|
அண்ணாச்சி
சை.பீர் அவர்களுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்,
“சௌக்கியந்தானே அண்ணாச்சி?”
“என்னோட சௌக்கியத்துக்கு என்ன தம்பி கொறச்சல்? இந்த நாட்டு புத்தக
வெளியீட்டு வசூல்ல ரெண்டாவது சாதனையப் படச்சிட்ட எனக்கு சௌக்கியத்துக்கு
என்ன தம்பி கொறச்சல் இருக்க முடியும்”னு மொகமெல்லாம் பல்லா- அதிர்வேட்டுச்
சிரிப்போட உங்க சாதனைய நெனச்சு ஒரு கணம் மெய்மறந்து இறுமாந்து- அன்னக்கி
ஒருநாள் மேடையில் ரொம்பவும் வளஞ்சு நெளிஞ்சு போன முதுகெலும்ப, சிரமப்பட்டு
நிமுத்தி, ஒய்யாரமா நின்னு நீங்க போஸ் குடுக்கிற அழக மனக்கண்ணால இங்கருந்தே
பாத்து அகமகிழ்ந்து பூரிச்சு நிக்கிறேன், அண்ணாச்சி, வாழ்த்துக்கள்.
இந்தச் சாதனை புரிய ஒரு ஐம்பதாண்டு காலமா எத்தன கடுமையான உழைப்பையும்
தியாகத்தையும் நீங்க மேற்கொண்டிருக்கீங்க என்பத என்னைப்போல மூத்த தலைமுறை
எழுத்தாளர்களாலதான உணர்வுபூர்வமா உணர முடியும்?
அன்புச்செல்வன் என்கிற இன்னுமொரு அண்ணாச்சியும், இதுபோன்ற வசூல் சாதனை
புரிய ‘தக்காரைக்’ கொண்டு கடுமையாகப் பலமுறை உழைத்துள்ளார் எனினும், இந்தப்
போட்டியில், இந்தத் தள்ளாத வயதிலும், ஒரு வாலிபனின் மிடுக்குடன், அனாயசயமாக
ஓடிவந்து, முந்திச் சென்று, கோப்பையைத் தட்டிச்சென்ற பெருமை என்னவோ
உங்களையே சாரும் அண்ணாச்சி.
நாம் தேர்வு செய்து ஈடுபாட்டுடன் உழைக்கும் துறை எதுவாக இருப்பினும்,
அத்துறையில் இயக்கம் கொண்டிருக்கும் மறைவான வெற்றிக்கான சூட்சுமங்களின்
முடிச்சவிழ்த்து- உண்மையைக் கண்டறியும் வரை எவரும் எத்துறையிலும் வெற்றிக்
காண்பது அரிது. யாரோ ஒரு சில புண்ணியவான்களுக்கு மட்டுமே அந்த முடிச்சுகளை
அவிழ்க்கவும் அதன் நுட்பங்களை அறிந்து வெற்றி பெற்ற மனிதனாக உலா வரவும்
தேவையான மதிநுட்பம் வாய்க்கிறது.
அந்த வகையில் ஒரு ஐம்பதாண்டுக்கால உழைப்பின் பின்னணியில் தாங்கள் கண்டடைந்த
அந்த பிழைப்பு என்கிற தாரக மந்திரம், உங்களை இன்று, ஒரு வசூல் மன்னனாக இந்த
இளிச்சவாய் சமூகத்திற்கு அடையாளப்படுத்தியதோடு அல்லாமல்- இந்நாட்டு
புத்திலக்கியப் பரப்பில் ஒரு புதிய உற்சாக அலை பெருக்கெடுத்தோட உந்து
சக்தியாகவும் மையம் கொண்டுள்ளதைக் காண உவகை ஊற்றெடுக்கிறது. நன்றி உணர்ச்சி
மேலிட மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க நீங்கள் வாசம் கொண்டிருக்கும்
தென்புலம் நோக்கி இருகரங்கூப்பி கண்ணீர் மல்க நிற்கத் தோன்றுகிறது
அண்ணாச்சி. இனி வரும் காலங்களில் அண்ணாச்சியின் அடியொட்டி இன்னும் பல வசூல்
சாதனைகள் இங்கே- நம் தமிழ் இலக்கிய உலகில் நடைபெறும் சாத்தியம் பிரகாசமாக
உள்ளது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
என்றாலும் அண்ணாச்சி, எனக்குள் ஒரு சிறு உறுத்தல். அண்ணாச்சியின் இந்த
இமாலய வசூல் சாதனையை எண்ணி பெருமிதம் கொள்ளும் பெருந்தன்மை என்னைப் போன்று
இங்கே எத்தனை பேருக்கு இருக்கும் என்பது குறித்து எனக்கொரு ஐயப்பாடு உண்டு.
அதிலும், குறிப்பாக, முதுகுத் தண்டு வளையாமல் இன்னும் விறைத்து நிமிர்ந்து
நிற்கும் இந்த இளம் எழுத்தாளர்கள் கவிஞர்கள் கூட்டம் ஒன்று உங்களின் இந்த
இமாலய வசூல் சாதனையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்கள்
‘தவறான’ கண்ணோட்டத்தில் அதனைப் புரிந்துக் கொண்டு- தொடுப்பதற்குப் பல்வேறு
குதர்க்கமான கேள்விகளை தயார்செய்து கொண்டிருப்பதாக - ஒரு செய்தி
அரசல்புரசலாக காதில் வந்து விழுந்த வண்ணம் உள்ளது.
உதாரணத்திற்கு, அவர்கள் இப்படியொரு கேள்வியை எழுப்பக்கூடும். ஒரு முதிர்ந்த
பண்பட்ட மரியாதைக்குரிய, இந்நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத்திற்குக்
குறிப்பிடத்தக்க அரிய சேவைகள் புரிந்துள்ள ஓர் இலக்கியவாதி, புத்தக
வியாபாரம் (ஆமாம் வியாபாரம்தான்..) என்கிற பெயரில், தனது நற்பெயரையும்
தன்மானத்தையும், தகுதியற்ற மனிதர்களிடம் அடகு வைத்து தன்னைச் சிறுமைப்
படுத்திக்கொள்ளலாமா?
(உங்களை ‘சிறுமை கண்டு சீறுபவர்’ என்கிற அடைமொழியோடு- அன்புச்செல்வன்
அவர்கள் அன்றைய மேடையில் குறிப்பிட்டதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
“என்னங்க அன்புச்செல்வன் அண்ணாச்சி? நீங்களுமா? ‘சிறுமையின்’ மொத்தமான
உருவத்தையே எதிர்ல வச்சுகிட்டு எந்த தைரியத்துல அந்த மேடையில அன்னக்கி
அப்படி பேசனீங்க? அடியாட்கள் யாரும் கூட்டத்துக்கு வரலியோ?”
எனவே, அண்ணாச்சி, உங்கள் நலன் கருதி மீண்டும் அறிவுறுத்துகிறேன். இது
சந்தோஷமான வேளைதான். ஆனாலும், அண்ணாச்சி எச்சரிக்கை உணர்வை கைவிடாமல்
செயல்பட வேண்டிய தருணம். 61000 வெள்ளி வசூல் சாதனையில் திளைத்து
மதிமயங்கிப் போகாமல், எப்போதும் விழிப்புடன் சுற்றுமுற்றும் பார்வையை
சுழற்றிய வண்ணம் இருங்கள். இது பொல்லாத உலகம் அண்ணாச்சி. உங்களின் எதிரிகள்
உஷாராகி- எதிரே அணி திரளத் தொடங்கிவிட்டார்கள் அண்ணாச்சி. பொறாமைக்
காய்ச்சல்தான். வேறென்ன?
இரவு முழுக்க விழித்திருந்து அவர்கள் ‘மௌசை’ கிளிக் செய்யும் ஓசை தொடர்ந்து
கேட்கிறது. உங்களை வீழ்த்துவதற்கான ஆயுதங்களை தயாரிக்க ரகசிய
பாசறைகளுக்குள் அவர்கள் முனைப்புடன் செயல்படத் தொடங்கிவிட்டதற்கான
சமிக்ஞைகள் அவை. அசட்டையாக இருக்கலாமா நீங்கள்? நிதானத்திற்கு இறங்கி
வந்து, உட்கார்ந்து யோசியுங்கள் அண்ணாச்சி.
அப்படியே ஒருவேளை, அந்த இளந்தாரிகள் கூட்டம், கேள்விகள் எழுப்பும்
பட்சத்தில்- அதனை எல்லாம் கேட்டு அண்ணாச்சி மனம் தளர்ந்து போக வேண்டிய
அவசியமில்லை என்பதே எனது அபிப்பிராயம். அந்தக் கேள்விகளை ஆணித்தரமான
பதில்களால் தாக்கி தகர்த்தெறியச் செய்யும் மதிநுட்பம் வாய்த்தவர் தாங்கள்
என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
எண்ணிப் பாருங்கள்- இந்த பூலோகத்தில் உங்களுக்குத் தெரியாதது ஒன்று உண்டா
அண்ணாச்சி?
புத்தன் கண்டடைந்தது வெறும் சூனயம்தான் என்பது தொடங்கி.. தன்மானச் சிங்கம்
சுயமரியாதையின் காவலர் பெரியாரின் கொள்கைகள் தொட்டு... கார்ல் மார்க்சின்
நிலப்பிரபுத்துவ மேலாண்மையின் சிறுமைகள்-- உழைக்கும் வர்க்கத்தினர் மேல்
அவர்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள்- அடிமைத்தனத்தின் சீர்கேடுகள்
வரை...
.... சேகுவாரா என்கிற மாவீரன் - ஆணவமிக்க அதிகார வர்க்கத்தின் முன்பு
என்றுமே தலைவணங்காத, பிழைப்புக்காக அவர்களை அண்டி கூனிக்குறுகி குழைந்து
வளைந்து நிற்காத தன் வாழ்நாளில் சமரசம் என்கிற வார்த்தையை கனவிலும் நினையாத
அந்தப் போராளி..
.... போதாக்குறைக்கு, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே.... இந்த நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்... நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பாடிய பாரதி என்கிற
அக்கினிச் சுடர் குறித்தெல்லாம்....
உங்கள் அளவுக்கு இங்கே பேசியவர்கள் யார்? எழுதியவர்கள் யார்? உங்களுக்குத்
தெரியாத புரியாத நீதியா? அநீதியா? தர்மமா? அதர்மமா?
எனவே அவர்களின் கேள்விகளுக்கு மேற்கண்ட பெரியோர்களின் சொற்களைக் கொண்டே
பதிலடி கொடுக்க உங்களால் இயலும். ஒருவேளை, அவர்களின் அத்தகைய கேள்விகளை
எதிர்கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். அதற்கும் ஓர் எஸ்கேப் வழி
உண்டு அண்ணாச்சி. அதன் பெயர் மடைமாற்று. கவனத்தை முற்றிலும் வேறு திசைக்கு
மடைமாற்று செய்துவிடுங்கள்.
அதாவது, அத்தகைய தருணத்தில் நீங்கள் உங்கள் இதய தெய்வமாக இதுகாறும்
போற்றிவரும் மேல் குறிப்பிட்ட அந்த மேன்மக்களை ஒரு விநாடி கண்மூடி
நினையுங்கள்... அவர்கள் தியாக வாழ்வு குறித்தும், சிந்தனை கொள்கைப்
பிடிப்புகள் குறித்தும்-- அண்ணாச்சி, இதுநாள்வரை மேடைகளிலும் வானொலியிலும்
வாய்கிழிய பேசியுள்ளதையும் பத்திரிகையில் வண்டி வண்டியாக எழுதித்
தள்ளியுள்ளதை எல்லாம் ஒருமுறை ஒருசேர அசைபோடுங்கள்....
அதுபோதும். உங்கள் மனசாட்சி தற்கொலை செய்துகொண்டு அக்கணமே செத்துப்போக
பிணவாடை குடலைப் பிடுங்கும். அசர வேண்டாம் அண்ணாச்சி. கவலைப்படவும்
வேண்டாம்.
காரணம், எதிரிகளின் சதி வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அடுத்த வசூல்
சாதனை நோக்கிய உங்களது மாபெரும் பயணத்தை முடக்கும் எதிரிகளின் கீழறுப்பு
செயலின் ஒரு கூறாகவே உங்களது மனசாட்சியின் தற்கொலையை தாங்கள் புரிந்துகொள்ள
வேண்டும். கெடுமதியாளர்களின் தூண்டுதலின்றி உங்களுக்குள் இதுகாறும்
குடியிருந்து, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த ஒரு ஜீவன்,
உங்களின் அனுமதி இல்லாமல் தற்கொலை புரிந்திருக்க முடியாது என்பதை தாங்கள்
உணர வேண்டும். உணர்வீர்கள்.
எனவே, தயக்கமுற்று மூக்கைப் பிடித்துக் கொண்டு பேனாவையும் தாளையும்
எடுங்கள். தேவையானால், மாமாக் கடைக்குப் போய் சூடாக ஒரு பெரிய கிளாஸ்
தேதாரேக் போட்டுவிட்டு வாருங்கள். அதில் ஒரு கேப்ஸ்யூல் தொங்காட் அலி
சேர்ப்பது கூடுதல் விஷேசம். அப்புறம் பாருங்கள், உடலில் உற்சாகம்
ஊற்றெடுக்கும். நரம்புகள் முறுக்கேறும். தலைக்குள் பூச்சி பறக்கும். அந்தத்
தருணம் பார்த்து, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு லாவகமாக குதித்து ஏறி
அதன் மேல் அமர்ந்து கொள்ளுங்கள் அண்ணாச்சி.
அப்புறம் என்ன? எல்லாம் ரீல்தான். மகா மகா நீளமான தொடர் வண்டிப் பயணம்தான்.
பஞ்சத்தில் வாடும் நமது தமிழ் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளின் பக்கங்களை
நிரப்புவதற்கான அண்ணாச்சியின் சிறு காணிக்கையாக அடுத்த பல வாரங்களுக்காக
இலவசக் கட்டுரைகள் கத்தை கத்தையாக ரெடியாகிவிடும்.
என்னால் ஆன சிறு உதவியாக, முதல் கட்டுரைக்கான ஒரு தலைப்பை மட்டும் இங்கே
தருகிறேன் அண்ணாச்சி, மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். தலைப்பு..
‘தன்மானச் சிங்கம் தென் அமெரிக்க புலி சேகுவராவும் பெரியாரும் - ஓர்
ஒப்பீடு’.
இதை எப்படி முடிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அண்ணாச்சி,
‘சிறுமையைக் கண்டு சீறும்’ மனோநிலையில் ‘தமிழ் பொம்மைகள்’ என்கிற
நாமகரணத்தோடு மௌனத்தில் எழுதிய ஒரு கவிதையின் (கவிதையா?) கடைசிக் கண்ணி
மண்டைக்குள் புகுந்து குறுகுறுத்தது.
அதனைச் சமர்ப்பித்து இப்போதைக்கு மட்டும் விடைபெறுகிறேன் அண்ணாச்சி.
ஆட்டுங்கடா ஆட்டுங்கடா
இந்தத் தமிழ்ப் பொம்மைகளை
எவன் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்.
(குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் - ஆடுங்கடா ஆடுங்கடா என்ன சுத்தி... இது
ஐயநாரு வெட்டுக்கத்தி.. என்கிற புகழ்பெற்ற சினிமா குத்துப் பாட்டு மெட்டில்
பாடி, வேண்டுமானால் கொஞ்சம்- அதே பொம்மைகள் ஸ்டைலில் ஆடியும் பார்த்துக்
கொள்ளலாம். முழுப் பாடலுக்கும் பாடி ஆட விரும்புவோர் - காண்க : மௌனம் ஜனவரி
2009 - பக்கம் 35. காப்பிரைட் சை.பீர்)
நன்றி, வணக்கம்.
இப்படிக்கு,
சீ.முத்துசாமி என்கிற என்றும் உங்களின் பாசமிக்க தம்பி.
|
|