|
(கடந்த பத்தியில் ‘கேத்தே தியேட்டர்’ என்று தவறாக குறிப்பிட்டிருந்தது.
‘அது கேத்தே அல்ல; கெப்பிட்டல்’ என்று கைத்தொலைபேசியில் அழைத்து
சுட்டிகாட்டிய சை.பீர் முகம்மது அவர்களுக்கு நன்றி!)
ஆறாம் திரிதல்:
(தலைநகரில் இரயில் தண்டவாள மேம்பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலம்).
நீங்கள்
முழு மனதோடு, முழு பெலத்தோடு, உங்கள் முழு திறமையைக் கொண்டு ஒரு
காரியத்தில் முழு தீவிரமாய் ஈடுபடுகிறீர்கள். எந்தவொரு கவனச் சிதறலுமின்றி
ஒரே நோக்கில் ஒரே இலக்கில் காரியமாற்றுகிறீர்கள். அப்போது பார்த்து யாரோ
அல்லது எதுவோ அடைக்காத்திருக்கும் பறவையின் கூட்டை வலுக்கட்டாயமாக
கலைப்பதுபோல கலைத்துவிட்டால் வந்த ஆத்திரத்தில் ஏதாவதொரு கொடூரத்தைச்
செய்துவிடுவீர்கள்.
அதைச் செய்யாமல், ஒன்றுமே செய்ய இயலாமல் இருப்பவர்கள் அனுதினமும் ‘கலைப்பை’
எண்ணியெண்ணி மனம் வெதும்பி, துயர் மிகு விரக்தியில் ஆழ்ந்திருப்போர்
மனப்பிறழ்வுக்குள்ளாகும் ஒரு விதத்தினர். அதில் நான் ஒரு விதம்.
எனக்குள் ஒரு மனுஷன் உண்டு. அந்த உள்ளான மனுஷன் இடைவிடாமல் பேசிக்கொண்டே
இருப்பான். எல்லாம் எனக்கே தெளிவாக விளங்கும். ஆனால், என்ன அது என்று
நீங்கள் கேட்டால் - தெரியாது! தான் விரும்பும் காதலியிடம் அல்லது காதலனிடம்
ஆரம்ப கால கட்டங்களில் மணிக்கணக்காக பேசிவிட்டு, பிறகு என்ன பேசினோம் என்று
ஒரு நிமிஷம் யோசித்தால் எப்படி நினைவிற்கு வராதிருக்கிறதோ அப்படித்தான்
அதுவும்.
மனப்பிறழ்வுகள் பல விதம். அதில் ஒரு விதம் என இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இப்படித்தான் நானும் புடு ராயா பேருந்து பெரு நிலையத்தில் ஏதாவதொரு
பிளாட்போம்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போல பார்த்துக்
கொண்டிருப்பேன். ‘இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இவ்விடத்தில் உட்காரவோ
உறங்கவோ அனுமதியில்லை’ என்ற எச்சரிக்கைப் பலகை கண்ணில் படும்படி
வைக்கப்பட்டிருந்தாலும் யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை. ‘எப்படா மணி
பன்னிரெண்டு ஆகும்?’ என்று காத்திருப்போர் உண்டு. நேரத்தையோ மனிதர்களையோ
பொருட்டாக நினைக்காதவர்கள் தங்கள் இஷ்டப்படி காலை நீட்டி
படுத்துறங்குவோரும் உண்டு. வெள்ளி- சனிக்கிழமைகளில்தான் பெருங்கூட்டத்தைப்
பார்க்கலாம்.
பன்னிரெண்டு
மணிக்கு மேல் விழித்திருந்ததால் சில காட்சிகளை காணும்படியாயிற்று.
ஆண் ஓரினச்சேர்க்கை விரும்பிகள் உலாவித் திரிவர். அசந்து தூங்குபவனின்
அனுமதியின்றி கால்சட்டைக்குள் கையை விடுவார்கள். அவனுக்கு எதிர்புறம் ஒரு
பெண் பாதி தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் அவனுக்கு கவலையில்லை. திடீரென
விழிப்பேற்பட்டு செருப்படி கொடுத்தவனும் உண்டு. இருவருமாக எழுந்து ஒரு
மூலைப்பக்கமாக போனதும் உண்டு. விடுதியை நோக்கி நடைக்கட்டியவர்களும் உண்டு.
அந்த நேரத்தில் எனக்கு சோதோம் கொமராவில் தேவ தூதர்களையே ஓரினப்
புணர்ச்சிக்கு வலுக்கட்டாயமாக அழைத்த மனுஷர்கள்தான் ஞாபகத்திற்கு
வந்தார்கள்.
உடனே, உரத்தக் குரலில் மகா பிரசங்கம் நடந்தேறும் மனதிற்குள்.
ஓரினப்புணர்ச்சியை ஆதரித்து ஒரு குரலும் ஆதரிக்காத ஒரு குரலும் மிகக்
கடுமையாக விவாதித்து முடியும். சில சமயம் முடியாது. இரவு முடிந்து வான்
தந்த வெளிச்சத்தில் நடக்கும்போது அப்பிரசங்கம் தொடர்ந்து இடம்பெற்றதும்
உண்டு.
பின்னிரவில் தூர தேசத்திலிருந்தோ அண்டை நாட்டிலிருந்தோ வந்த பயணிகள் உயர்தர
காலணிகளை கழற்றி வைத்து தங்கள் துணிப்பைகள்மேல் கைகளை வைத்துக் கொண்டு
உறங்கிவிடுவார்கள். ஒரு மணி நேரம் கழிந்ததும், கொண்ட களைப்பில்
அசந்துவிடுவார்கள். இந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
எதிர்புறத்தில் உள்ளவன் சுற்றும் முற்றும் நோட்டமிட்டு துணிப்பைகளையும்
காலணிகளையும் களவாடி செல்வான். பக்காத் திருடன், ஆற அமர மண்டியிட்டு
கையிலுள்ளதையும் கழுத்திலுள்ளதையும் கழற்றி எடுத்துச் செல்வான்.
பெரும்பாலும் படிகளில் நின்றபடியே படுத்துறங்கியவர்களின் பின் பாக்கெட்டை
‘பிளேடு போட்டு’ பணப்பையை எடுத்து, ஒன்றும் நடக்காதது போல அமைதியோடு
நிதானத்தோடு நடந்து சென்றவர்களும் உண்டு. இதைச் செய்வதில் இன வேறுபாடில்லை.
பணம்தான் முக்கியம்.
எனக்குள் இருக்கும் ‘உள்ளான மனுஷன்’ உரக்கக் கத்துவான். ஆர்ப்பரிப்பான்.
பரிதவிப்பான். சத்தம் மட்டும் வெளிவராது. உடல் அசையாது. அன்று முழுவதும்
‘நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ என்று திட்டு வாங்கிக் கொண்டே இருப்பேன்.
இரவு நேரங்களில் குறிப்பிட்ட பிளாட்•போமில் தினமும் ஒரே முகத்தை காண
நேரிட்டது. இவ்விடம், அவர்களின் பாதுகாப்பான படுக்கையறை என்றானது. தன்
குடிபோதையினால் எல்லாவற்றையும் இழந்து ஆறுமாதம் வரை காலத்தை ஓட்டிய ஒரு
சீக்கிய வழக்கறிஞரை அறிவேன். அவ்வப்போது வாய்திறந்து அவர் கேட்டதெல்லாம்
ஒரு சிகரெட்டாகத்தான் இருந்தது.
தலையில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு கோட்டுமலைப் பிள்ளையார் கோவில்
வரிசையில் இருக்கும் சீக்கிய கோவிலுக்கு அதிகாலமே என்னை அழைத்துக்கொண்டு
போனவரும் அவரே. யாரிடமும் பேச மாட்டார். என் அப்பாவைப் போல உயரம். ஆனால்,
மது அவரை எலும்புக்கூடாக மாற்றிவிட்டிருந்தது. ஒரு கோப்பை சுக்கா தேநீரை
அருந்துவதைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். கைவிரல்கள் நடுங்கிக் கொண்டே
இருக்கும். அந்த நடுக்கம் என்னுள் பாய்ந்து என் ‘உள்ளான மனுஷன்’ நடுங்கிக்
கொண்டே இருப்பான் அன்றைய நாள் முழுதும்.
புக்கிட் நானாஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் சார்பாக கொடுக்கப்படும் மதிய இலவச
உணவிற்கு அழைத்து சென்றேன். அவருக்கான மாற்று உடை தேடியும் கிடைக்காததால்
அன்று சேவையில் இருந்த உயர்தர விடுதி உணவகத்தின் உரிமையாளரான சீனர்
‘சிங்’கை அழைத்துக் கொண்டு போய் இரு ஜோடி உடைகளை வாங்கி கொடுத்தார். பென்ஸ்
காரில் வரும்போது ‘எல்லாம் பறிபோன பின்பும், எதிர்காலம் மிச்சமிருக்கும்’
என்று கிறிஸ்டியன் போவீ கூறியிருக்கிறார். அந்த எதிர்காலத்தை, கடந்த
காலத்து சம்பவங்களையோ நிகழ்காலத்துச் சம்பவங்களையோ நினைத்து நினைத்து
கவலைப் பட்டுக்கொண்டு இழந்துவிட வேண்டாம். இது மட்டும்தான் நான் உங்களுக்கு
சொல்ல விரும்புவது...” என்றவாறே காரின் நடுவிலிருந்த சிறு கண்ணாடியின்
வழியே என்னைப் பார்த்தார். கூரிய பார்வை. தினமும் என்னைக் கவனித்துக்
கொண்டிருந்த பார்வை அது.
சிங் அங்கிருந்து போகும்வரை அவரிடம் சட்டங்களைப் பற்றி விசாரித்ததைக்
காட்டிலும் சீக்கிய மதத்தைப் பற்றி விசாரித்ததே அதிகம். சீக்கியம் எல்லா
மதங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எல்லா மதமும் சம்மதம் என்கிறது. இது
எனக்கு பெரியதொரு முரண்பாடாகவே தெரிந்தது. அவர்கள் சொல்லும் ஒரே உதாரணம்
‘எல்லா ஆறுகளும் ஒரே கடலுக்குள்தானே சங்கமமாகிறது’ என்பதுதான். சீக்கியத்தை
ஹிந்து மதத்தின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாகவே என்னால் பார்க்க முடிந்தது.
உலகில் இருக்கும் பெரிய மதங்கள் மூன்று. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு
உபதேசங்களை- சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று, ஆம் என்று சொன்னதை
இன்னொன்று இல்லை என்கிறது. மற்றொன்று அந்த விவாதத்திற்குள் நுழையவே
மறுக்கிறது. ஒன்று, ‘நான்தான் கடைசி’ என்கிறது. இன்னொன்றும் ‘நான்தான்
கடைசி’ என்கின்றபோது யார் சொல்வதை நம்புவது?
இதுவரை மனிதர்கள் கடவுள்களைத் தங்கள் சாயலில் படைத்து வருகின்றதையே கண்டு
வந்திருக்கிறேன். எனவே, என் மனம் ஒரு கேள்வியை அடிக்கடி கேட்டுக்
கொண்டிருக்கும். அதாவது, மனிதன் என்பவன் கடவுள் செய்த தவறா? அல்லது கடவுள்
என்பவர் மனிதன் செய்த தவறா?
ஓர் எறும்பைக் கூட சிருஷ்டிக்க முடியாத இந்த மனிதன்தான் வகை வகையாக
கடவுளர்களை சிருஷ்டித்து வீட்டிற்குள்ளும் நிரப்பி, வாசற்படியில்
காவல்காரனாகவும் பணித்திருக்கிறான். சில வாசற்படிகளில் தெய்வங்களும்,
வார்த்தைகளும் ஆணிகளால் அடிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கின்றன.
என் மனவொலி பிரசங்கத்தை கேட்ட முதல் நபர் அந்த ‘சிங்’ காகத்தான் இருக்கும்.
கேட்க ஆரம்பித்த மூன்றாம் நாளில் காணாமல் போனார். ஒரு வேளை, மனதிற்குள்
வடிக்கும் கண்ணீரைக் கண்டு அவருடைய பன்னிரெண்டு தீர்க்கதரிசிகளும் சேர்ந்து
வந்து அவரை காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் நான் என் வாயை மூடியே
வைத்திருக்கலாம். ஒரு நல்ல நண்பரை இழந்தேன். அன்று அவர் சொன்ன வாக்கியங்களை
இன்னும் சேதாரமாகாமல் வைத்திருக்கிறேன்.
“நான் மெத்தப் படித்தவன். சட்டங்களோடு விளையாடுவது எனக்கு கை வந்த கலை.
இடைவிடாத குடி, ஆடம்பரத்திற்கென்று செய்த விரயம், பெண் மோகம்- இவை யாவும்
என்னை படு முட்டாளாக்கி கீழே தள்ளி விட்டிருக்கிறது. புடு பேருந்து நிலையமே
என் மறுவாழ்வு மையம். இங்கு நான் படித்துக் கொண்டது சட்டங்களை விட
அதிமுக்கியமானது வாழ்க்கை. மனித வாழ்வு விளையாட்டல்ல.”
பெருங்குடிகாரனாக இருந்து, தன்னைத் திருத்தியமைத்து போவது என்பது
ஆச்சரியம். அதுவும் மறுவாழ்வு மையத்திற்கு போகாமல் பேருந்து நிலையத்தை
தேர்வு செய்தது அதனினும் ஆச்சரியம். (மறுவாழ்வு நிலையங்களுக்கு போவது
அவருக்கு கௌரவ குறைச்சல் என்றிருக்கலாம்).
ஏழாம் திரிதல்:
(ரெக்ஸ் தியேட்டர் அதிபர் ஈ ஓட்டிக்கொண்டிருந்த காலம்)
புடுராயா
பேருந்து நிலையத்தின் பக்கத்திலேயே இருக்கிறது ‘பெட்டாலிங் ஸ்டிரிட்’ என்ற
பகுதி. சிறு பகுதிதான் என்றாலும் முழுக்க முழுக்க சீனர்களே ஆதிக்கம்
செலுத்தும் வியாபார மையம்.
ரெக்ஸ் தியேட்டர் நேர்வழியாகப் பயணித்தால் இடது புறத்தில் பழைய ஸ்டேடியம்
போகும் மேட்டுப் பாதையை பார்ப்பீர்கள். அதில் நுழையாமல் மேலும் தொடர்ந்து
இறங்கினால் வலது பக்கத்தில் கட்டணம் செலுத்தும் கார்நிறுத்தப் பகுதியைக்
காண்பீர்கள். அதையொட்டி இருக்கின்ற குறுக்குத் தெருதான் மிக முக்கியமான
பகுதி ஆகும்.
இந்தக் குறுக்குத் தெருவில் பழைய இரண்டாம் தர பொருட்களை விற்பார்கள்.
பாதையில் நுழைந்ததும் வலது இடது பக்கமெங்கும் தரையில் எதையாவது வைத்து
உட்கார்ந்தவாறே கூவி விற்பதைக் காணலாம். அபூர்வமான சில பொருட்கள் உங்கள்
கண்களுக்கு தென்படலாம். உள்ளாடையிலிருந்து மடிக்கணினி வரை பேரம் பேசி
மலிவாகவே வாங்கி விடலாம். உத்தரவாதம் இல்லை. ஆரம்பத்தில் சீனர்கள் மட்டுமே
ஆதிக்கம் செலுத்தி வந்த இச்சிறு பகுதியில் இந்தியர்களும் மலாய்க்காரர்களும்
பாய்விரித்து அல்லது பழைய பத்திரிகையை விரித்து உட்கார்ந்து வியாபாரம்
நடத்துகின்றனர். இதில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை.
சனி ஞாயிறுகளில் நீங்கள் அடிமேல் அடிவைத்து நகர்ந்தபடியே செல்ல வேண்டி
வரும். இடப் பற்றாக் குறையினால் அங்கிருக்கும் இன்னொரு சிறுகுறுக்குத் தெரு
வழியேயும் போடப்பட்டு, அதற்கு அப்பாலும் வியாபாரம் ஜோராய் நடந்தேறி வருவதை
ஆச்சரியத்துடன் காணலாம். இந்த குறுக்குத் தெருவுக்கு அடிக்கடி போய்
வருபவர்கள்- நல்ல தரமான, உயர்தர, மொத்தமாக மலிவு விலையில் வாங்குவதற்கு
அதிகாலமே வந்து உலாவிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் விடிந்திருக்காத சமயத்தில் திடீரென ஒருவன் வந்து அவசர அவசரமாக
கொண்டு வந்ததைக் கொட்டி அல்லது காண்பித்து பேரம் பேசுவான். குறைந்தது
பதினைந்து நிமிடம்தான் அவனின் வியாபார பேரம் அமைந்திருக்கும். அந்த
பேரத்தில் வெற்றி பெறுபவர்கள் அநேகமாக அந்தத் தெருவில் தினமும் வியாபாரம்
செய்யும் சீனர்களாகத்தான் இருப்பார்கள். இதனைப் பார்த்த இந்தோனேசியர்கள்
அந்தத் தெருவின் கடைக்கோடியிலேயே நின்றவண்ணம்
காத்திருப்பார்கள்.வருகின்றவனை இடைமறித்து கொஞ்சம் அதிகமாக கொடுப்பதாகச்
சொல்லி வாங்கிவிடுவார்கள் வாங்கிய பொருட்களை, விடிந்ததும் காகிதம் விரித்து
மூன்று மடங்காக விற்று அவ்விடத்தைவிட்டு வெளியேறுவார்கள்.
புடுராயா பேருந்து நிலையத்திலிருந்து களவாடப்படும் துணிப்பைகள் யாவும் இந்த
குறுக்குத் தெருவுக்குதான் கொண்டுவரப்பட்டு விற்படுகின்றன. வழிப்பறி
சங்கிலிகள், நகைகள் யாவும் இங்குதான்- உள்ளங்கையில் மறைத்துக் கொண்டு அருகே
வந்து, ‘பாங்! எமாஸ் பாங். தெங்ஙோக் டூலூ பாங்’ என்று நைசாக மெதுகுரலில்
விற்க முயன்று கொண்டிருப்பார்கள். இவர்கள் போதைப் பொருளை வாங்குவதற்காக
‘ரோலேக்ஸ்’ கைக்கடிகாரத்தை நூறுக்கோ நூற்றைம்பதுக்கோ விற்று ஓடுபவர்கள்.
இவர்களைப் போன்றோரிடம் வாங்கி வாங்கி, சேமித்து குவித்து, பிறகொரு
நாளிலிருந்து இரண்டாம் தர பொருட்களாக அறிவித்து விற்கிறார்கள். இந்தத்
தெருவில் விற்கும் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக இப்படி கூற முடியுமா
என்றால் முடியாதுதான். பெரும்பான்மை என்ற விகிதா சாரத்தில் உறுதியாக
சொல்லலாம். திருட்டுப் பொருளை வாங்குவதும் வைத்திருப்பதும் விற்பதுவும்
குற்றம் என நமது குற்றவியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் வாய் விட்டு சிரிப்பது எதைக் குறித்து என்று கேட்பீர்களென்றால்,
தினமும் இங்கே வரும் வாடிக்கையாளர்களில் போலீஸ்காரர்களும்- அரசாங்க
அதிகாரிகளும் - உளவு பேதாக்களும் அடங்குவர். இங்கே விற்க வரும் திருடனிடமே
போய், அவன் வைத்திருக்கும் பொருளை அதிகாரத்தைக் காட்டி அபகரித்துக்
கொள்வது. அந்த அபகரிப்பு பிறகு அவர்களுக்கே உரிமையாகும். அவர்களில் சிலர்,
குறைந்த விலையில் பேரம் பேசி வாங்கிச் செல்வோரும் உண்டு.
போதைப் பித்தர்களை வழிப்பறிச் செய்யவும் திருடவும் அராஜகம் புரியவும் இந்த
குறுக்குத் தெரு பகுதி ஊக்குவிக்கிறது என்பதே உண்மை. ஆண்டாண்டு காலமாய்
எந்தவொரு இடையூறுமின்றி தடங்களுமின்றி இடைவேளையுமின்றி ஜெகஜோதியாக காட்சி
தருகிறது இப்பகுதி. பாவம்! ஈ அதிகமாகிவிட்டதால் ரெக்ஸ் தியேட்டர் அதிபர்
கதவை இழுத்து மூடுவதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.
எட்டாம் திரிதல்:
(பெட்டாலிங் ஸ்டிரிட்டில் அலங்கார மேற்கூரை கட்டப்பட்டுக் கொண்டிருந்த
காலம்.)
அந்த
குறுக்குத் தெருவை விட்டு நேராக கொஞ்சம் கீழிறங்கி நடந்தால் சமிக்ஞை
விளக்குப் பகுதி வரும். வலது பக்கத்தில் இருக்கின்ற மாலைச் சந்தை,
சுற்றுலாவுலகில் பிரசித்தம். வெளிநாட்டவர்கள் இந்தப் பகுதியை பார்க்க
வேண்டும் என்று தங்கள் பட்டியலில் கண்டிப்பாக எழுதி வைப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட புகழடைந்த மாலைச் சந்தைக்குள் கடை வரிசைகளை மறைத்துக்
கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய அங்காடிக் கடைகள். மட்டுமல்லாமல், நடுவே இரு
மருங்கிலும் சிறு இடைவெளி விட்டு, வரிசையாக கடை விரித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சீனர்களின் ஆதிக்கம் மட்டும் இருந்தது.நாளடைவில் வெளிநாட்டுத்
தொழிலாளிகளான இந்தோனேசியர்கள், மியான்மாரியர்கள், வியட்நாமியர்கள் கூலித்
தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப் பட்டனர். கமிஷன் அடிப்படையில் சம்பளம்
என்பதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் விற்றால்தான் அவர்கள் அன்றைக்குரிய
கூலியைப் பெற்றுக் கொள்ள முடியும். இன்னொரு விதத்தில் ஒரு பொருளுக்கு
இவ்வளவு கமிஷன் என்ற ஒப்பந்த அடிப்படையில் கூலி கொடுக்கப்படுவதும் உண்டு.
நீங்கள் வேடிக்கை பார்த்தபடியே நடந்துக் கொண்டிருக்க, உங்கள் கையை பிடித்து
நிறுத்தி பொருளை வாங்க வற்புறுத்துவார்கள். அது துணியோ கைக்கடிகாரமோ
குளிர்கண்ணாடியோ இருந்தால் பரவாயில்லை. ஆபாச விசிடி, டிவிடிக்களைக்
காண்பித்து ‘பத்து வெள்ளிதான், வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றால் ஆத்திரம்
வருமா, வராதா? நீங்கள் மட்டும் தனியாக போனால் ஒரு பிரச்சனையும் இல்லை.
காதலியோடு, மனைவியோடு, தங்கையோடு, அக்காளோடு, தாயோடு போகும் போதுதான்
பிரச்சனையே ஆரம்பிக்கிறது. விற்பனை செய்யும் வெளிநாட்டு இளைஞர்களுக்கு ஒரு
இங்கிதமும் இருக்காது. நீங்கள் உங்கள் பேச்சில், உங்கள் பார்வையில் கொஞ்சம்
கடுமையை காண்பித்தால் போச்சு. அநாகரீகமான வார்த்தைகளைக் கேட்க வேண்டி
வரும். எதிர்த்தால் அவன் போடும் கூச்சலில் அவனின் சகாக்கள், மற்ற கடைகளில்
வேலை செய்யும் கூலியாட்கள் உங்களை ஒரு நிமிஷத்திற்குள்ளாக சுற்றி வளைத்துக்
கொள்வார்கள். கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பெல்லாம் கேட்டால்தான் நீங்கள்
அவ்விடத்தைவிட்டு வெளியேற முடியும். நீங்கள் காரில் ஏறும்வரை அல்லது பஸ்
ஏறும்வரையிலும்கூட பின்னால் வந்து கத்திக் கொண்டே இருப்பார்கள்.
அவமானத்தில் கூனிக் குறுகிப் போவோம்.
இதனால் வெறுப்படைந்த சிலர், ஒரு நாளை நியமித்து இரவில் தன் படையோடு
வந்திறங்கினதை பார்த்திருக்கிறேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்கள்.
முதுகில் சட்டைக்குள் சாமுராய் கத்திகளைப் போன்று சொருகியிருந்தார்கள்.
மனிதர் நடமாட்டம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பாதிக்கப்பட்டவன் அடையாளம்
காட்ட, மறுவினாடியே வெட்டு விழுந்தது. வெட்டிய அடுத்த நிமிடத்தில்
குறுக்குச் சந்துகளில் நுழைந்து காணாமல் போனார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகும் திருந்தினபாடில்லை. அவர்களின் அராஜகத் திமிர்
மேலும் அதிகரித்திருந்ததே தவிர குறைந்தபாடில்லை.
ஒரு பின்னிரவில் கும்பலொன்று தலைக்கவசத்தோடு இரவில் நுழைந்து
மியான்மார்களையும் வியட்னாமியர்களையும் ஓட ஓட விரட்டியது. அகப்பட்டவர்களை
வெட்டி சாய்த்தது. ஆத்திரம் அடங்காமல் முகத்தில் மிதித்தது. மறுநாள் எந்தப்
பத்திரிகையிலும் அச்சம்பவம் செய்தியாக வரவேயில்லை.
அந்தப் பகுதிக்குரிய தாதா,அவரவர் அங்காடியின் அடியிலோ கூரையின் மறைவிலோ
விருப்பமான கத்திகளை வைத்திருக்க அனுமதியளித்திருந்தான். ஆத்திரம்
ஆயுதங்களை அளித்திருக்கின்றது.
இன்னொரு பின்னிரவில் ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்த சமயத்தில்
பங்காளதேஷ் கூலிகளுக்கும் மியன்மார் கூலிகளுக்கும் சண்டை மூண்டது. கத்திகள்
உருவப்பட்டன. ஓடோட விரட்டும் காட்சிகள் அரங்கேறின. பாதையோரத்தில் சிவப்பு
துணியால் மூடப்பட்ட மேசைகளில் மது அருந்திக் கொண்டு சந்தோஷத்திலிருந்த
சுற்றுலாவாசிகள் அரண்டு மிரண்டனர். அவசர அவசரமாக பணம்கட்டி தங்கள்
காதலிகளோடு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். மேசை மீது இன்னும் முடிக்கப்படாத
மது பாட்டில்களும் ஆவி பறந்த உணவுச் சட்டிகளும் இருந்தன.
போலீஸ் ரோந்துக் கார் ஒன்று அவ்வழியே வந்தது. நின்றது. நின்றுக் கொண்டே
இருந்தது...
துப்பாக்கியில் குண்டு இல்லையோ என்னவோ. குண்டுகள் பற்றாக் குறையாகக் கூட
இருக்கலாம். அதுவுமில்லையென்றால், தாதாவின் அனுமதிக்காக பொறுமையோடு
காத்துக் கொண்டிருக்கலாம். வந்தவர்கள் அன்றைக்குப் பார்த்து புதிதாக
வேலைக்கு சேர்ந்திருக்கலாம், யார் கண்டது?
அங்குள்ள கடைக்காரர்களுக்கு இந்த அபாயம் அச்சத்தை மூட்டியது. அச்சம் மேலும்
அபாயத்தைக் கூட்டியது. இருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு முன்கதவை
இழுத்து மூட ஆரம்பித்தனர்.
ஒன்பதாம் திரிதல்:
(கோலாலம்பூர் இரயில் நிலையம் தன் மகிமையை இழந்த காலம்)
சிற்றம்மையால்
தாக்கப்பட்டு இரயில் நிலைய பிளாட்•போம் கல்லிருக்கையில் படுத்த படுக்கையாக
கிடந்தேன். எத்தனை பகல் எத்தனை இரவு ஆனது என்று தெரியாது. என் நெற்றியை
யாரோ தொட்டுப் பார்ப்பது போல உணர்வு ஏற்பட்டது. சிலர் என்னைத் தூக்கிச்
செல்வது தெரிந்தது. மருத்துவமனைக்குத்தான் என நம்பியிருந்தேன்.
விழிப்பு வந்தது. பச்சிலை வாசம் அடித்தது. பாலும் ரொட்டித் துண்டுகளும்
கொடுக்கப்பட்டது. அன்பாக பராமரித்தனர். போஷித்தனர். விரைவில் சுகம்
பெற்றேன். அவர்களின் நெற்றிகளில் நாமங்கள் காணப்பட்டன. பின் மண்டையில் சிறு
குடுமியைத் தவிர தலை முடி இல்லாதிருந்தது. வெள்ளை ஜிப்பாவும் வேட்டியோடும்
தனித் தன்மையாக காட்சியளித்தார்கள். அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் பேசக்
கூடியவர்களாக இருந்தார்கள்.
மஞ்சள் கலந்த தண்ணீரில் மூன்று வேளையும் குளிக்க வைத்தனர். இள நீரை குடிக்க
கொடுத்தனர். மாலை வேளையில் பஜனையும் நடனமும் கிருஷ்ண சிலைக்கு முன்பாக
நடந்தது.ஊதுவத்திகளின் சுகந்த வாசம் ‘ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா!’ என்ற கோஷம்
அடிக்கடி தொனித்தது.
பேச்சில் பண்பு. நடத்தையில் நாகரீகம். உணவுக் கட்டுப்பாடு. நேர்த்தியான
உடையலங்காரம். வேத வாசிப்பு. பஜனை. போதனை. நலன் விசாரிப்பு. உபசரிப்பு. இன-
மொழி- வேறுபாடின்றி கள்ளமில்லா நட்பு.
என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.
உரை நிகழ்த்தினார்கள். உரையாடச் சொன்னார்கள். கேள்விகள் கேட்டனர்.
எல்லாவற்றிற்கும் அமைதி காத்தேன். அவர்கள் காட்டின தூய அன்பிற்கு
பிரதியுத்தரமாக கேள்விகளின் உபத்திரவத்தைக் கொடுக்கலாகாது என மனதிற்குள்
தீர்மானித்துக் கொண்டேன்.
என் பழைய உடைகளைத் தோய்த்து காயப் போட்டு உடுத்திக் கொண்டேன்.ஒரு பகல்
வேளையில் வயதான மாது மாத்திரமே அப்போதிருந்தார். என்னைப் பார்த்ததும்,
“தம்பி! ஏன் கிழிந்த ஆடைகளை உடுத்த வேண்டும்? கொடுத்த ஜிப்பாவும்
வேட்டியும் எங்கே?” என்று கேட்டதற்கு “கிழிந்த உடை பற்றியும் அசிங்கமான உடை
பற்றியும் நாம் அவமானப்படுகிறோம் என்றால், அசிங்கமான கருத்துகள் பற்றியும்
பழுதான தத்துவங்கள் பற்றியும் நாம் இன்னும் அதிகம் அவமானப்பட வேண்டும்”
என்று சொல்லி கரங்கூப்பி நன்றி தெரிவித்து திரும்பிப் பார்க்காமல்
வெளியேறினேன். மனம் வலித்தது. என் சொற்கள் மனதை உடைத்திருக்குமோ...
அவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி விட்டேனோ... தலை இலேசாக
சுற்றியது. என் மீது நானே நடப்பதாக உணர்ந்தேன்.
நான் மதமில்லாதவன் என்று ஓங்கிக் குரலெடுத்து பறைசாற்ற முயற்சிக்கும்
போதெல்லாம் மதம் என்னை விட்டபாடில்லை. மதத்தையும் நான் விட்டபாடில்லை. என்
கரத்தின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டு மதம் என்னை வழிநடத்திச் சென்றதை
எவ்வழியிலும் நான் தடுக்க முடியாமலிருந்தது.
- தொடரும்
பரதேசியின் நாட்குறிப்புகள் ...1
|
|