போதாமை

DSC04256aஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும் என் எழுத்தெல்லாம் முதிரா வாசிப்பின் வெற்றுக்கூச்சல் என்று புரிந்தது.

வாசிப்பு என்பது ஒரு பொழுது போக்குவதாக இருந்த எனக்கு வாழ்க்கைத் தருணங்களை பரவசமாக எதிர்கொள்ளும் அனுபவமாக மாறியபோது திகைத்து திக்குமுக்காடிப் போனேன். ‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்’ என்ற பாரதியாரின் சொல்லுக்குப் பொருள் புரிந்து கொண்டேன். வாசிப்பு அனுபவம் என்பது ஒரு நெகிழ்ச்சியான உறவுப் பரிமாற்றமாக மாறியது அசோகமித்திரனையும், கி.ராஜநாராயணனையும், சுந்தரராமசாமியையும் படித்த பிறகுதான். தொடர்ந்து அவருடைய வழித்தோன்றல்களான ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும், நாஞ்சில் நாடனையும் வாசித்தபோது, வாசிப்பு என்பது உணர்வுப் பரிமாற்றம் மட்டுமல்ல, ஓர் அறிவுத் தேடல் என்றும் புரிந்துகொண்டேன். வாழ்க்கைத் தருணங்களை இவ்வளவு அப்பட்டமாக பதிவு செய்ய முடியுமா என்று மீண்டும் மீண்டும் வியந்தும் சோர்ந்தும் போனேன்.

ஒரு புனைவு என்பது வாழ்க்கையின் உச்சங்களை மட்டும் பதிவு செய்வது அல்ல. சரிசமமாக கீழ்மைகளையும் கிளறிப் பார்ப்பது என்று இவர்களின் எழுத்துக்கள் மூலம் உணர்ந்தபோது மனம் அமைதி இழந்தது. கொந்தளிப்புகளில் புனைவின் உச்சங்களை உருவாக்க முடியும். சமன் நிலை குலைவே மனித மனங்களின் பரவசங்களை அழுந்தி எழுத முடியும் என்றால் என்னுடைய சம நிலை எழுத்து வெறும் அறிவுரைகளாகவே மிஞ்சுமோ என்ற சந்தேகங்கள் என்னைத் துளைத்தது. பொதுவாக நிலைகொள்ளாமையும் போதாமைகளும் மனிதனின் உட்கூறுகளாக விரிந்து உணர்ச்சிகளினூடே அலை அலையாக எழுந்து மனதில் பித்தேறச் செய்து பேதளிக்க வைக்கிறது.

மனிதனின் இக்கலவைகளை புனைவின் உச்சங்களாக பதிவு செய்யும்பொழுது மனம் பரவசமடைந்து அபாரமான எழுச்சியை அளிக்கிறது. உணர்வுகள் உச்சங்களைத் தொட்டு ஒரு நுதிப்பை அடையும்பொழுது ஓர் படைப்பு பரவசமாகிறது. அப்படைப்பு முக்கியமானதாகிறது. இருந்தாலும் சமன் நிலைகுலைவு மட்டுமே வாழ்க்கை யதார்த்தங்கள் அல்ல. மனதின் சமன்பாடும் வாழ்க்கைத் தருணங்களே. அது ஆன்மீகமானது. அக்கணங்களை எதிர்கொள்ளும் மனம் உன்னதம் பெறுகிறது. நமது இயல்பு போதாமைகளில் ஆன வரையறைகளுக்கு உட்பட்ட நிலைகொள்ளாமை என்றாலும் நமது பேரியல்பு நிலைத்தன்மையாலும் சமநிலைகளாலும் ஆனதும் கூட.

கொந்தளிப்புகளும் பித்தேறிய உணர்வு நிலைகளும் நமது வாழ்க்கையின் எதிர்மறை சூழ்நிலைகளை சமாளிக்கும் மனதின் தந்திரங்களே. ஆகவே, ஒரு வாழ்க்கைச் சூழலை அறிவுத்தளத்தில் நின்று எதிர்கொள்வதா, உணர்ச்சிகரமாகக் கையாள்வதா என்பது அவரவர் உள அமைப்பை பொறுத்தது. சிலர் அறிவுத் திறனால் சமநிலையோடு நிர்வகிப்பார்கள். இன்னும் ஒரு சிலர் அவரவர் மனோதர்மத்திற்கு ஏற்ப பற்பல மன பாவனைகளோடு அவ்வப்பொழுது உணர்ச்சிகரமாக தங்களை அறியாமலேயே சமாளிப்பர். இதில் உச்சங்களைக் கோருவது புனைவின் தருணங்கள். சமநிலையை விழைவது ஆன்மீகத்தின் அடைவுகள். எனது இந்த புனைவு முயற்சிகள் மனதின் ஊடாட்டங்களா அல்லது அறிவின் அறைகூவல்களா என்று நீங்கள்தான் தீர்ப்பு எழுத வேண்டும்.

நன்றி!

என்றும் உண்மையுடன்

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

தியான ஆசிரமம்

கூலிம், கெடா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...