காவி ஆடையிலிருந்து ஒரு புதுக் குரல்

swamy book coverஇந்நூலிலுள்ள கட்டுரைகளை எச்சரிக்கை உணர்வுடன் வாசித்தேன். ஒரு நூலைப் படிக்கும் போது எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. சுவாமியின் காவி ஆடை அந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.

நழுவும் தழுவல்கள், வாழ்க்கைக்கு வாழ்த்துகள், வீழ்வேன் என நினைத்தாயோ ஆகிய கட்டுரைகளில் மிகவும் முக்கியமான விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். குறிப்பாக அன்பு, உறவு பற்றிய விசயங்களுக்கு நூலாசிரியர் தருகிற விளக்கம் புதுமை. மனித உறவுகள் ஒரு போதும் சுமூகமாக இருந்ததே இல்லை. சுமூகமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமும். உண்மையில் அது சாத்தியப்படாமலேயே போய்விடுகிறது. ஏன்? இதுதான் கட்டுரையின் கேள்வி. இதுவரை மனித குலம் கண்டறிய முடியாத புதிராக உள்ள கேள்வி இதுதான். கிடைக்கப்பெறவில்லை என்பதற்காக தேடாமல் இருக்க முடியாது. அந்த வகையில் தனக்கான கேள்விகளை தன் கட்டுரைகளின் வழியே கேட்கிறார் சுவாமி. நம்மையும் கேள்விக் கேட்கத் தூண்டுகிறார்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற சாமி படங்கள், சிலைகள், உருவங்கள் பெறுகிற மரியாதையை, கௌரவத்தைச் சக மனிதர்கள் பெறுவதில்லை. பெற்றுவளர்த்த தாய் தந்தையரைவிட காகிதத்தில் அச்சிடப்பட்ட படங்கள் கூடுதல் மரியாதை பெறுகின்றன; பூஜிக்கப்படுகின்றன. வீட்டிலுள்ள மனிதர்களுடன், உறவினர்களுடன் பேச மறுக்கிறார்கள். ஆனால், ஒரு பொம்மையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்து பூஜை செய்கிறார்கள். இந்த முரண் எப்படி நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரைகள் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கேள்வி. கட்டுரை ஆசிரியர் ஒரு சாமியார்தான். – துறவிதான். இதுதான் உண்மையான முரண். புனிதங்களுக்கு எதிரான குரல். இது அவசியமான குரல். காலத்திற்குத் தேவையான குரலும் கூட.

மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்பை ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகின்றனர்; வெளிப்படுத்துகின்றனர். வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பை உருவாக்குவது; இதுதான் சுவாமிக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. அந்த வழியில் உருவான ஒன்றுதான் ‘ கூலிம் தியான ஆசிரமத்தில் நடைப்பெறும் பிரவீனா பாலர்ப்பள்ளி’. சுவாமியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எழுத்திலும் பெரிய அரைக்கூவல்கள் ஏதுமில்லை. “வீட்டுக்கொரு மரம்” என்பது போன்றோ, “வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்குவோம்” என்றோ “ஆன்மீக மனித மீட்சிக்கு இதுதான் புனித வழியென்றோ” என்று எந்த இடத்திலும் எதையும் முழக்கமிடவில்லை. தனது எழுத்தின் வழியே அவர் திரும்ப திரும்ப வலியுறுத்துவது “ அன்பாக இருப்பது எப்படி, அன்பை வெளிப்படுத்துவது” எப்படி என்பதைத்தான்.

“வாழ்க்கை ரொம்ப பெருசு. இதில் நாம் தொலைந்து போகலாம். நம்மைத் தேடியும் கண்டு கொள்ளலாம்” என்று வாழ்க்கைக்கு வாழ்த்துகள் கட்டுரையில் கூறுகிறார்.

இருத்தலுக்கும் இல்லாமைக்குமான இடைவெளியில் நிகழ்கிறது மனித வாழ்க்கை. இந்திய தத்துவ மரபு இல்லாமை, நிலையாமை பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறது. வாழ்க்கையின் பொருளும் முடிவும் நமக்குத் தெரியும். ஆனால், சூது, வஞ்சம், துரோகம் எப்படி நிகழ்கிறது? இதுதான் இக்கட்டுரையின் கேள்வியும். அன்பாக இருப்பது எப்படி, அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்று தெரியாதால் ஏற்பட்ட விளைவு என்கிறார் சுவாமி. அன்பை வெளிப்படுத்தவும், பகிர்ந்துகொள்ளவும் மனிதர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்?

“வாழ்க்கையைத்தான் புரிந்து கொள்ள முடியாதே தவிர, வாழ்க்கையில் நமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைப் புரிந்து கொள்வதே, வாழ்க்கையின் புரிதல்களில் மேலானது” என்று வாழ்க்கைக்கு வாழ்த்துகள் என்ற கட்டுரையில் எழுதுகிற சுவாமி, சாத்தியப்படாத அர்த்தங்கள் என்ற கட்டுரையில் “ வாழ்க்கை அர்த்தமற்றது என்று சொல்வதில் அர்த்தமில்லை என்பதுதான் வாழ்க்கையின் அர்த்தம்” என்று 1947-இல் நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போரின் கருத்தினை மேற்கோளாகக் காட்டுகின்றார்.

நம்முடைய வாழ்க்கை என்பது எங்கோ இல்லை. நமக்குள்தான் இருக்கிறது. அதுதான் உள்முக பயணம் என்பது. இதைத்தான் மதவாதிகள் ஆன்மீகப் பயணம் என்கிறார்கள். அன்பாக இருப்பதற்குப் படிப்பு வேண்டுமா அல்லது தகுதி வேண்டுமா என்பதுதான் இங்கு கேள்வியாக இருக்கிறது. மனித வாழ்க்கை என்பது என்ன, அதற்கான பொருள், அர்த்தம் என்ன என்பதுபற்றி விரிவாக எழுதியும், பேசியும் இருக்கிறார்கள். மனித வாழ்க்கை முழுமையடைய வேண்டும் – அது எதனால் நிகழும்? இதுதான் நூற்றாண்டுகளாக தேடப்படும் பெரிய ஆராய்ச்சியாக இருக்கிறது. முடிவு – அன்பாக இரு. அன்பை வெளிப்படுத்தக் கற்றுக் கொள் என்பதுதான். இந்த முடிவை நோக்கித்தான் இந்நூலிலுள்ள கட்டுரைகள் பயணப்பட்டுகின்றன.

நிறைவு, நிறைவின்மை எல்லாமும் மனதின் கற்பனைகள்தான். ஆசைகள்தான். துறவு என்பதும் ஆசைதான். துயரங்களிலிருந்து மனித மனதிற்கு விடுதலை உண்டா? உண்டு என்று மனித மனம் கற்பனை செய்கிறது என கட்டுரை ஆசிரியர் அழகாக விளக்கிச் சொல்கிறார். சுவாமி மனதின் வெறுமையை, ஆசையைப் பற்றி மட்டும் பேசவில்லை. தமிழ்ப்பள்ளி, கோவில்கள், தேசப்பற்று, கல்வி, ஊடகம் என சமூகத்தின் அனைத்து தரப்பு விசயங்களையும் மனச்சாய்வின்றி ஆராய்கிறார். மனச்சாய்வின்மைதான் இங்கு முக்கியம். “ஒரு புனைவு என்பது வாழ்க்கையின் உச்சங்களை மட்டும் பதிவு செய்வதல்ல; சரிசமமாக கீழ்மைகளையும் கிளறிப் பார்ப்பது” என்று சுவாமி எழுதுகிறார். இந்த சமநிலைதான் நாம் சுவாமியிடமிருந்து கற்க வேண்டிய பாடம்.

இன்று சாமியார்கள் கார்பரேட் நிறுவனங்களாகிவிட்டனர். காவி உடைகள் இன்று சமூக கலவரத்தைத் தூண்டுவதற்கான அடையாளமாகியிருக்கிறது. கோவில், மதம், அதுசார்ந்த சடங்குகள் இன்று பொது வெளியில் ஓயாமல் அச்ச உணர்வை, பீதி உணர்வை விதைக்கின்ற இக்காலத்தில் – சுவாமியின் இக்கட்டுரை நூல் – நமக்கு புது நம்பிக்கையை, புது வெளிச்சத்தை தருவதாக, ஆன்மீகம் குறித்தப் புதிய பார்வையைத் தருவதாக இருக்கிறது. இதுபோன்ற எழுத்துகள்தான் இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

ஆசிரியர்களிடம் மட்டுமல்ல, இலக்கியவாதிகளிடம், அறிவியல் அறிஞர்களிடம் மட்டுமல்ல, ஆன்மீகவாதிகளிடமும் நாம் கற்க முடியும் என்பதற்குச் சுவாமியின் குறையொன்றுமில்லை சான்று.

நூல்: குறையொன்றுமில்லை

நூலாசிரியர்: சுவாமி பிரமானந்தா சரஸ்வதி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...