இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை

Pramilஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது:

1. மரபு வழிப்பட்ட நிலை

2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு

3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி

4. அண்மைக்காலப் போக்கு

மரபு வழிப்பட்ட நிலை

ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரசுவாமி புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி. சி.கணேசய்யர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர், கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் கவிதைகள் இத்தகைய மரபு நிலைப்பட்டவையே ஆகும்.

சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு

1930-களிலிருந்து இலங்கை அரசியலில் தமிழ், சிங்கள இனத்துவ அடையாளங்களை அடிப்படையாகக்கொண்ட முதலாளித்துவக் கட்சிகள் இலங்கை முழுவதற்குமான தேசியத்தையும், இடதுசாரிக் கட்சிகள் வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட தேசியத்தையும் வளர்த்தெடுக்கத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1930களிலிருந்து தினசரி, வாரப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தோன்ற ஆரம்பிக்க சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் சமூக மறுமலர்ச்சி சார்பான கருத்துகள் படைப்பிலக்கியங்களினூடே முனைப்புப் பெற்றன.

பாவலர் துரையப்பாப் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, அழக.சுந்தரதேசிகர் போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றார்கள். எனினும் இவர்கள் மூவரும் 1950களின் பின்னர்தான் தமிழ்க் கவிதையுலகில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.

சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி

1950-களின் பின்னர் ஈழத்து இலக்கியப் பரப்பு விரிந்து பரந்து செல்லத் தொடங்கியது. அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், மத்தியதர வர்க்கத்தினரின் தோற்றம் என்பன ஈழத் தமிழர் வாழ்வியலில் முனைப்பான தாக்கத்தினை உருவாக்கச் சமகாலத்தில் மொழி – இன உணர்வும், சமூகப் பிரக்ஞையும், முற்போக்கு சார்பான சிந்தனைகளும் மேலெழுந்தன. இதேவேளை மலையக மக்களின் வாழ்வியல் சிக்கல்களும் அவ‌ற்றை எதிர்கொள்ள அவர்கள் நடத்திய போராட்டங்களும் முஸ்லீம்களின் அபிலாசைகளும் இக்காலக் கவிதைப் போக்கையே மாற்றியமைத்தன.

1943-இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்.

தமிழ்நாட்டில் நவீன கவிதை வளர பாரதிக்குப் பின் பாரதிதாசன், பிச்சமூர்த்தி போன்றோர் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனரோ அதேபோல ஈழத்தில் நவீன கவிதை வளர பாவலர் துரையப்பா பிள்ளைக்குப் பின் மஹாகவி உருத்திரமூர்த்தி முக்கியம் பெறுகின்றார்.

மஹாகவி தமது சமகால ஓட்டத்தினைச் சரியாக இனங்கண்டு கொண்டு கவிதை படைத்தவர். யாப்புவழிச் செய்யுள் ஓசைக்குப் பதிலாகப் பேச்சோசைப் பாங்கினைத் தன் கவிதைகளில் அறிமுகஞ் செய்து, செய்யுள் அடிகளை உடைத்தெழுதி உணர்ச்சி அழுத்த வேறுபாடுகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தினார்.

தான் வாழ்ந்த காலநிலையை நன்குணர்ந்து பாரதிக்குப் பின் நவீன கவிதையைப் புதிய தளத்துக்கு இட்டுச்சென்று ஈழத்தில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தினைப் பெற்றுள்ளார்.

மஹாகவியின் சமகாலத்தவரான நீலாவணன் கிழக்கிலங்கையின் சிறந்த கவிஞர். கிராமிய மண்வாசனையுடன் சமகால சமூகப் பிரக்ஞையையும் சித்திரிப்பனவாக இவரது கவிதைகள் காணப்பட்டன.

1960களின் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் ‘படிமம்’ எனப்பட்ட ‘குறியீடு’ ஒருவகையான இருண்மைத் தன்மையினைக் கொண்டுவர, அதுவரை காலமும் பேசாப் பொருளாக ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல் சார் நடத்தைகளும் கவிதைகளில் பாடப்பட்டன.

தருமு சிவராம், தா.இராமலிங்கம், போன்றோர் பாலியல் உணர்ச்சிகளைத் தமது கவிதைகளில் நுட்பமாகக் கையாண்டிருக்க, மு.பொ ஒருவிதமான ஆத்மார்த்தத் தளத்தில் நின்றுகொண்டு கவிதைகளைப் படைத்தார். சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மு.பொ, போன்ற சிலர் முற்போக்கு சார்பான விடயங்களைக் கலைத்துவ உணர்வுடன் கூறிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் பொதுவுடைமைச் சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்ட சுபத்திரன், சிவசேகரம், புதுவை இரத்தினதுரை, சாருமதி போன்ற கணிசமானவர்கள் தனிமனித உணர்வுகளுக்கும் சொந்த அனுபவங்களுக்கும் முதன்மையளித்துக் கவிதைகளைப் படைத்தனர்.

மரபுக்குள் நின்றுகொண்டு நவீனம் சார்புக் கவிதைகளைத் தந்த காசியானந்தன், வர்க்க அடிப்படையில் சமூகத்தை நோக்கிய சுபத்திரன் ஆகியோரும் கலைப் பெறுமானம் மிக்க கவித்துவமான பல கவிதைகளை எழுதினர். சிறந்த படிமங்கள் நிறைந்த நீண்ட கருத்துக்கள் செறிந்த கவிதைகளின் வரவானது ஈழத்துக் கவிதையின் தனித்துவத்தை பேணிக் காத்து புதுமையான வழிக்கு இட்டுச் சென்றது.

ஈழத்தின் அண்மைக்காலக் கவிதைப் போக்கு

ஈழத்துக் கவிதைகள் 1980கள் வரை சாதி, சமயம் என்ற வரன்முறைக்குள் நின்றுகொண்டே பெரும்பாலும் வளர்ச்சி கண்டன. இன்னொரு வகையில் சொன்னால் தம்முடைய காலப்பகுதியில் தாம் எதனால் பாதிக்கப்படுகிறார்களோ அல்லது ஈர்க்கப்படுகிறார்களோ அந்த ஈர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருப்பதை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வு பல்வேறுபட்ட ஆதிக்கக் கூறுகளால் கட்டுண்டு கிடக்கிறது. இதில் பிரதானம் இனத்துவ ஆதிக்க நிலை, பின் வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, மத மேலாதிக்கம், பெண்ணிய அடிமைத்தனம், பிரதேச வேறுபாடுகள் போன்றவையாகும். இத்தகைய கருத்தியல் நிலைகளை உள்வாங்கிக் கொண்டதாகவே ஈழத்தில் தற்காலக் கவிதைகளும் பிறக்கின்றன.

1980-களின் பின்னைய இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் அரசியல், பெண்ணியம் போன்றன முனைப்புப் பெறுவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் வந்த புதிய பரம்பரையில் பெண்களின் பங்கு கணிசமானதாக இருந்தது. அரசியல் ஒடுக்குமுறை மிகுந்திருந்த இக்காலத்தில் இலக்கியங்களும் அதையே பேசின.

இன வன்முறைகள் முன்னைய காலங்களைவிட 1980களின் பின்னர் அதிகரித்தமையினால் அதற்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே கவிதைகளும் படைக்கப்பட்டன. போரினை உள்ளிருந்து எதிர்ப்போர் வெளியிருந்து பார்ப்போர் என இரு வேறுபட்ட இயங்கியல் தளத்தினூடே இக்காலக் கவிதைகள் எழுதப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வின் காரணமாயும் மனிதாபிமான நோக்கிலும் என எதிர்ப்புக் குரல்கள் போருக்கெதிராக மேற்கிளம்பின. அப்படி வெடித்துக் கிளம்பிய சில கவிஞர்கள் குறித்த பதிவினைத் தொடர்ந்து காண்போம்.

ஈழத்துப் படைப்பாளர்கள் குறித்த சில பதிவுகள்

பிரமிள்

பிரமிள் என்ற பெயரில் எழுதி வந்த தருமு சிவராம், கிழக்கு இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர். 20 ஏப்ரல் 1939ஆம் ஆண்டு பிறந்த அவர் எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா சென்றுவிட்டார். பிறகு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை சென்னையிலேயே கழித்தார். சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், தமிழ் உரைநடை குறித்து கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் 
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

(ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள்)

நுண்ணிய பார்வையிலான ஒரு சூழலை உருவாக்கி, அதற்கு மிக மிக குறைந்தளவிலான கனமான சொற்களைக் கொண்டு கோர்த்து மொத்த வடிவத்தையும் ஒரு கவிதையாக்கும் தனித்திறம் பிரிமிளுக்கு வாய்த்திருக்கிறது.

பிரிமிள் தன் கவிதைகள் ஒவ்வொன்றிலும் மிகப் பெரும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறார். வார்த்தைகளின் கூட்டுக்குள் தன் சுயம் மறைத்தபடி மிகப் பெரும் பிரளயமாய் வெடித்துக் கிளம்புகின்றன அவரது கவிதைகள்.

பிரிமிளின் ஒவ்வொரு வார்த்தையும் எதையோ சொல்ல விரும்புகின்றது. அதையும் தாண்டி மிக ஆழமாக எதையோ உணர்த்தி நிற்கின்றது. உண்மை நிலையிலிருந்து விலகி ஓர் இலட்சிய கோபுரத்தின் ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திராமல் இயல்பு வாழ்வை தன் கவிதைகளில் மையப்படுத்தி இருக்கிறார் பிரமிள். எப்போதும் முடிவற்ற வெளியை நோக்கியபடி இருக்கும் இவரது பார்வை அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகப் பார்க்க வல்லது. நான் எல்லாருக்குமாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று சொல்லா விட்டாலும் அவரது கவிதைகள் நம் அனைவருக்குமானது.

கருணாகரன்

கருணாகரன் இலங்கையின் வடக்கே உள்ள இயக்கச்சி என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைப் போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து அகதியாகவே அலைந்ததாக அவரது கவிதைத் தொகுப்பிலுள்ள குறிப்பொன்றில் இருக்கின்றது. இதுவரையில் ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுமல்ல எதுவும்’, ‘ஒரு பயணியின் நிகழ்கால குறிப்புக்கள்’ என ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல் பத்திகள் எழுதி வரும் இவர் ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார்.  கருணாகரனை “கால் நூற்றாண்டுக்கும் மேலான படைப்பனுபவத்தைக்கொண்ட கவிஞர் என்றும் நந்திக்கடலிற்குப் பிறகான ஈழத்துக் கலை இலக்கியப் போக்கிற்கு ஒரு முன்னோடி என்றும் தேசியவாதிகள், எதிர்த் தேசியவாதிகள், அதிருப்தியாளர்கள், அவதூறாளர்கள் எல்லோருக்குமாக திறந்திருக்கும் வாசல் அவர் என்றும் கவிஞர் லீனா மணிமேகலை குறிப்பிடுகின்றார்.

“நெருக்கடிகளை வாழ்ந்தும் இயங்கியும்தான் கடக்க வேண்டியிருக்கிறது. இயங்கினால்தான் மீறவும் மீளவும் முடியும். போருக்கு முன்னும் பின்னும் இங்கே இலக்கியம் இருந்துகொண்டேதான் இருக்கிறது” என மிகத் தெளிவாக ஈழத்து இலக்கிய நகர்ச்சி குறித்து தனது நேர்க்காணல் ஒன்றில் கவிஞர் கருணாகரன் குறிப்பிடுகின்றார்.

கருணையிலான யுத்தம் இது“ என்றது அரசு

மக்களைக் காக்கும் மனிதநேய நடவடிக்கை“ என்று அதை

அமைச்சரொருவர் மொழிபெயர்த்தார்.

விடுதலைக்கான யுத்தம் என்றது இயக்கம்“

சுதந்திரப் போராட்டம் இப்படித்தானிருக்கும்“என்று விளக்கமளித்தனர் போராளிகள்.

தலைகளைக் கொடுப்பதற்கும் விலைகளற்றுப் போவதற்கும்

உயிரும் மயிரும் ஒன்றா?“ எனக் கேட்டாள் ஒரு கிழவி.

சரியான கேள்விதான் அது“ என்றனர் கஞ்சிக்கு வரிசையாக நின்றோர்.”

(‘ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ – கருணாகரன்)

“இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வருங்காலம் இன்றைய சூழலில் சனநாயக அடித்தளத்தை உருவாக்குவதிலும், அதை வளர்த்தெடுப்பதிலும் தான் இருக்கிறது. நாங்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை மீள்பார்வை பார்ப்பதில் தான் அரசியல் முன்னேற்றம் சாத்தியம். நேர்ந்துவிட்ட போர்க்குற்றங்களுக்கான நீதியைக்கூட அந்தவகையில் மட்டுமே வெல்ல முடியும். கடும்போக்குகளுக்கான காலம் முடிந்தது. பகை மறப்பும், புதிய பாடங்களைப் படிப்பதும், நல்லிணக்கமும், பல்நோக்கும், உரையாடலும் மட்டுமே சிதைந்துப் போயிருக்கும் எம்சமூகத்திற்கான நம்பிக்கை பாதை” என்கிற கருணாகரனை தமிழ் இலக்கியத்தின் புதிய வகைகளான போர்க்கால இலக்கியத்தைத் தந்தவர் என்று கூறப்படுவதில் மிகை ஒன்றும் இல்லை.

உருத்திரமூர்த்தி சேரன்

ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர். ஈழத்தின் நவீன கவிதையின் தந்தை என புகழப்படும் மஹாகவியின் மகன் என்ற பிறப்பு அடையாளமும் இவருக்கு இருக்கிறது. எழுபதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதை 1972-இல் பிரசுரமானது. கவிதை, சிறுகதை, ஓவியம் என பன்முக படைப்பாளரான சேரன் இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பதில் முக்கியமானவர். கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலும் என இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் இவரது கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ (In a Time of Burning), இரண்டாவது சூரிய உதயம் (A Second Sunrise), தொகுப்புகள் வெளிவந்து வரவேற்பினைப் பெற்றுள்ளன. அதைத் தவிர செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேரனின் கவிதைகள் You cannot turn Away எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

1978-82 காலப்பகுதியில் சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினத்தவர்களின் உண்மையான- வாழ்ந்து பெற்ற-அனுபவங்களைப் பேசிய சேரன், தமிழ் மக்களின் துயரங்களையும் சொல்லில் மாளாத இழப்புக்களையும் மரணத்துள் வாழ்ந்த கதைகளையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிர வைத்துக்கொண்டிருக்கும் கவிதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார்.

மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம்பெயர்ந்தவர்களிடமும்
துயரத்தில் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் 
உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்
இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட
பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப்
பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப் 
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம் கேள்.

(உயிர் கொல்லும் வார்த்தைகள் உருத்திரமூர்த்தி சேரன்)

சேரனை வெளிப்படுத்திக் காட்டுவது அவரது சொல் அமைப்புகள் தான். மென்மை என்றால் ஒரு மெல்லிய இழையோடும் துயரம் தோய்ந்த வரிகளில் பதிவு செய்வதும் உக்கிரம் என்றால் சுட்டெரிக்கும் பாலைவன வெயில் வீச்சாய் வெளிவருகின்றன அவரது கவிதைகள். இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக ஈழத்தமிழர்களின் முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்களை விவரிக்கும் ஆவணப் பதிவுகளாகவும் விளங்குகின்றன.

கவிஞர் சோலைக்கிளி

சோலைக்கிளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும்.

இன்றும் எனது நகரம்
கையையும் வாயையும் பொத்தி
மெளனித்திருக்கிறது.
இடைக்கிடை இப்படித்தான் விரதம்
அனுஷ்டிக்கும்
எனது நகரம்
இன்றும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில்
நோன்பிருக்கிறது.

(பனியில் மொழி எழுதி கவிஞர் சோலைக்கிளி)

சோலைக்கிளியின் கவிதைகள் வாழ்தலின் பல்வேறு உணர்வுநிலைகளைப் பற்றி பேசுபவையாக இருக்கின்றன. தனது நாட்டின் போருக்கும் அழிவுக்கும் காரணமான எல்லா அடிப்படைகளையும் அவர் வெறுத்தொதுக்குகிறார். அந்த போரையும் அழிவையும் தவிர்த்த வேறொரு உலகத்தைத் தன் கவிதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார் சோலைக்கிளி.

. அகிலன்

லங்கை, கிளிநொச்சியில் பிறந்து தமிழ்நாட்டிற்குப் புலம்பெயரும் வரை வன்னி மண்ணில் போர்ச்சூழல்களுக்கு நடுவே வாழ்ந்தவர் த. அகிலன். ‘வடலி’ வெளியீடாக போர்த் தின்ற சனங்களில் கதையாக ‘மரணத்தின் வாசனை’ என்ற பத்திகளின் தொகுப்பொன்றினை வெளியிட்டிருக்கிறார். ‘நிழல் குடை’ என்னும் கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்திருக்கிறது.

என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை
பதுங்கு குழியின் தழும்புகளை,
கண்ணிவெடியில் பாதமற்றுப் போனவனின் பயணத்தை
மற்றும்
வானத்தில் மிகுந்த பேரிரைச்சலுக்கு
உறைந்துபோன குழந்தையின் புன்னகையை
நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற
ஓய்வுப் பொழுதொன்றில்
வெற்றுத் தாளில் அழத் தொடங்குகின்றன.

(நிலவிடம் துளியும் அழகில்லை – த.அகிலன்)

போரின் கொடூரங்களை அது தந்துபோன பேரழிவுகளை தன் கவிதைகள் தோரும் வார்த்தை வார்த்தையாகக் கொட்டியிருக்கிறார் த. அகிலன். பிரிவும், மரணமும், தனிமையும் சேர்ந்து துரத்த மரணத்தினூடே பயணிக்கும் அகிலனின் வாழ்வும் அதன்வழி பிறக்கும் அவரின் கவிதைகளும் நிதர்சனம் சுமந்தவை எந்தவொரு புனைவுமின்றி.

திருமலை அஷ்ரஃப்

திருகோணமலையைப் பிறப்பிடமாகக்கொண்ட அப்துல் பரீட் முகம்மது அஷ்ரஃப் – நேஹா, புரட்சி மகன், திருமலை அஷ்ரஃப் போன்ற பல பெயர்களின் கவிதை எழுதி வருகின்றவர் ஆவார். தினகரன், வீரகேசரி நாளிதழ்களிலும் ஞானம், மல்லிகை, நிஷ்டை, படிகள், பெருவெளி முதலிய இதழ்களிலும் இவரது கவிதைகள் கண்டுள்ளன. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.

தலைகளுக்குத்
தரம் நிர்ணயிக்க
இது ஒன்றும் வியாபாரமல்ல.
போராட்டம்.
வாழ்வதற்கும் பின்னர்
சாவதற்கும்,
சாவதற்கும் பி்ன்னர்
வாழ்வதற்குமான
வாழ்க்கைப் போராட்டம்

(அறுவடைக் காலமும் கனவும்: திருமலை அஷ்ரஃப்)

இலங்கை எழுத்தாளர்களையும் அவர்கள் கடந்து வந்த போராட்ட வாழ்வையும் பிரித்தெடுக்கவே முடியாது. போராட்டம் என்பது அவர்களின் படைப்புகளில் பல தளங்களில் தொடந்து பதிவு செய்யப்படுகிறது. போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அதன் அவசியம் குறித்தும் போராட்டத்தை மறுப்பவர்கள் அதன் அநாவசியம் குறித்தும் தொடர்ந்து பதிவு செய்தபடிதான் இருக்கிறார்கள்.

அந்தப் பதிவுகளில் வழி அவர்கள் மிக முக்கியமாக தம்மை தமது வாழ்வை வெளிக்கொணர்ந்துவிட தொடர்ந்து முயற்சித்தபடியே இருக்கின்றார்கள். அந்த வரிசையில் எழுத்தாளர் திருமலை அஷ்ரஃபும் அவசியங்கள் குறித்தும் அநாவசியங்கள் குறித்தும் தமது கவிதைத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் பதிவு செய்திருக்கின்றார். மிக எளிமையான சொற்களின் பயன்பாட்டில் அவரின் கவிதைகள் மிளிர்க்கின்றன.

தீபச்செல்வன்

தீபச்செல்வன் இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் வாழ்கிறார். போர், அரசியல், மாணவர் சமூகம், தனிமனித உணர்வுகளைத் தளமாகக்கொண்டு இவர் எழுதி வருகிறார். யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பட்டம் பெற்று யாழ் பல்கலைக்கழக ஊடகப் பிரிவில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். தீபச்செல்வன் தற்போது தலைநகர் கொழும்பில் ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் எழுதியவற்றுள் “கிளிநொச்சி”, “யாழ் நகரம்”, “முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி”, “கிணற்றினுள் இறங்கிய கிராமம்”, “குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்”, “பதுங்குகுழியில் பிறந்த குழந்தை” ஆகிய கவிதைகள் வாசிப்பவர்களின் மனதில் கண்ணீரை கசிய வைக்கும் தன்மை கொண்டவை. ஒரு விடுதலைப் போராட்டத்தின் கட்டமைப்பை நேரடியாகப் பார்த்து அதனுள் அமிழ்ந்திருந்து வாழ்ந்து பார்த்த வார்த்தைகளாக வெளிவருகின்றன தீபச்செல்வனின் கவிதைகள்.

“நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகத் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன்” என்ற பதிவை மிக முக்கியமாக வல்லினத்தில் வெளிவந்த தனது நேர்க்காணலில் தீபச்செல்வன் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோவில்கள் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்தததில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது

(பதுங்குக் குழியில் பிறந்த குழந்தை – தீபச்செல்வன்)

போர் படிமத்தை தாங்கி கவிதை படைக்கும் கவிஞர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். அது பாலஸ்தீனமாகட்டும்; ஈழமாகட்டும். வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும், அவற்றின் தெருக்களுமே திரும்பத் திருப்ப நம் நினைவுக்கு மீட்டுத் தரப்படும். ஏதோ ஒரு சூனிய வெளியில் நின்றுகொண்டு அகதிகளாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களில் ஒருவராக அவர்களோடே ஓடிக் கொண்டிருக்கும் மனம். வாழ்வு பிடுங்கப்பட்டு இன்னொரு இடத்தில் வேர் மரணிக்கும்முன் நட்டு வைத்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீபச்செல்வனின் கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அகதியாய் போகும் மக்கள் ஒவ்வொருவரோடும் தானும் ஒரு அகதியாய் பின்தொடர்ந்தபடியே இருக்கிறார் கவிஞர்.

நபீல்

றிஸ்வியூ முகமது நபீல் என்ற இயற்பெயர் கொண்ட நபீல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளர் ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டயப் பட்டம் பெற்றவர். கவிதைக்காக சுதந்திர இலக்கிய விழா, விபவி படைப்பிலக்கியம், உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு என்பனவற்றில் விருதுகள் பெற்றுள்ளார். இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பு “காலமில்லாக் காலம்” எனும் தலைப்பிலானது ஆகும்.

சில கனவுகளைப் போர்த்தியவாறு
எழுந்தன பிள்ளைகள்
அவரவர் வார்த்தைகளைப் பறித்து
எறிந்து விளையாடினர்
மெளனத்தைப் பிரித்து அங்குமிங்கும்
அலைய விட்டனர்
பாதிப் பைத்தியங்களாய் அலைந்த மனிதரை
முடிவடையா இன்பத்துக் கழைத்தனர்
தொலைந்தவர்கள் தொலைந்தனர்
தேடுபவர்கள் கூடினர்

(எதுவும் பேசாத மழைநாள் நபீல்)

குழந்தைகளின் வாழ்வைக் கவிதைக்குள் கொண்டு வருதல் என்பது அலாதியானது. வார்த்தைகளுக்குள் பிடிபடாத ஒரு உலகத்தில்தான் குழந்தைகள் வாழ்கின்றன. காலை எழுந்தது மீண்டும் தூங்கிப் போகும் வரை முடியாமல் நீள்கின்றது அவர்களது உலகு. எந்தவொரு புள்ளியிலும் குழந்தையின் உலகம் அடங்கிவிடுவதில்லை. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என விரிந்து விரிந்து வியக்க வைக்கின்றது அவர்களது உலகம். குழந்தைகளைத் தாண்டி, இயற்கை, பிரிவு, போர் தந்த வலி என நீள்கிறது நபீலின் கவிதைகள்.

லதா

இலங்கையின் நீர்கொழும்பில் பிறந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் லதா என்றழைக்கப்படும் கனகலதா கிருஷ்ணசாமி புலம்பெயர் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளராகவே அறியப்படுகிறார். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிவிட்டதால் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் என்ற அடையாளமும் இவருக்கு இருக்கிறது. லதா சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலமாக துணையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது லதாவிற்கு ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதை நூலுக்காக வழங்கப்பட்டது.  லதா தொடர்ந்து சிறுகதைகளும் எழுதி வருகிறார்.

கனவுகளைக் கடந்த
வேற்று நிலத்தில்
சாப்பாடு தூக்கம் வேலை
எல்லாமே நேராகிவிட்டதாக
சொல்கிறார்கள்
என்றாலும்
பிறந்த இடம் ஈழம் 
என்றதும் 
முன்னைக்கிப்போது அதிகம் 
மிரள்கிறார்கள்.

(இரண்டாவது காலனித்துவத்தின் சில காட்சிகள் லதா)

பிறப்பு அடையாளத்தை அவ்வளவு எளிதில் யாராலும் துறந்துவிட முடியாது. எப்போதும் ஏதோ ஒரு வடிவத்தில் அது நமது காலையும் கழுத்தையும் சுற்றியபடியே இருக்கும். தமிழகத்தில் பிறந்து இங்கு வந்து வாழும் தமிழர்களது பேச்சு மொழி, பழக்க வழக்கத்திலேயே அவர்கள் இங்கு பிறந்தவர்கள் இல்லை என மிக எளிதாக நாம் விளங்கிக் கொள்ள முடிவதைப் போல்தான் இலங்கை தமிழர்களை மிக எளிதாக எல்லாரும் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

புலம்பெயர்ந்து மேலைதேசத்திலோ அல்லது பிற பெரு நகரங்களிலோ தமது சுயம் தொலைத்து தொலைந்து போயிருந்தாலும் அவர்கள் அவர்களது பிறப்பு அடையாளத்தை வைத்தே அறியப்படுகிறார்கள். அந்த அடையாளம் சில வேளை அவர்களை பாதுகாக்கிறது. பலவேளைகளில் அவர்களை மிரட்டியபடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.  ஆனாலும், 25 ஆண்டுகளுக்கும் மேலான புலம்பெயர் வாழ்வு இன்றுவரை கவிஞரை நம்பிக்கையோடுதான் வைத்திருக்கிறது என்பதையும் லதாவின் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

... ஜெயபாலன்

வ.ஐ.ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974-ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். எழுபதாம் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட புரட்சியில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் இவர் பங்கு வகித்திருந்தார்.

வன்னி மண்ணின் வாசனையையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய “பாலி ஆறு நகர்கிறது” கவிதைத் தொகுப்பு ஜெயபாலனின் முதல் கவிதைத் தொகுப்பாக அறியப்படுகிறது. அன்று தொடங்கிய இன்று வரை இவர் கவிதைத்துறையில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியில் பாடல், வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் முதலிய நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து 
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்
சுதந்திர விருப்பாய்
தொடருமெம் பாடல்.

(ஓர் அகதியில் பாடல் ... ஜெயபாலன்)

எங்கு போய் வாழ்ந்தாலும் தன் தாய் மண் மீது பற்றுக்கொண்ட ஓர் ஈழத் தமிழனின் ஏக்கம் இந்தக் கவிதை எங்கும் விரவிக் கிடக்கின்றது. மீண்டும் உயிர்த்தெழுவதற்கான தேவையை மிக எளிய வரியில் பதிவு செய்யும் கவிதை இது.

விரும்பாத ஒன்றை ஏற்றுக்கொண்டு வாழ காலம் மனிதனை எப்போதும் நிர்பந்தித்துக்கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு லாவகத்தோடு மனிதன் அதைக் கடந்து போகிறான் ஒவ்வொரு முறையும். மனிதன் எப்போதும் எதையோ துரத்தியபடியே இருக்கிறான். துரத்தியதை பிடித்து விடாதவரை வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். இதை மிகத் தெளிவான உணர வைக்கின்றன வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகள்.

றஷ்மி

அகமத் முஹம்மது றஷ்மி இலங்கையின் கிழக்குக்கரையோர கிராமமான அக்கரைப்பற்றில் பிறந்தவர். காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள் (2002), ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு (2005), ஈதேனின் பாம்புகள் (2010) ஆகியவவை இதுவரை வெளிவந்த இவரின் கவிதைத் தொகுப்புகள் ஆகும். வடிவமைப்பு மற்றும் ஓவியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள றஷ்மி தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்றார்.

ஒரு கவிதைத் தொகுப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக்கிடைக்கும் ஈழம் குறித்தான பதிவுகளைத் தரும் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளிவருகிறது றஷ்மியின் குரல். தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்வை மிகுந்த கோபத்துடன் அவர் சொல்லும் பாங்கு அச்சம் கொள்ள வைக்கின்றது. தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டு பிறகு தனக்குத் தரப்பட்ட வாழ்வை ஏற்றுக் கொள்ளாமல் அந்த வாழ்வு குறித்து நியாயமாகக் கோபப்படும் அவரது கவிதைகள் படித்து மீண்ட பிறகும் வலிக்க வைக்கின்றன.

கைவிடப்பட்ட பாழ்விழுந்த
அவனது கோட்டைகளுள் கிடைத்த தொல்
எலும்புகளின்
ஆழ் பரிமாணங்களுள் இன்றும்
அணையா நெருப்புப் பெருகிக் கொண்டிருப்பதாய்
அகழ்வுகள் அதிசயிக்கின்றன.

(ஈதேனின் பாம்புகள் – றஷ்மி)

றஷ்மியின் கவிதைகள் பெரும்பாலும் மிக நீண்டவை. வார்த்தைக்குள் கவிதையைச் சுருக்க விருப்பமின்றி எண்ணற்ற வரிகளோடு அவரது ஒவ்வொரு கவிதையும் விரிந்து கிடக்கின்றது. போர் காவு கொண்ட தமிழர்தம் வாழ்வையே அவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. வலி, சோகம், விரக்தி, கோப உணர்வுகள் அவரது கவிதைகள் தோரும் விரவிக் கிடக்கின்றன.

றியாஸ்  குரானா

றியாஸ்  குரானா இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்தவர். சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சிறு வியாபாரி. 2005 – 2007 வரை ‘பெருவெளி’ சிற்றிதழை நடத்தினார். ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை, வண்ணத்துப்பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம், நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு , மிகுதியை எங்கு வாசிக்கலாம், . செய்வினை போன்ற தலைப்புகளில் அரசியல் இலக்கியப் பிரதிகள், கவிதை பிரதி தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். பின்நவீனம் குறித்த எழுச்சியை அதற்குள்ளிருக்கும் மாற்றுத் தளங்களை எழுத்துச் சூழலில் அறிமுகப்படுத்தப் பற்பல உரையாடல்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

வெள்ளைத்தாளில் சில சொற்களை ஒருங்கிணைத்துச்

சிறிய எதிர்ப்பாகத்தான் தொடங்கியது
தனது பாட்டுக்கு மாறிமாறி இணைந்த சொற்கள்
உருவாக்கிய அர்த்தங்கள் பெருகப் பெருக
பெரும் கலகமாக வெடித்தது

(றியாஸ் குரானாவின் கவிதைகள்)

சொற்கள் குறித்த பெரும் ஆய்வுகளைத் தன் கவிதைகள் தோரும் நிகழ்த்திக் காட்டியபடி இருக்கிறார் றியாஸ் குரானா. அது இயல்பாய் நடந்ததா அல்லது அதுதான் அவரின் இயங்கு தளமா என்பதை அவரது கவிதைகளை நீந்திக் கடந்தால் மட்டுமே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். எழுத்துகளின் கூட்டு சொற்களைப் பிறப்பிக்கின்றது. சொற்களின் கூட்டு வாக்கியங்களை உருவாக்குகிறது. கவிதை என்பது மட்டும் எப்போதும் சொற்களின் கூட்டுகளால் மட்டுமே உருப்பெறுகிறது. அங்கே வாக்கியங்கள் உருவாகுவதில்லை. கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தளத்தில் தனித்து நின்று தன்னை இனங்காட்டுகிறது.

றியாஸ் தனது கவிதைகளுக்குள் சொற்களை அடைத்து வைக்கவும் இல்லை, அல்லது தான் பயன்படுத்திய சொற்களுக்குள் கவிதையையும் ஒளித்து வைக்கவுமில்லை. இவையனைத்தையும் மீறிச் சொற்களுக்காகக் கவிதையோ அல்லது கவிதைக்காகச் சொற்களையோ அவர் தேர்ந்தெடுக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது என்கிறார் கே.பாலமுருகன்.

ஆழியாள்

ஆழியாள் என்ற புனை பெயரில் எழுதி வரும் மதுபாஷினி ஈழத்தின் குறிப்பிடத் தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் 1968-ஆம் ஆண்டு இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தவர். இலங்கையின் புனித சவேரியார் வித்தியாலயத்தில் தொடக்கக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய ஆழியாளின் இரு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. மொழி பெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘துவிதம்’, ‘உரத்துப் பேச’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஈழத்துக் கவிதைகள் என்று கவனத்தில் எடுத்துக்கொண்டால் ஆழியாளுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. புலம் பெயர்தல், அடையாளச் சிக்கல், அந்நியக் கலாச்சாரத் தாக்கம் தொடர்பில் வலிமையாகக் கவிதைகளை ஆழியாள் எழுதியுள்ளார்.

ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு 
இங்கு சுவருக்குச் செவிகள் உண்டு
இருளுக்குக் கூர் விழிகளும் 
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும் 
உண்டு இன்னொன்று 
அவளுக்கு. 

(உரத்துப் பேச – ஆழியாள்)

ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு தனக்கென தன் மொழியில் பேசும் பெண் மொழிக் கவிதை இது. தமிழ்க் கவிதைச் சூழலில் மாலதி மைத்திரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா போன்றோரின் கவிதைகளில் இதே போன்றதொரு வீரியத்தை அவதானிக்க முடியும்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் அதற்கெதிராகப் பெண்களின் எழுச்சியும் – அதைப் பெண் தன் சுய அடையாளத்தோடு வெளிப்படுத்துதலும் தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. ஒரு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் இன்றைய சூழலில் வரவேற்கப்பபடுகின்றன. சிலவேளைகளில் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. காலங்காலமாய் பெண்ணை எழுத்துகள் வெளிப்படுத்திய தடத்தை முற்றாக மறுத்துப் புதியதொரு மொழியை எந்தவொரு சமரசமுமின்றி முன்வைக்கும் தைரியம் ஆழியாளுக்குக் இருக்கிறது என்பதை அவரது கவிதைகள் முன்மொழிகின்றன.

ஆழியாள் தனது கவிதைகளில் சுட்டி நிற்கும் பொருட்பரப்பு கவனத்திற்குறியது. தமது இளமை வாழ்வின் நினைவுப் படிமங்களாகவும் தான் இப்போது வாழ்கின்ற வாழ்வின் அனுபவப் படிவங்களையும் அவரது கவிதைகள் பேசுகின்றன. தன் வாழ்வு குறித்த ஏக்கம், தன்னோடு ஒட்டி வராத அந்தச் சூழல் குறித்த விவாதம், தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதல், தன் தனித்துவத்தைக் கட்டமைத்தல் என இவரது கவிதைகள் பல நிலைகளில் பயணிக்கின்றன.

புதுவை இரத்தினதுரை

புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். வியாசன், மாலிகா என்ற புனை பெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். கவிஞர், சிற்பக்கலைஞர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர் என எண்ணற்ற துறைகளில் ஆளுமை நிறைந்தவர்.

வானம் சிவக்கிறது, ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள், உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் போன்றவற்றை இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கவனத்தில் கொள்ளலாம்.

கால நதிக்கரையில் கால் நனைத்தவாறு
நீள நடக்கின்றேன்.
கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன
கவிதைகளாக.
நாளாந்தமான புதிய விதிகளின்பிறப்பில்
என் கவிதைகளிலும் வேண்டியன நிலைக்க
வேண்டியன அழிந்தும்போக
எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.

(புதுவை இரத்தினதுரை கவிதைகள்)

ஈழத்தின் துயரத்தையும் அதை நோக்கிய தனது அக்கறையாகவே தனது பெரும்பாலான கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. ஒரு நாடு போரால் அவதியுறுகிறபொழுது போரில் ஈடுபடுகிற, ஈடுபாடு காட்டாத இரு தரப்பினரும் சேர்ந்தே துன்பங்களைத் துயரங்களை அனுபவிக்கின்றனர். வாழ்ந்து பழகிய முற்றம், நெருங்கிய உறவுகள், நண்பர்கள், இன்னபிறரின் துயரங்கள், அலைக்கழிப்புகள், கொடுமைகள், ஊர் ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் என அதிரவைக்கும் பதிவுகளோடுதான் கனத்திருக்கிறது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள்.

முப்பது வருடப் போர் ஈழத் தமிழர்களை உலகெங்கும் வீசியெறிய, வீட்டையும் நாட்டையும், சொந்தபந்தங்களையும், இழந்தாலும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரை வைத்துக்கொண்டு படைப்பாளர்களும், கலைஞர்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட, சில லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட ஈழம் தமிழுக்கு செய்த பங்களிப்பு ஏராளம் என்று சொல்கிற அளவிற்கு இலங்கை படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...