பேனாவை முறிக்கும் அதிகார கரங்கள்

513758படைப்புலகம் கலை நயமும் அழகியலும் சார்ந்தது என்றாலும் அது விட்டுச் செல்லும் தாக்கமானது அதிகார வர்க்கத்திற்கு எப்போதும் அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கிறது. தீவிர நிகழ்த்துக் கலைகளாக இருந்தாலும் இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் பொதுபுத்தி சார்ந்த போக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சவால் விடுவதாகவும் மாற்றுச் சிந்தனைகளை முன்னெடுப்பதாகவும் இருப்பதால்தான் அரசுகள் படைப்பாளர்கள் மேல் அவ்வப்போது நெருக்கடிகள் கொடுத்தவண்ணம் இருக்கின்றன.

அரசுகளால் இலக்கியப் படைப்புகள் தடைசெய்யப்படுதல் என்பது மிக கவனமாக ஆராயப்படவேண்டிய ஒரு நிகழ்வாகும். பொதுமக்கள் வாசிக்கத் தக்கன அல்ல என்று அறிவிக்கப்படும் இலக்கிய பிரதியின் உள்ளடக்கம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாகவோ அரசு ஏற்றுக் கொண்ட மத பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரானதாவோ இருக்கக் கூடும். ஆயினும், அந்தப் படைப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும் சிறுபான்மை மக்களின் ஞாயங்களைப் பேசும் எழுத்தாகவும் இருக்கும்போது அதிகார தரப்பின் நிலை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

இலக்கிய உலகுக்குத் தடை என்பது ஒரு துக்க நிகழ்வாக அமைந்தாலும் சமுதாய வெளியில் தடை என்பதே எதிர்மறை விளம்பரமாக அமைந்துவிடுகிறது. மேலும் இலக்கியத்திற்கு விதிக்கப்படும் தடை, சமூக பண்பாட்டு அரசியலில் ஒரு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றது.

மேற்குலக இலக்கியங்களிலும் அரசியல் மத சர்ச்சை காரணங்களால் பல இலக்கியப் படைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. கம்யூனீச சித்தாந்தத்திற்கு எதிராக செயல்பட்ட ஐரோப்பிய நாடுகள் பல மாக்சிய எழுத்துகளைத் தடை செய்தன. ஆயினும் நவீன இலக்கிய உலகில் அரசியல் காரணங்களைவிட சமயக் காரணங்களுக்காகத் தடைச் செய்யப்பட்ட படைப்புகளே அதிகம் எனலாம்.

தமிழ் இலக்கியச் சூழலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பல இலக்கிய படிவங்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. மகாகவி பாரதி உட்பட பல தேச விடுதலை போராட்டவாதிகளின் படைப்புகள் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த எழுத்துகளைத் தாங்கி வெளிவந்த ‘இந்தியா’ போன்ற இதழ்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அண்மையில், மாதொரு பாகன் நாவல் சர்ச்சையின் காரணமாக பெருமாள் முருகன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கூட ஒருவகையில் அதிகார வர்க்கத்தினர் விதிக்க முயன்ற மனோவியல் தடை என்றே கூறமுடியும்.

படைப்புகள் தடை செய்யப்படுதலையும் தாண்டி படைப்பாளியின் உயிருக்கே பிணை வைக்கப்படுதலும் சில நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். இந்திய நாட்டவரான சல்மான் ருஷ்டியின் “சைத்தானிக் வேர்சுஸ்’ என்னும் நாவல் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் இஸ்லாமிய மதத்தீவிரவாதிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டார். பாதுகாப்பு கருதி அவர் பிரிட்டனில் அடைக்கலம் பெற்று தொடர்ந்து எழுதிவருகிறார்.

வங்காளதேச பெண் படைப்பாளியான தஸ்லீமா நஸ்ருதீன் இஸ்லாம் மதத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் அதிகார கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால் அவரது படைப்புகள் அந்நாட்டு அரசால் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது.

மலேசிய நாட்டில் இலக்கியப் படைப்புகள் அரசியல் காரணமாகவும் இன மத கொள்கைகள் காரணமாகவும் அவ்வப்போது உள்துறை அமைச்சால் தடை செய்யப்படுகின்றன. பொதுவாக மலேசியாவில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கம்யூனீஸ பரப்புரை கருத்துகளுக்குக் கடுமையான தடைச் சட்டம் உள்ளது. அதேபோல் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளுக்கும் இங்கு தடை உள்ளது. ஆயினும் இனப் பதற்றம் காரணமாக சில வரலாற்று உண்மைகளும் மறைக்கப்படும் நிலையும் ஏற்படுவது உண்டு. உதாரணமாக, வழக்கறிஞர் ஆறுமுகம் அவர்கள் எழுதிய ‘கம்போங் மேடான்’ என்னும் நூல் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. கம்போங் மேடானில் மலாய்க்காரருக்கும் இந்தியருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகை இனக்கலவரமாக வெடித்த துயரத்தையும் இச்சூழலுக்குப் பின்னே இருந்து செயல்பட்ட அரசியலையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. ஆயினும் இனப் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இந்நூலை அரசு தடை செய்துள்ளது.

அந்த வகையில் அண்மையில் அரசு தடை செய்திருக்கும் மலாய் எழுத்தாளர் ஃபைசால் தெஹ்ரானி (Faisal Tehrani) ஆகும். இவர் சமகாலத்தில் மலாய் இலக்கியப் பரப்பில் அறியப்படும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். 1974-ல் கோலாலம்பூரில் பிறந்த இவர், நாவல், சிறுகதை, மேடை நாடகம் ,கட்டுரைகள் போன்ற பல தளங்களில் எழுதிவருகிறார். ஒரு முதுகலை பட்டதாரியான இவரது படைப்புகள், இஸ்லாமிய சமயம் மற்றும் மலாய் மக்களின் பண்பாட்டு அடிப்படைகளை ஆராயும் விதமாக அமைந்துள்ளன. மலாய் தொன்மங்களின் வழி சமகால வாழ்க்கைச் சிக்கல்களை இவர் தன் படைப்புகளில் அலசுகிறார்.

இவரது நான்கு நாவல்கள் கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டன. இவரது எழுத்துகள் ஷியா முஸ்லீம்களுக்கு ஆதரவானதாகவும் சன்னி முஸ்லீம்களின் நம்பிக்கைகளுக்கு மிரட்டலாக இருப்பதாகவும் இஸ்லாமிய மன்றம் கூறியதால் உள்துறை அமைச்சு இத்தடையை கொண்டுவந்துள்ளது. ஆயினும் இவர் எழுத்துக்குத் தடை விதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2011 ஆம் ஆண்டு ‘Sebongkah Batu di Kuala Berang’ என்னும் இவரது நாவல் முதல் முதலாக தடையை எதிர்நோக்கியது. வரலாற்றில், சுதந்திர மலேசியாவில் ஒரு உள்நாட்டு எழுத்தாளரின் படைப்புக்குத் தடை விதிக்கப்படுவது அதுவே முதல் முறையாகும். ஆங்கில ஆட்சி காலத்தில் ‘பாக் சாக்கோ’ (Pak Sako) வின் எழுத்துகள் தடைவிதிக்கப்பட்டன என்பது வரலாறு. தொடர்ந்து ‘Perempuan Nan Bercinta’ என்னும் நாவல் 2013 ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இந்த நாவலை பிரதமர்தான் ஒரு விழாவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக கடைசியாக இந்த ஆண்டு இவரது மேலும் நான்கு படைப்புகள் தடையைச் சந்தித்து உள்ளன. ஆகவே மலேசியாவில் அதிகம் தடைசெய்யப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரராக ஃபைசால் திகழ்கிறார்.

தன் எழுத்துகள் தொடர்ந்து தடை செய்யப்படுவது குறித்து மலேசியா கினிக்கு இவர் வழங்கிய பேட்டியில் “தடைகள் என் கரங்களைக் கட்டிப்போட முடியாது. என் எழுத்துகள் தடை செய்யப்படுவதால் நான் பெருமைப்படுகிறேன். மேலும் வரலாற்றில் அரசுகளால் தடை செய்யப்பட்ட எழுத்துகளே நோபல் பரிசுக்கு உரியனவாக அமைந்துள்ளன. நான் தொடர்ந்து சன்னி முஸ்லீம் சிந்தனைகள் குறித்த எனது ஆய்வுகளை உலக ஆய்வேடுகளுக்கு எழுதுவேன்” என்று கூறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதனும் பொதுபுத்தி சமுதாய வட்டத்துக்குள் இருப்பதைக் கட்டாயப்படுத்துவதே அரசு அதிகாரங்களின் கவனமாக அமைந்துள்ளது. கல்வி, குடும்பம், விதிக்கப்பட்ட சமூக ஒழுக்கங்கள், சமுதாய அமைப்புகள் போன்ற பல வழிகளிலும் மனிதன் சராசரியாக்கப்படுகின்றான். ஆயினும் படைப்புக் கலை என்பது கலக மனத்தின் வெளிப்பாடாகவும் அதிகாரங்களைக் கேள்விக்கு உட்படுத்துதலை தன் அங்கமாகவும் கொண்டுள்ளது. அது அதிகாரங்களின் அமைதியைக் குலைப்பதாயும் பலம் இழக்கச் செய்வதாயும் இருப்பதால் சட்டத்தின் வழியும் மனோவியல் தாக்குதல்களின் வழியும் தன் நிலையைப் பாதுகாத்துக்கொள்ள அதிகாரங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன. எனினும் மனித மனதின் இயல்பே மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதாயும் சராசரிகளுக்குள் இருந்து தன் நிலையை விடுவித்துக் கொண்டு தொடர்ந்து முன்னோக்கி நகர்வதாயும் இருப்பதால் எந்த இரும்பு கரங்களும் பேனா முனையை உடைக்க முடியாமல் திண்டாடவே செய்கின்றன.

பின் குறிப்பு: ஃபைசால் தெஹ்ரானியின் (Faisal Tehrani) சில படைப்புகள் குறித்த பார்வையை அடுத்த மாத வல்லினத்தில் வாசிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...