இதழ் 9
செப்டம்பர் 2009
  தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

வெள்ளிக்கிழமை மாலைகள் குதூகலத்தையும் திங்கட்கிழமை காலைகள் மிகுந்த மனச்சோர்வையும் கொணர்ந்தன. பள்ளிக்குப் போக வேண்டுமென்ற நினைப்பே என் வயிற்றின் அமிலக் கொதிப்பை அதிகரித்தது. பள்ளியை மிகவும் அஞ்சினேன். ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற அசௌகரிய உணர்வுடனேயே பள்ளியில் எனது ஒவ்வொரு நிமிடமும் கழிந்தது. மூன்று வயதில் முதல் முறையாகப் பள்ளிக்குப் போகும் பாலகனைப் போல எனக்குள் பள்ளியைப் பற்றியேற் பட்டிருந்த இந்தப் பயத்தை யாரிடமும் நான் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியாமலே இருந்தது. பழைய பள்ளியையே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த என் மனதுக்குள் புதுப் பள்ளியை விட்டு கிளம்பும் மாலை வேளைகளில்தான் மிக லேசான உற்சாகம் பிறக்கும். அதைச் சொன்னபோதெல்லாம் அம்மாவும் என் வகுப்பாசிரியரும் ஒரே போல, "புது இடத்துல பழகக் கொஞ்சம் நாளாகுமில்ல லா?", என்றார்கள். வகுப்பறையின் இருக்கைகள், சீருடை என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களிலிருந்து பள்ளி வளாகத்தின் அமைப்பு, கற்பிக்கும் முறை போன்ற பெரிய விஷயங்கள் வரை என் மனம் சதா பழைய பள்ளியுடன் ஒப்பிட்டபடியே இருந்தது. சீக்கிரமாகவே அது ஒரு பழக்கமாகிவிட்டதை என்னால் உதறவும் முடியாமலிருந்தது. அவ்வாறான சிந்தனைகளைச் சில சமயம் அண்ணனிடமும் வேறு சில நேரங்களில் அம்மாவிடமும் பகிர்ந்து கொண்டபோதிலும் யாராலும் என் மனவோட்டத்தையும் அது என்னில் கொணர்ந்த பதட்டத்தையும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

எல்லா இடங்களையும் ஒரு சுற்று சுற்றிப் பார்க்கவே ஒருமணி நேரத்துக்கும் மேல் வேண்டியிருக்கும் அளவிலிருந்த பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து, விரைவோட்டப்பயிற்சி என்று அந்த இடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எப்போதும் நிகழ்ந்த வண்ணமிருந்தன. மிகச் சுவாதீனமாகவும் தன்னியல்புடனும் நடந்து கொண்ட இரண்டாமாண்டு மாணவர்களை தயங்கித் தயங்கி நின்ற முதலாமாண்டு மாணவர்களிலிருந்து யாராலும் சுலபமாகப் பிரித்தறிய முடியும். என்னுள் இருந்து கொண்டே இருந்த இரண்டாண்டுகள் முடியும்போது கூட நல்ல நண்பர்கள் அமைவார்களா என்ற ஐயம்தான் ஆக அதிக அழுத்தத்தை கொணர்ந்தது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுமே கற்பித்தலில் சிறந்தவர்களாகவும் நட்புடன் பேசுபவர்களாகவும் இருப்பதாகத்தான் தோன்றியது. பையன்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் நான்காண்டுகள் படித்துவிட்டு, பெண்களும் சேர்ந்து படிக்கும் இந்தப் புதுச் சூழல் என்பதால் மிகப் புதியதாகவும் ஒருவித அசௌகரியமாகவும் இருந்தது. மிகச் சில மாணவிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எப்போதுமே ஒருவித மிரட்சியுடனே காணப்பட்டார்கள். சிறு ஆர்பாட்டத்துக்கும் கத்தலுக்குமே மிரண்டு விடுவதைப் போன்றிருந்த அவர்களைப் பார்த்தபோது குரலை உயர்த்திப் பேசி விடுவோமோ என்றதொரு தயக்கம் எப்போதுமே எனக்கிருந்தது. தவறி அப்படிப் பேசினால் அதை காட்டுமிராண்டித்தனம் என்று கொள்வார்களோ என்றெல்லாம் கூட ஒருவித குழப்பம்.

நாட்கள் செல்லச் செல்ல அம்மா ஒருபுறம், "எப்ப நீ புது ஸ்கூல்ல செட்டில் ஆகி எப்பலா நீ பாடத்துல கவனம் செலுத்த ஆரம்பிக்கப் போற?", என்று கேட்டு என்னை நச்சரித்தார். அப்பாவோ, "உனக்கு படிக்கிற ஐடியா இருக்குதா இல்லையா?", என்று சற்று கடுமையாகவே மிரட்டினார். நேரமிருந்தால், "படிக்கிறத விட இந்த வயசுல வேற என்னலா வேல உனக்கு?", என்று ஆரம்பித்து தன் பள்ளி நாட்களையும் தான் ஏதோ உதாரண மாணவனாய் இருந்தது போன்ற மிகைகளை விரித்து ஒரு பிரசங்கமே செய்தார். நழுவி நகர முடிந்தால், அன்றைய தினம் அதிஷ்டம் நிறைந்ததுதான். சில நாட்களில், இடத்தை விட்டகல விடாமல் ஒருசிறு உறுமலுடன் நிற்கச் சொல்லிதான் என்னில் செய்து வரும் கல்வி முதலீட்டையும் அது ஈட்ட வேண்டிய குறைந்த பட்ச லாபத்தையும் விலாவாரியாக விளக்கி மிகவும் அலுப்படைய வைத்தார். சமீபத்தில் ஏற்பட்டிருந்த என்னுடைய வெறித்த பார்வையுடன் செய்த குருட்டு யோசனைகள், நீண்ட தூக்கங்கள், சோம்பல் போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்னை 'உதவாக்கரை' என்று நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக நிறுவ முயன்றார்.

***

பள்ளி துவங்கி மூன்றாவது வார இறுதியில் வந்த வெள்ளியன்று பள்ளியை விட்டு வெளியேறி, சாலையைக் கடந்து வுட்லண்ட்ஸ் ரயில் நிலையத்தை நோக்கி நான்கடிகள் நடந்ததுமே பின்னால் 'தொம் தொம் தொம்' என்று கேட்ட பேரிரைச்சல் என்னவென்று திரும்பிப் பார்த்தேன். ஒரு நொடி அப்படியே அதிர்ந்துறைந்தேன். நான் நடக்க நடக்க, எனது பள்ளியும் அதிர்வுகளூடே சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் தன்னுடலிலிருந்து தொப் தொப்பென்று உதிர்த்தபடி பெரும்பூதத்தைப் போல என் பின்னாலேயே வந்தது. இதென்னடா வம்பாகிவிட்டது! என்ன செய்வதென்று குழம்பினேன். என்னுடன் வீட்டுக்கே வந்துவிடுமோ என்று நினைத்ததுமே, அதைச் சற்றும் விரும்பாதவனாக பேசாமல் திரும்பி நடந்து பள்ளிக்குள் நுழைந்து நூலகத்தில் அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடிப்போமா என்று ஒரே ஒரு கணம்தான் யோசித்தேன். ரயிலில் ஏறியதும் வேறு வழியில்லாமல் பின்தங்கி நின்று விடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு தொகைவீடுகளூடாக வேகவேகமாக நடந்து சென்றேன். இருமருங்கிலுமிருந்து உயர்மாடிக் கட்டடங்களைத் தகர்த்தபடி பின்னால் வந்தது.

மிக வேகமாக ஓடிச் சென்று கிளம்பவிருந்த ரயிலில் ஏறி அமர்ந்து வெளியில் எட்டிப் பார்த்த போது நான் அதிவேகமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தேன். பள்ளிக் கட்டடம் ரயிலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறித்தபடி நின்று குரோதத்துடன் என்னை முறைத்தது. இடது தொடையை யாரோ லேசாகப் பிராண்டுவ‌தைப் போலிருக்க திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் என்னையே பார்த்துக் கொண்டிருப்ப‌து போன்ற முகத்துடனும் வேறு மாதிரியான ஆடைகளுடனும் ஒருவன். இடையில் ஏதும் கண்ணாடியிருக்கிறதா என்று கையை நீட்டும் போதே, "கண்ணாடியெல்லாம் இல்ல", என்று சொன்னான். சுற்றுமுற்றும் பார்த்தேன். எல்லோரும் அவரவர் உலகில் மூழ்கியிருந்தனர். என் சிந்தனையோட்டத்தை அறிந்தவனாக, "நம்பலையா? உண்மை தாம்பா. நானும் இன்னொரு நீ தான்", என்றான். "ஆமா, உனக்கு இப்பயெல்லாம் ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கிறதில்லையோ? முன்னயெல்லாம் நீ இப்படியில்லயேலா?", என்றவனிடம், "ஆமா, நீ யாரு?", என்று கேட்டேன். "ஓ, என்னத் தெர்லயா உனக்கு? அதான் சொன்னனே, நீ தான் நான். ஆதாவது, நீ இருக்க விரும்பும் நீ தான் நான். கொஞ்ச நாளா உன்னால இருக்க முடியாத உன்னோட பழைய உருவத்த கண்ணாடில பார்த்த மாதிரி இருக்குதா?", என்று புதுமொழியில் கேட்டான். குரலும் கேசமும் உடையும் உடல்மொழியும் அப்படியே என்னைப்போலத்தான் இருந்தான். நேர்த்தியாகவும் அளவாகவும் வெட்டப்பட்டிருந்த முடியை ஒழுங்காகச் சீவியிருந்தான். அவனுடைய கால்சட்டையின் கீழ்ப்பகுதியும் காலணிகளும் அழுக்கின்றித் தூய்மையாக இருந்ததைப் பார்த்ததும் அனிச்சையாக என் கால்கள் இருக்கைக்கடியில் மறைந்தன. எனக்கே சமீபமாக மாறியிருந்த என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லை.

"அதுக்கு தானேலா நான் வந்திருக்கேன். கொஞ்ச நாளா உன்னோடயே இருந்திட்டிருக்கேன்லா. இருந்தும், இன்னைக்கித்தான் நீ என்னக் கவனிச்ச", என்றவனின் முகத்தில் எனக்குப் புரியாததொரு பெருமிதம் மின்னியது. என்ன சொல்கிறான் இவன்? எனக்கே தெரியாமல் என்னுடன் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லும் இவன் யார்? ஒரு வேளை, உலகில் ஒரே உருவம் கொண்ட எழுவர் இருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் ஒருவனோ?

ஒன்றும் சொல்லாமல் விழித்த என்னைப் படித்தவனைப் போல, "ரொம்ப யோசிக்காதலா. போன வாரம் மார்க்ஸ் கொறைஞ்சி போனபோது இருந்த அதே மொகத்தோட இருக்கியே. இன்னைக்கி தான் வகுப்புல முதல் மதிப்பெண் வாங்கினீல்ல? அப்டியும், ஏன்லா உன் மூஞ்சில ஒரு சந்தோசமேயில்ல?" சென்ற வாரம், முதல் தேர்விலேயே மதிப்பெண் மிகக்குறைந்து மிகவும் சஞ்சல மனநிலையில்தான் இருந்தேன். உடலும் மனமும் மிகவும் சோர்வுற்றிருந்ததால்தான் சூழலைக் கவனிக்கவில்லையோ. என்னுடனேயே பேருந்தில் பயணித்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை நினைக்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

சுருக்கமாக, "எனக்கு ஜே.ஸி. லைபே பிடிக்கல்ல", என்றேன். பயணிகள் ஒருவரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கைபேசியில் பேசுகிறேன் என்று நினைத்தார்களோ என்னவோ.

"உன் மார்க்ஸ டீச்சர் சொன்னதும் க்ளாஸ்ல எல்லோரும் கைதட்டினாங்களே லா, அதுக்குக் கூடவா உனக்கு ஒரு உற்சாகமில்ல?"

"நா என்ன ப்ரைமரி ஸ்கூல் ஸ்டூடண்டா? ப்ச், உனக்கெங்க அதெல்லாம் புரியும்? கொறஞ்ச மார்க் கெடைச்சாலும் செகண்டரி ஸ்கூல்லன்னா நான் மகிழ்ச்சியாக இருப்பேன்."

"ஓ, இது மட்டும் பதினாறு வயசுப் பையன் பேசுற பேச்சோ? சரி, அதயெல்லாம் விடுலா. உன்னோட மதிப்பெண் உயர நான்தான் காரணம்ன்றதாவது தெரியுமாலா உனக்கு?"

சற்றே ஆச்சரியத்துடன், "ஆங், அது எப்டி?", என்று கேட்டேன்.

"அப்டி தான்லா", என்றவனின் தொனியில் தீர்மானமும் உறுதியும் தெரித்தது.

"அதான் எப்டினு கேக்கறேன்", என்றேன் அலுப்புடன்.

"மார்க்ஸ் மட்டுமில்லலா, உனக்கு நடக்கற எல்லா நல்லதுக்கும் நான்தான் காரணம்", என்றவனின் குரலில் இருந்த கர்வம் என்னை மேலும் எரிச்சலூட்டியது.

"ஓஹோ... அப்ப மத்ததுக்கெல்லாம்?", என்று கேட்டேன் கேலியுடன்.

"இதென்ன கேள்வி? நீ தான்லா காரணம்", என்றவனை இழுத்து ஓர் அறை விட வேண்டுமென்ற வெறியேற்பட்டது என்னுள். படித்து எழுதியது நான்! இவன் ஏதேதோ அளக்கிறானே! வளவளவென்று பேசியவனிடம் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தேன். வேறு ஏதோ கேள்வி கேட்டவனுக்கு பதிலும் சொல்லவில்லை. "இப்பல்லாம் நீ மனசுக்குள்ளயே பேசிக்கிற, இல்ல? அதான்லா உனக்கு பதிலா நான்,..", என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே கூடவே வந்தவனைக் கண்டாலே ஆத்திரமாக வந்தது. எங்கள் தொகைவீட்டு மின்தூக்கியினுள் என்னுடன் நுழையாமல் வெளியே நின்று கொண்டான்.

அன்றிலிருந்து நான் பள்ளிக்குப் போகும் போதும் திரும்பும் போதும் என்னுடனேயே திரிந்த அவனைப் பொருட்படுத்தாமலிருக்கப் பழகினேன். அவனுடைய பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் ஏதும் பதில் பேசாமல் இருக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால், என் மனதில் ஓடும் சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல சதா பேசுபவனாக இருந்த அவனை அலட்சியப் படுத்தவும் முடியாமல் இருந்தது. எனக்குள் ஓடும் எண்ணங்கள் நின்றால் ஒருவேளை அது சாத்தியமாகியிருக்கலாம்.

***

முதல் காலாண்டு முடியும் போது கிடைத்த ஒரு வார விடுமுறைக்காகவே காத்திருந்து பழைய வகுப்பு நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். உயர்நிலைப் பள்ளியில் நாங்கள் சேர்ந்து செய்த குறும்புகள், அட்டகாசங்கள் எல்லாம் நினைவில் வரிசையாக வந்தன. அவற்றைப் பற்றியெல்லாம் பேசித் திளைக்கும் உற்சாகத்துடன்தான் கிளம்பினேன். தினமும் ரயிலில் சென்று அலுத்துப் போனதில் ஒரு மாறுதலுக்கு அன்றைக்கு பேருந்தில் கிளம்பினேன். வழக்கம் போல மின்தூக்கியினருகில் நின்றிருந்த அவன் பேருந்திலும் என்னைப் பின் தொடர்ந்தான். அருகில் நின்று பயணித்த அவனை நிமிர்ந்து பார்க்கப் பிடிக்காமல் சன்னல் வழியாக வேடிக்கை பார்க்க முயன்றேன். என்னைக் கூப்பிட்ட போதும் அலட்சியப் படுத்தினேன். சற்றே பின்புறம் நின்றிருந்த அவன் என் பிடரியில் தட்டினான். அதை அலட்சியப் படுத்த முயன்றாலும் விடாமல் என் தலையைத் தட்டிக் கூப்பிட்டான். என்னவென்று கேட்டால், "ஒரு தடவ கூப்டா நிமிந்து ஏன்னு கேட்க முடியாதா?", என்றவனின் குரலிலும் முகத்திலும் கோபம். "என்ன?", என்று கேட்டேன்.

"ம்ம்ம், உன் தல. கூப்டும் போது ஏன்னு கேக்கலீல்ல நீ,.. அதுக்கு தண்டனையா உன் அம்மா, அப்பா, அண்ணே மூணு பேரையும் நான் முழுங்கிட்டேனே", என்றான் விகாரமாகச் சிரித்துக் கொண்டே.

தூரங்களும் கால நெருக்கடிகளும் தனக்கில்லை என்று ஏதேதோ சொல்லிப் பீற்றிக் கொண்டான். "நீ வெளிய பார்த்துகிட்டிருக்குறப்பவே நான் உங்க வீட்டுக்குப் போயி திரும்பிட்டேன்லா", என்றான். அதிர்ந்து, "நீ பொய் சொல்ற", என்றதும், "சரி, காட்டட்டுமா? பாரு, இதோ!", என்று வயிற்றுக்குள்ளிருந்து மூவரையும் சரசரவென்று இழுத்து வெளியேற்றிக் காட்டியவன், நொடிப் பொழுதில் மீண்டும் மூவரையும் லபக் லபக் லபக்கென்று விழுங்கி 'ஏவ்'வென்று ஒரு பெரிய ஏப்பம் விட்டான். அவன் நின்ற இடத்தில் பேருந்தின் தரையெங்கும் கோழையும் எச்சிலுமாக ஒரே சொதசொதப்பு.

அதிர்ச்சி விலகி ஆத்திரத்தில் நான் துள்ளி எழுந்தேன். மிகவும் அழுகையாக வந்தது. அவன் கழுத்தை நொறுக்கிவிடும் வேகத்துடன் நெருங்குவதற்கு முன், நிறுத்ததில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவன் பின்னால் அவசரவசரமாக நானும் இறங்கினேன். பின்னால் வரும் என் வேகத்துக்கேற்ப தன் வேகத்தையும் படிப்படியாக அதிகரித்தான். கிடுகிடுவென்று ஓடிச் சென்று அவனை நெருங்கி விட்டேன். அருகில் கிடந்த உருட்டுக் கட்டையைத் தூக்கி தலையில் ஒரே போடாகப் போடுவேன் என்று நானே எதிர்பார்த்திருக்கவில்லை. கண்டிப்பாக செத்திருப்பான். நின்று என்ன ஏதென்று பார்க்காமல் பத்தடி நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்தபோது, வெற்றிக் களிப்புடன் நின்று சிரித்த அவனைக் கண்டு மிரண்டுவிட்டேன். சட்டென்று ஓடி நிறுத்தத்தில் கிளம்பவிருந்த பேருந்தில் டக்கென்று ஏறி விட்டேன். பின்னாலே ஏறி என்னுடன் வந்தவனைக் கண்டுகொள்ளாமல், அண்ணாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே, 'நான் இப்போது மிகவும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு பேசுகிறேன்', என்று பதில் வந்தது. அதைப் பார்த்து நிம்மதியுடன் அப்பாவையும் அம்மாவையும் அழைக்க நினைத்து வீட்டு எண்ணை அழுத்தும் போது, "இப்ப பதில் போட்டது யார்னு நெனச்சலா? நான் தான்", என்றான். நம்புவதா வேண்டாமா என்ற தயக்கத்துடனிருந்த போதிலும் எனக்குள்ளே சிறு கலவரமேற்பட்டது.

"அடேய் மடையா, இனி நானா உன்னைய விட்டு விலகிப் போனாதான் உண்டு. உன்னால என்னக் கொல்ல முடியாதுலா. நா செத்தா நீயும் சாக வேண்டியதுதான். புரியிதா? என் வயித்துக்குள்ள இருக்குற மூணு பேரைப் பத்தியாச்சும் நெனச்சிப் பார்த்தியா? ம்? அந்த பயமாச்சும் வேணாமா உனக்கு?"

என் அளவுக்கு அந்தச் சந்திப்பினால் யாரும் உற்சாகமடைந்ததாகத் தெரியவில்லை. சேர்ந்து படித்த பழைய பள்ளியைக் குறித்துப் பேசவில்லை யாருமே. பழைய நினைவுகளை அவர்களில் மீட்டெடுக்கும் முயற்சியில் பேச முற்பட்ட என்னையும் அவர்கள் பேசவிடவில்லை. வெவ்வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்த பழைய நண்பர்களிடம் ஒரே மாதிரியானதொரு விலகல் தெரிந்ததால் பழைய அன்னியோன்னியத்தைத் தேடத்தான் வேண்டியிருந்தது. யாருடைய வாயிலும் 'நம்ம ஸ்கூல்ல' என்பது போன்ற சொற்கள் வரக் காணோம். எல்லோரும், "எங்க பள்ளிக் கூடத்துல,. ", என்றும், "இதென்ன பிரமாதம், என் பள்ளிக் கூடத்துக்கு வந்து பாருலா, அசந்துருவ,.." என்றும் அவரவர் புதுப்பள்ளியைப் பற்றியே பெருமையாகவும் பெருமிதத்தோடும் அதற்காகவே அன்று அங்கே கூடியது போல பேசிக் கொண்டிருந்தனர். எல்லோரிடமும் பீற்றிக்கொள்ளும் மனோபாவம் மட்டுமே இருந்தது.

அன்றைக்கு நண்பர்கள் பேசிய விவரங்கள் என் மனதில் தரித்திருக்கவில்லை. ஆகவே, அவற்றை அசைபோடவும் வழியில்லை. பொதுவாக, அவர்களின் போக்குகளை மட்டுமே அடுத்து வந்த நாட்களில் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எல்லோருமே புதுப்பள்ளியில் ஒன்றிவிட்டோம் என்பது போலப் பேசிய போதிலும் என்னால் நம்ப முடியவில்லை. நான்தான் நம்பத் தயாராக இல்லையோ. என்னைப் போலவே அவர்களும் தத்தமது புது இடத்தில் ஊன்றச் சிரமப்பட்டு, அதை வெளிக்காட்ட விரும்பாமல்தான் அவ்வாறு பேசிக் கொண்டார்கள் என்று நினைப்பது என் மனதுக்கு மிகவும் உவப்பாக இருந்தது. ஆனால், யோசிக்க யோசிக்க அவர்களின் விலகலில் இருந்த உண்மை என் மனதிற்குள் மிஞ்சியது. ஒருவார விடுமுறையும் திட்டமிட்டபடி கழியவில்லை. திரைப்படம் பார்க்கவோ வேறு எங்கேனும் சுற்றவோ கிளம்பப் பிடிக்காமல் போனது. வெளியே போனால், 'அவன்' பிடித்துக் கொள்வானோ என்ற ஒருவித பயம் வேறு இருந்து கொண்டே இருந்ததால், வீட்டுக்குள்ளே தனியே அடைந்து கிடந்தேன். வெறுமையில் விடுமுறையும் ஓடிப் போனது.

***

பள்ளி திறந்த அன்றைக்கு அதிகாலையில் விழித்த போது அடுத்த படுக்கையில் இல்லாத அண்ணனின் நினைவு அழுத்தியது. குளித்து முன்பு போல ஒழுங்காக உடுத்திக் கொண்டு கிளம்பிய எனக்கு வீட்டில் யாருமே இல்லாததுதான் மிகப்பெரிய விரக்தியாக இருந்தது. விளக்கைப் போட்டுக் கொண்டு தலை சீவி உடை மாற்றிக் கொண்டேன். "லைட்ட ஆ•ப் பண்ணுலா", என்று சீறிக் கொண்டே முகத்தைப் போர்வைக்குள் புதைத்துக் கொண்டு குப்புற‌க் கவிழும் அண்ணாவைச் சீண்டவென்றே அறை விளக்கைப் போடுவேன். "இந்தப் பாலையாச்சும் குடிச்சிட்டுப் போ லா", என்று பாலைக் கோப்பையில் ஏந்திக் கொண்டு பின்னாடி வந்து நின்று குடிக்க வைத்திருப்பார். "ஸ்டேஷனுக்குப் போறதுக்குள்ள முடிச்சிரலாம். ம், இந்தா", என்று சொல்லி காகிதத்தில் பொதிந்த ரொட்டியையும் நீட்டுவார். அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாக காலையில் ஒன்றும் சாப்பிடாமல் கிளம்ப விட்டிருக்க மாட்டார். அரிதுதானென்றாலும் அப்பாவுக்கு நேரமிருந்தால், தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் பள்ளியில் விடுவார். வழியில் கூடவே ஒட்டிக் கொண்டே கழுத்தறுக்கும் அவனிடம் மூவரையும் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்க வேண்டும். குறைந்த பட்சம் என் அண்ணாவை மட்டுமாவது திரும்பக் கொடுத்துவிடுமாறு கெஞ்சிக் கேட்க வேண்டுமென்று வீட்டைப் பூட்டும் போது நினைத்துக் கொண்டேன். அவன் நிற்குமிடத்தில் இல்லை. பின் தொடர்ந்தும் வரக் காணோம். ரயிலில் ஏறியதும் பார்வையைச் சுழற்றி சுற்றுமுற்றும் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.

இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒட்டிப்பிறந்த பிறவியைப் போல உடன் வந்தவன், கூடவே பேசிக் கொண்டிருந்து பழகிய எனக்கு திடீரென்று உடல் குறைபாடு ஏற்பட்டு விட்டதைப் போன்றதொரு உணர்வேற்பட்டது. அவனிடமிருந்து மீட்காமல் விட்ட அப்பா, அம்மா மற்றும் அண்ணாவைப் பற்றிய கவலைதான் அழுத்தி அரித்தது. இனி எப்படி மீட்க?

நுழைவாயிலில் தவழும் குழந்தையாக இன்னொரு நான். என்னை வரவேற்பதற்கென்றே ஏற்பாடு செய்தது போல இருந்தது. கெக்கெக்கென்று சிரித்தபடி கல்லூரி வளாகமெங்கும் தவழ்ந்து தவழ்ந்து வந்த என்னைப் பார்த்துக் கடந்து சென்ற மாணவிகள் உள்ளிட்ட அனைவரும், "ஸோ க்யூட்!", "ஹௌ வெரி ஸ்வீட் !", என்றெல்லாம் கூவிக் கொஞ்சியதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் உள்ளூரப் பெருமையாகத்தான் இருந்தது. அவன் அங்கேதான் எங்கேயோ மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தது போன்றதொரு அலாதி உணர்வேற்பட்டதும் பார்வையைச் சுற்றிலும் ஓட்டினேன். சக மாணவர்கள், ஆசிரியர்கள், சூழல் எல்லாவற்றிலும் லேசான புதியதோர் ஒட்டுதல். முதன்முதலில் அன்று நான் பள்ளியில் இயல்பாக உணர்ந்தேன். மாலையில் வீடு திரும்பியதும் சாவியை எடுத்து கதவு துவாரத்தில் பொருத்துமுன்னர், அம்மா கதவைத் திறந்தார். அப்பாவும் அண்ணாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடக்க முடியாமல் முகம் கோணி நான் அழுததையும் சட்டென்று சமாளித்துக் கொண்டதையும் மூவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். "ஏய், என்னாச்சி? ஏதாச்சும் வம்புச் சண்டைய வாங்கிட்டு வந்திட்டியாலா?", என்று கேட்ட அம்மாவிடம் ஒன்றுமே சொல்லாமல் அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டேன்.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768