மௌனத்தை மொழிப்பெயர்ப்பவள்
முன்னாளாகிவிட்ட
ஒருதினத்தில்
சந்தித்துக் கொண்டோம்
சம்பிரதாயமான
நலவிசாரிப்பிற்கு
செவியறியா மொழியை
கண்களால் உதிர்த்திட்டுப்போனாய்
இங்கங்கெணாதபடி
உடலுயிர் ஆன்மாவை
வியாபித்தாட்கொண்டதுன்
திருமௌனம்
என் நிர்வாணப்பொழுதுகளில்
ஊற்று பொய்க்காது
வழிந்தோடியபடியே இருக்கிறது
மொழிப்பெயர்த்துக்
கொண்டிருக்கிறேன்
உன் மௌனத்தை!
சிவப்பில் பயணிப்பவள்
பச்சையில் பயணிக்க
பழக்கப்பட்டவள் நான்
மஞ்சள் நிதானிக்க
சிவப்பு நிற்க
பின்பற்றுதலுக்கான
உத்தரவுகள்
யாரிடமிருந்து,
யாரில் உறைந்து,
யாரை நோக்கி
தெரியவில்லை
பின்பற்றுவது மட்டும்தான்
புனிதமானது
எதைக்கொண்டு
படைத்திட்டான் இவன்
பச்சையும்
சிவப்பும்
பின்வந்த நாட்களில்
பச்சை சாந்தப்படுத்தியது;
நின்றேன்
சிவப்பு உற்சாகப்படுத்தியது;
பயணித்தேன்
எதிருள்ளவர்களுள்ளும்
இடம், வலம் காத்திருப்போருள்ளும்
பச்சையில் நின்று
மஞ்சளில் நிதானித்து
சிவப்பில் பயணிப்பவர்கள்
என்போல் சிலருண்டு!
|