|
மொழியின்
அடிப்படை தத்துவம் புரிதல். ஒருவர் சொல்ல வரும் செய்தியை மற்றொருவர்
விளங்கிக் கொண்டு அதற்கு பதில் செய்தியைத் தந்து விட்டால், அந்த மொழி
வெற்றிப் பெற்றதாகி விடுகிறது என மொழியியல் கூறுகிறது. இந்த அடிப்படை
தத்துவத்தை நிறைவேற்ற மொழிக்கு எவ்வகையான ஆபரணங்களும் தேவையில்லை
எனத் தோன்றுகிறது. வெற்றிப் பெறுகின்ற அந்த மொழி எழுத்தாக அமையலாம்,
வரைப்படமாக அமையலாம், கோடாக இருக்கலாம், அசைவாகக்கூட இருக்கலாம். மொழி,
எழுத்திலும் நாவிலும் மட்டும் உயிர்த்திருக்கவில்லை. சகல உடல்
உறுப்புகளிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு மாதிரியான மொழி உலகம் இருப்பதைப் பல
தருணங்களில் உணர்ந்துள்ளேன். எனது மொழிதான் சிறப்பானது என ஒவ்வொருவரும்
ஏதோ ஒரு வகையில் கூட்டம் போட்டு பறைசாற்றிக்கொள்கின்றனர். இதில் எனக்கு
துளியளவும் உடன்பாடில்லை. ஒவ்வொருவரும் தனது மொழி உலகத்தைவிட்டு
மற்றொருவரின் மொழி உலகத்திற்குள் புகும்போது இதற்கான காரணத்தை நிச்சயம்
உணர்வர்.
முதுகலை பட்டப்படிப்பிற்கான இரண்டாம் பருவம் தொடங்கியதும் எல்லா
மாணவர்களையும் போன்று நானும் எனது துறைக்கான பாடங்களை அலசி ஆராய்ந்தபின்
இரண்டு பாடங்களை மட்டும் தேர்வுச் செய்தேன். பெரும்பாலும், பருவம் தொடங்கிய
முதல் இரண்டு வாரங்கள் பல்கலைக்கழக மாணவர்கள், பாடங்களைத் தேர்வுச்
செய்தப்பின் வகுப்பில் கலந்து பார்வையிடுவர். அப்பாடத்தின் உள்ளடக்கம்,
விரிவுரையாளர் போதிக்கும் விதம் பிடித்திருந்தால் அந்த வகுப்பிலேயே
பாடத்தைத் தொடர்வார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் இந்த இரண்டு
வாரங்களை ‘தேனிலவு’ வாரமென்றும் ‘விண்டோ ஷோப்பிங்’ செய்யும் வாரமென்றும்
அழைப்பர்.
வகுப்பு தொடங்கி இரண்டாவது நாள். 20 நிமிடங்களுக்குப் பிறகு, விரிவுரையாளர்
வகுப்பினுள் நுழைந்தார். வந்திருந்தோரின் வருகையைப் பதிவு ஏட்டில் பதிவுச்
செய்து விரிவுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு முறை வகுப்பில் அடங்கியுள்ள
எங்களின் முகத்தை நோட்டமிட்டுக் கொண்டே “அந்தோணி பெலும் சம்பாய்...? கித்தா
துங்கு உந்தோக் அந்தோணி செகஜாப்”, (அந்தோணி இன்னும் வரவில்லையா? நாம்
அவருக்காக சிறிது நேரம் காத்திருக்கலாம்) என்றார்.
காத்திருந்த அந்த பத்து நிமிடங்களில், “அந்தோணி யார்?” என்ற ஆராய்ச்சியிலே
கழிந்தது. நானும் எனது தோழியும்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.
விரிவுரையாளர் காத்திருக்கும் அளவிற்கு அந்த அந்தோணி யாராக இருக்கும் என்ற
ஆவல் பிறந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எந்த மாணவர்களுக்காகவும்
காத்திருக்க மாட்டார்கள். வகுப்பில் நுழைந்ததும் விரிவுரையைத் தொடங்கி
விடுவார்கள். மேலும் முதல்நாள் வகுப்பில் அந்தோணியின் பெயர் எங்கள் வகுப்பு
பெயர் பட்டியலில் இல்லாததும் எங்களைக் குழப்பமடையச் செய்தது.
பத்து நிமிடம் கழித்து, அந்தோணி வந்து நுழைந்தார். சுமாராக இருந்த அந்தச்
சீன இளைஞன் புன்னகைத் தந்து நாற்காலியில் உட்கார்ந்தார். புத்தகப்
பையிலிருந்து பேனாவும் ஒரு டைரியையும் வெளியே எடுத்து விரிவுரையைக் கேட்க
தயாரானது போல் தோன்றியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பெண்மணி
நுழைந்தார். நாற்பது வயதைத் தாண்டியிருந்த அந்தப் பெண்மணி, அந்தோணியின்
அம்மாவாக இருக்குமோ என நினைத்துக் கிசுகிசுத்தோம். அவர் அந்தோணியின்
எதிர்புறம் உட்கார்ந்த போது, ஏன் அந்தோணியின் அம்மாவிற்கு இவ்வளவு
முன்னுரிமை? என மீண்டும் கேள்விகள்.
விரிவுரையாளர் உரையைத் தொடங்கலானார். அந்தப் பெண்மணி கைகளை அசைக்கத்
தொடங்கினார். விரிவுரையாளரின் உரையை தனது கண், வாய் அசைவு, கை அசைவுகளில்
அந்தப் பெண்மணி அந்தோணிக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அந்தோணியும்
அசைவுக்கு மறு அசைவு தந்து தனது புரிதலை வெளிக்கொணர்ந்தார். எனக்கு மனம்
கனத்தது. உடல் தளர்ந்தாற்போல் ஆனது. மௌனம் சூழ்ந்த வெளியில் கலந்தேன்.
அந்தோணி காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு இளைஞன் எனப் பிறகு புரிய
வந்தது. மனதில் எழும்பிய எல்லா கேள்விகளும் ஒடுங்கிப்போயின.
அந்நாள் வரை காது கேட்காத வாய் பேசாதவர்களைப் பற்றி
படித்திருந்திருக்கிறேன்; கேள்விப்பட்டிருக்கிறேன்; தூரத்திலிருந்து
கவனித்திருக்கிறேன். ஆனால், பக்கத்திலிருந்து அவர்களை உணர்ந்து கொண்டது
இதுவே முதல்முறை. அந்தோணியின் அம்மா என்று நினைத்த அவர், உண்மையில்
அந்தோணியின் ஆசிரியர். அவர் கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில்
அசைவுமொழித் துறையில் சிறப்பு பட்டம் பெற்றவர். சிறு வயது முதல்
அந்தோணியின் நிழலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அந்தோணியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்தோணியின் மொழி
உலகம் வியப்பாகத் தோன்றியது எனக்கு. மனதில் எழும் கேள்விகளையும் ஆசைகளையும்
எத்தனை முறை இறக்கடித்திருப்பார் எனத் தெரியவில்லை. இவரைப் போன்றவர்கள்
சராசரி மனிதர்களைவிட ஆற்றல் அதிகம் நிறைந்தவர்களென்று
படித்திருக்கின்றேன். அந்தோணி கணினி துறையில் இளங்களைப் பட்டம் பெற்றவர்
என்றும் அவர் புத்ராஜெயாவில் பணிப்புரிகிறார் என்றும் அவரின் ஆசிரியர்,
சுயமாக அந்தோணி வாகனத்தையும் செலுத்துவார் என்றும் தெரிவித்தார்.
விரிவுரையாளர் சொல்லும் குறிப்புகளை எனது குறிப்பு புத்தகத்தில் பல
பக்கங்களில் பதிவு செய்து கொண்டே வந்தேன். அந்தோணியின் நோட்டில் வெறும்
சொற்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தன. விரிவுரையாளர் புது புது
வார்த்தைகளையும் சில அறிஞர்களின் பெயர்களையும் அறிமுகம் செய்தார். இது
அந்தோணிக்குப் புரிந்திருக்குமா என அந்தப் பெண்மணியை வினவியப் போது, அவர்
அளித்த விளக்கம் மிகவும் திருப்தி அளித்தது. “ஒவ்வொரு முறையும் இது போன்ற
புது புது வார்த்தைகளை அந்தோணிக்கு எழுத்து அசைவுகளாகச் செய்து
காட்டுவேன். அப்படிச் செய்யும் பொழுது அவர் விரைவாக எழுத்துக் கூட்டி அந்த
வார்த்தை என்னவென்று அறிந்து கொள்வார். அசைவு மொழியின் வடிவம்
ஆங்கிலத்திலேயோ அல்லது மலாய், சீன, தமிழ் மொழியிலேயோ அமைவதில்லை. அது
அசைவுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த மொழி. எழுத்து வடிவங்களை மட்டும்
பயன்படுத்திக் கொள்கிறோம் வாசிப்பதற்கு. மற்றவை எல்லாம் அசைவுகள் மட்டும்
தான். அந்தோணிக்கு வார்த்தை பதிவுகள் மட்டுமே அவசியம். அந்த வார்த்தைகளைக்
கொண்டு அன்றைய பாடத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது.
அதனால்தான் அவர் உங்களைப் போன்று பக்கம் பக்கமாக எழுதுவதில்லை.”
அசைவுமொழியைக் காட்டும் இது போன்ற ஆசிரியர்கள், பூ அல்லது நிறைய
வண்ணங்கள் கலந்த ஆடைகளை அணிய முடியாது. அது பார்வையின் வேகத்தையும்
அர்த்தங்களையும் திசை மாற்றக்கூடும். மொழிப்பெயர்ப்புத் துறை நாம்
நினைக்கும் அளவிற்கு சுலபமான விஷயம் இல்லை. சாதாரணமாக, நம் கண் முன் நடந்த
ஒரு சின்ன செய்தியை, ஒரு முறை வர்ணித்துக் கூறியது போன்று மற்றொரு முறை
அதேபோல வர்ணிக்க இயலாது. நிச்சயம் சில குறைப்புகளும் சேர்ப்புகளும்
இருக்கும். விரிவுரையாளர் கூறும் புது புது வார்த்தைகள், சொல்ல வரும்
கருத்துகள் எந்தவொரு பிறழ்வுகளும் இன்றி அசைவுகளைக் கொண்டு புரிய வைப்பது
சாதனைதான்.
மேலும், அந்தோணி அந்தப் பெண்மணியை நூறு சதவீதம் நம்புவதை வார்த்தைகளால்
சொல்லமுடியாத உணர்வுகளாக என்னுள் உலாவுகின்றன. அந்தோணியின் கண்கள்
அந்தப் பெண்மணியையே கூர்ந்து நோக்கியபடி இருந்தன. அந்தப்
பெண்மணிதான் இந்த உலகத்தை அந்தோணி அறிய பயன்படும் ஒரே ஒரு
கண்ணாடி. தனது கல்வி குறித்தான எந்தப் பயமுமின்றி தடுமாற்றமில்லாமல்,
அந்தப் பெண்மணி காட்டும் அசைவை நம்பி கற்றுக் கொள்வது மொழிப்பெயர்ப்புத்
துறையின் கடினத்தையும் நம்பிக்கையையும் காட்டியது.
அந்தோணியின் நடவடிக்கைகள் மேலும் என்னை ஈர்த்தபடி இருந்தன.
அந்தோணியிடம் எப்படியாவது நட்புக் கொள்ள எண்ணம் தோன்றியது. நான் அவரோடு
நட்புக்கொள்ள ஆசைபடுவதாக அந்தப் பெண்மணியிடம் கூறினேன். அந்தப் பெண்மணி
சைகையிலேயே அதை அந்தோணிக்கு உணர்த்தினார். எனது தொடர்ந்த கேள்விகளை
உள்வாங்கிய பெண்மணி அதை அந்தோணியிடம் கூற அதற்கான பதில்களைப்
பெற்று மீண்டும் அந்தப் பெண்மணி எனக்குத் தெரிவித்தார்.
நான் அந்தோணியிடமே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.
"ஏன் இவ்வளவு குறைவாகக் குறிப்புகள் எழுதியுள்ளீர்கள்?"
அந்தோணி அந்த ஆசிரியரிடம் அசைவுகளில் கூறியது எனக்கும் புரிந்தது...
"எனக்கு நிறைய கண்கள் உண்டு."
|
|