கருவில் வளரும் அணு ஆயுதம்

200px-Anwar_Ridhwanமலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி முக்கியமானதாக கருதப்படுகிறது. பல ஆண்டுகள் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவில்(DBP) பல்வேறு பொறுப்புகள் வகித்த இவர் அவ்வமைப்பின் முக்கிய இலக்கிய இதழ்களான டேவான் சஸ்தெரா (Dewan Sastera) மற்றும் டேவான் புடாயா (Dewan Budaya) ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஒரு பேராசிரியராக உயர்ந்த இவர் 2009-ஆம் ஆண்டில் தேசிய இலக்கியவாதி என்னும் சிறப்பை அரசிடம் இருந்து பெற்றார். DBP-யில் நீண்ட காலம் பணிபுரிந்த அனுபவமும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு இலக்கிய பயிற்சிகளுக்காகவும் ஆய்வுகளுக்காகவும் இவர் மேற்கொண்ட பயணங்களின் தாக்கமும் இவரது கதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன.

இவரது எழுத்துக்கள் மற்றைய மலாய் எழுத்தாளர்களினின்று சற்றே வேறுபட்டவை. காரணம் மலாய் சிறுகதைகள் பெரும்பாலும் எதார்த்தவியல் சிறுகதைகளாகவும் மண்சார்ந்த கதைகளாகவும் இருப்பவை. அவை மலாய் மக்களின் வாழ்வையும் அதன் மாற்று சக்திகளையும் மலாய் கண்ணோட்டத்திலேயே பேசுபவை. அரசியல் அடிப்படையில் அவற்றை தேசியவாத இலக்கியம் (Nationalisme) என்று கூறலாம். ஆனால், அனுவார் ரிட்வானின் எழுத்துக்கள் காலனித்துவ (Colenial) இலக்கியவகையை சார்ந்ததாகும். காலனித்துவ இலக்கியத்தின் உட்பிரிவுகளாக இருப்பவை கீழ்திசை (orentalisme) நாட்டு இலக்கியம் மற்றும் மேற்கத்திய நோக்கு இலக்கியம் (Occidentalisme) போன்றவையாகும். அனுவார் ரிட்வான் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இலக்கிய உலகுக்குள் வந்தவராவார். ஆகவே அவரது இலக்கிய களம் முற்றிலும் மலாய் சமூகத்தையோ மலேசிய சூழலையோ சார்ந்திராமல் மேற்கத்திய உலகை மலாய் எழுத்தில் கொண்டுவந்தவையாக இருக்கின்றன. இவரது எழுத்தை அரசியல் ரீதியாக occidentalisme வகையானது என்று குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இவ்வகை எழுத்துக்கு அரேனாவாத்தி (Arenawati) முன்னோடியாவார். Occidentalisme என்பது கீழ்திசை நாட்டிலக்கியம் (orentalisme) என்பதன் இன்னொரு முனையாகும். Orentalisme இலக்கியம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டி எழுப்பப்பட்ட அறிவு பணியாகும். இவை காலனித்துவ மக்களை ஆங்கிலேய கண்ணோட்டத்தில் விமர்சிக்கக் கூடியவையாக இருந்தன என்று சுறுங்கக் கூறலாம். தங்கள் காலனித்துவத்துக்குள் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் எளிதில் புரிந்து கொள்ளவும் அதன் வழி அவர்களை நிர்வகிக்கவும் orentalisme இலக்கியங்கள் அவர்களுக்கு உதவின. ஆனால் காலனித்துவ ஆட்சிகள் முடிவுற்றவுடன் மக்கள் மேற்கத்திய உலகை தங்கள் பார்வையில் எழுதும் போக்கு உருவெடுத்தது. இது ஆங்கில கல்வி கற்ற (ஆங்கில இலக்கியம் அறிந்த) உள்நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும். இதையே Occidentalisme என்று கூறுகிறோம். தமிழ் இலக்கியத்திலும் பல கீழ்திசை இலக்கியங்களும் Occidentalisme படைப்புகளும் உள்ளன. இவை பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று அறிய முடியவில்லை. தமிழில் ஜெயகாந்தனின் ‘பாரிசுக்கு போ’ நாவலும் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலையும் Occidentalisme வகை எழுத்துக்கள் என்று கூறலாம்.

இதன் அடிப்படியிலேயே அனுவார் ரிட்வானின் எழுத்துகளின் களம் மேற்கத்திய உலகை சார்ந்ததாக உள்ளன. சஹாபாட் (sahabat), டுனியா செபுவா அப்பார்ட்மென்(Dunia Sebuah Apartmen), மைனரீட்டி(minority) போன்ற சிறுகதைகள் ஐரோப்பிய நகர்வாழ்கையை மையப்படுத்துகின்றன. ஒரு காலனித்துவ நாடான மலேசியாவின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதன் மேற்கு உலகின் இன்னொரு வகை வாழ்வை நெருங்கி காணும் அனுபவமாக இக்கதைகள் அமைந்துள்ளன.

இவரின் கதைக் களன்களில் மாற்றம் தெரிவது போன்றே இவரது கதைமாந்தர்களின் தன்மையும் விசித்திரமானவையாகவே உள்ளன. உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் காணப்படும் கதை மாந்தர்கள் ரத்தமும் சதையுமாக உலாவரும் யதார்த்த கதைமாந்தர்களுக்கு நேர் எதிராக நிற்க்கின்றனர். ஆனால் இவ்வகை கதை மாந்தர்கள் நடைமுறை வாழ்வில் நாம் காணும் மனிதர்களை விட அதிகம் தாக்கங்களை விட்டுச் செல்கின்றனர். அனுவார் ரிட்வானின் கதை மாந்தர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சாராமல் உலகின் பொதுத் தன்மை வாய்ந்தவர்களாகவும் ஒரு பிரமாண்ட நிகழ்வின் குறியீடுகளாகவும் அமைந்திருக்கின்றனர். அவ்வகை கதை மாந்தர்களைக் கொண்டு அனுவார் ரிட்வான் படைத்திருப்பதுதான் ‘டிக் டிக் டிக் ’ எனும் சிறுகதை.

உலக வரலாற்றின் பக்கங்களை தன் அழியா மையில் எழுதிச் சென்று விட்டிருக்கும் பல சம்பவங்களில் போர்க்கால வரலாறுகள் முதன்மையானவை. முதலாம் இரண்டாம் போர்கள் விட்டுச் சென்றிருக்கும் தழும்புகள் மாறாதவை. இரண்டாம் உலகப் போர் உலக நாடுகள் எல்லாவற்றிலும் பாதிப்புகளையும் அழிவுகளையும் உண்டாக்கி இருப்பது உண்மையானாலும் அதன் மொத்த கணமும் இறங்கியது ஜப்பானின் தலையில்தான். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் உலக அரசியிலை தன் உள்ளங்கையில் அடக்க ஜப்பான் எடுத்த முயற்சிகள் அசுரத்தனமானவை. சில அரக்கத்தனமானவை. அதன் விளைவு அது இரண்டு அணுகுண்டுகளை சுமக்க வேண்டியதானது. ஹிரோஷிமா, நாகாசாக்கி ஆகிய இரு பெரும் நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுகள் கோரத்தாண்டவம் ஆடி பல லச்சம் உயிர்களை உண்டு களித்தன. பல லச்சம் பேர் நோயினாலும் உடல் குறையினாலும் மாண்டு போயினர். கதிர்வீச்சு தாக்குதலுக்கு கருவில் வளர்ந்த குழந்தைகளும் பலியாகின. பிறவி ஊனங்களோடு பல நூறு குழந்தைகள் போருக்கு பின் பிறந்தன. ஹிரோஷிமா நாகாசாக்கி நகரங்கள் புல் பூண்டு விளையா சுடுகாடாயின. இந்த வரலாற்று பெருந்துயரை ஜப்பானிய இலக்கியவாதிகள் மட்டும் இன்றி உலக எழுத்தாளர்கள் பலரும் தங்கள் படைப்பில் பதிவு செய்துள்ளனர். இன்றும் முடிவில்லாமல் எழுதிக் கொண்டே இருக்கின்றனர்.

ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் பாதிப்பை அனுவார் ரிட்வானின் ‘டிக் டிக் டிக்’ சிறுகதை ஒரு புனைவுக்குள் கொண்டுவருகிறது.

அவள் சில நூறு பேர்களுடன் ஒரு பொது இடத்தில் கூடி நிற்கிறாள். அங்கு ஒரு மேடை உள்ளது. அந்த மேடையில் யார் வேண்டுமாயினும் எந்த முன்னேற்பாடும் இன்றி நடிக்கலாம், பேசலாம், உரை நிகழ்த்தலாம். அது மனிதர்கள் தங்கள் மன வேகத்தை வெளிப்படுத்திக் காட்டும் தளம்.

அவளுக்கு அந்த மேடையில் ஏறி சில நிமிடங்களாவது இயங்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. ஒரு வாக்கியமோ, ஒரு சொல்லோ சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கி நேராக வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். மேடை ஏறுகிறாள். மேடையில் அவள் ‘நான் ஹிரோஷிமா நகரத்துப் பெண்’ என்று உரக்க கத்துகிறாள். மக்களின் கண்கள் அவள் மேல் பதிகின்றன. அவளுக்கு அதில் அளவில்லா மகிழ்ச்சி பொங்குகிறது. மேடையை விட்டு கீழிறங்கும் போது சட்டென ஒரு ஆண் மகன் முன் தோன்றி ‘ நான் நெவாடா மண்ணின் மைந்தன்’ என்று உரக்க கத்துகிறான்.

அதன் பின் அவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்ப்பட்டு அன்று இரவு ஒன்றாக கழிக்கின்றனர். மறுநாள் காலை நெவாடாக்காரன் காணமல் போய்விட்டிருக்கிறான். அவள் உட்புர கிராமத்தில் இருக்கும் தன் வீடு திரும்பி வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றாள். வீட்டையும் வயல் வெளியையும் கவனித்துக் கொள்கிறாள். அவளது மண் அவளுக்கு செல்வத்தை குறைவின்றி கொடுக்கிறது. அவள் சிந்தனை காணமல் போய்விட்ட நெவாடாக்காரனின் ஞாபகங்களால் அலைகழிகிறது. காலம் நகருகிறது.

திடீரென்று அவளது அடிவயிற்றில் டிக் டிக் டிக் என்ற ஒலி தொடர்ந்து கேட்பதை அவள் உணருகிறாள். நாளுக்கு நாள் அந்த ஓசை பெருகிக் கொண்டே போகிறது.

ஒரு நாள் அவள் தன் கிராமத்தில் இருந்து புறப்பட்டு பல வாகனங்கள் ஏறி பல மணி நேரம் பயணம் செய்து நகரை அடைகிறாள். அங்கு ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவரை சந்திக்கிறாள். அவளை பரிசோதித்த மருத்துவர் பேரதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

“பெண்ணே உன் வயிற்றில் ஒரு அணுகுண்டு வளர்ந்து வருகிறது. நீ அணுகுண்டை சுமக்கும் தாயாகிறாய் ” என்று உண்மையைக் கூறுகிறார். அந்த அணுகுண்டு இனி எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் இருக்கிறது. அது வெடித்தால் 200 கிமீ விட்ட சுற்றுக்கு அழிவை கொண்டு வரும். ஆகவே நீ இனி உன் வீடு திரும்ப முடியாது இங்குள்ள காப்பகத்தில் தங்கிவிடுவதே சிறந்த வழி என்று கூறி துரிதமாக செயல்படுகிறார். பிரதமருக்கு உடனடியாக தகவல் போகிறது. அதிகாரவட்டம் பரபரப்படைகிறது.

ராணுவம், மருத்துவ வல்லுனர்கள், மதத்தலைவர்கள், இலக்கியவாதிகள், பண்பாட்டு அதிகாரங்கள், பொருளாதார மேதைகள் என்று பலரும் கூடி கலந்தாலோசனை நடத்துகின்றனர்.

அந்த அணுகுண்டு வெளியே எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். ஆயினும் அந்த அணுகுண்டு ஒன்பது மாதங்களிலோ, ஒன்பது ஆண்டுகளிளோ அல்லது 90 ஆண்டுகளிலோ பிரசவிக்கப்படலாம் என்று கண்டறிகின்றனர். ஆகவே அந்த பெண்ணை உடனடியாக கொன்றுவிட சிலர் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் அது ஒரு கொலை என்பதால் அக்கருத்து ஒதுக்கப்படுகிறது.

அப்பெண் பலவாறு பரிசோதிக்கப்படும் அதே வேளை அந்த மருத்துவமனை சுற்று வட்டாரம் முழுவதும் மறு குடியேற்றம் செய்யப்படுகிறது. மக்கள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றனர். வாகன நெரிசலும் மக்கள் நெரிசலும் தொற்று நோய்களும் பலநூறு மரணங்களை கொண்டுவருகின்றன.

சிறிது காலத்தில் அந்த மருத்துவமனை சுற்றுவட்டாரம் முழுவதும் காலியாகி 200 கிலோ மீட்டர் சுற்றுபுறத்தில் சூனியம் அண்டுகிறது. அந்த மருத்துவமனையை சுற்றி உயிரை துச்சமென நினைத்த சில ராணுவ அதிகாரிகளும் அப்பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஆய்வுக்குழுவும் மட்டுமே இருக்கின்றது. சூனியமும் அமைதியும் நிறைந்த நல்லிரவில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து தொடர்ந்து டிக் டிக் டிக் ஓசை கேட்டுக் கொண்டிருக்க அந்த குழு தன் பணியில் முழு கவனத்தோடு ஈடுபட்டிருக்கிறது. ‘பிரசவம்’ எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று கதை முடிகிறது.

இக்கதையில் வரும் ஹிரோஷீமா பெண்ணும், நெவாடா ஆணும் இரு வேறு முரணான குறியீடுகளாக அமைந்திருக்கின்றனர். நெவாடா என்பது அமெரிக்காவின் ஒரு நிலப்பகுதியாகும். இப்பகுதி வட அமெரிக்காவின் தென் மேற்கில் அமைந்துள்ள பாலைவன பூமியாகும். இப்பகுதி இரண்டாம் உலகப்போரின் போது விமானப் படை தளத்தை கொண்டிருந்தது. பல நூறு பயிற்சி விமானிகள் இங்கு பயிற்சி பெற்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்தப் பகுதி அணு ஆயுத ஆய்வு மற்றும் பரிசோதனை தளங்களைக் கொண்டுள்ளது. இங்கு 1951-ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத பரிசோதனைகள் நடைபெருகின்றன. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு பல நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு நெவெடா தன் அணுசோதனைகளை நிறுத்திக் கொண்டுள்ளது 1990-க்கு பிறகு அவ்விடம் சுற்றுபயணிகளுக்கு (சில கட்டுப்பாடுகளுடன்) திறந்து விடப்படுகிறது.

ஜப்பானின் ஹிரோஷீமா என்னும் நகரம் உலகில் முதன் முறையாக அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளான நகரம். அமெரிக்க அணுகுண்டு துளைத்த பூமி அது. அதன் கதிரியக்க வீச்சு இன்னும் அங்கே காற்றிலும் மண்ணிலும் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆக உலகின் மிக கோரமான போர் விளைவு ஒன்றை ஆண் பெண் குறீடுகள் வழி அனுவார் ரிட்வான் புனைவாக்கி இருப்பது காலத்தை வென்று நிற்கும் இலக்கிய படைப்பாகும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...