இல்லாத திசைகள் 6 – நெருப்பு ஆசிரியர்

pro-designers6நெருப்பு ஆசிரியர் பொறுப்பெடுத்த பின் அப்பத்திரிக்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிய அறைக்குள் இருந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தைப் பக்கத்தில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். பெரிய இடத்தில் வசதியாக இருந்தது. அதுதான் நெருப்பு ஆசிரியரின் குணம். யாரோடும் ஒட்டாமல் தனித்தீவு அமைக்கும் குணம். மலேசிய நண்பன்  நாளிதழில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நெருப்பு ஆசிரியர். ஆனால், அவரை அலுவலகத்தில் யாருக்குமே பிடிக்காது. நல்ல எழுத்தாளர், சிறந்த கட்டுரையாளர், உலக அரசியல், அறிவியல், இலக்கியம் என எல்லாவிதமான கட்டுரைகளையும் படைக்கக்கூடிய திறமைசாலி. மொழிபெயர்ப்பாளர்.­­­ கவிஞரும் கூட. இப்படிப்பட்டவரை யாருக்குமே பிடிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் அவரின் மனைவிதான்.

அவரின் மனைவி எவ்வித கலப்படமும் இல்லாத பரிசுத்தமான ஆவி! (அவரும் அதே அலுவலகத்தில்தான் வேலை செய்தார். ஆனால் வாரப் பத்திரிகையில் அல்ல, நாளிதழில்) பொறாமை, புறம் பேசுதல், அடுத்தவனை வளர விடாமல் செய்வது, நக்கல், நையாண்டி என எல்லா நல்ல பழக்கமும் இருந்தது அவரிடம். அது அப்படியே நெருப்பு ஆசிரியருக்கும் ஒட்டிக்கொண்டது. அடிப்படையில் நெருப்பு ஆசிரியர் நல்ல மனிதர். திருமணத்திற்கு முன்பு எல்லாரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்டவர். அவரின் நட்பு வட்டத்தைக் கலகலப்பாக வைத்திருப்பார் என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நெருப்பு ஆசிரியரை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த மனைவி அவர் செல்லும் இடமெல்லாம் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு, அவரின் நட்பையெல்லாம் கெடுத்து அவரை தனித்தீவாக மாற்றிவிட்டார் என்று பலர் புலம்பக்கேட்டிருக்கிறேன்.

ஆனால் இருவருமே என்னிடம் பிரியமாகவே இருந்தனர். 14 வயதில் நான் கோலாலம்பூருக்கு வேலைக்கு வந்ததிலிருந்தே அவர்களை எனக்குத் தெரியும். என் வேலைத்திறன் காரணமாக என் மீது கொஞ்சம் மதிப்பும் வைத்திருந்தார் நெருப்பு ஆசிரியர். அவரை யாருக்கும் பிடிக்காது என்பதால் அவருக்கு வேலையில் சரியான ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். நான் அப்படியெல்லாம் செய்யாமல் அவர் சொல்லும் வேலைகளை செய்து விடுவேன். பேச்சை கேட்பவர்களை மட்டும் அவர்களின் தனித்தீவில் சேர்த்துக்கொள்வார்கள். என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு பிரியம் காட்டினர். ஆரம்பகாலத்தில் நான் பட்ட கஷ்டங்களை அவர்கள் பார்த்திருப்பதால் என் மீது கொஞ்சம் பரிதாபமும் இருந்தது. ஆனால் நான்தான் இரவில் வேலை பகலில் தூக்கம் என்று நேரத்துக்கு வேலைக்கு வராமல் கொஞ்சம் குளறுபடி பண்ணிக்கொண்டிருந்தேன். கடுப்பு இருந்தாலும் ஏனோ தெரியவில்லை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

நெருப்பு ஆசிரியர் வாரப் பத்திரிக்கைக்குப் பொறுப்பேற்றிருந்தாலும் நாளிதழின் ஞாயிறு பதிப்பின் முதல் பக்கத்தின் கட்டுரை எழுதும் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பக்க வடிவமைப்பு நாளிதழின் வடிவமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால், இவரைப் பிடிக்காத காரணத்தால் நேரத்துக்கு செய்து தராமல் இழுத்தடிப்பார்கள். ஒரு நாள் செமக்கடுப்போடு வந்தார் நெருப்பு ஆசிரியர்.

“அங்கே பூச்சாண்டி காட்டுறானுங்க… இந்த வாரம் பக்கத்தை நீ வடிவமைத்துத் தருகிறாயா?” என்று கேட்டார். சரி என்றேன். அவ்வளவுதான்… வாரா வாரம் தொடர்ந்து அந்த பக்கம் என் மீதே விடிந்தது. வார பத்திரிகையின் பக்கங்களையும் வடிவமைத்துவிட்டு நாளிதழ் பக்கத்தையும் வடிவமைப்பேன். வேலை கூடியது ஊதியம் கூடவில்லை. அதேபோல் நெருப்பு ஆசிரியர் வாரம் ஒருமுறை மட்டும் நாளிதழில் வேலை செய்வார். அதுவும் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நாளிதழின் முதல் பக்கத்தில் நடிகைகள் படம் பிரசுரமாகும். அந்த நடிகைகளின் படங்களை தேடி எடுத்து வண்ணத்தில் வடிவமைத்து தரும் வேலையையும் என் தலையில் போட்டுவிட்டார். வேலை இன்னும் கூடியது எனக்கு.

ஆசிரியரின் தம்பி ஒரு சங்கத்திற்கு தலைவராக இருந்தார். நாளிதழில் வேலை பார்த்த தலைமை நிருபர்தான் அந்த சங்கத்தின் செயலாளராக இருந்தார். இவரும் ஆரம்பத்தில் நான் பட்ட அவஸ்தைகளை கண்டிருப்பதால் என் மீது அன்பும் என் திறமை மீது மரியாதையும் வைத்திருந்தார். அவர் குடும்பத்தில் ஒருவனைப் போலவே என்னை நடத்தினார். நெருப்பு ஆசிரியருக்கு சங்க செயலாளரைப் பிடிக்காது. ஒரு காலத்தில் கட்டிப்பிடித்துப் பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். பின்னர் எதிரிகள் போல் இருந்தனர். என் மீது சம அளவு பிரியம் வைத்திருந்த இருவருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காது. அங்குதான் பிரச்னை தொடங்கியது. செயலாளர் சங்க வடிவமைப்பு வேலைகளை என்னிடம்தான் கொடுப்பார். அது நெருப்பு ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் பேசாமல் ஜாடை மாடையாக என்னிடம் கடுப்பை காட்டுவார். நாளிதழின் நிர்வாகியிடம் நான் அலுவலக வேலையைச் செய்யாமல் வேறு வேலை எதுவோ செய்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஒரு நிர்வாகி என்றால் பிரச்சனைக்கு சம்மந்தப்பட்டவர்களை தன் அறைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த தேங்காய் மண்டையன் எல்லாரும் இருக்கும் ஒரு பொது இடத்தில் ஒரு நாய் குரைப்பதை போல் என்னிடம் சத்தமிட்டார். “நான் சங்க வேலையைத்தான் செய்தேன். வேறு யாரோவுடைய வேலையை நான் செய்யவில்லை. நம் முதலாளி தலைவராக இருக்கும் சங்க வேலையைதான் செய்தேன்” என்றேன். அதன் பிறகு அந்த நாயால் குரைக்க முடியவில்லை. நிர்வாகிக்கும் செயலாளரை பிடிக்காது என்பதால் நெருப்பு ஆசிரியரிடம் கூட்டு சேர்ந்துகொண்டார்.

எப்போதெல்லாம் செயலாளர் சங்க வேலைகளை என்னிடம் கொடுத்தாலும் இவர்கள் இருவரும் ஜாடை மாடையாக கரைச்சல் கொடுக்கத் தொடங்கினார்கள். எனக்கு மன அழுத்தமாகிப்போனது. செயலாளரிடம் சொன்னேன். “முதலாளியிடம் சொல்லுங்க சங்க வேலையைத்தான் செய்கிறேன் என்று. முதலாளி வாயை திறந்தால்தான் இவனுங்க வாயை அடைக்க முடியும்”. ஏனோ தெரியவில்லை இந்த பிரச்னையை பற்றி செயலாளர் பெரிதாக அலட்டிக்கொல்லவில்லை. “பாக்குறேன்…” என்றார். “இதையெல்லாம் பட்டென்று பேசிவிட முடியாது. சந்தர்ப்பம் பார்த்து பேசுறேன்” என்றார். ஒவ்வொரு முறையும் சங்க வேலைகளைச் செய்யும்போதும் நெருப்பு ஆசிரியர் கடுப்பை காட்டுவதும் நிர்வாகி குறைப்பது, செயலாளர் “பாக்குறேன்…” என்பதும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இது எங்கே போய் முடியுமோ என்றே போய்க்கொண்டிருந்தது காலம்.

ஒரு நாள் மதிய உணவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஆசிரியரின் தம்பி (முதலாளி) என்னை சாலையில் பார்த்து விட்டார். “என்னப்பா… நீ அலுவலக வேலையைப் பார்க்காமல் வேறு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறியாம்… அவருக்கிட்டேயிருந்து (இவரின் அண்ணனான வார பத்திரிகை ஆசிரியர்) போன உன்னை நான் வேலைக்கு எடுத்ததே பெரிய விசயம்… ஆனால் நீ ஒழுங்கா வேலையைப் பார்க்க மாட்டுறியாம்… பார்த்து நடந்துக்கோ…” என்று நடு ரோட்டில் என்னை நிற்க வைத்து நிர்வாகி கத்தியது போலவே கத்திவிட்டு போய் விட்டார். நான் அதிர்ந்து போனேன். இவனுங்க எல்லாம் பெரிய மனுசனுங்களா? என் பக்க நியாயத்தைக் கேட்காமல் அவர் பாட்டுக்கு கத்திவிட்டு போறாரே… பாவப்பட்டு எனக்கு வேலை கொடுத்தது போல் இருந்தது அவரின் பேச்சு. மனம் உடைந்து போனேன். நெருப்பு ஆசிரியரும் என்னை வேலையை விட்டு தூக்குவதற்கு சதி வேலையை ரகசியமாக நடத்தினார். இச்சமயத்தில்தான் மறுபடியும் மாமா வந்தார். தான் ஒரு வார பத்திரிகை தொடங்கப்போவதாகவும் வேலைக்கு வரும்படியும் கேட்டார்.

“நீங்களே கூப்பிட்டுதான் நான் இங்கு வேலைக்கு வந்தேன்… நான் கெஞ்சி நீங்கள் ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டு எனக்கு வேலை கொடுத்ததுபோல் இருக்கின்றது நிர்வாகத்தின் பேச்சும் உங்களின் பேச்சும்”… என்று நீண்ட ராஜினாமா கடிதம் எழுதி நிர்வாகியின் அறைக்குள் ஒரு கடிதத்தையும் அதன் நகலை முதலாளியின் அறைக்குள்ளும் வீசிவிட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...