மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.)

சீன இலக்கியம் படம் 01முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக் கொள்கையளவிலும் மலேசிய பேரிலக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகும்.

நான் ‘மலேசிய இலக்கியம்’ என்னும் பதத்திற்கு முன் ‘சீனர்’ என்னும் சொல்லை இணைப்பதன் காரணம் மலேசிய வாழ்ச் சீனப் படைப்பாளிகளால் படைக்கப்படும் இலக்கியமானது மலேசியத் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதியாகும் என்பதை வழியுறுத்துவதற்காகவே. ‘மலேசிய சீன இலக்கியம்’ என்னும் சொல்லானது பொதுவாக மலேசிய சீன இனத்தவர்களால் சீன மொழியில் எழுதப்படும் எழுத்துக்களையே குறிக்கிறது. மாறாக, சீனர் மலேசிய இலக்கியம் என்னும் சொல்லாடல் மலேசிய சினொஃபோன் இலக்கியம் (Sinophone Malaysian Literature) எனப்படும் சீன புலம்பெயர் இலக்கிய வகையை ஒத்த பொருளைக் கொடுக்கக்கூடியது. ஆகவே ‘சீனர் மலேசிய இலக்கியம்’ என்பது மலேசிய சீனர்களால் சீன மொழியில் எழுதப்படும் இலக்கியம் என்று பொதுமைப்படுத்தலாம்.

சீனர் மலேசிய இலக்கியம் என்பதன் சுருக்கமான அறிமுகமும் விளக்கமும் காண நாம் மலேசிய வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாகக் கூறுவதென்றால், தீபகற்ப மலாயாவிலும் வடக்குப் போர்னியோ பகுதிகளிலும் சீன மக்களின் குடியேற்றம் 11-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தோ அல்லது 11-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையோ நிகழ்ந்திருக்கக்கூடும் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. வரலாற்றின்படி மலேசியா என்னும் அரசமைப்பு, தீபகற்ப மலாயா, ஆங்கில காலனித்துவப் பகுதிகளான சாபா, சரவாக், சிங்கப்பூர் ஆகிய நிலப்பகுதிகள் மலேசியக் கூட்டரசாக 1963-ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து தொடங்கியது.

சீனக் குடியேறிகள் அன்று தொடங்கி இன்று வரை சீன குடியேறிகளாகவும் சீன மலேசியர்களாகவும் குறிக்கப்பட்டு வருகின்றனர். நான் மலேசிய சீனர்கள் என்னும் சொல்லைவிடச் சீன மலேசியர்கள் என்னும் சொல்லையே முன்னிலைப்படுத்த காரணம், இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் மலேசியக் குடியுரிமை பெற்றது வரை, பிரிட்டிஷ்க்கு முன்னைய காலனித்துவம், பிரிட்டிஷ் காலனித்துவம், மலாயக் கூட்டரசு, மலேசியா ஆகிய பல்வேறு வரலாற்று தடங்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையே வேறு வகையில் கூறுவதானால், சீன மலேசிய இலக்கியம் என்பது, சீனக் குடியேறிகள், மலேசிய சீன பிரஜைகளாக மாறிய நீண்ட வரலாற்றோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இனம், மொழி, பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையில், பேராசிரியர் வோங் குங்-வு மலேசியா உட்படத் தென் கிழக்காசியச் சீன வம்சாவளி எழுத்தாளர்களின் படைப்புகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்.

முதல் பிரிவில், சீன வம்சாவளியினரால் வட்டார மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் சீன மொழி பழமை நாவல்களும் உள்ளூரிலேயே பிறந்த பாபாக்கள் (Baba or Peranakan Chinese) மலாயிலேயே எழுதும் படைப்புகளும் அடங்கும். இரண்டாம் பிரிவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொடங்கி இன்று வரை மலேசிய சீனர்களால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு வரும் படைப்புகளை அடக்கலாம். அண்மையில், ஆங்கில மொழியில் கல்விக் கற்ற சில மலேசிய சீனப் படைப்பாளிகளின் ஆங்கில மொழிப் (Anglophne) படைப்புகளுக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக சீன மொழியில் எழுதப்படும் இலக்கியங்களைக் குறிப்பிடலாம். சீன மொழி கல்விக் கற்ற சீனப் படைப்பாளிகள் பொதுவாக சீன செம்மொழியிலோ சீனக் கிளை மொழிகளிலோ தங்கள் படைப்புகளை வடிக்கின்றனர்.

மலேசிய சீன இலக்கியம் தென்கிழக்காசியாவின் ஒரு பகுதியாக இருந்த போதும் அது சீனப் பெருந்தேசத்தின் (சீனா, ஹாங்காங், தைவான்) இலக்கிய வளர்ச்சியால் பெரிதும் தாக்கம் காண்பதாகவே அமைந்துள்ளது. 1919 மே 4இல் உச்சம் அடைந்த ‘மே 4 இயக்கம்’ சீன செம்மொழி பயன்பாட்டை தாய்மொழி பயன்பாட்டுக்கும் நவீன சீன மொழி பயன்பாட்டுக்கும் உருமாற்றியுள்ளது. 1930களில் மலேசிய எழுத்தாளர்கள் சீனாவில் எழுதப்பட்ட ஜப்பானிய படையெடுப்பு எதிர்ப்பு எழுத்துக்களையே தங்கள் தேசப் பற்று எழுத்திலும் கொண்டு வந்துள்ளனர். ஆகவே, 1930 முதல் இரண்டாம் உலகப் போர் வரை மலேசிய சீன இலக்கியங்களில் மலேசிய சீன கதை மாந்தரோ, மலேசியக் கதைக் களமோ மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், இங்கு பல சீனப் பள்ளிகள், சீன நாளிதழ்கள், பண்பாட்டு சங்கங்கள் போன்றவை தோன்றலாயின. அவை இம்மண்ணில் பிறந்து வளர்ந்த சீன சமூகத்தையும் சீன நாட்டில் இருந்து சிறு பிராயத்திலேயே மலேசியா வந்துவிட்ட சீனர்களையும், மலேசிய சீன சமூகத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் எழுத உக்குவித்தன. உதாரணத்திற்கு, கடல்கடந்த சீனர்களாய் வாழ்வதால் விளையும் மன உணர்வுகள், இந்நாட்டில் பிறந்த சீனர்களுக்குச் சீனத்துவ உணர்வுகளை ஊட்டுவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவையாகும். 1949ஆம் ஆண்டில் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு சீனா கம்யூனிசக் குடியரசாக மாறியதும் இங்குள்ளவர்களின் தொடர்புகள் குறையத் தொடங்கின. மலேசிய அரசு மலாய் மொழியை இந்நாட்டின் முதன்மை மொழியாகவும், ஒற்றுமை மொழியாகவும் பிரகடனப்படுத்தியது. மலேசிய அரசியல், சமூகம், பொருளியல், பண்பாடு, கல்விக் கொள்கை போன்றவை மலாய் இன மேலாண்மைகளால் நிர்வகிக்கப்பட, இம்மண்ணில் பிறக்காத, இம்மண்ணில் பிறந்த சீன எழுத்தாளர்களின் கவனம் மலேசிய சமுதாயத்தின் பக்கம் திரும்பியதோடு இங்குள்ள வாழ்கை முறையில் அக்கறை செலுத்தத் தொடங்கினர்.

சீன இலக்கியம் படம் 02ஃபாங் க்ஷியூ மலேசிய சீன இலக்கிய வரலாற்று முன்னோடியும் ஆளுமை மிக்க இலக்கிய வரலாற்று செயல்துறைக் கோட்பாட்டாளரும் ஆவார். அவர் தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ள 1976-க்கு முன்பான நவீன சீன இலகிய வரலாற்று குறிப்புகளை மறுக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த இலக்கிய வரலாற்று அறிஞர் பேராசிரியர் யோங் சொங்-நியன், சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான (1965க்கு முன்னான) சீன இலக்கியத்தையும் மலேசிய சீன இலக்கியத்தையும் ஒப்பீட்டளவில் ஒன்றாக இணைத்துப் பேசுகிறார். ஆகவே நான், ஃபாங் க்ஷியூ, பேராசிரியர் யோங் சொங்-நியன் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் 1976-க்கு முன்னான மலேசிய சீன இலக்கிய வரலாற்றைப் புதிய நோக்கில் தொகுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அவை, 1919 முதல் 1924 வரை: கடல் கடந்த சீன இலக்கியத்தின் ஆரம்பம். 1925 முதல் 1933 வரை: கடல் கடந்த, தென் பசுபிக் கடல் வட்டார சீன எழுத்தாளர்களின் ஆரம்பகாலம். 1934 முதல் 1936 வரை: மலாயா வட்டார சார்பு இலக்கியப்படைப்புகள். 1937 முதல் 1942 வரை: கடல் கடந்த சீன இலக்கியத்தின் புத்தெழுச்சிக் காலம். 1945 முதல் 1949 வரை: மலேசிய சீன இலக்கியத்தின் தனித்தன்மைகள் மிளிர்ந்த காலம். 1950 முதல் 1954 வரை: வட்டார விழிப்புணர்வும் ‘மஞ்சள்’ கலாசார எதிர்புணர்வும் துவக்கம். 1955 முதல் 1959 வரை: வட்டார உணர்வுத் தெளிவும் தேசப் பற்றும் மிக்க இலக்கியப் படைப்புகள். 1960 முதல் 1976 வரை: வட்டார விழிப்புணர்வு தொடர்ச்சியும் இன அடையாளமும்.

கற்பனை நவிற்சிவாதமே (Romanticism) வரலாற்றுக் காலம் தொட்டு மலேசிய சீன இலக்கிய படைப்புகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் இந்நிலையே தொடர்ந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் யதார்த்தவாத இலக்கியமே மலேசிய சீன இலக்கியத்தின் பொதுப்போக்காக இருந்துள்ளது. மலேசிய நவீன சீன இலக்கியம் 1930-களில் தோன்றி வளர்ந்தாலும், 1960, 1970-ஆம் ஆண்டுகளில்தான் உறுதியான ஒரு தளத்தை உருவாக்கிக்கொண்டது. மலேசிய சீனப் படைப்பாளிகள் யதார்த்தவாத படைப்புகளையும் நவீன இலக்கியத்தையும் 1980, 1990-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து படைத்து வந்துள்ளதோடு தனித்தன்மைகள் மிக்க இலக்கியப் போக்கை உருவாக்கி, ஆளுமைமிக்க படைப்பாளர்களாக வெளிப்படுகிறார்கள். 1990 தொடங்கி இன்று வரை மலேசிய சீன எழுத்தாளர்கள் யதார்த்தவியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற பல்வேறு இலக்கிய வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சீனர் மலேசிய எழுத்தாளர்கள் இலக்கியப் பயிற்சிகளையும் இலக்கிய மேற்கோள்களையும் தைவானில் இருந்து பெறுகின்றனர். அவர்களின் படைப்புகளும் இலக்கிய விமர்சனங்களும் உலகலாவிய பார்வையைப் பெற்றுள்ளன. தைவானில் பணியாற்றும் பேராசிரியர் லிம் கியேன் கேட், பேராசிரியர் எங் கிம் சியு, பேராசிரியர் தீ கிம் தோங் போன்றோர் 1990-முதல், சீனர் மலேசிய இலக்கியமானது, சீன தேசத்தின் அரசியல், பண்பாட்டுக் கூறுகளுக்குத் தொடர்புடையதாக இருக்கும் சீனத்துவத்தை மறுநிர்மானம் செய்வதன் அடிப்படையில் தன் அகவயத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனர் மலேசிய இலக்கியம் என்பது சீன தேசத்து இலக்கியத்தின் கிளை இலக்கியமோ இணைப்பு இலக்கியமோ அல்ல. சீனர் மலேசிய இலக்கியத்தின் அகவயத்தன்மைகளைத் தெளிவாக தெரிந்து கொள்வதன் வழி, மலேசிய சீனர்களுக்கு மலேசியாவுடனான சகாப்தம், பண்பாடு, வரலாறு இருப்புகளை அமைத்துக்கொள்ள முடியும். மலேசியா தன் தேசம் என்ற உணர்வின் அடிப்படியில் இலக்கியம் படைக்க இந்தத் தெளிவு மிகவும் முக்கியமாகும் என்று அவர்கள் விளக்குகின்றனர். மலாய் மொழி அல்லாத மற்ற மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிடும் மலேசிய கலாசார கொள்கையின் காரணமாக, தேசிய இலக்கிய நிலையில், சீனர் மலேசிய இலக்கியம் மலாய் இலக்கியம் அடைந்திருக்கும் நிலையை எட்டாமல் இருக்கிறது. எனினும் அதன் இலக்கியத் தகுதிக்கு உலக சீன இலக்கிய அரங்கில் போதுமான அங்கீகாரம் கிடைத்துள்ளது நிறைவளிக்கிறது.

* குறிப்பு: இக்கட்டுரை ஆங்கில மொழிபெயர்பை அடிப்படையாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

References:

1. Fang Xiu, A Brief History of Singapore Malaysian New Literature: Miles Books, 1974.

2. LIM, Kien Ket (林建國), “Weishenme mahua wenxue?” (爲什麽馬華文學?), in CHEN, Dawei (陳大為) et al., Mahua wenxue duben II: chidao huisheng (馬華文學讀本II: 赤道回聲). Taipei: Wanjuanlou Tushu Gufen Youxian Gongsi, 2004: 3-32

3. NG Kim Chew (黃錦樹). “Huawen/Zhongwen: Shiyu de nanfang yu yuyan zaizao” (華 文/中文:『失語的南方』與語言再造),in NG, Kim Chew, ed. Mahua wenxue;nei zai Zhongguo,yuyan yu wenxueshi (馬華文學:內在中國、語言與文學史), Kuala Lumpur: Huashe ziliao yanjiu zhongxin, 1996.

4. NG, Kim Chew (黃錦樹). Mahua Wenxue yu Zhongguoxing (馬華文學與中國性), Taipei: Yuanzun Chubanshe, 1998

5. Yeo,Song-nian(杨松年) ,Singapore Chinese Modern Literature History Chu Bian Singapore: BPL (Singapore) Education Press, 2000

6. ZHANG, Jinzhong (張錦忠). Nanyang lunshu: Mahua wenxue yu wenhua shuxing (南 洋論述:馬華文學與文化屬性). Taipei: Cité Press, 2003

(விரிவுரையாளர்,Department of Chinese studies,Institute of Chinese studies UTAR)
தமிழாக்கம்: அ.பாண்டியன், கங்காதுரை கணேசன்

2 comments for “மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

  1. mini
    April 8, 2014 at 9:03 am

    இத்தனை நாள் அறிய ஆவலாய் இருந்த தகவல் எல்லாம் வல்லினம் மூலமும் எழுதாளர் பாண்டியன் மூலமும் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி

  2. அ.பாண்டியன்
    April 8, 2014 at 11:41 am

    மினி உங்கள் கருத்துக்கு நன்றி. இக்கட்டுரையின் மூலத்தை பெருவதில் முதல் உழைப்பு நண்பர் கங்காதுரையினுடையது. அவர் பெற்று கொடுத்த ஆங்கில கட்டுரையை அடிப்படையாக வைத்து நான் மொழி பெயர்ப்பு வேலையைச் செய்தேன். ஆகவே நண்பர் கங்காதுரைக்கு நமது முதல் நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். நன்றி

Leave a Reply to mini Cancel reply