்னிறுத்திக் கொள்ளப்பார்க்கின்றனர். சீனப் பள்ளிகளுக்கென
தனிப்பட்ட வாரியத்தினை அமைத்து நிர்வகிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும்
தவறாமல் பலநோக்கு மண்டபத்தை அமைத்து, அதனை வாடகைக்கு விடுவதன் மூலம்
கிடைக்கும் வருமானத்தை அப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு
பயன்படுத்துகின்றனர். கட்டுப்பெட்டித்தனமாகவும் சிறிதும் தேசிய நோக்கு
இல்லாமலும் சீனப்பிள்ளைகளை, கட்டாயமாக சீனப்பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.
தங்கள் பிள்ளைகளுக்கு சீனத்தில் எழுதவும் படிக்கவும் கண்டிப்பாக
தெரிந்திருக்க வேண்டும் என்பதில் கண்மூடித்தனமான பிடிவாதத்தில் உள்ளனர்.
நாட்டின் பொருளாதார மையமாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, தனியார் துறை
அலுவல்கள் பெரும்பாலானவற்றில் சீனமொழி இடம்பெற்றே ஆகவேண்டும் என்பதில்
குறியாய் உள்ளனர். சீனமொழிச் சார்ந்த பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி,
அது தரும் வசதிகளை தங்களுக்குள்ளாகவே அனுபவித்துக் கொள்கிறார்கள்.
(இந்தியர் மற்றும் மலாய்காரர்களில் பெரும்பாலோருக்கு சீனமொழி தெரியாது.
அதனால், இரும்படிக்கிற இடத்தில் ஈ-க்கு என்ன வேலை?)
பின்-பின்குறிப்பு:
மலேசியப்
பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் "ஒரே மலேசியா (1Malaysia)"
என்ற முழக்கத்துடன் அதிகாரத்திற்கு வந்து, ஆகஸ்ட் 2009 முடிய ஏறக்குறைய
ஐந்து மாதங்கள் ஆகியிருக்கின்றது. மிக்க மகிழ்ச்சி. இந்த "ஒரே மலேசியா"
என்ற கொள்கையை நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்க்கும் வண்ணம்
பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மிக்க மகிழ்ச்சி. அந்த
முயற்சிகளில் ஒன்றாக www.1malaysia.com.my என்னும் முகவரியில் அகப்பக்கம்
ஒன்றினையும் உருவாக்கியுள்ளார். மிக்க மகிழ்ச்சி. அது அவரது சொந்த
இணையத்தளம் என்றும், எந்தவொரு அரசாங்கம் சார்ந்த அமைப்பும் அதை
நிர்வகிக்கவில்லை என்றும் 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)' என்ற
பகுதியில் அந்த இணையத்தளத்தில் காணக்கிடைக்கின்றது. மிக்க மகிழ்ச்சி. தனது
நெடிய அரசியல் பாரம்பரிய ஞானத்தை அடிப்படையாகக்கொண்டு, அந்த இணையத்தளத்தை
மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் அமைத்துள்ளார். மிக்க மகிழ்ச்சி.
சீனத்தில் கேட்கப்படும் கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து,
அவற்றிற்குத் தக்க பதிலையும் தவறாமல் தருகிறார். மிக்க மகிழ்ச்சி. அந்த
இணையத்தளத்தில் தமிழுக்கு இடமில்லை. மிக்க மகிழ்ச்சி. சில காலத்திற்கு
முன்பு ஏர் ஆசியா (Air Asia) விமான நிறுவனத்தின் அகப்பக்கத்தில் மலாய்,
ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளுடன் தமிழும் இடம்பெற்று பின்னர் போதிய
வருகையாளர்கள் இன்றி தமிழ்ப் பகுதி நீக்கப்பட்டது. எனவே, "ஒரே மலேசியா"
இணையத்தளத்தை அமைக்குமுன்னர் டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்கள், டத்தோ டோனி
பெர்ணான்டஸை (ஏர் ஆசியா தலைமை செயல்முறை அதிகாரி) கலந்தாலோசித்திருப்பார்
என்று நம்புவோமாக. மிக்க மகிழ்ச்சி.
|
|