இதான் மனநோயா அடேங்கப்படிங்கப்பா

000நெடுஞ்சாலையில் நண்பருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். தூரத்தில் மேம்பாலம் தெரிந்தது. நடந்து சாலையை கடக்க போடப்பட்டிருந்த மேம்பாலத்தில் மோட்டார்களில் பலர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். இதனை கண்ட நண்பருக்கு கடுங்கோபம். “எதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை அதுக்குத்தான் பயன்படுத்தனும். மனுசனுங்க நடக்கறதுக்கு மேம்பாலம் கட்டினா இதுங்களை பாரேன். இந்த பன்றிங்க மேம்பாலத்துல போய் மோட்டார்ல போகுதுங்க” என சலித்துக் கொண்டார். கூடவே தனது மனோவியல் அறிவை பயன்படுத்தினார். “உனக்கு தெரியுமா? இப்படி போகிறவனுங்க எல்லோரும் மனநோயாளிங்களாதான் இருப்பானுங்க நாம போய் அதுங்ககிட்ட சொல்ல முடியுமா இது நடக்கவேண்டிய மேம்பாலம் மோட்டாரில் போகக்கூடாதுன்னு. திருந்தாத ஜென்மங்க”.

இப்படி நண்பர் சொல்ல சொல்ல பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தோம். எனக்கு சிரிப்பு வந்தது. கவனித்த நண்பர், குழம்பித்தான் போனார். “என்ன நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன், நீ என்னமோ சிரிக்கறயே. உன்னைப்போல பருப்பையெல்லாம் நெருப்புலதாண்டா போடனும்,” என சலித்துக் கொண்டார். எனக்கு இன்னமும் சிரிப்பு அதிகமாகியது. மேலும் அவரை கோபப்படுத்த விரும்பாமல் பேசினேன்.

நல்லவேளையாக நான் பேசுவதை அவர் கேட்க தொடங்கினார். ஒருவேளை அவர் கேட்காமல் இருந்திருந்தால், வீட்டிற்குச் சென்றதும் அவரின் இந்தக் கருத்தினை பார்ப்பவர்களிடம் பரப்புயிருப்பார். விசயத்தை கேட்பவர்களும் அவர் சொல்வதற்குத் தலையாட்டிக்கொண்டு இவ்வகையில் மனநோய் இருப்பதாக நம்பிவிடுவார்கள். ஆளுக்கு ஆள் ஆலோசனைகளையும் கொடுக்க முனைந்திடுவார்கள். யாரும் அந்த மேம்பாலம் எங்கே இருக்கிறது என கேட்கமாட்டார்கள். அங்கு சென்றுதான் பார்க்கலாமே என பார்க்கமாட்டார்கள். தன் பார்வைக்கும் அப்படியேதான் இருக்கிறதா இல்லையா என யோசிக்கமாட்டார்கள். பாலைவன மழை போல அவர்களின் கருத்துகள் கொதித்து குதித்து ஆவியாகி காணாமாலாகிவிடும். பாலைவனம் மட்டும் அப்படியே கிடக்கும்.

என் பதிலை கேட்டதும், நண்பர் வெட்கப்படவே ஆரம்பித்துவிட்டார். இது நெடுஞ்சாலை மேம்பாலம். ஒரு புறம் இருக்கும் மோட்டார்கள் மறுபுறம் வருவதற்காகவே இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்தால்தான் தவறு மோட்டாரில் போவது தவறல்ல.

சமீபத்தில் பூங்குழலி வீரனின் ‘அன்று போல் அன்று’ என்ற கவிதை புத்தகம் குறித்த விமர்சனத்தினை மேல் சொன்ன சம்பவத்தோடு ஒன்றிப்பார்க்கிறேன். பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. என் நண்பர் நான் சொல்வதை கேட்டார், இங்கு இவர்கள் ‘மனநோயாளிகளுக்கு’ பதில் சொல்ல முடியாது என போய்விட்டார்கள்.

அதோடு பன்றிகளின் விமர்சனத்தைப் பொருட்படுத்தக்கூடாது, இவர்கள் மனநோயாளிகள் என அறைகூவல்கள். காழ்புணர்ச்சி என்றும் பதிவுகள் வந்தன. உண்மையில் குழலி அப்புத்தகத்தை எழுதியவர்க்கு நல்லதைதான் செய்திருக்கிறார். தொடர்ந்து வல்லினம் பக்கத்தைப் பார்த்து வருகிறவர்களுக்கு குழலி யார் என்பது புலப்படும். எத்தனை கவிதை தொகுப்புகளையும் எத்தனை கவிஞர்களையும் இவர் அறிமுகம் செய்திருக்கிறார். தொடர்ந்து வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் ஒருவரால்தான் இவ்வாறு செய்தல் சாத்தியம்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வியினை நான் கேட்க நினைக்கிறேன். குழலியில் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொண்ட விதம் சரியா? உங்களுடைய புத்தத்தை அது வெளிவந்த சில தினங்களிலேயே முழுக்க படித்து அதனை புரிந்து நேர்மையாக எழுதிய படைப்பாளருக்கு நீங்கள் செய்தது சரியா? உங்கள் பதிவில் வந்து விமர்சனம் எப்படி எழுதுவது என பாடம் நடத்தியவர்களையும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என பந்தா காட்டுகிறவர்களையும் பார்த்து கேளுங்கள். “என் புத்தகத்தைப் படித்தீர்களா?” என்று. வேண்டாம்.. அவ்வளவு வேண்டாம்.. முதலில் உங்கள் புத்தகத்தை வாங்கினார்களா என கேட்டுப் பாருங்கள்.

குழலி உங்களை அணுகியது படைப்பாள வாசக மனப்பான்மையில்தான். உங்களால் அவரது விமர்சனத்தை ஏற்க முடியவில்லையெனில் அதை உரையாடல் ஆக்குங்கள். கவிதை தொடர்பான உரையாடலை உண்டாக்குங்கள். அதுதான் உங்கள் படைப்பின் அடுத்தக்கட்ட நகர்வுக்கான முயற்சி. அதைவிடுத்து அவரையும் அவரை சார்த்தவர்களையும் மனநோயாளிகள் என பேசியது கண்டிக்கத்தக்கது. இதிலிருந்து மனநோயாளிகள் குறித்த உங்களுடைய மேல்தட்டு மனப்பான்மையும் தட்டுப்பட்டுவிட்டது.

இவ்விமர்சனம் உங்கள் புத்தக விற்பனையைத் தடை செய்யும் என்ற எண்ணம் உங்களை பயமூட்டியிருக்க வேண்டும். கூடவே நீங்கள் எதை செய்தாலும் புகழ்ந்து தோள் தட்டும் சிலரும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

குழலியின் விமர்சனத்தைப் படித்து அவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, அவர் சொல்லியுள்ளதில் எங்கெல்லாம் உங்களை மாற்றிகொள்ள வழியுண்டு என்று நீங்கள் சிந்தித்திருந்தால், நிச்சயம் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையானது உங்களைத் தொடர்ந்து முக்கியத் தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கும். உங்களுக்கு ஆதரவாக பேசுவதாக பாவ்லா காட்டுகின்றவர்களிடம் உங்கள் புத்தகத்தை (அவர்கள் வாங்கியிருந்தால்) முழுக்க படித்தபின் நேர்மையான அவர்களின் விமர்சனத்தைக் கேளுங்கள். அதற்கு முன்பு அவர்களின் வாசிப்பு அனுபவத்தை கருத்தில் கொள்ளுங்கள்.

இன்னும் சொல்ல போனால், இதுவரை பூங்குழலி முகஸ்துதிக்காக எந்த ஒரு படைப்பை குறித்தும் எந்த ஒரு படைப்பாளர் குறித்தும் எழுதியது இல்லை. அவரோடு பழகியவர்களுக்கு அது தெரியும். இப்போதுகூட நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் அவர்மீது செலுத்தியிருக்கும் வார்த்தை ஆயுதங்களை அவர் பொருட்படுத்தமாட்டார். அவரது பணியை அவரது பானியில் செய்துக்கொண்டே இருப்பார்.

இதன் வழி உங்களையும் உங்கள் படைப்பினையும் தெரிந்துக்கொண்டதைவிட, சகோதரி பூங்குழலி வீரனின் ஆளுமையை தெரிந்துக் கொண்டேன். அவர் மீது மரியாதையும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...