|
இன்று
தமிழகப் பதிப்பகங்கள் தமிழகம் அல்லாத பிற நாட்டவரின் தமிழ்
இலக்கியங்களையும் தமது செலவில் புத்தகமாக்க விழைந்துள்ளன. இது ஓர்
ஆரோக்கியமான சூழல்தான். இதன் மூலம் தமிழகப் பதிப்பகங்கள் பெரிய லாபம் அடைய
வாய்ப்பில்லை என்றாலும் நஷ்டம் அடைவதற் கில்லை. அதிலும் பதிப்புத் துறையில்
தேர்ந்த உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களில் புத்தகம்
பதிப்பிக்கப் படுவதன் மூலம் இயல்பாக ஒரு புத்தகம் நல்ல இலக்கியத்திற்கான
அடையாளத்தைப் பெற்றுவிடுகின்றது. மேலும் நானறிந்த வகையில் இது போன்ற
பதிப்பகங்கள் தங்கள் தொழிலை அதன் நிபுணத்துவத்தோடு செய்தும் வருகின்றன.
குறிப்பாக முன்பு எந்தப் பதிப்பகங்களும் கடைப்பிடிக்காதப் பங்குரிமையை இது
போன்ற பதிப்பகங்கள் முறையாக வழங்கி வருவது எழுத்தாளர்களுக்கு ஆறுதலான
விடயம். அதிலும் தமிழக எழுத்தாளர்களுக்கு இது பொற்காலம்தான். இதை ஒரு
முறையான வியாபாரம் எனும் வகையில் அணுக வேண்டுமே தவிர சிலர் சொல்வது போல
‘தமிழ் சேவை’ என்பது அபத்தம். ஆனால் இதில் உள்ள மற்றுமொரு சிக்கலையும் நாம்
அடையாளம் காணவேண்டியுள்ளது.
அத்தனை அச்சு செலவையும் எழுத்தாளனே ஏற்று, தமிழகத்தில் அவற்றை அச்சிட்டு,
மீண்டும் அவற்றைக் கப்பலில் ஏற்றி மலேசியாவுக்கு அனுப்பி, இங்கு புத்தக
வெளியீட்டு விழாவில் ‘தமிழகத்துல அச்சிட்டது’ என பெருமையாகப் பேசும் ஒரு
கலாச்சாரமும் இங்கு மெல்ல பரவி வருகின்றது. ஓரளவு புத்தகங்களைத்
தமிழகத்திலும் இங்கும் அச்சிட்டவன் என்ற முறையில் திட்டமிட்டு செய்தால்
மலேசியாவிலேயே புத்தகம் பதிப்பிப்பது மலிவானது என உறுதியாகச் சொல்வேன். மிக
நேர்த்தியாக தரமான கட்டமைப்புடனும் வடிவமைப்புடனும் அண்மைய காலங்களில்
பா.அ.சிவம், அகிலன், பச்சைபாலன், அருண், அக்கினி, மஹாத்மன் போன்றோரின்
புத்தகங்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளது கண்கூடு. ஓர் எழுத்தாளர் தனது
புத்தகத்தை எங்கு எப்படி அச்சிட வேண்டும் என நிர்ணயம் செய்வது அவர் உரிமை.
ஆனால் மலேசிய பக்க வடிவமைப்பும் அதன் நேர்த்தியும் தமிழக தரத்திற்கு இல்லை
என ஒப்பீடு செய்வது இக்கால கட்டத்திற்கு பொருந்தாது. நமது நாட்டில்
இருக்கின்ற அச்சு நிறுவனங்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும்,
ஓவியர்களுக்கும், மலேசிய எழுத்தாளர்கள் தரும் தொடர் வாய்ப்பு புத்தகங்கள்
பதிப்பிப்பதில் நமது திறனையும் அவற்றைச் வெளி சந்தைக்குக் கொண்டு செல்வதில்
பல புதிய பாதைகளையும் திறந்துவிடும் என்பது உறுதி. இதன் பின்புலத்தில்
நமது பொருளாதார அறிவைக்கொண்டும் கொஞ்சம் கூர்ந்து பார்க்க
வேண்டியுள்ளது.
இங்கு நான் தமிழ்நாட்டு மோகம் குறித்தும் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது.
மலேசியப் படைப்பாளிகளுக்கு என்றுமே தமிழகப்படைப்பாளிகள் மீது ஒரு மோகம்
உண்டு. அவர்களின் இலக்கியப்போக்குகளைப் பின்பற்றுவதிலும் அவர்களின்
அபிப்பிராயங்களைப் பெறுவதிலும் அவர்களின் எழுத்துபாணியைத் தொடர்வதிலும்
ஆர்வம் கொண்டுள்ளனர். இவர்கள் கொண்டுள்ள நல்ல பல இலக்கியவாதிகளின் நட்பும்
ஒருவகையில் நமது இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையானதே.
இதில் பெ.இராஜேந்திரன் அழைத்து வந்து ஜிகினா வேலை காட்டும் பாடல்
ஆசிரியர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை. அதிலும் தமிழுக்காகப் பெரும்
பங்காற்றி தனது சொத்து சுகத்தையெல்லாம் இழந்து, செருப்புகூட வாங்க
காசில்லாமல் மெரினா பீச்சில் நடந்து கொண்டிருந்த வைரமுத்துவை இங்கு
அழைத்துவந்து அவரது கள்ளிக்காட்டு இதிகாசத்தை பெரும் கூட்டம் போட்டு
கூவி கூவி விற்றுக் கொடுத்த அவர் இரக்க குணம் இலக்கியத்திற்கு
தேவையில்லாதது. மேலும் நல்ல சுற்றுலா வழிகாட்டிக்கான தகுதியுடைய
இவரே எழுத்தாளர் சங்கத்திலும் தலைவராக இருப்பதால் ஒவ்வொரு வருடம்
எழுத்தாளர்களையெல்லாம் அழைத்துச் சென்று...'தோ பாத்தியா கலைஞரு...தோ
பாத்தியா வைரமுத்து...இங்குட்டு பாரு செவசங்கரி' என மிருகக் காட்சி
சாலைக்கு மாணவர்களோடு செல்லும் ஆசிரியரின் பொறுப்புணர்வை
கொண்டிருப்பதற்கு மலேசிய இலக்கிய உலகம் பெருமைப்பட வேண்டும்.
இதேநிலையில் நல்ல இலக்கிய அறிமுகங்களை நமக்கு செய்து வைக்கின்ற தமிழக
இடைநிலை ஏடுகளின் இன்றைய எண்ணத்தையும் ஓர் எழுத்தாளனாக நாம் புரிந்துகொள்ள
வேண்டியுள்ளது.
லாபம் தராதது, பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் தன்மையுடையது,
நிலைத்தன்மையற்றது என பலகாலமாக நம்பப்பட்டு வந்த இலக்கிய சஞ்சிகைகள்,
சிற்றிதழ்கள், இடைநிலை ஏடுகள் இன்று மலேசியாவில் தமிழகத்திலிருந்து அதிகளவு
இறக்குமதியாகத் தொடங்கியுள்ளன. இது வாசகப் பசிக்கு நன்கு பயன்படுகிறது.
மேலும், மலேசியப் படைப்பாளிகள் அனுப்பும் படைப்புகள் மிக விரைவில் பிரசுரம்
காணும் அளவுக்கும் இதன் பரப்பு விரிந்துள்ளது. இதை சிலர், தமிழக
சிற்றிதழ்கள் மலேசிய எழுத்தாளர்களுக்குத் தரும் அங்கீகாரம் என
புகழ்கின்றனர். எனக்கு கார்ல்மார்க்ஸின் வரி ஒன்று ஞாபகத்துக்கு
வருகின்றது. ’தான் உற்பத்தி செய்கிற பொருட்களுக்கான சந்தை இடைவிடாது வளர
வேண்டும் என்பது முதலாளிக்குத் தேவையாக இருக்கிறது. அஃது அவனை இந்த உலகப்
பரப்பு முழுவதிற்கும் துரத்தி அடிக்கிறது. முதலாளிகள் உலகச் சந்தையைத்
தங்களின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் இம்முயற்சி, ஒவ்வொரு
நாட்டிலும், உற்பத்தியிலும், நுகர்விலும் ஓர் உலகத்தன்மையை
ஏற்படுத்திவிடுகிறது’.
நமது படைப்புகள் தமிழக இதழ்களில் இடம்பிடிப்பது ஆரோக்கியமான ஒரு
விடயம்தான். அதேபோல இது புதுமையும் அல்ல. ’தீபம்’ இதழ் தொடங்கி நமது
நாட்டில் பலரின் படைப்புகள் தமிழக ஏடுகளில் பிரசுரமும் அறிமுகமும்
ஆகியுள்ளன. அவை நல்ல இலக்கிய வளர்ச்சிக்காகவும் படைப்பாற்றலை
மேம்படுத்துவதற்காகவுமே அமைந்தன. அதன் தொடர்ச்சியாக நா.பார்த்தசாரதியின்
வருகையும் அகிலனின் வருகையும்கூட இலக்கிய நோக்கமாகவே இருந்தது எனலாம்.
ஆனால் காலங்காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் தமிழக ஏடுகளில்
பிரசுரித்தால் மட்டுமே உலகத் தமிழர்களிடம் ஓர் எழுத்தாளன் சேர
முடியும் என்பது வால் பிடிப்பவர்களின் பேச்சு. மலேசிய இலக்கியத்தை
உலகத் தமிழர்களிடம் கொண்டு செல்ல நமது அண்மைய முயற்சிகள் என்ன
என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சை.பீர்முகம்மது போன்ற சுயநலமிகள் தங்களைப்
பிரபலப்படுத்துவதற்காக தமிழக இலக்கிய மேடைகளில் 'எங்களை
நீங்கள் அங்கீகரிப்பதில்லை' என அங்கீகாரத்தை யாசகம் கேட்பார்கள்.
அதை இந்த நாட்டில் பெருமையாகவும் பேசிக்கொள்வார்கள். இவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம் தமிழகப் படைப்பாளிகள் மட்டுமே. இன்று யார் தயவும்
இன்றியே ஈழப்படைப்பாளிகளும், புலம் பெயர்ந்த படைப்பாளிகளும்
தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் எனும் நிதர்சனம் இவர்கள்
முகத்தில் இன்னும் அறைந்தபாடில்லை.
இன்று அனுப்பியவுடன் பிரசுரமாகும் படைப்புகளும் மலேசியப்
படைப்பாளிகளைத்தேடி இங்கு வரும் பதிப்பாளர்களின் பாராட்டுகளும் நம்
படைப்புகளை அவர்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதில் காட்டும் அக்கறைகளும்
அவர்கள் சந்தை இங்கு விரிவாவதற்கு தரகர்களாகச் செயல்படும் சிலருக்குப்
போடும் பிச்சைதான். மலேசியத் தமிழர்களிடம் தங்கள் உற்பத்திப்பொருளைக்
கொண்டுச்செல்ல தரகு பணமெல்லாம் தந்து சிரமப்படத் தேவையில்லை என
அறிந்தவர்கள் தரகு கூலியாகப் புகழைப் பிச்சைபோல் இடுகின்றனர். அவர்கள்
படைப்புகளை அங்கீகரிக்கின்றனர். அவர்கள் நேர்காணல்களை
வெளியிடுகின்றனர். மலேசியாவில் கிடைக்கும் மேடைகளில் வாயாரப்
புகழ்கின்றனர்.
இந்தப் பிச்சையை வைத்துக்கொண்டு சை.பீர்.முகம்மது போன்றவர்கள்
இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்நாட்டில் உலா வரலாம் ஓர்
இலக்கியவாதியின் தோரணையுடன்.
|
|