பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல்

உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக
வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின்
முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும்
அம்மத்தாவின் வீட்டு வாசலில்
மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில்
தனியாகவே வாழும் அம்மத்தா
முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு
உள்ளங்கையை ஊன்றக் குடுத்து
சாய்த்தவாறே அம்பலம் சுற்றி
அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட பேரக்குட்டனுக்கு
அமுதூட்டி திரும்பியிருக்கிறாள்
மகளிருவரோடு பேரன்பேத்தி மருமகனுக்கு
விறகடுப்பூதி விருந்தாக்கிப் பரிமாறி
மரமுலுக்கி மண்படிய விழுந்த பப்பாளிகளை
ஆய்ந்தரிந்து உண்டதுபோக எறிந்த துண்டங்களை
கொத்திப் பறக்குது அண்டங்காக்கா
மென்பருத்தி குற்றாடை வருடும்
கட்டித்தயிர் சருமம் மேலே
சொர்ணத்தில் செஞ்ச அரைஞாண்
நெகிழ்ந்திறங்கும் இடுப்போடு
பஞ்சவர்ணத் தண்டை ஆடும்
வெள்ளரிக் கால்களைத் தூக்கி
இளஞ்சிவப்பு இல்பல்லீறு தெரிய
அம்மணப் புன்னகை காட்டி
சரியும் குறும்புக் குட்டனை
இடது கையில் இறுகப்பற்றி
வலது கையால் மயிற்பீலி விசிறியாட்டும் அம்மத்தா
கம்பீரமாகவே போஸ் குடுக்கிறாள் போட்டோவுக்கு
படல் வேய்ந்த தொடியோரம்
அடிமரத்தில் காய்த்துத் தொங்கும் சக்கை
கனியாகி விடுமாம் வரும் சித்திரைக்கு
காசுகூட்டி கட்டிய கோயில்
நடைதிறந்து தீபங்காட்டி
நெற்றியில் விபூதியிட்டு
வந்தவர்களை வழியனுப்புகிறாள் பூசாரி அம்மத்தா
வெப்பம் தணிந்து வீசும் தென்றலுக்கு
பூத்த செம்பருத்தி சிரிக்கும் செடிக்கருகே
சந்தன பின்னமதி வளரும் வானத்தை
தொடியில் மல்லாந்து வெறிக்கும் கிணற்றுக்குள்
தெறிக்குது ஒருதுளி சந்தோஷம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...