இருள் எனும் நிழல்

sanga-ilakkiyam-stil-8தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி மரபிலிருந்து இன்று உருவாகும் நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்கள் கொடுக்கும் அதே வகையான உணர்வெழுச்சியை வழங்குவதாய் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாய் நவீன கவிதை குறித்த தீராத வாசிப்பில் இருக்கும் எனக்கு நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்களோடு பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான கவிதை சாதனைகள் குறித்து நினைத்துப் பார்க்கும் இத்தருணத்தில் நல்ல கவிதை என்பது எது என்ற கேள்வியை முன்வைப்பது அவசியம். இதற்கு ஒரே வரியில் என்னால் பதில் சொல்ல முடியுமானால் ‘மௌனம்’ என்பேன். கவிதையில் தேவைப்படும் மௌனம் குறித்து அறிய சங்கப்பாடல்களின் உதாரணங்களில் இருந்தே தொடங்கலாம்.

இரவின் தனிமை குறித்தும் அந்த பேரமைதி அதிகரிக்கும் துன்பம் குறித்தும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

அணிமிகு மென்கொம்பு ஊழ்ந்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே என்ற  குறுந்தொகை பாடலின் இறுதி அடிகளை தூக்கம் வராத இரவுகளில் பலமுறை நான் சொல்லிப் பார்ப்பதுண்டு. அந்தப்பாடலை எழுதிய கொல்லன் அழிசி சொல்கிறார் மலர் உதிர்ந்த ஒலி அவருக்கு ஊர் உறங்கிய அரவமற்ற இரவில் கேட்டதாம். இதைதான் கவிதையில் தேவைப்படும் மௌனம் என்கிறேன். மௌனம் என்பது குறிப்பால் உணர்த்துவது. அத்தனை உக்கிரமான இரவின் தனிமை கொடுக்கும் வலியை, வதையை ஒருவர் ஒரு மலர் உதிரும் ஒலியில் முடிப்பதுதான் மௌனம்.

இதுபோன்றதொரு வலிமிகுந்த இரவின் கண்ணீரை வெண்கொற்றனாரும் எழுதியுள்ளார். அதன் இறுதி வரி இவ்வாறு முடியும்.
தானுளம் புலம்புதொறும் உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே
தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருக்கும் தொழுவத்து எருமையின் கழுத்து மணி ஓசை வேறு யாருக்கும் கேட்டுக்கொண்டிருக்குமா எனும்போது இன்றைய நவீன கவிதையை வாசிக்கும் அத்தனை அனுபவங்களும் அதில் கிடைக்கின்றன.

நவீன கவிதைகள் நவீன வாழ்க்கையோடு பின்னிய ஒரு இரவையே நமக்குக் காட்டுகிறது. கவிஞர் சல்மாவின் ஒரு கவிதை,
நள்ளிரவுப் பிரயாணத்தைக்
கிளர்ச்சியூட்ட
தொலைதூரத்தில் கூவும்
பறவையிடம் இல்லை
சூழ்ச்சிகள் எதுவும்
மின்னும் நட்சத்திரங்களினூடே
என்னைப் பயணிக்கச் செய்வதைத் தவிர

இரவு என்பது இன்னொரு உலகம். இரவு நம் நிலப்பரப்பை மூடும் மாபெரும் நிழல். பகலில் நாம் காணும் ஒவ்வொன்றும் இரவில் வேறொரு அர்த்ததத்தைக் கொடுக்கிறது. ஒரு பறவையின் ஒலிகூட கவிஞர் சல்மாவுக்குக் கிளர்ச்சியூட்டக்கூடியதாக உள்ளது. அது அவரைப் பறவையாக்குகிறது. நட்சத்திரங்களினூடே பயணிக்கவும் வைக்கிறது. ஆனால் கவிஞர் அதை சூழ்ச்சி என்கிறார். என்னவகையான சூழ்ச்சி என யோசிப்பதுதான் வாசகனின் கடமை. அவரை தனிமையிலிருந்து மீட்கும் சூழ்ச்சி அது. ஒரு பொய்யை உண்மையென நம்ப வைக்கும் சூழ்ச்சி அது. அப்படியானால் கவிஞர் சூழ்ச்சிகளால் மனம் நொந்திருக்கிறார். அவற்றோடு ஒப்பிடுகையில் இந்தப் பறவையில் சூழ்ச்சி அவருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.
இவ்வாறு இரவுகளை இழந்து விடிய விடிய விழித்திருப்பதும் சில சமயம் கவிதையாகி விடுகிறது. கவிஞர் பூங்குழலி வீரன் சொல்கிறார்,

விடிய விடிய கண்விழித்து படுத்திருந்தேன்
உன்னால் உணர முடியுமா
அன்றுதான் நான் நிம்மதியாக தூங்கி இருந்தேன் என

தூக்கம் கொடுக்கும் பேரமைதியைத் தூக்கமற்ற  விழிப்புநிலை அவருக்குக் கொடுக்கிறது. காரணம் விழிப்பு தனது அன்பானவரை நினைத்துக் கொண்டிருப்பதற்கான அவகாசம் தருவதால். அந்தக் கவிஞருக்கு அதுவே முழுமையான நிம்மதி. சட்டென சங்கப்பாடல்களில் வரும் தலைவியின் ஏக்கம் போல தொணிக்கிறது பூங்குழலியின் கவிதை. அதே மௌனத்துடன். வாசகன் இன்னும் இன்னும் நிரப்பிக்கொள்ள இடைவெளியை விரித்தபடி.

ஒரு குறுந்தொகை இப்படி முடிகிறது. கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. ஆம் இரவு என்பது ஒரு மாபெரும் வெள்ளம். அந்த வெள்ளம் கடலைவிட பெரியது. அதை நிம்மதியின்றி விழித்திருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது. கவிஞர்கள் எல்லா காலத்திலும் அந்த இருளைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது ஆச்சரியம்தான்.

1 comment for “இருள் எனும் நிழல்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...