நகர மையத்தின் நடுவில்
கிளர்ச்சியூட்டிய தனிமையும்
ஏறித் தாவிய அரைச் சுவரும்
இரவுகளை மலர்த்திய கொண்டாட்டங்களும்
பிசாசுகளாய் மாறி
பக்கத்து அரும்பொருளகத்தில்
அலைவதாய்
சொல்கிறார்கள்
காதல் உறைந்த பாடல்கள் கருகுகின்றன
வாழ்வைத் தேக்கிய காற்றும் கலைகிறது
தடயங்களை விழுங்கி விட்டு
கவிஞன் ஒருவனின் குறுந்தாடியில்
தற்கொலை செய்துகொண்ட
வரலாற்றின் ஆத்ம சாந்திக்கு
கூட்டு வழிபாடுகள் ஏற்பாடாகின்றன
உயிர்த்தலை
அழித்துக்கொண்டோடும்
சுரங்கச் சாலை
புதுத் தடங்களைச் சொல்லட்டும்
இடம்பெயர்ந்த பழமையின்
வாசனையை
அழுந்தத் துடைத்துவிட்டேன்
நினைவுகளைச் சுமக்கும்
கனவுகளை
இனி எவரும் காணார்.