வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

நேர்காணல்

'படைப்பிலக்கியத்தில் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது
ஒருவகை வியாபாரம்'
லதா, சிங்கப்பூர்

 

       
 

இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த லதா 1982ஆம் ஆண்டு குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் 'தீவெளி' (கவிதைகள் 2003), 'பாம்புக் காட்டில் ஒரு தாழை' (கவிதைகள் 2004) என்ற இரு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அண்மையில் இவரது சிறுகதை தொகுதிக்கு (நான் கொலை செய்யும் பெண்கள்) 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலரைப் பெற்றுத் தந்தது. லதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், வல்லினம், குங்குமம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வல்லினம்: கதை, கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

லதா:
ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. செய்தியாளராய் அவற்றின் புறத்தோற்றங்களைக் கவனிக்கும் அதே நேரத்தில் அவற்றின் அகத்தோற்றங்களிலும் ஆழ்கிறேன். அவை அந்தரங்கமானதாகவும் நுட்பங்கள் நிறைந்ததாகவும் அதனூடே பயணிக்கும் போது ஒரு மர்மமான இருண்ட சுரங்கத்தில் பயணிப்பது போலவும் தோன்றும். ஒரு சாதாரண விபத்தில் மரணம் அடைந்தவரின் துண்டான கையில் இறுகி இருக்கும் கை கடிகாரத்தில் தொடங்குகின்றது இந்தப் பயணம். அவை தொடுக்கும் புதிர் கதைகளாகவும் கவிதைகளாகவும் பரிணமிக்கின்றன. வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது.

வல்லினம்: 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற உங்கள் சிறுகதை தொகுதியில் பெரும்பாலான பெண்கள் பலவீனமானவர்களாகவும், துன்பம் மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் பெண்களின் மனநிலை இவ்வாறுதான் இருக்கிறதா?

லதா: முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது, வரக்கூடாது. இந்தக் கதைகளில் பிரச்சனைகள் மட்டுமே பேசப்படவில்லை. மேலும் கதைகளின் களம் சிங்கப் பூராக இருந்தாலும் கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை. இவர்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல. எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான். இவர் களுக்கும் உள்ளன. ஆனால் இவர்கள் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதற்கான பாதையைத் தேடுகிறார்கள். 'நாளை ஒரு விடுதலை' கதையில் வரும்வேலைக்காரி முதலாளியிடம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும் 'தமிழுக்கு அமுதென்று பேர்' கதையில் நீர்படிவத்தில் தனது பெயரை அப்பெண் எழுதும் போதும் 'அறை' கதையில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும். பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது அல்லவா? ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன, அல்லது சிதையச்செய்கின்றன அல்லது நாமே அழித்துக்கொள் கிறோம். இப்படி ஒரு பெண்ணின் சுயம் அழிக்கப்படுவது, அழிப்பது, தொலைவது, மாற்றம் பெறுவதைத்தான் 'நான் கொலை செய்யும் பெண்கள்' எனச் சொல்கிறேன்.

வல்லினம்: பெண்களின் விடிவு, மிகை உணர்ச்சியான சோகம் என தமிழ் சீரியல் கதைகள் போல அமைந்திருக்கும் மலேசிய- சிங்கப்பூர் சிறுகதைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்வை அதன் அழகியலோடு நீங்கள் வெளிப்படுத்தியுள் ளீர்கள்.

லதா:
வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை. உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான். எனது மிகச்சிறிய வயதில் பள்ளித் தோழி ஒருத்தி என்னிடம் தனது மாமா குத்துச்சண்டை வீரர் என பொய் சொல்லி பயமுறுத்துவாள். எனக்கு விருப்பமில்லாவிட் டாலும் அவள் என்னைத் தன் தோழியாகத் தேர்ந் தெடுத்ததனால் எந்நேரமும் தன்னுடனே இருக்கும்படி கட்டளையிடுவாள். நானும் அவள் குத்துச்சண்டை மாமாவுக்குப் பயந்து அவளோடே இருப்பேன். ஆனால் ஒரு போதும் நான் அழுததோ ஆசிரியரிடம் சொல்லி அவளை மாட்டிவிட்டதோ இல்லை. இது பயத்தில் புதைந் துள்ள சின்ன தைரியம்தான். இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும், புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும், அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் எனது கதைகளில் வருகிறார்கள்.

வல்லினம்: இந்த சிறுகதைத் தொகுப்புக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது கிடைத்துள்ளது. அதுபற்றி கூறுங்களேன்.

லதா:
சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியத்தின் 2008ம் ஆண்டுக்கான இலக்கிய விருது எனது 'நான் கொலை செய்யும் பெண்கள்' சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது. தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் நூல்களுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மொழிப் பிரிவுக்கும் 10,000 சிங்கப்பூர் டாலர் பரிசாக வழங்கப் படுகிறது. சிங்கப்பூர் எழுத்தை ஊக்கப்படுத்தி வளர்க்கும் நோக்கில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம், 'தேசிய புத்தக பரிசு' என்ற பெயரில் 80 களின் தொடக்கம் முதல் வழங்கி வந்தது. இடையில் தடைபட்ட இந்த விருது 2004கஆம் ஆண்டு முதல் 'தேசிய இலக்கிய விருது' என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு மொழி நூல்களுக்கும் வழங்கி வருகிறது. 2004இல் எனது தீவெளி கவிதைத் தொகுப்பும், 2006ஆம் ஆண்டு பாம்புக் காட்டில் ஒரு தாழை கவிதைத் தொகுப்பும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன

வல்லினம்: உங்கள் நூலுக்கு விருது கிடைத்தது குறித்து சர்ச்சைககள் ஏதும் எழுந்ததா?

லதா:
விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் பலர் நேரிலும் தொலைபேசியிலும் விருதுக்கு தகுதியான நூல் என வாழ்த்தினார்கள். உங்கள் தொகுப்புக்குத்தான் விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன் என்று விருதுக்கு நூல்களை அனுப்பி வைத்திருந்த சில எழுத்தாளர்களும் கூறினார்கள். இதுவரை வெளிப்படையான சர்ச்சை எதுவும் கிளம்பியதாக தெரியவில்லை. முகத்துக்கு நேரே புகழ்வதையும் முதுகுக்குப் பின்னால் இகழ்வதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.

வல்லினம்: இந்த விருது உங்களுக்குக் கிடைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

லதா:
மகிழ்ச்சியாக இருக்கிறது. பரவலான வாசகர்களும் ஆழமான விமர்சனங்களும் இல்லாத நிலையில் விருது களும் பாராட்டுகளும்தான் இலக்கிய அறிமுகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தித் தருகின்றன. புத்தகங்கள் வெளியிடுவதும் விற்பனை செய்வதும் பொருளாதார ரீதியாகவும் படைப்பு ஊக்க ரீதியாகவும், அதுவும் தமிழ் நூல்களுக்கு இந்த நாட்டில் பெரிய மன உளைச்சலையும் சோர்வையுமே ஏற்படுத்தும். அவரவர் சொந்த செலவில் நூல் வெளியிட வேண்டும். வெளியிட்டப் பணத்தைத் திரட்ட நினைத் தால் நண்பர்களையும் பிரமுகர்களையும் அழைத்து நூல் வெளியீடு செய்யலாம். அழைத்த கடமைக்காக அவர்கள் வந்து மொய் எழுதி விட்டுப் போவார்கள். சில சமயங் களில் நூல் வெளியிட செலவான தொகையிலும் பல மடங்கு அதிகமாக வசூலாகும். இலக்கிய அறிமுகமே இல்லாதவர்களையும் சினிமா, அரசியல் பிரமுகர்களையும் அழைத்து புகழ்ந்து, பொன்னாடை போர்த்தி, முதல் நூலை வாங்க வைத்து, பேசச் சொல்லி இப்படிப் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டும். உள்ளூர் படைப்புகளை முக்கியமாகத் தமிழ் படைப்புகளையும் முறையாக அறிமுகப்படுத்தப் பிரத்தியேக முயற்சிகள் எதையும் செய்ய வேண்டிய அமைப்புகள் செய்வதில்லை. தேசிய நூலக வாரியத்தைத் தவிர. உதாரணமாக இங்கு 12ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். அடுத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தற்போது SIM எனப்படும் பல்கலைக்கழகத்திலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் தமிழ் பயின்றும் மாணவர்களுக்கு உள்ளூர் தமிழ்ப் படைப்பிலக்கியம் குறித்த விரிந்த அறிமுகம் கிடைப்பதில்லை.கல்லூரி தமிழ் இலக்கியத்தில் தமிழ் நாடே மறந்துவிட்ட அய்க்கனின் சிறுகதைகளும் மு.வ.கதைகளும் இடம்பெறுகிறது. ஒரே ஒரு உள்ளூர் கதைகூட இந்த மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதில்லை. உள்ளூர் படைப்பிலக் கியத்தை வளர்ப்பதில் ஊடகங்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை. தேடிப் பிடித்துப் படிக்கும் அளவுக்குத்தேடலோ நேரமோ மக்களுக்கும் இல்லை. இந்நிலையில் தேசிய அளவில் வழங்கப்படும் விருது களும் பாராட்டு களும் மட்டுமே அறிமுகத்தையும் விளம்பரத்தையும் படைப்புகளுக்குப் பெற்றுத் தருகிறது. இந்த அறிமுகம் மூலம் நூல் விற்க முடியாது என்றாலும், இப்படி ஒன்று இந்த நாட்டில் எழுதப்பட்டிருக்கிறதே என்பதாவது பலரால் அறியப்படும்.

வல்லினம்: உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது நிறையச் சொல்வதாகவும், எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் வேறொன்றைச் சொல்வதாகவும், இறுதியில் ஒன்றும் சொல்லாமல் போவது போலவும் தோன்றுகிறது.

லதா:
சின்ன வயதில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடியதாக நினைவு இல்லை. தனியாகச் செடி களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அன்றாடம் தொடர்ந்த மிக நீண்ட உரையாடல் அது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் அந்த உரையாடல்களின் இறுதியில் ஒன்றும் இல்லாதது போல தோன்றும். ஆனால் அவை உயிருள்ள உரையாடல்கள். பிறகு ஒரு சில காலம் என்னுடனே நான் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அது எழுத்தாகியுள்ளது.

வல்லினம்: பொதுவாகவே எல்லா எழுத்தாளருக்கும் அவர்களின் சிறிய வயது அனுபவங்கள் படைப்புகளில் புகுந்து கொள்ளும். உங்கள் படைப்புகளில் அவ்விதம் காணமுடிவதில்லையே?

லதா: இந்தப் படைப்பு ஏன் உருவானது என்று கேட்பது போலவே இந்தப் படைப்பு ஏன் உருவாகவில்லை என்று கேட்பதும் அபத்தமாகவேபடுகின்றது. படைப்பே அதன் போக்கை தீர்மானிப்பதாக நான் கருதுகிறேன். எனது இளவயது அனுபவங்கள் எனது பல கவிதைகளில் வெளிப் பட்டுள்ளன. அவை அவ்வனுபவத்தை நேரடியாக சொல்லாமல் அவற்றின் மைய உணர்ச்சியை மட்டுமே ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றன.

வல்லினம்: முதன் முதலில் எழுதத் தொடங்கும் எவருக் குமே தொடக்கத்தில் வாய்ப்பும் களமும் தூண்டுதலும் தேவைப்படுகிறது. அது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

லதா: தமிழ் முரசில் நான் சேர்ந்த போது, ஆசிரியராக இருந்த அமரர் வை.திருநாவுக்கரசு அவர்கள்தான் எனக்கு அந்த வாய்ப்பையும் களத்தையும் நம்பிக்கையும் கொடுத்தவர். முரசின் ஞாயிறு பதிப்புக்கு நான் பொறுப் பாக இருந்த சமயத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத் தார். அந்தச் சமயத்தில்தான் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் பல கதைகள் எழுதினேன். வை.திருநாவுக்கர சைப் பத்திரிகை ஆசிரியராகவும் சமூகத் தலைவராகவும் மட்டுமே பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் அவருக்குள் தேடல் மிக்க ஒரு படைப்பாளி இருந்தார். அவர் அதனை வளர்த்துக்கொள்ளவில்லை. வெளிப்படுத் தவும் இல்லை. ஆனால் அவரது அந்தத் தேடல், சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பல வழிகளில் உதவியுள்ளன. சிங்கப்பூர்- மலேசியாவின் தமிழ்ப் படைப்பிலக் கியப் பொற்காலமாகத் திகழ்ந்த 50 களில் தமிழ் முரசின் உதவி ஆசிரியராகவும் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நம்பிக்கைக்குரியவராகவும் பல காரியங்களை அவர் செய்துள்ளார். தமிழ் முரசில் சிறுகதைப் பட்டறைகளைத் தொடங்கி, பவுன் பரிசு போட்டிகளை ஆரம்பித்தவர் அவர். காரசாரமான இலக்கிய விமர்சனங்கள் வளர வாய்ப்பளித்துள்ளார். எழுத்தாளர் கழகம் அவரது முயற்சியால்தான் தொடங்கப்பட்டது. மாணவர்களுக் கான மாணவர் மணி மன்றத்தை மாற்றி அமைத்து பல எழுத்தாளர்களுக்கு ஆரம்ப களத்தை அமைத்துக் கொடுத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. பல நல்ல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மறைந்த சுந்தரராமசாமி, அகிலன் உட்பட பலரை முதன் முதலில் சிங்கப்பூருக்கு வரவழைத்து இந்நாட்டு மக்களுக்கு நல்ல இலக்கிய ரசனை ஏற்பட வழிவகுத்துள்ளார். அரசாங்க அமைப்புகளின் உறுப்பினர்களாக இருந்து, தமிழுக்கும் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கும் படைப்பிலக்கிய வாதிகளுக்கும் உரிய அங்கீகாரங்களைப் பெற்றுத் தர உதவியுள்ளார். அவரது பதவிக்காகவும் அந்தஸ்துக் காகவும் பல நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அவரைத் தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசி காலம் வரை அவர் சென்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் உள்ளார்ந்த அக்கறையோடுதான் அவர் கலந்து கொண்டுள்ளார். மிகுந்த அக்கறையுடன் தனது கருத்து களையும் ஆதங்கங்களையும் வெளியீட்டு விழாக்களில் அவர் எடுத்துச் சொல்வார். அவர் நூல்களுக்கு எழுதி யுள்ள முன்னுரைகளையும், வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியவற்றையும் தொகுத்தாலே சிங்கப்பூர் இலக்கியத்தின் நிலை, அது செல்ல வேண்டிய பாதைகுறித்த தெளிவு கிடைக்கும். என் கதைகளைப் படித்து விமர்சித்து மெருகேற்ற உதவிய அக்கறை மிகுந்த மிகச் சில நண்பர்களுக்கும் இச்சமயத்தில் நான் நன்றி கூற வேண்டும்.

வல்லினம்: ஒரு மண்ணில் இலக்கியம் வளர விமர்சனம் இன்றியமையாததாகிறது. சிங்கப்பூரை பொருத்தவரை விமர்சனம் என்பது சிறிதும் இல்லையென அறியப் படுகிறது. இந்நிலையில் தங்களின் எழுத்தின் வளர்ச்சிக்கு எது உந்துதலாக இருக்கிறது?

லதா:
எனது எழுத்து இன்னும் பல தளங்களில் வளர்ச்சி அடையவேண்டும் என நினைக்கிறேன். இதை நான் தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை. எனது சிறுகதை தொகுப்பை வாசித்த எழுத்தாளர் அம்பை 'நீ இன்னும் வளரவேண்டியுள்ளது. நிறைய எழுது. அப்போதுதான் நல்ல கதை உருவாகும்" என்றார். அது மிகவும் நேர்மை யான விமர்சனம் என நான் கருதுகிறேன். தமிழ் இலக்கிய உலகில் நாம் எங்கு நிற்கிறோம் என்பது முக்கியம். விருது களையும் பாராட்டுகளையும் விட ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் மிக அவசியம். இன்று வரையில் என் வாசகர்கள் யார் என்பதை நான் அறியவில்லை. பாராட்டி அல்ல விமர்சித்தும் கூட சிங்கப்பூரில் யாரும் பேசுவது குறைவு. அப்படி ஒரு சூழல் இருந்தால் இன்னும் மேம்பட்டப் படைப்புகள் உருவாகும் என்பது என் கருத்து.

வல்லினம்: சிங்கப்பூரில் ஆக்ககரமான படைப்பிலக்கியத்திற்கான சூழல் உள்ளதா?

லதா:
அரசாங்கம், கலை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஊக்கம் தருகிறது. தேசிய கலை மன்றம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புகளின் மூலம் நாட்டின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறு உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. இரண்டாண்டுக்கு ஒரு முறை தேசிய சிறுகதை போட்டி நடத்தப்படுகிறது. படைப்பிலக்கியத்துக்குப் பரிசு வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி நிலையிலேயே கலை இலக்கியப் போட்டிகளை நடத்தி இள வயதிலேயே கலை இலக்கிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறார் கள். பல மில்லியன் செலவில் நூலகங்கள் நாட்டில் பல்வேறு இடங்களிலும் அமைக்ப்பபட்டுள்ளன. உலகின் தலைசிறந்த கலை, இலக்கியப் படைப்பாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். உலகத் தரமிக்க கலை இலக்கி யங்களை பல்வேறு தளங்களில் அறிந்து கொள்ளவும் அவற்றில் ஆர்வம் கொள்ளவும் ஈடுபடவும் ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. இங்கு நாள்தோறும் ஏதாவது ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஆக அறிவு, தெளிவு, சிந்தனை, வெளிபாடு அனைத்துக்கும் இடம் இருக்கிறது. எனினும் இந்தப் படிநிலையில் வளர்வதற்கு தேவையான மனப்பக்குவம் அல்லது தேடலுக்குப் போதிய வெளி இல்லை என நினைக்கிறேன். நமக்குரிய அந்த வெளியைத் தேடும் அலைந்துழல்விலேயே நேரம் செலவாகி விடுகிறதோ எனக் கருதுகிறேன்.

வல்லினம்: அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளரும் ஒருவரால் சுதந்திரமான படைப்பை சிங்கப்பூரில் உருவாக்க முடியுமா?

லதா:
பொதுவாகவே ஒரு நாட்டின் கட்டமைப்பின் கீழ் வளர்க்கப்படும் மனிதனின் எண்ணம் இயல்பாகவே அம்மண்ணிற்கான வரையறைகளுக்குட்பட்டுத்தான் வளர்கிறது. சில விதிவிலக்குகளை தவிர்த்து சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தில் ஒருவகையான சுயதணிகையே தொடர்நது நிலவுகிறது. சிங்கப்பூர் படைப்பிலக்கியத்துறை என ஒன்று உருவாகி பரிமளித்த காலத்தில் (சிங்கப்பூர்- மலேசியாவை உள்ளடக்கிய மலாயா படைப்பிலக்கிய தோற்ற, மறுமலர்ச்சிக் காலம் எனவும் கொள்ளலாம்). எது எழுத்து, எதை எழுதுவது, என்ன வடிவம் போன்ற தேடல்களாகவே அமைந்தது. தற்சமயம் ஈடுபடுபவர் களில் பெரும்பாலோர் இந்தியா இலங்கை போன்ற அந்நிய தேசத்தவரே. இந்நாட்டு குடிமக்களாகவே இருந்தாலும் அவர்களது வேர் வேறு எங்கோ ஊன்றி உள்ளது. இயல் பாகவே இவர்களுக்கு, அந்நிய தேசமும் அதன் ஆட்சியும் ஒரு வகை அச்சத்தையும் பாது காப்பின்மையையும் கொடுத்திருக்கலாம். அரசாங்கத்தை விமர்சிக்கும் படைப்புகளும் சிங்கப்பூரில் வெளிவரவே செய்கின்றன, மற்ற மொழிகளிலும் மிக அரிதாக தமிழிலும்.

வல்லினம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் தமிழகம், இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து தொழில் நிமித்தமாக வந்தவர்கள். இந்நிலையில் வருங்காலத்தில் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு என தனி அடையாளம் இருக்குமா?

லதா:
சிங்கப்பூரை ஒரு 'டிரான்ஸிஸ்ட் சிட்டி' அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்படி வரும் பலரும் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூருக்குத் தருகின்றனர். எனினும் இந்தத் தங்கும் விடுதிக்கும் ஒரு வாழ்க்கை, ஒரு மனம் தனித்தன்மையான அனுபவம் உள்ளன. எதிர்காலத்திலும் இலக்கியம் வாழ்வது, வளர்வது திண்ணம். ஆனால், தனித்த அடையாளத்தோடு உலக அரங்கை எப்போது எட்டும் என்பது தெரிய வில்லை. அதற்கான சாத்தியங்கள் அவ்வப்போது அரும்பு கின்றன. எனினும் இதுவரை ஆழமான தாக்கத்தை ஏற் படுத்தும் அளவுக்கு ஓர் அடையாளத்தை எவரும் பதிக்க வில்லை. ஒரு நாள் பதிப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

வல்லினம்: பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வு போல சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வு வெளிப்படையாகத் தெரியாதது போல உள்ளதே?

லதா:
அப்படி இல்லை. சிங்கப்பூர் தமிழர்களும் ஏறக் குறைய மலேசியத் தமிழர்களின் வாழ்வு முறையை ஒத்தே இருக்கின்றனர். ஆனால் முன்பிலும் இப்போது பெரும் பகுதியினர் படித்தவராக உள்ளனர். அனைவருக்கும் பிறப்புப் பத்திரம் இருக்கிறது. சிங்கப்பூரின் 4.5 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 விழுக்காடு இந்தியர்கள். அதில் ஏறக்குறைய அறுபது விழுக்காட்டின் தமிழர்களாக உள்ளனர்.என்னதான் சிங்கப்பூர் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் இன்னும் தமிழர்கள்தைப்பூசத்தில் ஆடுவது, குண்டர் கும்பலில் ஈடுபடுவது, மனைவியை அடிப்பது, மதுக் கடையில் நேரத்தை போக்கு வது எனும் சாமான்ய மக்களின் குணாதிசயங்களுடன் வாழவே செய்கின்றனர். நிறைய உடல் உழைப்புத் தொழிலாளர்களும் சிங்கப்பூரில் தமிழர்களாகவே இருக்கின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகையால் இவர்கள் நிறையவே தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வல்லினம்: பெரும்பாலான நாடுகளில் இதுதான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக விமான நிலையங்களில் கூலித் தொழிலாளர்களாக இந்தியர்கள் திட்டமிட்டே நிறுத்தப் படுவது போலத் தெரிகிறது. ஒரு நாட்டில் நுழையும் அந்நிய தேசத்தவரின் பார்வை இவர்களைச் சந்திக்கும்போதே அந்நாட்டில் இவர்கள்தான் ஒடுக்கப்பட்டவர்கள் என மறைமுகமாகத் தெரிவிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

லதா:
சிங்கப்பூர் மலேசியத் தமிழர்களின் பெரும் பகுதியினர் அடிமைத் தொழிலாளர்களாக இங்கே அழைத்து வரப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமை யாக இருந்து பழகி விட்டதால் சீனர்களிடமும் அடிமை யாக இருப்பதில் எந்தச் சங்கடமும் இருப்பதில்லை எனத் தோன்றுகிறது.

வல்லினம்: இலங்கையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த நீங்கள், உங்களை எந்த நாட்டவராக அடையாளப் படுத்துகிறீர்கள்?

பதில்:
எனது பாஸ்ப்போர்ட்டும் அடையாள அட்டையும் சிங்கப்பூர் குடி என சொல்கின்றன.அதே பாஸ்ப் போர்ட்டில் பிறந்த இடம் இலங்கை என குறிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையில் இனம்: இந்தியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நான் தேர்வு செய்த அடையாளங்கள் அல்ல. என் வாழ்வுரிமை மீது குத்தப் பட்டுள்ள முத்திரைகள்.இது ஒரு வகையான அரசியல். படைப்பிலக்கியத்தில் அடையாளத்தை முன்னிலைப் படுத்துவது ஒருவகை வியாபாரமாக இப்போது ஆகிவிட்டது.எனவே இது குறித்து பேசுவது சலிப்பைத் தருகிறது.

வல்லினம்: இலங்கையில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு இன்றைய இலங்கைத் தமிழர் நிலைகுறித்த பார்வை என்ன?

லதா:
இதில் இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லாதவர் என்ற பேதமெல்லாம் இல்லை. பொதுவாக இது தமிழர் பிரச்சனை. தமிழ் இனத்துக்கான பிரச்சனை. ஏறக்குறைய இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழர் படும் அவலம் உலகப் பார்வைக்கு பரவலாகச் சென்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த இன படுகொலை குறித்து உலக நாடுகள் கண்டு கொள்ளாமல் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க ஆக்ககரமான முடிவு எடுக்காமல் இருப்பது கொடுமையானப் புறக்கணிப்பு. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்களால் இயன்றவரை இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு சிலர் அரசியலும் சென்கின்றனர் என்பது வேறு. ஆனால் இந்த ஆதரவும் கூக்குரலும் அதே போல் எதிர்ப்பும் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமானவை யாகவே உள்ளன. கண்மூடித்தனமான ஆதரவும் வெறித்தனமான எதிர்ப்பும் மிக ஆபத்தானவை. அறிவு நிலைப்பட்ட ஆக்கப்பூர்வமாக ஆதரவும் உதவியும் வழிகாட்டலுமே தமிழினத்துக்குத் தேவைப்படுகிறது. இதற்கு மேலும் சிங்கள அரசாங்கம் இலங்கை எனும் ஒரே நாட்டில் தமிழ் மக்களை சம உரிமையோடு வாழவிடும் என எதிர்பார்க்க முடியாது என்பது உலகம் அறிந்த ரகசியம். எலி வளையானாலும் தனி வளைதான் வேண் டும். தமிழ் மக்களுக்கு என ஒரு நாடு, சுதந்திரமான குரல், அந்த தமிழ் நாட்டிலிருந்து செழிக்கும் தமிழர் பொருளாதாரம் பிற இன தாக்கங்களிலும் கலப்புகளிலும் அடிபட்டுப் போகாதப் பண்பாடு, இதன் மூலம் தழைத்து வளரும் கலை, இலக்கியங்கள் இவையெல்லாம் உலகெல் லாம் வாழும் தமிழ் மக்களுக்கு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்குமே ஒரு மதிப்பையும் அடையாளத்தையும் நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தும். காட்டிக் கொடுத்தல், பிளவு படுதல், நீயா நானா போட்டி, சுய நலம், சந்தர்ப்ப அரசியல் போன்ற எல்லாம் தூக்கி யெறிந்து விட்டு ஒன்று பட்டு போராடினால் நமக்குரிய இடத்தை இந்த உலகத்தில் நாமே பெற முடியும். இது ஒரு மாயக்கனவுதான். ஆனாலும் அப்படி ஒரு வாழ்வை தமிழினம் பெறும் என நம்பிக்கை எனக்குள்ளது.

நேர்காணல், படம் : ம.நவீன்

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768