“தமிழ் எழுத்தாளர் சங்கம் தக்க விழிப்புணர்வை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை”- உதயசங்கர் எஸ்பி

utaya 03உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு முதன்முதலில் இவரின் சிறுகதை DBP ஏற்பாடு செய்த ‘Minggu Penulis Remaja’ வில் இடம்பெற்றது. இந்தப் படைப்பே இவரை எழுத்தாளராக அறிமுகப்படுத்தி எழுத்துலகில் பயணப்பட வைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக மலாய் மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதி வரும் இவர் சிறுகதைள், கட்டுரைகள், பத்திகள், கவிதைகள், விமர்சனங்கள், நாவல்கள் எனப் பல துறைகளிலும் இலக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

மலேசியாவின் தேசிய கல்லூரிகளில் தேசிய மொழி விரிவுரைஞராக, தொலைக்காட்சி, வானொலி செய்தித் தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக, நாளிதழ் விமர்சகராக, அறிவிப்பாளராக, மொழி பெயர்ப்பாளராக, ஆலோசகராகப் பன்முக ஆளுமைக் கொண்டவராக உதயசங்கர் எஸ்பிதிகழ்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

கூரிய விமர்சனப் பார்வை கொண்டுள்ள இவர் சமூகப் பிரச்சினைகளையும் எழுத்தின் வழி வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுபான்மை மக்களின் இனப் பிரச்சினைகள், இண்டர்லோக் (Interlok), உரிமப் படிமம் (Royalty) போன்ற பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, அரசியல்வாதி, அரசாங்கம் எனப் பயந்து பணிந்து போகாது, உண்மைக்குப் போராடும் சமூக எழுத்தாளராக வலம் வருகிறார்.

இவர், ‘Orang Dimensi’ (1994), ‘Siru Kambam’ (1996), ‘Yang Aneh-Aneh’, (1997), ‘ Surat Dari Madras’ (1999), ‘Nayagi’ (2000), ‘Sasterawan Pulau Cinta’ (2001), ‘Rudra Avatara’ (2008), ‘Kathakali’ (2009), ‘Kisah Dari Siru Kambam’ (2013)போன்ற சிறுகதை தொகுப்புகளையும் ‘Hanuman: Potret Diri’ (1996), ‘Panchayat: Edisi Khas’ (2012), Hanuman Suara Hati (2013) முதலிய நாவல்களையும், ‘Koleksi Cerita Ikan’ (1997), ‘Cerita Rakyat Asia Co-mel’ (1997), ‘Nari-Nari’ (1995), ‘Munis Dengan Harimau’ (1996) முதலிய நாட்டுப்புறக் கதைகளையும் எழுதியுள்ளார்.

மலாய் மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் ‘Vanakkam’ சிறுகதை தொகுப்பினை வெளியிட உறுதுணையாக இருந்துள்ள இவரின் சிறுகதைகளும் நாடகங்களும் தமிழிலும் சீன மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

உதயசங்கர் எஸ்பி , ‘Maybank’ வங்கியும் டேவான் பஹாசா டான் புஸ்தாகாவும் (DBP) இணைந்து நடத்திய சிறுகதை போட்டி (1992,1993,1996), Hadiah Sastera-Utusan & Public Bank சிறுகதை போட்டி (1993), Esso-Gapena சிறுகதை போட்டி (1996), மலேசிய தேசிய இலக்கியப் பரிசு (1996/97,1998/99) மற்றும் Utusan-Exxon Mobil (2003) போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். எழுத்தில் இன ஒற்றுமையை முன்னிறுத்தியதற்காக ‘Universal Federation’ நிறுவனத்தின் ‘சமாதானத் தூதர்’ (Ambassador For Peace) எனும் விருதை ‘Universal Peace Federation’ எனும் அமைப்பால்  24 ஆகஸ்டு 2008 இல் பெற்றுள்ளார்.

மலாய் மொழியைத் தேசிய மொழியாகவே (பஹாசா மலேசியா) அடையாளப்படுத்தும் இவர் ஆகஸ்ட்டு 1999இல் காவியன் அமைப்பினைத் தொடங்கி இலக்கிய பணியைச் செவ்வனே செய்து வருவதுடன், தேசிய மொழியில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறார். அவருடனான நேர்காணல்…

உதயசங்கரின் இலக்கியமும் இலக்கிய செயற்பாடுகளும்

தேசிய மொழி இலக்கியத்தில் நீங்கள் நுழைந்த காரணம், தொடக்கத்தில் நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் பற்றி கூறுங்கள்?

உதயசங்கர் எஸ்பி: நான் தேசியப் பள்ளியில்தான் ஆரம்பக்கல்வியைத் தொடங்கினேன். அதனால் தேசிய மொழியில் அதிகம் வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தேசிய மொழியில் கதைகளைப் புனைய வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் அப்போதுதான் ஏற்பட்டது. ஆங்கில மொழியில் எழுதும் ஆற்றல் கொண்டிருந்தாலும் மூவின மக்களுக்கும் என் எழுத்துகள் போய்ச் சேர வேண்டும் எனும் நோக்கத்தில் நான் தேசிய இலக்கியத்தில் கால் பதித்தேன். தேசிய இலக்கியத் துறையில் எத்தகைய சவால்களையும் நான் எதிர்நோக்கியதில்லை என்பதே உண்மை.

நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது, நீங்கள் தேசிய மொழி இலக்கியத்தில் நுழைந்த சூழலைக் கொஞ்சம் மீட்டுணர முடியுமா?

உதயசங்கர் எஸ்பி: நான் தேசிய இலக்கியத் துறையில் நுழையும் பொழுது மிகக் குறைவான இந்திய எழுத்தாளர்களே மலாய் மொழியில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எழுத்தும் கதைக் கருவும் பெரும்பாலும் மலாய்க்காரர்களின் வாழ்க்கை முறையையே சார்ந்திருந்தது எனலாம். நான் மலாய்க்காரர்களின் வாழ்க்கைச் சூழலைப்பற்றி எழுதினாலும்கூட, இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், கலாசாரம், பண்பாடு போன்றவற்றைக் கதைகளில்  வெளிக்கொண்டு வந்தேன். இதனால் என் கதைகளுக்குத் தேசிய இலக்கிய வெளியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. எழுத்தாளர் Othman Puteh, A.Samad Said போன்ற மூத்த எழுத்தாளர்களும் பாராட்டி இம்மாதிரியான எழுத்துப் படைப்பினை வரவேற்றது தேசிய இலக்கியத் துறையில் பயணத்தைத் தொடர ஒரு காரணமாக இருந்தது எனலாம். என் படைப்புகள் எந்த ஒரு பிரச்சினையும் எதிர்ப்பும் இன்றி தேசிய நாளேடுகளிலும் வார மாத இதழ்களிலும் இணைய இதழ்களிலும் இடம்பெற்றன. என் 22 வருட இலக்கிய வாழ்க்கையில் (chitra Pauenami)‘சித்திரை பௌர்ணமி’ என்ற சிறுகதை மட்டுமே 2012 செப்டம்பர் மாதத்தில் இந்து மதம் சார்ந்து இருப்பதாகக் கூறி பிரசுரிக்கப்படவில்லை. எனினும், அக்கதை இந்து மத நம்பிக்கையாளரின் வாழ்க்கை முறையைதான் குறிக்கிறது, மதம் சார்ந்து இல்லை என்று Dewan Bahasa dan Pustaka தலைமை இயக்குநரால் உறுதிசெய்யப்பட்டு அக்கதை Dewan Sasteraஇல் வெளியிடப்பட்டது. மலாய் இலக்கியத்துறையில் நல்ல வரவேற்பையே என் எழுத்துகள் பெற்றுள்ளன என்பதற்கு இது ஒரு சான்று

எதார்த்தவியல் (Realisme), பின்நவீனத்துவம் (Post Modernisme), மீயதார்த்தவாதம் (Surrealisme) போன்ற இலக்கியக் கோட்பாடுகளில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? ஒரு நல்ல படைப்பு உருவாக இது போன்ற கோட்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா?

உதயசங்கர் எஸ்பி: அவசியம் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். என் கதைகளில் பார்த்தீர்களானால் யதார்த்தவியல்தான் அதிகளவு காணப்படும். அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் பின்னப்பட்டதாக இருக்கும். சில கதைகளில்தான் பின்நவீனத்துவம், மீயதார்த்தவாதமும் இருக்கும். தமிழ் எழுத்தாளர்களிடையே நான் காண்பது என்னவென்றால் இவ்வாறான கோட்பாடுகளைத் தனி தனியே படிக்கின்றனர். பின் அதைக் கதைகளில் கொண்டு வரவேண்டும் என்று வருத்தித் திணிக்கின்றனர்.

மலாய் மொழி இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் இம்மாதிரியான கோட்பாடுகளைப் படித்து அதனை உள்வாங்கி பிறகு இயல்பாகவே படைப்புகளில் கொண்டு வருகின்றனர். இலக்கியக் கோட்பாடுகளைச் செயற்கையாய்  திணிப்பது கூடாது. படைப்பை ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள் அல்லது விமர்சகர்கள் அது எத்தகைய கோட்பாட்டைக் கொண்டுள்ளது என்று விமர்சிப்பர். உதாரணத்திற்கு ந‘Yang Aneh Aneh’ என்ற கதையை எழுதும்போது இந்தக் கோட்பாடுதான் என்று நான் நிர்ணயித்து எழுதவில்லை. அக்கதை Hadiah Sastera Perdana விருது பெற்றபோது அக்கதையை ஆய்வு செய்து பின்நவீனத்துவம் (Post Modernisme), மீயதார்த்தவாதம் (Surrealisme) என அடையாளப்படுத்தினர்.

உங்கள் படைப்புகளில் இந்து மதம் சார்ந்த பின்புலம் அதிகம் உள்ளது. சாதிகளைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளீர்களா? அதனால் எதிர்வினைகளை எதிர்நோக்கியுள்ளீர்களா?

உதயசங்கர் எஸ்பி: 2011ஆம் ஆண்டு நான் எழுதிய ‘Nayagi’ (நாயகி)  என்ற கதை, சாதியம் சார்ந்ததாக எதிர்வினை எழுந்தது. அக்கதையில் வரும் ‘குமர குருநாதர்’ என்ற கதாபாத்திரத்தைக் ‘குமர குருநாதார்’ என்று தவறாகப் புரிந்துகொண்ட முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் நான் சாதியத்தைப் பற்றியெழுதியுள்ளதாக இண்டர்லோக் பிரச்சினை சமயத்தில் முன்வைத்தார். அது உண்மை இல்லை என்பதை நான் விளக்கப்படுத்தினேன். நான் சாதிய அடப்படையிலோ அதைச் சார்ந்தோ எழுதியதில்லை, ஏனெனில் நான் சாதிப் பார்ப்பவன் அல்லன். அது என் வாழ்க்கையில் சம்பந்தப்படாத ஒன்று. அந்த மாதிரியான பண்பாட்டில் நான் வளரவில்லை. நான் பெரும்பாலும் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை சூழல், வாழ்கைமுறை, பழக்க வழக்கங்களைச் சார்ந்து எழுதுவதால் தெலுங்கு, மலையாளம், தமிழ்  போன்ற பல பிரிவினரின் பண்பாட்டை என் எழுத்துகளில் காணலாம். இவை பிரித்துப் பார்ப்பதற்காக எழுதப்படுபவை அல்ல, மலேசியாவில் வாழும் பல பிரிவுகளைச் சேர்ந்த இந்தியர்களின் பண்பாட்டில் உள்ள சிறப்புகளையும் தனித்தன்மையையும் சிறந்த நம்பிக்கைகளையும் விளக்குவதுதான் என் நோக்கம். எடுத்துக்காட்டாக ‘Doa Tahun Baru’ என்ற கதையில் தமிழ்க் குடும்பத்தில் எவ்வாறு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என்று எழுதியிருப்பேன். அந்தக் கதையிலும் மலையாளக் கதாபாத்திரங்கள் வரும். வாழ்க்கை முறையைச் சார்ந்து கதை எழுதும்போது, கதாபாத்திரம் இந்து எனில் விரதம் எடுத்தல், கோயிலுக்குச் செல்லுதல் போன்ற அவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி எழுதுவேன்.  பொதுவாக இதனால் பிரச்சினை எழுந்ததில்லை. ஒரு சில மலாய் எழுத்தாளர்கள் மட்டுமே நான் இந்து மதத்தைப் பரப்புவதாக குற்றம் சாட்டுகின்றனர். எப்படி ஒரு மலாய்க்கார கதாபாத்திரம்  மசூதிக்குச் செல்வது இயல்பானதாக இருக்கிறதோ அவ்வாறே இந்துக் காபாத்திரம் கோயிலுக்குச் செல்லுதலும் தவறாகாது. இக்கருத்திதினைப் பல தேசியமொழி எழுத்தாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு மொழி அடையாளம், மத அடையாளம் முக்கியம் எனக் கருதுகிறீர்களா?utaya 02

உதயசங்கர் எஸ்பி: பிற இன மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே என் இலக்கிய மொழியாக மலாய் மொழியைத் தேர்ந்தெடுத்தேன். மொழி அடையாளம் முக்கியம், ஆனால் மத அடையாளம் முக்கியமல்ல. என்றாலும் சமுதாயத்தையொட்டிய கதைகளையும் மக்கள் வாழ்க்கை முறையையும் எழுதும் பொழுது அவர்களது மத நம்பிக்கைகள், வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொண்டு எழுதுதல் அவசியம். இது அறிவுசார்ந்த விசயமே தவிர, மதத்தை அடையாளப்படுத்துவதாகக் கருதுவது தவறு. சில எழுத்தாளர்களைப் பார்த்தீர்களானால் இந்திய கதாபாத்திரத்தைச் சித்திரிக்கும்போது, மலாய்க்காரர்களின் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் திணிக்க முயல்வார்கள். இது முற்றிலும் தவறு. எழுத்தாளனுக்கு மத அடையாளம் தேவையில்லை. ஆனால்  மதங்கள் குறித்த அறிதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக காவியன் ஏற்பாடு செய்யும் ‘கொன்வோய்’ (Konvoi Rumah Ibadat) எல்லா இனத்தவரும் எல்லா மதத்தினரின் வழிபாட்டுத்தளங்களையும் சென்று, கண்டு அவரவரின் மத நம்பிக்கைகளை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. மற்ற மத நம்பிக்கைகளை அறியும் ஏற்பாடாகவே இது அமைகிறது எனலாம். எடுத்துக்காட்டாக புத்த மதத்தைச் சார்ந்தவரைப்பற்றி எழுத நேரிட்டால், அவர் புத்தர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார், அங்கு ஆடு, கோழி வெட்டி சமைக்கப்பட்டது என்று எழுத முடியாது. புத்தர் கோயிலில் அசைவம் சமைக்கப்படாது. அப்படி எழுவது எழுத்தாளனின் முட்டாள்தனத்தையே குறிக்கும். அதனால் மதப் புரிதலைப் பெற்றிருப்பது அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.

காவியன் அமைப்பு முன்னின்று நடத்தும் KONVOI RUMAH IBADAT  மலாய் படைப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறதா?

உதயசங்கர் எஸ்பி: எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்ற கொள்கையைத்தான் நான்  எல்லாவற்றிலும் கடைப்பிடித்து வருகிறேன். மே 2, 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்நிகழ்வு தொடங்கப்பட்டது. பிறகு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் இரண்டாம் முறையாக நடத்தினோம். பிறகு 2011 ஆம் ஆண்டில். அண்மையில் அக்டோபர் 12 ஆம் நாள்  எல்லா இனத்தவரின் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இது உலக அரங்கில் பெரிய வரவேற்பு பெற்றது. BBC இந்தச் செய்தியை வெளியிட்டது. மலாய் எழுத்தாளர்களும் இத்திட்டத்தை பெரிதும் வரவேற்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் Georgetown-ல் நடத்த கேட்டுக் கொண்டுள்ளனர். நம் நாட்டில் மதம் சார்ந்த பிரச்சினைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தாலும்கூட இம்மாதிரியான முற்போக்குச் சிந்தனையை அவர்கள் வியந்து மகிழ்ந்து வரவேற்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். நம் நாட்டிலும் இதற்கு நல்ல வரவேற்பு என்றே சொல்ல வேண்டும். மலாய், சீனர், இந்தியர் தவிர்த்து மற்ற இனத்தவரும் இதில் பங்கு கொள்கின்றனர். பல பேர் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் மற்ற வழிபாட்டுத் தளங்களுக்குப் போகக்கூடாது என்ற தவறான கருத்து வலுத்து விட்டது என்று நினைக்கிறேன். அது முற்றிலும் தவறான கூற்று. இதற்கு எதிப்புத் தெரிவிப்பவர்கள் நேரடியாகத் தைரியமாக எதிர்ப்பதில்லை. கோழைகள் மட்டுமே முகநூலில் இஸ்லாமியர்கள் யாரும் செல்லாதீர்கள், இது இஸ்லாம் மதத்திற்குப் புறம்பான ஒன்று என்ற தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். இஸ்லாத்தின் நெறிப்படி இது தவறில்லை. நபி முகம்மட் அவர்களும் இதை வரவேற்றுள்ளார் என்று வரலாறு மெய்ப்பிக்கின்றது. எப்போதும் ‘அரைவேக்காடுகள்’தான் கோழைகளாக பின்னால் நின்று குரல் எழுப்புகின்றனர். அதை நாம் கண்டுக்கொள்ளக்கூடாது. நம் பணிகளை நாம் செவ்வனே செய்வதுதான் சிறப்பு.

 தேசிய மொழி இலக்கியம்

தேசிய மொழி இலக்கியத்தில் இஸ்லாமிய மாண்புகள் முதன்மைப்படுத்தும் எழுத்துகள் அதிகம் உள்ளன. இஸ்லாத்தின் தத்துவங்களை விவாதத்திற்கு உட்படுத்தும் எழுத்து முயற்சிகள் இடம்பெற்றுள்ளனவா?

உதயசங்கர் எஸ்பி: பெரும்பாலான இஸ்லாமியக் கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஆரம்ப நிலையில் இஸ்லாத்தைச் சரியாக பின்பற்றாதவராகக் காட்டப்பட்டுப் பின் இறுதியில் திருந்துவதாகக் காட்டப்படும் நிலைதான் அதிகம். சூதாடுபவராக, மது, மாது பழக்கமுடையவராக, தொழுகைகளைக் கடைப்பிடிக்காதவராகச் சில கதாபாத்திரங்களைச் சித்திரித்துப் பின் இஸ்லாத்தின் தத்துவங்களாலும் போதனைகளாலும் திருந்தி நல்வழியில் செல்பவராகவே பல படைப்புகள் அமைந்துள்ளன. ஆனால் இன்று சில படைப்பாளர்கள் குறிப்பாக இளைய எழுத்தாளர்கள் இஸ்லாத்தின் தத்துவங்களைக் கேள்வி எழுப்புகின்றனர்; எழுதுகின்றனர். ஆனால் அவை முதன்மை எழுத்துப் படிவங்களில் வருவதில்லை. வலைப் பூக்களில், இணைண இதழ்களில், முகநூல்களில் அதிகளவு காணமுடிகிறது. முன்பு எழுத்துப் படைப்புகளில் இஸ்லாமிய மத தத்துவங்களைக் கேள்வி எழுப்பும் சூழல் இருந்ததில்லை. மத தத்துவத்தை மீறிக் கருத்துகளும் இருந்ததில்லை. ஆனால் இன்று மாற்றத்தைக் காண முடிகிறது. உதாரணத்திற்கு ‘Allah'(அல்லா) என்ற சொல்லின் பயன்பாட்டுப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளலாம். இஸ்லாம் அல்லாதவர்கள் அந்தச் சொல்லை இறைவனைக் குறிக்க பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்பட்டாலும், இஸ்லாமியர்களே ஏன் பயன்படுத்தக்கூடாது. கடவுள் ஒன்றுதானே. அக்கடவுளைக் குறிக்க பயன்படுத்தலாம் என்ற குரல்களை எழுப்புகின்றனர். இது பெரிய மாற்றமே. வரும் காலங்களில் படைப்பிலக்கியங்களில் நிச்சயம் இஸ்லாத்தின் தத்துவங்களை விவாதத்திற்கு உட்படுத்தும் எழுத்து உருவாகும். அதன் தொடக்கமே இது.

மலாய் நவீன இலக்கியவாதிகள் உள்ளனரா? நவீன இலக்கியவாதி என்றால் மத அடையாளங்களை  விட்டு வெளியேறி எழுதுபவரைக் குறிப்பிடுகிறேன். அவ்வாறு அடையாளப்படுத்தக்கூடிய எழுத்தாளர்கள் மலாய் எழுத்தாளர்கள் அல்லது மலாயில் எழுதும் பிற இனத்தவர்கள் உள்ளனரா?

உதயசங்கர் எஸ்பி: மலாய் எழுத்தாளர்களில் 90களில் எழுதத் தொடங்கியவர்கள் குறிப்பாக இளம் எழுத்தாளர்கள், எந்த இன, மத அடையாளமும் இல்லாமல் எழுதினர். குறிப்பாக தேசிய இலக்கியவாதி அன்வார் ரிட்வான் (Anwar Ridhwan) அவர்களைச் சொல்லலாம். அவரின் சில கதைகள் மதம், இனம் தாண்டி இருப்பதைக் காணலாம். அடுத்து S.M Zakir என்பவர். இவர் உலக நாகரீகங்களின் தத்துவங்களை முன்னிறுத்தி எழுதும் திறன் படத்தவர். யுனானி, இந்திய சீன நாகரீகங்களின் தத்துவார்ந்த நிலைகளை எழுதும்போது சாதி மதம், இனம் கடந்துதான் எழுதுகிறார். ஏ.சமாட் சயீட் எழுதிய ‘Hujan Pagi’ என்ற கதையும் முக்கியமானது. அக்கதையில் மலேசிய இதழியல் சுதந்திரத்தை எவ்வாறு அரசியல் தன் வசம் வைத்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். மதம், இனம் தாண்டி உண்மைதான் இக்கதையில் நிலைநிறுத்தப்படுகிறது. தொடர்ந்து Roslan Jomel என்ற சரவாக் எழுத்தாளரும் மதம் இனம் என எந்த அடையாளமும் இல்லாத கதைகளையே படைப்பவர். கடந்த ஆண்டு DBP மூலம் ‘Namaku Epal Kuning’(2010) என்ற சிறுகதை தொகுப்பை இவர் வெளியிட்டார். தொடர்ந்து ITBM வெளியீட்டில் ‘ Selamat Datang Ke Malaywood’(2012) வெளியிட்டார். இவை அனைத்தையும் நவீன இலக்கியமாக கொள்ளலாம்.

மதத்தைத் தாண்டி யோசிப்பவர்கள் மலாய் எழுத்தாளர்களில் இல்லை எனலாம். ஏனென்றால் அவர்களின் மதம் சார்ந்த வாழ்க்கை நெறி அப்படி அமைந்துவிட்டதால் மதத்தைத் தாண்டி யோசிக்கும் நிலைக் குறைவுதான். அதனால் அவர்கள் மதத்தை விட்டு அல்லது மற்ற மதத்தை அறிந்து முழுமையாய் புரிந்துகொள்ளும் நிலையும் இல்லை என்பது ஒரு குறைதான். ஆனால் இது நமக்கு ஒருவகையில் நன்மைதான். அவர்களைப்போல் அல்லாமல் எல்லாவற்றையும் தாண்டி அறியக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். இதனை வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

என்னைப் பொருத்தவரை ஒருவன் தன் அடையாளத்தின்  தனித்தன்மையை (Jati Diri) இழந்தோ அல்லது துறந்தோ எழுத வேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்குத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்களாகவே இருக்கட்டும். நான் ஒரு மலேசிய இந்தியன். அதற்காக நான் இந்தியன் என்று தண்டோரா அடித்ததில்லை. புனைப் பெயரில் எழுதியபோது நான்  இந்தியன் என்றே பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய ‘Bitara Sita’ என்ற கதைக்கு எனக்கு 1993ல் பரிசு கிடைத்தபோது, அவ்வெழுத்து இந்தியனுடையது என்ற எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நீதிபதிக் கூறினார். கதைகளுக்கு எந்த அடையாளம் தேவையில்லை. படைப்புகளே முக்கியம் பெறுகின்றன.

தேசிய மொழி இலக்கியத்தில் நீண்ட நாள் பரிச்சயம் உள்ளவர் என்கிற முறையில் மலாய் இலக்கியத்தில் இடதுசாரி எழுத்து உள்ளதா? அரசாங்க ஆதரவு இலக்கியம் என்பதைத் தவிர்த்துத் தீவிர இலக்கியத்தை முன்னிருத்தும் அமைப்புகள் ஏதேனும் உள்ளதா?

உதயசங்கர் எஸ்பி: தேசிய மொழி  எழுத்தாளர்கள் தொடக்கத்திலிருந்தே தைரியமாக எழுதுகிறார்கள்.  கேள்விகள் எழுப்பிய வண்ணமே இருக்கின்றனர். உண்மைக்குப் புறம்பான செயல்கள் நடைபெறும் போது, எதிர்த்துக் கேள்விகளைக் கேட்க அவர்கள் தயங்கியதில்லை.

தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களின் கொடுமைகளை எதிர்த்து அக்கால எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜப்பான் ஆட்சியில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை, மலேசியா உருவாகியபோது ஆட்சியினரால், அரசாங்கத்தால் ஏற்பட்ட பாராபட்சம், தவறுகள் போன்றவைகளையும் எழுத்தாளர்கள் குரல் எழுப்பி கண்டனம் தெரிவிக்கத் தயங்கியதில்லை. இவ்வாறு மக்களின் நலனுக்காகவும் நியாயத்திற்காகவும் குரல் கொடுத்த தேசிய எழுத்தாளர்களை இடதுசாரியாகவே கருதப்பட்டனர். இதற்கு நல்ல உதாரணம் Shanon Ahmad என்ற எழுத்தாளரைச் சொல்லலாம்.

இவர் 1994ஆம் ஆண்டு ‘Piem’  என்ற சிறுகதையை எழுதினார். அது முழுக்க முழுக்க அன்றைய பிரதமரின் கதை. அவர் ஆட்சிக்காலத்தில் தோல்பாவைக் கூத்தாடியாக இருந்து மற்றவர்களை எவ்வாறு ஆட்டுவித்தார் என்பதுதான் கதை. அக்கதை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஆசிரியராக இருந்த அவர் அதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு ‘Patriarch’ என்ற நாவலை எழுதினார்.  முன்னால் பிரதமர் மகாதீர் பற்றிய கதை அது. அன்றைய காலத்தில் மாரடைப்பால் இருதய சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு நலமாகிய அவரை , இறந்து விட்டதாக அவரின் கதையில் சித்திரித்து அந்த மரணத்தை எவ்வாறு மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர் என்பதைக் காட்டினார். இக்கதை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கதையை DBP பதிப்பித்து வெளியிட்ட பிறகுதான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்கதையின் சாரம்  தெரிய வந்தது. அரசியலை எதிர்த்து எழுதிய அக்கதை இடதுசாரி எழுத்தாகவே பார்க்கப்பட்டது எனலாம்.

அடுத்து Kassim Ahmad என்பவரின் எழுத்தும் பல எதிர்ப்புகளைச் சம்பாதித்தது. சமூகப் பிரச்சினைகளை அதிகம் எழுதிய அவர் இடதுசாரி எழுத்தாளராகவே கருதப்பட்டார். மேலும் DBP அல்லது (PENA) போன்ற இயக்கங்கள் நடத்தும் கவிதை நிகழ்வுகளில் பல எழுத்தாளர்கள் ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்துப் பல கவிதைகளைப் படைத்து வருகின்றனர்.

தேசிய மொழி இலக்கிய உலகில் விமர்சனப் போக்கும் அதனால் உருவாகின்ற விவாதங்களும் எந்த அளவில் விரிவாகியுள்ளன?

உதயசங்கர் எஸ்பி: நிச்சயம் விமர்சனப் போக்குகள் உண்டு. Shanon Ahmad என்ற எழுத்தாளர் Piem (1994) என்ற சர்ச்சைக்குரிய கதையை எழுதியுள்ளார். இதனால் பல விவாதங்கள் எழுந்தன. அதுபோலவே ‘Shit’ எனும் கதையும் பல விவாதங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. எழுத்தையும் ஆயுதமாகவும் பயன்படுத்தும் நிலை உண்டு. DBP அரசாங்கக் காப்பகம்  சார்ந்து இருப்பதால் பெரும்பாலும் எந்த விவாதங்களிலும் ஈடுபடுவதில்லை.  Gapena எழுத்தாளர்களின் சங்கத்தின் வரலாற்றை நோக்கினால் 1972களில் தீவிரமான விமர்சனங்களை எழுப்பும் எழுத்தாளர்கள் இருந்தனர்.

ஆனால் தற்போது அரசாங்க ஆதரவு கிடைப்பதால் அரசாங்கத்தைச் சார்ந்தே எழுதுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் Pena என்ற இயக்கமும் ஆரம்ப நிலையில் குரல் எழுப்பினாலும் உதவி தொகை பெறுவதால் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் பல எழுத்தாளர்கள் உண்மைக்கு ஆதரவாக குரல் எழுப்பவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக Pyan Habib, A.Samad Said போன்றோர் நியாயத்தைத் தட்டிக் கேட்கின்றனர்.இது மட்டுமல்லாமல் மாநாடுகள், பட்டறைகள், புத்தக வெளியீடுகளில் சிறுகதை, கதை , கட்டுரைகளின் விமர்சங்கள் எழுத்த வண்ணமே இருக்கின்றன.

தேசிய மொழி இலக்கியங்களைத் தொடர்ந்து கவனித்து வாசிப்பவர் என்ற முறையில், மலாய்ப் படைப்பாளிகளின் எழுத்துகளில் இந்தியர்களின் பிரச்சினைகள் பிரதிபலிக்கிறதா?

உதயசங்கர் எஸ்பி: நான் முதலிலே சொன்னது போல மலாய் எழுத்தாளர்களுக்கு நம் சமுதாயம், கலாசாரம், பண்பாடு சார்ந்த அறிதல் மிகக் குறைவே எனலாம். அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவர்களில் பலருக்கு இல்லை. தெரிந்து கொள்ளும் முயற்சியும் இல்லை. இந்தியர் என்றாலே அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தோட்டப்புற வாழ்க்கை, இல்லையெனில் குண்டர் கும்பலைப் பற்றி எழுதுவர். அவர்களால் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.  பல நாவல்களின் கதைகளில் இறுதியில் இந்தியக் கதாபாத்திரங்கள் மதம் மாறி விடுவதாக அமைந்துள்ளது. ஆக தேசிய வெளியில் மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை, அவர்களின் நிலை, சிந்தனைப் போன்றவற்றைக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்திய எழுத்தாளர்களின் கைகளின்தான் உள்ளது.

அதற்குத் தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் பங்கும் தமிழ் எழுத்தாளர்களின் பங்கும் அவசியம். பல சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் இந்தியர்களின் பிரச்சினைகள், சவால்கள், தேவைகளைத் தங்கள் எழுத்தில்கொண்டு வருகின்றனர். ஆனால் இது தமிழ்ப் படிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது. இங்குதான் மொழி பெயர்ப்புப் பணி அத்தியாவசியமாகிறது. தமிழில் உள்ள சிறந்த எழுத்துகளை மொழி பெயர்ப்பதன் மூலம் தேசிய இலக்கிய வெளிக்கு நம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கொண்டு செல்ல முடியும்.

உங்கள் படைப்புகள் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலைச் சார்ந்ததாக இருப்பது தெளிவு. அவை மலேசிய இந்தியர்களின் பண்பாடுகளைப் பிற இனத்தவர் அறிந்துகொள்ளும் வகையில் பயன்மிக்கவை என்பதில் மாற்று கருத்து இல்லை.  உங்கள் படைப்புகளில் வழி மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் அரசியல் புறக்கணிப்பு, இன மத அடிப்படையிலான உதாசீனங்கள் பற்றி எழுதியிருக்கிறீர்களா?

உதயசங்கர் எஸ்பி: கதைகளில் நான் நேரடியாக எழுத மாட்டேன் ஆனால் பல கதைகளில் மறைமுகமாக மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் அரசியல் புறக்கணிப்பு, இன, மத அடிப்படையிலான உதாசீனங்கள் பற்றி எழுதியுள்ளேன். எடுத்துக்காட்டாக ‘Datuk Datang Ke Kampung Kami’, ‘ O’, ‘Cat’ போன்ற கதைகளைச் சொல்லலாம். நீங்கள் அக்கதைகளை உள்வாங்கிக் கொண்டீர்களானால் அவற்றின் சாரம் நிச்சயம் உங்களுக்குப் புரியும். ம.இ.கா, அம்னோ, பெர்கேசோ, சிறுப்பான்மையினர் போன்றவைகள் என் கதைகளில் இடம்பெற்றிருக்கும்.

பெரும்பாலும் கட்டுரைகள், பத்திகள் எழுதும்போது நேரடியாக எழுதுவேன். கவிதைகளிலும் எழுதியுள்ளேன். எடுத்துக்காட்டாக 2001ஆம் ஆண்டு எழுதிய கவிதை ‘ usah getar tinggal di pondok sendiri’ (சொந்த குடிசையில் குடியிருக்க தயங்காதே) ‘வந்தேறிகள்’ என்று சொல்லப்படும் இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டில் வாழ சம உரிமையுண்டு என்று சொல்லும் கவிதைதான் இது. Cat என்ற கதை ம.இ.கா.வில் நடக்கும் கூத்தைப் பற்றி எழுதியிருப்பதாக UKM இல் ஆய்வு செய்து வெளியிட்டனர். 2011-இல் Interlok பிரச்சினைகளைப் பற்றியும் பல கதைகளில் எழுதியுள்ளேன். என் கதைகளை பல கோணங்களில் நீங்கள் அணுகலாம். பல பரிமாணங்களைக் கொண்டுதான் பல கதைகள் அமைந்துள்ளன எனலாம்.

மலேசியாவில் எழுதப்படும் தேசிய மொழி இலக்கியங்களைவிட இந்தோனேசியாவில் எழுதப்படும் இலக்கியம் தீவிரத் தன்மை மிக்கதாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் இருப்பதற்கான காரணமென்ன?

உதயசங்கர் எஸ்பி: மலேசியாவில் கதை எழுதத் தொடங்குவதற்கு முன்பே இந்தோனேசியாவில் தொடங்கி விட்டனர். அங்கிருந்துதான் மலேசியாவிக்குப் படைப்பிலக்கிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது வரலாற்று உண்மை.  மேலும் இந்தோனேசியா, மலேசியாவைவிட மிகப் பெரிய நாடு. மக்கள் தொகையும் அதிகம். ஏராளமான பிரச்சினைகள், சவால்கள். அத்துடன் எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகம். அங்கு போட்டிப் போட்டுத் தரமான படைப்புகளைப் படைக்கும் சூழல் உள்ளது. அவர்களின் படைப்புகளை மொழி பெயர்த்து உலகத்தரத்திற்குக்கொண்டு செல்லவும் முடிகிறது. மலேசியாவை எடுத்துக்கொண்டால் மலாய் இலக்கியத் துறையில் அவ்வாறான போட்டிச் சூழல் மிகக் குறைவு. சாதாரண படைப்புகளையே படைத்து வரும் சூழலிலேயே இருப்பதால்தான் இந்தோனேசியாவைவிடப் படைப்பிலக்கியத்தில் மலேசியா பின்தங்கி உள்ளது.

தேசிய இலக்கியத்தைப் பொருத்தவரையில் உங்கள் வாசிப்பில் முக்கியமானவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?

உதயசங்கர் எஸ்பி: நிச்சயம் அனைவரும் மலாய் நவீன இலக்கிய தந்தை Munshi Abdullah அவர்களின் Hikayat Abdullah வை வாசிக்க வேண்டும். இவர் ஒரு முஸ்லிம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தில் மலாய்மொழியில் எழுதும் எ. சாமாட் சாயீட் எழுத்தை நிச்சயம் வாசிக்க வேண்டும். சமூக எழுத்தாளராக திகழும் இவர், சொந்த அனுபவத்தைக்கொண்டு  சிங்கை, மலேசியா மற்றும் பிற நாட்டு நடப்புகளைக் கருத்தில்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் எழுதி வருகிறார். அரசியலைச் சார்ந்து அவர் எழுத்து இருந்ததில்லை. நாளேடுகள் அரசியலால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை முன் வைத்தவர் அவர். மதம், இனம் அரசியல் தாண்டி உண்மையைப் பயப்படாமல் சொல்லும் திறன் படைத்தவர். பல தேசிய இலக்கியவாதிகள் சாதாரண கதை, கவிதை, கட்டுரைகள் மட்டுமே எழுதுகின்றனர். ஆனால் உண்மையைப் பகிரங்கமாகச் சொல்லும் தைரியம் மிக்கவர் எ.சாமாட் சாயிட். வருங்காலத்தில் அவர் புத்தகங்கள் கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்களிருப்பதாகத் தெரிகிறது. தற்போது பல பதிப்பாளர்கள் இவரின் புத்தகங்களை வெளியிடுவதில்லை. பல புத்தகக்கடைகளில் இவரின் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லை. சில தரப்பினரால் அவரின் புத்தகங்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைப் பிறப்பிக்கப் பட்டிருக்கும் என நான் கருதுகிறேன்.

தொடர்ந்து Lim Swee Tin மற்றும் ராஜராஜேஸ்வரி சீத்தா ராமன் அவர்களின் படைப்புகளும் முக்கியமானது. அழகான மொழி பயன்பாட்டைக் கொண்டு சிறந்த கவிதைகள் எழுதுபவர். அவரின் கவிதைகள் வாசிப்பிற்குரியவை.

Anwar Ridwan – தேசிய இலக்கியவாதியான இவர் சிறந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மஹாபாரத கதையைக்கூட எழுதியுள்ளார். இவரின் சிறப்பான நாவல் Hari-Hari Terakhir Seorang Seniman, இந்நாவல் ஆஸ்ரோவில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து DBP வெளியிடும் சிறுகதை தொகுப்புகளை வாசித்தல் அவசியம். சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய தேசிய எழுத்தாளர்களும் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளனர். எழுத்தாளர் சரோஜா தேவியின் Gemerlapan(1997), Keinginan Kecil di Celah Daun(2003) சிறுகதை தொகுப்பை வாசிக்க வேண்டும். மகேந்திரன் என்பவரும் சிறுகதைகளை எழுதியுள்ளார். தொகுப்பு வெளியிடவில்லை என்றாலும் DBP சிறுகதை தொகுப்புகளில் இவரது கதைகளைக் காணலாம்.

உங்களது கட்டுரை ஒன்றில்  மலேசிய இந்திய எழுத்தாளர்கள் குறித்த கருத்தில், போட்டி எழுத்தாளர்கள் (Penulis Sayembara) வாடகை எழுத்தாளர்கள் (Penulis Tempahan),  பிஸ்கட் எழுத்தாளர்கள் என்று பல பிரிவு எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளீர்கள். மலாய் எழுத்தாளர்களிலும் அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் உள்ளனரா?

உதயசங்கர் எஸ்பி: தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களைப் பற்றிதான் எழுதினேன். சிலர் போட்டி வந்தால்தான் எழுதுவார்கள்.  பரிசு கிடைத்த பிறகு காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் போட்டி எழுத்தாளர்கள். சில பேர் நிகழ்ச்சிகளில் கவிதைப் படித்து விட்டுப் போய்விடுவார்கள். இவர்கள் வாடகை எழுத்தாளர்கள். சிலரோ எழுதுவார்கள், ஒரு சில ஆண்டுகளுக்குக் காணாமல் போய்விடுவார்கள், திடீரென்று மீண்டும் வருவார்கள். இதேபோன்று மலாய் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மலாய் எழுத்தாளர்கள் சில பேரைப் பார்த்தீர்களானால் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள், Proton நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து கவிதை வாசிக்கச் சொல்லி எனக்கு 25 ஆயிரம் ரிங்கிட் கொடுத்தனர் என்று, இது வாடகை எழுத்தாளர். இன்னும் அவமானமான விசயம் சில எழுத்தாளர்கள் திருமணங்களுக்குச் சென்று மணமக்களைப் புகழ்ந்து கவிதை வாசிப்பது. இன்னும் சில பேர் அரசியல் நோக்கத்திற்காக UMNOவை புகழ்ந்து எழுதுவார்கள். இதைத் தமிழ் எழுத்தாளரிடமும் காணலாம். டத்தோ ச.சாமிவேலுவின் பிறந்தநாளுக்குக்  கவிதை எழுதுவது பிறகு அதை அவரிடம் காண்பித்துப் பணம் பெறுவது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறான முதுகெலும்பு இல்லாத எழுத்தாளர்கள் எல்லா இனத்திலும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தேசிய மொழி இலக்கிய வெளியில் DBP பல்வேறு நூல்களைப் பதிப்பித்து  வெளியிடுகிறது. அதேசமயம் வேறு பல அமைப்புகளும் தேசிய மொழி நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. Alaf 21, Jemari Seni போன்றவை சில உதாரணங்கள். அனால் அதில் இயங்கும் எழுத்தாளர்கள் தேசியப் படைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு அரசாங்க ஆதரவும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணம் என்ன?

உதயசங்கர் எஸ்பி: மலேசியாவில் எழுத்துக்கான அங்கீகாரம் என்றால் தேசிய இலக்கிய விருதைத்தான் சொல்ல வேண்டும். இது தனிநபருக்கான விருது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் Hadiah Sastera Perdana Malaysia. இவ்வாண்டு தொடங்கி இவ்விருதினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கவிருக்கின்றனர். DBP வெளியிடும் படைப்புகளுடன் ITBM,  நாளிதழ்களிலும் இதழ்களிலும் இடம்பெறும் கதை, கவிதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து இவ்விருதினை வழங்குகின்றனர்.

நாம் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று எது இலக்கியம் என்பதுதான். Alaf 21, Jemari Seni, Amir Muhamad அவர்களின் Fixi போன்ற நூல்களை ஏராளமானோர்  வாங்கிப் படிக்கின்றனர். Amir Muhammad அவர்களின் Fixi யை  இலக்கியம் இல்லை என்பது அவருக்கே தெரியும். அது ஒரு பொழுது போக்கு நவீனம். இலக்கியம் வேறு, வணிக நோக்கத்திற்காக எழுதப்படும் கதைகள் வேறு. அவை நொறுக்குத்தீனி போன்றவை. அதேபோல் Alaf 21 வெளியிடுபவற்றை இலக்கியமாகவோ தீவிர இலக்கியமாகவோ அடையாளப்படுத்த முடியாது. இதன் வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய தேவையும் இல்லை. அந்த எழுத்தாளர்களும் அதை எதிர்ப்பார்ப்பதில்லை. அவ்வாறு எழுதுவது தவறில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். கடந்த ஆண்டு சுயமாக புத்தகத்தை வெளியிட்டவருக்கு, சிறுவர் கதைகளுக்கு, இந்த ஆண்டு ITBM வெளியிட்ட நாவலுக்கு எனச் சிறந்த இலக்கியங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுதான் வருகிறது.

மலேசிய இலக்கியவாதிகள் இதுவரை நோபல் பரிசு அல்லது ஏனைய உலக அளவிலான இலக்கிய அங்கீகாரங்களுக்கு முன்மொழியப்படாது இருப்பதன் காரணம்?

உதயசங்கர் எஸ்பி: நோபல் பரிசுக்கு ஒரு தரம் உண்டு.  இலக்கியம் தரமாக இருந்தால்தான் அதற்குப் பரிந்துரைக்கப்படும். மலாய் எழுத்தாளர்களோ அல்லது தேசிய மொழியில் எழுதும் எழுத்தாளர்களோ இன்னும் அந்தத் தரத்தை எட்டவில்லை. அந்தத் தரத்திற்கு நெருக்கத்தில் உள்ளவர் என்றால் தேசிய இலக்கியவாதி எ.சமாட் சயீட் ஒருவர் மட்டுமே. மற்ற 12 தேசிய இலக்கியவாதிகளும் உலகத் தர அளவில் இன்னும் எழுதவில்லை என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. நம் நாட்டில் அல்லது ஆசிய நிலையில்  சிறந்த இலக்கியவாதியாக நாம் பெருமைப்படலாம். ஆனால் ஏ.சமாட் சயீட் அவர்களை நிச்சயம் அரசாங்கம் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்போவதில்லை. அரசாங்கத்தை எதிர்க்கும் ஒருவராகவே அவரைப் பார்க்கின்றனர். தேசிய எழுத்தாளர் சங்கமோ அரசாங்கத்திற்கு எதிராக அவரைப் பரிந்துரை செய்ய பயப்படுகின்றனர்.

வேறு உலக அங்கீகாரங்கள் அல்லது பரிசுகள் போன்றவை ஆங்கில எழுத்துக்குத்தான் வழங்கப்படுகிறது. காமன்வெல்த் பரிசு, Man Asia Literary Prize  மற்றும் Walter Scott Prize  விருது நாட்டின் சீன எழுத்தாளர் Tan Twan Eng-க்கு வழங்கப்பட்டுள்ளது. பினாங்கு, கேமரன்மலையைப் பின்னணியாக வைத்து அவர் எழுதிய ஆங்கில நாவல், The Garden of Morning Mists (2012)-க்குப் பரிசு கிடைத்துள்ளது. இருப்பினும் நன் நாட்டில் குறிப்பிடும்படி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. தேசிய மொழியில் எழுதியிருந்தால் மட்டுமே தேசிய இலக்கியவாதி விருது கிடைக்க வாய்ப்புள்ளது.

SEA  விருதும் வழங்கப்படுகிறது. தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ்விருது குறிப்பிட்ட மொழியில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற வரையறை இல்லாதபோதும் தேசியமொழியில் எழுதும் இலக்கியங்களை மட்டுமே DBPயும் நம் நாட்டுக் கல்வி அமைச்சும்  தேர்வுசெய்து அனுப்புகிறது. சிங்கப்பூரில்  ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் ஆகிய மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருப்பதால் இந்நான்கு மொழிப் படைப்புகளை அந்நாட்டு அரசாங்கம் பரிந்துரை செய்கின்றன.

நம் நாட்டில் மலாய் எழுத்தாளர்களைத் தவிர்த்துத் தேசிய மொழியில் எழுதும் ஒரு சீன எழுத்தாளருக்கும் (Lim Swee Tin – 2000 SEA விருது) ஒரு சரவாக் சீன எழுத்தாளருக்கும் (Jong Chian Lai- 2006 SEA விருது)விருது கிடைத்துள்ளது.

Minggu Penulis Remaja (MPR) திட்டம் குறித்துச் சில விஷயங்களைச் சொல்லுங்களேன். இத்திட்டத்தில் பங்கு கொள்வது எப்படி? யாரெல்லாம் இதில் பங்கேற்கலாம்?

உதயசங்கர் எஸ்பி: Minggu Penulis Remaja (MPR) DBP ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வாகும். அரசாங்கத்தின் நிதி உதவியோடு ஒரு வார காலம் நடைபெறும் திட்டம் இது. 1985- இல் தொடங்கப்பட்டது. பிற இன இளைஞரிடையே தேசிய மொழியில் எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் பட்டறையாக இது அமைகிறது. குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல் எழுதத் தூண்டும் களமாக இது அமைகிறது. இதில் பல இந்திய இளைஞர்கள் பங்கு கொண்டுள்ளனர். எனினும் தொடர்ந்து எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் உள்ளனர். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மூவர்தான் உள்ளனர். அதில் நான் ஒருவன், 2012ஆம் ஆண்டு பங்கு கொண்டவர்களில் இளவரசன் சுப்பையா, சனிஷா போகராஜா போன்றவர்களைச் சொல்லலாம். மற்றவர்கள் கலந்து கொண்டதோடு சரி.

முன்பு இதில் பங்குகொள்ள வேண்டும் எனில் ஏற்பாட்டாளர்களே தேர்வு செய்வர். முன்பு நான் 1991 -இல் கலந்து கொண்ட போது கூட ஏற்பாட்டாளர்களால்தான் தேர்வுசெய்யப்பட்டேன். ஆனால் இன்று அப்படியில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நாமே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு திறக்கப்படும் போது நாம் எழுதிய படைப்பை விண்ணப்பத்தோடு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு பெறுபவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்தியர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். அதிகமானோரை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். 15 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேசிய மொழியில் எழுத ஆர்வம் கொண்டிருந்தால், Minggu Penulis Remaja (MPR) திட்டத்தில் இணைய காவியன் அமைப்பைத் தொடர்புக்கொள்ளுங்கள் அதற்கான ஏற்பாட்டை நிச்சயம் நாங்கள் செய்து தருவோம்.

மலேசியத் தமிழ் இலக்கியப் போக்கு

மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய உங்களது பார்வை அல்லது புரிதலைக் கூறுங்கள்?

உதயசங்கர் எஸ்பி: நான் தேசிய மொழி எழுத்தாளராக இருந்தாலும், 1993க்குப் பிறகு தமிழ் இலக்கியத்துறைப் போக்கினை முழுமையாகத் தொடர்ந்து வருகிறேன். மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும்போது பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதோடு பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வாய்ப்பையும், தமிழில் எழுதும் எழுத்தாளர் நண்பர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். மேலும் 1999இல் ‘Seruling Di Persimpangan’ எனும் தமிழ்ச் சிறுகதைகளைத் தேசிய மொழியில் மொழி பெயர்க்கும் பணியில் நான் ஈடுபட்ட பொழுது தமிழ் இலக்கியம் குறித்தான புரிதல்கள் ஏற்பட்டன.

என் பார்வையில் மலாய் இலக்கியத்துடன் ஒப்பிட்டால், மலேசியத் தமிழ் இலக்கியம் மிகப் பின் தங்கி இருப்பதாகவே படுகிறது. இங்கு நான் மொழியைக் குறிப்பிடவில்லை, தமிழ் இலக்கியப் போக்கைத்தான் குறிப்பிடுகிறேன். 1990களில் பார்த்தீர்களானால் அரசியல்வாதிகளை எதிர்பார்த்துதான் எழுத்தாளர்கள் புத்தகங்களை வெளியிட்டு வந்தனர். அரசியல்வாதி வந்தால்தான் புத்தகம் வெளியிட முடியும் என்ற தவறான தோற்றத்தைக் கொண்டு வந்தனர். அக்காலகட்டத்தில் அளவுக்கதிகமான அரசியல்வாதிகளின் தலையீடு இருந்ததைக் காணமுடிந்தது. இலக்கியத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. உயரிய இடத்தில் வைக்கப்பட வேண்டிய இலக்கியத்தை அரசியல்வாதிகளுக்குச் சிலபடிகளுக்குக் கீழ்தான் வைத்திருந்தனர். அது இன்றுவரை தொடர்ந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் ‘வல்லினம்’ போன்ற அமைப்புகளில் எழுதி வரும் எழுத்தாளர்கள் தற்போது மாற்றத்தை கொண்டு வந்துள்ளதைக் காண முடிகிறது. எழுத்தாளர்களின் உரிமையை அறிதல், அவர்களுக்க அங்கீகாரம் வழங்குதல் போன்ற செயல்கள் மாற்றத்தைக்கொண்டு வரும் என்பது திண்ணம்.

தேசிய மொழி எழுத்துத்துறை அல்லது கலைத்துறையில் ஈடுபடுபவர்கள் பொருளியல் ரீதியில் வாழ்வை மேம்படுத்த முடிகிறது. இதை அடையாத தமிழ்ப் படைப்பாளிகளைக் குறித்து உங்கள் பார்வை என்ன? அவர்கள் நிலையை மேம்படுத்த எவ்வகையான மாற்றங்களைச் செய்யலாம்?

உதயசங்கர் எஸ்பி: தேசிய மொழி எழுத்தாளர்களிடம்  எழுத்துரிமை குறித்த விழிப்புணர்வு இருக்கின்றது. அவர்களின் எழுத்துக்குரிய தொகையோ அல்லது சன்மானமோ வழங்கப்படுகிறது.  தொகுத்து வெளியிடப்படும்போது எழுத்தாளர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறது அதற்கான உரிமப்படிமமும் கொடுக்கப்படுகிறது. ஒரு சில ஏமாற்று வேலைகள் நடந்தாலும்கூட அதைத் தட்டிக்கேட்கும் உரிமையும் இருக்கிறது.

தமிழ் எழுத்துத் துறையில் உரிமப்படிமமும் இருக்காது, நாளிதழிலோ அல்லது மற்ற இதழ்களிலோ இடம்பெறும் எழுத்தாளனின் படைப்புகளுக்குச் சன்மானமும் வழங்கப்படுவதில்லை.1930-ஆம் ஆண்டிலிருந்து இந்நிலைத் தொடர்கிறது. நாளிதழ், வார மாத இதழ் ஆசிரியர்கள், கதைகளை வெளியிடுவதற்காக எழுத்தாளர்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால், அது தவறு. ஓர் எழுத்தாளனின் படைப்பை வெளியிட்டால் அதற்குரிய தொகையையோ அல்லது சன்மானமோ வழங்கப்பட வேண்டும். எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுக்க வேண்டுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் எழுத்தாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும், அதற்கான உரிமப்படிமமும் வழங்கப்பட வேண்டும். தங்களின் உரிமையைக் கோரி எழுத்தாளர்கள் குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் மாற்றத்தைக்கொண்டு வரமுடியும்.

இப்பொழுது இந்த விழிப்புணர்வு வந்துள்ளது. அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட சிறுகதை தொகுப்பிற்கு உரிமப் படிமம் வழங்கப்பட வேண்டும் என்று, அத்தொகுப்பில் இடம்பெற்ற 19 எழுத்தாளர்களில் மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே போராடினர். அதற்கு இப்பொழுது பலன் கிடத்துள்ளது. இது தொடர்பாக செப்டம்பர் 16-லும் அக்டோபர் 7-லும் இணைய இதழ்களில் பத்திகளை எழுதியுள்ளேன்.

மேலும் ISBN எடுக்கும் பழக்கம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு  இல்லை. சில  மூத்த தமிழ் எழுத்தாளர்களிடம் இதைப்பற்றி நான் கேட்டபொழுது, ISBN மலாய், ஆங்கிலப் புத்தகங்களுக்கு மட்டுமே எனக் கூறினர். இது அவமானமான விசயம். இதற்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். 50 ஆண்டு காலமாக தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசியாவில் இருந்தும்கூட அவர்கள் தக்க விழிப்புணர்வை எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை. எழுத்தாளர்களுக்குச் சேர வேண்டியவற்றைப் போராடி பெற்றிருக்கவேண்டும். எழுத்தாளர்களின் நலன் காப்பதுதான் சங்கத்தின் கடமையாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்களின் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர் என்பதுதான் உண்மை. அரசாங்கத்திடமிருந்து மானியம் வேறு பெறுகின்றனர். ஆனால் என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறி. 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ISBN தமிழ்ப் புத்தகங்களுக்கு எடுக்கப்படுகின்றன. 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமிழ் எழுத்தாளர் சங்கம் இயங்குகிறது என்ற தோற்றத்தை இது தருகிறது.

எழுத்தாளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும், படைப்புகளை அங்கீகரித்து நாளிதழ் ஆசிரியர்களோ, வார மாத இதழ் ஆசிரியர்களோ அப்படப்பிற்கான தொகை வழங்காவிடில் படைப்புகளை அவர்களுக்கு அனுப்பவேண்டாம். முதலில் சிரமமாகவும் கடினமாகவும் இருந்தாலும் போகப் போகப் பெரிய மாற்றத்தைக்கொண்டு வரலாம். எழுத்தினால் வாழ்வை மேம்படுத்த முடியும். மேலும் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்ப் படைப்புகளை மட்டுமே படிக்காமல் பிற மொழி படைப்புகளையும் படிப்பது அவசியம்.

இந்திய கலை, இலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள அரசியல் சூழலையும் அதன் ஆதிக்கத்தையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உதயசங்கர் எஸ்பி: இப்பொழுது எழுத்துத் துறையைப் பார்த்தீர்களானால், 99 விழுக்காடு ம.இ.கா வையும் அரசியல்வாதிகளைச் சார்ந்தும்தான் இருக்கிறது. இதில் 1 விழுக்காடு மட்டுமே வல்லினம், தனிமனிதன் போன்றவர்கள் இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை நான் இந்தியனாக இருந்தாலும் அவர்களுக்குப் பணிந்து பயந்து எழுதும் நிலை எனக்கு இல்லை. ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் மட்டுமல்ல சாதாரண மக்கள் கூட அரசியல்வாதிகளுக்குக் குனிந்து குனிந்தே பழகிவிட்டார்கள். மக்களின் பலத்தை முதலில் அவர்கள் அறிய வேண்டும். அரசியல்வாதிகளுக்குச் சம்பளம் போடுவதே மக்கள்தான் என்ற விழிப்புநிலை நம் சமுதாயத்திற்கு ஏற்பட வேண்டும். மக்களுக்குச் சேவையாற்றுபவர்கள்தான் அரசியல்வாதிகள் என்ற உண்மையை நம் மக்கள் உணர்ந்தார்களானால் எந்த அரசியல்வாதியும் தலையில் ஏறி மிளகாய் அரைக்க மாட்டார்கள்.

நீங்கள் சொல்வது உண்மைதான். அரசியல்வாதிகளின் தயவில் நடக்கும் மரபான புத்தக வெளியீடுகளை நீங்கள் விமர்சித்ததுண்டா? அதன் சடங்குகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உதயசங்கர் எஸ்பி: முன்பே சொன்னதுபோல எனக்கு அதில் உடன்பாடில்லை. அரசியல்வாதிகளை நம்பித்தான் எழுத்தாளர்கள் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘Datuk Datang Ke Kampung’ என்ற கதையை எழுதுவதற்காக 3 ஆண்டு காலம், ஓர் அரசியல்வாதிக் கலந்துகொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளையும் சென்று கண்காணித்து எழுதினேன். அரசியலும் இலக்கியமும் எப்படி இணைகிறது என்பதை உணர்த்தும் கதை இது. அரசியல்வாதி இல்லையேல் எழுத்துத்துறையும் எழுத்தாளர்களும் வளரமாட்டார்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு இருப்பதை இல்லாமல் செய்ய வேண்டும். என் அனுபவத்தில் சில பேர் மாற்றம் வேண்டும் என்று வாய்வழியாகச் சொன்னாலும் இறுதியில் அரசியல்வாதிகளையே நாடுவது வருத்தத்தைத் தருகிறது.

நாம் தவிர்க்க வேண்டிய மற்றொன்று வெளிநாட்டிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது. இது வருத்தத்தை அளிக்கிறது. நல்ல புத்தகங்கள் எங்கிருந்து வந்தாலும் படிக்கலாம் தப்பில்லை. ஆனால் அந்த எழுத்தாளர்களை வரவழைத்துப் பெரிய அளவில் விளம்பரம் செய்து புத்தகத்தை வெளியிட்டுப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் உதவுகிறோம். இங்குள்ள எழுத்தாளர்கள் எப்படி சம்பாதிப்பார்கள் என்ற கவலை நமக்கு இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் நம்நாட்டின் சிறந்த படைப்பாளர்களுக்கு உரிய நிலை வழங்கப்பட வேண்டும்.

DBP உலக இலக்கியங்களை மொழி ஆக்கம் செய்து வருகிறது. அவ்வகையில் மலேசிய  தமிழ் இலக்கியங்களை தேசிய மொழிக்கு மொழி பெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா?

உதயசங்கர் எஸ்பி: இதைப்பற்றி அண்மையில் Free Malaysia Today The Malay Mail Online, Malaysian Insider, Projek Dialog போன்ற இணைய இதழ்களில் எழுதியுள்ளேன். இந்தியாவில் உள்ள நாவல்களைக் கதைகளை DBP மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். ஆனால் நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்பை மொழிபெயர்த்துப் போடுவது மிக குறைவு. புத்தக வடிவில் முதன் முதலில் வெளிவந்த மொழிபெயர்ப்புத்தொகுப்பு ‘Seruling Di Persimpangan’ என்பதாகும். இந்நூல்  1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படி மொழிப்பெயர்க்கும் பணியை முன்னெடுத்து நடத்த தவறியது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்தான். என்று உறுதியாக கூறமுடியும். இப்படிபட்ட பணியை செய்ய வேண்டிய கடமை இருந்தும் அதை அவர்கள் செய்யவில்லை மாறாகத் தடையாக இருந்தார்கள் என்றே கூறலாம். இப்பொழுது இப்பணியைக் ‘காவியன்’ அமைப்பே செய்ய முன்வந்துள்ளது. மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கி விட்டோம். 10 தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு DBP உதவியோடு அல்லது காவியனே அதனை வெளியிடும் சாத்தியங்கள் உண்டு. முன்பு பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மட்டும்தான் தெரிந்திருந்தனர். இன்று அப்படியில்லை. ஆங்கிலம், தேசிய மொழி புலமை உள்ளவர்களாக இருக்கின்றனைர். அதனால் அவர்களே அவர்களின் படைப்பை தேசிய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழிபெயர்த்து வெளியிடுவது சிறப்பாக அமையும் என்பது என் கருத்து.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...