வருங்கால வரண்ட சமுதாயம்

kulaly

1988-ஆம் ஆண்டு. ஏதோ வரலாற்று கட்டுரை என கடந்து போய் விடாதீர்கள். கொஞ்ச வருடங்களாக நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அப்போது எனக்கு 4 வயது. அதற்கு முன்பான வாழ்க்கை ஒரு மங்கலான நிழற்படம் மாதிரிதான் நினைவில் இருக்கிறது. 4 வயதிற்குப் பிறகான நினைவுகள் மிகப் பசுமையாக இருக்கின்றன.

அந்த ஆண்டில்தான் அப்பா சொந்தமாய் வாங்கியிருந்த நிலத்தில் எங்களுக்கே எங்களுக்கென ஒரு வீடு கட்டி குடிப்போயிருந்தோம். அந்த ஒரு தனிவீடு. வீட்டைச் சுற்றி நிலமும் மிக முக்கியமாக வீட்டைச் சுற்றி வேலியும் இருந்தது. எத்தனை முறை வேண்டுமென்றாலும் வீட்டைச் சுற்றி சுற்றி ஓடி வரலாம். பால்மாவு டின்களில் வரும் கரண்டிகளில் களிமண் உருண்டைகள் செய்து விளையாடலாம். மணலில் அனல் பறக்க விளையாடலாம். கோழி வளர்த்து முயல் வளர்ந்து ஆடு வளர்ந்து இரம்புத்தான், மா மரங்கள் வளர்த்து நாங்களும் வளர்ந்த அது ஓர் அழகிய நிலாக்காலம்.

இன்றைய தலைமுறையின் கற்பனையில் கூட ஒட்டிவராத ஒரு வாழ்வு அது. தரையோடு இருந்தாலும் நிலமற்ற வரிசை வீடுகள் அல்லது நீள் அடுக்கி மலிவுவிலை வீடுகளில் அவர்கள் வளர்வதே ஒரு சவாலாய் இருக்கின்றபோது மற்றவற்றை அவர்கள் எங்கே வளர்ப்பது.

அப்போது எங்கள் வீட்டில் மின்சார நீர் வசதி இல்லை. இரவில் மண்ணெண்ணை விளக்கு அல்லது காஸ் விளக்கு. கொஞ்ச காலத்திற்கு ஜெனரேட்டர். புது வீட்டிற்குக் குடிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருந்ததாக நினைவில் இருக்கிறது. கூடக் குறைய இருக்கலாம்.

அன்றைய காலக்கட்டத்தில் என் அப்பா ஓர் இடைநிலைப்பள்ளியில் தோட்டக் காரராக இருந்தார். பள்ளியிலிருந்து உடைந்த வகுப்பறை மேசைகளைக் கொண்டு வந்து எங்களுக்கென்று தனித் தனி மேசைகள் செய்து தருவார். கீழே சம்மணம் போட்டபடி அமர்ந்துதான் அந்த மேசையில் புத்தகத்தை வைத்துப் பாடங்கள் செய்ய முடியும்.

எனக்கான பாடங்கள் 4 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது எனலாம். இன்று பாலர்ப்பள்ளியின் முக்கியத்துவமும் அதைச் சார்ந்த திட்டங்களுமே எனது முதல் பணியாக இருக்கின்ற நிலையில், அன்றைய பாலர்ப்பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் நான் பாலர்ப்பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், எனது பாலர்க்கல்வி எனது வீட்டிலேயே தொடங்கியது.

என் அப்பாதான் எனது முதல் ஆசிரியர். எனக்கான முதல் பாடம் முறையாகப் பென்சில் பிடித்துக் கிறுக்குவது, வரைவது பின்தான் எழுதுவது. நான் இடக்கை பழக்கம் உள்ளவள். முறையாகப் பென்சில் பிடித்துக் கிறுக்கப் பழகவே எனக்குக் கொஞ்ச காலம் எடுத்தது. எனக்குக் கத்தரிக்கோல் பிடித்து முறையாக இன்றுவரை வெட்டத் தெரியாது. சுமாராக வெட்டப் பழகவே பல வருடங்கள் எடுத்தது. இப்படியாக 4 வயதிலிருந்து ஒவ்வொன்றாக மெல்ல பழக்கினார்.

எல்லா வேலைகளையும் அந்த மேசையின் மேல் வைத்துதான் செய்ய வேண்டும். தரையில் படுத்துக் கொண்டு, மெத்தையில் படுத்துக் கொண்டு படிப்பதெல்லாம் அப்போதெல்லாம் கூடாத பழக்கங்கள். இன்றும் என்னால் மேசை இல்லாமல் வேலை செய்ய முடியாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சும்மாவா சொன்னார்கள்.

பென்சில் பிடித்துக் கிறுக்கப் பழக்கி, பின் கோடுகள் வட்டங்கள் இன்னபிற வடிவங்கள் வரைந்து பழகியப் பின்னர் எழுத்துகள் அறியப் பழகினேன். மிக விரைவாகவே தமிழ் எழுத்துகளையும் ஆங்கில எழுத்துகளையும் எண்களையும் அறிந்துக் கொண்டேன்.

இங்கு மிக முக்கியமாக நான் பேச விரும்பியது கட்டாய வாசிப்பு. எழுத்துகளை அறிந்து கொண்டப் பின்னர் அதை மறக்காமல் இருப்பதற்கான ஒரே வழி ஒரு சில மாதங்களுக்குச் சத்தமாக எழுத்துக் கூட்டி வாசிப்பது. ஆறு வயதிற்கு முன்பதாகவே மிகச் சரளமாகத் தமிழ் நூல்களை வாசிக்கின்ற திறமை எனக்கு வந்துவிட்டது. அதன் பின் தொடக்கத்தில் கட்டாய வாசிப்பாக இருந்த பழக்கம், பின் விருப்ப வாசிப்பாக மாறத் தொடங்கியது. அதற்கேற்ப அப்பா தீனிப்போடும் கதைப் புத்தகங்களை வாங்கி வந்து தருவார். பன்னிரண்டு வயதிற்குள் கடல்புறா, பொன்னியின் செல்வன், மு.வ வின் நாவல்கள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், பாவாணர், பெருஞ்சித்திரனாரென எங்கள் வீட்டில் இருந்த எண்ணற்ற நூல்களை வாசித்திருந்தேன்.

ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் தமிழ் நாளிதழ் வாங்குவார்கள். அதில் என்ன முக்கியமாகப் பேசப்பட்டிருக்கிறது என்பதை அவசியமாக ஒவ்வொரு நாளும் அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டும். பின் கதைப்புத்தகங்கள். எல்லா மிருகங்களையும் கதை புத்தகங்கள் வழியே அறிந்து அதிசயிக்கும் மகிழ்ச்சியை வாசிப்புதான் எனக்குத் தந்திருந்தது.

இப்போதும் பெற்றோர்களைப் பார்த்தால் உங்கள் பிள்ளைகள் வாசிக்கிறார்களா என்று கேட்பேன். ஆமாம். எப்போதும் பாடப்புத்தங்களை வைத்துப் படித்துக் கொண்டே இருக்கிறார்கள் – வீட்டுப் பாடங்கள் செய்கிறார்கள் என்பார்கள். பாடப்புத்தங்கள் படிப்பதும் வீட்டுப் பாடங்கள் செய்வதும் வாசிப்பாகாது என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் நமக்கு விழிபிதுங்கி விடும். வாசிப்பு என்பது கதைப்புத்தகங்கள், நூல்கள், பத்திகளென இன்னபிறவற்றை வாசிப்பது. வீட்டுப் பாடங்கள் செய்வது வாசிப்பாகாது.

பிறகுப் பெற்றோர்களைப் பார்த்து நீங்கள் என்ன வாசிப்பீர்கள் என்று கேட்பேன். சிலர் முறைப்பார்கள். சிலர் நாளிதழ் வாசிப்பதாகச் சொல்வார்கள். இன்றைய முதல்பக்க செய்தி என்னவென்று கேட்டால் ஏதாவது சொல்லி மழுப்புவார்கள். இன்னும் சிலர் வேலைக்கே நேரம் சரியாய் இருக்கிறது பிறகு எங்கே வாசிப்பது என்பார்கள். ஆனால், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் சீரியல் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். பிள்ளைகள் படிப்பதில்லை வாசிப்பதில்லை என்ன பக்கம் பக்கமாகக் குற்றப்பத்திரிகை மட்டும் வாசிப்பார்கள்.

எப்போதும் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப் பார்க்காத பெற்றோர்கள் வாசிப்பதில்லையெனத் தங்கள் பிள்ளைகளைப் புரட்டி அடிப்பது எப்போதும் பயனளிக்கப் போவதில்லை.

இன்று வரை ஒவ்வொரு நாளும் ஒரு சில பக்கங்களை ஆவது வாசிக்காமல் நான் உறங்கப்போவதில்லை. இந்தப் பழக்கம் என் பெற்றோர்களிடமிருந்து எனக்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு வாசித்தார்கள். அதனால், நானும் வாசிக்கப் பழகினேன். இன்றுவரை தொடர்ந்து வாசிக்கிறேன்.

இன்றைய நிலையில் பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் பயிற்சி புத்தகங்கள்போல் அன்றிருந்ததா என்று எனக்குத் தெரியாது. அப்பாதான் எப்போதும் பாடங்களையும் கேள்விகளையும் கணித கேள்விகளையும் வண்ணம் தீட்டுவதற்கான படங்களையும் வரைந்து தருவார். அவரேதான் நோட்டுப் புத்தகங்களையும் உருவாக்குவார். ஆண்டிறுதியில் மாணவர்கள் பள்ளியிலேயே விட்டுச் செல்லும் பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களை எல்லாம் வீட்டிற்குக் கொண்டு வருவார். அந்த எல்லா நோட்டு புத்தகத்திலும் உள்ள பயன்படுத்தாத தாள்களைத் தனியாகப் பிரித்தெடுத்து முன்பின் மொத்தமான அட்டைகள் வைத்து நோட்டுப் புத்தகங்கள் செய்வார். அதில்தான் எங்களுக்கான பாடங்கள் வழங்கப்படும்.

இப்படியாக என்வரை என்னோடு தொடர்ந்து வரும் வாசிப்பு பழக்கம் என்பது நான்கு வயதில் என் வீட்டில்தான் தொடங்கியது. வாசிப்பு சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் எதையுமே வாசிக்க விரும்பாத கணினி விளையாட்டுகளுக்கும் கைப்பேசிகளுக்கும் அடிமையாகிப் போன ஒரு சமுதாயத்தை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்க முடியும்.

5 comments for “வருங்கால வரண்ட சமுதாயம்

  1. August 5, 2014 at 8:08 am

    நீங்கள் உங்கள் இடது கையால் எழுதப் பழகி இருந்தால் இன்னும் வேகமாக வளர்ந்திருப்பீர்கள் ..அது பழைய காலத்து முட்டாள் தனமான கொள்கை

  2. பூங்குழலி வீரன்
    August 5, 2014 at 12:40 pm

    தோழர் பத்மநாதன் அவர்களே. நீங்கள் நான் கூற வந்ததைத் தவறாக விளங்கிக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். இப்போதும் நான் இடக்கையால்தான் எழுதுகிறேன். வலக்கையால் என்னால் எழுதவே முடியாது. இடக்கையால் தொடர்ந்து எழுதப் பழகியதால்தான் தேர்வுக்குப் பதில் எழுதுகிற அளவுக்காவது என்னால் எழுத முடிந்தது. ஆனால், இன்றுவரை என்னால் விரைந்து எழுத முடியாது. பல்கலைக்கழக தேர்வுகளில் எல்லாரும் அடிக்கடி கையை உயர்த்தி கூடுதல் தாள்கள் கேட்கிற பொழுதெல்லாம் பயம் கவ்விக் கொள்ளும். குறைந்தபட்சம் நான்கு பக்கங்கள் என்றால் அதற்குமேல் நான் எழுதவே மாட்டேன். கூடுதலாக எழுதினால் நேரம் போதாது. அது ஒரு குறைபாடாக கூட இருக்கலாம். என் வீட்டில் இந்த இடக்கையால் எழுதுவதை மாற்ற வேண்டும் என்ற பிரச்சனை எப்போதும் வந்ததில்லை. அந்த வகையில் ஏதோ நான் தப்பித்தேன்.

  3. ஸ்ரீவிஜி
    August 13, 2014 at 3:44 pm

    என்னுடைய பிரச்சனை, பாடபுத்தகங்களை விடுத்து மற்ற எல்லாவற்றையும் வாசிப்பது. வாசிப்பு இருந்தது ஆனால் சரியான தேடலாக அது அமையவில்லை. சினிமா, இந்தியன் மூவி நியூஸ், ராணிமுத்து, மாலைமதி, ஆனந்தவிகடன், குமுதம் மேலும் சில மஞ்சள் பத்திரிகைகள் போன்றவற்றில் கூடுதல் ஆர்வமெடுத்து வாசிப்போம். சாப்பாடு இருக்கோ இல்லையோ, தோப்பில் ரவுக்கை, இருளில் நடந்தது என்ன? போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் நாவல்கள் கண்களில் பட்டால் போதுமே… சகோதரிகளுடன் அடி பிடி என்று சண்டை பிடித்து புத்தகத்தைக் கிழித்துக்கொண்டு படிக்கத் துவங்கிவிடுவோம்.

    பிள்ளைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் என்று பெற்றோர்கள் பேருவகை கொள்வார்கள். 🙁

    கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்ததால், சித்தப்பா அத்தை சின்னம்மா போன்றோர்களின் பொழுதுகள் பெரும்பாலும் இதுபோன்ற நூல்களில்தான் கழிந்தது. அவர்கள் வீசிய சக்கைகளை நாங்களும் முகர்வோம். கூட்டுக்குடும்பத்தின் `மைனஸ்’ இது என்று நான் சொல்வேன்..

    அந்தப்பழக்கம் எங்களுக்கும் ஒட்டிக்கொண்டது. ரமணிசந்திரன், லட்சுமி, புஷ்பாதங்கதுரை, அனுராதாரமணன், சிவசங்கரி, சுபா, பிறகு துப்பரியும் நாவல் எழுதுவாரே ஒருவர்.. இராஜேந்திரன்.?! (பெயர் தெரியல) என கொஞ்சம் `வளர்ச்சி’கண்டு, மு.வ, ந.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, சாவி, சாண்டில்யன் என பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் விரிவடைந்து இன்று வேறொரு பரிணாமத்தில் பயணிக்கத்துவங்கிவிட்டது.

    முதலில் தாக்கம். இரண்டாவது நோக்கம், இப்போது ஆக்கம். (ச்சே..வா கவிதை)

    இதில் சிறப்பு என்ன தெரியுமா குழலி ..! வாசிக்கின்றோம் இன்னமும், சபாஷ் விஜி.. 🙂

  4. valavan
    August 19, 2014 at 5:16 pm

    உண்மைதான் தோழி…….”கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்” என்று சொல்லுவார்கள்…….அது பொய் இல்லை……இன்றைய இயந்திர வாழ்கையில் யாருக்கும் படிப்பதற்கு நேரமும் இல்லை,அதில் ஆர்வமும் இல்லை ……அப்படியே, இருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதில் சிலாகிக்க முடிகிறது…….எது எப்படியோ…..வருங்கால சந்ததிகள் ‘தொடர்ந்து படிக்கும் வழக்கத்தை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற உங்களின் உயரிய கருத்து வரவேற்கத் தக்கது……வாழ்த்துக்கள்……..

  5. சசி மயூர்
    September 4, 2014 at 8:04 pm

    சிறு வயதில் புத்தகங்களை கையில் எடுத்தால் புது புது உலகங்கள் கண்ணில் தோன்றும், ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் அனுபவங்கள் புதிய பரிமாணமடையும். தற்போது மின்னனு சாதனங்கள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து அபகரித்துக்கொண்டு மூளை சலவை செய்கிறது. இரண்டு வயதிலேயே திரையை தடவத்தொடங்கி விளையாடுகிறார்கள். அவற்றில் அருந்து அவர்களை பாதுகாத்து புத்தகங்களை காதலிக்க கற்றுத்தருவது பெற்றோர்களுக்கு பெரிய சவால். நம்மிடம் வாசிப்பு இல்லையென்றால் பிள்ளைகளுக்கும் அந்த அனுபவம் கிடைக்காது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...