படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ

james_lee_02சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது தரப்பில் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்றுவரையிலும் எந்த அதிகாரத்திடமும் சமரசம் செய்துகொள்ளாமல் தங்களின் கருத்துகளை உறுதியான, நேர்த்தியான படைப்பின் வாயிலாக வெளிக்கொண்டு வரும் கலைஞர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அப்படிப்பட்ட கலைஞர் திரைத்துறையிலும் இருப்பது ஆச்சரியம். அரசு அதிகார அடக்குமுறை ஒரு பக்கமும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாகக் கொண்ட தியேட்டர் முதலாளிகளின் மலினத்தேவைகள் மறுபக்கமும் என சவால்மிக்கத்துறையில் எதற்கும் கட்டுப்படாமல் இயங்கும் சிலர் “Independent Film Makers” என அடையாளப் படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் இம்மாத பறை இதழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கலைஞரானவர் திரு. ஜேம்ஸ் லீ. இவர் மலேசிய திரைத்துறையில் முக்கியமான இயக்குனராவார். அதோடு ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என் பன்முகங்களைக் கொண்ட கலைஞர் திரு.ஜேம்ஸ் லீ .

தொடக்கமாக உங்களைப் பற்றியும், திரைப்படத்துறைக்கு நீங்கள் வந்த பின்னனி பற்றியும் கூற முடியுமா?

ஜேம்ஸ் லீ: என் பெயர் ஜேம்ஸ் லீ. நான் பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரைச் சார்ந்தவன். பி.ஜே-வில் உள்ள வரைக்கலை நிபுணத்துவக் கல்லூரியில் வரைக்கலை (graphic) பயின்றேன். நான் நாடகத்துறைக்கு வருவதற்கு முன் கிராஃபிக் வடிவமைப்பாளராக இருந்தேன். பிறகு தொலைக்காட்சிக்கும் திரைப்படத்துறைக்கும் வந்தேன். பதினாறு ஆண்டுகளாக இத்துறையில் இருக்கிறேன். திரைப்படக் குழு உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் இருந்த பிறகு மே 2000-தில் இயக்குனராக அறிமுகமானேன். நான் திரைப்படத்துறை குறித்து கல்லூரிகளிளோ பல்கலைக்கழகத்திலோ படிக்கவில்லை. எல்லாம் அனுபவப் பாடம்தான்.

முதலாவதாக ஒரு திரைப்படப் படைப்பாளராக, கதையாடல் அல்லது கதை சொல்லல் என்பது சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானது?

ஜேம்ஸ் லீ: கதை சொல்லுதல் என்பது இன்று சிறுகதை, நாடகம் என்பனவற்றை நினைவுப்படுத்தினாலும் உண்மையில் கதைசொல்லல் சமூகத்தோடு மரபாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முன்பு மின் சாதனங்கள் இல்லாத போது சீனக் கூத்துகள் வழி மக்களுக்குக் கதைகள் சொல்லப்பட்டன. கதைகூறல் நல்ல பொழுது போக்காகவும் நல்ல கருத்துகளை மக்களிடம் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் கதைசொல்லல் மிகவும் சாதாரணமான ஒன்றாக தவறாகக் கருதப்படுகிறது. கதை சொல்லல் ஒரு கலையாக மதிக்கப்படுவது இல்லை. திரைப்படங்களில்கூட காட்சி அமைப்பு கிராஃபிக் போன்ற அம்சங்களை நம்பி படம் எடுக்கப்படுவது அதிகரிக்கிறது. ஆனால் ஒரு தேர்ந்த கலைஞன் கதை சொல்லலுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பான். கதை சொல்லுதல் என்பது உண்மையில் மக்களைக் கவரும் எளிய வழியாகும். கதைகூறல் வழி சமூகத்திற்கு நன்னெறிக் கூறுகளையும் நல்ல கருத்துகளையும் மிக சுலபமாகக் கொண்டு சேர்த்துவிட முடியும். மனமகிழ் துறைகளைத் தவிர்த்து கல்வியில் கூட கதை கூறுதல் நல்ல பயனைக் கொடுக்கக் கூடியதாகும். பொதுவாக ஒரு தகவலை நான் உங்களிடம் கூறினால் அதைக் கொஞ்சநேரத்தில் நீங்கள் மறந்துவிடக் கூடும். ஆனால் ஒரு கதைக்குள் அந்தத் தகவலை வைத்துக் கூறும் போது அது அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது. மாணவர்களிடம் 200 கூட்டல் 200 என்பதை எண்களின் வழி விளக்குவதை விட ஒரு சுவையான கதையின் வழி விளக்கினால் அவர்களைச் சுலபமாக ஈர்த்துவிட முடியும்.

ஒரு நல்ல கதைசொல்லியால் சொல்லப்படும் கதை நம்மை சட்டெனDSC_1140 நிறுத்திவிடக்கூடியது. உதாரணமாக, ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும் போதோ, ஒரு நூலை வாசிக்கும் போதோ அதன் கதையில் ஆழ்ந்து போகும் போதும் அக்கதை நம் சிந்தனை ஓட்டத்தைச் சட்டென நிறுத்தி நம்மிடமே பல கேள்விகளைக் கேட்கக் கூடியதாக இருக்கும். நம்மை நாமே மீள்பார்வை செய்யக் கூடியதாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து பார்க்க பழக்கப்படுத்தும். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். கல்வியில் நல்ல தேர்ச்சி, நல்ல வேலை, வாழ்க்கை வசதிகள் போன்றவை நோக்கி நாம் ஓடும் வேகத்தில் நாம் பல நூறு அற்புதக் கணங்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகிறோம். நல்ல கதைகள் சட்டென நம்மை நிறுத்தி வாழ்க்கையை அணுகிப் பார்க்க வைக்கின்றன. நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நோக்க வைக்கின்றன. ஆகவே இந்தப் பரபரப்பு வாழ்க்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொள்ளவும் சற்று நேரமாவது அதில் திழைத்திருக்கவும் நல்ல கதைகள் நமக்கு உதவக் கூடும்.

உட்புறக் கிராமங்களில் வளர்ந்த ஒருவனால் தயாரிக்கப்படும் சினிமாவில் அதன் தாக்கம் காணப்படுமா?

ஜேம்ஸ் லீ: நிச்சயமாக… திரைப்படம் என்றில்லாமல், எல்லா படைப்பாளிகளுக்குமே நிலைமை இதுதான். கிராமப்புறம் என்றில்லாமல் அவன் பிறந்து வளர்ந்த இடத்தின் தாக்கம் மிக முக்கியமானது. அதன் சாரல் அவனது படைப்புகளில் வெளிப்பட்டே தீரும். நாம் நமது உள்ளத்து நினைவுகளில் இருந்து நம்மை முழுதும் துண்டித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் படைப்பாளியின் வளர்ப்பிடம் முக்கியமானதுதான்.

நீங்கள் உங்களை ஒரு சிறந்த கதை சொல்லியாக உணர்ந்த தருணம் எது? நீங்கள் உங்கள் கேமராவை நீங்களே எதிர்ப்பார்க்கா வண்ணம் சிறப்பாக இயக்கிய தருணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

ஜேம்ஸ் லீ: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் எனக்குள் இருக்கும் கதை சொல்லியை உணர்ந்து கொண்டேன். அப்போது நிறைய படங்கள் பார்ப்பேன். இன்றைக்கு போல் இல்லாமல் 90-களில் திரைப்படங்கள் வேறுபட்டவையாக இருக்கும். நல்ல கதை, நடிப்பு ஆகியவற்றை அவற்றில் காணலாம். ஆனால் திரைப்படம் மிகச்சக்திவாய்ந்த ஊடகம் என்பதை அப்போது நான் அறிந்து கொள்ளவில்லை. கேலிச்சித்திரம், இசை போன்றவை என்னை அதிகம் ஈர்க்கக்கூடியவை என்று கருதினேன். இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. இப்போது, கணினி விளையாட்டுகள் என்னை அதிகம் கவர்கிறது.

James Lee_Suntii_2012அடிப்படையில் நான் கேலிச்சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு கர்ட்டூனீஸ் ஆவதே எனது லட்சியமாக இருந்தது. கேலிச்சித்திரங்களின் வழி மக்களுக்கு சிறப்பான கதைகள் சொல்ல முடியும் என்று நினைத்தேன். பிறகுதான் சினிமா நமது சிந்தனையை எளிதில் பிரதிபலிக்கக்கூடியது என்பதை அறிந்து கொண்டேன். அன்றைய நிலையில் நானும் திரைப்படங்களை உருவாக்கி நல்ல கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பினேன். கேலிச்சித்திர கலையில் இருந்து திரைப்படக்கலைக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.

தங்கள் அனுபவத்தில் திரைக்கதையைக் காட்சிப்படுத்துதலில் உள்ள சிறப்பான நுணுக்கங்களைச் சொல்ல முடியுமா?

ஜேம்ஸ் லீ: தற்போது ‘பியூட்டிஃபுல் வாஷிங் மெசின் இன் தெ டெம்பல்’ என்கிற ஒரு படப்பணிகள் பற்றி சொல்லலாம். மேடை நாடக மொழியைத் திரைப்படத்துக்குள் கொண்டுவரும் மிக முக்கியமான பரிசோதனை முயற்சியாக இதில் ஈடுபட்டுள்ளேன். நான் மேடை நாடக அனுபவம் உள்ளவன் என்பதால் நான் மேடை நாடகத் தனி பாணிகளை நன்கு அறிந்துள்ளேன். நடனம், நடிப்பு போன்ற பல அம்சங்கள் மேடை நாடகத்தில் தனித்துத் தெரிபவை. நான் அக்கூறுகளைத் திரைப்பட மொழியில் கலந்து கொடுத்துள்ளேன். பார்வையாளர்கள் அந்தப் படத்தைப் பார்த்தால் அது மிகவும் வேறுபட்ட திரைப்படமாக இருப்பதை அறிவார்கள். மேடை நாடகம் போன்ற காட்சியமைப்பும் குறைந்த வசனங்களும் படத்தின் இயல்பை மாற்றக்கூடியவை.

சராசரி பார்வையாளர்கள் இப்படத்தை இரசிக்க முடியாமல் போகலாம். ஆனால் பரிசோதனை முயற்சி என்பதால் இதை முக்கியமானதாக கருதுகிறேன். திரைப்படம் என்றால் நாம் வழக்கமாக பார்க்கும் மசாலா படங்கள் போன்றுதான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.   படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன். புதுமை தேடல் கலைஞனுக்குள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். உலகெங்கும் உள்ள கலைஞர்கள் அவ்வப்போது பல பரிசோதனை முயற்சிகளை எடுத்தபடிதான் உள்ளனர். உண்மையில் பரிசோதனை முயற்சிகள்தான் திரைப்பட கலையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால் பழக்கப்பட்ட பாணியே தொடர்ந்து சினிமாவின் அடையாளம் ஆகிவிடும். உதாரணத்திற்கு நமது உள்ளூர் தயாரிப்புகளில் எந்த புதுமையும் இல்லாமல் இருப்பதைக் கூறலாம். இங்கு புதிய தேடல்கள் குறைவாக இருக்கின்றன.

நீங்கள் திரைக்கதை குறித்து குறிப்பிட்ட குழுவுடன் கலந்துரையாடுவது உண்டா?

ஜேம்ஸ் லீ: ஆம். சில நேரங்களில் வேலையைத் தொடங்கிவிட்டு கலந்துரையாடும் குழுவை அமைப்பேன். சில நேரங்களில் ஒரு குழுவை அமைத்து முழுமையாகக் கலந்துரையாடி முடிவான பிறகே படப்பிடிப்பை ஆரம்பிப்பேன். இப்படிதான் செய்வேன் என்று சொல்ல முடியாது. அதே போல் சில நேரங்களில் குழுவை கடைசி வரை மாற்றாமல் தொடர்வேன் சில நேரங்களில் மாற்றங்கள் செய்வேன்.

பல்லின மக்கள் சமூகத்தில் பணியாற்றும் போது மனநிலை எப்படி இருக்கும்.

ஜேம்ஸ் லீ: நான் மக்களின் பல்வேறு பண்பாடுகளை ஏற்றுக் கொள்கிறேன். அதேவகையில் பணியாளர்களின் பல்வேறு வேலை செய்யும் முறைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் நாம் எந்தத் தனி இனம் பாகுபாடும் பார்க்க முடியாது. நான் மலாய் ஆங்கில சீன மொழிப் படங்களிலும் பணியாற்றுகிறேன். ஆகவே கலவையான வாழ்க்கை முறையைக் கொண்ட மலேசியாவில் பிரிவினை உணர்வோடு வாழவோ பணியாற்றவோ முடியாது. எல்லா பண்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு சிந்திக்கும் போதுதான் சிறப்பாக செயல்பட முடியும். பல்வேறு இனமும் குணமும் கொண்ட மனிதர்களைக் கொண்ட குழுவில் பணியாற்றும் போது அத்தனை பேரும் நம்மைப்போன்றே செயல்படுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். நான் அத்தனை பேரையும் என் பாணியிலேயே எனக்காக உழைக்க வற்புறுத்தினால் என்னால் எதையும் புதிதாக கற்றுக் கொள்ள முடியாது. காப்பிரேட் நிறுவனங்களிலும் ஒரு நல்ல தலைமை அதிகாரி தன் பணியாளர்களின் வேலை பண்பாட்டை அறிந்து தன்னை அதற்கேற்றபடி அமைத்துக்கொள்ளக் கூடியவராகவே இருப்பார். தன் பணியாளர்களின் மிகச்சிறந்த வேலைத் திறனை அவர்கள் பாணியில் இருந்தே வெளிக்கொணருவதே அவரின் வெற்றியாக இருக்கும். மாறாக, ஓர் அதிகாரி எனக்கு இந்த மாதிரி வேலைகள்தான் வேண்டும் என்று வரையறுத்துக் கூறிவிட்டால் பணியாளரால் புத்தாக்கச் சிந்தனையுடனோ புதுமையாகவோ எந்த பணியையும் செய்து காட்டமுடியாமல் போய்விடும். தனக்கு கீழ் வேலை என்னைப் பொருத்தவரை நான் ஜனநாயகமாகவே நடந்து கொள்கிறேன். ஒரு இயக்குனராக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இருந்தாலும், என் வேலைக் குழுவின் கருத்துகளை எப்போதும் வரவேற்றபடியே இருப்பேன்.

நான் மலாய் தயாரிப்பாளர்கள் சீன தயாரிப்பாளர்கள் ஆகிய எல்லா தரப்புகளுடனும் பணிபுரிவதால் வெவ்வேறான வேலைச்சூழலை கவனிக்க முடிகிறது. இது போன்ற கூட்டுமுயற்சிகளை நான் மிகவும் வரவேற்கிறேன். ஆனால் சிலருக்கு இதுபோன்ற வேறுபாடுகளில் பணியாற்ற முடியாத சிக்கல் இருப்பதைக் காண்கிறேன். இன்று மலேசிய சினிமா துறையும் மக்கள் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர் எனத் தனித்தனியே பிரிந்து கிடப்பதினால் நல்ல வளர்ச்சியைப் பெறமுடியாததாக இருக்கின்றது. அந்நிலை மாற வேண்டும். கலைஞர்கள்தான் இதுபோன்ற தடைகளை முதலில் உடைத்தெரிந்து முன்னேற வேண்டும். கலைஞர்களே பிரிந்து கிடந்தால் சராசரி மக்களால் இச்சூழலை மாற்றவே முடியாமல் போய்விடும். கலைஞர்கள் தேசத்தின் வடிவமைப்பாளர்கள். கலைஞர்கள் முதலில் தடைகளைத் தகர்த்தெரிந்து மலேசியர்களாக மாறினால்தான் பொது மக்களும் நாளடைவில் தங்கள் மனதில் மாற்றங்களை அடைய முடியும்.

ஒரு முக்கிய கேள்வி, உங்கள் திரைப்படங்கள் வெளியிடப்படும் போது சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறிகிறேன். இது பற்றி கூறுங்களேன்?

ஜேம்ஸ் லீ: அது அரசாங்க தணிக்கை சான்றிதல் தொடர்பான சர்ச்சை. அரசாங்கமே இறுதி முடிவு எடுக்கும் அதிகரத்தில் இருப்பதால் நான் சொல்ல ஒன்றும் இல்லை. திரைப்படத்தில் தணிக்கைக் கூடாது என்று நான் கூறமாட்டேன். உலகில் எல்லா நாடுகளில் தணிக்கை குழு செயல்படவே செய்தாலும், இங்குத் தணிக்கை குழுவின் செயல்பாட்டில் தெளிவான வரையரை இல்லை. சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. அண்மைய காலமாக படங்களுக்குத் தரநிர்ணயம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் சார்பு நிலைகள் அதிகம் தென்படுகின்றன. சென்சார் செயல்பாடுகளில் நடுநிலை இல்லாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது. மக்களுக்கு நாட்டு நடப்புகளை மூடிமறைக்காமல் சொல்ல முடிவதில்லை. தணிக்கை வாரிய செயல்பாடுகளைத் திருத்தி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை என்னால் தனிமனிதனாகச் செய்ய முடியாது. அதே போல் உடனடியாக மாற்றங்களைக் கொண்டுவரவும் முடியாது. திரைத்துறையினரின் ஒத்துழைப்பு தேவை. அனைவரும் இணைந்து போராடினால் வெற்றி பெறலாம். எனது படங்களுக்கு திரை அரங்கில் திரையிட அனுமதி மறுக்கப்படுமானால் நான் என் படங்களைத் திரைப்படவிழாக்களுக்குக் கொண்டு செல்வது, யூடியூப் போன்ற இணையத் தளங்களில் வெளியிடுவது போன்ற முறைகளில் என் படங்களை உலக பார்வைக்குக் கொண்டு செல்வதைத் தவிற வேறு வழியில்லை.

மலேசியாவில் மலாய்ப்படம், சீனப்படம் தமிழ்ப்படம் என்று இனவாரியாகத் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் மலேசிய அடையாளத்துடன் மலேசியப்படம் என்ற நிலையில் படங்கள் எடுக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

ஜேம்ஸ் லீ: மலேசியப் படம் என்பது மலேசியாவில் மலேசிய குடிமக்களால் மலேசிய வாழ்க்கைச் சூழலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படமாகும். மொழி வாரியாக இங்கே படங்கள் எடுக்கப்பட்டாலும் அவை மலேசியத் தனி அடையாளங்களைக் காட்டும் மலேசிய படங்கள்தான். உதாரணத்திற்கு உலகெங்கும் சீனர்கள் வாழ்கிறார்கள். இந்தியர்களும் அப்படியே. ஆனால் மலேசியாவில் வாழும் சீனர் இந்தியர் வாழ்க்கையைக் காட்டும் படைப்புகளைக் கொடுப்பவை மலேசியப் படங்கள்தான்.

ஆனால் மலேசியாவில் படம் எடுப்பவர்கள் கண்டிப்பாக மலேசிய முத்திரையை உலகுக்கு காட்டும்படியாக தங்கள் படைப்புகளைத் தர வேண்டும். மலேசியாவின் தனிச்சிறப்புகளை மையமிட்டு இருக்க வேண்டும். மலேசிய கலாச்சாரத்தை வெளிப்படுத்த வேண்டும். சீன தமிழ்ப்படங்களாக இருந்தாலும் மலாய் மொழியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இங்கு தயாரிக்கப்படும் சீனப்படங்கள் ஹாங்காங் சீன படங்கள் போன்றோ தமிழ்ப்படங்கள் போலிவூட் படங்கள் போன்றோ இருக்க வேண்டியதில்லை.

இங்கு தாயாராகும் பல தமிழ்ப்படங்களில் தமிழ் நாட்டு படங்களின் சாயல் அதிகம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மலேசியாவில் தயாராகும் சீன படங்களுக்கும் இந்நிலை உண்டா?

ஜேம்ஸ் லீ: நிச்சயமாக உண்டு. மலேசிய சீனப்படங்கள் பெரும்பாலும்James Lee_Suntii_2012_01 ஹங்காங், தைவான் படங்களின் சாயலிலேயே இருப்பது உண்மை. இங்கு உள்ள பண்பாடுகளையோ, வாழ்க்கை சிக்கல்களையோ அவை காட்டுவது மிகக் குறைவாக உள்ளது.

மலேசியாவில் தயாராகும் சீனப்படங்களில் மாற்று முயற்சிகள் உள்ளனவா?

ஜேம்ஸ் லீ: மிகக் குறைவுதான். இல்லை என்றே சொல்லிவிடலாம். இங்குப் பொழுதுபோக்கு கலைகளும் படைப்புக் கலைகளும் முழுக்க முழுக்க வியாபாரமாகவே ஆகிவிட்டது. நான் வியாபாரம் என்பதை தவறாகச் சொல்லவில்லை. வெளிநாடுகளிலும் படைப்புக் கலைகளின் வியாபாரம் முக்கியமாக இருந்தாலும் அங்குப் புதுமைகளுக்குத்தான் நல்ல வியாபாரம் அமைகிறது. நீங்கள் கணினி விளையாட்டுகளின் வளர்ச்சிகளைப் பின் தொடர்ந்து வந்தால் உங்களுக்கு இந்த உண்மை புரியும். கணினி விளையாட்டு இன்று தயாரிப்பாளருக்குப் பிடித்த விளையாட்டாக முதலில் தொடங்கி பின்னரே விற்பனைக்குப் போகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களும் எந்த மாதிரி படங்கள் நன்கு வியாபாரம் ஆகும் என்று கணக்கு போடாமல், தாங்கள் பார்க்க விரும்பும் படங்கள் எப்படி அமையவேண்டுமோ அப்படிப் பட்ட படங்களை தயாரித்து மக்களுக்கு வழங்கினாலே போதுமானது. ஏற்கனவே வெளிவந்து நல்ல வியாபாரம் கண்ட படங்களின் சாயலிலேயே படங்களை எடுக்காமல் அசலான வாழ்க்கையைக் காட்டும் படங்களை எடுக்க வேண்டும். தரமான தயாரிப்புகளுக்கு மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். மேலும் சில மலேசிய சீன பட தயாரிப்பாளர்கள் தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து நடிகர்களை கொண்டுவந்து நடிக்கச்செய்து படம் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்று நினைத்து ஏமார்ந்து போகிறார்கள். படத்தொழிலில் உள்ளவர்கள் அசலுக்கும் புது முயற்சிகளுக்கும் வரவேற்ப்பு கொடுப்பதில்லை. ஆகவே கலைஞர்களும் புது முயற்சிகள் செய்ய தயங்குகின்றனர்.

நம் நாட்டில் சினிமா போன்றே மற்ற துறைகளும் வியாபார வெற்றியை மட்டுமே குறிக்கோளாக அமைத்துக்கொண்டுள்ளன. அதன் காரணமாகவே இங்குப் புத்தாக்க புது முயற்சிகள் நடைபெறுவது அறிதாக உள்ளது. நாம் புதிய கருவிகளையோ தொழில்நுட்பத்தையோ கண்டுபிடிப்பதில்லை. புது முயற்சிகளில் யாரும் தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிட முன்வருவதில்லை. நாம் யாராவது தயாரித்துக் கொடுக்கும் ஒன்றை கையாளவும் அது போன்ற வேறொன்றை செய்யவும் மட்டுமே பழகியிருக்கிறோம்.

நீங்கள் உங்களை ஒரு வெற்றி பெற்ற சுதந்திர திரைப்பட இயக்குனராகக் (Independent Film Maker) கருதுகிறீர்களா?

ஜேம்ஸ் லீ: நிச்சயமாக இல்லை. முதலில் வெற்றி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதை வெற்றி என்று கூறுகிறீர்கள். ஒரு படத்தை எடுத்து முடிப்பதையா? படம் அதிக வசூலாவதையா? அல்லது அந்தப் படம் அதிகமானவர்களால் பேசப்படுவதையா? மேலும் வெற்றி என்கிற உச்சத்தை தொட்டுவிட்ட பின் என்ன ஆகும். நாம் அதன் பின் செயல்பட எதுவாவது மிச்சமாக இருக்குமா? நம் கற்றல் அதன் பின் தொடருமா?

மேலும் வெற்றி என்பதை முடிவு செய்வது சிரமம். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. மக்களின் ரசனையும் தொழில்நுட்பமும் மாறியபடியே இருக்கின்றன. ஆகவே இன்று வெற்றி என்று கூறப்படும் ஒன்று இக்கால கட்ட வரையரைக்குள்ளேயே அமைந்திருக்கிறது. அது ஒரு நித்திய நிலை இல்லை. உண்மையில் ‘வெற்றி’ என்கிற சொல் நம்மை முடக்கிப் போட்டு விடக்கூடிய ஆபத்தான சொல் என்றே நினைக்கிறேன். இப்படி பல கேள்விகள் என்னுள் இருப்பதால் நான் என்னை ஒரு வெற்றி பெற்ற இயக்குனராக கருதுவதே இல்லை.

மலேசியாவில் Skim Wajib Tayang போன்ற திட்டங்களால் தயாரிப்பாளரை பாதுகாக்க முடியுமா?

ஜேம்ஸ் லீ: இது ஒரு தற்காலிக நிலைதான். உலகில் கொரியா போன்ற மற்ற நாடுகளிலும் இது போன்ற திட்டங்கள் இருந்துள்ளன. அவற்றின் நோக்கம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியீடு காணும் வெளிநாட்டு படங்களால் உள்நாட்டு படங்கள் பாதிப்புக்குளாக கூடாது என்பதே. நம் உள்நாட்டு படங்களும் ஓரளவேனும் வெற்றி பெற இது போன்ற திட்டங்கள் வழி வகுத்தாலும் இது நிரந்தரமான ஒன்றல்ல. உலக சந்தையில் போட்டி போடக்கூடிய தரமான படங்களை கொடுக்க நம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது புதிய பொருளாதார கொள்கையின் வழி பூமி புத்ராக்களை அரசாங்கம் காப்பாற்ற எடுத்த முயற்சி போன்றதே. DEB-வையே நிரந்தரமான மார்க்கமாக கைகொண்டு வாழ நினைத்தால் பூமிபுத்ராக்கள் சொந்த காலில் எப்போது நிற்பது? ஒரு கட்டத்தில் அரசாங்க பாதுகாப்பு (Skim Wajib Tayang) இல்லை என்றால் தயாரிப்பாளர்கள் கூடுதல் கவனத்துடனும் தரத்துடனும் படங்களை எடுக்க முன்வருவார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு மலேசிய இயக்குனர் என்கிற நிலையில் இருந்து பார்க்கும் போது உள்நாட்டு படங்களின் சவால்கள் அல்லது சிரமங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

ஜேம்ஸ் லீ: பல விடயங்கள் இருந்தாலும், தணிக்கைக் குழுவினரின் செயல்பாடுகளை முதலாவதாக கூறுவேன். அவர்கள் மலேசிய படைப்பாளர்களின் கற்பனை ஆற்றலுக்கு தடைக்கல்லாக இருக்கிறார்கள். கடுமையான தணிக்கையின் விளைவாக இன்று இயக்குனர்கள் எந்த கற்பனை அழகும் இன்றி வெறும் அபத்தமான நகைச்சுவை காட்சிகளை மட்டுமே நம்பி படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்து, உள்ளூர் படங்களை சந்தைபடுத்துவதில் உள்ள சிக்கல்களும் கவனிக்க தக்கன. நமக்கு நம் படங்களை வினியோகிக்கும் பரந்த தொடர்புகள் (Network) இருப்பதில்லை. உள்ளூர் படங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையால் பலரும் இப்படங்களை சந்தைபடுத்த தயங்குகின்றனர். மூன்றாவதாக மலேசிய படங்களின் தரம் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. டிக்கட் விலையில் எந்த மாற்றமும் இல்லாத போது மக்கள் நிச்சயம் தரமான வெளிநாட்டு படங்களையே நாடிச் செல்வர். இது ரசிகர்களின் தவறு அல்ல. ஏறக்குறைய நமது ஒத்த பண்பாட்டு இயற்கைச் சூழலில் வாழும் இந்தோனேசியாவும் தாய்லாந்தும் மிகச்சிறந்த படங்களை கொடுத்து உலக சந்தையில் இடம்பெறும் போது நம்மால் ஏன் முடியவில்லை என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அண்மையில் சில படங்களை அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்படுகின்றன. உதராணத்திற்கு ‘Tandaputra’ பினாங்கில் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு படத்தை தடைவிதிப்பது ஏற்புடையதா?

ஜேம்ஸ் லீ: அப்படம் பினாங்கில் தடைசெய்யப்பட்டு பின் தடைநீக்கம் பெற்றதாக ஞாபகம். இன்னும் தடைகள் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் ஒரு படத்திற்கு தடை விதிப்பதால் அது பார்வையாலர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவே உதவும். பல்வேறு வழிகளில் அப்படத்தை (கள்ள டிவிடி உட்பட) பார்த்துவிட மக்கள் முண்டியடிப்பர். மேலும் ஒரு படத்தை பார்த்து அதன் கருத்து கோணத்தை புரிந்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. தடைவிதிப்பது கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக அமையும்.

இறுதியாக, ஒரு தரமான திரைப்படம் அமைய எழுத்தாளர்கள் அல்லது இலக்கியத்துடன் இயக்குனர் கைகோர்த்து செயலாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று உணருகிறீர்களா?

ஜேம்ஸ் லீ: ஆமாம், அதோடு ஒரு இயக்குனரானவர் சினிமா தவிர்த்து ஓவியம், இலக்கியம், இசை என்று பல கலைகளையும் அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். ஓய்வு நேரங்களில் பிற கலைகளில் ஈடுபடுவதும் நல்லதே. ஒரு தரமான இயக்குனர் உலக சினிமா குறித்தும் தெளிவு பெற்றிருக்க வேண்டும். மற்றவர்களின் படைப்புகளையும் பார்த்து படைப்பாற்றல்லை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் பெரும்பாலும் சினிமா தவிர்த்து அதிகம் கவனிப்பது கணினி விளையாட்டுகள் குறித்தே. அவற்றின் மாற்றங்கள், வளர்ச்சி போன்றவற்றை தெரிந்து கொள்வேன். தவிர ஓவியம் வரைவேன். கதைகள் எழுதுவேன். புகைப்பட நுணுக்கங்களையும் சேகரித்து தெரிந்து கொள்கிறேன். சமூகத்தின் பல்வேறு கலை வடிவங்களையும் பற்றி தொடர்ந்து அறிந்த வண்ணம் இருப்பதே நம்மை படைப்பாற்றல் உள்ள மனிதனாக நிலைக்கச் செய்யும் என்று நினைக்கிறேன். நன்றி.

நேர்காணல்: கங்காதுரை

எழுத்து: அ.பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...