மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஓர் அறிவுத்திருட(ன்)ரா?

8ac4f877abe1776882b9178ea3dc9aadகொஞ்சம் சங்கடமான மனநிலையில்தான் இதை எழுதத்தொடங்குகிறேன். சங்கடம் ஒரு பெரியவரை நோகச்செய்கிறேன் என்பதன்றி உண்மையைச் சொல்வதில் இல்லை.

மலேசிய எழுதுலகத்தில் பலரும் அவரவரால் இயன்றதை எழுதிவருகின்றனர். ஒரு வாசகனாக எனக்கு சில எழுத்தாளர்களின் படைப்புகள் மேல் மதிப்பும் சிலரின் எழுத்துகளில் அதிருப்தியும் உள்ளது. ஆனாலும் எனது வாசிப்பில் உருவாகும் அந்த மதிப்பீடுகள் அவர்கள் எழுத்தின் மேலன்றி எழுத்தாளர் மேல் ஒருபோதும் இருந்ததில்லை. நாளையே அந்த மதிப்பீடுகள் எனக்கே மாறலாம் அல்லது இன்னொரு வாசகர்/விமர்சகர் புதிய அணுகுமுறையில் ஒரு பிரதியை முக்கியமானதாக முன்னெடுப்புச் செய்யலாம் என்பதில் எனக்குத் துளியளவும் சந்தேகம் இருந்ததில்லை. ஆனால் இன்றைய எனது இலக்கிய மதிப்பீடுகள் மீது நான் உறுதியாகவே இருக்கிறேன்.

ஒருவர் கருத்துடன் உடன்படாததாலும் அவரின் படைப்புகளை நான் விமர்சித்திருந்ததாலும் என்னிடம் பேசுவதை பலர் நிறுத்தியுள்ளனரே தவிர யாரிடமும் தனிப்பட்ட கசப்பு எனக்கு ஏற்பட்டதில்லை. என் மேல் அளப்பறிய அன்பை பொழிந்தவர்கள், என் மேல் அக்கறைக் கொண்டவர்கள் பலரின் அருகாமையை இலக்கிய விமர்சனங்களால் நான் இழந்துள்ளேன். அதுகுறித்து எனக்குக் கவலையும் இருந்ததில்லை. மலேசியத்தமிழ் இலக்கியச் சூழலில் அதுபோன்ற விலகலுக்குத் தயாராகியப்பின்னரே இலக்கியம் சார்ந்த விமர்சனங்களை / கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

படைப்புலகத்தைத் தாண்டி சமூகக் கலை இலக்கியச் செயல்பாட்டில் செய்யப்படும் சுரண்டல்களும் ஊழல்களும் அறியவரும்போது அதைச் சுட்டிக்காட்டி அதைச்செய்யும் நபர்களுடன் நான் உறவை துண்டித்தே இருக்கிறேன். ‘உறவைத்துண்டித்தல்’ என்பது உரையாடலை நிறுத்திக்கொள்வதுதானன்றி பகையுணர்ச்சி கொண்டிருத்தல் அல்ல. அதே சமயம் ‘வல்லினம்’ குறித்து அவதூறு பரப்புபவர் யாராக இருந்தாலும் என்னால் உறவைத் தொடர முடிந்ததில்லை. இப்படிப்பட்டச் சூழலில் ‘அறிவுச்சுரண்டலை’ எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற குழப்பமே முதலில் எழுகிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மேல் எனக்கு நல்ல மதிப்புண்டு. அன்பாகப் பேசக்கூடியவர். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகளைப் பதிவு செய்துவருகிறார். நிறைய மூலங்களில் இருந்து தகவலைப் பெற்று எழுதக்கூடியவர். பெற்ற தகவல்களைச் சுவாரசியமாகச் சொல்லக்கூடியவர். ஆனால், கடந்த சில காலமாக சில நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ச்சியாக அவர் எழுதும் கட்டுரைகள் எனக்குச் சங்கடத்தையே கொடுத்தன. அதற்கு முதல் காரணம் கட்டுரைகளுக்காக அவர் தேடிச்சேகரிக்கும் கருத்துகளுக்கான மூல நூல் குறித்த குறிப்பில்லாமல் அவர் அதை எழுதி வருவதுதான்.

http://ksmuthukrishnan.blogspot.my/ என்ற தளத்தில் அவர் தொடர்ந்து பதிவிட்டுவரும் பல வரலாற்றுக்கட்டுரைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததை காணும்போது முதலில் துணைநூல்களைச் சுட்டுவது குறித்த தேவை குறித்து அவருக்குப் புரியவில்லை என்றே நினைத்தேன். ஆனால், http://ksmuthukrishnan.blogspot.my/2012/09/blog-post_30.html என்ற முகவரியில் அவர் எழுதியுள்ள ‘விக்கிப்பீடியா திருடர்கள்’ என்ற  கட்டுரையில் அறிவுத்திருட்டு குறித்து அவரே ஒரு கட்டுரையும் எழுதி மூலப்பிரதியின் குறிப்பைப் போட வேண்டும் எனச்சொல்லியிருப்பது முரண்நகை.

01

சான்று 1 : விக்கிப்பீடியா திருடர்கள்

இந்நிலையில்தான் புதுவிசை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யா ஒரு தகவலை சில காலங்களுக்கு முன் பகிர்ந்தார். அதாவது, 2006ல் புதுவிசை இதழில் ஆ.சிவசுப்ரமணியன் என்பவர் எழுதிய ‘சமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ (http://keetru.com/visai/apr06/sivasubramanian.php) எனும் கட்டுரை ஈப்போ முத்துக்கிருஷ்ணனால் திருடப்பட்டு ‘நான் சஞ்சிக்கூலி மகன்’ எனும் தலைப்பில் 2013ல் எழுதப்பட்டது http://ksmuthukrishnan.blogspot.my/2013/04/blog-post.html தெரியவந்தது. உடனே இரண்டையும் வாசித்துப்பார்த்தேன். மூலக் கட்டுரையிலிருந்து பல தகவல்கள் எடுத்து சில சொற்கள் மட்டும் மாற்றிப்போடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. கட்டுரைகளில் துணைநூல் பட்டியலே போடாத அவர் அறிதாக அந்தக் கட்டுரைக்கு மட்டும் ஒரு நீண்ட துணைநூல் பட்டியல் சேர்த்திருந்தார். வாசித்ததில், ஒரு மாற்றமும் செய்யாமல் ஆ.சிவசுப்ரமணியன்  பயன்படுத்திய அதே துணை நூல் பட்டியல் இக்கட்டுரையிலும் இணைக்கப்பட்டிருப்பது தெளிவானது.

02

சான்று:  சிவசுப்பிரமணியன். (2006). ‘சமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ .

03

சான்று: முத்துக்கிருஷ்ணன். (2013). நான் சஞ்சிக்கூலியின் மகன்(காப்பியடிக்கப்பட்ட முழுக்கட்டுரையில் ஒரு பகுதி).

முத்துக்கிருஷணன் அன்பானவர். அவரை உடனே நோகடிக்க மனம் வரவில்லை. இதுகுறித்து தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. அதன்பின்னர் நாளிதழ்களில், அவர் வலைத்தளத்தில் வெளிவரும் கட்டுரைகளைப் பார்க்க சங்கடமாக இருக்கும். எந்தக் கட்டுரையிலும் சான்றுகளும், துணைநூல் பட்டியலும் இருக்காது. சில கட்டுரைகளின் கருத்துகள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன எனத்தோன்றினாலும் அது எத்தனை விழுக்காடு என ஊர்ஜிதப்படுத்த முடியாத அளவுக்கு அவர் தனது வலைப்பூவிலிருந்து எதையும் ‘copy’ செய்து இணையத்தில் தேட முடியாத படிக்கு செய்திருந்தார். ஆனால் உண்மை அத்தனை நிசப்த்தமானதா என்ன? அதற்கு தன்னை எப்படியும் வெளிக்காட்டிக்கொள்ளத் தெரியும்.

நேற்று இரவு (1.9.2016) அவர் ஒரு கட்டுரைப் பதிவிட்டிருந்தார். ‘பசுபதியின் மறுபக்கம்’ எனத்தலைப்பிடப்பட்ட அக்கட்டுரை 90% வல்லினத்தில் நான் எழுதிய ‘வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்’ (http://vallinam.com.my/version2/?p=3146) என்ற கட்டுரையின் அப்பட்டக் காப்பியடிப்பு. முத்துக்கிருஷ்ணன் எவ்வாறு ஒரு கட்டுரையின் மொழியில் தலையிட்டு தனது கிண்டலான மொழியைப் புகுத்தி அதை தனது கட்டுரைப்போல மாற்றுகிறார் என அக்கட்டுரை வழி அறிய முடிந்தது. அதன் கீழே முகநூல் வாசகர்கள் கொடுத்த பாராட்டுச்சான்றுகள் அனைத்திற்கு ‘லைக்’ போட்ட அவரால் அது தனது கட்டுரை இல்லை எனச் சொல்ல நா எழவில்லை. இந்நிலையில் நான் அவரை நள்ளிரவில் அழைத்தேன்.

0405

                                                                                             06                                                                   07

சான்று: முத்துக்கிருஷ்ணன். (1, செப்டம்பர் 2016). பசுபதியின் மறுபக்கங்கள் (அவர் தளத்தில் அழிக்கப்பட்டது)

அவரது அறிவுத்திருட்டைக் குறித்துக்கூறினேன். அவர் என் படத்தை அதில் போட்டுள்ளதாகக் கூறினார். அதாவது 90% என் எழுத்தைப் பயன்படுத்திய அவர் என் படத்தை அதில் போடுவதன் மூலம் தந்திரமாக என்னைச் சமாளிப்பதோடு வாசகர்களிடமும் அது தனது கட்டுரை இல்லை எனச் சொல்ல அவசியமற்றதாக்குகிறார். இது திட்டமிட்டே செய்யப்படும் திருட்டாகத் தோன்றியது. உடனடியாக அவரது அக்கட்டுரை ‘SCREEN SHOT’  எடுத்து வைத்திருந்தாலும் பின்னர் அவர் வயதுகாரணமாக நான் அவர் தவற்றைச் சுட்டி எழுதும் மனநிலையில் இல்லாமல் இருந்தேன்.

இன்று காலையில் மீண்டும் அதிர்ச்சி. அவர் எவ்விடத்திலும் தனது தவறைச் சொல்லாமல், குறைந்த பட்சம் அவர் பிரசுரித்தக் கட்டுரையில் என் பெயரை இணைக்காமல் கட்டுரையைத் தன் தளத்தில் இருந்து அழித்ததோடு மீண்டும் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரித்துள்ளார் (http://ksmuthukrishnan.blogspot.my/2016/09/pasupathy-sithamparam.html). ஆனால் அதுவும் திருட்டுக்கட்டுரை என்பது வருத்தமான தகவல்.

 08

சான்று: முத்துக்கிருஷ்ணன். (1 செப்டம்பர், 2016). Pasupathy Sithambaram.

http://ksmuthukrishnan.blogspot.my/2016/09/pasupathy-sithamparam.html

10இதிலிருந்து திருடப்பட்டது

சான்று: Ravichandran D.J Paul. (2009). Three honoured for the betterment of Tamil youths.

http://www.martialarts.com.my/mcm/index.php/news/tag/Three%20Honoured%20For%20The%20Betterment%20Of%20Tamil%20Youths

தகவல் பெறப்படும் மூலங்களை கட்டுரைகளில் இணைப்பது மூலத்தரவினை உருவாக்கியவருக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அது தன் கட்டுரைக்கு வலுக்கூட்டவும் வாசகரை அக்கட்டுரை தொடர்பில் மேலும் தகவல் அறிய வழிகாட்டவும்தான். ஆனால், தன் எழுத்துவழி தகவல்களையும் பொது அறிவினையும் பரப்ப விரும்பும் முத்துக்கிருஷ்ணன் தனது தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளை பிறர் எவ்வகையிலும் copy – paste செய்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவான பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியுள்ளார். இதனை இருவேறு நிலைகளில் அணுகிப் பார்க்கலாம். ஒன்று, யாரும் தனது படைப்பை எளிதில் கவர்ந்துவிடக் கூடாது. மற்றொன்று, தன் அறிவுச் சுரண்டல் எளிதில் மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டுவிடக்கூடாது.

இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு முத்துகிருஷ்ணன் நல்லதுக்குத் தானே எழுதுகிறார் என்ற கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் அங்கும் அவரது ஞாயம் அடிப்பட்டு போகிறது. மூலத்தரவை குறிப்பிட்டு நன்றி எனப் பதிவிட்டு கடந்து போக வேண்டிய இடத்தில் அவ்வாறு செய்வதைத் தொடர்ந்து புறக்கணித்துவருவது அவரின் அனைத்து ஞாயங்களையும் பின்னுக்குத் தள்ளுவதை மறுக்க முடியாது.

அறிவுப் பகிர்வை ஊக்கப்படுத்தும் இக்காலத்தில் யாரும் யாருடையப் பதிவையும் எடுத்துக் கையாளலாம். ஆனால் அதில் எவ்வித சால்ஜாப்புகளும் இருக்கக்கூடாது. காரணம், திருடப்படுவது எழுத்துகள் அல்ல. ஒருவரது அறிவு. நாளிதழ்களில் எழுதுவதோடு விக்கிபீடியாவிலும் தொடர்ந்து பங்களித்துவரும் முத்துக்கிருஷ்ணன் இனிமேலும் இவ்வாறான அறிவுச் சுரண்டலை செய்யாமல் இருப்பார் என எதிர்பார்க்கிறேன்.  அவ்வாறு செய்தால் மிக விரிவாகவே அவரது திருட்டுகள் இனி அம்பலமாகும்.

பி.கு : இதை வாசித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கும் முன்னர் வாசகர்கள் நான் கொடுத்துள்ள சுட்டிகளைச் சொடுக்கி வாசித்துப்பார்க்கலாம்.

(Visited 1,116 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *