ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

அ.பாண்டியன்தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை வெளிவருவதில் ஏற்பட்ட சுணக்கமும் இலக்கிய பரப்பில் முக்கியமாக கவனிக்கத்தக்கது. பா. சிங்காரத்தின் படைப்புகளை முன்னிலை படுத்தி பரவலாக அறிமுகம் செய்து வைத்த சி. மோகன் ஆரம்ப காலத்தில் இந்நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் கவனிப்பாரற்று போனது நமது ‘சாபக்கேடு’ என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

ப.சிங்காரம் படைத்த இரண்டு நாவல்களில் கடலுக்கு அப்பால் மூத்தது. ஆனால் அந்த நாவலிலேயே பத்தாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாம்  ( புயலிலே ஒரு தோணி) நாவலின் அடிப்படை வேலைகள் தொடங்கி இருப்பதாக நூலின் முன்னுரையில் சி.மோகன் குறிப்பிடுகிறார். இரண்டு நாவல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. ஆனால் தனித் தனி பாதைகளை அமைத்துக் கொண்டவை. ப. சிங்காரம் இதே தொடர்புகளுடன் தன் மூன்றாவது நாவலை எழுதி இருப்பாரென்றால் தமிழில் சிறந்த திரிலோஜி கிடைத்திருக்கும்.

மேலோட்டமாக பார்த்தால் ‘கடலுக்கு அப்பால்’ ஒரு உணர்ச்சிமயமான காதல்  கதை. அன்பால் இணைந்த இரு உள்ளங்கள் சந்தர்ப்ப சூழலால் பிரிந்து செல்லும் சோக முடிவை கொண்ட ஜனரஞ்சக கதை. ஆனால் அதன் அடுத்த தளத்தில் அது, ஒரு வீரியம் கொண்ட லட்சியவாதத்தையும் பின்னர் லட்சியவாதம் பொருளற்றதாகி அந்தரத்தில் விடப்படும் நிலையாமையையும் பேசுகிறது. உண்மையில், செல்லையா-மரகதம் காதலையும் , ஐ.என் ஏ போராட்ட லட்சியத்தையும் மிக நுணுக்கமாக இரு வேறு தளங்களில் ஒருங்கே நகர்த்தி செல்லக்கூடியதாகவே இந்நாவலின் கட்டமைப்பு அமைந்துள்ளது.

இந்நாவல் நகரத்தார் எனப்படும் செட்டியார் சமூகத்தாரின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ப.சிங்காரம் இந்நாவலில் கதை அமைப்பு, உத்தி மற்றும் பாகம் பிரிப்பது தலைப்பிடுவது போன்ற நடைமுறைகளில் அக்கால கட்ட நவீன இலக்கிய படைப்புகளையே அதிகம் சார்ந்து நிற்கிறார். ஆனால் அவர் தேர்வு செய்த களமும் அது கொண்டுள்ள வரலாற்று முக்கியத்துவமும் இந்நாவலை முக்கியமான தமிழ் நாவலாக மாற்றியுள்ளது. அதோடு அவர் கொண்டுள்ள மொழி நடை தமிழில் புது எல்லைகளைத் விரித்துச் செல்கிறது.

உலக தமிழ் வாசகர்கள் மெச்சும் கோணத்தையும் தாண்டி மலேசிய வாசகர்கள் கொண்டாட இந்நாவலில் பல காரணங்கள் உள்ளன . பொதுவாக ஆரம்பகால மலேசிய தமிழ் நாவல்கள் முற்றும் தமிழ்நாட்டு சாயலில் இருப்பது வழக்கம். பின்னர் வந்த நாவல்களில்தான் மலேசிய தனித்துவம் கொஞ்சம் சொஞ்சமாக தலைகாட்ட துங்கின. அதே போல் தமிழ் நாட்டு படைப்பாளர்கள் மலாயாவை களமாக கொண்டு படைப்புகள் எதையும் எழுதாத காலம் அது. வெகுகாலத்திற்கு பிறகுதான் அகிலன் மலேசியாவில் சில நாட்கள் தங்கியதன் விளைவாக ‘பால் மரக்காட்டினிலே’ தோன்றியது. ஆனால் அதுவும் மிக தட்டையான மலேசிய சூழலையே காட்டக் கூடிய வணிக எழுத்தாக தேங்கிவிட்டது.

ஆனால்  1960-ல் எழுதப்பட்ட பா.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ ஏறக்குறைய ஒரு மலேசிய நாவல் என்னும் தகுதியை பெற்றுள்ளது. முன்பு ப. சிங்காரத்தை மலேசியர் என்று தவறாக எண்ணியிருந்தோரும் இருந்தனர். அந்த அளவு ப. சிங்காரம் அன்றைய மலாயா மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து எழுதியிருக்கிறார். இனங்களுக்கு ஏற்ப மொழி பயன்பாட்டை சமரசம் இன்றி பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தென்கிழக்காசியாவின் பழம்பெருமை வாய்ந்த பினாங்கு நகரின் முக்கியத்துவத்தையும் பூகோல அமைப்பையும் தன் நாவலுக்குள் திறம்பட கொண்டுவந்துள்ளார்.

அதோடு இந்நாவல் இந்நாட்டில் இந்தியர்களின் குடியேற்றம் குறித்து பொது வரலாறு சொல்லாத ஒரு பகுதியை முன்னிலை படுத்துகின்றது. மலேசிய வரலாற்றின் முக்கிய காலகட்டமான ஜப்பானிய படையெடுப்பு, ஜப்பானிய ராணுவ மீட்பு இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட மிக நெருக்கடியான காலகட்டம், சுபாஸ் சந்திரபோஸின் ஐ.என். எ படையும் அதன் போராட்ட இறுதி நிலை, இன்று வரைக்கும் மலேசிய அரசாங்கம் தனது முதலாவது எதிரியாக கருதும் மலாய கம்யூனீஸ்டு படையும் அதன் தலைவர் சின் பேங்கும் போன்ற இந்நாட்டு வரலாற்று தடங்களை தனது பண்டை தமிழ் இலக்கிய அறிவோடு கலந்து மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இந்நாவலின் கதை சுறுக்கம் : பினாங்கு தீவில் மார்க்கா வைத்து சொந்தமாக வட்டிக் கடை வியாபாரம் செய்பவர் வயிரமுத்து. இவர் இத்தொழிலை மிக இளம் வயதில் பர்மா கிட்டங்கியில் இருந்து கற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறி (பெட்டியடிப்பையன் – அடுத்த ஆள்- மேலாள்) வந்தவர். வட்டித்தொழிலின் நெளிவு சுழிவுகள் அறிந்தவர். அதற்கேற்ற வாரே குரலை உயர்த்திப் பேசிப்பழகாதவர். இவரின் மனைவி காமாட்சி, மகள் மரகதம், மகன் வடிவேலு. வடிவேலுவுக்கு ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் கல்வி ஊட்ட வேண்டும் என்று கூறி தன்னுடன் பினாங்கிலேயே இருத்திக் கொண்டார். மனைவியும் மகளும் ஊரிலேயே இருக்கின்றனர்.

இவர் தன் நண்பனின் மகன் செல்லையாவின் அறிவு கூர்மையை கண்டு தன்னுடன் பினாங்குக்கு அனுப்பும் படி கேட்டு கூட்டி வந்து தன்னுடன் தங்கவைத்து தொழில் கற்றுத்தருகிறார். செல்லையாவும் மிகச்சிறந்த முறையில் வேலை செய்து நல்ல பெயர் வாங்குகிறான். மிக இளம் வயதில் அடுத்தாள் நிலைக்கு உயருகிறான். மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்பது வானாயீனாவின் எண்ணம்..

காலம் மாறுகிறது. விதியும் மாறுகிறது. இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. ஜப்பானிய தாக்குதலும் பிரிட்டீசாரின் பின்வாங்கலும் மிகப்பெரிய அரசியல், சமூக மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்நாவலின் கதை இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் (1941-1947) தான் நிகழ்கிறது.  இந்த காலகட்டத்தில் ஊரில் இருந்து காமாட்சியும் மரகதமும் பினாங்குக்கு வந்து (போரின் காரணமாக) மீண்டும் ஊருக்கு செல்ல முடியாத சூழல் உருவாகிறது. அதே நேரத்தில் வானாயீனாவின் ஒரே மகன் வடிவேலு ஜப்பானிய போர்விமான தாக்குதலுக்கு பலியாகிறான். இடிந்து போன வானாயீனாவிற்கும் அவர் மனைவி காமாட்சிக்கும் செல்லையா ‘பிடிமானமாக’ தெரிகிறான். மரகதத்தையும் தன் தொழிலையும் அவனிடமே ஒப்படைத்துவிடுவது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் செல்லையாவின் மனது வேறு பக்கம் போகிறது. அவன் சுபாஸ் சந்திரபோஸ் தலைமை ஏற்று இருந்த ஐ.என்.எ யில் தன்னை பிணைத்துக் கொள்கிறான். தன் உழைப்பாலும் வீரத்தாலும் வெகு விரைவில் ‘லெப்டினன் செல்லையாவாக’ உயர்கிறான்.  அக்காலகட்டத்தில் செல்லையாவின் வயதை ஒத்த பல இளைஞர்கள் ஐ.என்.எ யில் துணிந்து ஈடுபட்டனர். பயிற்சி முகாமில் மாணிக்கம், பழனியப்பன், பாண்டியன் போன்ற பல நண்பர்களைப் பெருகின்றான். வானாயீனாவிற்கு செல்லையாவின் போக்கு அறவே பிடிக்காமல் போகிறது. ராணுவம், போர், அரசியல் போன்றவை அவரது தொழில் தர்மத்திற்கு எதிரானவை. ஆகவே அவர் செல்லையாவை வெறுக்க தொடங்குகிறார்.

காலத்தின் காற்று வேறு பக்கம் வீசத்தொடங்குகிறது. ஹிரோசிமா, நாகாசாக்கி குண்டு வீச்சுகளுக்குப் பிறகு ஜப்பான் ராணுவம் ஆங்கிலேயரிடம் சரணடைகிறது. சுபாஸ் சந்திரபோசும் மர்மமான முறையில் மாண்டு போகிறார். ஆகவே மலாயாவில் இயங்கி வந்த ஐ.என்.எ முகாம்கள் அதிகாரமற்ற முறையில் கலைக்கப்பட்டு செல்லையா மீண்டும் வட்டிக்கடைக்கு வருகிறான். ஆனால் வானாயீனாவின் வரவேற்பு இல்லை. மரகததையும் வேறு இடத்தில் மணமுடிக்க முடிவெடுக்கிறார்.

தன் முடிவை மிகவும் முதிர்ச்சியாக செல்லையாவிடம் கூறுகிறார். அது ஒரு அரசியல் சமரச திட்டம் போலும், உடன்படிக்கை போலும் மிக முக்கியமான உரையாடலாகும். செல்லையாவால் மறுத்து பேசமுடியாத வகையில் வானாயீனா தன் சார்பு கருத்துகளை கூறுகிறார். இந்நாவலில் இந்த உரையாடல் காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் உயிரோட்டமானதுமாகும்.

செல்லையா மரகதம் காதல் தோல்வியில் முடிகிறது. ஆனால் அந்த தோல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் ஆர்ப்பாட்டம் இல்லாதது.

  • செல்லையா முதலில் மனம் கலங்கினாலும் பின்னர் தெளிவு அடைகிறான். நான் மரகதத்தை இழந்தேன் ஆனால் என்னை அறிந்தேன். …….. எல்லாம் அகந்தை, அகந்தை, அகந்தை.. என்பது செல்லையாவின் தெளிவு
  •  மரகதமோ “நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?   சொல்லு “ நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா , மரகதம்னு பேரு வைங்க. என்று கூறி நிறுத்திக் கொள்கிறாள்.
  • மரகததின் அம்மா காமாட்சி “ …சண்டாளி, நானும் பொம்பளையின்னி பிறந்தனே, குடுத்துவைக்காத பாவி,……மகராசனாயிரு. மனச அலட்டிக்கிடாதே… என்று சமாதானம் சொல்லி தானும் சமாதானம் ஆகிறார்.
  • செல்லையாவின் நண்பன் மாணிக்கம் “ மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை” என்று முடிக்கிறான்.

காதலின் புனிதம், மாட்சி என்று நோக்குகிற போது செல்லையா-மரகதம் காதல் ஒரு நாடகம் போல் தோன்றுகிறது. அதோடு அக்காதலை சந்தர்பவாத காதல் என்றே கூறத்தோன்றுகிறது. ஆனால் நிஜ வாழ்வில் 90% காதல்கள் சந்தர்பவாத காதலாகவும் பல்வேறு உலக சூழல்களுக்கு வளைந்து கொடுக்கும் காதல்களாகவுமே இருப்பதை உணரும் போது செல்லலையா-மரகதம் காதலும் பூமி பரப்பை மிதித்துக் கொண்டிருக்கும் நிஜ உலக காதல்களில் ஒன்று என்பதும் தெளிவாகிறது.

இந்நாவலின் மிக இனிமையான தன்மை அதன் துள்ளியமான காட்சி விவரிப்புகளிலும் மறந்து போன வரலாற்று மீட்பிலும் உள்ளது என்பது மிகையாகாது. தமிழக வணிக பரம்பரையினர் ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் வியாபார நிமித்தமாக சென்று வந்திருப்பதை நமது பண்டை இலக்கியங்கள் விளக்குகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் காட்டும் துறைமுக காட்சிகள் தமிழர் வியாபார மேன்மையை நன்கு படம்பிடிக்கினறன.

மலாய வரலாற்றிலும் ‘செட்டிகள் ’  என்னும் சொல் மிகவும் முக்கியமானதாகும். தமிழ் வியாபாரிகள் இந்நாட்டின் ஆரம்பகால வணிக வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிக முக்கிய பங்காற்றி இருப்பதற்கான அடையாளத்தின் எச்சம் மலாக்காவில் இன்றும் வாழும் ‘மலாக்கா செட்டிகள்’ சமூகத்தார். கடல் கடந்து வந்த தமிழக வியாபாரிகளின் 19-ஆம் நூற்றாண்டின் வியாபார விரிவாக்கம் பர்மா, மேடான், பினாங்கு போன்ற அன்றைய பெருநகரங்களில் மையமிட்டது. இன்றைக்கும் மலாய் மொழியில் ‘Ceti’, ‘Ceti haram’  போன்ற சொற்கள்  வட்டி வியாபாரத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறன.

மொழி தெரியாத, வேறுபட்ட சமய பண்பாட்டு சூழலில் அவர்களின் லேவாதேவி விபாபாரம் மிகுந்த சுறுசுறுப்பாக இயங்க காரணம் அவர்கள் தொழிலிலும் வாடிக்கையாளர்களிடமும் காட்டிய நெளிவு சுழிவு தன்மைகள் தான். கடலுக்கு அப்பால் நாவலின் வானாயீனா இப்படிப்பட்ட நெளிவு சுழிவுகள் அறிந்தவர். பொதுவாக அக்காலத்தில் வியாபாரம் பிழைக்க கடல்தாண்டி வந்தவர்களின் நோக்கம் பொருளீட்டல் என்பது ஒன்றிலேயே குறியாய் இருந்தது. உள்நாட்டு அரசியல் அலம்பல்களில் அவர்கள் தலையிடுவதில்லை. அதேபோல் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்த பிற தமிழர்களுடனும் கூலித் தொழிலாளிகளுடனும் அவர்கள் கலந்து பழகாதவர்கள்.  தங்களுகென்று ஒரு, பாரம்பரியம் மீராத வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொண்டு தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் அவர்கள். சைவசமய பற்றாளர்களான அவர்கள் தங்களோடு முருகக் கடவுளையும் தமிழையும் உடன் கொண்டு செல்ல தவருவதில்லை. இன்று சில நகரங்களில் அமைந்திருக்கும் ‘லிட்டல் இந்தியா ‘ க்களின் ஆரம்பம் அன்றைய செட்டித் தெருக்கள் தான் என்பது உண்மை. பினாங்கு தீவில் 19-ஆம் நூற்றாண்டில் வட்டிக்கடை வைத்து வியாபாராம் செய்ய வந்த  செட்டிமார்கள் அன்றைய சூழலில் (வங்கிகள் இல்லாத நிலையில்) பினாங்கு நகரில் பல்லின வியாபாரிகள் வியாபாரம் செய்ய பண முதலீட்டாளர்களாக செயல்பட்டிருப்பது வியப்பு. சீன வியாபாரிகள் கூட செட்டிகளிடம் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் வியாபாரத்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் இரண்டாம் உலகப்போர் இந்த நிலையை மாற்றி அமைத்தது. சுபாஸின் ஐ.என்.ஏ மலாயாவில் குடியிருந்த அனைத்து இந்தியர்களின் அரசியல் சார்பு அற்ற தன்மையையும் மாற்றி அமைத்தது. தாயக இந்தியாவின் சுதந்திரத்திற்கு இங்குள்ள இந்தியர்கள் போராட துவங்கியதே மலேசிய இந்தியர்களின் அரசியல் வாழ்கையின் முதல் படியாக அமைந்தது. செல்லையா, மாணிக்கம், பாண்டியன் போன்ற இளைய தலைமுறையினர் மூத்த தலைமுறையினரான வானாயீனா போன்றோரின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு அரசியல் மாற்றங்களில் துடிப்பாக பங்காற்றுகின்றனர். அவர்களின் நடை உடை பாவணையும் முற்றாக மாறிப்போகிறது. முழுக்கால் சிலுவார், சட்டை, தொப்பி, விரலில் புகையும் சிகரேட் என்று ‘ அச்சமூட்டும் ’ தோற்றம் கொள்கின்றனர். இளைஞர்கள் பிரிட்டீசாரை வெறுக்கின்றனர். இதன் பொருட்டே சுபாஸ்சின் இயக்கத்தில் பணியாற்றுகின்றனர்.

அதுவே வானாயீனா, சாத்தப்ப செட்டியார் போன்றவர்களின் வெறுப்புக்கும் காரணம் ஆகின்றது. அவர்களின் மறைமுக ஆதரவு என்றைக்கும் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்குத்தான். “சண்டை வந்து பயகளைக் கழுதைப் புரட்டாகிப்பிடுச்சி. ஒவ்வொண்ணும் மட்டுமரியாதை இல்லாமல் குழாயையும் தொப்பியையும் மாட்டிகிட்டு திரிஞ்ச திரிஞ்சல்….. பத்தாததுக்குப் பட்டாளம். ஊரை பிடிக்கயப் போறாங்யளாம் ஊரை…” என்பது அவர்கள் கருத்து.

செல்லதுரை-மரகதம் காதலைப் போலவே, தொடக்கத்தில் துடிப்புடனும் துருதுருப்புடனும் தொடங்கும் ஐ. என் ஏ படையினரின் போராட்டம் ஒரு கட்டத்தில் சட்டென நிலை குழைந்து சரிவை நோக்கிச் செல்கிறது. முடிவில் செல்லதுரை-மரகதம் காதல் தோல்வியில் முடிவது போலவே ஐ. என் ஏ லட்சியமும் மாயையில் முடிகிறது.

கடலுக்கு அப்பால் நாவலில் காட்டப்படும் பினாங்கு நகர வரைபடம் வரலாற்று ஆர்வளர்களுக்கு நல்ல விருந்து. மூன்று சக்கர ரிக்‌ஷாக்கள் நிரம்பிய பினாங்கு கப்பல் துறைமுகம் மிக முக்கிய கேந்திரமாக செயல்பட்ட அந்நாளில் நாகப்பட்டிணத்தில் இருந்து மாதம் இருமுறை கப்பல் பயணம் நடைபெற்றது. தமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்தும் மலாயாவிற்கு பயணப்பட்டவர்கள் ரஜுலா, ரோணா, சிதம்பரம் போன்ற கப்பல்களில் குறைந்தது ஆறு நாட்கள் பயணப்பட்டு பினாங்கு துறைமுகம் வந்து சேர்ந்தனர். பெரிய டிரங்கு பெட்டிகளிலும் மூங்கில் கூடைகளிலும் பொருட்களை கொண்டுவருவது அப்போதைய வழக்கம். துறைமுகத்தில் இருந்து நடைபயண தூரத்தில் அமைந்திருக்கிறது செட்டித்தெரு. இன்றைய மார்க்கிட் ஸ்ட்ரீட் முதல் சூலியா ஸ்டிரீட் வரையிலான பகுதிகளே அன்று செட்டித்தெரு என்று அழைக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த மற்ற தெருக்கலான சூலியா ஸ்டிரீட் மலபார் ஸ்ட்ரீட் போன்றவை இந்திய தமிழ் முஸ்லீம்களாலும் மலையாள முஸ்லீம்களாலும் நிரம்பி இருந்தது.

செட்டித்தெருவில்  குடியிருந்த செட்டியார்கள் மிக தொலைவில் இருந்த தண்ணீர்மலை முருகன் கோயிலை தங்கள் குடும்ப கோயிலாக கொண்டாடி உள்ளனர். அதன் அடையாளமே இன்றும் பினாங்கில் தொடரும் ‘செட்டிப்பூசம்’ என்னும் தைப்பூசத்திற்கு முந்தைய நிகழ்வு. மேலும் இந்நாவலில் வரும் நான்யாங் சீன உணவகம், டத்தோ கிரமாட் சாலையில் உள்ள வனாயீனா வாடகை வீடு, காலை சந்தை போன்ற பல காட்சிகள் வாசகர்களை பழைய பினாங்கு நகருக்குள் கைபிடித்து அழைத்துச் செல்லும் படி அமைந்துள்ளது. இந்நாவலை படித்து முடித்தவுடன் நான், பினாங்கு நகருக்குள் புதிதாக பயணம் செய்வது போன்ற உணர்வுடன்  பயணம் செய்து கதை காட்டும் இடங்களை அடையாளம் காண முயன்றேன். சில இடங்களை அனுமானமாக அறிய முடிந்தாலும் பல இடங்களை அடையாளம் காண பினாங்கு நகர வரலாறு தெரிந்த நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.

இந்நாவலின் மேலும் ஒரு சிறப்பாம்சம் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் இயங்கிய ஐ.என்.எ படை குறித்த குறிப்புகள். ஜப்பானிய படையின் தோல்விக்கு பிறகு – ஐ.என்.எ வின் இறுதி காலகட்டம் – செயல்பட்ட விதமும் அதன் படை வீரர்களின் நிலையும் இந்நாவலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் 6ஆம் ஆத்தியாயம் முதல் 12-ஆம் ஆத்தியாயம் வரை விரியும் ராணுவ காட்சிகள் வேறு எந்த நாவலிலும் காணமுடியாதது. கோலாமூடா முகாமில் இருந்து கலைந்த தமிழ் வீரர்களில் ஒரு பகுதியினர் வடக்கு நோக்கி நடக்கும் காட்சிகள் அற்புத வரலாற்று திரைப்படம் போல் கண்களில் விரிகிறது.  சிம்பாங் தீகா பாலத்தில் ஜப்பானிய படைகளுடன் மோதும் காட்சியும் 12-ஆம் அத்தியாயத்தில் கம்யூனீஸ்டு வீரர்களை சந்திக்கும் காட்சியும் மிக பரபரப்பானவை. உண்மையில் இக்காட்சிகளைக் கொண்டே நல்ல வரலாற்று திரைப்படம் ஒன்றை இயக்கி விட முடியும் என்றே தோன்றுகிறது.

மாணிக்கம் என்கிற பாத்திரப்படைப்பு இக்கதையில் சற்றே சிறப்பு வாய்ந்தது. ப.சிங்காரம் தனது பண்டை இலக்கிய அறிவையும் இலக்கிய விசாரனையையும் இக்கதாபாத்திரத்தின் வழியே மிகுந்த கிண்டலுடன் வெளிப்படுத்துகிறார். இதில் மாணிக்கம் செய்யும் ‘சிலப்பதிகார குதர்க்க ஆராய்ச்சி’ மிகவும் புகழ்வாய்த பகுதி. கண்ணகி மாதவி இரு பெண்கள் மேலும் மாணிக்கம் வைக்கும் விமர்சனங்கள் மாற்றுச் சிந்தனையை வளர்ப்பவை. “ கற்பரசி! எந்தக் கழுதையும் கற்பரசியாக இருக்க முடியும். காலைக் கட்டிக்கொண்டு சும்மாயிருந்தால் போதும். தட்டுவாணியாவதற்குத்தான் கவர்ச்சியும் முயற்சியும் தேவை…” என்பது போன்ற வேறுபட்ட பார்வைகளை மாணிக்கம் தைரியமாக முன்வைக்கிறான்.

முடிவாக. ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்களுமே தமிழ் இலக்கிய வாசிப்புக்கு மிக தாமதமாக வந்ததாக சி.மோகன் குறிப்பிடுகிறார். அவர் எழுதிய காலத்தில் இந்நாவல்கள் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை என்பது மிகப்பெரிய சோகமாகும். ஆனால் அதே நாவல் அவர் எழுதுவதையே நிறுத்தி பல வருடங்கள் சென்று, தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது ஆச்சரியம். ஆனால் காலம் கடந்தாலும் ஒரு வைரத்தை தேடி கண்டுகொண்டதில் நாம் பெருமையும் மகிழ்சியும் கொள்ளலாம். வைரம் என்றும் வைரம்தான். அதன் மதிப்பு குறைவதே இல்லை.

2 comments for “ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

  1. thinakumar
    April 6, 2014 at 7:57 pm

    நண்பர் அ.பாண்டியன் இது போன்ற இலக்கியங்களை அறிமுகம் செய்வதன் வழி எங்களாலும் தேர்ந்தெடுத்து வாசிக்க முடியும். மிக்க நன்றி

  2. ஸ்ரீவிஜி
    April 9, 2014 at 3:05 pm

    கடலுக்கு அப்பால் என்கிற நாவல் புரிவதைப்போல் புயலிலே ஒரு தோணி அவ்வளவு எளிதாகப்புரிந்து விடாது. கடுமையான மொழிப் பயன்பாடு வாசகனுக்க்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சங்க இலக்கிய விஷயங்களை வேறு ஆங்காங்கே நுழைத்திருப்பார். கையில் ஏந்தி கொட்டாவி விட்டுவிட்டு, மூடிவைத்ததுதான் மிச்சம். தொடரவேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் விடாமல் துரத்துகிறது. காரணம் தமிழில் வந்த மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று
    நல்ல விமர்சனப்பார்வை. நானும் அந்தச் சிலப்பதிகார குதர்க்க ஆராய்ச்சியை ரசித்தேன். காப்பி கடையில் நண்பர்களின் அரட்டைகள் பெரும்பாலும் நல்ல நகைச்சுவைதான்..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...