அலிசா

தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் மாட்டிக்கொண்டிருந்த பல வடிவங்களிலான கருங் கற்களையும்; ஓடுகள் – சிற்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். இடது முழங்காலில் முட்டுக் கொடுத்து வைத்திருந்த இடது கையும் அதிலிருந்த தூண்டிலும் அசைவற்றே இருந்தன. வலது முழங்காலில் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த வலது கை சிகரெட்டை வாயில் வைப்பதும் எடுப்பதுமாக ஒரே சீராக செயல்பட்டுக்கொண்டிருந்தது.

தாத்தாவின் தூண்டிலில் நீட்டமாகத் தொங்கிக் கொண்டிருந்த கயிறு மட்டும் அவ்வப்போது அசைந்துகொண்டிருந்தது. ஆனாலும் அதன் அடியில் இருந்த கொக்கியும் அதில் தாத்தா சொருகி வைத்திருந்த புழுவும் அசையாமலே இருந்தன.

தலையைத் திருப்பித் தாத்தாவை நேராகப் பார்ப்பதைவிட, நீரில் தெரிந்த அவரின் பிம்பத்தைப் பார்ப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. நீருக்கடியில் கொக்கிப் புழுவை உற்று நோக்குவதும் பிறகு சட்டென்று நீரின் மேல் பரப்புக்குப் பார்வையைத் திருப்புவதும் பரபரப்பான உணர்வை அவளுக்கு அளித்தது.

தாத்தா கனைத்தபோது, நீரின் அமைதி குலைந்தது. கரையிலிருந்து சற்றுத் தள்ளி சிறு குமிழி தோன்றி, அதைச் சுற்றிலும் வட்ட வட்டமாக மெல்லிய கோட்டலைகள் எழுந்தன. தாத்தா உடலில் அசைவு தெரிந்தது.

முழங்காலில் ஊன்றியிருந்த கையைச் சிறிதும் அசைக்காமல், தூண்டிலை மட்டும் லேசாகத் தணித்து, மேலே இழுத்தார். பிறகு பக்கவாட்டமாக, அலிசாவின் பக்கம் திருப்பினார். அதன் வாயில் நீளமான மீன் படபடவென்று வாலை அடித்துக்கொண்டிருந்தது.

“கெளுத்தி. பாட்டிக்குப் பிடிக்கும்”.

அப்போது அலிசா அவரின் முகத்தைப் பார்த்தாள். கண்கள் மட்டும் விரிந்திருந்தன. தூண்டிலில் மாட்டப்பட்டிருந்த கொக்கியோடு அறுத்து, துள்ளிக்கொண்டிருந்த மீனை, லாவகமாகப் பக்கத்திலிருந்த வாளிக்குள் போடுவதையும் அவள் கவனித்துக்கொண்டாள்.

இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தாத்த சொல்லித்தர மாட்டார். எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் பார்ப்பதிலேயே கற்றுக்கொள்ள தாத்தாவுடன் வசிக்கத் தொடங்கிய இந்த ஒரு மாதத்துக்குள்ளேயே அலிசா பழகிக்கொண்டாள்.

தாத்தா இப்போது, தூண்டிலை அவள் முன் நீட்டினார். அவள் கொக்கியை அதில் மாட்டவேண்டும். அவசரத்தில் சரியாக வரவில்லை. வழுக்கியது. நைலான் கயிற்றை இறுக்கிப் பிடித்து, கொக்கியை மாட்டியதில் கை லேசாக வெட்டி, எரிந்தது. அதைக் கவனிக்க நேரமில்லை. அருகில் தாத்தா வைத்திருந்த சிறு குப்பியைத் திறந்து, அதிலிருந்த புழுவைக் கையிலெடுத்து, கொக்கியில் மாட்டினாள். தாத்தா தூண்டிலை நீருக்குள் வீசினார். இந்த முறை சில நிமிடங்களுக்குள்ளே ஒரு பெரிய விரால் மீன் சிக்கியது.

தாத்தா தூண்டிலை வெளியில் இழுத்து, அவள் பக்கம் நீட்டினார். அவள் கொக்கியை வெட்டி எடுக்க வேண்டும்.

அவர்கள் கிளம்பும் போது இருட்டத் தொடங்கியிருந்தது. தாத்தா நடுக் கடலுக்கு மீன் பிடிக்கப் போனால் மட்டும்தான் இரவு நேரத்தில் மீன் பிடிப்பார். மற்றபடி சாதாரணமாகக் குளத்தில் அல்லது கடலோரப் பகுதியில் மீன் பிடிப்பதாக இருந்தால் இருட்டுவதற்கு முன்னரே கிளம்பி விடுவார். புலாவ் உபினில் சாலை விளக்குகள் இல்லை.

தெருவெல்லாம் இருட்டாக இருக்கும். தாத்தாவின் ‘பிக்-அப்’ வண்டியின் வெளிச்சத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். அது பழைய வண்டி. சிங்கப்பூரில் உடைப்பதற்காக வீசப்பட்டது. சிங்கப்பூரில் அதை ஓட்ட முடியாது. ஆனால் புலாவ் உபினில் ஓட்டலாம்.

மீன் நிறைந்திருந்த வாளி, தூண்டில், தண்ணீர் பாட்டில் எல்லாவற்றையும் தாத்தா வண்டியில் ஏற்றினார். அலிசா பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொண்டாள்.

அவள் ஏறி அமர்ந்து கதவைச் சாத்திக்கொண்டிருக்கும்போதே தாத்தா வண்டியை எடுத்து விட்டார். புலாவ் உபினில் வீடுகள் தள்ளித் தள்ளித்தான் இருக்கும். குளத்துப் பகுதியிலிருந்து அவர்கள் வீடு 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.

அவர்கள் வீட்டை நெருங்கியபோது, டிவி நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. பக்கத்து வீடு   சிறிது தூரத்தில் இருந்தாலும் தாத்தாவின் வீடு வரைச் சத்தம் கேட்டது. தாத்தா வீட்டில் தொலைக்காட்சி இல்லை. எல்லா வீடுகளிலும் மின்சாரம் இருக்காது. டிவியும் இருக்காது. சிங்கப்பூரில் இருப்பதுபோல அரசாங்கம் உபின் தீவில் மின்வசதி செய்யவில்லை. அவரவர்கள் சொந்தமாக ஜெனரேட்டர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

டவுனில் இருந்த சமூக நிலையத்தில் அரசாங்கம் பெரிய ஜெனரேட்டரை வைத்திருந்தது. அங்கு டிவி இருக்கும். மாலையில் அங்கு டிவி பார்க்க பலர் கூடுவார்கள். அதற்கு கொஞ்சம் தள்ளியிருந்த மங்காலியின் கடையிலும் டிவி இருக்கும். சில நாட்களில் டிவியில் நிகழ்ச்சிகள் சீக்கிரமாகத் தொடங்கிவிட்டால், எதிர்க்கடையில் கொரிக்க ‘கொறப்போ’ வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே அவள் டிவி பார்ப்பாள். ஆனாலும் இரவு வரை அங்கு நின்றுகொண்டே டிவி பார்க்க முடியாது. தாத்தா வீட்டில் வெகு காலத்துக்கு மண்ணெண்ணெய் விளக்குதான் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர்தான் தாத்தாவின் மூன்றாவது மகன் வீட்டுக்கு ஜெனரேட்டர் பொருத்தினார். பிரிஜ்ட், குளிரூட்டி, ஃபேன் எல்லாம் தாத்தா வாங்கினார். ஆனால் டிவி வாங்கவில்லை.

தாத்தாவோ, பாட்டியோ டிவி பார்க்க சமூக நிலையத்துக்கோ பக்கத்து வீட்டுக்கோ போக மாட்டார்கள். அதனால் அவளும் போவதில்லை. சிங்கப்பூரில் அவளுக்கென்றே அம்மா தனியாக ஒரு டிவி வாங்கித் தந்திருந்தார். கறுப்பு வெள்ளை டிவிதான். ஆனால் அந்தநேரத்தில் வீட்டில் ஒரு டிவி இருப்பதே பெரிய விஷயம். பள்ளிக்கூடம் போகாத நேரமெல்லாம் அவள் டிவிதான் பார்ப்பாள். அப்போதெல்லாம் டிவியில் எல்லா நேரமும் நிகழ்ச்சி இருக்காது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் தெரியாது. உள்ளூர் தொலைக்காட்சிகள் மட்டும்தான். அதனால் அலிசா தமிழ், சீனம், ஆங்கிலம், மலாய் என எல்லா நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு சேவை முடியும் வரை பார்ப்பாள்.

பாட்டியிடம் காய்கறிகள், அரைத்த மிளகாய் அல்லது குழம்பு வாங்க அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வருவார்கள். அவர்கள் எவரிடமும் தாத்தா பேச மாட்டார். பாட்டி பேசுவதற்கும் ஒன்றும் சொல்ல மாட்டார்.

பாட்டி சுடு தண்ணி வாளியைத் தூக்கி வந்து, குளியலறைக்குள் வைத்தாள். ஷவரில் குளித்துப் பழகிய அலிசாவுக்கு முதலில் தண்ணி அள்ளிக் குளிப்பது சிரமமாக இருந்தது. அதோடு, அவளின் அம்மாதான் அவளுக்குச் சோப்புப் போட்டு முதுகு தேய்த்து விடுவார். குளித்ததும் தலை துவட்டி விடுவார். இங்கே அவளேதான் சோப்புப் போட வேண்டும், அவளே துடைக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே இருந்தது குளியலறை. சிங்கப்பூரில் அவளது அம்மாவின் மூன்றறை வீட்டின் அளவு இருக்கும் அந்தக் குளியலறை. பலகையால் ஆன அந்த வீடு தாத்தா கட்டியது. நான்கு அறைகள், பெரிய சமையலறை, பெரிய ஹால், வசதியான வீடு. அலிசாவின் அம்மாவும் அவருடன் கூடப் பிறந்த 12 பேரும் அந்த வீட்டில்தான் வளர்ந்தார்கள். ஆனால் இப்போது யாரும் அங்கு இல்லை. கல்யாணம் செய்துகொண்டு தனித்தனியே போய் விட்டார்கள். மூன்று பேர் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்.

அலிசா உள்சில்வாரோடு குளித்தாள். சிங்கப்பூர் வீட்டில் அவள் சில்வார் போடாமல்தான் குளிப்பாள். பாட்டி வீட்டின் குளியலறைக் கதவை சாத்த மட்டும்தான் முடியும். பூட்ட முடியாது. அதனால் அவளுக்குப் பயம். உடம்பு முழுக்க மீனின் வழுவழுப்பு ஒட்டியிருப்பதாக அவளுக்குப்பட்டது. சோப்புக் கட்டியைப் பலமுறை உடம்பு முழுக்கத் தேய்த்துக் குளித்தாள்.

அலிசா தனது துணிப் பெட்டியை அடுக்கி வைத்து விட்டு வருவதற்குள், பாட்டி அவளுக்குத் தோசையும் துவையலும் தாத்தாவுக்கு மீன் குழம்பும் சோறும் எடுத்து வைத்திருந்தார். பாட்டி அதற்குள் எப்படி மீனைச் சுத்தம் செய்து குழம்பு வைத்தார் என்று அலிசா யோசித்தாள். அவளின் அம்மா சமைப்பதற்கு குறைந்தது அரை நாளாவது ஆகும்.

தாத்தா தூண்டிலையும் மற்ற பொருட்களையும் சுத்தம் செய்து, குளித்து, முன்வாசலில் கருப்பன், செங்கன் இருவருக்கும் பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தார். அவளின் உயரத்துக்கு இருந்த அந்த இரு காட்டு நாய்களும் இரவின் கறுப்பில் இன்னும் பூதாகரமாகத் தெரிந்தன.

தாத்தா சோறு போட்டு, மீன் குழம்பை ஊற்றிக்கொண்டார். பாட்டி தனக்குத் தோசை வைத்துக் கொண்டாள். தாத்தா பகலும் இரவும் சோறுதான் சாப்பிடுவார். காலையில் பிஸ்கட் சாப்பிடுவார். மீன் பிடிப்பவர்களுக்கு மீன் சாப்பிடப் பிடிக்காது என்பார்கள். ஆனால் தாத்தாவுக்கு மீன்தான் பிடிக்கும். பாட்டியின் சமையல் அப்படித்தான் இருக்கும். அலிசா மீன் சாப்பிட மாட்டாள். அதனால் பாட்டி அவளுக்காக எப்போதும் தனியாக ஒரு கறி சமைப்பார்.

அலிசாவின் அம்மா, செல்லராணி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒரே பெண். மற்றவர்கள் எல்லாரும் ஆண் பிள்ளைகள். ஒரே செல்லப்பெண் என்றாலும் தாத்தாவும் பாட்டியும் எப்போதும் அவள் அம்மாவோடு சண்டை போடுவார்கள். தாத்தா அம்மாவோடு பேசுவதை நிறுத்திவிட்டிருந்தார். போன மாதம் அலிசாவைக் கூட்டிக்கொண்டு செல்லராணி வந்திருந்தபோதுகூட பாட்டி மட்டும்தான் அம்மாவோடு பேசினார்.

“கொஞ்சநாளைக்கு அலிசாவை உங்ககூட வைச்சுக்கிங்க. புது வேலையில சேர்ந்திருக்கேன். வேலை முடிய ரொம்ப நேரமாகுது. முத்துவும் அடிக்கடி ஓவர்டைம் செய்யிறதால வீட்டில அலிசா ஒத்தையா கிடக்கு. லீவும் ஆரம்பிச்சிடுச்சு. இனி ஒன்றரை மாசம் அவளுக்குப் பொழுது போகாது. கொஞ்சநாள்தான்,” தாத்தா வெளியில் போய்விட்டார். பாட்டி தலையை ஆட்டினாள்.

அன்றைக்குப் பிறகு செல்லராணி ஒருமுறை ‘பம்ப்’ (மோட்டார்) படகில் வந்து போனார். அப்பா வாங்கிக் கொடுத்ததாக அலிசாவிடம் பை நிறைய கதைப் புத்தகங்களைக் கொடுத்தார். அலிசாவின் அறையைச் சுத்தம் செய்தாள். மெத்தை, தலையணைகளைத் தட்டிப்போட்டார். எப்படித் தட்டிப் போடுவது என்று அலிசாவுக்குச் சொல்லிக் கொடுத்தார். அலிசாவின் துணிகளை மடித்து வைத்தார். அலிசா குளிக்கப்போனபோது கூட வந்தார். அலிசா தானே குளித்துக்கொள்வதாகக் கதவைச் சாத்திக்கொண்டாள். ஆனாலும் அவள் வெளியில் வந்ததும், அவளது தலையைத் துவட்டி, ஃபேனில் காயவிட்டார். அவளுக்குப் பவுடர் போட்டு விடும்போது, “முதுகு, கவட்டியெல்லாம் தேய்ச்சுக் குளி. இல்லன்னா பாட்டியைத் தேய்ச்சு விடச் சொல்லு. அழுக்கா இருக்கு பார்” என்றபடி புதிதாக வாங்கி வந்திருந்த பாண்டையும் டி சட்டையையும் போட்டுவிட்டார்.

பிறகு, அலிசாவை மடியில் வைத்து அவளின் முடியைப் பின்னிவிட்டபடியே சொன்னார், “லீவு முடியும் வரையிலதான். இது நம்ம வீடு போல வசதியா இல்லதான். ஆனா பெரிசு, நீ நல்லா விளையாடலாம். பத்திரமா இரு. தனியா எங்கேயும் போகாதே. பாட்டிகூடவே இரு, உன் டிவிய எடுத்திட்டு வரலாமுன்னுதான் பார்த்தேன். ஆனா ரொம்ப சாமானாயிட்டது. இன்னும் ரெண்டு வாரம்தான். பிறகு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்.”

அலிசா எதுவும் சொல்லவில்லை.

பாட்டி சாப்பாடும், மீன், ஊடான், காய்கறிகள் என ஏராளமான பொருட்களையும் பை பையாகத் தமது மகளுக்குக் கட்டிக் கொடுத்தார். தாத்தா அம்மாவை ஏற்றிவிட வரவில்லை. அம்மாவே வண்டியைப் படகுத்துறை வரை ஓட்டினார். பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டே அம்மாவுக்கு டாடா சொன்னாள் அலிசா.

படகு கிளம்பியதும் அலிசா பாட்டியோடு வண்டியில் கிளம்பினாள். பாட்டி அங்காங்கே வண்டியை நிறுத்தி எதிர்படுபவர்களிடம் நலம் விசாரித்தார். பப்பாளியும் அன்னாசியும் காய்த்திருப்பதைச் சொன்னார். டுரியான் பொறுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார். கருவாடு எடுத்து வைத்திருப்பதாகச் சொன்னார். அவரவர்களும் தங்களது விளைச்சல்கள் பற்றிச் சொல்லிக் கொண்டார்கள்.

அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, தாத்தா குவாரிக்குக் கிளம்பி விட்டிருந்தார். கருங்கல் தீவு என்று அழைக்கப்பட்ட உபின் தீவு சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. கிட்டத்தட்ட 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் அந்த நீளமான சின்னத் தீவில், கருங்கல் உடைப்பது ஒரு காலத்தில் பெரிய வர்த்தகமாக இருந்தது. கருங்கல் குவாரிகளில் வேலை பார்ப்பதற்காக 60களில் பலர் அங்கு குடியேறினர். இப்போது பல கருங்கல் குவாரிகள் மூடப்பட்டு விட்டன.

தாத்தா வேலை பார்த்த அய்க் குவா குவாரி மிகவும் பெரியது. சிங்கப்பூருக்குத் தேவையான கருங்கல்லில் பெரும்பகுதியை அந்தக் குவாரிதான் வழங்கியது. தாத்தா பல ஆண்டுகளாக அந்தக் கருங்கல் கிடங்கில் வேலை செய்கிறார். தாத்தாவின் மூத்த இரண்டு மகன்களும் அங்குதான் வேலை பார்த்தார்கள். ஒருமுறை கல்லுடைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தாத்தாவின் மூத்த மகன் இறந்து போனார். ஆனால் தாத்தா அதற்காக அந்த வேலையை விடவில்லை. தாத்தா இப்போது மேற்பார்வையாளராக இருக்கிறார். அந்தக் குவாரியையும் விரைவில் மூடப்போவதாகத் தாத்தா சொல்லியிருந்தார். என்றாலும் தாத்தாவுக்குத் தீவிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. குவாரியில் வேலை இல்லாத நேரங்களில் தாத்தா மீன் பிடிக்கப் போவார்.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி நேராகத் தோட்டத்துக்குப் போய்விட்டார். வீட்டைச் சுற்றிலும் பெரிய நிலம் இருந்தது. பாட்டி நிறைய காய்கறி செடிகளையும் பழ மரங்களையும் வளர்த்தார். காய்கறிகள், கீரைகள், பழங்களை விற்றுப் பாட்டி சம்பாதித்தார். அது தாத்தாவின் சொந்த நிலம் இல்லை. நிலத்துக்கு மாதம் $2.50 வாடகை கொடுப்பார். முதலில்1 வெள்ளி, பிறகு 1.50 இப்போது 2.50 ஆகிவிட்டது என்று தாத்தா சொன்னார். ஆனால் வீடு, தோட்டம் எல்லாம் தாத்தா- பாட்டியுடையது.

1977 டிசம்பர் மாதம் முடியும் வரை செல்லராணி வரவில்லை. தாத்தா அலிசாவை 1978ல் புலாவ் உபினில் இருந்த பின் கியான் சீன தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பில் சேர்த்தார். மலாய்க் கம்பத்தில் மலாய்ப் பள்ளியும் இருந்தது. ஆனால் தாத்தா அவளைச் சீனப் பள்ளியிலேயே சேர்த்தார். மலாய்ப் பள்ளியில் மாணவர்கள் ரொம்பக் குறைவாக இருப்பதால் அங்குப் படிப்பு சரியாக இல்லை என்று பாட்டி சொன்னார். ஆனால் அது காரணமாக இருக்காது என அலிசா நினைத்தாள்.

பல கருங்கல் குவாரிகள் மூடப்பட்டு விட்டதால் பலரும் சிங்கப்பூருக்கு வேறு வேலை தேடிப் போய் விட்டார்கள். அதனால் அந்தப் பள்ளியின் மொத்த மாணவர் தொகையே அப்போது 100க்குள்தான் இருந்தது. அவள் வகுப்பில் 17 பேர் இருந்தார்கள். அவள் மட்டும்தான் ஒரே தமிழ் மாணவி. அவள் சிங்கப்பூரில் படித்த பள்ளிக்கும் இந்தப் பள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. 6ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் மோட்டார் சைக்களில் வந்தார்கள். உபின் தீவில் அப்போதெல்லாம் மோட்டார் ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை. எல்லாரும் மோட்டார் ஓட்டுவார்கள். டிவி நாடகம் பார்ப்பதால் அவளுக்கு ஓரளவு ஹொக்கியன் பேசத் தெரிந்திருந்தது.

முதல் நாள் மட்டும் தாத்தா வண்டியில் கொண்டுவிட்டார். அடுத்த நாளில் இருந்து சைக்கிளில் போனாள். சைக்கிளில் போனாலும் பள்ளிக்கூடம் போய் சேர அரை மணி நேரம் ஆகும். பள்ளி முடிந்த பிறகு சில நேரங்களில் தாத்தாவுடன் மீன் பிடிக்கப் போவாள். இல்லாவிட்டால் காட்டுக்குப் போவாள். தனியாகத்தான் போவாள். அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அங்கு வசிக்கும் சிறுவர்கள் எல்லாம் கூட்டமாகத்தான் காட்டுக்குப் போவார்கள். அவள் போகும் நேரங்களில் அவர்களைப் பார்த்திருக்கிறாள். அவர்கள் மரங்களில் ஏறித் தேங்காய் பறிப்பார்கள். ரம்புத்தான், டுரியான் பொறுக்குவார்கள். சில நேரங்களில் அவளுக்கும் இளநீர் வெட்டித் தருவார்கள். அங்கிருந்த தாமரைக் குளத்தில் குதித்து விளையாடுவார்கள். காட்டுக்குள் போனால் சாப்பாடு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பழ மரங்கள் நிறைய இருந்தன. காட்டில் இருக்கும் கொய்யாக்காய் அவளுக்குப் பிடிக்கும். அங்கே குரங்குகளும் பூனைகளும் நாய்களும் பெருங்கூட்டமாக இருந்தன. சில நேரங்களில் மான் குட்டிகளையும் மயில்களையும் அவள் பார்த்திருக்கிறாள்.

அவள் எங்கே போனாள், என்ன செய்தாள், ஏன் இத்தனை நேரம் கழித்து வந்தாள் என்றெல்லாம் தாத்தாவோ பாட்டியோ கேட்டதில்லை. முதலில் அது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறகு தன்னை அவர்கள் தேடி வரமாட்டார்களா என்று அவளுக்கு ஏக்கமாகவும் இருந்தது. ஒரு முறை அப்பாவைக் காணாததால், வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளியில் இருந்து அவளே தனியாக நடந்து வந்தபோது அம்மா பதறியதையும் அவளைக் கண்டித்ததையும் நினைத்துக்கொள்வாள். காட்டில் தனியாகச் சுற்றுவது அம்மாவுக்குத் தெரிந்தால் எப்படிப் பதறுவார் என்று யோசிப்பாள். காட்டில் காணாமல் போய்விட்டாள் அது தாத்தாவுக்கு எப்படித் தெரிய வரும் என்று யோசித்தாள். ஆனால் மெல்ல மெல்ல அவளுக்கு அது சாதாரணமாகிவிட்டது. அந்தத் தீவில் எல்லாப் பிள்ளைகளுமே தங்கள் விருப்பப்படிதான் இருந்தார்கள். அதனால் அது தவறு இல்லை என்று அலிசா நினைத்தாள்.

ஒருமுறை அவள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் காட்டிலேயே இருந்தாள். காட்டில் பெரிய மரங்கள் இருந்தன. அதில் ஏறிப் படுத்துத் தூங்கலாம். விழாமல் இருக்க இடுப்பை மரத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டும். திங்கட் கிழமை காலையில் வீட்டுக்குள் நுழையும்போது அவளுக்கு பயமாகவே இருந்தது. வாசலில் யாரும் இல்லை. நாய்களையும் காணோம். பாட்டிக்குத் தெரியாமல் குளியலறைக்குள் புகுந்துகொள்ள நினைத்தாள். அவள் தன் அறையிலிருந்து துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் செல்வதற்குள் பாட்டி குரல் கொடுத்துவிட்டார், “கொஞ்சம் இரு, சுடு தண்ணி எடுத்திட்டு வரேன்.” பாட்டிக்கு எப்படி நான் வந்தது தெரியும் என்று யோசித்தாள். ஆனால் பாட்டியிடம் கேட்கவில்லை.

அன்று மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு, தாத்தா அவளுக்கு ஒரு சங்கேத ஒலியைச் சொல்லிக் கொடுத்தார். வாயைக் குவித்து நாயின் ஊளையாக இல்லாமலும் குருவியின் கீச்சலும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் ஒலி. “இது நம்ம ரகசிய ஒலி ஓகேவா? கருப்பன், செங்கன் இருவருக்கும் இது புரியும்,” என்றார். தாத்தாவும் பாட்டியும் தன்னைத் தேடி இருப்பார்களோ என்று அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் அன்று முழுவதும் அதற்குப் பிறகும் அந்த ஒலியை எழுப்பி எழுப்பி பழகிக் கொண்டே இருந்தாள். ஒருமுறை அவள் சீனக் கம்பத்துப் பக்கமாகப் போனபோது, முயலுக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்துவிட்டாள். மத்தியான நேரம். கம்பத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. அவள் தன்னையுமறியாமல், ஒலி எழுப்பினாள். அரை மணி நேரம் கூட இருக்காது. கருப்பன், செங்கனோடு தாத்தா வண்டியில் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்.

காட்டையும் தீவையும்விட, அவளுக்குத் தாத்தாவுடன் மீன் பிடிப்பதுதான் மிகவும் பிடித்திருந்தது. தாத்தா மற்றவர்களைப் போல் இல்லை. அவருக்கு மீன் பிடிக்கும் பல முறைகளும் தெரிந்திருந்தன. மூங்கில் கம்புகளை நட்டு, அதில் வலையைக் கட்டி சில நேரங்களில் மீன் பிடிப்பார். சில நேரங்களில் தூரத்திலிருக்கும் கேலோங்கில் மீன் பிடிப்பார். நினைத்துக்கொண்டால், சின்னப் படகில் கிளம்புவார். கூட ஆள்சேர்ந்தால், பெரிய மோட்டார் படகில் கடலுக்குப் போவார்.

தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுணுக்கங்களை அலிசா கற்றுக்கொள்ள விரும்பினாள். பள்ளி விடுமுறையில் அவளுக்கு அதற்கு நிறைய நேரம் கிடைத்தது.

தாத்தா சில நாட்களாகப் பெரிய வலையை சரிசெய்வதில் முனைப்பாக இருந்தார். கிழிந்த இடங்களை ஒவ்வொன்றாக அவர் பொறுமையாகத் தைத்தார். ஓரப்பகுதியில் நைந்திருந்த கயிறுகளைச் சரி செய்தார். அவள் அருகில் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருந்தாள்.

அன்று அவள் வீட்டுக்குள் நுழையும்போது, பாட்டி ,தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “அலிசா உங்களைப் போலவே இருக்கிறாள். அதிகம் பேசுவதில்லை. எதுவும் கேட்பதில்லை. ஆனால் எல்லாவற்றையும் கவனிக்கிறாள்.”

பாட்டி பேசுவதை உற்றுக் கேட்டுக்கொண்டே நடந்ததால் அலிசா, வழியிலிருந்த தூண்டில் கம்பிகளைக் கவனிக்கவில்லை.

அலிசா திடீரென அலறியபோது பாட்டி ஒரு கணம் அதிசயித்துப் போனாள். அலிசாவால் இவ்வளவு பெரிதாகச் சத்தமிடமுடியும் என்று பாட்டி அதுவரை அறிந்திருக்கவில்லை.

அலிசாவின் காலில் இருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.

தாத்தா எந்த அதிர்வும் இல்லாமல் மீன் வைத்திருந்த ஐஸ்கூடையை எடுத்து வந்து அலிசாவுக்குப் பக்கத்தில் வைத்தார். தரையில் அமர்ந்திருந்த அலிசாவைத் தூக்கி, அவளின் காலைக் கூடைக்குள் வைக்கச் சொன்னார். பாட்டி வேகமாகக் கம்பி குத்தியிருந்த அவளின் வலது காலைக் கூடைக்குள் வைத்தார். அந்தப் பெரிய கூடைக்குள் அலிசாவின் முழுக்காலும் அமுங்கிவிட்டது. இன்னமும் உயிரோடிருந்த சில மீன்கள் அவளது காலில் படபடவென்று அடித்தன. ஐஸ்கட்டிக்குள் கால் விறைத்துக்கொண்டிருந்தது. வலி கொஞ்சம் குறைய அலிசாவின் அழுகை சிறு முணகலானது. பாட்டி வீட்டுக்குள்ளிருந்து ஸ்டூலும் பெரிய டார்ச் விளக்கும் எடுத்து வந்தார். அலிசாவை ஸ்டூலில் உட்கார வைத்து டார்ச்சை அடித்து, ஐஸை லேசாக விலக்கி ரத்தப் பெருக்கு நின்று விட்டதா என்று பார்த்தார். தாத்தா உள்ளே சென்று சிறு கத்தியும் நிறைய துணிகளும் எடுத்து வந்தார். அலிசாவுக்கு அருகில் தரையில் உட்கார்ந்து, அலிசாவின் காலைக் கூடைக்குள்ளிருந்து எடுத்தார். அவள் காலுக்குள் குத்தியிருந்த மீன் தூண்டிலை மெதுவாக எடுத்தார். வளைந்திருந்த தூண்டில் உள்ளே மாட்டிக்கொண்டிருந்தது. அவர் எத்தனைப் பக்குவமாக எடுத்தாலும் அடிபாதத்தின் பாதித் தோல் கிழிந்துபோனது. ரத்தம் பீச்சிடத் தொடங்க, பெரிய துணியால் பாதத்தை இறுக்கமாகச் சுற்றிக் கட்டினார். இன்னொரு துணியால் காலின் மேல்பகுதியைக் கட்டி ரத்தப் போக்கைத் தடுத்தார். பிறகு அலிசாவைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து, தலையணைகளை அடுக்கி காலை உயர்த்தி வைத்தார். காலம்பர பார்த்துக்கொள்ளலாம். தூங்கு என்று படுக்கப் போய்விட்டார். பாட்டி கொடுத்த மைலோவைக் குடித்து விட்டு அலிசா தூங்கிப் போனாள்.

வலியினால் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. ஆனால் காலைத் தூக்க முடியாமல் வலித்தது. அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. என்றாலும் ஓசை எழுப்பாமல் படுத்தே இருந்தாள். வழக்கம்போல ஐந்து மணிக்கு எழும்பிய பாட்டி, வந்து தலையைத் தடவி வலிக்குதா என்று கேட்டபோது அலிசா தலையை மட்டும் ஆட்டினாள். தாத்தா அவளைத் தூக்கிச் சென்று கழிவறையில் உட்கார வைத்தார். காலை மேலே வைக்க ஒரு ஸ்டூலையும் கொண்டு வந்து வைத்தார். அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் பாட்டியை உள்ளே விடவில்லை. தானே கழுவிச் சுத்தம் செய்தாள். விடிந்ததும் தாத்தா வண்டியில் அவளைப் படகுத் துறைக்குக் கூட்டி வந்தார். அங்கிருந்து படகில் சாங்கி வில்லேஜுக்குப் போனார்கள். பக்கத்திலேயே இருந்த மருத்துவரிடம் காட்டினார்கள். டாக்டர் காலைச் சுத்தம் செய்து 15 தையல்கள் போட்டார். 35 வெள்ளி கட்டணம். தாத்தாவிடம் 30 வெள்ளிதான் இருந்தது. படகில் போவதும் சாப்பிடுவதற்கும் தனியாகச் சில்லறை வைத்திருந்தார். பிறகு தருவதாகச் சொல்லிவிட்டுப் பக்கத்தில் இருந்த கடையில் ஒரு வெள்ளிக்குப் பாக்கெட்டிலிருக்கும் ‘ஹீரோ சாக்லெட் கேக்’கும் ‘கிக்காபூ’ தண்ணியும் வாங்கி சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள். படகில் செல்ல கட்டணம் 20 காசுதான். கட்டுப் போட்ட பிறகு தாத்தா அவளைத் தூக்கிக் கொள்ளவில்லை. அவளே தாங்கித் தாங்கி நடந்தாள். ஒரு வாரம் வரையில் நடக்கச் சிரமப்பட்டாள். பிறகு வலி இருந்த இடமே அவளுக்கு மறந்து போனது.

உயர்நிலைப் பள்ளிக்குப் போனதும் பாட்டி 2 வெள்ளி தருவதாகச் சொல்லியிருந்தார். அதில் தினமும் 30 காசைச் சேமிக்க வேண்டும் என்று அலிசா இப்போதே திட்டம் போட்டிருந்தாள். நல்ல ஸ்போர்ட்ஸ் சப்பாத்து வாங்க வேண்டும் என்பது அவளின் நீண்டநாள் ஆசை. அவள் தாத்தா, பாட்டியிடம் எதுவும் கேட்கமாட்டாள். அம்மா வராததே மனதில் பெரிய உறுத்தலாக இருந்தது. ஏன் அம்மா வரவில்லை என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்வாள். பாட்டிக்கும் காரணம் தெரிந்திருக்காது என்று அவள் நம்பினாள்.

அன்றைக்கு அவள் வாசலில் உட்கார்ந்து கருப்பனோடு விளையாடிக் கொண்டிருந்தபோது, தாத்தா கடலுக்கு மீன் பிடிக்கத் தயாராவதைப் பார்த்தாள். தாத்தா கடலுக்குக் கிளம்புகிறார் என்பது அவரது ஆயத்தங்களிலில் இருந்தே தெரிந்து விடும். தாத்தாவிடம் ஓர் உற்சாகம் இருக்கும். சிகரெட்டைப் புகைத்தப்படி இருப்பார். வெளியில் எங்கும் போகமாட்டார். காலையிலிருந்தே தயாராகிக் கொண்டிருப்பார்.

இதுவரை இரவில் அலிசா கடலுக்குப் போனதில்லை. பெரும்பாலும் அத்தீவில் வசிப்பவர்கள் கூட்டமாகத்தான் இரவில் மீன்பிடிக்கப் போவார்கள். தீவிலிருந்து சற்றுத் தள்ளி அவர்கள் கட்டி வைத்திருக்கும் கேலோங்கில் தங்கி சில நாட்கள் மீன்பிடிப்பார்கள். சில நேரங்களில் படகில் போய் வந்து விடுவார்கள். தாத்தா அவ்வப்போது தமது நண்பர்களுடன் பெரிய படகில் ரொம்ப தூரம் மீன் பிடிக்கப் போவார்.

காலையில் படகை சரிப்படுத்த அவள் தாத்தாவுக்கும் அவரது நண்பர் லீ கொங்கிற்கும் உதவினாள். பகல் வரை அவர்கள் படகைச் செப்பனிட்டார்கள். மாலையில் வலை, கொக்கிகள், வாளி, தண்ணீர் பாட்டில்கள் எனத் தேவையான பொருட்களைப் படகில் வைத்துவிட்டு வந்தார்கள்.

இரவு சாப்பாடு முடிந்ததும் பாட்டி ஒரு பையில் கடலில் கொரிப்பதற்கு கிழங்குப் பொரியலும் வாட்டிய ரொட்டியும் கட்டித் தந்தார். தாத்தா இரண்டு சிகரெட் பெட்டிகளை எடுத்துக்கொண்டார். தலையையும் சேர்த்து மூடக்கூடிய ஜாக்கெட் ஒன்றை பாட்டி அவளிடம் தந்தார். “சின்ன மாமாவுடையது. நனையாது” என்று சொல்லிக் கொடுத்தார். அவளிடம் இருந்த நீல நிற ஜாக்கெட்டை எடுத்துப் போக அவள் நினைத்திருந்தாள். ஆனால் அதைவிட, பாட்டி தந்த ஜாக்கெட் சற்றுக் கனமாகவும் நீளமாகவும் இருந்ததால் அதுவே சரியாக இருக்கும் என எடுத்துக்கொண்டாள். அவர்கள் வழியில் லீ கொங்கை ஏற்றிக்கொண்டார்கள்.

கடற்கரையோரமாக வழக்கமாக வண்டியை நிறுத்துமிடத்தில் தாத்தா வண்டியை நிறுத்தினார். வண்டியிலிருந்து இறங்கியதும் அவள் ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டாள். பாட்டி தந்த பையை எடுத்துக் கொண்டாள். தாத்தாவும் லீ கொங்கும் சிகரெட் புகைத்தபடி நடந்தனர்.

கடற்கரை நிலவொளியில் குளிர்ந்திருந்தது. மணலில் கால் புதைய நடப்பது அலிசாவுக்குப் பிடித்திருந்தது. அங்குமிங்கும் காவல்காரர்களைப் போல் உலவிக் கொண்டிருந்த நாய்கள் அவளுக்கு அந்நியமாகப்படவில்லை. உபினில் எல்லாரும் நாய் வளர்த்தார்கள். தவிரவும் காடுகளிலும் நாய்கள் நிறைய சுற்றும். ஆனால் திடீர் திடீரென்று பாய்ந்தோடிய பெருச்சாளிகளும் மண்ணுக்குள்ளிருந்து தலைநீட்டிய நண்டுகளும் அவளைச் சற்றுப் பயமுறுத்தின.

தாத்தாவும் லீ கொங்கும் எதையும் கண்டுகொள்ளாமல் படகைக் கடலுக்குள் இழுத்து விட்டுக்கொண்டிருந்தனர். தாத்தா அவளைப் படகில் ஏறச் சொல்லவில்லை. படகில் எப்போது ஏறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் கையில் பையைப் பிடித்தபடி, அவர்கள் படகை ஜெட்டியிலிருந்து அவிழ்த்து விடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். படகு நீரில் மிதக்கத் தொடங்கியதும் தாத்தாவும் லீ கொங்கும் தாவி ஏறினர். அவள் இரண்டடி தூரம் தாவிக் குதிக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் தவறினாலும் தண்ணீருக்குள் விழுந்துவிட வேண்டியதுதான். படகு நகர்ந்துகொண்டே இருந்தது. ஒரே தாவலில் தாத்தா எப்படி ஏறினார் என அவள் யோசித்தாள்.

படகின் முன்பகுதியிலிருந்த சிறிய அறைக்குள் சென்று தாத்தா மோட்டரை இயக்கத் தொடங்கினார். படகு நீரைக் கிழித்துக்கொண்டுக் கடலுக்குள் பாய்ந்தோடியது.

முன்பகுதி கண்ணாடியாலும் பின்புறம் பிளாஸ்டிக் பாயாலும் தடுக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய கூண்டுக்குள் இரு இருக்கைகள்தான் இருந்தன. அவள் தாத்தாவுக்குப் பக்கத்தில் நின்று கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். கண்ணாடி மறைப்பு இருந்ததால் தண்ணீர் மேலே அடிக்கவில்லை. ஆழக்கடலுக்குப் போனதும் தாத்தா படகின் வேகத்தைக் குறைத்தார். லீ கொங் ஓரங்களிலிருந்த ரப்பர் மிதவைகளை நீருக்குள் எடுத்துப் போட்டார். படகு கடலில் மிதக்கத் தொடங்கியது. பின்னர் வலையைப் பிரித்துக் கடலுக்குள் வீசினார். காற்றில் பரந்து விரிந்த வலை, அலையோடு அலையாகக் கடல்நீரில் கலந்தது. அந்தப் பெரிய வலையின் ஒரு முனை, படகிலிருந்த கொக்கிகளில் இறுகக் கட்டப்பட்டிருந்தது. அலிசாவும் படகின் பின்பகுதியில் வந்து நின்றுகொண்டாள். படகு காற்றின் திசையில் கடலில் மிதந்து கொண்டிருந்தது.

இரவின் ஒளி கடலெங்கும் படர்ந்திருந்தது. சுற்றிலும் இருண்ட கடலே நிறைந்திருந்தது. இருட்டுக்குக் கண்கள் பழக்கப்பட்டிருந்ததால் கடலின் மேல் பரப்பை அவளால் நன்கு பார்க்க முடிந்தது. கடலின் அமைதியைக் கொஞ்சமும் குலைக்காமல் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடின. பாசியும் கடலினங்களும் உப்பும் கலந்த கடலுக்கே உரிய தனி வாசம் காற்றில் நிறைந்திருந்தது. அந்த வாசம் அலிசாவுக்கு மிகவும் பிடிக்கும். படகின் ஓரத்தைப் பிடித்தபடி கண்ணை மூடி காற்றை முழுசாக உள்ளிழுத்தாள். குபுக்கென்று ஏதோவொன்று அவள் முகத்தைக் குத்திக் கீழே விழுந்தது. திரும்பிப் பார்த்தாள். கூரான மூக்கையுடைய பூனைமீன். திடீரென கூட்டம் கூட்டமாக மீன்கள் பறந்து வந்தன. அவளுக்குப் பயமாக இருந்தது.

சட்டென்று திரும்பியவளுக்குக் கால் இடறியது. என்ன நடந்தது என யோசிப்பதற்குள் அவள் கடலுக்குள் போய்க்கொண்டிருந்தாள். விழுந்த வேகத்தில் கீழே உடலை ஏதோ இழுத்துச் சென்றது. நீருக்குள் மூழ்குகிறோம் என்ற அவள் புத்திக்கு உறைத்தபோது, சட்டென்று மூச்சைப் பிடித்து மேலே எம்பினாள். கூரம்பு போல் உடல் விழுந்த வேகத்திலே மேலே வந்தாள். மூச்சுத் திணறியது. சத்தம் போட எத்தனித்தாள். வாயிலிருந்து காற்று வரவே சிரமப்பட்டது. இருட்டில், கடலுக்கடியில் செத்து விடப் போகிறோம் என நினைத்தாள். ஆழ இருட்டுக்குள் கண்கள் மூழ்கும் நேரத்தில் அவளது முடியைப் பற்றி யாரோ இழுத்தார்கள்.

“அலிசா அலிசா”

வெகு தூரத்தில் யாரோ கூப்பிடுவது கேட்டது.

“மூச்சப் பிடிச்சு மேலே வா, தண்ணியை வாய்க்குள்ள போகவிடாதே. வெளியே விடு,” தாத்தாவின் குரல் குறைந்து குறைந்து கேட்காமலே போனது. அவள் செத்துவிட்டோம் என்று நினைத்தாள்.

திடீரென்று உடம்பு லேசானதுபோல இருந்தது. கண்களைத் திறக்க முடிந்தது. மூச்சு விட முடிந்தது. தான் நீருக்குள் இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது. மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தாள். தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். தாத்தா தன்னை தனியாக விட்டு விடவில்லை என்று அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அவர் முகத்தில் லேசான புன்னகை இருந்தது. அந்தப் புன்னகையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. தாத்தா சிகரெட்டை எறிந்துவிட்டு, “லீ கொங்கின் பிளாஸ்கில் மைலோ இருக்கும். எடுத்துக் குடி” என்று சொல்லியபடி, வலை விரிக்கப்பட்டிருந்த படகின் பின் பக்கத்துக்குப் போனார்.

காலிலும் கையிலும் ஏதோ குத்துவதை உணர்ந்தபோது, முன்னர் பறந்து வந்து படகுக்குள் விழுந்த மீன்களுக்கு மேலே தான் படுத்திருப்பதை அலிசா உணர்ந்தாள். ஒரு கணம் பயம் எழுந்தது. மறுகணம் தாத்தாவின் புன்னகை அவள் முகத்தில் தவழ்ந்தது. எழுந்து படகின் பின் பக்கத்துக்குச் சென்று தாத்தாவுக்கு அருகில் நின்றபடி கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அலையின் சாரல் அவள் உடலை மேலும் நனைத்தது.

5 comments for “அலிசா

  1. L.Murugapoopathy
    August 15, 2015 at 8:06 am

    அலிசா அருமையான சிறுகதை. லதாவுக்கு எமது பாராட்டுக்கள். பேரப்பிள்ளைகள் தாத்த பாட்டிமார் உறவு காவியநயம் மிக்கது. இரண்டு தலைமுறைகளுக்கு இடையே பெற்றவர்கள் ஒரு தலைமுறையாக வந்தாலும், குடும்பத்தின் மூத்த முதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையே நீடிக்கும் உறவு சாசுவதமானது. அதனை இயல்பாகவே லதா இச்சிறுகதையில் சித்திரித்துள்ளார். அவர் எம்மை அந்த கருங்கல்தீவுக்கும், படகுத்துறைக்கும், அய்க்குவா குவாரிக்கும் அழைத்துச்செல்கிறார். எனக்கும் அந்த இடத்தைச் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது. அடுத்தமுறை சிங்கப்பூர் வரும்பொழுது நிச்சயம் அங்கே செல்லவேண்டும் என்ற ஆசையை இச்சிறுகதை தூண்டியுள்ளது. வாசகரை உடன் அழைத்துச்செல்லும் சிறுகதைகள் வாசகர் மனதில் நெடுநாட்கள் தங்கியிருக்கும். லதா சிறந்த கதை சொல்லியாகவும் பரிமாணம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. வாழ்த்துக்கள்.
    முருகபூபதி
    அவுஸ்திரேலியா

  2. Mahalingam Umamaheswari
    September 16, 2022 at 10:41 pm

    நல்ல விறுப்பான கதை. எளிமையான நடை. பல புதிய தகவல்களான உபின் மக்களின் வாழ்க்கை முறை, அலிசாவின் அனுபவங்கள் அருமை. செல்லராணியின் நிலை என்ன என்பது கேள்வி குறியாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...