எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

000மலேசிய நாளிதழ்களிலும் வார மாத சஞ்சிகைகளிலும் அச்சிடப்படும் சிறுகதைகள் பெரும்பாளும் எந்த சுவாரசியமும் இன்றி தட்டையாக இருப்பது இலக்கிய ஆர்வளர்கள் பலரும் அறிந்ததே. விதிவிலக்காக சில சமயங்களில் நல்ல சில படைப்புகளையும் நாம் பார்க்க நேர்கிறது. அச்சு இதழ் கதைகளின் வெத்துப் போக்கை நாம் எந்த விமர்சனமும் இன்றி கடந்து போய்விடுவது வாடிக்கை. காரணம் மீண்டும் மீண்டும் அதே விமர்சனத்தை நாம் முன்வைத்துக் கொண்டிருப்பதில் நமக்கே சலிப்பு ஏற்பட்டு விடுவது ஒன்று. அடுத்தது, அவை புதிய எழுத்தாளர்களின் ஆரம்ப எழுத்து என்னும் காரணத்தாலும் அதை நாம் பெரிது படுத்தி பேச தேவையில்லை என்பதும் உண்மை.

ஆனால், நூலாகத் தொகுக்கப்பட்டு பெரிய விழாவெல்லாம் எடுத்து வெளியிடப்படும் சிறுகதை தொகுப்புகளையும், பிற படைப்புகளையும் நாம் அப்படி அசட்டையாக விட்டுவிட முடியாது. அவை ஆவணங்களாக வாழக்கூடியவை. வரும் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் நமது அடையாளங்கள். தொகுப்பின் தரமும் படைப்புகளின் உள்ளடக்கமும் விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்படுவது அவசியம். படைப்புகளின் தரத்தை விமர்சனம் செய்வதே ஒரு வித மனநோயின் வெளிப்பாடு என்று படைதிரட்டும் படைப்பாளிகளின் தாக்குதல்களுக்கு பயந்து வாழாவிருந்துவிட முடியாது. மாறுபட்ட படைப்புகளை எழுதும் படைப்பாளிகளைக் கழிசடைகள் என்று சாடுவதும், ஒரு படைப்பில் இருக்கும் இலக்கிய அவலங்களைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்பவர்களை மனநோயாளிகள் என்று தூற்றுவதும் இன்றைய இலக்கிய சூழலின் பிற்போக்குதனத்தைக் காட்டுகிறது. ஆயினும், ஒரு படைப்பு குறித்த சுயபார்வையை, ஒரு முழுமையான திறனாய்வாக இல்லாவிடினும், ஒரு வாசகனின் ரசனை விமர்சனமாகவாவது பதிவிட வேண்டியது நமது கடமை. ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே நடைபெரும் ஆக்கபூர்வ உரையாடலாக அது அமையும்.

கடந்த வாரம், எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ என்னும் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். தமிழக சீதை பதிப்பகத்தார் தமது பதிப்புரையில், ‘எஸ்.எம். ஆறுமுகம் எழுதியுள்ள சிறுகதைத் தொகுப்பு உயிர்த்துடிப்பின் இதய ஒலி என்னும் இந்நூல் பண்பாடும் ஒழுக்கமும் அற உணர்வும் தோன்றும் வகையில் படைக்கப்பட்டுள்ளன..’ என்ற அறிமுகத்துடன் நல்ல எதிர்ப்பார்ப்பை கொடுத்தது. ஆனால் கதைளை வாசிக்கத் தொடங்கியதும், அத்தொகுப்பு மலேசிய தமிழ்ச்சிறுகதைகளின் தரத்தை அதிகபட்சமாக சோதித்துப்பார்க்கும் ஒன்றாகவே அமைந்திருந்தது. மொத்தம் 28 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகளைப் படித்ததும் அழுவதா சிரிப்பதா, என்று புரியாத நிலைக்கு என்னை கொண்டு சென்று விட்டன.

எஸ்.எ.ம் ஆறுமுகம் துணிந்து இக்கதைகளைத் தொகுப்பாக போட்டது எனக்கு வியப்பூட்டுகிறது. உண்மையில் இக்கதை தொகுப்பு விமர்சன கருத்துகளுக்கு தகுதி அற்ற முதிரா எழுத்துக்களால் நிரப்பப் பட்டுள்ளது. எஸ்.எம். ஆறுமுகம் ‘எந்த கவலையும் இன்றி’ இக்கதைகளை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. எந்த கவலையும் இன்றி என்று நான் குறிப்பிடுவது, வாசகனின் மனநிலை, கலை அமைதி, கருப்பொருள், சமகால இலக்கிய பிரக்ஞை, உலக இலக்கிய போக்கு, ஒரு கதை சொல்லிக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கிய புரிதல், உத்திகள், போன்ற எவை பற்றியும் கவலை இன்றி ‘கதைகளை’ எழுதி பக்கங்களை நிரப்பியிருக்கிறார். தொகுப்பின் அத்தனை கதைகளும் தன்நிலையில் இருந்து கூறப்படும் கதைகள். அனைத்தும் நேர்க்கோட்டில் பயணித்து முடிகின்றன. மாற்று உத்திகளோ, கலை நுணுக்கங்களோ மருந்துக்கும் இல்லை.

வாசகனின் சிந்தனைக்கோ கற்பனைக்கோ எந்த வேலையும் கொடுத்துவிடக் கூடாது என்று சபதம் எடுத்து எழுதியது போல எல்லா கதைகளையும் அமைத்திருக்கிறார். தப்பித் தவறி எங்காவது ஓரிடத்தில் கொஞ்சம் விடுபட்டாலும் உடனே, எழுத்தாளரே முன்னுக்கு வந்து நின்று கொண்டு,….. “என்ன புரியவில்லையா?… குழப்பமாக இருக்கிறதா?… சிரமம் வேண்டாம். இதோ என் கதையை முழுவதுமாக கூறுகிறேன், கேளுங்கள்” என்று கலகலப்பூட்டுகிறார்.

இவர் தேர்வு செய்திருக்கும் கதைக்கருவும் கதை உத்திகளும் கதை தலைப்புகளும் கூட காலாவதியானவை. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே படைப்பாளர்கள் கைவிட்டு விட்ட உத்திகள். உரையாடல்களில் அப்பட்ட சினிமா தாக்கமும் நாடக பாணியும் மிகுந்து காணப்படுகிறது. ‘வெற்றியின் உயரங்கள்’, ‘வாழ்வின் மறுபக்கம்’ போன்ற கதைகளின் உரையாடல்கள் அதிகபட்ச நாடகத்தன்மையோடு சலிப்பூட்டுகின்றன.

எஸ்.எம். ஆறுமுகம் தன் கதைகளில் பல பெண் கதைப் பாத்திரங்களை படைத்திருக்கிறார். தலைப்பு கதை தொடங்கி பல பெண்கள் வந்து போகின்றனர். ஆனால், எல்லா பெண்களும் மிகையான அடிமைத்தனத்தையும் போலி கற்பிதங்களையும் உயர்த்திப்பிடித்து நிற்கின்றனர். உதாரணத்திற்கு சில….

ஒருத்தி, பள்ளி வயதில் வன்புணர்ச்சி செய்தவனுக்காக பள்ளி படிப்பை விட்டு விட்டு காத்திருந்து இருபது வருடங்கள் கடந்து அவனையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறாள். ‘ஒருத்தன் தொட்ட உடம்பை இன்னொருவன் தொட மனசாட்சி சம்மதிக்கவில்லை’ என்று காரணம் கூறுகிறாள். இன்னொருத்தி, தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற கணவனின் திருமணத்திற்கு அப்பாவியாக சென்று தன் குழந்தையோடு பந்தியில் அமர்ந்து… “அப்பாவோட கல்யாண விருந்து சாப்பாடு, சாப்பிடு ஐயா” என்று சோகத்தோடு வசனம் பேசுகிறாள்.

இன்னொரு கதையில் மாறுவேடத்தில் தங்கள் வீட்டுக்கு வந்து போவது தனது தகப்பன்தான் என்று அறியாமலே ஒருத்தி தன் தாய் மீது சந்தேகம் கொள்கிறாள். அடுத்த கதையில், தன்னை பாலியல் தொழிலில் தள்ளிய வஞ்சகனை பிறிதொரு நாளில் மயக்கி, அவன் ‘கோண்டோம்’ போடாமல் உறவு வைத்து தன்னிடம் இருக்கும் ஏய்ட்ஸ் நோய் அவனுக்கும் வந்துவிடும் என்று பழியுணர்வு தீர மகிழ்ந்து கொள்கிறாள்.

மேலும், ஒரு ஆச்சே சட்டவிரோத குடியேறிப் பெண், தமிழ் நாட்டு தொழிலாளியுடன் வாழ்ந்து அவன் தமிழகம் சென்றவுடன் தன் கைக் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டுகிறாள். இன்னொரு கதையில், ஒரு பெண், கைக்குழந்தையுடன் தன்னை துரத்திய கணவனையும் மாமனாரையும் தன் மகனின் திருமணத்திற்கு அழைத்து அக்கணவனை அவனது இரண்டாம் மனைவியுடன் பாதபூசையில் கலந்து கொள்ள அனுமதித்துவிட்டு ஒதுங்கி நிற்கிறாள். பின்னர் தன் மகனிடம் அவன் அப்பாவைக் காட்டி “இவர்தான் உனக்கு நான் தரும் திருமண பரிசு” என்று கூறுகிறாள். “திக்கு தெரியாத காட்டில்” என்னும் கதை நாயகி தன்னை ஏமாற்றிவிட்டு சென்று விட்ட கணவனின் நோயுற்ற பெற்றோரை அன்புடன் பராமரிக்க தன் சுகத்தை விட்டுக் கொடுக்கிறாள். இவ்வாறு பல கதைப் பாத்திரங்கள் (ஆண் கதை மாந்தரும்தான்- “என் ஜீவன் நீயே தான்”) நகைப்புக்குறியதாகவும் பிற்போக்குத்தனத்துடனும் அமைந்திருப்பது வேதனை.

‘தந்தையின் முகம்’ கதையில், தோட்டக்காட்டில் வாழ்ந்து வளர்ந்த மகன் பெற்றவர்களை மறந்து புறக்கணித்துச் செல்கிறான். ஆனால் அவனது வெள்ளைக்கார பிலிப்பீனோ மனைவி அன்புடன் மாமனார் மாமியாரை தேடி வந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, சோறு கறியெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறாள். இதே வகையில் ‘வெற்றியின் உயரங்கள்’ என்னும் கதையில், ஒரு ‘வாசக்கூட்டியின்’ (தோட்டியின்) இரண்டு மகன்களும் படித்து வளர்ந்து மேன்நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் ஒருத்தன் ஃபிராஸ் பெண்ணையும் அடுத்தவன் ஜெர்மன் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த மேல்நாட்டு மருமகள்களும் ‘தமிழ் சாங்கிய பண்பாடு’ கொப்பளிக்க சிவன் கோயில் குருக்களைக் கொண்டு இல்ல கிரகபிரவேசமெல்லாம் செய்கின்றனர். எஸ்.எம். ஆறுமுகம் எது தமிழ்ப்பண்பாடு என்பதில் தெளிவில்லாமலேயே தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்பை மேல்நாட்டவரிடம் கொடுத்து பெருமைபட்டுக் கொள்கிறார்.

‘மனதோடு மனோன்மணி’ என்னும் கதையில், கதை சொல்லி ஒரு தன்முனைப்பு கருத்தரங்கில் சந்திக்கும் பெண் தன் கணவன் காணாமல் போய் விட்டதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறாள். கதை சொல்லி உணவு வாங்கி கொடுத்து உதவியதோடு அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தங்குவதற்கு அறை எடுத்து கொடுக்கிறார். இரவில் அப்பெண் தொலைப்பேசியில் அழைத்து “மேலும் ஒரு உதவி செய்யுங்கள், நான் உடுத்திக்கொள்ள ஆடை இல்லை. அணிந்திருந்த ஆடையை துவைத்து காய வைத்து விட்டேன். அது இன்று காயாது” என்கிறாள். கதை சொல்லி கடைக்கு ஓடிப்போய் ஆடைகள் வாங்கிக் கொண்டு அவள் தங்கி இருக்கும் அறையை நோக்கி போகும்போது இப்படி சிந்திக்கிறார். “நான் இந்த சொற்பொழிவிற்கு வந்ததே, எனது இனத்தின் இன்னல்களை, சுமைகளை சீர்கேடுகளைக் களையும் வழி தேடத்தானே? உதவி செய்வது என்று முடிவெடுத்தபின் ஏன் தயக்கம்? ஏன் சுணக்கம் காண வேண்டும்? நாளைய நடப்பை இன்று யோசிக்க வேண்டாம். இன்று நடப்பது நன்றாக நடக்கட்டும்”. அதோடு இறுதியில் கதை இப்படி முடிகிறது ‘நெஞ்சில் உரத்தோடு, நேர்மை திறத்தோடு பஸ்ஸரை அழுத்தி, கதவை இலேசாக தட்டி “மனோன்மணி” என்று அழைத்து நின்றேன்’. எப்படிப்பட்ட சேவை! எல்லாருக்கும் இப்படியெல்லாம் தம் இனத்துக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.

“தொட்டு தொட்டு பார்க்கவா” என்னும் கதையில் ஒரு தந்தை தன் மகள் காதலிக்கும் ஆண் உண்மையில் ஆண்மை உள்ளவனா என்று அறிந்து கொள்ள இரண்டு பாலியல் தொழிலாளிகளை ஏவி விட்டு ஆண்மை பரிசோதனை நடத்துகிறார். அதில் அவன் ‘ஆண்மை குறைந்தவன்’ என்ற ஆய்வு முடிவு வெளிப்படவே எப்படி மகளை அவனிடம் இருந்து பிரிப்பது என்று குழம்பி நிற்கிறார்.

இவற்றை எல்லாம் விட உலகப் புகழ்பெற்ற ஒரு கதையை (மூலம் கொரியா), எஸ்.எம். ஆறுமுகம் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி அற்று ‘கண்களில் எழுதிய கடிதம்’ என்று பெயரிட்டு இலக்கியச் சுரண்டல் செய்திருக்கிறார். இக்கதை பலமுறை பல்வேறு மேடைகளில் தன்முனைப்பு பேச்சாளர்களால் பல ‘பதிப்புகளில்’ சொல்லப்பட்ட ஒன்றாகும். பலரும் அறிந்த கதையை புதிதாக தாம் எழுதுவது போல் பாவனைகாட்டி எழுதுவது இலக்கிய நேர்மை அன்று.

இவை தவிற பாம்பு பலிவாங்கும் கதை, தன் காதலியை ஏமாற்றி கொலை செய்த பணக்காரனை பழிதீர்க்க மாந்திரீக முறையில் கொலை செய்ய திட்டமிட்டு காத்திருக்கும் ஒரு மனிதனின் கதை, தன் புதிய மனைவியை திரையரங்கில் கண்ட நண்பனின் ‘மாறுபட்டிருக்குமே’ என்ற நையாண்டியை தாங்கமாட்டாமல் அங்கேயே அவனை அடித்து கொலை செய்துவிடும் ஒருவனைப் பற்றிய கதை என்று பல கதைகளும் உள்ளன.

இவற்றின் ஊடே ‘மரம் கொடுத்த சீதனம்’, ‘துண்டுச்சீட்டு’, ‘சொல்லாமல் போனவன்’ போன்ற கதைகள் ஓரளவு கவர்வதாக இருந்தாலும் அவை பொருட்படுத்ததக்கன அல்ல என்றே கூறவேண்டும்.

எஸ்.எம். ஆறுமுகத்தின் சமூக பார்வைதான் இப்படி இருக்கிறது என்றால் அவரது அரசியல் பார்வை மிக மேம்போக்கானதாக ஆளும் வர்கத்தின் குரலாக உரத்து ஒலிக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டில் கட்டப்படும் கட்டிடங்களின் வளர்ச்சியே என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். எங்கெங்கெல்லாம் மேம்பாலங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு விட்டன என்பதை துள்ளிதமாக அரசாங்க பொதுப்பணிதுறை அதிகாரி போல் கதைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டு பெருமிதமாக சொல்கிறார். அதோடு ‘நிமிர்ந்த மரம்’ என்னும் கதையில் கோ.புண்ணியவானின் புகழ் பெற்ற கவிதையான ‘இவன் நட்ட மரங்கள் எல்லாம் நிமிர்ந்து விட்டன, அன்று குனிந்தவன்தான் இன்னும் நிமிரவே இல்லை!’ என்னும் கவிதைவரிகள் குறித்து….. “இந்தியர்கள் மிகவும் முன்னேறி விட்டனர். குனிந்தவர்கள் முன்னேறவில்லை என்பதெல்லாம் பொய். எஸ்டேட் தோட்டப்புற, லயங்களில் வசித்தவர்கள் இன்று தாமான்களில் சகல வசதியோடு வாழ்கின்றனர். நட்டவர்கள் என்றோ நிமிர்ந்து விட்டனர். நிமிர்ந்து நின்ற மரங்களும் வெட்டப்படுகின்றன, நகர்புற மேம்பாட்டிற்காக…..” என்று அதிகார தோரணையில் கூறிச் செல்கிறார். அதுவும் அவர் இப்படிக் கூறப்போகும் இடம் மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு பினாங்கு மாநில தமிழர் திருநாள் நிர்வாகத்தினர் நடத்தப்போகும் புதுக்கவிதை திறனாய்வின் கருத்தரங்கிலாம். என்ன கொடுமை.

எஸ்.எம். ஆறுமுகம் தன் கதைகளுக்கு சொந்த அனுபவத்திலிருந்தும், நாளிதழ் செய்திகளில் இருந்தும் தகவல்களைத் திரட்டி இருப்பது தெரிகிறது. பல தகவல்கள் அல்லது அனுபங்கள் சிறுகதைக்குறிய சித்தரிப்புகளும் திருப்பங்களும் இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே நின்றுவிடுவது மிகப்பெரிய குறை. இலக்கியத்தின்வழி நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசகனுக்கு அனுபவமாக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல உணரவேண்டும். சம்பவங்களை ஊடுருவிச் சென்று வாழ்க்கையை அறிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த எழுத்துக்கலை எஸ்.எம். ஆறுமுகத்திற்கு இன்னும் கைவரப்படவில்லை என்பதே எனது கருத்து.

முன்னுரையில், கூடிய விரைவில் தமது மூன்றாவது நூலை வெளியிட தாம் ஆர்வமாக இருப்பதாக அவர் எழுதியிருக்கிறார். நமது வேண்டுகோள், எஸ்.எம். ஆறுமுகம் பொறுமையாக, தமது இலக்கிய ஆற்றலை தொடர் வாசிப்பின் வழியும் தேடலின் வழியும் வளர்த்துக் கொண்டபின் புது முயற்சிகளில் ஈடுபடுவது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்பதுதான்.

6 comments for “எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

  1. விஜயா
    July 10, 2014 at 3:09 pm

    பாண்டியன், இந்த மாதிரியொரு விமர்சனக் கட்டுரையைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் தேடிக்கொண்டிருதேன். எனக்கு நன்கு அறிமுகமான நண்பர் ஒருவர் தன்னுடைய இரண்டாவது நாவல் ஒன்றை வெளியீடு செய்திருந்தார். அந்நூலைத் திறனாய்வு செய்ய வந்த மூத்த எழுத்தாளர் மிகக் கடுமையாக விமர்சித்து இனிவரும் காலங்களில் படைப்பை புத்தக வடிவில் பிரசுரிக்கும் முன்பு தேர்ந்த எழுத்தாளர்களிடம் கொடுத்து சரிபார்க்கச் சொன்னார். அவர் சென்ற பிறகு நண்பர் கொஞ்சம்கூட வெட்கமோ குற்ற உணர்வோ இல்லாமல் சகஜமாக நூலை மேடையில் விற்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நிச்சயம் இனியொருமுறை அந்நண்பர் இத்தவறை செய்ய மாட்டார் என்கிற மகிழ்ச்சியில் நான் திரும்பினேன்.
    படைப்பிலக்கியத்தின்மீது ஆர்வமும், தன் படைப்பு புத்தக வடிவில் வருவதில் ஆசையும் இருப்பது நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. ஆனால், படைப்பின் தரம் குறித்தும், அக்கலை வடிவின் சமகால வளர்ச்சி,போக்கு குறித்தும் பிரக்ஞையே இல்லாமல் எழுதத்துவங்குவது கண்டனதிற்குரியது. இக்கட்டுரை எஸ். ஏம். ஆறுமுகம் மற்றுமின்றி மற்ற படைப்பாளர்களுக்கும் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.

  2. m.karunakaran
    July 11, 2014 at 4:36 pm

    ivarin kathaikalai naanum padittu irukkiren. Nalla visiyanggkali solla veendun endra ennam atigamaaga irukkum. atai kathaiyaaga solla teriavillai. Romppa kaalamayai elutukirar enpatu ivarutu palamaga karutukirar. Oru velai ivarai ‘Vallinam Kulu” alaitttu vilakkam solli, meam paduttalaam. Evar athigama aanggila ilakkiyam padikkum oru padaippalar.

  3. ஸ்ரீவிஜி
    July 11, 2014 at 10:03 pm

    என் கண்களில் நீர் கசிய சிரித்து ரசித்து வாசித்த கட்டுரை இது. எவ்வளவு சுவையாக பகடியிருக்கின்றீர்கள். ஒவ்வொருவரிகளும் அங்கதம் தெறிக்கின்ற வாசகங்கள். இப்படிப்பட்ட திறனாய்வை நான் வாசித்ததே இல்லை. திறனாய்வு என்கிற போர்வையில் செடிக்குவலிக்காமல் பூக்களைப் பறிக்கவேண்டும் என்பதற்காக ஒன்றுமே இல்லாத விஷயத்தை, எதுவுமே கிடைக்காத இலக்கியத்தை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டித்தள்ளிவிடுவதும், அல்லது எனது பாணியில் கடுமையான கோபத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போட்டுத்தள்ளுவதையுமே விமர்சனப்பார்வையாகப் பார்த்துப்பழகியதால் உங்களின் இந்தக் கட்டுரை இரண்டுக்கும் நடுவில் செம ரகளையாக படைக்கப்பட்டிருப்பது ரசனைக்குரியது

    இவர் போன்ற எழுத்தாளர்களுக்கு தூபம் போட்டு தூ(நொ)ண்டி விட்டவர்கள் உள்ளூர் பத்திரிகை ஆசிரியர்களே. என்ன எழுதினாலும் புதியவர்கள் என்கிற முறையில் சில வாசக எழுத்தாளர்களை ஆர்வமூட்டலாம்.. காலகாலமாக இப்படியே எழுதுகிறவர்களை எதற்காக ஊற்சாகப்படுத்தவேண்டும்.!? கேட்டால் எழுதுகிறவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பார்கள். ஏற்கனவே ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் சொல்லியுள்ளார் இதே காரணத்தை. அதோடு எஸ்.எம்.ஆறுமுகம் மலேசிய இலக்கிய வானில் ஒரு சிறந்த படைப்பாளி என்றும் சொன்னார் அந்த ஆசிரியர்..! 🙁

    அவர் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு எஸ்.எம். ஆறுமுகம் எழுதுகிற அத்தனைப்படைப்புகளையும் தொடர்ந்து வாசித்து வந்து, மனவுளைச்சலுக்கு ஆளானேன். தாங்கமுடியாத வேதனையில் மூழ்கினேன். என்ன எழுத்து இது. என்ன படைப்பு இது? என்ன கரு இது.? அநாகரீக எழுத்துபோல் இருக்கிறதே,,! இப்படியா ஆபாசமாக எழுதுவார்கள்.! அசிங்கமான சிந்தனை உள்ள ஒரு படைப்பாளி இவர்.. இவர் போன்றோர்களால் இலக்கிய உலகம் நாசமாகும்.. இவர் எழுத்தாளரே இல்லை.. இந்த லட்சணத்தில் எழுதி புத்தகம் வேறு போடுகிறாரா.! உருப்பட்டமாதிரிதான், என்று செம்ம டோஸ் விட்டு ஒரு கடிதம் எழுதி பத்திரிகைக்கு அனுப்பினேன். கடிதமும் வந்தது.. (கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு)

    செருப்பால் அடிப்பேட்டி உன்னை…. தே.. பு.. ம… ப…க…மு.. ஓ என்று கேவலாமகத்திட்டி குறுந்தகவல் அனுப்பினார்கள் சில ஜால்ரா வாசகர்கள்/எழுத்தாளர்கள். அடுத்து, தாம் போடவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு இதுபோன்ற விமர்சனங்கள் முட்டுக்கட்டையாக அமையலாம்,! இப்படி எல்லாம் சொல்லி ஒருவரை நோகடிப்பதால் உனக்கு என்ன கிடைக்கிறது.? படப்பாளிகளை ஊக்கப்படுத்தவேண்டும்.. இதுபோன்ற கடிதங்களையும் போடறானுங்களே பத்தரிக்கையிலே, அவனுங்கள சொல்லணும், என்று நல்லவர்கள் போல் வேடம் போட்டுக்கொண்டு என்னை தொலைப்பேசியில் அழைத்து ரணப்படுத்தனார்கள் சிலர் …. கணவருக்குக் குறுந்தகவல் அனுப்பி அசிங்கப் படுத்தினார்கள்.. மனம் உடைந்தேன். கொஞ்ச காலம் எழுதாமல் வாசிக்காமலும் இருந்தேன்.. (கணவரின் உத்தரவு.)

    நான் அடித்துச்சொல்லுவேன், புத்தகம் வெளியீடு செய்கிற நூற்றில் தொண்ணூற்று ஒன்பது எழுத்தாளர்களின் நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் அனைத்தும் குப்பைகளே.. வெறுத்துவிட்டேன் மலேசிய இலக்கிய உலகை. தற்செயலாக எதாவதொரு புத்தகத்தை வாங்கி வாசிக்கின்ற நிலை ஏற்பட்டால், தூக்கித் தலையைச்சுற்றி தூரமாக வீசவேண்டும் போல் இருக்கும். உப்பு சப்பில்லாத கரு.. எழுத்து நடையில் மட்டும் பூக்களின் மனம். எதுகை மோனையுடன் தமிழ் பயன்பாடு.. தமிழக சீரியல் கணக்கா குடும்பம் மற்றும் பக்கத்து வீட்டுப் பிரச்சனைகளின் ஆய்வுகள்… முடியலடா சாமி..

    மலேசிய இலக்கிய உலகம் சுய சொரிதல்கள் நிறைந்த ஓர் இயக்கம் .. `நீ என்னைச் சொரிஞ்சு விடு , நான் உன்னைச் சொரிஞ்சு விடுவேன்.’ என்கிற நியதியில் இயங்குகின்ற படைப்பளிகளின் பண்டமாற்றுத் தந்திரம் என்பது இன்று நேற்று அல்ல அது காலகாலமாக கடைப்பிடிக்கப்படுகிற யுக்தி..

    பத்திரிகை ஆசிரியர்களின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், தாமும் எழுத்தாளர் ஆகிவிடலாம் என்கிற சிந்தனை போக்கை முதலில் உடைத்து எறியவேண்டும். பத்திரிகையில் படைப்புகள் குவிந்துவிட்டால், புத்தகம் போடலாமே என்கிற ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.. மேலே பாண்டியன் குறிப்பட்டதுபோல், `யாரைப்பற்றியும் எந்த கவலை இல்லாமல்’ நாமும் புத்தகம் போட்டுவிடுவோம், இலக்கிய உலகை வாழவைப்போம், என்று சூளுரைத்து.. இதுதான் இலக்கியம் என்கிற சிந்தனையை மக்களின் மனதில் ஓடவிட்டு, இலக்கியத்தை இமயமலை அளவிற்கு வளர்த்துவிடுவோம் வாங்க..!

    வாழ்க இலக்கியம். வளர்க எழுத்தாளர்கள்..

    • July 12, 2014 at 12:54 pm

      Vanakkam Viji, muthalil “Uyir Thudippin Ithaya Oli” ithu sariyaana thalaipputhaanaa? “Uyir Thudippu” enbathe “Ithaya Oli”taane?
      Ithai naan S.M.A’vidam ketten. Arumaiyaana thalaippai ippadi vimarsippathe thappu endraar. Datuk Saravanan veru K.L.’lil “aahaa oho” endru veru thalaippai pugazhnthu vittaar. Datin Sri Dato Geethanjali G veru “aahaa Oho” endru kathaigalai pugazhnthu viddaar.
      Naan mattumalla, enggal iyakka aalosagar Dr.Sockalingam, Allyrani endri silarum kuppai endru sollividdanar. Naan naasukkaaga sonnen. Avar kathaiyai avar tharkkaaththaar. “En Kathaiyil Kathai Irukkum” endraar. Puththagaththilum achchadiththullaar. Appadiyaayin matravargal kathaigal?… Azhaiyunggal pesalaam. Enna seiya….Avarukku oru thannambikkai.

  4. ஸ்ரீவிஜி
    July 11, 2014 at 10:18 pm

    இதுபோன்ற திறனாய்வுகளை நாடுமுழுக்க எடுத்துச்செல்லுங்கள். புத்தகம் போடவேண்டுமென்று நினைப்பவர்கள் உங்களையெல்லாம் நினைத்து நடுங்கி பின்வாங்கவேண்டும். பேனா பிடிக்கின்றபோது கைகள் உதறவேண்டும்.. இலக்கியம் என்பது உட்கார்ந்து யோசித்து, தோன்றுவதையெல்லாம் பிய்த்துப் பிய்த்து சேகரித்து கொரியா, ஜப்பான், ஜெர்மன், ஃபிலிப்பீன்ஸ் என்று பிரித்துக் குவித்துக் கதைகளை வடித்து தெரிந்த தமிழ் key words களை மானாவாரியாக உபயோகித்து உட்டாலக்கடி வேலைகளையெல்லாம் செய்வது அல்ல என்கிற சிந்தனை மண்டையைக் குடையவேண்டும்..

  5. எஸ்.எம்.ஆறுமுகம்
    July 29, 2014 at 7:27 pm

    தங்கள் விமர்சனங்களும் கருத்துக்களும் என்னை போன்ற எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும். மிகவும் நன்றி.

Leave a Reply to ஸ்ரீவிஜி Cancel reply