ஏமாளிகளின் தேசம்

அ.பாண்டியன்13-வது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் மலேசியர்களை முழுமையாக விட்டு அகலவில்லை. பல்வேறு வகையில் அரசியல் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மலேசிய ஜனநாயக ஆட்சி முறையை சீரமைத்து வெளிப்படையானதா மாற்ற வேண்டும் என்னும் இளையோர் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது.

மலேசிய அரசியலில் மறுமலர்ச்சி என்பது மிகவும் மெத்தனமாக நிகழக்கூடிய ஒன்றாகும். இந்நாட்டில் பல்வேறு இனங்கள் வாழ்வது நமது சிறப்பு என்று கூறிக்கொண்டாலும் அரசியல்வாதிகளுக்கு அதுவே துருப்புச்சீட்டாக அமைந்துவிடுவது வாடிக்கையாகி விட்டது. அடித்தட்டு மக்களின் ஞாயமான கோரிக்கைகள் கூட பல சமயங்களில் இனச் சாயம் பூசப்பட்டு ஒடுக்கப்பட்டு விடுகின்றன. ஹிண்ராஃப் பேரணி போன்றவை அப்படித்தான் கையாளப்பட்டு சிதைக்கப்பட்டன. கடந்த தேர்தல் முடிவுகளுக்குக் கூட இன துவேஷம்தான் காரணம் என்று அரசாங்க தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத் தக்கது.

ஆனால் மலேசிய தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடங்கப்பட்ட ‘பெர்சே’ இயக்கம் பல்லின ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. பல தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. மஞ்சள் நிறம் மங்களகரமான தொடக்கத்தையும் அரசியல் களத்தில் உருவாக்கியது. போராட்டம் இல்லாமல் புதுமை இல்லை என்பது உண்மையானது.

இந்த பெர்சே போராட்டத்துக்குப் பின்னனியில் செயல்பட்டவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். அவர்கள், திருமதி அம்பிகா சீனிவாசனும் ஏ. சாமாட் சைட்டும் ஆவர்.

ஏ.சாமாட் சைட் மலாய் இலக்கிய உலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். 1985 –ல் தேசிய இலக்கியவாதி அங்கீகாரம் பெற்றது உட்பட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மலாக்கா ஆளுனரிடம் டத்தோ பட்டம் பெற்றிருந்தாலும் அதை அவர் தன் பெயருக்கு முன் இணைத்துக் கொண்டதே கிடையாது. மலாக்காவில் பிறந்து(1935), சிங்கப்பூரில் வளர்ந்தவரான அவர் மலாய் இலகிய உலகில் தனி முத்திரை பதித்தவராவார். தாடிக்கார கவிஞரான இவர் தனது படைப்புகளில் மட்டுமின்றி தனது தோற்றத்தாலும் பலரால் நன்கு அறியப்பட்டுள்ளது சிறப்பு. நீண்ட சிகையும் தாடியும் கொண்ட இவர் மிக எளிமையாக உடுத்துபவராவார். சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய தொலைக்காட்சியில் புதிய விதிமுறை ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி நீண்ட முடியுடன் எந்த ஆண் கலைஞரும் தொலைக் காட்சியில் முகம் காட்ட அனுமதியில்லை. (நீண்ட முடி வைத்திருக்கும் ஆண்கள் சமுதாய சீர்க்கேட்டின் அடையாளமாம்!!). தொலைக்காட்சியில் தோன்ற வேண்டுமானால் முடியை வெட்டுக்கொண்டு வா! என்று தகவல் அமைச்சு கூறிவிட்டது. இமூடா போன்ற பல கலைஞர்கள் கோபப்பட்டாலும் முடியை வெட்டிக் கொண்டனர். ஆனால் சாமாட் சைட் (அப்போது தொலைக்காட்சி இலக்கிய நிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கெடுப்பது வழக்கம்) தன் சிகை அலங்காராத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு மலேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமர்ந்து கவிதை எழுதுவதும் அவற்றை தன் தனிபாணியில் அரங்கேற்றுவதும் இவரை மக்கள் அதிகம் அறிந்து கொள்ள வழிவகுத்துள்ளது. பன்முகக் கலைஞனான இவர் கவிதை, கட்டுரை சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய பணிகளோடு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் மிக்கவராவார்.

இவர் படைப்புகளில் அடித்தட்டு மக்களின் போராட்டங்களும் ஆளும் வர்க்கத்திற்கு அடிபணியாத உணர்ச்சியும் மேலிட்டு காணப்படுகின்றன. இரண்டாம் உலப்போரின் பாதிப்புகளும், சிங்கை நகர மக்களின் வாழ்க்கை போராட்டங்களும் இவர் படைப்புகளில் பரவலாகக் காணப்படுகின்றன. ‘சலீனா’ இவரது புகழ் மிக்க நாவல்களில் ஒன்று. இது இவரது முதல் நாவலும் கூட. வெளியிட்ட ஆண்டு 1961.

மூன்று தளங்களில் இயங்கும் இந்நாவல் சலீனா என்ற பாலியல் தொழிலாளியையும், ஹெல்மி என்ற நாயகனையும் சுற்றி நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்துகிறது. இதில் நம்மை கவரும் பல அம்சங்கள் இருந்தாலும் இதில் காட்டப்படும் தேர்தல் காட்சிகள் இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறன. அதோடு ஒரு பாலியல் தொழிலாளியை கதை நாயகியாக்கி அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை இலக்கியம் ஆக்கிய பெருமையும் ‘சலீனாவிற்கு’ உண்டு. மலாய் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களை முதன்மை படுத்தி எழுதியவர் ஏ.சாமாட் சைட் ஆவார்.

தேர்தல் வெப்பம் தனியாத இக்காலகட்டத்தில், ‘சலீனாவில்’ காணப்படும் தேர்தல் காட்சியை மட்டும் இங்கு சுட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆட்டு கிராமம் (kampong kambing) என்று ஒரு கம்பத்தை இந்நாவலில் சாமாட் படைத்திருக்கிறார். இது ஒரு குறியீட்டு தேசம். அப்பாவிகளும் ஏமாளிகளும் நிறைந்த தேசம். கதையின் காலம் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற நேரம். போர் முடிந்து அமைதி திரும்பிய காலம் என்பதால் ஜனநாயக முறையை நிலை நிறுத்த சிங்கப்பூரில் தேர்தல் நடைபெற திட்டமிடப்படுகிறது. அதன் தாக்கம் ‘ஆட்டு கிராமத்திலும்’ படர்கிறது. மக்கள் வரப்போகும் பொதுத் தேர்தல் குறித்தும் அவர்களின் பிரதிதியாக தேர்தலில் களம் இறங்கி இருக்கும் வேட்பாளர்கள் குறித்தும் ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். சில கிராம வாசிகள் துணிச்சலாக ஆளுவோரை விமர்சிக்கவும் செய்கின்றனர்.

அதே கம்பத்து வாசியான ஹெல்மி இந்த ஆரவாரங்கள் எதிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. அவன் உலகம் சோகமும் நிசப்தமும் நிறைந்ததாக இருக்கிறது. அவனது தாய் முற்றிய காசநோயால் அவதிப் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். அவனது காதலி சொல்லப்படாத காரணத்தால் அவனைப் பிரிந்து வேறு ஊருக்குச் சென்று விட்டாள். அவனது அக்காள் சலீனாவோ, இரண்டாம் போரின் போது வாழ்க்கையை இழந்தவள். காதலனால் கைவிடப்பட்டவள். வாழ வழி தெரியாமல் விபச்சாரியாகி கிளந்தானுக்கு சென்று விடுகிறாள். ஆனால் ஹெல்மிக்கு அவள் ஒருத்திதான் ஆதரவாக நம்பிக்கை ஊட்டக் கூடியவளாக இருக்கிறாள். அவள் எழுதும் கடிதங்கள் ஹெல்மிக்கு நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ள உதவுகின்றன.

இதற்கிடையில், ஆட்டுக் கம்பத்தில் தேர்தல் நாள் வந்துவிடுகிறது. தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து கிராம மக்களிடம் பல்வேறு அபிப்பிராயங்கள் நிழவுகின்றன. தாம் விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ‘சரி’ என்ற அடையாளத்தைத் தான் இடவேண்டும் ; ‘பிழை’ என்ற அடையாளத்தை போடக் கூடாது என்று சிலர் கருத்து சொல்கின்றனர். அப்படித்தானே பள்ளியில் படித்தோம் என்பது அவர்களது வாதம். சின்னத்தின் மீதே அடையாலமிடலாமா? என சிலர் கேட்கின்றனர். இப்படி பல்வேறு குழப்பங்களில் நாட்கள் நகர்ந்து தேர்தல் தினமும் பரபரப்பாக புளர்கிறது. மக்கள் ஓட்டு போட தயாராக இருக்கின்றனர். கம்பத்துக்குள் பல ரக கார்கள் நுழைகின்றன. கார்களில் வேட்பாளர்களின் ‘கைகள்’ வருகின்றனர். வாக்குச் சாவடிக்குச் கிராமத்து மக்களை மிகுந்த கனிவுடன் அழைத்துச் செல்கின்றனர். மூத்த குடிகள் பலர் முகமெல்லாம் பல்லாக காரில் ஏறிக் கொள்கின்றனர். கிராமத்துப் பொடியன் ‘பூலாட்’, அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு காரில் பயணம் செய்ய கொள்ளை பிரியம். யாரெல்லாம் தன்னை பயணத்துணையாக அழைக்கிறார்களோ அவர்களோடெல்லாம் காரில் ‘உல்லாச பயணம்’ செய்கிறான். கிராமத்து மக்களுக்கும் தேர்தலின் முக்கியத்துவத்தை விட கார் பயணம் மிகுந்த கழிப்பூட்டுவதாக இருக்கிறது.

வேட்பாளர்களின் ஆட்கள் பெயர் பட்டியலுடன் ஹெல்மியின் வீட்டுக்கு வருகின்றனர். அவனது தாயின் பெயர் பட்டியலில் இருப்பதால் அவரை அழைத்துச் செல்ல அனுமதி கேட்கின்றனர். ஹெல்மி தன் தாய் மருத்துவமணையில் இருக்கும் விபரத்தைக் கூறினாலும் அவர்கள் நம்பத்தயாராக இல்லை. ஹெல்மி வேண்டுமென்றே சதி செய்வதாக குற்றம் சாட்டி அவனுடன் வம்பாடுகின்றனர். சிலர் மருத்துவமனைக்கே அவரை அழைத்து வர ஓடுகின்றனர். ஒரே ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை அவர்கள் கூறுகின்றனர். மிகுந்த மனக்குழப்பமும் கோபமும் கொண்ட ஹெல்மி “ இப்போது இவ்வளவு பரிவு காட்டும் நீங்கள் என் தாய் நோயில் வாடிக் கிடந்த போது ஏன் உதவிக்கு வரவில்லை” என்று சாடுகிறான்.

அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரி ஹெல்மியின் அன்னையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஹெல்மியை மருத்துவர் உடனே அழைத்ததாகவும் கூறுகிறான். ஹெல்மி உடனடியாக மருத்துவமனைக்கு விரையும் போது பூலாட் ஓடி வந்து “அண்ணே காரில் போகப் போரிங்களா?, நானும் வரட்டா? என்று அப்பாவித்தனமாக கேட்கிறான்.

அடித்தட்டு மக்களின் ஏமாளித்தனதிற்கு அளவே இல்லை என்பதை இக்காட்சிகள் நன்கு உணர்த்துகின்றன. ஆளும் வர்க்கம் தங்கள் காரியம் நிறைவேற மக்களை எல்லா வகையிலும் ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. ‘ஓட்டுப் போடுதல்’ என்ற ஒரே ஒரு மக்கள் உரிமையையும் உணராத மக்கள் கூட்டம் 13வது பொதுத்தேர்தல் வரை நம் கண்முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது நம்மை திக்கு முக்காடச் செய்யும் உண்மை. சலீனாவில் காரில் பயணம் செய்ய ஆசைபட்ட மக்களுக்கும், இன்று 500 வெள்ளிக்கு ஆசைபட்டு ஓட்டுரிமையை விற்ற மக்களுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. விழிப்புணர்வும் புதுச்சிந்தனையும் இல்லாத வரை ஏய்ப்பதும் ஏய்க்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

2 கருத்துகள் for “ஏமாளிகளின் தேசம்

 1. ஸ்ரீவிஜி
  June 5, 2013 at 4:38 pm

  ரசித்துப்படித்தேன் பாண்டியன். நல்ல எழுத்து நடை. அற்புதமான உவமை. நல்ல இலக்கியவாதியின் அறிமுகம் வேறு. நன்றி. தொடருங்கள். உங்களின் எழுத்து வசீகரமிக்கது.

  • அ.பாண்டியன்
   June 5, 2013 at 11:52 pm

   மிக்க நன்றி ஶ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...