அ.ரெங்கசாமி: வரலாற்றைப் புனைவாக்கும் கலைஞன்

Rengasamy-1ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது.

அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர் பார்வை விசாலமானது என்பதாலும் ‘மண்புழுக்கள்’ என்ற அவரது நாவலுக்கு முதல் பரிசு (5000.00) கிடைத்ததும் , எனக்கு அறிமுகம் இல்லாத அ.ரெங்கசாமிக்கு சிறப்பு பரிசான (1000.00) கிடைத்ததும் உவப்பில்லாமல் கரித்தது.

“அப்படி என்ன இந்த ரெங்கசாமி எழுத்திட்டார்?” என மனமும் நாவும் சதா முணுமுணுத்துக்கொண்டே இருந்தன.

அந்த வாரத்தின் ஓர் இரவில், திலீப்குமார் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் மலேசியாவில் தங்கியிருந்த வீட்டில் அவர்களுடன் உரையாட வாய்ப்புக்கிடைத்தது. உடன், சண்முகசிவா மற்றும் யுவராஜன் இருந்தனர். பிரபஞ்சன் பாசிபயிர் உருண்டையைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பலகாரத்தின், மேல் பரப்பில் இருக்கும் பொரித்த மாவை பாதியளவு நீக்கிவிட்டு , கெட்டியாகிவிட்டிருந்த பாசிப்பயிரை தனித்தனியாகப் பிரித்துச் சாப்பிட்டார். என் வாழ்நாளில் அவ்வாறு அவ்வுருண்டையைச் சாப்பிட்ட ஒருவரை இந்நாள்வரை மீண்டும் கண்டதே இல்லை.

எங்கள் உரையாடல், போட்டியில் பங்குபெற்ற நாவல்கள் பக்கம் திரும்பியது. சீ.முத்துசாமி மற்றும் அ.ரெங்கசாமியின் நாவல்களின் தரம் குறித்து பேசப்பட்டன. முத்துசாமியின் மொழி சிலாகிக்கப்பட்டது. ஆனால், பெரும் வரலாறுக்கு மத்தியில் ஊர்ந்து செல்லும் கதையமைப்பைக் கொண்டதால் ரெங்கசாமியின் நாவல் மிக முக்கியமானதாகவே கருத்துகள் வைக்கப்பட்டன. ரெங்கசாமி என்ற பெயர், அவர் வயது, நாவலின் பெயர் என மூன்றுமே எனக்கு வாசிப்புக்கு உகந்ததாய் இல்லை. அப்போது நான் நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரமாக வேறு இருந்தேன். இரண்டு கை விரல்களிலும் கணக்கிட்டு நவீன இலக்கியவாதிகள் பெயர்களை மனப்பாடமாகச் சொல்லும் அளவுக்கு வாசிப்பு இருந்தது. சீ.முத்துசாமியின் மொழியும் மலேசியத் தமிழர்களின் தோட்டப்புற வாழ்வும் தமிழக நடுவர்களுக்குப் புரியவில்லை என்றும் அதனால் ரெங்கசாமிக்குப் பரிசைத்தூக்கி கொடுத்துவிட்டார்கள் என்றும் நண்பர்களோடு கிசுகிசுத்தேன்.

VB0001153இந்தக் காலக்கட்டத்தில்தான், சிறப்பு பரிசு பெற்ற அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’ எனும் நாவலும் முதல் பரிசு பெற்ற சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் எனும் நாவலும் எழுத்தாளர் சங்கம் மூலம் நூலாக்கப்பட்டு வெளியீடு கண்டன. நான் ரெங்கசாமியை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் வாடிய பயிரின் படிமம் ஒன்று மனதுக்குள் தோன்றி மறைந்தது. திலகவதி ஐ.பி.எஸ் நாவல்களை வெளியீடு செய்தார். 2005ல்தான் அவரது ‘கல்மரம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருந்தது. ‘தேராது’ என வாசித்து  நான் கிடாசிய நாவல் அது. எனவே திலகவதியின் பேச்சைக் கேட்பதைவிட ரெங்கசாமியின் உரைக்கே காத்திருந்தேன்.

ரெங்கசாமி பேசத்தொடங்கினார். தனது நாவல்களைப் பற்றி வரிசைப்படுத்த நான் வியந்தேன். பேச்சின் ஊடே அந்த வயதுக்கு மட்டுமே இருக்கும் நுட்பமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எந்த இடத்திலும் மிகை இல்லை. இலக்கியத்தை ஒட்டிய பெரிய உபதேசங்கள் இல்லை. சமூக அக்கறை மட்டுமே மிகுந்திருந்தது. “சிறுகதை எனக்கு சரியா வரல” என்ற அவர் வெளிப்படையான பகிர்வு சட்டென கவர்ந்தது. ‘சமூக அக்கறை காரணமாக எனக்கு இது வருகிறது எனவே இதை செய்கிறேன் ‘ எனும் தொணிதான்  பரவியிருந்தது பேச்சு. ரெங்கசாமி பேச்சில் ஒருவரி மட்டும் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டது. “போட்டிகள் என்னை எழுத உசுப்புச்சி…ஆனா நான் போட்டிக்குனு எழுதலங்க…”

நிகழ்ச்சி முடிந்ததும் நான் அவரை அணுகி தொலைபேசி எண்ணை அவரது நாவல் பின் அட்டையிலேயே வாங்கி கொண்டேன். அவ்வளவு எளிதில் கடந்து போய்விடக்கூடியவர் அல்ல ரெங்கசாமி எனத்தோன்றியது.  வாடிய பயிரல்ல, முற்றிய கதிர் வளைந்திருக்கிறது என்று படிமம் மாறியது. ரெங்கசாமியின் அந்த வாசகம் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்தது. போட்டியால் எழுதுவது ; போட்டிக்காக எழுதுவது என இரண்டுக்குமான பேதங்களை ஆராய்ந்து கொண்டே இருந்தேன்.

ரெங்கசாமி சொன்ன வார்த்தை மனதில் ஆழ தைத்திருந்தது. மலேசியாவில் ஒருவன் எழுத எவ்வித புறத்தூண்டுதல்களும் காரணமாய் இல்லாத வரண்ட நிலையில், போட்டி அவன் இயங்க ஒரு நெம்புகோலாக அமைகின்றது. ஆனால், போட்டியில் பங்கெடுக்கும் படைப்பாளன் அதன் பரிசுக்கு மட்டுமே குறியாய் இருந்து படைப்பில் சமரசம் செய்வானேயானால் அவன் ஒரு வணிகன் மட்டுமே. நல்ல மொழியும் சிந்தனையும் கொண்ட பல எழுத்தாளர்கள் போட்டிக்காக பொதுபுத்தியிலுள்ள நன்னெறிகளை போதிப்பதை வாசித்துள்ளேன். ரெங்கசாமியின்  நாவல்கள் யாரையோ மகிழ்விக்க எழுதப்பட்டதல்ல. அதில் வாழ்வும் வரலாறும் இணைந்திருந்தன. ஒரு நாவலை எழுதிவிட்டு ஒன்றும் செய்யாமல் பலவருடம் பாதுகாத்து வைக்கும் பக்குவம் அவரின் வயதுக்கு இருந்ததை அவரது அனுபவப் பகிர்வில் அறிய முடிந்தது. எனக்கு அதெல்லாம் இயலாத வயது. எதிலும் அவசரம்.

‘வல்லினம்’ தொடங்கியப்பின்தான் நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகத் தொலைப்பேசியில் அழைத்தேன். வல்லினத்தில் அவரது பத்திகள் வர வேண்டும் என்றும் அது அவரது வாழ்வின் அனுபவங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்தார். ‘வல்லினம்’ அச்சு இதழாக வந்த நாள்களில் அவரது பத்திகள் இடம்பெற்றன. முதல் மூன்று பத்திகள் அனுபவங்களைச் சொல்வதாகவும் அடுத்த இரண்டு கொஞ்சம் பிரச்சாரத்தன்மையிலும் அமைந்திருந்தது. வல்லினம் அச்சு இதழ் நிர்க்கவும்  இணையத்தில் நான் தொடர்ந்து அவரை எழுதச்சொல்ல சில மனத்தடைகள் இருந்தன. நவீன இலக்கியம் எனக்கு மனிதத்தைப் போதித்துக்கொண்டிருந்தது. அதில் தமிழன், தமிழனல்லாதவன் என்ற வேறுபாடே இல்லை. கலையின் மூலமாகவே மானுட அமைதி சாத்தியம் என இப்போது போலவே அப்போதும் நம்பினேன்.

இலக்கியம், கொத்தாக இருக்கும் மனிதக்கூட்டத்துக்குள் ஊடுறுவி தனி ஒருவனின் நியாயங்களைப் பேசுகிறது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் கருணை காட்டுகிறது. நியாயம், சரி, தர்மம் போன்ற சொல்லாடல்களின் அர்த்தங்களை ஆழமாகக் கேள்வி எழுப்புகிறது. நவீனத்துவம் குறித்து எனக்கு அறிமுகமான காலத்திலெல்லாம் லட்சியங்களைத் தூண்டும் வாசகங்கள் நெருங்கிவராமல் தள்ளியே நின்றன.

ரெங்கசாமி ஒரு லட்சியவாதியாக இருந்தார்.

அவரது படைப்புகள் லட்சியவாததையே பேசுகின்றன. தமிழர் வாழ்வு குறித்தும், அவர்கள் நலன் குறித்தும் ஓயாத கவலை அவர் பேச்சிலும் எழுத்திலும் இருக்கும். என்னால் அவர் ஆளுமையை அறிய முடிந்தது. அவரது சிந்தனையில் தலையிடவோ வாதிடவோ எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அவரது அனுபவத்துக்கு முன் என் வாசிப்பு மிகச்சிறியது என்றே வாலை சுருட்டி வைத்திருந்தேன். ஆனாலும் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்கினை மறக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.

Image37232011ஆம் ஆண்டு நானும் சிவாவும் தமிழகம் சென்றிருந்தோம். எங்கள் பயணத்தின் கடைசி நாளில் தமிழினி வசந்தகுமாரைச் சந்தித்தோம். வசந்தகுமார் மீதும் தமிழினி மீதும் எனக்கு மதிப்பு உண்டு. பேசிக்கொண்டிருந்தவர் ரெங்கசாமியை விசாரித்தார். அவரது லங்காட் நதிக்கரைக்குப் பின் இமையத்தியாகம் என்ற நாவலை தமிழினி பதிப்பித்துள்ள விசயத்தைச் சொன்னார். தமிழினி பதிப்பகத்தில் ஒரு நூல் வரும்போது இயல்பாகவே அதற்கு இலக்கியத்தகுதி கிடைத்துவிடும் என கேள்விப்பட்டுள்ளேன். ஒருவகையில் அவர்கள் வெளியீட்டில் வந்த நூல்கள் அதை உறுதி செய்யும் படியே இருந்தன. தமிழகத்தில் பல முன்னணி எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க மறுக்கும் வசந்தகுமார் ரெங்கசாமியின் நாவலைப் பதிப்பித்து அதை இலவசமாக அவருக்கு அனுப்பியும் வைத்தது நாவல் மேல் வசந்தகுமாருக்கு இருந்த பிடிப்புதான் என புரிந்தது.

நமக்குதான் பொதுவாகவே பக்கத்தில் உள்ளவர்களின் அருமை யாராவது சொன்னால்தானே தெரியும். மலேசியா வந்ததும் அந்த நாவலை வாசித்தேன். ரெங்கசாமியின் மேல் இருந்த மரியாதை கூடிவிட்டிருந்தது. அடுத்த வாரமே அவரைக் காணச் சென்றேன்.

அ.ரெங்கசாமியைச் சந்தித்தபோதுதான் அவர் புதிதாக ஒரு நூல் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. அப்போது உச்சத்தில் இருந்த ஈழபோர் குறித்த நிகழ்கால சம்பவங்கள் மலேசிய இளைஞர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர, அதன் தொடக்கக் கட்ட வரலாறை அறியாமல் இருந்தனர். இளைஞர்கள் படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் சின்னஞ்சிறிய நூல் ஒன்றை கையெழுத்துப்பிரதியாக தானே எழுதி வைத்திருந்தார். நான் அதை நூலாக்கித் தருவதென முடிவெடுத்தேன்.

நூலின் அடிப்படை வேலைகள் முடிந்தபின்பு வழக்கறிஞர் பசுபதி அவர்களைச் சந்தித்தேன். நூலைக் கொடுத்தேன். சில நாள்களில் என்னை அழைத்தவர் செம்பருத்தி பதிப்பகத்திலேயே அந்த நூலை இலவச பதிப்பாகப் போடலாம் என்றார். ‘விடிந்தது ஈழம்’ எனும் தலைப்பில் அந்த 64 பக்க நூல் அச்சானது. ரெங்கசாமி அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தன் நூலை வழக்கறிஞர் பசுபதியே வெளியீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். என் திட்டம் இன்னும் விரிவடையத்தொடங்கியது.

அவ்வருடத்துக்கான கலை இலக்கிய விழாவை வரலாறை முன்வைத்தே நடத்தலாம் என தோன்றியது. ‘விடிந்தது ஈழம்’ புத்தகம் மட்டுமல்லாமல் தமிழினி பதிப்பில் வந்து வெளியீடு காணாமல் இருந்த ‘இமையத்தியாகம்’ நாவலையும் வெளியிட திட்டமிட்டேன். ‘கலை இலக்கிய விழா 3′ 2011ல் வரலாற்றை மீட்டுணர்தல் எனும் தலைப்பின் கீழ் நடந்தது. அதில் ‘இமையத்தியாகம்’ மற்றும் ‘விடிந்தது ஈழம்’ ஆகிய இரு நூல்களும் வெளியீடு கண்டன. இதே நிகழ்வில்தான் முத்தம்மாள் பழனிசாமியும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ‘நாடு விட்டு நாடு’ என்ற அவரின் சுயவரலாற்று நூல் விரிவான பார்வைக்குச் சென்றது. ஏற்கனவே இவர்கள் மலேசியப் புனைவு உலகில் சஞ்சரித்தாலும் இளம் தலைமுறையின் மூலமாக மீண்டும் மறுகண்டெடுப்பு செய்யப்படுவதும் அவர்கள் ஆளுமை/ படைப்பு குறித்து பேசுவதும் அபூர்வமாக நடக்கக் கூடியதே. வல்லினம் அதை செய்தது.

இதற்கிடையில் ரங்கசாமியின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்துவது , இன்னும் அவரின் உண்மையான சமூகப் பணியைப் பொதுவில்  அறிய எப்படிப் பகர்வது என்ற குழப்பம் இருந்தது. அதற்கான வாய்ப்பை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன். வல்லினம் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் லுனாஸில் சுவாமி பிரம்மானந்தாவை மையமாக வைத்து இயங்கும் ‘நவீன கள’ நண்பர்களும் தைப்பிங்கில் சந்திக்கலாம் என 2010 நவம்பரில் முடிவெடுத்து பயணமானோம். நான் அந்த நிகழ்வில் ரெங்கசாமி அவர்களையும் பேச வைக்கலாம் என விரும்பினேன். எங்களுடன் வர அனுமதி கேட்டேன்.

renga-03கோலாலம்பூரில் இருந்து 4 மணி நேர பயணம். முற்றிலும் இளைஞர் கூட்டம். எந்த நேரமும் குதூகலம் ததும்பும் பேச்சுகள். வருவாரா என சந்தேகமாகவே இருந்தது. மறுநாள் எங்களுடன் வருவதாகச் சம்மதம் கொடுத்தார். இரண்டு காரில் எங்கள் தைப்பிங் பயணம் தொடங்கியது. பல்வேறு குதூகல நடவடிக்கைகளுடன் இலக்கியமும் பேசினோம். இருநாள் தங்குவதென முடிவானதில் இரண்டாவது நாள் காலையில் தைப்பிங்கில் இருந்த முருகன் ஆலயத்தில் ரெங்கசாமியைப் பேச வைத்தோம். பேசினார். விரிவாகப் பேசினார். அவரது ஒவ்வொரு நாவல் உருவான பின்னணியை விளக்கிக் கூறினார். புதிதாக ரெங்கசாமியை அறிந்தவர்கள் அவர் ஆளுமையைக் கண்டு வியந்தனர். எனக்கும் மகிழ்ச்சி.

அப்போது அவருக்கு 79 வயது இருக்கும். எல்லா அமர்வுகளிலும் ஆர்வமாகக் கலந்துகொண்டார். எங்கள் குதூகலங்களை இரசித்தார். உணவில் அதிகக் கட்டுப்பாடு. அவர் துணைவியாரும் அடிக்கடி  தொலைப்பேசியில் அழைத்து அவர் நலம் விசாரித்தார். முதுமை காதல்தான் எத்தனை அழகானது…

ரெங்கசாமி போன்ற எழுத்தாளர்கள் வாழ்வின் அனுபவம் மட்டும் அல்லாமல் சமூக வரலாற்றையும் நுணுக்கமாகப் பேசக்கூடியவர்கள். சமூகத்தை நுட்பமாக கவனிக்கக்கூடியவர்கள். அதன் மாற்றத்துக்குச் செயல்படக்கூடியவர்கள். எஸ்.பி.எம் பாடத்தில் தமிழ் இலக்கியம் எடுப்பதில் சிக்கல் என தெரிந்தவுடன் 79ஆவது வயதிலும் வீடு வீடாகச் சென்று தமிழ்ப்பிள்ளைகளை தமிழ் இலக்கியம் எடுத்து கற்க ஊக்குவித்தவர். அவர் செயல்பாடுகளை கவனமாக அவதானிக்கும் நான் பல தருணங்களில் வெட்கியுள்ளேன். எழுத்துடன் முடித்துக்கொள்ளும் அறச்சீற்றங்கள் பல சமயம் அரைச்சீற்றங்களாகிவிடும் கலைஞர்கள் மத்தியில் ரெங்கசாமி அமைதியாகத் தன் பணிகளைச் செய்கிறார். ‘தமிழ், இனம்’ என பேசும் போலிகளுக்கு மத்தியில் ரெங்கசாமி உண்மையான சமூகப்பணியாளராகவே என் முன் நின்றார்.

ரெங்கசாமியின் உரைக்குப் பின்னர், அவ்வப்போதைய எனது சில விளக்கங்களுக்குப் பின்னர் சுவாமி பிரம்மானந்தா மெதுவாக என்னிடம் ஒன்றைக் கூறினார். அவர் பேச்சு தாளமுடியாத மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. ரெங்கசாமியை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது வீண் போகவில்லை என நிம்மதியடைந்தேன்.

ஆனால் அன்று இரவு வல்லினம் நண்பர்கள் குழுவில் கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டது. நான் கொஞ்சம் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

அன்று இரவு சண்முகசிவா அழைத்தார். “நீ கொஞ்ச நாளைக்கு யாரையும் சந்திக்காம இரேன்…” என்றார். அது என்னை அமைதியாக்கும் என்பதும் வல்லினத்தில் சிக்கல் வராது என்பதும் அவர் நம்பிக்கை. “இருக்கேன் அப்படினா ஒரு வீடியோ காமிரா வாங்கி தாங்க என்றேன்…”. வரம் கொடுக்கும் சாமியின் தலையில் கைவைப்பது நமது பழக்கம் அல்லாவா? “ஏன்” என்றார்.

“ரெங்கசாமி தைப்பிங்கில் பேசிய விதம் ரொம்ப நல்லா இருந்துச்சி… மீண்டும் அவர பேச வச்சி ஆவணப்படுத்தப்போறேன்… அதுக்கு கூட்டம்வேண்டாம். சிவா பெரியண்ணன் இருக்காரு. ரெண்டு பேரு செஞ்சிடுவோம்…” சண்முகசிவா சிரித்தார். “செயல்படாம உன்னால வாழ முடியாது… நீ சோர்வா இருந்தா என்னாலயும் பார்க்க முடியாது… எவ்வளவு வேணும்” என்றார்.

“1500 வெள்ளி…”

உண்மையில் ஆளுமைகளை ஆவணப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு பெரும் மனச்சோர்விலிருந்து துளிர்த்ததுதான். மனச்சோர்வினை நான் மௌனித்தோ, தனிமைபடுத்தியோ எதிர்க்கொள்வதில்லை. இன்னும் தீவிரமாக இயங்குவதே சோர்வை நீக்கும் ஆயுதம்.

சுவாமி பிரமானந்தா தன் முடிவை பின்னர் பொதுவில் சொன்னார். ஒவ்வொரு வருடமும் சுவாமியின் தியான ஆசிரமம் மூலம் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை இம்முறை இலக்கியத்துக்காக அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படும் என்பதுதான் அது. ரெங்கசாமியின் முகத்தில் பெரிதாக சலனம் இல்லை. அவை முகத்தின் அனுபவம் சொல்லும் கோடுகளிலும் மடிப்புகளிலும் மறைந்து கிடந்தது.

renga-021குறிப்பிட்ட நாளில் நானும் விருது வழங்கும் நிகழ்வுக்கு நண்பர்களுடன் சென்றேன். ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ எனும் நாவல் அந்த நிகழ்வில் வெளியீடு கண்டது. அந்த நாவல் குறித்து பேசும் பொறுப்பு சுவாமியால் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் அந்நாவல் குறித்து விரிவாகவே பேசினேன். அதன் எழுத்து வடிவம்: http://vallinam.com.my/navin/?p=706

விருதுகள் ஒரு கலைஞனை ஊக்கமூட்டுபவைதான். ஆனால் யார்? எதற்கு? எதனால்? ஒரு விருதை வழங்குகிறார்கள் என்பதே முக்கியம். விருதுகள் பொதுவாக நிறுவனமயமாக்கப் பட்டுள்ளன.

மலேசியாவில் எனக்குத் தெரிந்து தமிழ் இயக்கங்கள் எதுவும் நேர்மையான முறையில் அல்லது தெளிவான முறையில் விருதுகள் வழங்குவதாக நினைவில் இல்லை. விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பும் கூடுகிறது. சில சமயம் தொடர்ச்சியாக யார் பெருகிறார்கள் என்பதும் அதன் தகுதியை அதிகரிக்கிறது.

அதுதான் அ.ரெங்கசாமி அவர்களுக்குக் கிடைத்த முதல் விருது. அப்போது அவருக்கு வயது 80-ஜை நெருங்குகிறது.

சுவாமி மிக நேர்த்தியாக விருது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். சண்முகசிவாவிடமும் சுவாமியிடமும் பேசும்போது பல சமயங்களில் ஒரு குழப்பம் வரும். சண்முகசிவா ஆன்மிகமும் சுவாமி இலக்கியமும் பேசுவார்கள். இருவர் பேச்சுக்கு நடுவிலும் நுட்பமாக இழையோடி இருப்பது பேரன்பாக இருக்கும்.

***
அ.ரெங்கசாமியின் வாழ்வை அவர் வாய் வழியாகவே ஆவணப்படுத்தும் நடவடிக்கைக்காக முதன் முறையாக சிவாவுடன் பந்திங் போன அனுபவம் இனிமையானது. சில தொழில்நுட்ப கோளாறினால், அந்த ஆவணப்படத்தை பயன்படுத்த முடியாமல் போயிருந்தாலும் முதல் அனுபவம் என்பதால் ஆர்வமாகவே இருந்தது. கூடுதலாக எங்களுடன் சிங்கை இளங்கோவனும் வந்திருந்தார்.

சிங்கை இளங்கோவன் மாற்று வரலாறுகளை ஆழமாக ஆராய்பவர். அவரும் ரெங்கசாமியும் மேற்கொண்ட உரையாடல் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. இளங்கோவன், ரெங்கசாமியை

அதிகம் இரசித்து உரையாடினார். ஆவணப்படம் முடிவுற்றதும் அவர் சொன்ன / வாழ்ந்த இடங்களைப் பார்க்கப் புறப்பட்டோம். தோட்டங்களில் புகுந்தோம். அவர் அனுபவத்தில் சொன்ன கோயில்களை நேரில் கண்டோம். ஒரு சுவாரியமான அனுபவத்தில் பங்குபெற்றுள்ளது என்பதைத்தவிர அந்தக்கோயிலில் தனிச்சிறப்பு எதுவும் இல்லை.

அனுபவத்துடன் உடன் வந்த எளிய ஒன்று எப்படியோ வரலாற்றில் ஒரு காதாபாத்திரமாக மாறிவிடுகிறது. சாதாரண கல்லில் செதுக்கப்படும் எழுத்து பல ஆண்டுகள் கழித்து,  வரலாற்று பொக்கிஷமாக மாறும் அதிசயம் போல. ஓர் ஆளுமை விளையாடிய, அடிவாங்கிய, குளித்த, படுத்துறங்கிய ஒவ்வொன்றும் பின்னர் காட்சிப்பொருளாகிவிடுகிறது. வரலாற்றில் தோய்ந்த ஒவ்வொரு அசைவும் வருங்காலத்தில் ஓர் உயிருள்ள கனவாகிவிடுகிறது. ரெங்கசாமியின் வாழ்வில் புகுந்துவிட்ட மண்சாலை கூட அவ்வாறானதொரு உணர்வைதான் கொடுத்தது.

புகைப்படங்கள் எடுத்தப்பின்னர் ரெங்கசாமி தனது உறவினர் வைத்துள்ள கள் கடையைச் சுட்டிக்காட்டினார். அவருக்குக் கள் அருந்தும் பழக்கம் இல்லை. ஆனால் அழைத்ததும் உடன் வந்தார். நான் கம்பத்தில் இருந்தபோது கள் அருந்தியதுண்டு. ஒரு மரத்துக்கள் குறைவான அளவில் கிடைத்தாலும் புளிக்கும். கொஞ்சமாய் இனிப்பிருக்கும். கோலாலம்பூருக்கு வந்ததிலிருந்து அது குறித்து யோசித்ததில்லை. ஆனால் பந்திங் கள்ளுக்கு பேர் போன இடம் என்பதால் அமர்ந்தோம்.

அவ்விடத்தை இன்றும் மறக்க முடியாது. விஸ்தாரமான பகுதி. ஆங்காங்கு மரங்கள். மரங்களுக்குக் கீழ் மேசைகள். கள் அருந்த ஏகாந்தமான இடம். ஆனால், அது ஒரு மரத்துக்கள் இல்லை என சுவையில் புரிந்தது. இருந்தாலும் கொஞ்சம் குடித்தேன். மற்றபடி எனக்கு

விருப்பமான உடும்பிறைச்சியைக் காலி செய்தேன். அந்த மாலைவேளையில் வெட்டவெளியில் கள்ளின் மிதமான போதையுடன் இளங்கோவன், ரெங்கசாமி போன்ற ஆளுமைகளுடன் அமர்ந்து இலக்கியம் பேசிய கணம் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.ஆனால், ரெங்கசாமி போன்ற ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கும் ஒருவர் எவ்வித மனத்தடைகளும் இல்லாமல் , வயது பேதம் பாராமல் உடனிருந்து உரையாடும் பக்குவம் ஆச்சரியமானது!

தொழில்நுட்ப கோளாறினால், ரெங்கசாமி அவர்களை மீண்டும் ஆவணப்படத்துக்காகப் பதிவு செய்யலாம் என முடிவானது. இம்முறை சிவா பெரியண்ணன் கொஞ்சம் யோசித்தே திட்டமிட்டார். “செம்பருத்தியில் பணியாற்றும் பிரசன்னாவின் உதவியை நாடினால் என்ன?” என்றுக் கேட்டார்.

பிரசன்னா தெளிவானவர். வேலைகள் நேர்த்தி. ஈழ இளைஞரான அவருக்கு தனித்த அரசியல் பார்வை இருந்தது. அரசியல் பார்வை இல்லாமல் கூலிக்காக வேலை செய்பவர்களிடம் இணைந்து செயல்படுவது சிரமம். அவர்களுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியாது. கலை, இலக்கிய விழாவில் வெளியீடு காணப்போகும் ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் பிரசன்னாவின் கைவண்ணம்தான். இந்தச் சிரமமான பணியைச் செய்தவருக்கு அப்போது தருவதற்கு என்னிடம் பணம் இல்லை. அவரும் அதைப்பற்றி ஒருவார்த்தைக் கூட கேட்டுக்கொள்ளாமல் சண்முகசிவாவினுடைய ஆவணப்படத்தையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார். கடைசியில் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க அவசரமாக 300 ரிங்கிட் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். அதையும் முதலில் வாங்க மறுத்தார். வாங்குவதற்கு மனமில்லாத நண்பர்களும் கொடுப்பதற்குப் பணமில்லாத சூழலையும் இயற்கை தேவை கருதி எப்படியோ இணைத்துவிடுகிறது.

இரண்டாவது முறை ரெங்கசாமியை நேர்காணல் செய்தபோதுதான் அவர் தன் வாழ்வை எழுத்தாக மாற்றினால் என்ன என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்தேன். அப்போது அவருக்கும் அந்தத்திட்டம் இருந்தது. நூல் எப்படி வரவேண்டும் என சில முன் திட்டங்களைக் கூறினேன். நாவல் வடிவில் செல்லக்கூடிய சுயவரலாறு ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறையும் விளக்கவேண்டும் என்றேன். ரெங்கசாமிக்கு எல்லாம் புரிந்தது. தான் எழுதுவதாகக் கூறினார். அச்சு செலவுகள் பற்றி விசாரித்தார். வல்லினம் பதிப்பிக்கும் என்றேன்.

அவருக்கு அதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அவர் சுயவரலாறு உருபெற நான் காட்டிய தீவிரத்தில் ஒருநாள் அமரவைத்து, “முன்னமே எல்லாத்தையும் பேசி முடிவு செஞ்சிக்குவோம்” என்றார். நான் “என்ன?” என்பதுபோல பார்த்தேன். “இந்த நூலுக்கு நான் எவ்வளவு பணம் தரணும்?” என்றார். நீங்கள் பணம் தர வேண்டாம். “நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுப்போம்” என்றேன். அவருக்கு மேலும் குழம்பியிருக்க வேண்டும். “எல்லா செலவுகளையும் நீங்களே ஏத்துக்குவீங்களா?” என்றார். “ஒரு பதிப்பகத்தின் வேலை செலவை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல… விற்ற நூலுக்கு ராயல்டி தருவதும்தான்” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி. தன்வாழ்நாளில் நிச்சயம் எழுத்துக்காக ராயல்டி வாங்கியிருக்கவே மாட்டார்.

கடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. அதில் ஒரு நேர்த்தி இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர்  கற்க வேண்டிய பல ஒழுங்குகளை ரெங்கசாமி கொண்டிருக்கிறார்.

முதலாவது, காலம் தவறாமை. சொன்ன நேரத்தில் ஒரு படைப்பை அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை ஓர் இளம் எழுத்தாளர் வல்லினத்தில் தொடர் ஒன்று எழுதிக்கொண்டிருந்தார். நூலாக வர வேண்டிய தொடர் அது. இன்னும் இரு கட்டுரைகள் கொடுத்துவிட்டால் நான் அதை நூலாகத்தொகுத்து இருப்பேன். கட்டுரையைக் கேட்கும் போதெல்லாம் “நான் கொஞ்சம் ஒழுங்கு இல்லாதவள் நவீன்.. கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன்” என சிரிப்பார். எனக்கு அதற்கு மேல் அவருடனான எவ்வித இலக்கியத் தொடர்பும் சாத்தியப்படாது என எண்ணி முற்றிலுமாய் விலகிவிட்டேன். ‘கலைஞன் ஒழுங்கில்லாமல் இருப்பான்’ என பொய்யான ஒரு தோற்றம் தொடர்ந்து சிலரால் பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கலைஞன் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பான். ஆனால், அவன் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காமல் இருப்பதே தன் கலையின் தீவிரத்தால்தான். தன் கைவசப்பட்ட கலையிலும் தீவிரம் இல்லாதவன் கலைஞன் அல்ல. சோம்பேறி…

இரண்டாவது செய்யும் பணியில் நேர்த்தி. ‘காதல்’ இதழில் ஆசிரியராக இருந்தது தொடங்கி, இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் தங்கள் படைப்புகளை ஒரு துண்டுதாளில் எழுதிக்கொடுத்துள்ளனர். அவசரமான பணிகளில் இருக்கும் போது “தொ என் கவிதை” என கசங்கிய தாளை நீட்டுவார்கள். நான் அதை எடுத்துப்பத்திரப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நான் அவர்கள் படைப்புகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு வரும். உண்மையில் இவர்கள்தான் தங்கள் படைப்புகளை மதிக்கவில்லை. இதழ்கள் படைப்புகளைக் கொட்டும் குப்பைத்தொட்டி என்றும் இதழாசிரியர்கள் படைப்புக்காக கையேந்தும் பிச்சைக்காரர்கள் என்றும் இவர்களுக்கு நினைப்பு. ரெங்கசாமி நாவலின் கடைசி சில அத்தியாயங்களை தட்டச்சு செய்ய உதவிய நூலகவியலாளர் விஜயலட்சுமி உண்மையில் ஆச்சரியப்பட்டு போனார். “என்ன அவர் வேலை இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. முறையாக கெட்டி அட்டை போடப்பட்டு, பக்க எண்கள் இடப்பட்டு, முறையாக பைண்டிங் செய்யப்பட்டு…” என அடுக்கினார். “இதுபோன்ற கையெழுத்துப்பிரதிகளை நூலகத்தில் சேமிக்க வேண்டும்” என்றார். பதிப்புக்கு எவ்வித சிக்கலும் தராததாக இருந்தது ரெங்கசாமியில் எழுத்து.

நேர நிர்வாகிப்பு ரெங்கசாமியிடம் இவ்வயதிலும் நான் பார்த்து வியக்கும் விசயம். பொதுவாகவே காலையிலேயே விழித்துவிடுவார். நடந்துசென்றுதான் நாளிதழ் வாங்குவார். மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம். ஞாயிறுகளில் அவரது இயக்கம் சார்ந்த பொதுப்பணிகள். எஞ்சிய நேரங்களில் எல்லாம் எழுத்து வாசிப்பு இப்படி போகிறது அவர் வாழ்வு. இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும்,  வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்திரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள்’ வாங்கி விடுவோம்.

ஆய்வு மனமும் ரெங்கசாமியிடன் நான் பார்க்கும் மிகப்பெரிய ஆற்றல். எந்த ஒன்றையும் மிக விரிவாக ஆராய்ந்து, கள ஆய்வு செய்தப்பிறகே எழுத்தாக்குகிறார். அவரது கருத்தோடு நமக்கு மாற்றுக்கருத்து இருக்குமே தவிர, அவர் சொன்ன கருத்தில் அடிப்படை பிழை இருக்காது. அவரது அனைத்து நாவல்களுமே அவ்வாறு எழுதப்படுபவைதான். இதுவும் இளம் தலைமுறை கற்க வேண்டிய பாடம்தான். இன்று இணையம் நம் கைவசம் இருக்கிறது. எந்தத் தகவலையும் எளிதில் பெற முடியும். ஆனால், உழைப்பதில் மெத்தனப்போக்கு நம்மிடம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஓர் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் நம்மிடமே  தேடலும் உழைப்பும் சேகரிப்பும் இல்லையென்றால் யார் இச்சமூகத்தை முன்னெடுப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாத எழுத்தாளன்  காலத்தால் காணாமல் போய்விடுவான்.

சமூக, அரசியல் விழிப்புணர்வு! ரெங்கசாமியிடம் தொடக்கம் முதலே உள்ள குணம் இது. அவர் தான் சார்ந்த சமூகத்தை எப்போதும் உற்று கவனித்தபடி இருக்கிறார். அரசியல் சூழலைக் கணிக்கிறார். அரசு திட்டங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்கிறார். யோசிப்பது மட்டுமல்லாமல் அதற்காக தன் இளமை காலம் தொட்டே உழைக்கவும் செய்திருக்கிறார். இந்தக் கவலையே நமது படைப்புகளை சமூகம் நோக்கி கொண்டுச் சேர்க்கும். அது எவ்வித கலை வடிவமாக இருந்தாலும் அதில் அழுத்தமான ஒரு சமூக பார்வை இழையோடியிருக்கும். உலக இலக்கியங்களில் முக்கியமான சிறுகதைகளாகச் சொல்லப்படுபவை சமூக சிக்கல்களையும் அதனுடன் பிணைந்த தனிமனித சிக்கல்களையும் சொல்பவைதான். வெற்று கற்பனாவாதமும் ‘ஜாலி இலக்கியமும்’ ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எப்போதுமே ஆபத்தானது.

நிதானம். இது அவரது வயதுக்கே உரியது . தொடக்கத்தில் நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவரது சுயவரலாற்றை வாசித்தப்பின் அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆயுதமாகவே கடைப்பிடித்து வந்துள்ளார் என்பது புரிந்தது. வாழ்வில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் அவர் அதைதான் கடைப்பிடிக்கிறார். தன் படைப்புகளை முன்னிலை படுத்த அவர் எப்போதும் முயன்றதில்லை. அது இயல்பாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் என்னென்னவோ இலக்கிய மாநாடுகளும் , சுற்றுலா பயணங்களும், மேடைகளில் இலக்கிய ஆர்ப்பாட்டகளும் நடந்த காலக்கட்டத்தில் எல்லாம், ரெங்கசாமி எனும் ஒருவர் இருந்த இடம் தெரியாது. அவர் தன் பணியை அமைதியாவே செய்துக்கொண்டிருந்தார். முழுக்கவும் தனது ஆற்றலை தான் நம்பிய புனைவுக்கு மட்டுமே செலவு செய்தார். நாளை அவர் இல்லாத சூழலிலும் அவர் சிந்தனைகள் நூல் மூலமாக மக்களிடம் தொடர்ந்து இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ‘தமிழினி’ போன்ற பதிப்பகங்கள் தேடி வந்து நூல் பிரசுரித்த அனுபவம் எல்லாம் ரெங்கசாமி, முத்தம்மாள் பழனிசாமி போன்ற ஆளுமைகளுக்கே வாய்த்துள்ளது. இவர்கள் எந்த இயக்கங்களிலும் இல்லை. எந்த விருதின் பின்னாலும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதனாலேயே உண்மையான இலக்கிய அங்கீகாரம் இவர்களைத் தேடி வருகிறது. பொய்மையிலிருந்து விலகி நின்றாலே உண்மையின் ஒளி நம்மீது படும் போல…

அ.ரெங்கசாமி என்பவர் உண்மையில் இன்றைய இளம் தலைமுறை பார்த்து, வாசித்து, உணர்ந்து கற்க வேண்டிய ஆளுமைதான். அவரது வாழ்வு நிறைவானது. அவர் விரும்பிய விடயங்களை அவர் தன் வாழ்நாளில் செய்து முடித்துள்ளார். ஓர் எழுத்தாளனுக்கு எத்தனை அமைச்சர்களைத் தெரியும், எத்தனை இடங்களுக்குச் சுற்றுப்பயணம் போயிருக்கிறான், எவ்வளவு பணம் சேமிப்பில் வைத்திருக்கிறான், யார் யாருடன் எல்லாம் நெருக்கம், எந்தெந்த மாநாடுகளில் எல்லாம் பேசியுள்ளான், என்னென்ன விருதுகளை வாங்கியுள்ளான் என்பதெல்லாம் தகுதிகள் அல்ல. அவன் தன் வாழ்நாளில் எழுத்தின் மூலம் செய்ய வேண்டிய பணிகளையும் அதற்கான உழைப்பையும் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளானா? தான் இயங்கிய/ நம்பிய கலையை ஓரளவாவது தன் வாழ்நாளில் முன்நகர்த்த முயன்றானா ? என்பதே அடிப்படை கேள்வி. இந்தக்கேள்வியை இலக்கிய நீதிபதிகள் யாரும் நம்மை நோக்கி கேட்கப்போவதில்லை. நாமே நமக்குள் கேட்டுக்கொண்டு உண்மையாக பதில் தர வேண்டியுள்ளது.

***

cover copyஅ.ரெங்கசாமி அவர்களின் ‘விடிந்தது ஈழம்’ வரலாற்று நூலை செம்பருத்தி பதிப்பில் இலவசமாகக் கொண்டுச்செல்ல அதன் பணிகளைச் செய்தபோது எனக்கும் அவருக்கும் மொழி சார்ந்த விடயத்தில்தான் கொஞ்சம் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. கிரந்த எழுத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கவே செய்தன. பாக்கிஸ்தான் என்பதை பாக்கிசுத்தான் என்றே எழுதினார். அதேபோல எம்.ஜி.ஆர் எனும் பெயரை எம்.சி. ஆர் என எழுதினார். எனக்கு இதில் கொஞ்சம் சிக்கல் இருந்தாலும் அதை பெரும் குறையாகப் பார்க்கவும் முடியவில்லை. இலங்கை எழுத்தாளர்கள் பலரும் இன்னமும் இவ்வாறான எழுத்து முறையைத்தான் பயன்படுத்துகின்றனர். ஜப்பான் என்பதை யப்பான் என எழுதுவதை நானே பலமுறை வாசித்துள்ளேன். ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்குமே தவிர வலுக்கட்டாயம் இருக்காது. வேறெந்த அறிஞர்களின் கூற்றைவிடவும் நமது உச்சரிப்பு முறையே ஒரு சொல் உருவாவதற்கான நீதிபதியாக உள்ளது. எந்த இலக்கண நூலும் இலக்கியம் மற்றும் மனிதர்களின் பேச்சு வழக்கை கணக்கில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்குமே தவிர இலக்கணத்தை அடிப்படையாக வைத்து மொழியும் இலக்கியமும் பிறக்கவில்லை என்பது உறுதி.

‘காகம்’ என்ற சொல்லில் இருக்கும் இரண்டாவது ‘க’ வை நாம் வழக்கமான முறையில் உச்சரிப்பதில்லை. அதை நமக்குச் சொல்லிக்கொடுத்தது யார்? எதற்கும் சிரமப்பட்டு ‘காகம்’ என்ற சொல்லில் உள்ள இரண்டு ‘க’வையும் ஒரே ஓசையில் ஒலிக்க முயன்று பார்ப்போம். நிச்சயம் அது நம் நாவில் ஒட்டாது . காரணம் நாம் இலக்கணம் கற்றதால் அல்ல. தமிழை அடிப்படையாகக் கொண்டு சாமானிய மனிதன் ஒவ்வொருவருக்கும் இயல்பாக அவன் மூளையில் பதிவான விடயம் அது. மேற்சொன்ன ‘காகம்’ உதாரணத்தின் அடிப்படையில் இச்சொல்லைச் சொல்லிப்பார்க்கலாம். ஜெயமோகன் இதுகுறித்து சொல்லியதை கவனித்தேன்.

பீசுமர் – பீஷ்மர்

முதல் சொல்லில் ‘ஷ்’க்குப் பதிலாக ‘சு’ சேர்க்கப்பட்டதால் ‘பீ‘ என்ற அதற்கு முந்தைய எழுத்தின் தடித்த ஓசையும்  அவ்வாறு ஒலிகாமல் வழக்கமான ஓசையில் அடங்கிவிடுகிறது. இப்போது ஒரு கேள்வி எழலாம். “அப்படியானால், கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவரை வரவேற்கிறீர்களா?”  என கோபமும் நண்பர்களுக்கு வரலாம்.    முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்வோம். காலச்சுவடு இதழில் வந்த கட்டுரையில் கிரந்தம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

“கிரந்தம் என்பது வடமொழியை எழுதத் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு எழுத்து முறை (லிபி – வரிவடிவம்). முற்காலப் பல்லவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்ததாக அறிஞர்கள் கருதும் இந்த எழுத்து முறை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் தரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் உள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள், தற்காலத் தமிழ், முற்காலத் தமிழ் வட்டெழுத்துகள் எனப் பல்வேறு கலப்பு முறைகளில் காணப்படுகின்றன. ” (காலச்சுவடு 132).  இதில் ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிரந்தம் சமஸ்கிருத எழுத்து அல்ல. மாறாக சமஸ்கிருதத்தில் உள்ள ஓசைகளை தமிழில் பயன்படுத்த தமிழ் எழுத்துருவுக்கு ஏற்ப தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒலி வடிவம். அது வடமொழி அல்ல.

அடுத்தப்பிரச்னை இன்று தமிழில் அதைப்பயன்படுத்தலாமா என்பதுதான். நான் முடிந்தவரை கிரந்த எழுத்துகளை தவிர்த்தே படைப்புகளை உருவாக்குகிறேன். நல்ல தமிழ்ச் சொற்களை உபயோகிக்க எத்தனிக்கிறேன். ஆனால், ஊர்களின் பெயர்களையும் அறிமுகமான நபர்களின் பெயர்களையும் அவர்கள் உருவாக்கியுள்ள ஓசையின் அடிப்படையில் எழுதவே எனக்கு எண்ணமுண்டு. அதற்கான வசதி பிற மொழிகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கான வசதிகொண்ட தமிழில் அதை முறையே பயன்படுத்துவது தவறல்ல என்றே நினைக்கிறேன்.

இந்த விடயத்தில் ரெங்கசாமி அவர்கள் ஓரளவு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். அவர் ஊர்களின்/ நபர்களின் பெயர்களை கிரந்தம் இல்லாமல் எழுத முயல்கிறாரே தவிர தமிழ்ப்படுத்த முயலவில்லை. ஆனால் சில ‘தமிழ் வெறியர்கள்’ (அவர்கள் அவ்வாறுதான் அழைத்துக்கொள்கின்றனர்) நிறுவனங்களின் பெயர்களையே தமிழ்ப்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக Microsoft  என்பதை மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என எப்படியும் தமிழில் எழுதலாம். ஆனால் “நுணுக்கு மென்மை” என வலிந்து எழுதினால் அது அந்த நிறுவனத்தைக் குறிக்கப்போவதில்லை. நமது சுய இன்பத்துக்காக வேண்டுமானால் அதை செய்துக்கொள்ளலாம். டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகின்றது என வாசித்துள்ளேன். எனவே தாராளமாக நாமும் அப்பெயரை பயன்படுத்தலாம்.

பெயரையும் ஊரையும் எழுதும் போது கிரந்தத்தைப் பயன்படுத்தலாம் என பெருஞ்சித்தனார் ஒப்புக்கொண்டபோதும் அதற்காக எழுந்த எதிர்ப்புகளை மறுப்பதற்கில்லை. இவ்விடத்தில் இன்னுமொரு சிக்கலும் உள்ளது. ரெங்கசாமி உட்பட பலர் எழுதும் புனைவுகளில் மிக எளிதாக தெலுங்கு, மலையாளம் போன்ற சில வேற்றுமொழிகள் சேர்ந்துவிடுகின்றன. ஆனால், அவையும் தமிழில் இருந்து உருவானவையே என்பது இவர்கள் வாதமாக உள்ளது. நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட திராவிட மொழியை ஆராய்ந்த மொழி ஆய்வாளர்கள் ஆதி திராவிடம் எனும் ஒரு மொழியிலிருந்து உருவானவைதான் திராவிட மொழிகள் அனைத்தும் எனக் கூறுகின்றனர். இதற்கு மாற்றான கருத்தும் இருக்கவே செய்கிறது.

உண்மையில் திராவிட மொழிக்குடும்பத்தில் உருவான இலக்கியங்களைவிடவும் தமிழில் உருவான இலக்கியங்கள் தொன்மையானவை. அதேபோல நோம் சோம்ஸ்கி தொல்காப்பியத்தை வாசித்தவரல்ல எனும் கூற்றும் பரவலாக உள்ளது. (இது குறித்து விரிவான ஆதாரங்கள் உள்ளவர்கள் விளக்கலாம்) இதன் அடிப்படையில் தமிழே திராவிட மொழிகளுக்கு வேர் எனும் கருத்தையும் முன்வைக்கின்றனர்.

முன்பே சொன்னது போல நான் மொழி ஆய்வாளன் அல்ல. ஆய்வாளர்களின் கருத்துகளே எனக்கு முக்கியம். அதில் ஆதாரங்கள் இருக்க வேண்டுமே தவிர உணர்ச்சி மிகுந்திருக்கக் கூடாது. உணர்ச்சிகளிடம் அறிவுகொண்டு பேசுவது சாத்தியமே இல்லை. ஆனால், ஒரு புனைவாளனாக என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். தமிழ் என்பது ஒன்றல்ல. ஒவ்வொரு நாடு,ஊர், வர்க்கம் சார்ந்து தமிழின் பேச்சு மொழி மாறுகிறது. ஒருவன் தான் பேசும் மொழியில் தன் வாழ்வை , இலக்கியத்தைப் படைப்பது அவனது முழு சுதந்திரம். “நீ இப்படித்தான் எழுத வேண்டும்” என்பது அதிகாரம். எந்த வடிவத்தில் இருந்தாலும் அதிகாரத்தை நாம் எதிர்க்கவே வேண்டியுள்ளது. புனைவுக்கான சுதந்திரத்தை விசாலமாக்கமாக்க வேண்டியுள்ளது.

சிலர் தூய்மை வாதத்தைக் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் ஒரு வாசகம், மொழிகிண்டல்களுக்கும், பிடிவாதங்களுக்கும், மொழிவெறிக்கும் ஊடாக புகுந்து பதில் சொல்வதாகக் கருதுகிறேன். பி.கெ.பாலகிருஷ்ணன்  சொன்னதாக ஜெயமோகன் குறிப்பிட்ட அது இவ்வாறு ஒலிக்கிறது…

“எந்த தூய்மை வாதமும் இன்றியமையாததே, அது முன்னகர்வை சிதறலாக அல்லாமல் நிலைநிறுத்தும் நங்கூர சக்தி.

***
vallinam viruthu 2014 (1)எவ்வாறான முரண்களைக் கொண்டிருந்தாலும் அ.ரெங்கசாமி எளிதில் நிராகரிக்க முடியாத ஆளுமை. அவரது புனைவுகளே அதற்கு சான்று. ‘வல்லினம் விருது’ முதல் ஆண்டாக அவருக்கு வழங்கப்படுவது வல்லினத்துக்குப் பெருமையே. இதே நிகழ்வில் அவரது ஆவணப்படமும் சுயவரலாறு நூலும் வெளியிடப்படுகிறது. ஒரு விருது வெறும் பணத்தால் மட்டும் உருவாகாமல் இலக்கியவாதியின் ஆளுமையை வெளிக்கொணர வேண்டிய கடும் உழைப்பை விஷ்ணுபுரம் விருது வழங்கும் திட்டம் மூலமே கற்றேன். யாரிடமும் பணம் உண்டு. அதை யாருக்கும் விருது எனும் அடிப்படையில் வழங்கலாம். ஆனால், ஒரு படைப்பாளனின் ஆளுமையை முழுமையாக வெளிகொணரும் விருதே அர்த்தப்படுகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் அதை செய்கிறார்கள். மலேசியாவில் அதுபோன்ற விருதுகள் உருவாக வல்லினம் ஒரு தொடக்கமாக இருக்கும். மற்றவர்களும் பின்பற்றினால் மகிழ்ச்சி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...