இல்லாத திசைகள் 2 – கோலாலம்பூர்  எனக்குத்  தண்ணீர்  காட்டியது

vizadagoloதண்ணீர்…

இது இல்லாமல் ஏதும் உண்டா. என் இளமைக் காலங்கள் தண்ணீர் நிறைந்ததாய்த்தான் இருந்தது. எனக்கு விபரம் அறியும் வயதில் என் அப்பா அம்மா பால் மரம் சீவிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு செல்வேன். அம்மாதான் மரம் சீவுவார். அப்பா நல்ல நிழல்தரும் மரமாக பார்த்து அதற்கடியில் பாய்விரித்து தூங்கி விடுவார். அம்மா பாலைச் சேகரித்து வந்ததும் அதை எடுத்துச் சென்று விற்றுவிட்டு பணத்தோடு வருவார். எனக்கு இந்த பால்மரக் காட்டில் ரொம்ப பிடித்த விஷயம் அதன் நடுவில் கூலாங்கற்களால் அமைந்த ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருப்பதுதான். அம்மாவும் அப்பாவும் மரம் சீவிவிட்டு வரும்வரை அந்த ஆற்றில்தான் தம்பி தங்கைகளோடு விளையாடிக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் பால்மரக் காட்டில்தான் மதிய உணவு உண்போம். அப்போதெல்லாம் குடிப்பதற்கு ஆற்றில்தான் தண்ணீர் எடுப்போம். கூலாங்கற்கள் நிரம்பிய ஆறு என்பதால் அதன் தண்ணீர் குடிப்பதற்குத் தகுந்ததாய் இருந்தது.

எங்கள் வீட்டுத் தண்ணீர் தேவைக்கு வீட்டிற்கு அருகில் கிணறு இருந்தது. சிறிய கிணறுதான் என்றாலும் தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை.  அந்த கிணற்றுக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். அந்த சிறிய ஆறை அணைக்கட்டி பெரியதாக்கி குளித்து மகிழ்வோம். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கடுமையாக மழை பெய்தால் அந்த ஆற்றின் வடிவம் மாறிப்போகும். சில தடவை ஆழமாகும். பல வேளைகளில் மண்மூடிப் போகும். எது எப்படியானாலும் அந்த ஆற்றைச் சுற்றிதான் விளையாடிக் கொண்டிருப்போம். ஒருமுறை அவ்வழியே போன புல்டோசர் கிணற்றை மோதி விட்டது. கிணறு உடைந்து சில உடைந்த பாகங்கள் கிணற்றினுள் விழுந்து விட்டது. கிணற்றைச் சுத்தம் செய்வதற்காக கிணற்று நீரையெல்லாம் இறைத்துவிட்டு அப்பாவும் அண்ணனும் உள்ளே இறங்கி உள்ளே விழுந்த பாகங்களை எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருந்தனர். ‘தண்ணீர் நிரம்புவதற்குள் சீக்கிரம் எடுத்து வெளியே போடு’ என்று அண்ணனை அப்பா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். கிணற்றின் உள்ளே சிறியதாய் மண்ணைக் கிழித்துக் கொண்டு பொங்கி வெளியேறிக் கொண்டிருந்தது தண்ணீர். நான் பார்த்த முதல் ஊற்று அதுதான்.

சில வருடங்களுக்குப் பிறகு வேறு வீட்டிற்கு மாறிவந்துவிட்டோம். அது இரண்டு மாடி பலகை வீடு. அது பெரிய அடுக்குமாடி வீடமைப்புக்கு மிக அருகில் இருந்த பால் மரத்தோட்டத்து நுழைவாயில் இருந்தது. அந்த பால்மரத் தோட்டத்தை அடுத்து இருந்த 25 ஏக்கர் டுரியான் தோட்டத்து நடுவில் ஓடிய சிறிய ஆற்று நீரிலிருந்து பிலாஸ்டிக் பைப் பூட்டிதான் அந்த வீட்டிற்குத் தண்ணீர் வந்தது. அந்த டுரியான் தோட்டம் மலைப்பாங்கான நில அமைப்பு. மலை உச்சியிலிருந்து ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்துக் கொண்டிருந்தது அந்த சிறிய நீர்வீழ்ச்சி. அதில் ஒரு பகுதியில் சிறிய குளம் கட்டி அங்கிருந்துதான் எங்கள் வீட்டிற்குப் பைப் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குளத்தில் இலைகள் விழுந்து பைப் அடைத்துக் கொள்ளும். வாரம் இரு முறை போய் குளத்தைச் சுத்தம் செய்ய செய்ய வேண்டும். அதுதான் எங்கள் வேலை. நான், அண்ணன், அக்கா, தம்பி, தங்கையென படையென திரண்டு போய் குளத்தைச் சுத்தம் செய்து விட்டு நன்றாக தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு வருவோம். மழைக்காலஙகளில்; நீர் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். எப்போதாவதுதான் மழையில் குளிப்பதற்கும் லைசென்ஸ் கிடைக்கும் வீட்டில். தண்ணீர்… தண்ணீர்… தண்ணீர்தான்…

ஒரு முறை இந்த நீர்வீழ்ச்சி எங்கே தொடங்குகிறது   என்பதைப் பார்க்க மலை உச்சிக்கு ஏறினோம். உச்சியில் சமநிலைப் பரப்பில் ஒரு சிறிய குன்றின்மேல் வைரக்கல்லைப் போல் பளபளத்துக் கொண்டிருந்தது அந்த ஊற்று. அதுதான் நான் பார்த்த இரண்டாம் ஊற்று.

இப்படியாக தண்ணீர் தண்ணீர் தண்ணீர் என்றிருந்த எனக்குக் கோலாலம்பூர் தண்ணீர் காட்டியது. நான் அந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே (போன தொடரில் வந்த அதே ஆசிரியரின் வாரப்பத்திரிகைதான்) தண்ணீர் பிரச்சனை தொடங்கவிட்டது. தண்ணீர் நின்று போனது. பிறகு வருவதும் நிற்பதுமாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது. அந்த வாரப்பத்திரிகை அலுவலகம்  கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்ததால் தண்ணீர் டாங்கி எங்கள் அலுவலகத்தின் மேல்தான் அமைந்திருந்தது. ஒருநாள் அந்த தண்ணீர் டாங்கி உடைந்து ஐந்தாவது மாடியில் வெள்ளம் ஏறியது. மாடிப்படியெல்லாம் நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது. குடைபிடித்துக் கொண்டுதான் படியேறினோம். ஆசிரியரின் அறைக்குள்ளும் சிடுமூஞ்சி வடிவமைப்பாளரின் அறைக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிடாமல் பழைய பேப்பர், பழைய துணிகள், என் அலுவலகத்தில் கிடந்த பழசு பட்டையெல்லாம் போட்டு  அணைக்கட்டி வைத்தோம். ஒரு நாள் முழுக்க நடந்த கூத்து இது.

அதோடு அலுவலகத்தில் தண்ணீர் சுத்தமாக நின்று போனது. ஆண் ஊழியர்கள் சமாளித்துக் கொண்டார்கள். கஷ்டம் பெண் ஊழியர்களுக்குத்தான். அலுவலகத்தின் அருகாமையில் இருந்த தமிழ்மணி அவர்களின் வீட்டிற்கு கழித்தல் கழுவுதல்களுக்கு போய் வந்தனர் . மதிய உணவை முடித்துக் கொண்டு தமிழ்மணி அவர்களின் வீட்டிற்குப் போய் வருவார்கள் பெண் ஊழியர்கள். மற்ற நேரங்களை எப்படி சமாளித்தார்கள் என்று இறைவனுக்குத்தான் தெரியும்.

எனக்குக் காலையில் பிரச்சனை இருக்காது. 9.00 மணிக்கு அலுவலகம் என்றால் மதியம் வரை அடக்கிக் கொண்டு வேலை செய்வேன். சில நேரம் எப்படா மதியம் வரும் என்று காத்திருப்பேன். மதியத்தைக் கடந்தால் அடுத்து 5.00 மணிக்குத்தான் நேரம் கிடைக்கும். அதுவரை மறுபடியும் அடக்கிக் கொண்டு வேலை செய்வேன். 5.00 மணிக்கெல்லாம் எல்லா ஊழியர்களும் கிளம்பி விடுவார்கள். 5.00 மணிக்குப் பிறகு பகுதிநேரமாக வேலைக்கு ஒரு அண்ணன் வருவார். ஆனால், அந்த சனியன் பிடிச்ச அண்ணன் சரியான நேரத்துக்கு வர மாட்டார். அவரிடம் அலுவலக சாவி இருக்காது. என்னிடம்தான் இருக்கும். அதனால், அவர் வரும்வரை காத்திருந்த பிறகுதான் நான் தங்கியிருந்த தமிழ்மணி அவர்களின் வீட்டிற்குப் போய் கழித்தல்களை முடித்துவிட்டு வருவேன். அவர் தாமதமாக வரும் நாள்களில் அடக்க முடியாமல் அவஸ்தைப்படுவேன். அவர் வந்ததும் அவதி அவதியாக வீட்டிற்கு ஓடுவேன். அப்படி இருந்தும் அந்த அண்ணனை மன்னிக்க என சில காரணங்கள் இருந்தன.

அந்த அண்ணன் வேலை முடியும் வரை நானும் அலுவலகத்தில் இருப்பேன். அந்த அண்ணன் மேடை நாடக நடிகர். அதுவும் சிவாஜி கணேசன் ரசிகர். சிவாஜியின் பழைய படத்தின் வசனங்களைப் பேசி நடித்துக் காட்டி என்னிடம் கதையடித்துக் கொண்டே வேலை செய்வார். நேரம் போவதே தெரியாது. அந்த அலுவலகத்தில் மின்சாரமும் இல்லை என்பதால் மெழுகுத்திரி கொளுத்தி வைத்துக் கொண்டு வேலை செய்வார். அவர் செய்தது அச்சுக் கோர்க்கும் வேலை. இரவு 8.00 அல்லது 8.30 மணிக்குத்தான் கிளம்புவார். நான்தான் அலுவலகத்தைப் பூட்ட வேண்டும். அதனால் நானும் அவர் வேலை முடியும்வரை காத்திருப்பேன். கிளம்பும்போது நடக்கும் அட்டகாசம்தான் பொறுக்க முடியாதது.

எனக்கு இருட்டு என்றால் பயம். அது அவருக்குத் தெரியும். அலுவலகத்தைப் பூட்டி விட்டு ஐந்து மாடிக்கும் இருட்டில்தான் இறங்கி வர வேண்டும். அவர், நான் கதவைப் பூட்டிய அடுத்த கணம் வேகமாக இறங்கி ஓடி விடுவார். பாதி இறங்கி படிக்கட்டில் நின்று கொண்டு அகோரமாக சத்தம் போடுவார். முதல் தடவை அவர் அப்படி செய்தபோது அலறிப் போனேன் நான். இதை அவர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்தபோது எரிச்சல்தான் வந்தது. சில நாள்களில் என்னிடம் எதுவும் சொல்லாமல் திருட்டுத்தனமாகக் கிளம்பிப் போய்விடுவார். நான் அலுவலகத்தின் எல்லா அறைகளிலும் தேடிப் பார்த்து விட்டு குழப்பத்தோடு கிளம்புவேன். அந்த அண்ணன் வேலையை விட்டு நிற்கும் வரை நடந்ததது இந்த விளையாட்டு.

ஒருவழியாக அலுவலகம் பக்கத்து கட்டிடத்திற்கு மாறியது. தொடக்கத்தில் புது அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை. கொஞ்ச நாளுக்குப் பிறகு இங்கேயும் தண்ணீர் பிரச்சனை தொடங்கியது. அப்போது தமிழ்மணி அவர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதால் நான், ஆசிரியர், வீடு, அலுவலகம் என திரிந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் ஆசிரியர் பணம் கட்டாமல் விட்டதில் தண்ணீர் துண்டிக்கப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்ட பைப்பில் இருந்து திருட்டுத்தனமாக வாளியில் தண்ணீர் பிடித்து நாலாவது மாடிக்கு தூக்கிக் கொண்டு ஏற வேண்டும். அலுவலகத்தில் இருந்தது இரண்டே வாளிதான். திருட்டுத்தனம் என்பதால் பெரும்பாலும் இரவில்தான் தண்ணீர் பிடிப்பேன். இரண்டு வாளியையும் நிரப்பி வைப்பேன். மகராசியாக ஓர் அக்கா வேலைக்கு வந்து சேர்ந்தார். அலுவலகத்திற்கு வந்ததும் வேலையைத் தொடங்குகிறாரோ இல்லையோ கழிப்பறைக்குத் தான் முதலில் செல்வார். குடிப்பாரோ குளிப்பாரோ தெரியாது. ஆனால் கண்டிப்பாக தண்ணீரை முடிப்பார். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தண்ணீரைக் காப்பாற்றுவதற்குள் காய்ந்துபோகும் மண்டை.

பிறகு சில நாள்களில் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்கள். அந்த கட்டிடத்தின் தண்ணீர் டாங்கி கீழ் தளத்தில் இருந்த முதல் அலுவலகத்தில் இருந்தது. எங்கள் அலுவலகத்திற்குப் பின்னால் இருந்த ஆசிரியரின் தம்பி நடத்தும் நாளிதழின் அலுவலகத்திலிருந்து பைப்பூட்டி அந்த டாங்கியை நிரப்ப வேண்டும். தண்ணீர் டாங்கி இருந்த அலுவலகம் ஒரு அப்பாடக்கர் அலுவலகம். அதன் உரிமையாளர் ஒரு சீனக்கிழவி. எப்போதும் கோவமாகவே இருக்கும். ஏன் என்று அதற்கே தெரியாது. கார்பெட் நனையக் கூடாது. அழுக்காக கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன் போட்டது கிழவி. இருந்ததோ ஒரு பழைய பிளாஸ்டிக் பைப். அது கிழவியின் அலுவலகத்தை அழுக்காகும் என்று அலுவலகத்திற்குள் பாவிப்பதற்குப் புது பிளாஸ்டிக் பைப் வாங்கினார்கள். டாங்கியில் இருந்து அலுவலகத்திற்குப் பின்புறம் வரை புதிய பைப். பின் அங்கிருந்து ஆசிரியர் தம்பியின் அலுவலக பின்புறம் வரை பழைய பைப் என்று முடிவானது. இந்த அலுவலகத்திற்கும் அந்த அலுவலகத்திற்கும் இடையில் வாகனப் போக்குவரத்து சாலை இருந்தது. பழைய பைப் ரொம்ப பழைய பைப் என்பதால் நிறைய கிழிசல்களும் ஓட்டைகளும் இருந்தன.

பைப்பைப் பூட்டித் தண்ணீரைத் திறந்ததும் அங்காங்கே நீர் பீய்த்துக் கொண்டு அடிக்கும். கே.எல்.சி.சி.யில் அழகுக்காக  விதவிதமாக பறக்கும் தண்ணீர்போல் விதவிதமான வடிவங்களில் தண்ணீர் தெறிக்கும் அந்த ஓட்டையை அடைப்பதற்கு பிளாஸ்டிக் பையையும் ரஃபியா கயிறையும் கொடுப்பார் ஆசிரியர். ஓட்டை இருக்கும் பகுதியில் பையைச் சுற்றி கயிரைக் கொண்டு கட்ட வேண்டும். பெரும்பாலும் பையையும் கிழித்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிவிடும். திரும்ப பையைச் சுற்றிக் கட்ட வேண்டி வரும். பைப்பின் சில பகுதிகள் கிழிந்து இருக்கும். மீண்டும் பை வைத்துக் கட்டினாலும் தாங்காது. சின்ன டாங்கி என்பதால் ஒரு தடவை தண்ணீர் நிரப்பினால் ஒன்றரை நாளில் டாங்கியில் தண்ணீர் முடிந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பைப் பூட்டி தண்ணீர் நிரப்ப வேண்டும். கிழவியில் அலுவலகத்தை அழுக்காக்காமல் பத்திரமாக பைப்பைப் பூட்டி ஓட்டைகளோடு பையும் கயிறுமாக போராடி தண்ணீரை டாங்கியில் நிரப்பி பிறகு பைப்பைச் சுற்றி எடுத்து வைத்துவிட்டு வர வேண்டும்.

நான் பைப்போடு நடத்தும் போராட்டத்தை போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கையாக பார்த்துவிட்டு போவார்கள். சிலர் இப்படி கட்டு அப்படி கட்டு என்று ஆலோசனை வேறு கொடுப்பார்கள். அவர்களிடம் ‘நீ மூடிகிட்டு நடையைக் கட்டு’ என்று சொல்ல ஆசையாக இருக்கும். காலை தொடங்கினால் மதியம் வரை இது தொடரும் ஒவ்வொரு முறையும்.

இதில் கொடுமை என்னவென்றால் அது வாகனங்கள் செல்லும் சாலை. வாகனம் வராத நேரத்தில்தான் ஓட்டை அடைக்கும் வேலையைச் செய்வேன். சில நேரம் ஓட்டையை அடைத்துக் கொண்டிருக்கும்போது வாகனம் வரும்போது பாதியில் விட்டு விட்டு ஒதுங்குவேன். ஒரு முறை மோட்டார் பைக் வருவதைக் கவனிக்கவில்லை நான். என்னைப் பார்த்த ஓட்டுநர் அவசரமாக மோட்டாரை நிறுத்த சத்தம் கேட்டு நான் நிமிர்ந்தபோது மோட்டாரின் முன்சக்கரத்திற்கும் என் மண்டைக்கும் இரண்டு இஞ்ச்தான் இடைவெளி இருந்தது. அலுவலகத்தின் பின்புறம் என்பதால் அந்த சாலையில் வாகனங்கள் வருவது குறைவு என்பது தான் ஒரே ஆறுதல்.

வாகனம் செல்லும் போது பைப்பின் மீது ஏறித்தான் போகும். ஒவ்வொரு முறையும் வாகனம் செல்லும்போது பைபில் புதிய கிழிசலை ஏற்படுத்திவிட்டுத்தான் போகும். இதனால் சாலையில் குட்டி குட்டி ஆறுகள் உருவாகியிருக்கும். சாலையையும் நனைத்து நானும் நனைந்து நடுரோட்டில் நடந்து கொண்டிருந்தது இந்த கூத்து.

வாகனம் ஏறி பைப் நாசமாகிப் போகிறது என்றேன் ஆசிரியரிடம். அவர் சாலை குறுக்காக  நீளத்தை அளந்துபோய் அந்த நீளத்துக்கு இரும்பு பைப் வாங்கி வந்து கொடுத்தார். அதை சாலையில் குறுக்காகப் போட்டு அதற்குள் பிளாஸ்டிக் பைப்பைச் சொருகி பயன்படுத்தச் சொல்லிவிட்டார். வாகனங்கள் இரும்பு பைப் மீது ஏறிச் சென்றன. கிழிந்த பிளாஸ்டிக் பைப் மேலும் கிழியாமல் காப்பாற்றினோம். இரும்பு பைப்பைப் பயன்படுத்திவிட்டு அதை வைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் பைப்பை சுருட்டி எங்காவது சொருகி விடலாம். இருப்பு பைப்பை என்ன செய்வது. சீனக்கிழவியின் அலுவலகத்தில்தான் வைக்க வேண்டும். கிழவி அலுவலகத்திற்குப் பின்னால் இருந்த கழிப்பறை அருகில் வைத்துக் கொள் என்றாள். ஒரு வழியாக அந்த நீண்ட பைப்பைச் சாய்த்து அந்த குறுகலான இடத்தில் வைத்தேன். ஒவ்வொரு தடவையும் இரும்பு பைப்பை எடுக்கும்போதும் வைக்கும்போதும் அங்கிருக்கும் பொருளிலிலும் சுவர் விளக்குகளிலும் இடித்துவிடாமல் பார்த்து பத்திரமாக எடுக்க வேண்டும். எதிலாவது பட்டு விட்டால் சீனக்கிழவியின் மூச்சு நின்றுவிடும். ஏதாவது பொருளை உடைத்து கிழவியின் மூச்சை நிறுத்தி உலகத்தைக் கிழவியிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். அப்போது அந்த யோசனை வரவில்லை.

தண்ணீர் கட்டணத்தைச் சரி செய்யும்வரை சில மாதங்கள் நடுரோட்டில் இந்த தண்ணீர் திருவிழா நடந்தேறிக் கொண்டிருந்தது. என் கேள்வி என்னவென்றால் இரும்பு பைப் வாங்க காசிருந்த ஆசிரியருக்குப் புது பிளாஸ்டிக் பைப் வாங்க காசில்லையா? அதை வாங்கித் தொலைத்திருந்தால் நான் நடுரோட்டில் அவஸ்தைப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்காதே.

கோலாலம்பூரில் எனக்கு அந்த வாரப் பத்திரிகை தண்ணீர் காட்டியதுபோல் வேறு யாரும் காட்டியதில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...