நான்கைப் பெற்றவளை
நாராக்கிக்கொண்டிருந்த
பத்து துப்பாக்கிதாரிகள்
துப்பாக்கிக்கட்டையிடியிடித்து
நசுங்கிய முகத்தில்
ஊதிப்போன உதடுகளால்
எந்தக் கடவுளின் பெயரையோ
சினிமாத்தனமான அற்புதத்துக்கு
ஓதிக்கொண்டிருக்கும் அப்பா
லிங்கயோனி சமர்புரியாமல்
யார் சாமான் பெரிசென்ற
குளியலறைப் போட்டிகளை
மறுஒளிபரப்பு செய்தவாறு
மரக்கட்டைகளான மூன்று தம்பிகள்
வந்தவர் அங்கியில்
காவி ஏன் தங்கவில்லையென
விழித்துக்கொண்டிருக்கும்
நான்
கைகூப்பிக் கதறும்
அப்பாவின் விரல்கள்
பூட்ஸ் கால்களில் கூழாவதை
புத்தர் அவதானித்தார்
மயிரைப் பிடித்துத் தூக்கியெறிந்து
மண்டைகள் சுவர்சித்திரமாவதற்குள்
மூன்று பொடியன்கள்
முண்டியடித்துக்கொண்டு
தன் அங்கிக்குள் பதுங்குவதைத்
தவறாமல் விமர்சித்தார்
மோட்சம் தரும் பாதக்கமலங்களிலிருந்து
பிடுங்கப்பட்டு விரிக்கப்பட்டு
இராணுவ சிகரெட்டுகளின் தீக்கண்கள்
புட்டத்தில் தீய்க்கப்பட்டு
அழுக்கேறிய விரல்கள் என்னுள்
ஆழங்காணத் துழாவுவதை
புத்தர் பதிவுசெய்தார்
அம்மாவின் அலறல்களை
ஆயுதபாணிகளின் குறிகள்
வாயடைத்தன
கல்யாண நாளுக்கு
கட்டிய புடவை
சிறுநீரில் திருநீறானது
தாத்தாவின் தேக்குமர
மேசைமேலிருந்து வேர்விட்ட
தாயின் தொடைகளில் குருதிவரிகள்
மேசைக்காலில் ஒரு பழைய கிறுக்கல்
'நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா'
என படிக்கச்சொன்னது
ஒரு பெண்ணின் புழைக்குள்
கையெறிகுண்டின் கைங்கர்யம்
குறித்து தியானித்த புத்தர்
அமைதி பிரசங்கத்துக்கு நகரும்போது
பெருவெடிப்பில் பளீரிட்டு
அம்மாவின் யோனித்தோல்
அவர் வாயில் ஒட்டிக்கொண்டது
புத்தரின் இராணுவச்சப்பாத்து
சூத்திர உச்சாடனம்
இப்போதும் என் காதுகளில்
அடியெடுத்து வைக்கிறது
இன்னொரு கையெறிகுண்டுவிசை இழுக்க
என் பெயரில்லாப் புதைக்குழித் தேடி
அவர் வந்து கொண்டிருக்கையில்
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி