கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

ப.மணிஜெகதீசன்இன்னைக்கும் மீட்டிங்கா… கடவுளே… என்னாலா பேசப்போறாங்க…

பேச்சு பேச்சு பேச்சு..அவர் பேசுவார், பேசுவார், இன்னும் பேசுவார்… அப்புறம், அப்புறமும் பேசுவார் !!!

பேசியதையேப் பேசுவார், பேச்சைக் குறைக்க வேண்டியதைப் பற்றியும் நிறையப் பேசுவார்.

நாம் பேசவே வேண்டியதில்லை… பேசவும் ஒன்றும் இருக்காது; பேசினாலும் யாரும் கேட்கப்போவதில்லை..பேசித்தான் பாருங்களேன்… அப்புறம்…

நீங்கள் பேசியதை நிராகரித்தோ அல்லது ஏற்பதுபோல் நிராகரித்தோ அவர் ஆரம்பித்துவிட்டால்…

`மொதல்ல இருந்தே` ஆரம்பமாகும். என்னக் கொடுமைடா….

சமீபத்தில் `The Star தினசரியில் ஒரு பத்தி பிரசுரமாயிருந்தது. நேரத்தை நம் அரசு அலுவலகங்களில்/பள்ளிகளில் எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்று. பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டியதை 120 நிமிடங்களுக்கு இழுத்தடிப்பதெப்படி என்பது தலைகளுக்கு தண்ணி பட்ட பாடு. ஒரு சுற்றறிக்கையில் அல்லது அறிவிப்பு பலகையில் கூறிவிடக்கூடிய தகவல்களை மீட்டிங் போட்டு `வறுத்தெடுப்பதில்’ என்னதான் அப்படியொரு சுகமோ.

ஆறாம் படிவம் படிக்கும் போது மிஸ்டர் ராவ் இருந்தார். கூலிம், பட்லிஷா இடைநிலைப் பள்ளியில். அறிவியல் போதித்தார். ஒரு தடவை சபை கூடலில் அவர் பேசவேண்டிய முறை வந்தது. எப்போதுமே அவர் `man of few words’ தான். ஏனென்றால் அவருக்கு மலாய் அவ்வளவாக வராது! மேடை ஏறினார், ” Kita tak patut bazir masa. Sekian, terima kasih.”- நாம் நேரத்தை வீணாக்கக் கூடாது, அவ்வளவுதான், நன்றி- இறங்கி வந்துவிட்டார். அதெல்லாம் ஒரு காலம்…விருப்பக் கனவுகள்!!

இப்பவெல்லாம் நிலமை அப்படியா..

ஒரு முறை சீரியஸான மீட்டிங் ஒன்று ஏற்பாடாயிருந்தது. (எல்லா மீட்டிங்குகளும் சீரியஸானவைதான், ஆனாலும் சில மீட்டிங்குகள் கூடுதல் சீரியஸானவை!) அதில், பெரிய தலை சிறிய தலைகளுக்கு முன் ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.

“நமது நிர்வாகத்தில் உள்ள பெரிய குறையாக உங்களுக்குப் பட்டதை எவ்விதத் தயக்கமுமின்றி நீங்கள் கூறலாம். நாம் வெளிப்படையாகப் பேசுவது மிகவும் முக்கியம். நமது நிர்வாகம் சீராகவும், மெச்சத் தகுந்ததாகவும் செயல்பட நமக்குள் ஆரோக்கியமான விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் அவசியம். ப்ளீஸ், மனம் விட்டுப் பேசுங்கள்.”

ஆஹா…கழுத்துல கயிற்றை மாட்டறாங்கடா…மாட்டிக்காதடா மணி… உனக்கு ஏற்கனவே நாக்குல சனி… உசாரா இருந்துக்கோ..

மனசு சொன்னத என்னைக்குதான் கேட்டு நடந்திருக்கிறேன்.

“நாம் பல அவசியமில்லாத கூட்டங்களை நடத்துகிறோம். பல தகவல்களை (ஒரு குருவிக்கு இருக்க வேண்டிய மூளை இருந்தாலே விளங்கிவிடக்கூடியவற்றை) பகுப்புரை, தெளிவுரை எல்லாம் சேர்த்து காலத்தை வீணடிக்கிறோம். இதனால் அதிக மணி நேரம் விரையமாகிறது..”

சொல்லிட்டேனா…

சீரியஸான கூட்டத்திலும் என்னைப் பார்த்து ராம்லி சிரித்துவிட்டார். மற்றவர்கள் சிரிக்காவிட்டாலும், சிரிப்பது மாதிரியே தெரிந்தது.

அதன் பிறகு ஆளாளுக்கு கருத்து சொன்னார்கள். தல சொன்ன கருத்தையே காப்பி பண்ணி புது பாட்டிலில் கொடுப்பது, எப்போதும் போல.

ஆனால் தலைவர் கூட்டம் முடிந்தும் சீரியஸாகவே இருந்தார்.

அப்புறம்…அப்புறம் என்ன…எந்தக் கூட்டம் நடந்தாலும் (எல்லா எழவுக் கூட்டங்களும் தொடர்ந்து நடந்தவண்ணமே இருக்கின்றன) “நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, மிஸ்டர் மணிக்குப் பிடிக்காது. என்று சொல்லிச் சொல்லியே என்னை கடுப்பேற்றி, `ஏண்டா வாய் கொழுத்து கருத்து சொன்னோம்’ என்று நொந்து நூடல்ஸ் ஆனதுதான் மிச்சம். இப்பவெல்லாம் 120 போய் 125 ஆகிவிட்டது. 5 நிமிடம் என்னைக் கடுப்பேற்ற!

என்ன செய்யலாம்? மாவிலிருந்து முடியை உருவணும்; மாவும் சிந்தக்கூடாது, முடியும் அறுந்திடக்கூடாது.

முதலில் கை கொடுத்தது `கோவக்கார குருவி’…

எதேச்சையாகத்தான் கண்டுகொண்டேன். என் அருகாமையில் அமர்ந்திருந்த திரு. வான் ரொம்ப சிரத்தையாக தன் ஐ-பேட்டில் கூட்டக் குறிப்புகளை பதிவு செய்கிறார் என்றுதான் எண்ணினேன்.. அவர் கருவியிலிருந்து வித்தியாசமான சத்தம் வரும் வரை. படக்கென அதை ஊமையாக்கிவிட்டு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார். ஏதோ வில்லங்கம் எனத் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். குருவியொன்று கூட்டில் அடைக்கப் பட்டிருந்த தன் நண்பர்களை கல்லெறிந்து, கூட்டை விட்டு விடுவிக்கப் போராடிக்கொண்டிருந்தது! சரி, கூட்டம் முடியட்டும், விசாரிப்போம் என்று காத்திருந்தேன். கனல் கக்கும் குருவியின் கண்கள் என்னை நோக்குவர்மம் செய்தன.

திரு வான் விளக்கமும், தேவையான அடிப்படைப் பயிற்சிகளும் அளித்தார்! குருவி என் நண்பரும் ஆனார்!! என்னிடமிருக்கும் செல்லிடப் பேசியில் அந்த ஆட்டத்தைப் பதிவிறக்கம் செய்ய உதவிய மகனுக்கு தனியாக ஒரு பிட்சா செலவானது. அதன் பிறகு, பல கோவக்கார குருவிகள் எனக்குப் பழக்கமானார்கள். அவர்களின் தேடலும், போராட்டமும், நட்பின் மேன்மையும், விடா முயற்சியும் எனக்கு பேரமைதியைத் தந்தது நிஜம். `விட்டு விடுதலையாதல் ` எனக்கு வாய்த்தது அப்படித்தான்!

என்னை மீட்டிங்கிலிருந்து மீட்டெடுத்த இன்னொரு அற்புதம் ‘கோயில் ஓட்டம்’!

இது நானாகவே கண்டடைந்தது. சிலையத் தேடி ஓடும் ஓட்டம். துரத்தும் பயங்கர ராட்சதனையும், இடையில் காத்திருக்கும் பல தடைகளையும் தாண்டி, இலக்கை குறி வைத்து, லாவகமாக, விரைவாக ஓடவேண்டும்; சில தற்காலிக வெற்றிகள் கிட்டும்; அசால்டா இருந்திடக் கூடாது; அவற்றையும் துணையாக்கிக் கொண்டு தொடர்ந்து ஓடவேண்டும். அப்பப்பா..என்ன மாதிரியானதொரு இலட்சிய ஆவேசம் அது!

தொடர்ந்து இரண்டாம் ஓட்டமும், மூன்றாம் ஓட்டமும் வந்துவிட்டன.

இரண்டாம் ஓட்டம் இன்னும் அலாதியாக இருக்கும், கொஞ்சம் மாய யதார்த்தம் கலந்து, அந்தரத்தில் மிதந்து…மிகவும் சுவாரசியமான பயணம். விடாது துரத்தும் `கருப்பு ` வை பின்னால் கழட்டிவிட்டு, லாவகமாக முன்னேற வேண்டும். எல்லா நடப்புகளையும், கடுப்புகளையும் மறந்து செல்லும் நமக்கான ஒரு சஞ்சாரம் அது.

தேவையற்ற ஆனால் கட்டாயம் கலந்து கொண்டேயாகவேண்டிய கூட்டங்கள் நடத்தி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? தெரியல. இன்னும் `கேனத்தனமாக`, நீண்ட விடுமுறை நாட்களில் ஒரு இரண்டும் கெட்டான் நாளை தெரிவு செய்து, அதையும் கடைசி நேரத்தில் அறிவித்து, பாடாவதி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்வதை எப்படி சொல்வது? வராவிட்டால் அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகம். SADIST !!!

தொடர் மீட்டிங்குக்கள்; தொடர் ஓட்டங்கள்.

எந்த ஓட்டத்திலும் நான் பெரிய சாதனைகள் செய்யவில்லை. குருவிக்கும் எந்த உபகாரமும் என்னால் கிட்டவில்லை. வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம் அல்லவா! செயல்பட்டுக்கொண்டேயிருப்பதுதானே வாழ்வின் நியதி. தேங்கிவிட்டால் பாசி படிந்து, அர்த்தமற்றுப் போய்விடுவோமே. You make your failure complete when you stop trying…

கோவக்கார குருவியாரும், கோவில் ஓட்டமும் என்னை பல மன உலைசல்களில் இருந்து மீட்டெடுத்திருக்கின்றன. எவ்வளவு நீளமான வார்த்தை வதைகளானாலும் தாங்கக்கூடிய வலுவைத் தந்திருக்கின்றன. குழந்தை விளையாட்டாக எண்ணி புறந்தள்ள முடியுமா?

நண்பர்களே, நீங்களும் முயற்சி செய்யுங்களேன்…!!!

2 comments for “கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

  1. ஸ்ரீவிஜி
    June 6, 2013 at 3:30 pm

    அட. ஹாஹாஹா

  2. புவனேஸ்வரி முனியாண்டி
    June 10, 2013 at 8:58 pm

    ரொம்ப நல்ல விஷயம்…ஆனா இதை பெரிய தல படிச்சா…ஹா ஹா ஹா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...