|
ஒரு மாபெரும் அமைதி ஒழுகியபடியே அன்றாட இரவுகள்
அந்த வீடியோ கடையில் உருவாகிக் கொண்டே இருந்தன. சலித்தச்
சுற்றுச்சூழலும் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் சாதனங்
களுக்கும் நடுவே, ஏதாவது ஒரு சொல்லைத் தொடர்ந்து முணுமுணுத்துக்
கொண்டிருப்பேன். பேரமைதி எனக்குள் பழகியிருந்த ஆரம்பகால சுபாவம்
இதுவே.
வீடியோ சீடி இன்னும் சினிமா சந்தையில் பிரபலம் அடையாத காலம்
என்பதால் வீடியோ கடையில் எல்லாமும் கேசட்டுகள்தான். தலைக்கு மேல்,
பக்கவாட்டில் கால்களுக்குக் கீழ் என்று அந்தச் சிறிய வீடியோ
கடைக்குள் கேசட்டுக்கள் மிகவும் நெருக்க மானதாக ஆகியிருக்கும்.
உடல் அசைவில் எங்கோ ஒரு பாகத்தில் வீடியோ கேசட்டின் ஒலி
இறுகியிருக்கும். அவ்வப்போது கைகள் பட்டோ காலால் தற்செயலாக உதைத்தோ
கேசட்டுகள் சரியும்போதுதான் எரிச்சலாக இருக்கும்.
இருமாடி கட்டிடத்தில் மேல் மாடியில் நடு அறையில் அமைந்திருக்கும்
வீடியோ கடைக்கு இருபுறங்களிலும் இந்தியாவிலிருந்து சாப்பாட்டுக்
கடைகளில் வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளிகள் தங்கியிருக்கும்
அறைகள் இருந்தன. எப்பொழுதும் அந்த இரு அறைகளில் சந்தேகத்திற்குரிய
சப்தங்களும் அசைவுகளும் கிளர்ந்தபடியே இருக்கும்.
மர்ம வீடியோ கடைக்கு வேலைக்கு வந்த கதை
14 வயதில் மாமாவுடன் கோலாலம்பூருக்கு வந்துவிட்டேன். அங்குப் போய்
மாமாவுடன் தங்கிப் படிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின்
பெயரில் பழக்கமில்லாத நவநாகரீக பட்டணத்திற்கு வந்து சேர்ந்த
மறுநாளே மாமா அவருடைய நண்பரின் வீடியோ கடைக்கு அழைத்துச்
சென்றுவிட்டார். அவர் வழக்கமாக இரவாகியதும் அந்த நண்பரின் வீடியோ
கடையில் அமர்ந்து அரட்டையடிப்பது வழக்கம் என்பதால் நானும் அவருடன்
சென்றிருந்தேன். அன்று தான் அரட்டையடிப் பதற்கு வீடியோ கடையும் த
குந்த இடமென்று தெரிந்தது.
அவருடைய வீடியோ கடையின் முன், சுழல் நாற்காலி இரண்டு உயரமாக
வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி அமர்ந்து கொண்டு உள்ளேயும்
வெளியேயும் ஒட்டப் பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளையே பார்த்துக்
கொண்டிருப்பேன். எல்லாப் படங்களிலும் இருந்த சமமான ஒற்றுமை, ஏதாவது
ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல்
பாகங்கள்தான். நடிகைகளின் தொப்புள், அதில் பம்பரம் விட்டுக்
கொண்டிருக்கும் சின்ன கவுண்டர் விஜயகாந்த், நடிகை கௌதமியின்
இடுப்பை அளவெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இடைவெளியே
இல்லாத நெருக்கத்தில் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள்
என்று அந்தப் படங்களில் எல்லா இடங்களிலும் என்னை
முதிர்ச்சிப்படுத்திய ஆபாசம், மலை இடுக்குகளில் சரிந்தபடியே
இருக்கும் பனியைப் போலவே இருந்தது.
முதன் முதலாக அத்தனை நடிகைகளின் படங்களையும் பெரிய அளவில் மிக
நெருக்கத்தில் பார்க்க வாய்ப்புக் கிடைத்ததும் எனக்குள்
கிளர்ந்தெழுந்த ஒரு வகை பருவ கிளுகிளுப்பு மாமாவிடமிருந்து விலகத்
தூண்டியது. விலகி வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீடியோ
கடையின் பக்கத்தில் இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு
இருளில் பரபரத்துக் கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக்
கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு மாமா என்னை உள்ளே
அழைத்தார். உள்ளே சென்றதும் மாமாவின் நண்பர் என்னை அவரின் வீடியோ
கடைக்குள் அழைத்துச் சென்று எனக்கு ஒரு சோதனை வைக்கப் போவதாகக்
கூறினார்.
"நான் ஒரு படம் பேரு சொல்லுவேன். நீ சீக்கிரமா அந்தப் படத்தை
தேடிக் கண்டுபிடிச்சி என்கிட்ட கொடுக்கணும். அப்படிக் கொடுத்தனா
உனக்கு ஒரு வெள்ளி கிடைக்கும். ஓகே வா?"
ஏதோ பந்தயத்தில் என்னை அடகு வைப்பதைப் பற்றி எனக்கு அப்பொழுது
பரிச்சயமாகவில்லை. போட்டி என்றதும் அதற்குப் பரிசும் உண்டு
என்றதும் பரவசமாகி விட்டேன். தேடுதல் என்பதில் எனக்கு எப்பொழுதும்
ஓர் ஆர்வம் இருக்கிறதால் அதுவும் தேடும் வேட்டைதானே என்று
மனசுக்குள் மகிழ்ச்சி பெருக போட்டிக்குத் தயாரானேன்.
"சரி! முதல்ல பலே பாண்டியா தேடு!"
"பி" என்ற எழுத்தில் தொடங்கும் என்பதைச் சீக்கிரத்திலேயே
அனுமானித்துக் கொண்டு உயர எழுந்து நிற்கும் கேசட் அடுக்குகளின்
மத்தியில் கைகளால் படங்களின் பெயர்களை அலசத் தொடங்கினேன். 10 நிமிட
போராட்டத்திற்குப் பிறகு பலே பாண்டியா படத்தைக் கண்டறிய முடிந்தது.
மாமா மேலும் உற்சாகப்படுத்தி அடுத்த படத்தின் பெயரைச் சொல்லச்
சொன்னார்.
"அடுத்த படம்....அக்னி நட்சத்திரம் தேடு"
இந்தத் தடவை வேகம் மேலும் கூடியது. கைகளின் நகர்விற்கு ஏற்ப
படங்களின் பெயர்களைச் சுதாரித்துக் கொள்வதிலும் பக்குவம்
கூடியிருந்தது. 3 நிமிடங்களிலேயே அந்தப் படத்தை எடுத்து வந்து
மாமாவின் நண்பரிடம் நீட்டியபோது, அவர் முது கைத் தட்டிக் கொடுத்து,
"பலே பலே" என்றார். பாராட்டும் போதும் உற்சாகப்படுத்தும்போதும் ஏன்
எல்லோரும் முது கைத் தட்டிக் கொடுக்கிறார்கள்? அவர் முது கை
அப்படித் தட்டியபோது எனக்குள் ஆர்வம் மேலும் அதிகரிக்கத்
துவங்கியது.
"அடுத்து ஒரு படம் பேரு சொல்லுங்களேண்" என்றேன். நான்கு
வெள்ளியுடன் கடைக்கு வெளியே வந்தபோது அந்த அண்ணன் எனக்கு
விளங்கும்படி வேகமாக என்னைப் பற்றி கூறினார்.
"குணா! இவனே அந்த டவுன்லே உள்ள கடைலே சேத்து உட்டுருவோம். பையன்
படிச்சிகிட்டே வேலை செய்யட்டுமே.. அதான் தெறமெ இருக்கே."
"ஆமாம்... நாளைக்குப் போய் பேசலாம்."
இங்கிருந்துதான் எல்லாமும் தொடங்கியது. மறுநாள் அந்தப்
பட்டணத்திலுள்ள வீடியோ கடைக்கு மாமாவும் மாமாவின் நண்பரும் என்னை
அழைத்துச் சென்று ஏற்கனவே வேலையில் இருந்த அண்ணன் ஒருவருடன்
இருந்து வேலையைக் கற்றுக் கொள்ளும்படி சேர்த்துவிட்டுப் போனார்கள்.
"டே.. தம்பி.. யாரு என்ன படம் கேக்கறாங் களோ அதை எடுத்துக்
கொடுத்துட்டு, அவங்களோட கார்டுலெ படத்தோட பெயரையும் தேதியையும்
மறக்காம எழுதிறணும். அவ்வளவுதான்... மத்த எந்த வேலையையும்
செஞ்சிறாதே."
இந்த எச்சரிக்கை வசனத்துடன் எனக்கான வீடியோ பொழுது கள் அபத்தமான
செயற்கையுடன் தொடங்கின. கேசட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
அடுக்குகளை நாள் முழுக்க வெறித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.
என்னுடன் இருந்த அந்த அண்ணன் வாடிக்கையாளர்களைக் கண்டதும்
அவர்களைக் கேட்காமலேயே படத்தை மிக வேகமாகவும் பக்குவம் நிறைந்த
செயலுடனும் எடுத்துக் கொடுத்துவிடுவார். பெரும்பாலான
வாடிக்கையாளர்கள் புதுப் படங்களையே எடுப்பவர்களாக இருந்ததால் பழைய
படங்கள் வைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளில் எப்பொழுதுமான தூசு
அண்டி அடர்ந்திருக்கும். அதை அடிக்கடி துடைத்துச் சுத்தம் செய்ய
வேண்டும்.
இரண்டு வாரங்களில் வேலைகளை வெகு சீக்கிரத்தில் பழகிக் கொண்ட எனது
சாமர்த்தியத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டுப் போனவர்தான், அதன் பிறகு
அந்த அண்ணன் வரவேயில்லை. முதலாளி வந்து இரண்டுமுறை என் வேலையைப்
பரிசோதித்துவிட்டுப் போய்விட்டார். தினமும் மாலை 6மணிக்குக்
கடையைத் திறந்துவிட்டு இரவு 10 மணிவரை முதலாளி வரும்வரை
காத்திருக்க வேண்டும். அவர் வந்து அன்றைய வரவு கணக்கை எழுதிச்
சரிபார்த்துவிட்டுச் சென்ற பின்தான் கடையை அடைத்துவிட்டு "176"
பேருந்தைப் பிடித்து மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்வேன். இது தான்
எனது அன்றாட அட்டவணை.
அன்று கடையிலுள்ள சுழல் நாற்காலியில் அமர்ந்து ரொம்பவும் வேகமாக
சுழன்று கொண்டே இருந்தேன். தற்செயலாகத் தொலைக்காட்சி இருந்த கேசட்
அடுக்கில் பலமாக மோதிக் கொண்டபோதுதான் வீடியோ கடையில் எனக்கும்
தெரியாமல் மறைந்திருந்த மர்மங்கள் உடைந்து வெளிப்படத்துவங்கின.
முதல் மர்மம்
அந்த அடுக்கில் மோதிய பிறகு அது இலேசாக விலகி அதற்கும் உள்ளே
இன்னொரு கேசட் அடுக்கு இருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. "13ஆம்
நம்பர் பேய் வீடு" படத்தில் வரும் புத்தக அடுக்கிற்கு அப்பாலுள்ள
பங்களா மாதிரி அதிசயமாகத் தோன்றியது. அந்த முன்புறமுள்ள அடுக்கைப்
பலம் கொண்டு இழுத்துப் பார்த்தேன். சர சரவென முழுவதுமாக விலகியதும்
உள்ளே மெல்லிய இருளில் கேசட்டு களும் மடக்கி வைக்கப்பட்டிருந்த சில
போஸ்டர்களும் இருப்பது தெரிந்தன. அந்தப் போஸ்டர்களை வெளியே எடுத்து
விரித்துப் பார்த்தேன். தூசிகள் படர, அந்த முதல் போஸ்டரில்
நின்றிருந்தது ஒரு நிர்வாணப் பெண். சிறு அதிர்வுக்குள்ளிருந்து
மீண்டு வருவதற்குள் அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது,
யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும்
பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.
அந்தப் படங்களைச் சுருளாக மடித்து மீண்டும் எடுத்த இடத்திலேயே
வைத்துவிட்டு உள்ளேயிருந்த கேசட்டுகளை உற்று நோக்கினேன். "Hardcore
Part 2", "Babies", "kingdom of Sex", "sexy Babies" என்ற
தலைப்புகளில் பல கேசட்டுகள் உள்ளே தூசு படிந்து வெள்ளை பூத்துக்
கிடந்தன. குறைந்தது 4 மாதங்களுக்கு மேலாக அந்த அடுக்கை யாரும்
திறக்காமல் விட்டிருக்கலாம் போல. அந்த அடுக்கிலிருந்து ஆழ்ந்த
மௌனத்திலிருந்து ஓர் இருள் கசிந்து உள்ளே ஆள் இருப்பது போன்ற
உணர்வைக் கொடுத்தது. யார் யாரோ அந்த மர்ம அடுக்கிலிருந்து
ஆபாசமாய்க் கெட்ட வார்த்தைகள் பேசி சொற்களைத் தூக்கி வீசுவது போன்ற
ஒரு பிரமைத் தட்டியது.
யாரோ படியேறி வரும் காலடி சப்தம் கேட்டவுடன் உடனே அந்த அடுக்கை
இழுத்து மூடிவிட்டேன். மனமெல்லாம் படபடப்பாக இருந்தது. உடலுக்குள்
சற்று முன்பு பார்த்த நிர்வாண பெண்கள் ஊர்ந்து நெளிவது போல
தோன்றியது. எதிரே வந்து நின்ற வாடிக்கையாளரின் முகம்கூட அந்தப்
பெண்ணின் முகச் சாயலாக மாறி மேலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
நிதானித்துக் கொண்டு வாடிக்கையாளர் கேட்ட புது படத்தை எடுத்துக்
கொடுத்தேன்.
யார் அந்த மர்ம அடுக்கை உருவாக்கியிருக்கக் கூடும்? யார் அந்தப்
புகைப்படப் பெண்கள்? எப்பொழுது அந்த அடுக்கு கடைசியாகத்
திறக்கப்பட்டிருக்கும்? அந்தக் கேசட்டுகளில் இருப்பது என்ன படம்?
யார் நடித்திருப்பார்கள்?
இரண்டாம் மர்மம்
சில நாட்களுக்கு பிறகு முகமெல்லாம் தழும்பு கொண்ட ஒரு நபர் கடைக்கு
வந்தார். உள்ளே நுழைந்ததும் முதலில் என்னைப் பார்த்து ஆச்சரியப்
பட்டார். புருவம் உயர்த்தி கேள்வியும் கேட்கவே செய்தார்.
"நீ யாரு தம்பி புதுசா?"
"புதுசா வேலைக்குச் சேந்துருக்கேன் அண்ணே. ஆளு அவசரமா
தேவைப்பட்டுச்சாம்"
"அல்லாமா...சின்ன பையனா இருக்கெ, உனனைச் சேத்துருக்காங்க? இதுக்கு
முன்ன இருந்தவரு மேலே சிலிங் பத்தி ஏதாச்சம் சொன்னாரா?"
அந்த நபர் கடைக்கு மேலாக உள்ள வெண்கூரையைப் பார்த்துக் கொண்டே
கேட்டார்.
"இல்லையே! சிலிங் பத்தி என்ன சொல்லணும்?"
"சரிப்பா... ஒன்னுமில்ல. புதுசா என்ன படம் வந்துருக்கு?"
அந்த நபர் வெளியே சென்றவுடன் ஏற்கனவே நான் கண்டறிந்திருந்த மர்ம
அடுக்கு மறைந்திருக்கும் இடத்தைப் பார்த்தேன். அதை நெருங்குவதற்கே
நெருடலாகவும் பயமாகவும் இருந்தது. மீண்டும் தலைக்கு மேல் சலனமே
இன்றி விரிந்திருக்கும் வெண்கூரையைப் பார்த்தேன்.
"அவரு சிலிங் பத்தி ஏதாச்சாம் சொன்னாரா?"
அந்த நபர் கூறியதைப் போல இந்த வெண்கூரையில் ஏதோ ஓர் இரகசியம்
ஒளிந்திருப்பதைப் போல மனதில் பட்டது. நாற்காலி மீது ஏறி கூரையின்
மேற்பரப்பைத் தொட எக்கினேன். மேற்பரப்பில் கைப்பட்டதும் அந்த
வெண்கூரை உள்ளே விலகி இடம் விட்டு அகன்றது. பாதாளம் தலைக்கு மேல்
வாய் பிளந்து என்னை வெறிப்பது போல இருந்தது. மேலும் எக்கி
கூரைக்குள் துழாவினேன். ஏதோ கேசட்டுகள் கையில் தட்டுப்படுவது போல
இருந்தது. கையை நன்றாக எக்கி அந்தக் கேசட்டுகளை வெளியே எடுத்தேன்.
கேசட்டுகள் புதியதாக லேபலுடன் பெயரிடப்பட்டு இருந்தன.
மீண்டும் கண்களை உறுத்தும் நிர்வணப் பெண்களின் படங்கள்.
குனிந்தபடியே பிட்டத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் பெண் முதல்,
உடல் பாகங் களை மிகவும் அப்பட்டமான ஆபாச செய்முறைகளுடன்
வெளிப்படுத்திக் கொண்டிருந்த பெண்கள்வரை அந்தக் கேசட்டுகளின்
உடலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் களில் இருந்தார்கள். இந்தமுறை
அந்தப் படங்களை எதிர்கொள்வதில் எனக்கு அவ்வளவாகப் பதற்றம்
தெரியவில்லை. நிர்வாணம் கொடுக்கும் முதிர்ச்சியென்று அதை
அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா?
நிர்வாணம் ஆபாசம் ஆக முடியாது. நிர்வாணம் என்பது கலை தொடர்பான
அழகியல். அதனால்தான் நம் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் கோவில்
கற்சிற்பங்கள் நிர்வாணமான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றைய
முதிர்ச்சி அளித்திருக்கும் புரிதல்கள் அந்தச் சமயத்தில் எனக்கு
இல்லாததால், நிர்வாணம் பெரும் கிளர்வை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ
கடையின் மர்மங்கள் எல்லாவற்றிலும் ஆபாசங்களும் நிர்வாணமும்
பெண்களும் ஒளிந்தபடியே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைய தினத்திற்குப் பிறகு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்
எல்லோரும் என்னை வேறுமாதிரி பார்ப்பது போலவும் ஆபாச வீடியோ கேட்கத்
தயங்கி நிற்பது போலவும் தோன்றியது. எல்லோரின் பார்வையிலிருந்து
விலகி இருக்கவே முயற்சி செய்தேன்.
"தம்பி அந்தப் படம் இருக்கா?"
"ஐயா.. உனக்கு வயசு எத்தன?"
"முதலாளி இருந்தா அந்தப் படம்லாம் கேட்கலாம்.. இவனுக்கு என்னா
தெரியப் போவுது"
"தம்பி! உன் பேரு என்னா? நீலப் படம் இருக்கா?"
வாடிக்கையாளரின் செயலும் ஆபாச வீடியோக் களையே சுற்றிக்
கொண்டிருந்தது. அந்தக் கடையிலிருந்து வேலையைவிட்டு நின்ற பின்னும்
மேலும் பல வருடங்களுக்கு அங்குப் பார்த்த அந்த நிர்வாணம் இன்னும்
உடலில் எங்கோ ஒரு பாகத்தில் கிளர்ச்சியுடன் ஊர்ந்து கொண்டிருந்தது.
எல்லோரும் ஆபாசத்தையும் நிர்வாணத்தையும் மறைக்கத்தான்
முற்படுகிறார்கள். ஆனால், வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் சமூகத்தால்
மறைக்கப்பட்ட இந்த நிர்வாணத்தையும் ஆபாசத்தையும் ஒருவன்
எதிர்கொள்ளும்போது அங்கிருந்துதான் பருவம் கடந்த முதல் உள்ளக்
கிளர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் துவங்குகின்றன. அதை அவன்
எப்படிக் கடந்து வந்து பக்குவம் கொண்டவனாகச் சந்திக்கப் போகிறான்
என்பதை சமூக மனநிலையும் முற்போக்கும்தான் முடிவு செய்ய இயலும்.
|
|