ஆதிசேடன்

thirumalஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே என் நாடகம் எனும் கணக்கில் அவர் இதழோரம் மெல்லிய சிரிப்பு இருந்தது.

அவர் பள்ளிக்கொள்ளும் பரமபதமான ஸ்ரீவைகுண்டத்து வாசலில் வழக்கம் போலவே ஸ்ரீஜெயனும் ஸ்ரீவிஜயனும் கண்காணிப்பு சேவையில் கட்டுக்கோப்பாய் இருந்தனர். ஜடாமகுடமும், வீணையும், கழுத்தில் ஜபமாலையுமாக திருமாலின் நாமங்களைப் பாடிய படியே வைகுண்டத்து வாசலை நோக்கி வந்தார் நாரதர் முனிவர். முனிவரை வரவேற்றபடியே வைகுண்டத்துக்கு அனுமதித்தனர் அவர்கள் இருவரும். நாரத முனிவர் அவர்களை ஆசீர்வதித்து உள்ளே சென்றார்.

“நாராயணா…..நாராயணா….. லோகத்தின் கடாட்சியமே, செல்வங்களின் அன்னையே தங்களின் பொற்பாதங்களில் அடியேனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன் தாயே” என வணங்கிய படியே நின்றார் நாரதர்.

 “அடடே… நாரத முனிவரே வணக்கம்” என மறுமொழிந்தாள் திருமகள்.

நாரதரின் வருகையை உணர்ந்து கொண்டு நித்திரையைக் கலைந்த திருமால் கொஞ்ச நேரம் கண்களை மூடியபடியே வைத்திருந்து பின்னர் மெல்லமாக இமை விரித்து தனது சாந்த சொரூப பார்வையை அவரின் மீது படரச் செய்தார். பகவான் எதிலும் அவசரப்படக்கூடாது என்பதை அவர் அறியாதவர் அல்ல.

“வணக்கம் ஐயனே”

“என்ன இப்பொழுதுதான் ஸ்ரீவைகுண்டத்து வாசல் உமக்கு தெரிந்ததா?”

“நாராயணா…..நாராயணா…..ஐயனே யாம் வைகுண்டத்துக்கு வருவதற்குச் சில நாட்கள் ஆகிவிட்டதே தவிர தங்களின் திருநாமங்களை ஒலிக்க என்றும் என் நா மறந்ததில்லை”

சாந்த புன்னகை திருமாலின் செவ்வாயில் மலர்ந்திட நாரதரின் பதட்டமும் படபடப்பும் அடங்கலாயிற்று. சமாளித்து விட்டதாக உணர்ந்தவர் வீணையின் கம்பியை அசைத்து ஒரு மெல்லிய இசை அதிர்வை உருவாக்கினார். ஆதிசேடன் மெல்ல அசைந்தது.

“ஐயனே, இன்று பூலோகத்தில் தாங்கள் பள்ளிக்கொண்டுள்ள திருப்பதி ஸ்தலத்தில் அடியார்கள் நாலாயிர திவ்வியபிரபந்தம் கீர்த்தனைகளாக பாடுகிறார்களே… அதற்கு செல்லவில்லையா?”

“நாரதா பூலோகத்தில் எப்போது மனிதர்கள் சொல்லிய நேரத்தில் காரியங்களைத் தொடங்கியுள்ளனர்? இப்போதெல்லாம் நாம்தானே அவர்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. தவிரவும் அதிக நேரம் நிற்க வேண்டிவரும். பாதகமில்லை… பத்து நிமிடம் கழித்தே போகலாம். அதுதான் நமக்கும் நல்லது”.

“ஐயனே, தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. தங்களின் வார்த்தையே எமது சித்தம்” என திருமாலின் கூற்றுக்கு இசைப் பாடினார் நாரத முனிவர். ஆதிசேடன் மேலும் அசைந்தது.

திருமாலின் வாகனமான கருடன் தயாரானான். திருமால் கருடனின் மீது அமர்ந்து கொண்டார்.

“நாரதா, நீ வரவில்லையா?”

“நாராயணா… நாராயணா… ஐயனே தாங்கள் வீற்றிருக்குமிடத்தில் நான் எப்படி இல்லாமல் போவேன்? நானும் வருகிறேன்… ஆனால்…” முனிவரின் வார்த்தைத் தடங்கலாயிற்று.

“என்ன நாரதா ஏன் நாவினில் வந்த வார்த்தை வாயிலேயே சிறைப்பட்டுப் போனது?”

“ஐயனே மன்னிக்க வேண்டும். இதுவரை ஆகாரம் ஏதும் உட்கொள்ளவில்லை. அன்னையின் கையிலே உணவை உட்கொண்டு நாட்கள் பல ஆகிவிட்டன. ஆதலால்…..”

“தேவி, நாரதனுக்கு உண்பதற்கு வேண்டியதைக் கொடுத்து உபசரி” என கூறி திருமால் பூலோகத்திற்குக் கருடனின் மீது அமர்ந்து பறந்தார்.

“இம்ம்ம்…..” நாரதர் பெருமூச்சு விட்டார்.

“என்ன நாரதரே…..பெருமூச்சு பலமாக இருக்கிறதே” என புன்னகை பூத்த இனிய குரலில் விசாரித்தப்படியே கைகளில் கனிகளைக் கொண்டு வந்தாள் திருமகள்.

“எல்லாம் தங்களை நினைத்துதான் அன்னையே.”

“என்ன நாரதரே ஏதோ கலகத்திற்கு அடிபோடுவது போல் அல்லவா தோன்றுகிறது” திருமகள் புன்னகை முகம் மாறாது பேசினார். அவ்வாறுதான் வெளி ஆட்களிடம் பேச வேண்டும் என்பது விதிமுறை. மற்ற இரு தேவிகளைவிட திருமகள அந்த விதிமுறையை பிசராது கடைப்பிடிப்பவள்.

“அபச்சாரம்… அபச்சாரம்… தாயே எமது மூர்த்தி இடம்கொண்ட வைகுண்டத்தில் யாம் கலகம் செய்வேனோ?” என இரங்கினார் நாரதர்.

“பின்பு எதற்காக நாரதரே? திருமகள் கேள்வியை எழுப்பினாள்.

“தாயே தங்களைக் காணும் போதெல்லாம் அடியேனது மனதில் ஒரு வருத்தம் குடிக்கொண்டு விடுகிறது.

திருமகள் பார்வை அவளது ஆவலைப் புலப்படுத்தியது.

“அன்னையே யாம் கைலாயம் சென்றோம். அங்கே எம்பெருமானும் அன்னை உமாதேவியாரும் கைலாய பீடத்தில் ஒருசேர அமர்ந்து கொண்டு மூவுலகிற்கும் அருளுகின்றார்கள். அதை கண்ணாற தரிசித்தேன்”.

“பிரம்மலோகம் சென்றேன். அங்கே எமது தந்தையாரும் அன்னையாரும் தத்தம் கமலங்களில் சமநிகராக அமர்ந்து கொண்டு ஒருசேர மூவுலகிற்கும் காட்சியளிக்கிறார்கள். அதையும் பூஜித்தேன். ஆனால் வைகுண்டத்தில் காணும் காட்சியை மட்டும் எம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை” என கூறினார் நாரதர்.

விதிமுறைப்படி திருமகள் ஆண்களிடம் அதிகம் கேள்வி எழுப்பக்கூடாது. அது நாரதராக இருந்தாலும். ஆனால் அவர் சொற்கள் கொடுத்தக் குழப்பத்தில் குறைந்த பட்சம் பர்வையையாவது சந்தேகம் பொதிய வைத்துக்கொள்வதில் தடையிருக்காது என்பதால் அவ்வாறே செய்தாள். மேலும் அவர் கேட்காவிட்டாலும் நாரதர் மீதியைச் சொல்லாமல் இருக்கப்போவதில்லை என அறிந்தவள்.

“அன்னையே என்னை மன்னிக்க வேண்டும். மனதில் சங்கடத்தை வைத்துக் கொண்டு எம்மால் தங்களிடம் மறைக்க இயலவில்லை. கைலாயத்திலேயும் பிரம்மலோகத்திலேயும் அன்னை உமாதேவியாரும் சரஸ்வதியாரும் தங்களின் மூர்த்திகளிடத்தில் சமத்துவம் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஈசன் உமாதேவியாரை தன்னுள் பாதி என ஏற்றுக்கொண்டவர். அங்கே அப்படியிருக்க வைகுண்டமான இங்கே நடப்பதோ வேறு. எமது ஐயன் எப்போதும் ஆதிசேடன் மீது சயனித்திருக்கிறார். ஆனால் அன்னை தாங்களோ எப்போதும் அவரின் அருகிலேயே அமர்ந்து விடுகிறீர்கள். இது எம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை தாயே” தன்னைப் பற்றி பேச்சு தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாக அடிப்படுவதால் ஆதிசேடன் அதிர்ச்சியுடன் காதை கூர்மையாக்கியது.

“இதில் என்ன இருக்கிறது நாரதரே? நாங்கள் இருவரும் ஒருசேர அல்லவா காட்சி தருகிறோம்,” என தனது நாதனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் திருமகள். இப்போது அவள் முகம் பழைய சமநிலைக்கு வந்திருந்தது.

“அன்னையே ஒருசேர காட்சியளிப்பது, இருவருமாய் சேர்ந்து ஒரே விதமாக ஒன்றாய் அமர்ந்து காட்சியளிப்பதேயாகும். ஆனால் தாங்கள் இருவரில் ஐயன் எப்போதும் ஆதிசேடன் மீது சயனித்திருக்கிறார்… தாங்களோ எப்போதும் அவர் அருகிலேயே அமர்ந்திருக்க அது எப்படி ஒருசேர காட்சியளிப்பதாகப் பொருள்படும்? என விளக்கமான விவகாரமான கேள்வியைத் திருமகள் முன்னிலையில் வைத்தார் நாரதர்.

திருமகள் நிலைதடுமாறி போனாள். மெல்ல நெற்றியைச் சுருக்கினாள். அவ்வளவுதான் செய்ய விதிமுறையில் அனுமதி. கலகம் வேலைசெய்ய தொடங்கி விட்டதை உணர்ந்துக் கொண்டு நாரதர் அதோடு விடாமல் மேலும் சர்ச்சையைத் தொடர்ந்தார்.

“ஐயன் மட்டுமே சயனம் செய்வதற்குதான் ஆதிசேடனா? அப்போது தங்களுக்கு ஆதிசேடனிடத்தில் ஏதும் உரிமைகள் இல்லையா தாயே?” நேரம் ஆக ஆக நாரதரின் கேள்விகள் கனைகளாக மாறின.

அத்தனையையும் செவிமடுத்துக் கொண்டிருந்த ஆதிசேடனுக்குத் தன்னை வைத்தே பிரச்சனை உருவாகி விட்டதை எண்ணி ஐந்து தலைகளும் ஒருசேர சுற்றின. ஆனால் தனக்குக் காது கேளாது என நம்பிக்கொண்டிருக்கும் பூலோக மேலோக வாசிகளின் நம்பிக்கையைக் கெடுக்காமல் இருக்க தொடர்ந்து மௌனம் காத்தது.

“அன்னையே முப்பெரும் தேவியர்களை ஒப்பிடும் போது சமத்துவம் என்ற நிலையில் அவர்கள் இருவரும் ஒருபடி மேலே சென்றிட தாங்கள் ஒருபடி கீழே அல்லவா இறங்கி விடுவீர்கள்! இதற்கு தாங்கள் இடம் தரலாமா அன்னையே?” என நாரதர் கலகத்தின் முக்கிய பிரம்மாஸ்திரத்தை ஏவினார்.

இப்போது திருமகள் கண்களில் அனல். அவள் விதிமுறைகளை மறந்திருந்தாள்.

“எம்மை மன்னிக்க வேண்டும் தாயே. ஏதோ எம் மனதில் உள்ள ஆதங்கத்தைத் தங்களிடத்தில் கூறிவிட்டேன். இனி தாங்களே யோசிக்க வேண்டியவர்” என கூறி நாரதர் திருமகள் தந்த கனிகளைச் சுவைத்து வைகுண்டத்திலிருந்து விடைப் பெற்றுச் சென்றார்.

தீராத குழப்பத்தில் தெளியாதவளாய் நின்றுக் கொண்டிருந்தாள் திருமகள்.

ஃ ஃ ஃ

வியர்த்த உடலோடு வைகுண்டத்திற்குத் திரும்பிய திருமால் அதிர்ச்சியில் உறைந்து போனார். என்றும் அல்லாமல் இன்று முதன்முறையாக திருமகள் ஆதிசேடன் மீது சயனித்திருந்தாள். அதைக் கண்டு ஒன்றும் கூறாமல் சற்று நேரம் அமைதியைக் கடைப்பிடித்தார். திருமாலுக்கு நிதானம்தானே அடையாளம். இதழ் ஓரம் சட்டென மந்தகாசப்புன்னகையை வரவைத்தார். தமது நாதன் வந்துவிட்டதை உணர்ந்தும் திருமகள் உடனே எழாமல் சிறிது நாழி கழித்து எழுந்து நின்றாள்.

“என்ன தேவி…..? இதுவரை என்றுமில்லாத புது பழக்கம்…” திருமாலின் வாயிலிருந்து வார்த்தைகள் சாந்தமாகவே வந்தன.

“என்ன சுவாமி….. தாங்கள் எதைப் பற்றி கூறுகின்றீர்கள்?”

“யாம் சயனிக்கும் இந்த ஆதிசேடன் மீது நீ சயனித்தது பற்றி என இன்னும் புரியவில்லையா?” திருமாலின் கேள்வி தொடங்கலாயிற்று.

“ஏன் சுவாமி எமக்கு மட்டும் இந்த ஆதிசேடன் மீது சயனிக்க அனுமதி இல்லையா? யாம் ஆதிசேடன் மீது சயனித்ததில் தாங்கள் என்ன தவறு கண்டீர்?’ என திருமகளும் மறுகேள்வியாக வைத்தாள்.

“ஆதிசேடனில் யாம் மட்டுமே சயனிக்க முடியுமே தவிர தேவி சயனிக்கக் கூடாது… உம் இடமும் இதுவல்ல. எம்மருகில் அமர்ந்து சேவகம் செய்வதே உமக்கு உகந்த இடம். அதுதானே உன் பெண்மைக்கு அழகு…”.

“இது என்ன புதுவிதமாய் இருக்கிறது? மூவுலகத்தில் எங்கும் துணைவன் இருக்கின்ற இடமெல்லாம் துணைவிக்கு உரிமைகள் கிடையாதென்று கூறப்படவில்லையே! அப்படியிருக்க ஆதிசேடன் மட்டும் இதில் எப்படி விதிவிலக்காய் இருக்க முடியும்?” என வாதாடினாள் திருமகள்.

திருமாலால் திருமகளின் வாதங்களை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆயினும் திருமளும் விடுவதாக இல்லை. இருவர்களிடத்திலேயும் வாதங்கள் கடுமையாகின. நாரதரின் கலகத்தில் வைகுண்டம் அனல் பறந்தது.

“சுவாமி கைலாயத்தில் உமாதேவியாரும் பிரம்மலோகத்தில் சரஸ்வதியாரும் தத்தம் மூர்த்திகளிடம் சமத்துவம் பெற்றுள்ளனர். அந்த வகையில் யாம் மட்டும் எமது உரிமையை இழந்துவிட தயாராக இல்லை” திருமகள் உக்கிரமாகப் பேசியதை வைகுண்டம் அப்போதுதான் முதன்முதலாய் பார்த்தது.

“தேவி….நீ உமது உரிமையை எதும் இழந்து விடவில்லை. கைலாயம் வேறு; பிரம்மலோகம் வேறு. இது வைகுண்டம். அதையும் இதையும் முடிச்சுப் போட வேண்டாம்” என்றார் கண்டித்த குரலில் திருமால். ஆனால் அப்போதும் தனது அலட்சியமான இதழ் ஓர புன்னகையை விடாது கடைப்பிடித்தார்.

“ஓ அப்படியா…!மிக்க நல்லது சுவாமி. தங்களின் உரிமையான ஆதிசேடனில் உரிமையை இழந்த எமக்கு இனி அது வேண்டியதில்லை. மாறாக எமது உரிமைக்கு மட்டும் இடமான இன்னொரு ஆதிசேடனை இதன் பக்கத்திலேயே ஏற்படுத்தி தாருங்கள்”.

“அது முடியாது தேவி! அப்படி செய்வது வைகுண்டத்திற்குப் பெறும் அவமானத்தை இழைத்துவிடும். நமக்குள் பிரிவு ஏற்பட்டதாக பொருள்படும். போவோர் வருவோர் எல்லாம் தவறாக பாடல் புனைந்துவிடுவார்கள். வரலாற்றில் பெரும் இழுக்காகிவிடும்.” என காரணம் கூறி திருமால் திருமகளின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

இதுவரையில் இல்லாத அளவு திருமகளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடையும் போது வந்த திருமகள் என்பதால் தானே எமது உரிமைகள் அடக்கப்படுகின்றன. சுவாமி! தாங்கள் மூவுலகத்தின் காப்பகம் என்றால் யாம் மூவுலகத்தின் கடாட்சியம். தாங்கள் மூம்மூர்த்திகளில் ஒருவரென்றால் யாம் மும்பெரும்தேவிகளில் ஒருத்தி. தாங்களும் மூவுலகிற்கும் காட்சி தந்து அருள்பாலிக்கிறீர்கள்….யாமும் அப்படியே. இருவரும் சமமாய் வீற்றிருக்க தங்களால் மறுக்கப்பட்ட இன்னொரு ஆதிசேடனை யாமே உருவாக்குவோம்” என திருமகள் உரைக்க வைகுண்டம் ஒருகணம் அதிர்ந்து போனது. ஆதிசேடனுக்கு மட்டும் ஒரே மகிழ்ச்சி. ஆனால் அதற்குதான் காது கேட்காதே. எனவே எப்போதும் போல அபோதையாக பார்த்தது.

திருமால் வழக்கம் போலவே சாந்தமாக சிரித்தார். ஆனால் இம்முறை அடிவயிற்றிலிருந்து எள்ளல் கலந்த ஓசை விட்டு விட்டு வெளிவந்தது. இப்படியொரு நிலையில் தனது நாதன் சிரிப்பதற்குக் காரணம் புரியாதவளாய் நின்றாள் திருமகள்.

திருமால் உபதேசத்தைத் தொடங்கினார்.

“தேவி! மூவுலகிலிருந்தும் நம்மை தரிசிப்பவர்களுக்கு நீ எமது அருகில் அமர்ந்து சேவகம் செய்வது போலதான் தெரியும். ஆனால் எமது தேவிக்கு யாம் தந்த இடம் அதுவல்ல. எப்போதும் நிரந்தரமான எம் இதயமே உமது இடமாக இருக்கிறது. எப்போதும் எம்மையே நினைப்பதால், தேவியே நீயே எமது முதல் பக்தையாக விளங்குகிறாய். ஆகவேதான் என் பக்தை என்ற முறையில் உன்னிடம் எமது லீலைகளைக் காட்டினேன். துணைவன் இருக்கும் இடமெல்லாம் துணைவிக்கும் முழு சமத்துவம் உண்டு. அதில் மனிதன் மட்டுமல்ல… யாம் அனைவருமே உள்ளடக்கம் தான் தேவி”.

கலைமகளுக்குக் கண்கள் கலங்கின. அந்த நீர் கண்ணில் தங்கியிருந்த கோவத்தின் இளஞ்சிவப்பை அகற்றியது. எழுந்த தோள் மெல்ல இறங்கியது. வலது காலின் பாதங்கள் இடது புறமாகக் கோணின.

“உமது உரிமைகளை நீ அனுபவிப்பதில் யாம் தடையாக இருக்க மாட்டோம்; இருக்கவும் கூடாது. அது நியதியற்றது. இதை உன் வாயால் உலக்குக்கு எடுத்துரைக்கவே இப்படி ஒரு நாடகம் செய்தோம். இனி இதே ஆதிசேடன் மீது நீயும் தாராளமாய் சயனித்திருக்கலாம். அப்போது யாம் உம்மருகில் அமர்ந்து சாமரை விசுருவேன் தேவி’.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் திருமகள் சட்டென்று அவரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டிநின்றாள். திருமால் பெருமூச்சு விட ஆதிசேடன் மட்டும் அழுதது.

4 comments for “ஆதிசேடன்

  1. vallavan
    March 11, 2015 at 11:33 am

    சிறுகதையைப் படித்து அசந்துவிட்டேன். மிக நேர்த்தியான மொழி. அழகான விவரிப்பு. பெண்ணியம் பேசும் அரசியல். வாழ்த்துகள் கங்காதரன்.

  2. mellisa Katrin
    March 11, 2015 at 11:39 am

    /பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடையும் போது வந்த திருமகள் என்பதால் தானே எமது உரிமைகள் அடக்கப்படுகின்றன. சுவாமி! தாங்கள் மூவுலகத்தின் காப்பகம் என்றால் யாம் மூவுலகத்தின் கடாட்சியம். தாங்கள் மூம்மூர்த்திகளில் ஒருவரென்றால் யாம் மும்பெரும்தேவிகளில் ஒருத்தி. தாங்களும் மூவுலகிற்கும் காட்சி தந்து அருள்பாலிக்கிறீர்கள்….யாமும் அப்படியே. இருவரும் சமமாய் வீற்றிருக்க தங்களால் மறுக்கப்பட்ட இன்னொரு ஆதிசேடனை யாமே உருவாக்குவோம்/ asantuvidden. vaalthukal Gangaturai

  3. கங்காதுரை கணேசன்
    March 13, 2015 at 8:52 am

    உங்களுடைய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  4. ஸ்ரீவிஜி
    April 8, 2015 at 2:51 pm

    கதையில் தமிழ்மொழி ஆளுமை மிக அற்புதம். அப்படி இப்படிச்சொல்லி இறுதியில் ஆண்ணின் பாதம்தானே பணிய வைத்துள்ளீர்கள். ! நல்லா இருக்கே லாஜிக்.!

Leave a Reply to கங்காதுரை கணேசன் Cancel reply