மோர்கன் என்றொரு ஆசான்

மோர்கன் த/பெ பெருமாளுக்கு ஏற்பட்ட எரிச்சலில் எதிரில் இருக்கும் கணினித்திரையை காலால் எத்தவேண்டும் போலிருந்தது. அசைவின்றி நிற்கின்ற அத்திரை ஏற்படுத்திய கோபத்தைவிட, செந்திலைக் கூப்பிட்டல்லவா அதைச் சரி செய்யவேண்டும் என்றபோது கடுப்பு எகிற, கதவை எத்திவிட்டு வெளியில் வந்து ஒரு சிகரெட்டை எடுத்தார்.

மோர்கன் தமிழர்தான். பிறந்தது செம்பவாங் நேவி குடியிருப்பில். அப்பா பிரிட்டிஷ் நேவியில் எடுபிடியாய் இருந்தார். அப்புறமென்ன பெயரில் மோர், தயிர் என்று பார்த்தீர்களா? ’முருகன்’ என்று அப்பா வைத்த பெயர், தமிழ் தெரியாதவர்களுக்கென எளிமைப்படுத்தப்பட்டதால் ’மோர்கன்’ ஆகிவிட்டது. மோர்கனுக்கு பெயரில் அல்ல இப்போது பிரச்சனை. ’ஆபீஸு எட்டரைக்குத்தான், ஆனா காலையில ஏழு மணிக்கெல்லாம் பெரியவன் வந்துருவான் பாருங்க, அந்த நேரத்துல இந்த கொம்ப்யூட்டரும் கேமிராவும் இப்படிக் கடுப்படிக்கிதே, என்ன லா பண்ணுறதுன்னு’ விதிர்த்து நின்றார்.

பெரியவன் என்பவன் டான் சூ சுவாங். இந்நிறுவனத்தின் சேர்மன். சிங்கப்பூரர், வெளிநாட்டவர் என கிட்டத்தட்ட 200 பேர் வேலை பார்க்கும் இந்தகம்பெனியை, தனது மாமியாரின் சூதாட்ட காசை கடனாக வாங்கி, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சின்ன குடிசைத்தொழிலாக ஆரம்பித்தவர். கெரோசின், டீசல் என்று கம்போங் பகுதியில் கேட்பவர்களுக்கு சிறு சிறு போத்தல்களில் அடைத்து விற்றார். கடின உழைப்பும் அதுக்கேற்ற மனைவியும் கிடைத்ததால் கிடுகிடுவென உயர்ந்து இன்று சிங்கப்பூரின் எண்ணெய் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் மொத்த உற்பத்தி செலாவணியில் கணிசமாய் பங்கு கொள்கிறார். அண்மையில் கூட, பிரதமர் கையால் சிங்கப்பூரின் சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்று என விருது வாங்கியிருந்தார். அவரைப்பற்றி எல்லோரும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அஞ்சு மணிக்கெல்லாம் ஆபீஸூ வந்துவாருய்யா பெரியவன். அவ்வளவுதான் அவருடைய 30 ஆண்டுகால வரலாறு.

மோர்கனுக்கு கொம்ப்யூட்டர் ’ஆன்’ ஆகவில்லை என்பதைவிட வாசலிலுள்ள தடுப்பான் எனப்படும் ‘பேரீயர்’ திறக்கமாட்டேன் என்கிறதுதான் பெரிய பிரச்சனை. பெரியவன் காடி உள்ளே வராதே என்ன செய்வது, மேனுவலாக திறக்க முடியுமா என்றும் யோசித்தார். நாலு சிகரெட் முடிந்து ஐந்தாவது, ’அடுத்து நான் தான் சாவணுமா’ என்று அவர் வாயில் குத்திட்டு நின்றது.

மோர்கனைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு உங்களுக்கு அவசியம். 1958ல் செம்பவாங்கில் பிறந்த மோர்கன், தனது கம்போங்கில், இரண்டு வீடு தள்ளி இருந்த ஆனந்தம்மாள் என்கிற பெண்ணை, போகும்போதும் வரும்போதும் சைட் அடித்து கல்யாணம் செய்துகொண்டார். பிஸ்ஏ எனப்படும் சிங்கப்பூர் துறைமுகத்தில் பத்துப்பதினைந்து ஆண்டுகள் வேலை பார்த்தார். 3 பிள்ளைகள் பிறந்தபின் ஒருநாள், படுக்கை அறையில், அவரைத்தள்ளிவிட்டு எழுந்துவிட்டார் ஆனந்தம்மாள். அன்றிலிருந்து அவருக்குப் பிரச்சனை. இனிமேல் நீ இங்கேயே கிட. மாசாமாசம் உனக்கு காசு கொடுத்துவிடுகிறேன் என்று மோர்கன் கிளம்பிவிட்டார். தனியறை ஒன்றில் வாசம். பிள்ளைகளெல்லாம் படித்து தனித்தனியாய் குடும்பத்தை அமைத்துக்கொண்டுவிட்டார்கள். ஏதாவது குடும்ப நிகழ்வுகளில் கணவனும் மனைவியும் பார்த்தும் பார்க்காததும் போல இருப்பார்கள்; பிறகு கிளம்பிவிடுவார்கள். ஆனால் ரெண்டு மாதத்துக்கு ஒருமுறை ’கேலாங் பாத்தாய்’ தீவுக்குப்போனாத்தான் கொஞ்சம் லேசா இருக்கும் மனசு அவருக்கு.

சிங்கப்பூரின் மிகப்பழைய ஆரம்பகால தொழிற்பேட்டைகளில் ஒன்று ஜுரோங் தொழிற்பேட்டை. 1962வாக்கில், பழைய நிதியமைச்சர் கோ கெங் சுவீயால் ஆரம்பிக்கப்பட்டது. ஜூரோங் பறவைப்பூங்காவுக்கு எதிரில் புகுந்து, இடது பக்கம் நான்காவது இருக்கும் ’மெய்டென் டெக்னாலஜி’யில் நுழைந்தோமானால் அங்குதான் நுழைவாயிலில் இருப்பார் மோர்கன். அவர்தான் செக்யூரிட்டி அலுவலர். பகல்வேளையில் இங்கும், இரவில் நான்கு கம்பெனிகள் தள்ளி அதே இடது புறத்தில் இருக்கும் ’டொமைய்ன் ’ என்கிற நிறுவனத்தில் வேலை.

12 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்பது சிங்கப்பூர் வேலைச்சட்ட விதி. எந்த செக்யூரிட்டி ஏஜென்சி பின்பற்றுகிறார்கள்? ஆள் கிடைக்கவில்லை. சிங்கப்பூரரையும் மலேசியரையும் மற்றுமே செக்யூரிட்டி வேலைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும் விதி. இவரைப்போல இன்னும் நாலு பேர் கிடைத்தால் நல்லாத்தான் இருக்கும் அவர்களுக்கும். பகலிலும் வேலை, இரவிலும் வேலை. அப்போ ஓய்வு எப்போது என்று கேட்கிறீர்களா? எட்டுவருடமாக எதிர்ப்படும் எல்லோரும் இதைத்தான் கேட்கிறார்கள். வேலையே ஓய்வுதானே, பிறகெதற்கு ஓய்வு என்று மோர்கன் மனதில் நினைத்துக்கொள்வார்.

காலை ஏழு மணிக்கு வேலையை ஆரம்பிக்கவேண்டும். முதல்நாள் இரவு வேலையில் ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிடுவார். பக்கத்திலேயே ”ஆண்கள்” உண்டு. அங்கேயே குளித்துவிட்டு ஆடையை மாற்றிக்கொண்டு தயாராகி எழுந்து ஆறு ஐம்பதுக்கு மெல்ல நடந்துபோய் பகல்வேலை கட்டிடம் போய் அமர்ந்துவிடுவார். பகல் முழுவதும் அங்கே. இரவு வேலை இங்கே. ’இப்படி 24மணி நேரமும் துரூஸா வேலை பாத்து என்ன அபாங்க் கிடைக்குப்போகுது’ என்று கேட்டால் ’வீட்டுக்குப்போய் மட்டும் என்ன கிடைக்கப்போகுது’ என்பார். ஒரு ஷிஃப்டுக்கு 40 வெள்ளி சம்பளம். நாள் ஒன்றுக்கு 80 வெள்ளி. இரவு வேலை இன்னும் சின்னாங்கு பாருங்க, சுற்றுக்காவல் இல்லை; டேப்பிங்கும் இல்லை. கேட்டை மூடிவிட்டு அமர்ந்தால், சாய்வு நாற்காலியில் சொர்க்கம் தான்.

கிழக்குக்கொன்று மேற்குக்கொன்றாய் இரண்டு மின்விசிறி வைத்திருக்கிறார். காலைத்தூக்கி சிறிய பெஞ்சில் வைத்துக்கொண்டு கட்டையைச் சாய்ப்பார். மணி இரவு தோராயமாய் பத்து பத்தரை இருக்கும். முன்பெல்லாம் ஒலி 96.8 பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும், தூங்கும்போது கூட.. ராத்திரியில் வரும் பாலாவும் உமாகணபதியும் நல்ல பழைய பாட்டாய்ப்போடுவார்கள். அதிகாலை 3 மணிக்கு நேயர் விருப்பத்தில் ஊர்ப்பையன்கள் நல்ல பாட்டாய்க் கேட்பார்கள். ஊரில் இருக்கும் அத்தை பொண்ணுக்கும் அக்காபொண்ணுக்கும் விரும்பி கேக்குறேன்னு சொல்லும்போதுதான் மனசு கொஞ்சம் ஏங்கி அடங்கி எரிச்சல் வரும்.

செந்தில், மோர்கன் பகல் வேலை செய்யும் கம்பெனியில்தான் கடந்த ஆறு ஏழு வருடமாக இருக்கிறார், இந்தியாவிலிருந்து வந்தவர். கணினி சம்பந்தப்பட்ட வேலைதான் முதலில் பார்த்தார். இப்போது போன், இண்டெர்நெட், கண்காணிப்பு கேமிராக்கள், தீ அலாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இவர்தான் என, திடுமென ’பக்காலியாவ்’வாக இருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல பையனாகத்தான் தெரிந்தார். பிறகு அவரின் போக்கு மாறியது. ’எஸ் பாஸ்ல தான் அண்ணா இருக்கேன்’ என்று சொன்னவர் திடுமென ’பிஆர் ஆயிட்டேன் அண்ணா’ என்றார். சில மாதங்கள் போக, ’அண்ணா கான்ஃபிடென்ஷியல், நானும் ஒரு கம்பெனி ஓப்பன் பண்ணிட்டேன்’ என்றார். ’அஞ்சி பசங்கள வெச்சி, என் வொஃய்ப் பாத்துக்குறாங்க’ என்றார். ஆச்சர்யமாத்தான் இருந்தது. இப்படியே போய்க்கொண்டிருந்த அவர், ஒருநாள் பைக்கில் வேலைக்கு வந்தார். சில நாட்கள் கழித்து காடியில் வந்தபோது மோர்கனுக்கு அன்றைய காலையில் சாப்பிட்ட புரோட்டா கறி ஒத்துக்கொள்ளாமல் வயிற்றைக் கலக்கியது போலிருந்தது.

நல்லா ஞாபகம் இருந்தது அவருக்கு. முன்னெல்லாம் நல்லாத்தான் பேசுவார் செந்தில். அண்ணா அண்ணா என்று அக்கறையாய்த்தான் விசாரிப்பார். இன்னும் சொல்லப்போனால் சில நாட்கள் மோர்கனுக்கும் சேர்த்து சாப்பாடும் கொண்டு வந்து தருவார். இருவருக்கும் பேச்சு வழக்கில் பெரிய பிரச்சனையாய் முடிந்தது தமிழ் பேப்பரால் தான். அன்றுதான் அவர் செந்திலை முதன்முறையாய் ஊர்க்காரனாய்ப் பார்க்கத்துவங்கினார்.

அப்படி என்னதான் நடந்தது? ஒன்றுமில்லை, சிறிய பிரச்சனைதான். தேக்காவில் காடியைக் குப்புறப்புரட்டி கொளுத்தி குடிகார ஊர்ப்பையன்களில் சிலர் செய்த சம்பவத்திற்குச் சில நாட்கள் கழித்து, ஊர்ப்பையன் ஒருவர் ரயில் நிலையத்தில் அரை குறையாய்ப் போதையில் கிடக்க, தமிழ்ப் பத்திரிகை, அதைப் படம் பிடித்துப்போட்டிருந்தது. ’தமிழர்களை தமிழ்ப்பத்திரிக்கையே அவமானப்படுத்துகிறதே, ஏன் இதைப் படம் பிடித்துப்போட்டு பரபரப்பாக்கவேண்டும்’ என்று செந்தில், அவரிடம் இருந்த பத்திரிகையை வாங்கி படிக்கும்போது கேட்டார். எரிச்சலடைந்தர் மோர்கன். ’போதையில் அரைகுறை ஆடையில் கிடப்பதே தமிழர்களுக்கு அவமானம், அதுவும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு ’மாலு’ லா, அதை ஏனென்று கேட்காமல் அதை ஏன் நியூஸ்பேப்பர் படம் பிடித்து போடுகிறது என்று கேட்டால் முட்டாள்தனம் தானே? முட்டாள்த்தனமாய் கேள்விகேட்டது போதாது என்று அவர் கோபப்பட்டபோது, சிரித்துக்கொண்டே வேறென்னவோ சொல்லிவிட்டார் செந்தில். அதுதான் ஆரம்பம். இப்போதேல்லாம் இதுபோன்ற முட்டாள்களையெல்லாம் ஏன் சிங்கப்பூரில் வைத்திருக்கிறார்கள் என்றுதான் அவரும் யோசிக்கிறார்.

கடந்தமாதம் ’கேலாங்க் பாத்தாய்’ சென்றுவந்தார் மோர்கன். ஒரு ’குட்டி’த்தீவிற்கு எதுக்குச் செல்வார்கள்? அவர் அங்கு செல்வது அதிசயமல்ல, வாடிக்கைதான். அப்போது அவருக்கு ஒன்று புலப்பட்டது, எவ்வளவோ யோசித்தும் இந்தச்சிந்தனை அப்போதுதான் வந்ததாய் நினைக்கிறார். நான்கைந்து பேர் இணைந்து சென்ற அக்குழுவில் எல்லோருக்குமான பேச்சுப்பொருள் ஒன்றுதான் இருந்தது. அது வெளிநாட்டு வேலையாட்கள் பற்றித்தான். அப்போதுதான் அவரும் யோசித்தார்.

உண்மையைச்சொன்னால், சில மாதங்கள் வரை மோர்கனுக்கு ’நாம் தமிழர்’ என்ற சிந்தனைதான் இருந்தது. ’கலர் பாத்துதான் லா வேல கொடுப்பாங்க இங்கெ’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அண்மைக்காலமாகத்தான் அவருக்கு, ’தான் இந்த ஊர்’ என்பதும் அதிலும் வெளிநாட்டு ஊழியர்கள் நிறையப்பேர் வந்து குவிந்துவிட்டார்கள் என்பதும் புலமாகிவிட்டது போலிருந்தது. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் தான் ஒரு சிங்கப்பூரர் என்று யாரோ அவருக்கு ஞாபகப்படுத்திச் சொல்லிக்கொண்டே இருப்பதைப்போல எண்ணினார். அல்லது சொல்லவேண்டும் என்று தோன்றியதுபோலிருப்பதாய் நினைத்துக்கொண்டார். அடிக்கடி ஆர்மி, என்எஸ், என்றெல்லாம் அவரது பேச்சில் வந்து விழுந்ததை அவரும் உணர்ந்துகொண்டுதான் இருக்கவேண்டும். இடையிடையில் தமிழ்ப்பத்திரிகையின் நடுப்பக்கங்களில் வரும் சில இந்திய கற்பழிப்புச்சம்பவங்களை எடுத்துக்கொள்வார். பேச்சுக்குப் பயன்படும் என்று நினைப்பாரோ என்னவோ.

கொஞ்ச நாட்களாய் இந்த செந்தில் தொல்லை இல்லாமல் சுகமாய்ப் போனது பொழுது. நான்கைந்து மாதங்கள் சீனாவிற்கோ இந்தோனேஷியாவிற்கோ கம்பெனி வேலையாய் பெரியவன் அனுப்பிவிட்டதாய்ச் சொன்னார்கள். அவருக்கும் அடிபட்ட பாம்பைத்தூக்கி அடுப்பில் போட்டுவிட்டது போல ஒரு நிம்மதியாய் இருந்தது. ஆனால் மறுபடியும் இன்று பிரச்சனை. ’சிசிடிவி’யும் வேலை செய்யவில்லை, ’கேட் பேரீயரும்’ வேலை செய்யவில்லை. கொம்ப்யூட்டர் மொத்தமும் அணைந்து கிடக்க, எதையெல்லாமோ நோண்டிப்பார்த்தார். ம்ஹூம். என்ன செய்வது. நெற்றிக்கு மேலே எதிரில் ஒட்டியிருந்த அவசர எண்களில், ’கணினி, தீ, மின்சாரம் சம்பந்தப்பட்ட அவசரத்திற்கு செந்திலை அழைக்கவும்’ என்று அவருடைய கைபேசி எண் ஒட்டப்பட்டு இருந்தது. அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து ஒரு சிகரெட் முடிந்துவிட்டது.

பாதுகாவலர் அறையில் ’சுமோகித்தல்’ கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு தைரியம், ’சிசிடிவி வேலை செய்யலை பாருங்க’ என்று அவராகவே சொல்லிக்கொண்டு எரிச்சலடைந்திருந்தார். செந்திலை நெஞ்சில் ஏற்றிக்கொண்டிருந்தார் போலும், புகையுடன் செந்தில் கலந்து வெளியாகிக்கொண்டிருந்தார். மணி 730. பெரியவன் வந்துவிடுவானே என்ன செய்வது?

இவ்வளவு ‘ஸ்த்ரெஸ்’ ஆக இருக்கிறதே, இன்றைய தேதி என்ன என்று பார்த்தார். 16 செப்டம்பர். 1609, ஒண்ணத்தூக்கி அங்கிட்டுப் போட்டுட்டு ஆறைத்தூக்கி இங்கிட்டுப் போட்டுப்பார்ப்போமே என்று ஒரு ஞாபகம் வந்தது. நான்கு நம்பர் லாட்டரியில் இதுவரை நாலு முறை இப்படி மாற்றிமாற்றிப் போட்டபோதுதான் நம்பர் பட்டதால் அப்படி ஒரு எண்ணம்.

எங்கோ ஒரு அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. பக்கத்து கம்பெனியில் ஒரு ’ஆபெங்’ இருக்கிறார். நடக்கவே முடியாதவர். அவர்தான் செக்யூரிட்டி அங்கே.. அவருடைய அலாரம் போலத்தான் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த சத்தம் அருகில் கேட்பது போலவும் இருந்தது. அந்தக் கம்பெனியில சொல்லி அவரை முதலில் மாற்றச்சொல்லணும் என்று நினைத்துக்கொண்டார்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப்படை எனப்படும் ’எஸ்.சி.டி.எஃப்’ அதிகாரிகள் ஐந்து பேரில் நால்வர் பொடிப்பையன்களைப்போல இருந்தார்கள். மூவர் மலாய்க்காரர். இருவர் சீனர். மூத்தவர் போல இருந்தவர் கடுகடு என்று பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர், “என்ன அங்கிள், அலார்ம் அடிக்கிறது கூடத்தெரியாம அப்படி என்ன பண்ணினீங்க? கம்பெனி 500 வெள்ளி அபராதம் கட்டணும் தெரியும்ல” என்றார் நக்கலாக.

அவர்கள் வந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கும்போல இருந்தது. ஒருவர் தூர அழைப்பானை எடுத்து,“நோ, இட்ஸ் எ ஃபால்ஸ் அலார்ம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்

தீ அழைப்பான் இயங்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், அதனை நிர்வகிக்கும் கம்பெனிக்கு அது நிஜ தீயா இல்லை தவறான அழைப்பா என்பதைச் சொல்லவேண்டும். தவறினால் அது தானியக்கமாக, நேரே தீ தடுப்புப்பிரிவுக்குச் சொல்லிவிடும், எஸ்சிடிஎஃப்பின் தீயணைப்பு வீரர்கள் வந்துவிடுவார்கள். தவறான அழைப்பு என்றால், நிர்வாகச் செலவுக்கு என 500 வெள்ளி அபராதம் விதிப்பார்கள். இந்த நடைமுறை உங்களுக்குத்தெரியாதா என்று மூத்தவர் விளக்கிக்கொண்டிருந்தார்.

இன்னொரு அதிகாரி, ஒரு படிவத்தை எடுத்து எழுதத்தொடங்கினார். மோர்கனுக்கு கூச்சமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ’பத்து வருஷம் பேர் போட்டவன் நான் எல்லாம் இப்படி ஆகிப்போச்சே…’ என்று முனகிக்கொண்டார்.

அதிகாரிகளில் இளையவராய் இருந்தவர் கொஞ்சம் முறைத்துக்கொண்டே இருந்தார். பிறகு அருகில் வந்து, ’அப்படி என்ன அங்கிள் தூக்கம், மலேசியரா நீங்கள்’ என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்.

2 comments for “மோர்கன் என்றொரு ஆசான்

  1. சதாசிவம்
    January 3, 2015 at 5:09 pm

    கதைக்களம் சிறப்பாக அமைந்துள்ளது, ஏதாவது ஒரு வேலையைச் செய்யும் பலரைப் பார்க்கும் இச்சமூகம் பல நேரங்களில் அவ்வேளை செய்வோரை குறித்து யோசிப்பதே இல்லை. வேலை ஒன்றும் இல்லாமல் இருப்பது போல் தோன்றும் செக்யூரிட்டி கார்ட் ஒருவரை மையப்படுத்தி அமைந்த இக்கதை அவரின் மனப்புழுக்கத்தையும், சமூகத்தின் மேலுள்ள விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளது, கதையின் இடையே அங்கும் இங்குமாக கொடுக்கப்பட்ட தகவல்கள் இயல்பாய் அமைத்துள்ளது, குறிப்பாக இந்தியாவில் கற்பழிப்பு ஒன்று மட்டும் தான் எங்கும் நடைபெறுவதாக பல்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தும் செய்திகளை பிறர் பார்க்கும் பார்வையும், கடைசியில் “அப்படி என்ன தூக்கம்” என்று வெளிப்படும் வார்த்தைகள் மனிதர்களை நாம் தனி மனிதனாக என்றுமே பார்ப்பதில்லை, அவரின் பின்புலத்தோடும், நாம் அறிந்த முற்தகவலையும் வைத்தே எடை போடுகிறோம் என்ற யதார்தத்தை உணர்த்துகிறது. புகையுடன் செந்தில் கலந்து வெளியாகிக் கொண்டிருந்தான் என்ற வார்த்தையில் அவரின் மனப்புழுக்கம் செந்திலின் மேலுள்ள கோபமும் அழகாக வெளிப்பட்டுள்ளது.

    சதாசிவம்
    kl

  2. V.Thamizhmaraiyan
    January 14, 2015 at 12:10 am

    1980களில் இந்தப் பாதுகாவலர் வேலைகள் , அவ்வளவு சிரமம் இல்லை. இன்று பாதுகாப்பு விதிகள் அதிகம். படிப்பறிவு இல்லாதார் பாதுகாவலர் வேலையை செய்ய , தகுதியற்றவர். ஆனால் இன்னும் சில இடங்களில் , வயதான நடக்குக்ககூட சிரமப்படும் ஊழியர்களைப் பார்க்கலாம். 12 மணிநேர வேலை $850.00 வெள்ளி சம்பளம். மேற்கண்ட சிறுகதை , பாதுகாவலர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...