இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

basheer-drawing-by-josh-1sபல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித், சுகரா இருவருமே ஒரே தெருவில் வசிக்கும், ஒரே பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். மஜித்தின் குடும்பம் வசதியானது. சுகராவின் குடும்பம் வறுமைப்பட்டது. மஜித் படிப்பில் சுதாகரிப்பு இல்லாதவன். சுகரா மகா புத்திசாலி. “ஒன்றும் ஒன்றும் எத்தனை?” என்று ஆசிரியர் கேட்க, “சற்று பெரிய ஒன்று” என்று மஜித் சொல்ல ஆசிரியர் மட்டுமல்ல, வகுப்பறையே சிரிக்கிறது. ஆனால், மஜித்தின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் சற்று பெரிய ஒன்றுதானே வர முடியும்? மஜித் எப்போதெல்லாம் வீரம் காட்டுகிறானோ, அழ வைக்கிறானோ அப்போதெல்லாம் ‘சற்று பெரிய ஒன்று’ என்று சொல்லி மஜித்தைச் சுகரா தலைக்குனிய வைப்பாள்.

      நாவலின் முதல் பகுதி மஜித், சுகராவினுடைய குழந்தைப் பருவ விளையாட்டுக்களால் நிரம்பியிருக்கின்றன. இருவருக்குமான மோதல், சண்டை, கசப்பு, அன்பு என்று சின்னச்சின்ன விசயங்களின் வழியே காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. ஆறாம் வகுப்பிற்கு மஜித் வெளியூருக்குப் படிக்கப் போகிறான். ஆனால், சுகரா போகவில்லை. காரணம் அவள் ஒரு முஸ்லீம் குழந்தை; மற்றொன்று வறுமை. பள்ளிக்குச் சுகரா வராதது மஜித்தைப் பெரிதும் பாதிக்கிறது. மஜித் எப்போதும் தன்னுடைய தாயுடன்தான் இருப்பான். அவள் சொல்லக்கூடிய ஜீன் கதைகளைக் கேட்பான். பிறகு அந்தக் கதைகளில் வரக்கூடிய பெண்களைக் கனவு காண்பான். எல்லாரையும்விட அவனுக்கு அழகாக இருப்பது சுகராதான். முஸ்லீம் குடும்பங்களில் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகள், ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், பெண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை மிக நேர்த்தியாக போகிற போக்கில் ப   ஷீர் சொல்கிறார். எதுவும் வலிந்து சொல்லப்படவில்லை. போகிறபோக்கில்தான் சொல்கிறார். கதை நிகழும் காலம், அப்போதைய சமூக சூழல், வறுமை, மனிதர்களுடைய குண இயல்புகள் கதையின் போக்கிலேயே, ஒன்றிரண்டு வாக்கியத்திலேயே சொல்லப்படுகிறது.

      இளம் பருவத்துத் தோழி நாவலில், சிறுவர்களுடைய உலகம், பெரியவர்களுடைய உலகம், வயதானவர்களுடைய உலகம், பணக்காரர்களுடைய உலகம், ஏழைகளுடைய உலகம் என்று பலதும் இருக்கிறது. மஜித், சுகரா, இருவருடைய குழந்தை பருவம், இளமைப் பருவம், இளமை வற்றிய பருவம் என்று மூன்று நிலைகளிலும் நாவல் நடக்கிறது. வறுமை இருந்தாலும் சுகராவிற்குக் குழந்தைப்பருவம் செழிப்பானதுதான். குழந்தைகள் ஏன் வளர்கிறார்கள்? அந்த வளர்ச்சிதான் துயரத்தைக்கொண்டு வருகிறது. மஜித்தும் சுகராவும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பொறுப்பு வந்துவிட்டது. மஜித் சம்பாதிக்க வேண்டும். சகராவிற்குக் கல்யாணம் நடக்க வேண்டும். மஜித்திற்கு எப்போதுமே கனவுலகம்தான் பிடித்திருக்கிறது. நிஜ உலகத்தில் அவனால் வாழ முடியாது. சுகராவைப்பற்றி கனவு காண்பதுதான் அவனது வாழ்க்கையாக இருக்கிறது. தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் மஜித் பல ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றுகிறான். அந்த அலைச்சலில் கிராம வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்குமான வேறுபாட்டை உணர்கிறான். எங்கு வாழ்ந்தாலும் எதிலும் விட்டேத்தியான மனம் மஜித்திற்கு. எதிலும் ஒட்ட மறுக்கிறது. அவன் திறமையானவன் இல்லை. ஆனால் நல்லவன். நீண்ட காலத்திற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்புகிற மஜித்திற்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. ஜாமீன்போட போய் அப்பா சொத்தை இழந்துவிட்டார். குடும்பம் சோற்றுக்குத் திண்டாடுகிறது. சுகராவிற்குத் திருமணமாகிவிட்டது. மஜித்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இரண்டு தங்கைகளுக்குத் திருமணம் செய்யவேண்டும். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. சுகராவைப்பற்றி கனவு காண்பதைத் தவிர.

      வறுமை மனிதர்களை நாகரீகமற்றவர்களாகவும், சண்டாளர்களாகவும் மாற்றுகிறது. மஜித்தின் குடும்பத்தில் அதுதான் நிகழ்கிறது. மதமும், மத நம்பிக்கையும் எந்த உதவியையும் செய்யவில்லை. எல்லா செல்வந்தர்களும் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். பஷீர் பசியின் வழியே, துயரத்தின் வழியே இந்தக் கேள்வி கேட்கிறார்.

      எந்தப் பாவமும் செய்யாத மஜித்தும் சுகராவும் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் ஏன் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. எதையும் செய்யாத கடவுள் எதற்கு? மதம் எதற்கு? அது குறித்த நம்பிக்கைகள் எதற்கு? இக்கேள்விகள் நாவலில் திட்டமிட்டு பேசப்படவில்லை. பசியின் வழியாக, கண்ணீர் வழியாக கேட்கப்படுகிறது. கேள்வி கேட்கப்படுகிறது என்பதையே கவனமாகப் படித்தால்தான் புரியும்.

      மஜித் எடுக்கிற எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகின்றன. முதலில் விட்டேத்தியாக வீட்டைவிட்டுப் போகிறான். இரண்டாவதுமுறை வீட்டைக் காப்பாற்ற, வறுமையிலிருந்து மீள, சுகராவைத் திருமணம் செய்துக்கொள்ள. நிஜத்தில் எதுவுமே நடப்பதில்லை. பம்பாயில் சிறுசிறு வேலைகளைச் செய்கிறான். அது அவன் சாப்பிட மட்டுமே உதவுகிறது. ஒரு விபத்தில் காலை இழந்துவிடுகிறான். எல்லா நம்பிக்கையும் பொசுங்கி போகிறது. தன் அப்பாவினுடைய சாவிற்குக்கூட அவனால் ஊருக்குப் போகமுடியவில்லை. வீட்டில் நிரந்தரமாக தங்கிவிட்ட பசியைப் போக்க முடியவில்லை. ஓயாமல் கணவனிடம் அடிப்பட்டு சாகும் சுகராவைக் காப்பாற்ற முடியவில்லை. வயதுக்கு வந்த தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அவனுக்கு நடக்ககூட முடியாத நிலை. ஊனமான மஜித். ஒற்றைக்கால் மஜித். இப்போது அவன் செல்வந்தன் அல்ல. பிச்சைக்காரன். எல்லா துயரங்களையும் மீறி அவனுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் சுகராவைப்பற்றிக் கனவு காண்பது. கனவு எதைத் தரும்? கனவு எதையும் தராது என்பதுதான் அதனுடைய மகத்துவம், பெருமை.

      முகமது பஷீர் ஒரு துயரக்கதையைத்தான் எழுதியிருக்கிறார். துயரம் என்று சொல்லாமல். மஜித், சுகராவினுடைய இரண்டு குடும்பத்தின் கதை மட்டுமல்ல இது. அந்த ஊரின் கதை. அந்தக் காலத்தின் கதை. பஷீர் எதையும், விவரித்து விளக்கமாக சொல்வதில்லை. மணிகளைக் கோர்ப்பதுமாதிரி சின்னச்சின்ன விசயங்களின் கூட்டுக்கலவையாக நாவலை எழுதியிருக்கிறார். மனித மனங்களின் நிஜமான இயல்புகளை, எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எழுதுகிறார். பெரியபெரிய வார்த்தை சேர்க்கைகள் இல்லை. வீண் ஆடம்பர, அலங்கார வார்த்தைகள் இல்லை. எளிய வார்த்தைகள். ஆனால், மனதை நெகிழ வைப்பவை. இளம் பருவத்துத் தோழி நாவலை நாம் வெறும் காதல் கதை என்று மட்டுமே பார்க்க முடியாது. குழந்தைகளுடைய மன உலகு, அவர்களுடைய கற்பனை உலகு, அது தரும் சுகம்; அந்த உலகம் உடைந்து நொறுங்கும்போது ஏற்படும் வலி, கண்ணீர் எவ்வளவு துயரமானது? என எல்லாம் எளிய வார்த்தைகளில். மிகப்பெரிய ஆக்கங்கள் எல்லாமே எளிமையாகத்தான் இருக்கின்றன. மஜித் கண்டுபிடித்த சற்று பெரிய ஒன்றும் சரி, மஜித்தும், சுகராவும் மாம்பழம் பறித்த மரமும் சரி. அதனுடைய நிழலும் சரி நம்மை எப்போதும் உறுத்தும். நினைவில் நிற்கும்.

      பஷீர் தேர்ந்த கதைச் சொல்லி. எவ்வளவு பெரிய விசயத்தையும் சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிற ஆற்றல் படைத்தவர். ஒன்றிரண்டு வாக்கியங்களிலேயே பாத்திரங்களை உருவாக்கிக் காட்டுபவர். ஒன்றிரண்டு வாக்கியங்களில் உருவாக்கப்பட்டாலும் கதையில் அந்தப் பாத்திரங்கள் சாவதில்லை. கதை முழுவதும் உயிரோட்டமாகவே வாழ்கின்றன. அப்படி உருவான பாத்திரங்களில் மஜித்தின் அம்மா முக்கியமானவர். அவர் அபூர்வமாகத்தான் பேசுவார். அந்த வார்த்தைகளில்தான் எவ்வளவு கனிவு, அன்பு. சக மனிதர்களிடம் அன்பையும், கனிவையும் ஏற்படுத்தத்தான் இலக்கிய படைப்புகள் எழுதப்படுகின்றன. இளம் பருவத்துத் தோழி – மனிதர்களை அன்பாகவும், கனிவாகவும் இருக்க கோருகிறது. அன்பாகவும், கனிவாகவும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறது. போதனையாக இல்லாமல், பிரச்சாரமாக இல்லாமல். மனிதர்களுக்கு அன்பாக இருப்பது எப்படி என்றுதான் தெரிவதில்லை. பணம் ஈட்ட, பொருள் ஈட்ட மட்டும் தெரிகிறது.

      பஷீர் எவ்வளவு மகத்தான எழுத்தாளர் என்பதை இளம் பருவத்துத் தோழி – நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்கள். மஜித்திற்கும், சுகராவிற்கும் எப்போதும் நம் நெஞ்சில் ஒரு இடம் உண்டு. அவர்கள் கொண்ட காதலுக்காக; அவர்கள் பட்ட துயரத்திற்காக; அவர்கள் விட்ட கண்ணீருக்காக; மஜித்-சுகராவின் காதல்; மானுட காதல்; மானுட துயரம். அது எக்காலத்திற்குமானது.


இளம் பருவத்துத் தோழி (பால்யகால சகி) – (நாவல்)

வைக்கம் முகம்மது பஷீர்

காலச்சுவடு பதிப்பகம்

1 comment for “இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

  1. chola. nagarajan
    July 13, 2015 at 5:32 pm

    அன்புத் தோழி பூங்குழலி வீரனின் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய “பால்யகால சகி” குறித்தான இந்தப் பதிவு மிகவும் அருமையானது. குழலி என்னுள் இன்னும் பலவற்றைத் தூண்டிவிட்டார். அற்புதமான அந்நாவல் பற்றி இன்னும் சில அபூர்வத் தகவல்கள் இதோ: “பால்யகால சகி”யின் மஜீத் தான்தான் என்று பஷீரே சொல்லியிருக்கிறார். இது ஒருவகையில் தன்னுடைய சுயசரிதை என்றே அவர் கூறுவார். முதலில் இந்தக் கதையை ஆங்கிலத்தில்தான் பஷீர் எழுதத் தொடங்கினாராம். முழு மன நிறைவில்லாததால் அதனைக் கிழித்துப் போட்டுவிட்டு மலையாளத்தில் எழுதினர் பஷீர். ஒருமுறைக்குப் பலமுறை திருத்தித் திருத்தி மீண்டும் மீண்டும் எழுதும் வழக்கமுள்ளவர் பஷீர். அவரின் இந்த நாவல் “பால்யகால சகி” எனும் பெயரிலேயே பிரேம் நசீர், ஷீலா நடிப்பில் 1967 ல் மலையாளத் திரைப்படமானது. சசிகுமார் இயக்கிய இத்திரைப்படத்திற்கு பஷீரே திரைக்கதையும் வசனமும் எழுதினார். “பால்யகால சகி” மம்மூட்டி, இஷா தல்வார் நடிப்பில், பிரமோத் பையனூர் இயக்கத்தில் 2014ல் மீண்டும் மலையாளத்தில் சினிமாவாக வந்தது குறிப்பிடத்தக்கது.
    – சோழ. நாகராஜன், எழுத்தாளர், மதுரை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...